Responsive Menu
Add more content here...

WLM அத்தியாயம் 3

‘வேண்டாம் வேண்டாம் என்றாலும் என் விதி ஏனோ அவனோடேயே என்னை கொண்டு போய் கோர்த்து விட்டுக்கொண்டிருந்தது. அவன் என்னில் ஈர்க்கப்பட்டிருக்கிறானா இல்லையா? நான் ஏன் அவனையே கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறேன்? எதற்குமே எனக்கு அப்போது விடை சொல்லத்தெரியவில்லை. அவனோடு அன்றைக்கு  இருளில் மறைந்திருக்க நேரிட்டபோது எனக்கு அவனிடம் இருந்த தயக்கமொன்று விடைபெற்று செல்ல அவனை நோக்கி ஓரடி மனத்தால் எடுத்து வைத்திருந்தேன். அது அப்போது எனக்கு புரியவில்லை.’

அன்றிரவு டைனிங் ஹாலில் சாப்பிட்ட பிறகு ஹாஸ்டலுக்கு முன்னே இருந்த கொய்யா மரத்தின் கீழ் கூட்டமாக இருந்தவர்கள் அன்றைய நாள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

மைத்தி தன்னுடைய கதையை சொல்லி முடிக்க நிலா “நானும் அடுத்தமுறை உன்னோடு வரவா?” என்று குறும்பாய் கேட்டாள். ஆனால் அங்கே கண்டிப்புக்கு பேர் போன சுமி அதை ரசிக்கவில்லை.

“சும்மாருடி!” என்று நிலாவை அடக்கியவள் “அவன் வில்லங்கமானவனா தான் தெரியறான். என்னவா இருந்தா என்ன? இந்த ஆறுமாசம் அவங்க இடத்துல இருக்கப்போறோம். எங்களுக்கு ஒண்ணுன்னா பார்க்கறதுக்கு யாருமே கிடையாது. அவங்க எல்லாம் நினைச்ச நேரம் வீட்டுக்கு போகலாம். நாம அப்படி யாழ்ப்பாணம் போய்ட முடியுமா? அதனால நீ அவன் கிட்ட ஜாக்கிரதையாவே இரு. நல்லதோ கெட்டதோ ஒரு சிரிப்போட நிறுத்திக்கோ.. “ என்று மைதிலிக்கு கருத்தாய் அறிவுரையும் சொன்னாள்.

‘ ஆமாம். அவளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? அவனுடைய குடும்பத்தினரின் வெகுளித்தனமான அன்புக்கு உண்மையாய் இருந்தால் போதுமானது. அடுத்தமுறை அவனையும் கண்ணைப்பார்த்து சிரித்து கடந்து விடவேண்டும். இந்த அவஸ்தை படபடப்பு எல்லாம் நல்லதுக்கில்லை.. ‘ மைதிலியும் அப்படித்தான் எண்ணினாள். ஆனால் அந்த வார வெள்ளிக்கிழமை மாலை விரிவுரை முடிந்தபின் அங்கே மீண்டும் அவர்கள் போன போது அவன் எல்லார்க்கும்  பொதுவான ஒரு லேசான சிரிப்புடன் பல்சரில் ஏறிக்கொண்டு எங்கோ கிளம்பிவிட எதிலோ படு மோசமாய் தோற்றது போல அயர்ந்து நின்றாள் அவள்!

அடுத்த வாரம் சீரியசான விரிவுரைகளும் செயன்முறைகளும் ஆரம்பிக்க அவள் மனதில் இருந்து அவன் ஞாபகங்களே விலகிப்போயிருந்தன.

செயன்முறை வகுப்புக்களில் பொறியியல் பாடத்துக்காய் அந்த ஊரின் நீர்ப்பாசனக்கட்டுமானங்களை பார்ப்பதும் தெருவில் ஸ்டேடியாவை நிறுத்தி வைத்துக்கொண்டு சரிவை அளப்பதும் படம் வரைவதுமென அது ஒருபக்கம் போக அந்த செமஸ்டரின் அதிக கிரடிட்ஸ் ஐ தனக்குள் கொண்டிருந்தது பயிர் விஞ்ஞானமே. அதே ஒவ்வொரு குழுவும் சிறிய சதுர அடியில் பயிர்களை வளர்த்து, அறுவடை செய்வது வரையான செயன்முறையில் ஈடுபட வேண்டும்.  மற்றக்குழுவின் பயிர்களோடு ஒப்பிட்டு அவர்களுடைய முகாமைத்துவத்துக்கு புள்ளிகளும் வழங்கப்படும். ஆகவே குழுவின் ஐவரும் தங்களுக்குள்  பணிகளை பிரித்துக்கொண்டிருந்தனர்

அன்றைக்கு வெள்ளிக்கிழமை விரிவுரைகள் மூன்று மணிக்கு முன்னரே முடிந்து விட அங்கொன்றும் இங்கொன்றுமாய் படிகளில் ஏறி அமர்ந்திருந்து அரட்டையடித்துக்கொண்டிருந்தவர்களை கடந்து லைப்ரரிக்குள் நுழைந்தாள் மைதிலி. அப்போது தான் தன் கையில் கிடைத்த  ஹாரிபாட்டர் ஏழாம் பாகத்தின் பிரதியுடன் லைப்ரரியின் யன்னலோரம் போய் அமர்ந்தவள் அதனுள்ளேயே  மூழ்கிப்போனாள்.

அன்றைக்கு வெள்ளிக்கிழமை மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்கு போய் விட்டு திங்கள் காலை தான் வருவார்கள். வடக்கு கிழக்கில் இருந்த பதட்ட நிலை காரணமாக பாதை மூடப்பட்டிருப்பதால் அனேகமாக தமிழ் மாணவர்கள் மட்டுமே ஹாஸ்டலில் இருப்பார்கள் என்பதை அவள் மறந்து விட்டாள்.

யன்னலூடாக இருட்டு நுழைந்து புத்தகத்தின் எழுத்துக்களை மறைக்க ஆரம்பித்த கணமே நிலைமை புரிந்து அவள் வெளியே ஓடிவர நேரம் ஆறுமணியை தொட்டிருந்தது. வெளியே இருள் கவிந்திருந்தது.

ஐயோ படுபாவிகளா..நான் ஒருத்தி இருப்பதை மறந்து எல்லாரும் ஹாஸ்டல் போய்விட்டீர்களா? என்று நண்பிகளை வைதவள் வேக வேகமாய் தெருவில் இறங்கினாள்

தனியான இடம் என்பதால் மாணவிகள் கூடிய பட்சம் இருவராவது சேர்ந்து தான் அந்த வீதிகளில் பயணிப்பதே. ..ஆடிட்டோரியத்தில் இருந்து ஹாஸ்டலுக்கு செல்ல மாந்தோப்பு வழியாக கொஞ்சம் தூரம் நடந்து செல்லவேண்டும்.

ஆடிட்டோரியத்தின் கேட் வழியாக அவசரமாய் வெளியே வந்தவள் அதற்கு நேர்முன்னே பாதையின் இடப்புறம் புதிதாக தயார் செய்யப்பட்டிருந்த நிலப்பகுதியை  கண்டபோது தான் நெஞ்சம் படக்கென அடிக்க அவளுக்கு அது ஞாபகம் வந்தது!

“நான் இன்று  காலையிலேயே ஊருக்கு போகிறேன். நேற்று நீரூற்ற என்னால் முடியவில்லை. நீ போகும் போது தவறாமல் எங்களின் மிளகாய்க்கன்றுகளுக்கு நீரூற்றிவிடு. இல்லையேல் எல்லாமே பட்டுவிடும்.” என்று அவளிடம் கண்டிப்பாக வாக்குறுதி வாங்கியிருந்தான் சுதா.

இன்றும் நீரூற்றாவிட்டால் கன்றுகள் பட்டுவிடும்.. பட்டுவிட்டால் குழுவில் ஐவருக்குமே மதிப்பெண்கள் பறந்துவிடுமே..

இந்த இருட்டில் தோட்டத்துக்குள் இறங்கி…அதுவும் தண்ணீர் இருக்கும் இடத்துக்கு எதிர்ப்பக்கம் போகவேண்டும்.என்ன செய்வது? நாளை வரை ரிஸ்க் எடுக்க அவள் தயாரில்லை. வீட்டுக்கு போகாதிருக்ககூடியவன் யாரையாவது அழைக்கலாமா என்று சிந்தித்து உதவி செய்யக்கூடியவன் என்ற எண்ணத்தில் செந்தூரனுக்கு போன் செய்தாள். அவன் வந்து பாதையோரம் நின்றாலே போதுமே அவள் நீரூற்றிவிட்டு ஓடி வந்துவிடுவாள்..

ம்ஹ்ம்….அவன் ஆன்சர் செய்யவில்லை. அத்தோடு போதும் என்பது போல மொபைலும் சார்ஜ் இன்றி உயிர் விட்டது!

இன்னும் நேரம் தாமதித்தால் தப்பு!

இருட்டான தோட்டப்பகுதி வேறு பயமுறுத்த வேகவேகமாய் உள்ளே புகுந்து எதிர்ப்பக்கமாய் ஓடியவள் கண்ணில் பட்ட பூவாளி ஒன்றில் நீர் நிரப்பிக்கொண்டு அதை தூக்க இயலாமல் ஏறக்குறைய இழுத்துக்கொண்டு ஓடி வந்தாள். தனக்கு பின்னே காலடி சத்தங்கள், சருகு மிதிபட தன்னை யாரோ துரத்தும் சத்தங்கள் எல்லாம்  கேட்பது போலிருக்க எல்லா தெய்வங்களையும் உதவிக்கழைத்தபடி அவள் வரப்பில் அந்த பூவாளியை இழுத்து வந்துகொண்டிருந்தாள்

“மைதிலி!!!!!!!!”

தெருவில் இருந்து யாரோ அழைக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் சிந்தகவையும் அவனது பல்சரையும் கண்டு உண்மையிலேயே கடவுளைக்கண்டது போல நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அதற்குள் பைக்கை உள்ளேயே அவன் விட அவனுடைய வேகத்தை கண்டு படபடத்தாலும் வெளியாட்கள் அங்கே உள்நுழையக்கூடாதே என்ற விதியும் சேர்ந்து கொண்டு அவளை பயமுறுத்தியது. இவனிடம் வெளியே போ என்று சொல்லமுடியுமா என்ன?

சமாளிப்பாய் புன்னகைத்தாள் அவள்.

அவளது புன்னகையை கொஞ்சமும் கவனிக்காமல் “மூளையை அடகு வைத்து விட்டு வந்தாயா? இந்த இருட்டில் தனியாக இங்கே என்ன செய்கிறாய்? யாரோடு வந்தாய்?” கடுங்கோபப்பாவனையில் தன்னுடைய மொழியில் அவன் சரமாரியாக கேள்விக்கணை தொடுக்க ஒருகணம் விக்கித்து நின்றவளுக்கு கண்ணில் நீர் துளிர்த்து விட்டது.

மிளகாய் செடி.. தண்ணீர் என்று ஆங்கிலத்திலேயே திக்கினாள் அவள்.

சட்டென்று அவள் கையில் இருந்த பூவாளியை பறித்துக்கொண்டவன் “எங்கே நீரூற்றவேண்டும்?” என்று கேட்டுக்கொண்டு முன்னே வேகமாய் நடக்க  பின்னாலேயே ஓடியவள் நீளமாய் பரந்திருந்த மிளகாய்ப்படுக்கையில் B 1 என்று போர்ட் மாட்டியிருந்த அவர்களுடைய குழுவுக்கான சதுர அடியை கண்டுபிடித்து அங்கே ஓடிப்போய் நின்று கொண்டு கை காட்டினாள்.

தானே அவற்றுக்கு நீர் விட்டவன் ஒரு பூவாளி நீர் போதாமல் போக அவளிடம் கேட்டுக்கொண்டு போய் மீண்டும் தண்ணீர் நிரம்பிய கானோடு வந்தான்.

அவன் பல்கலைக்கழக நிலத்துக்குள் நிற்பதை யாரும் காணக்கூடாதே என்ற பிரார்த்தனையுடன் பாதையிலேயே கண்களைப்பதித்திருந்த அவளது இதயத்துடிப்பு நிச்சயம் ஹாஸ்டலுக்கே கேட்டிருக்கும். வேகமாக ஊற்றி முடித்தவன் பூவாளியை கொண்டு போக திரும்ப காரின் சத்தமொன்று அவர்களை நெருங்கிற்று.

“ஐயோ செத்தேன்” என்று அலறியவளின் கண்ணில் நீரே பூத்துவிட என்னவென்று விளக்கம் கேட்டான் அவன்.

“இல்லை. வெளியாட்களை இங்கே கூட்டி வரக்கூடாது. அப்படி என்னை உங்களோடு யாராவது இங்கே கண்டுவிட்டால் எனக்கு நிச்சயம் விசாரணை இருக்கும்.” நடுங்கியபடியே பதில் சொன்னவளின் பார்வை பதட்டத்தோடு வீதியில் பதிந்தது.

அடுத்தகணம் மின்னலென பைக்கை ஸ்டார்ட் செய்தவன் “ஓடி வா” என்று கத்தியபடி தோட்டத்தின் ஓரமாய் யாருடைய ஆராய்ச்சிக்காகவோ விளைவிக்கப்பட்டிருந்த உயரமான சோளக்காட்டுக்குள் புகுந்து பைக்கோடு அவனும் மறைந்து நின்றான்.

அவன் மட்டும் தான் மறைய வேண்டும். அவள் அங்கே மாணவி, அவள் மறைந்து கொள்ளதேவை இல்லை என்பது புத்திக்கு உரைக்காமல் பதட்டத்தில் அவன் பின்னேயே ஓடினாள் மைத்தி.

சட்டென்று அவன் அவளது  கைப்பற்றி பைக்கின் முன்னே அவளை அழுத்தி அமரவைத்து மறைக்க அந்தக்கார் நேராக ஆடிடோரியத்துக்கு முன்னே நின்றது.

“அய்யய்யோ” வாய்விட்டே பதறினாள் அவள்

காம்பசில் இருந்து யாரோ இங்கே வந்திருக்கிறார்கள். இனி அவர்கள் போகுமட்டும் எப்படி வெளியே போவது? இருள் வேறு வேகமாய் மூடிக்கொண்டே இருந்தது.

அவன் ஒன்றும் பதறியது போலவே தெரியவில்லை. “யார் அவன்?” என்று அவளிடம் சாவகாசமாக விளக்கம் கேட்டான்!

காதருகில் கிசுகிசுப்பாக ஒலித்த குரலே அவளுக்கு பலத்த அதிர்ச்சியோடு சுயநினைவையும் கொடுத்தது.

எருமை! எதற்கு நீ ஓடி வந்து இங்கே இருளில் இவனோடு ஒளிந்தாய்?

நீ உன் பாட்டில் நீரூற்றிக்கொண்டு நின்றிருந்தால் வேகமாக ஹாஸ்டலுக்கு போ என்ற அறிவுறுத்தலோடு கடந்து போயிருப்பார்களே..இப்போது வெளியே இருளில் இருந்து போவதை யாரேனும் கண்டால்..

கைகள் நடுங்க ஆரம்பித்து விட அவனை திரும்பிப்பார்த்தாள் அவள்

என்ன நம்பிக்கையில் இந்த சோளக்காட்டுக்குள் இவனோடு இவ்வளவு நெருக்கத்தில் இருளில் இருக்கிறாய்? இவன் இப்போது தவறாக ஏதும் ஆரம்பித்தால் கத்தக்கூட முடியாத பொறி அல்லவா இது? அதற்குள் உனக்கு இவன் நல்லவன் என்பது முடிவாகிவிட்டதா? நல்லவனாகவே இருக்கட்டுமே.. அவன் ஒரு இளைஞன் அல்லவா? எப்படி முடிந்தது அவளுக்கு?

தன்னை நினைத்து அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

அவன் முகத்திலோ இவ்வளவு நேரமும் இருந்த கடுமை மறைந்து ஒரு கனிவான புன்னகை குடியேறியிருந்தது பளிச்சென தெரிந்தது.

அது என்னை ஏனோ பாதிக்கவும் செய்கிறதே

அவன் கண்களை ஒரு நிமிடத்துக்கு மேல் பார்த்திருக்கவும் முடியவில்லை.

அப்படியே அவள் மனதை எக்ஸ்ட்ரே கண் கொண்டு ஆராய்வதை போல அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்..

அய்யய்யோ முருகா.. இது என்ன சோதனை? கன்னமெல்லாம் சூடாவதை தடுக்கும் வகையின்றி மனதுக்குள் கைபிசைந்தாள் மைதிலி.

முகத்தை திருப்பிக்கொண்டு  எட்டிப்பார்ப்பது போல பாவனை செய்தவளின் காதில் மீண்டும் அவன் குரல் கிசுகிசுப்பாய் கேட்டது. “ யார் அவன்?” இம்முறை குரலில் ஏகத்துக்கும் சிரிப்பு இருந்தது.

“யாரோ விரிவுரையாளரை தேடி வந்திருக்கிறார்கள் எனக்கு யாரென்று தெரியவில்லை” தன்னை சமாளித்துக்கொண்டு சாதாரணமாய் பதில் சொல்ல சிரமப்பட்டுத்தான் போனாள் மைதிலி.

“இங்கே எந்த விரிவுரையாளர்களும் தங்குவதில்லை என்று கேள்விப்பட்டேன். விரிவுரை நாட்களில் மட்டும் பயணம் செய்து வருவார்களாமே?” அவன் விடுவதாக இல்லை.

“ஆமாம் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் இங்கேயே இருப்பார்.”

கொஞ்ச நேரம் பேசாமல் தான் இரேண்டா..

“அதுவும் சரிதான். முதல் வருட ஆண்களையும் பெண்களையும் இந்த சோளக்காட்டில் அம்போ என்று தனியாக விட்டு விட முடியாதே…” சோளக்காட்டில் என்று அழுத்திச்சொல்லி அவன் அதன் பின்னே இருந்த லாஜிக்கை அலச கடுப்பாகிப்போனாள் மைத்தி.

“ஆமாண்டா.. என்னை விட்டிருந்தால் நானே தண்ணீர் ஊற்றிவிட்டு இப்போதைக்கெல்லாம் ஹாஸ்டல் போய் சேர்ந்திருப்பேன். பெரிய ஆபத்பாந்தவன் போல உள்ளே வந்து இப்படி சோளக்காட்டுக்குள் மறைய வைத்துவிட்டு உனக்கு இந்த அனாலிசிசிஸ் வேறயா? இன்னொருவார்த்தை பேசினா மண்டைல கொட்டி விட்ருவேன் பார்த்துக்க!!!” வேண்டுமென்றே தமிழில் புன்னகையை உதட்டில் ஓட்டவைத்தபடியே அவனிடம் சொன்னாள் அவள்.

அவள் நீளமாக தமிழில் பேசுவதை ரசனையுடன் பார்த்துக்கொண்டே இருந்தவன் “என்னை திட்டற தானே” என்றான் லேசான புன்னகையுடன்.

“இல்லல்ல” அவசரமாய் மறுத்தவளுக்கு உள்ளுக்குள் உற்சாகம் குமுழியிடுவதை என்ன முயன்றும் கட்டுப்படுத்த முடியவேயில்லை. உதட்டோரம் குறும்புச்சிரிப்பாய் வெடித்து சிதற

“என்ன சொன்ன நீ? இப்ப சொல்லப்போறியா இல்லையா?” அவன் மிரட்டலாய் ஆரம்பித்தான்

“இல்லைன்னா?” இமைகளை ஒருதடவை ஏற்றி இறக்கிவிட்டவள் தான் எல்லையை கடப்பதை உணர்ந்து நடுக்கத்தோடு வாயை மூடிக்கொண்டாள்.

“சாரி சாரி தப்பா எடுத்துக்காதீங்க. அ.. அது ஒரு பிரேயர்! நான் பயப்படும் போது உடனே அதை சொல்ல ஆரம்பிச்சிடுவேன்.” என் எல்லைக்கு நான் திரும்பி விட்டேன் என்பதை உணர்த்துவது போல வெளியே எட்டிப்பார்த்து நேரத்தையும் பார்த்தாள்.

அவனுக்கும் அது புரிந்திருக்க வேண்டும்.”ப்ரேயரா? ஹ்ம்ம்” என்றானே தவிர வேறேதும் சொல்லவில்லை.

நல்லவேளையாக சில நிமிஷங்களிலேயே அந்த கார் ஹாஸ்டல் பக்கமாக புறப்பட்டுப்போக தாமதிக்காமல் வேகவேகமாய் வண்டியை வெளியே எடுத்தவன் கேட்டை தாண்டிப்போய் போய் நின்றான். லேசாய் மூச்சிரைக்க அவனை நெருங்கியவளிடம் “ஹ்ம்ம் வேகமாய் நட” என்று விட்டு பைக்கைத்தள்ளிக்கொண்டு உடன் வர ஆரம்பித்தான்.

“இல்லல்ல பரவாயில்லை நான் ஓடிப்போயிடுவேன். நீங்க கிளம்புங்க. இவ்வளவு நேரம் கூட இருந்ததே பெரிய உதவி தாங்க் யூ”

“உனக்கு பிடிக்காவிட்டாலும் நான் உன்னை தனியாக போக விட்டு விட முடியாது” என்றவன் பிடிவாதமாய் கூடவே நடந்தான்.

“இந்த காட்டை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருக்கும் மக்கள் எல்லாருமே நல்லவர்கள் இல்லை. குடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஹாஸ்டலில் இருக்கும் பெண்களிடம் வம்பு பண்ணவென்றே ஹாஸ்டலுக்குள் நுழைந்த சம்பவங்களெல்லாம் நடந்திருக்கின்றன. இதில் நீ தமிழ் வேறு. உங்களுக்கு மொழியும் தெரியாது. ஆகவே சர்வ ஜாக்கிரதையாக இருங்கள். தனியாக சுற்றும் வேலை வேண்டாம்.” என்று நீளமாய் கடுமையான குரலில் ஆங்கிலமும் சிங்களமும் கலந்து சொன்னவன் “சனி ஞாயிறு என்ன செய்வீர்கள்” என்று வினவினான்.

“ஹாஸ்டலில் தான் இருக்க வேண்டும். குக் வழக்கம் போல வருவார். ஞாயிறு காலை தான் மெயின் ரோடுக்கு போய் பஸ் பிடித்து கோவிலுக்கு போகும் ப்ளான் ஒன்று  உள்ளது, நடக்குமோ தெரியவில்லை.”

“சரி”

பிறகு மௌனமாயே சில கணங்கள் கழிய ஹாஸ்டல்கள் கண்ணில் நெருங்க ஆரம்பித்திருந்தன.

“நான் ஹாஸ்டல் வாசல் வரையும் வருவது உனக்குப்பிடிக்காது.நான் இங்கேயே நிற்கிறேன். ஓடிப்போ உள்ளே..”

“நான் அப்படி ஒன்றும்…” என்று ஆரம்பித்தவள் இறுக்கமான முகத்துடன் அவன் வேகமாக உள்ளே போகுமாறு செய்த சைகைக்கு பின் வாதாடாமல் “தாங்க்ஸ்” என்று மட்டும் முணுமுணுத்த படி ஹாஸ்டலுக்குள்ளே ஓடி அவனை திரும்பி பார்த்தாள்.

அவனும் பார்த்துக்கொண்டு தான் நின்றிருந்தான். தன்னையறியாமலே அவள் தலையசைக்க அவன் பதிலாய் ஒரு மென் புன்னகையுடன் பைக்கை திருப்பிக்கொண்டு புறப்பட  கலவையான உணர்வுகளுடன் தன்னுடைய அறையை நோக்கி ஏறக்குறைய ஓடினாள் மைத்தி.   

கடவுளே எல்லாரும் அறைகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி மாளாது. என்ற வேண்டுதலுடனேயே உள்ளே நுழைந்தவள் யாருமே ஹாரிடோர்களில் தென்படாததில் மகிழ்ந்து போய் தன்னறைக்குள் நுழைந்தாள். மற்ற மாணவிகள் ஆறுபேரும் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். அறை வெறிச்சோடிக்கிடந்தது.

மனதில் இருந்த படபடப்பு குறையுமட்டும் தன்னுடைய கட்டிலில் படுத்துக்கிடந்தவள் குளிப்பதற்காக உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூம்பக்கமாக நடந்தாள்.

“ஏய் எருமை! எங்கடி போன இவ்ளோ நேரம்?போனையும் ஆப் பண்ணிட்டு!!” சுமியின் குரல் பின்னாலே அவளது அறை வாசலில் இருந்து கேட்டது.

“குளிச்சுட்டு வந்து சொல்றேண்டி” என்றபடி பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டவள் அவர்களுக்கு என்ன சொல்வது என்று மூளையை கசக்கினாள். சிந்தகவும் அவளும் ரகசியமாக சந்தித்து பேசிக்கொள்வதாக அவர்கள் நினைத்து விட்டால்? மெது மெதுவாய் குளித்து முடித்தவள் அறைக்கு வரும் போது இரவு உணவுக்காய் பெல் அடித்திருக்க எல்லோரும் கிளம்பி போயிருந்தார்கள்!

ஹப்பாடா என்ற விடுதலை உணர்வுடன் தானும் இருளில் கலந்து டைனிங் ஹால் நோக்கி நடந்தாள். வார இறுதியாதலால் ஹாலே வெறிச்சோடிக்கிடந்தது. தன்னுடைய பிளேட்டை எடுத்து கொஞ்சமாய் பரிமாறிக்கொண்டு சுமியை விழிகளால் தேடினாள் மைத்தி.

அங்கே செந்தூரன் உட்பட எல்லாருமே ஒரே மேஜையில் அமர்ந்திருந்து கொண்டு அவளையே குறுகுறுவென் பார்ப்பது போலிருந்தது. மெல்ல அவர்களை நோக்கி நடந்தாள்.

“மைதிலி ஏன் கால் பண்ணினே? நான் விளையாடிக்கொண்டிருந்தேன். மொபைலை கவனிக்கவில்லை!” செந்தூரன் அவள் அருகில் வந்ததுமே கேட்டான்

“இல்ல..நான் லைப்ரரில டைம் பார்க்காம இருந்துட்டேன். இன்னிக்கு மிளகாய்க்கு தண்ணி விட வேற வேண்டிருந்துது. இருட்டுல ரொம்ப பயமாயிருந்துது அதுதான் உனக்கு கால் பண்ணினேன். நான் தண்ணி ஊத்திட்டு வரவும் எங்களோட சேனபுர வீட்டு அண்ணா வந்தார். அவர் தான் கூட்டிக்கொண்டு வந்து விட்டுட்டு போனார்.”

மற்றவர்களுடைய கண்கள் சங்கேதமாய் சந்தித்துகொண்டதையும் சுமி முறைப்புப்பார்வையுடன் அமர்ந்திருப்பதை கண்டதுமே அவளுக்கு விஷயம் புரிந்து போனது. யாரோ அவளையும் அவனையும் சேர்த்து பார்த்திருக்கிறார்கள். அன்றைக்கு அவனைப்பற்றி நாம் சொன்னதையும் இதையும் வைத்துக்கொண்டு இங்கே ஒரு கற்பனை ஓடியிருக்கிறது!

இல்லாத கற்பனைக்கு நான் எதற்கு விளக்கம் தரவேண்டும்?  மனம் கோபமாய் முறுக்கிக்கொள்ள பெரிதாக பேச்சில் கலந்து கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தவள் ரூமுக்கு போவதாக சொல்லிக்கொண்டு ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்துவிட்டாள்.

மறுக்கப்படாத மௌனங்கள் சம்மதமாகத்தான் கருதப்படும் என்பதை அவள் அப்போது எண்ணிப்பார்க்கவில்லை.

ஏன் அவனை நோக்கி பந்தாடப்படும் தன் மனஉணர்வுகளின் அர்த்தத்தையே அவளுக்கு புரிந்தகொள்ள தெரியவில்லையே..

மறுநாள் காலையும் பாட்டனி புக்கை எடுத்துக்கொண்டு ஸ்டடி ஹாலுக்கு சென்றவள் அங்கே மொத்தக்கூட்டமும் உள்ளே இருந்து கும்மியடிப்பதை தெரிந்து கொண்டு அங்கேயும் போக விரும்பாமல் அறைக்கும் போக விரும்பாமல் ஹாஸ்டலுக்கு வெளியே நடந்தாள்

எங்கே அமர்ந்து வரையலாம்? இடம் தேடிய படி நடந்தாள்..

நெல்லிமரத்தின் கீழே இருந்த பெஞ்ச் சுத்தமாக இல்லாததால் ஏமாற்றத்துடன் அதை தாண்டி நடந்தவள் பாதையோடு இருந்த கம்பிவேலியை ஒட்டி புத்தபிரானின் சின்ன சிலை வைத்து வழிபாட்டு இடமாக கட்டப்பட்டிருந்த குட்டி நிலத்தை கண்டதும் உற்சாகமாய் அங்கே விரைந்தாள்

பக்கத்தில் இருந்த வெள்ளைப்பூக்களை பறித்து தான் அங்கே அமர்ந்திருப்பதற்கு வாடகையாய் புத்தரின் காலடியில் வைத்தவள் குளுமையான அந்த நிலத்தில் புத்தகங்களை பரப்பிக்கொண்டு அமர்ந்தாள்                                                                 

அரசமரத்தின் இதமான அசைவுகளோடு சற்றுநேரம் தன்னை மறந்து பாடத்தில் மூழ்கியிருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை நெருங்கிய பல்சர் சத்தத்தில் கவனம் கலைந்து அனிச்சையாய் திறந்திருந்த வீதியை நோக்கினாள்.

தன்னுடைய பல்சருக்கு மாட்சாக கருப்பு ஷர்ட்டுடன் அவளையே பார்த்தபடி அந்த வளைவில் வந்துகொண்டிருந்தான் சிந்தக. இருவருமே புன்னகைக்கவில்லை. ஆனால் பார்வைகள் சில கணங்கள் கூட விலக்கிக்கொள்ளப்படவும் இல்லை. முழுமையாய் அவன் அவள் நின்ற இடத்தை கடக்கும் வரை கண்களை கவ்வி நின்ற மாயவிசை அவன் கடந்துபோனதும் பட்டென உடைய தன்னுடைய மடியில் முகத்தை பதற்றமாய் புதைத்துக்கொண்டாள் அவள்.

என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய் மைத்தி!!!!

இனிமேல் இது நடக்கவிடமாட்டேன். ரொம்பவே தப்பு. அவள் மனதில் நடுக்கமாய் உருப்போட்டுக்கொண்டிருக்க சுமி வந்து அவள் அருகில் அமர்ந்தாள்

“ஏண்டி என்னை அவாய்ட் பண்ணற?”

“நேத்து நீ என்னை தப்பா நினைக்கல? உன் நெஞ்சை தொட்டு சொல்டி.. மத்தவங்களை விடு அவங்களுக்கு என்னை ஒரு மாசமா தான் தெரியும். ஸ்கூல்ல இருந்து ஒண்ணா படிச்சமே உனக்கு என்னை தெரியாதாடி?” பொங்கிவிட்டாள் மைத்தி.

“சாரிடி.. நானும் ஒருநிமிஷம் தப்பா நினைச்சது உண்மைதான். இனிமே அந்த நிலாகிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். ஒரே நிமிஷத்துல என்னை கன்பியூஸ் பண்ணிட்டா! சாரிடி. “

“பேசாதே போ..”

“சாரிடி..இப்போ நான் எதுக்கு வந்தேன் தெரியுமா? உன் மஞ்சு ஆன்ட்டி நமக்கெல்லாம் மதியம் லஞ்ச் கொடுத்து விடறாங்களாம். எங்களை ஷேர் பண்ணி சாப்பிடவாம்!”

“ஏய்..உன் நம்பர் எப்படிடி ஆன்ட்டிக்கு தெரியும்? என் நம்பரே அவங்களுக்கு தெரியாது!!!”

“இல்லடி..உங்க க்ரூப் லீடர் யாரு? அந்த பையனுக்கு போன் பண்ணிருக்காங்க..அவன் தினேஷுக்கு சொல்ல தினேஷ் எனக்கு சொன்னான்.”

“எப்போடி…”

“இன்னும் அரைமணில அவங்க ஹஸ்பன்ட் எடுத்துட்டு வருவாங்களாம். பாவம்டி..ரொம்ப நல்லவங்களா இருக்காங்கல்ல?”

“அதை தான் நான் சொல்லிட்டே இருந்தேன். நீங்க தான் இல்லாததையும் பொல்லாதையும் கற்பனை பண்ணீங்க!!”

“நான் ஆன்ட்டி நல்லவங்கன்னு தாண்டி சொன்னேன்..பையனை பத்தி சொல்லல..” சுமி குறும்பாய் சிரிக்க அவளின் தோளில் அடித்தாள் மைத்தி.

WLM அத்தியாயம் 2

‘அவனை நான் மூன்று வருடங்களின் முன் இது போன்ற ஒரு வெள்ளிக்கிழமை தான் முதன் முதலில் சந்தித்தேன்..ஒரு நீதிபதியின் மகள் சந்திக்காத மனித வகையினரா என்ன? என் பத்தொன்பதாவது வயதில், என் உலகமும் மொழியும் புரியாத, ஒரு சின்ன செங்கல் வீட்டுக்குள் வாழும்,  எளிய மனிதனொருவன் முதற் சந்திப்பிலேயே என் மீது பாதிப்பை ஏற்படுத்தி விடுவான் என்று கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை’

2009 January

“ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு விவசாய குடும்பம் ஒதுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு இந்த செயன்முறை பயிற்சிக்கான ஆறுமாத காலத்தையும் இதற்கென பயன்படுத்திக்கொள்ள இயலும். விரிவுரைகள் இல்லாத நேரங்களில் அந்த  குடும்பத்தினரை சந்தியுங்கள். அவர்களின் வாழ்வியலை அவதானியுங்கள். அவர்கள் நிலத்தை பயன்படுத்தும் முறை, விவசாய உத்திகள், அவற்றின் சாதக பாதகங்கள், பெறுமதி சேர்க்கை, சந்தைப்படுத்தல் உத்திகள், சிறுகைத்தொழில் எதிலாவது ஈடுபடுகிறார்களா? ஆண்டு வருமானம், லாபம் நட்டம்  எல்லாவற்றையும் கவனியுங்கள்.   ஆறுமாத இறுதியில் நீங்கள் ஒவ்வொருவரும் அந்த குடும்பத்தை பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.”

“ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள்  கல்வியறிவு பெரிதாக இல்லாதவர்களே தவிர  அனுபவத்தாலும் உடலுழைப்பாலும் சிறந்தவர்கள். அவர்களிடம் கண்ணியமாக பணிவாக அவர்களின் நம்பிக்கையை பெற்று இந்த செயன்முறையை செய்து முடிப்பதையே நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோமே தவிர அவர்களுக்கு தொந்தரவாக இருப்பதை அல்ல. உங்களுக்கான செயன்முறைக்கல்விக்காக பெரிய மனதுடன் தங்கள் வீடுகளில் உங்களை வரவேற்று தங்கள் வாழ்வியல் குறித்தும் அவர்கள் பகிர்ந்து கொள்ளப்போகிறார்கள். இது உங்களுக்கு அவர்கள் செய்யப்போகும் ஒரு உதவி மட்டுமே என்பதை மனதில் கொள்ளுங்கள்”  விரிவுரையாளர் அந்த ப்ராஜக்ட் பற்றி விளக்கினார்.

“தெய்வமே இது என்னடா பாண்டி நாட்டுக்கு வந்த சோதனை?” என்று வாய்விட்டு சொல்லியபடி மைத்தியை திரும்பிப்பார்த்தாள் சுமி. மைதிலியின் கண்களும் அதையே தான் பிரதி பலித்துக்கொண்டிருந்தன. அவர்கள் மகா இல்லுப்பள்ளம வந்து சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இது தான் அவர்களுடைய இரண்டாவது விரிவுரை. மொழிதெரியா ஊரில் கஷ்டங்களை சமாளிப்பதற்காய் இயல்பாகவே ஏற்படும் ஒற்றுமை அவர்களுக்குள்ளும் மலர்ந்திருந்தததில் தமிழர் இருபது பேரும் அடுத்தடுத்த வரிசைகளில் ஒன்றாகவே அமர்ந்திருந்தனர்.

அகரவரிசையில் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டனர்.  மைதிலியும் சுதாகரையும் தவிர அவர்களின் குழுவில் மற்றவர்கள் சகோதர இனத்தோரே.  அந்த வார வெள்ளிக்கிழமை முதல்தடவையாக தங்களுக்கென ஒதுக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம் தமிழர்களான தாங்கள் அவர்களின் வீடுகளில் எப்படி வரவேற்கப்படுவோம் என்ற பயம் வேறு!! மைதிலிக்கு அங்கே போகும் வரை ஒரே பயம் தான். மொழியும் சுத்தமாக அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. கையில் ஒரு பரிசுப்பொருளை வாங்கிக்கொண்டு ஐவரும் முதல் தடவையாக சேனபுரவுக்கு பயணப்பட்டபோது சுதாகரின் சைக்கிளின் பின்னேயே நிழலாக சைக்கிள் ஓட்டிப் போய்க்கொண்டிருந்தாள் மைத்தி.

அவர்களிடம் எப்படி இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் என்று சுதாகர் அவளுக்கு கற்றுக்கொடுத்திருந்ததை திரும்ப திரும்ப மனப்பாடம் செய்துகொண்டிருந்தது வேறு படபடப்பை தந்தது. அவள் பிறந்து வளர்ந்த இடம் யாழ்ப்பாண நகர்ப்புறம் தான். இப்படிப்பட்ட  மணல் பாதைகள், செங்கல் வீடுகள், விவசாயக்குடும்பங்களை அவள் கண்டறியாள். முதன் முதலாய் மஞ்சு ஆன்ட்டி வீட்டுக்குள் நுழைந்தபோது கிடுகு வேயப்பட்ட வேலிகளில் இருந்து செங்கல்லால் கட்டப்பட்ட சின்னதான வீடு வரை சகலமுமே அவளை ஆச்சர்யப்படுத்திக்கொண்டிருந்தன.

ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற வாஞ்சையுடன் அவர்களை வரவேற்ற குடும்பத்தினரை மைதிலிக்கு ரொம்பவே பிடித்தது.

பொதுவான அறிமுகத்தின் பின் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள சுதாகரின் உதவியில் தான் கற்ற இரண்டு வசனங்களை புன்சிரிப்புடன் ஒப்புவித்தாள் அவள்.

அவளின் அந்த முயற்சியில் நெகிழ்ந்து போன மஞ்சு தன் பெரிய கரங்களுக்குள் அவளை இழுத்து அணைத்துக்கொண்ட போது அவளுக்கு பயம் என்பதே மறந்து போய் நிம்மதி பெருமூச்சு முளைத்தது. தனக்குத்தெரிந்த உடைந்த சிங்களமும் ஆங்கிலமுமாக அவள் மெதுவாக அங்கே பொருந்த ஆரம்பித்தாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் மஞ்சு தேநீர் தயாரிப்பதற்காக உள்ளே சென்று விட சுவாரஸ்யமாக ஷோ கேசில் இருந்த சாம்பியன் கிண்ணங்களை பார்த்துக்கொண்டிருந்தவள் மற்றவர்கள் சஜியின் அப்பாவுடன் பேசியபடியே வெளியே சுற்றிப்பார்க்க சென்றதை கவனிக்கவில்லை.

எல்லாமே விளையாட்டு சம்பந்தமான கிண்ணங்கள் தான்.  சின்னக்கிண்ணங்களில் இருந்து பெரியவை வரை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்தவள் அவற்றுக்கு நடுநாயகமாக நின்றிருந்த  அரை ஆள் உயர கிண்ணத்தை எடுத்துப்பார்த்தாள். அதில் மாவட்ட மட்ட கால்பந்தாட்ட போட்டித்தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்பட்டது என்று எழுதப்பட்டிருந்தது.

அதை தலைகீழாக சாய்த்து பிடித்துக்கொண்டு பெயரை படிக்க முயன்றவள் “சிந்தக நிவேதன் ரத்னாயக்க” என்று வாய்விட்டே படித்தாள்.

“யார் நீ?”

காதருகில் கேட்ட அதட்டல் குரலில் பயந்துபோய் கிண்ணத்தை அவள் கீழே விட்டு விட லாவகமாக அதை பற்றியவன் அந்தக்கிண்ணத்தை ஒரு பவித்ரமான பாவனையுடன் நேராக வைத்தான்.

பிறகு அவளை முறைத்து “பிறர் பொருளை கேட்காமல் எடுப்பதே தவறு. அதில் கீழே போட்டு உடைக்க வேறு செய்கிறாயா? யார் நீ? இங்கென்ன செய்கிறாய்?” என்று அவளிடம் சரமாரியாய் கோபக்கணைகளை தொடுத்தான்.

அரண்டு போனாள் மைத்தி. இந்தளவு கபில நிறத்தில் கண்கள் கொண்டவனை அவள் இதுவரை சந்தித்ததே இல்லை! சட்டென்று பார்வையை அது தான் கவ்விக்கொண்டது. நெடு நெடுவென அவனது உயரமுமா? மாநிறத்துக்கும் ஒருமாற்று குறைவான அவனது நிறமா? அவனது திமிர்த்தனமான உடல்மொழியா? எது அவளை மிரட்டியதென்று அவளுக்கு இனம்பிரிக்க தெரியவில்லை. அதெல்லாவற்றியும் விட அவன் ஏதோ அவளை திட்டுகிறான் என்ற அளவுக்குத்தான் அவன் பேசியது அவளுக்கு குத்துமதிப்பாய் புரிந்து தொலைத்திருந்தது.

“நான் நான் கம்பஸ்.. பிரண்ட்ஸ்..அஞ்சு பேர்.. “ இப்படி தனக்குத்தெரிந்த மொழியில் அவள் சொல்ல முயல அவ்வளவு நேரமும் கடுமையை தாங்கி நின்ற அவன் முகத்தில் சட்டென்று அந்த மாற்றம் நிகழ்ந்தது!

பற்களோடு கண்களும் சேர்ந்து பளிச்சிட அவன் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

“நீ தமிழா?” பேச்சு வார்த்தை ஆங்கிலத்துக்கு தாவியது.

“ஆம் ஆம்.”

“எந்த ஊர்?”

“யாழ்ப்பாணம்” இவள் பயந்தபடியே பதில்சொன்னாள். அவனது ஆங்கிலம் ஸ்டைலிஷாக இருக்கவில்லை. ஆனால் தேவைக்கேற்ற அளவு அவனால் பேசமுடியும் என்ற நிமிர்வுடன் இருந்தது. ஆனால் அந்த வீட்டில் அதைக்கூட எதிர்பார்க்காததால் அவள் வார்த்தைகளை அளந்து கொண்டிருந்தாள்

ஊரைக்கேட்டதும் ஆச்சர்யமாய் அவனது இமைகள் ஒரு தரம் ஏறி இறங்க “உன் பெயர் என்ன?” என்ற கேள்வி அடுத்து வந்தது.

“மைதிலி..” அவனின் மாறாத குறும்புச்சிரிப்பு அவளைக்குறித்து எதற்கோ சிரித்து மகிழ்கிறான் என்று அறிவிக்க தேவையில்லாத அவஸ்தையும் படபடப்பும் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டது.

“நைஸ் நேம்..” என்று ரசித்துச் சொன்னவன் அப்பா என்ன செய்கிறார்? வீட்டில் அவளுக்கு எத்தனை சகோதரர்? என்று கேள்விகளை அடுக்க ஆரம்பித்தான்

பயத்துடன் பவ்யமாக குனிந்த தலை நிமிராமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தவள் “நீ அப்பா செல்லமா? அம்மா செல்லமா?” என்ற அவன் கேள்விக்கு தூக்கி வாரிப்போட்டுக்கொண்டு நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்

இவன் நம்மை என்ன கிண்டர்கார்டன் குழந்தை என்றா நினைத்துக்கொண்டிருக்கிறான் என்ற அவளது கோபத்திற்கு அவன் முகத்தில் இருந்த சிரிப்பை அடக்கிக்கொண்டிருக்கும் பாவனை இன்னுமே நெய்யூற்றவே செய்தது.

முகம் கோபத்தில் சிவந்து விட “பிரண்ட்சிடம் போகிறேன்” என்று முணுமுணுத்தபடி வீட்டை விட்டு வெளியேறியவள் வெளியே யாரையும் காணாமல் திகைத்து அங்கும் இங்கும் விழிகளை ஒட்டி தேடினாள்.

‘இங்கே தானே இருந்தாய்ங்க! டேய் சுதா நீயுமா என்னை விட்டுட்டு எஸ் ஆயிட்ட? இங்கே ஒருத்தன் துட்டகைமுனு மன்னன்னு தன்னை நினைச்சுக்கிட்டு கண்ணாலேயே கொல்றான்!  வந்து என்னை காப்பாத்துடா டேய்” என்று மனதில் வேண்டிக்கொண்டு அவள் தேடியதற்கு எந்தப்பலனும் இல்லை. அதற்கு பதில் அந்த துட்டகைமுனு ஆகப்பட்டவன் இப்போது சிரிப்பை தொலைத்து விட்டு கைகளைக்கட்டிக்கொண்டு அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்

“அப்பாலே போ சாத்தானே.. கடவுளே சுதா..எங்கடா இருக்க!!!” மனதுக்குள் அரற்றியபடி அவள் அந்த வீட்டின் இருபுறங்களிலும் எட்டிப்பார்த்து சோர்ந்தாள்

அவர்கள் போன சுவடே தெரியவில்லை.

“என்ன மகள்? உன் நண்பர்களையா தேடுகிறாய்? அவர்கள் பின்புறம் தோட்டத்துக்கு போயிருக்கிறார்கள்!” சேர்த்து வைத்திருந்த தேயிலையை வெளியே ரோஜாத்தொட்டிக்குள் போட வந்த மஞ்சு ஆன்ட்டி அவளின் அலைபாய்தலை பார்த்து விட்டு ஆபத்பாந்தவியாய் தகவல் சொன்னார்.

“அந்த இடத்துக்கு எப்படிப்போவது?” என்பதை மஞ்சுவிடம் எப்படி கேட்கவேண்டும் என்று அவள் பதட்டமாய் மனதுக்குள் மொழிமாற்றம் செய்து கொண்டிருக்க அவர் சாவகாசமாய் மகனின் பக்கம் திரும்பினார்.

“புத்தா..இவளை கொண்டு போய் அவர்களோடு சேர்த்துவிடு” என்று மகனிடம் அவளை விட்டு விட்டு அவர் உள்ளே செல்ல மைத்தி விழித்தாள்.

அவன் சிரிக்கவில்லை.

அதற்குள் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தவன் சைகையால் மட்டும் வா என்று அழைத்து விட்டு அவன் பாட்டுக்கு  நடக்க, திமிரைப் பாரேன் என்று நொந்தபடி அவன் பின்னே நடக்க ஆரம்பித்தாள் மைத்தி. மனதுக்குள் வேறு பயம் பயமாக வந்தது.

இந்த குடும்பத்தை விரிவுரையாளர்கள் நன்கு விசாரித்து தான் கொடுத்திருப்பார்கள். ஆனாலும் அவர்கள் கணிப்பு தவறியோ அல்லது தமிழ் என்ற கோபத்திலோ இந்த ஆளில்லா இடத்தில் இவன் அவளை ஏதும் செய்துவிட்டால்?

அந்த குட்டி வீட்டுக்கு பின்னே ஏக்கர் கணக்கில் விரிய ஆரம்பித்த ஆள்நடமாட்டம் இல்லாத நிலப்பகுதியும் இருளான மரக்கூடலும் அவளுக்கு நடுக்கத்தையே கொடுக்க அவனிடம் இருந்து சந்தேகப்படுவது போன்ற அசைவுகள் ஏதும் வருகின்றனவா என்று அலர்ட்டாக கவனித்தபடி மைத்தி அவன் பின்னே நடந்துகொண்டிருந்தாள். 

ஆனால் அவனோ வீட்டின் பின்னே இருந்த ஒற்றையடிப்பாதையில் பயணித்து தென்னந்தோப்புக்குள் நுழைந்து அதன் பின் வயல்பரப்புக்கள் வரும் வரை அவன் அவள் பக்கம் திரும்பக்கூட இல்லை! அவள் கூட வருகிறாளா என்று கூட பார்க்காமல் அவன் பாட்டுக்கு நடந்து கொண்டிருக்க அவன் பின்னே ஏறக்குறைய ஓடிக்கொண்டிருந்தவள் ஈரமும் சகதியுமான வரப்பில் தடக்கி விழாமல் நடக்க பகீரத பிரயத்தனம் செய்தாள். அவன் கைகொடுத்து உதவினால் வேண்டாம் என்று மறுக்க வேண்டும் என்று அவள் மனதுக்குள் உறுதிமொழி எடுக்க அவனோ அவளை கவனித்தும் கவனிக்காதது போன்ற பாவனையிலேயே வந்துகொண்டிருந்தான். மறந்தும் அவளுக்கு உதவ முன்வரவில்லை!

“என்னதான் சொன்னாலும் இவங்களுக்கு துவேஷம் இல்லாமல் போகாது. நீ வந்தாலென்ன விழுந்தாலென்ன என்று போகிறானே.. சரியான துவேஷம் பிடிச்சவன்” என்று ஏமாற்றத்தில் அவனை மனதுக்குள் திட்டித்தீர்த்தாள் மைத்தி.

ஒருவழியாய் அவளோடு வந்த நால்வரும் சிந்தகவின் அப்பா சமந்த மற்றும் தங்கை சஜினியுடன் மரவள்ளி தோட்டத்துக்கு நடுவில் இருந்த ஒரு மேட்டில் ஏறி நின்றுகொண்டிருந்ததை அவள் கண்டபிறகே அவளுக்கு நிம்மதியானது!

ஆனால் அந்த மணல் மேட்டில் கால்வைக்க வைக்க அது புதைய ஆரம்பித்தது!

 சிந்தகவோ சர்வசாதாரணமாக அதில் ஏறி அவளுக்கு நேர்மேலே நின்று கொண்டான். மற்றவர்களோ அவளைப்பார்த்து புன்னகைத்து விட்டு சமந்தவின் பேச்சிலேயே கவனமாக இருந்தார்கள்!

இதென்னடா சோதனை! கால்வைத்த இடமெல்லாம் புதைகிறதே. அடேய் யாராவது என்னை திரும்பி பாருங்கடா..இவன் வேறு பார்த்துக்கொண்டே நிற்கிறானே..இவனிடம் உதவி கேட்பதா? அதற்கு நீ கீழேயே நின்று விடலாம் மைத்தி!!!

சிந்தக அசையவில்லை. ஒரு அளவிடும் பார்வையோடு அவளுக்கு மேலேயே நின்றுகொண்டிருந்தான். ஒரு பத்து தடவைகள் முயன்று பார்த்தவள் கடைக்கண்ணால் அவனை பார்த்தாள். அவள் வாயைதிறந்து கேட்டால் பெரிய மனதோடு உதவி செய்வார் போலிருக்கிறது.

“நீ துட்டகைமுனு என்றால் நான் எல்லாளன் வம்சம் டா!” அவளுக்குள் இருந்த தமிழுணர்வு பிடரி முடியை சிலிர்த்தது.

சட்டென “சுதா” என்று அழைத்தாள் மைத்தி. கேள்வியாக திரும்பிப்பார்த்ததுமே புரிந்துகொண்டு அருகில் வந்து கையை நீட்டினான் சுதா. அதற்குள் அங்கே நின்றதன் அடையாளமே இல்லாமல் விலகி தந்தையோடு சேர்ந்து கொண்டிருந்தான் சிந்தக!

சுதா நீட்டிய கையை தயக்கத்துடன் பற்றியவள் ஒரு வழியாய் மேலே ஏறினாள்.

“நாங்கள் இந்தப்பக்கமா வரல மைதிலி! அதோ படி போல இருக்குபார் அது வழியா தான் ஏறி வந்தோம்.” மேலே வந்தவள் சுதா  சொன்ன திசையில் பார்த்து கண்கள் சிவந்தாள்! எதிர்ப்புறமிருந்து புதர்களுக்கிடையில் தெளிவாகவே தெரிந்தது மண்ணாலான படிக்கட்டுக்கள்!

அப்போ வேண்டுமென்றே அவளை மணல் பக்கமாக இழுத்து வந்ததும் இல்லாமல் சுதாவின் கையை பிடிக்க வேறு வைத்து விட்டானே..இந்த துட்டகைமுனு  என்ன தான் நினைத்துக்கொண்டிருக்கிறான்? அவன் தன்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பது போல அவமானமும் கோபமும் கலவையாய் அவளுக்குள் பொங்கியது.

நீயும் ஒரு லூசு மைத்தி! விக்ரமாதித்தன் கணக்கில் அதே மணலில் தாவிக்கொண்டிருந்தாயே தவிர சுற்றி வந்து வழி தேடியிருந்தால் இலகுவாக அந்த படிக்கட்டுகளை கண்டிருப்பாயே..மனம் அவளிலும் குற்றம் கண்டது

இவன் தப்பான ரூட்ல கூட்டிட்டு வருவான்னு நான் என்ன கனவா கண்டேன்? என்று மனதுக்குள் முனங்கினாள் அவள்.

வீடுகள் தான் சின்னதாக இருந்தனவே தவிர அதற்கு பின்னே இருந்த விவசாய நிலங்கள் ஒவ்வொருவரிடமும் ஏக்கர் கணக்கில் இருந்தன. அவர்கள் பயிரிடாத வகையே இல்லையெனலாம். வானம் பார்த்த பூமியாய் மழையை மட்டும் நம்பி நெல் விளைவிக்கும் யாழ்ப்பாண பெண்ணான அவளுக்கு நீர் தேக்கி வைத்து பாசனம் செய்யும் இவைகளெல்லாம் ரொம்பவே வித்யாசமாக இருந்தன. அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பது மட்டுமே புரிந்த நிலையில் அவள் சுற்றிலும் வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னே ஒவ்வொரு பேச்சுக்கும் சுதாவிடம் மொழிபெயர்ப்பு கேட்க முடியுமா என்ன?

அவர்கள் வீட்டில் அந்த தடியன் பெருமதிப்புக்குரியவன் என்பது அவனது பெற்றோரும் தங்கையும் அவனிடம் பேசிய தொனியிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. அவன் அங்கே வந்தபிறகு தந்தை பேசுவது குறைய, மெல்லிய சிரிப்பு நிரந்தரமாய் உறைந்திருந்த உதடுகளோடு  அவன் தான் பேச ஆரம்பித்திருந்தான். அவளோட வந்த மற்றப்பெண்ணோடு அவன் எப்படி பேசுகிறான் என்று கவனித்தால்..அவளை நங்கி (தங்கச்சி) என்று நேரடியாகவே அழைத்து மைத்தியை அதிர வைத்தான் அவன்!

தன்னை நங்கி என்று சொன்னானா? அவசரமாய் யோசித்தாள்.

இல்லையே..மைதிலி நைஸ் நேம் என்றான் அதன் பிறகு பேசவே இல்லையே…

மைதிலி நாங்கள் திரும்ப ஹாஸ்டல் போகும் போது உனக்கு நான் இதையெல்லாம் சொல்கிறேன் ஓகேவா? என்று சுதா கேட்க சரியென்று தலையசைத்தாள் அவள்

காதை தீட்டிக்கொண்டு அவர்கள் பேசுவதை பெருமுயற்சி செய்து அவள் புரிந்து கொள்ள முயற்சிப்பதை சிந்தகவினது ஓரப்பார்வைகள் கவனிப்பதை மைத்தியும் உணரவே செய்தாள்.

பழங்களை கொள்வனவு செய்து பெறுமதி சேர்த்து இன்னொரு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தரமான பிளாஸ்டிக் போத்தல்களில் லேபிள்களுடன் இணைத்து சூப்பர்மார்க்கட்டுகளுக்கு சப்ளை செய்யும் தொழிலில் அவன் இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட போது கொஞ்சமாய் பயம் தொலைந்து அவன் மீது மரியாதை  சேர்ந்தது.

அன்றிரவு சாப்பிட்டு விட்டு செல்லச்சொன்ன மஞ்சுவின் வற்புறுத்தலுக்கு இணங்க அவர்கள் அங்கே காத்திருந்தபோது சிந்தக அவளுடைய நண்பர்களுடன் நிறைய பேசிகொண்டிருந்தான்.

அவன் பேசியது புரிந்தும் புரியாமலும் அவனின் குரலின் ஏற்ற இறக்கங்களை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தவளை அவ்வப்போது கவனித்து சுதா மூலமாக அவளையும் பேச்சில் இணைத்துக்கொண்ட அவனது கரிசனை இந்த துட்டகைமுனுவுக்குள்ளும் ஏதோ ஒண்ணு இருக்கு பாரேன் என்று அவளை சந்தோஷிப்பித்தது.

ஆனால் அவனது கடினமான வெளிப்புறத்துக்குள்ளே இருப்பது இனிமையான பலாச்சுளைதான் என்ற நிச்சயத்தை கொடுத்த சம்பவம் சற்று நேரத்தில் நிகழ்ந்தது.

இரவு உணவுக்கு சற்றுமுன் சஜினி தாய்க்கு சமைத்தவற்றை எடுத்து வைக்க உதவப்போய்விட அனைவரும் கைகழுவிக்கொண்டு வந்து வரிசையாக இருந்த மூங்கில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.

சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு வட்டவடிவ தட்டத்தில் ஒரேயொரு தண்ணீர் கிளாசை ஏந்தியபடி சிந்தக வெளியே வந்தான்.

கிட்சன் பக்கமாக முதலாவதாக அமர்ந்திருந்த அவளிடம் அவன் அதை நீட்ட ஏன் எனக்குமட்டும் தண்ணீர் தருகிறான்? என்ற குழப்பத்துடன்  கைநீட்டி அவள் அதை எடுக்க முற்பட சட்டென கண்களால் எடுக்காதே என்று கட்டளையிட்டான் சிந்தக. அவள் பயந்து போய் தன் கைகளை எடுத்துக்கொள்ள அருகில் இருந்த பெண்ணிடம் அதே தட்டையும் கிளாசையும் நீட்டினான். அவள் அந்த கிளாசில் கைவைத்து வணங்குவது போல் செய்ய மைத்திக்கு முகம் ரத்தமாய் சிவந்து போனது.

இதை தொட்டு வணங்க வேண்டும் என்று அவளுக்கெப்படி தெரியும்? நல்லவேளை அதை எடுத்து அவள் குடித்திருந்தால் எல்லாரும் அன்று முழுவதும் அதை சொல்லியே சிரித்திருப்பார்கள்.

ஆனால் எதுவுமே நடக்காததை போல மீண்டும் அவளிடம் சிந்தக  தட்டை நீட்ட நடுங்கும் கரங்களால் அந்தப்பெண்ணைப்போலவே தானும் செய்தாள் மைத்தி. சின்ன வேறுபாட்டை கூட முகத்தில் காண்பிக்காமல்  தட்டை அவன் மற்றவர்களிடம் எடுத்துசெல்ல நன்றிப்பெருக்கோடு தலைகுனிந்துகொண்டாள் அவள்.

அவர்களுடைய பாரம்பரியங்களை தெரியாமல் நம்மவர்கள் ஏதாவது செய்து விடுவதும் அதை அவர்கள் அன்று முழுவதும் ஜோக்காக சொல்லி சிரிப்பதும் அவர்கள் அங்கு வந்ததில் இருந்து ஹாஸ்டலில் நடப்பதுதான். அவளை அந்த கிளாசை எடுக்காதே என்று உரக்க அவன் சொல்லியிருந்தாலே மற்றவர்கள் முதலில் சிரித்து தான் இருப்பார்கள். ஆனால் அதை எப்படி செய்வது என்று அடுத்தவள் மூலமாக சைகையிலேயே புரியவைத்த அவன் செய்கையும் அதில் இருந்த குட்டிக்கரிசனமும்  அவளுக்குள் அன்றைக்கு ஆழமாய் புகுந்து கொண்டு விட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாகத்தானோ என்னவோ ஹாஸ்டல் செல்வதற்காய் அவர்களிடம் விடை பெற்ற போது அனிச்சையாய் அவள் பார்வை சிந்தகவிடம் பாய்ந்தது. அதற்காகவே காத்திருந்தவன் போல போய்வா எனும் பாவனையில் அவன் மெல்ல தலையசைத்தானோ? உடலும் உள்ளமும் விதிர்விதிர்க்க தலையை அவசரமாய் திருப்பிக்கொண்டவள் நண்பர்களோடு ஹாஸ்டல் நோக்கி சைக்கிள் மிதிக்க ஆரம்பித்தாள்

WLM அத்தியாயம் 1

“நான் ஏன் இங்கு வந்தேன் என்று எனக்கே தெளிவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னே என் நெஞ்சில் மலர்ந்த பூ கருகிவிட்டது என்று தான் எண்ணியிருந்தேன்…ஆனால் இரவின் குளிரில் , தனிமையில் அதன் வாசம் வருவதை உணரும் போது தான் அது கருகும் பூ அல்ல என்று புரிந்து கொண்டேன். என்ன செய்வது? எல்லாப்பூக்களும் பூஜைக்கு செல்வதில்லையே..இறுதியாக ஒரே ஒரு தடவை அவன் முகத்தை பார்த்து விட வேண்டும். அது போதும் எனக்கு!”

மகா இல்லுப்பள்ளம பெண்கள் ஹாஸ்டலின் பத்தொன்பதாம் நம்பர் அறையில் மேஜையில் ஏறி அமர்ந்து கொண்டு கெத்தான நிமிர்வுடன் தனக்கு நேரெதிரே பம்மியபடி அமர்ந்திருந்த இரண்டு முதல் வருட மாணவிகளிடம் பேசிக்கொண்டிருந்தாள் மைதிலி.

 “உங்கட பெயர் என்ன என்று கேட்கலாமா?” தயக்கமாய் ஒருத்தி வினவினாள்

“ஏன்? இந்த அக்கா தான் வந்து ராக்கிங் பண்ணினா என்று என்னை போட்டுக்கொடுக்கவா?” என்று பதிலுக்கு சிரிக்காமல் கேட்டவள்” உங்களுக்கு சீனியர் என்று தெரிந்தால் மட்டும் போதும்” என்று கறாராய் சொல்லி விட்டு  “சைக்கிள் வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள்.

இருவருமே “ஆம்” என்றார்கள். ஒருத்தியிடம் கீயை வாங்கிக்கொண்டவள் இன்னமும் உள்ளே ஜூனியர்களோடு பேசிக்கொண்டிருந்த சக மாணவியிடம் தலையசைத்தபடி அறையை சாத்தினாள் மைதிலி.

அந்த அறைக்கதவில் வெளிப்புறமாக கீயினால் ‘மைத்தீ’ என்று அவள் பெயர் அங்கே வந்த ஆண்டுடன் பொறிக்கப்பட்டிருந்தது பளிச்சென்று தெரிந்தது. சிரிப்புடன் அதை மொபைலில் படம் எடுத்துக்கொண்டவள் ஹாஸ்டல் ஹாரிடோரில் இறங்கி நடந்தாள்.

இந்த ஹாஸ்டலில் ஒவ்வொரு இடத்திலும் அவளது ஆன்மா லயித்து லயித்து வாழ்ந்ததே..

அதோ அந்த கைப்பிடிச்சுவரில் அமர்ந்து தான் எல்லோருமாக பேசிக்கொண்டிருப்பார்கள்..

வலப்புறம் ஸ்டடி ஹால்..அவள் மட்டும் அங்கே போனதே கிடையாது!

சதுரமாக அறைகள் அமைக்கப்பட்டிருக்க நடுவில் நாற்சார் போல நிலத்தில் ஒரு பெரிய நெல்லிமரம் இருக்கும். இன்றும் காய்த்துக்கிடந்த நெல்லிக்காய்களை சந்தோஷமாய் பார்த்தவள் வார்டனின் அறையை கடந்து வெளியே நடந்தாள்.

பெண்கள் ஹாஸ்டலுக்கு முன்னே கம்பிவேலியோரமாக  சின்னதாய் ஒரு புத்தர் சிலை வைத்து ஒற்றை அறை போல ஒரு வணங்கும் இடம் இருக்கும். சுற்றிலும் அரசமரம் கிளைபரப்பிக்கிடக்க குளுமை சூழ்ந்த அந்த இடம் தான் அவள் நடந்து கொண்டே படிக்கும் இடம்.. அங்கே தான் மைத்தி பழியாய் கிடப்பாள்..

படிக்க மட்டுமா அங்கே கிடந்தாய் நீ? மனசின் மெல்லிய அடுக்கொன்று அந்தகேள்வியின் கனம் தாளாமல் நடுங்கிற்று.

கோவிலின் பின்னிருந்த  தார் போட்ட வீதியில் அவள் கண்கள் போய் நிலை கொண்டன…. அந்த வீதி தான் சுற்றிலும் இருந்த கிராமங்களை அந்த உப பல்கலைக்கழகம் வழியாக பிரதான வீதியுடன் தொடுக்கும் நீண்ட நெடிய பணியை செய்யும்.

பரிச்சயமான ஒலியுடன் கறுப்பு பல்சர் ஒன்று அந்த வழியில் கடக்க சட்டென்று பரவிய குழந்தை தனமான மகிழ்வுடன் இமைக்குடைகளை மலர்த்தி ஏறிட்டு பார்த்து விட்டு ஏமாற்றமாய் தனக்குத்தானே கொட்டிக்கொண்டாள் மைத்தி.

மூன்று வருஷமாகப்போகிறது..இன்னும் உனக்கு பைத்தியம் தெளியவில்லையே..இந்த மண்ணில் கால்வைத்ததும் நடுவில் கடந்து போன வருடங்களை மறந்து அதே மைத்தியாக அன்று விட்ட புள்ளியில் உடலும் உணர்வுமாய் மனம் போய் நின்றுகொண்ட மாயம் தான் என்ன?

சட்டென்று தன்னை ஆக்கிரமித்த உணர்வுகளோடு போராட முடியாமல் அந்த பெண் ஷாலினியின் சைக்கிளை கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் இவளோடு வந்த பத்துப்பேரில் இருவர் ஏற்கனவே சைக்கிளோடு தயாராக ஆண்கள் ஹாஸ்டலின் முன் நின்று கொண்டிருக்க மெல்ல பெடல் வலித்தபடி அவர்களை நெருங்கினாள்

பரந்த காட்டின் நடுவில் அந்த உப பல்கலைக்கழக வளாகம் அதை சுற்றிலும் பல்வேறு தாவர ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலங்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் அருகருகே இரண்டு ஹாஸ்டல்கள், நடுவில் டைனிங் ஹால், சற்றுத்தொலைவில்  ஆடிடோரியம்  சுற்றிலும் சின்னதாய் கிராமங்கள், பயிர்நிலங்கள், அருகே ஒரு விகாரை அவ்வளவு தான் அந்த பிரதேசத்தின் சாட்டலைட் வரைபடம். தமிழர்களின் வாடையே இல்லாத பிரதேசம் அது என்று தைரியமாக சொல்லிவிடலாம்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய தொழினுட்பமும் முகாமைத்துவமும் கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்பட்டால் முதல் ஆறுமாத வதிவிட செயன்முறை பயிற்சியை இங்கே தான் கழித்தாக வேண்டும். அதன் பிறகே மலையகத்தில் அமைந்திருக்கும் பிரதான பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். வெறுமனே முதல் வருட மாணவர்கள் அவர்களுக்கான சில விரிவுரையாளர்கள், வெகுசில ஆராய்ச்சி மாணவர்கள் தவிர வேறு யாருமே அந்த சுற்றுப்பிரதேசத்தில் இருக்க மாட்டார்கள். மாணவர்களில் கூட தமிழ் மாணவர்கள் இருநூறுக்கு இருபது என்ற கணக்கில் தான் இருப்பார்கள்.

மைத்திலி  அனித்யாய கோ? (மைதிலி  மற்றவர்கள் எங்கே?)

எனகமங்! பொட்டக் இன்னக்கோ..(வருகிறார்கள். கொஞ்சம் இருங்களேன்) என்று கிண்டலாய் சொல்லிவிட்டு சைக்கிள் பெடலில் நின்றபடியே சில பல சுழற்சிகளை செய்தாள் மைத்தி..

நேற்று இரவு மகா இல்லுப்பள்ளமவுக்கு பத்து மாணவர்களில் ஒருவளாக ஜூனியர்களை பார்க்க கிளம்புகிறேன் என்று சொன்னதை அவளது தோழிகள் யாரும் ரசிக்கவில்லை!

“லூசா மைத்தி நீ? இந்த நேரம் என்னத்துக்கு இவ்வளவு தூரம் போறாய்??” தமிழின் குரல் தூரமாய் தலைக்குள்ளே இன்னும் ஒலித்தது!

 “ஒருநாளும் பாட்ச் கூட்டங்கள் ஒண்டுக்குமே நீ போறதில்ல.. திடீரென்று என்னடி ஆயிற்று?? ஜூனியர்சை பார்க்கோணும் எண்டு அவ்வளவு ஆசையா?” சுமியின் குரலில் தீவிரமான சந்தேகம்.

“இல்ல லூசு. மேகா தான் கேட்டா. தமிழ் மக்கள் யாருமே வரலையே..நீயாவது  சும்மா வா..ஜாலியா போயிட்டு வரலாம்னு. கொஞ்ச நாளா சுத்த போர் வேற! அதுதான் ஓகே சொல்லிட்டேன். வேற ஒண்ணும் இல்ல.” மைத்தியின் சமாளிப்பு நண்பிகளின் ஏறிய இமைகளை இறக்கவில்லை. அவர்களுக்குள்ளே சில பல கிசுகிசுப்புக்களுக்கே அது வித்திட்டதை அவள் அறியாமலுமில்லை. ஆனாலும் அவள் பின் வாங்கவில்லை.

சைக்கிள்கள் கூட்டமாய் தார் ரோட்டில் இடப்பக்கமாய் இறங்கி  சேனபுர கிராமத்தை நோக்கி சென்றது. தன்னை முந்திக்கொண்டு சென்ற அமிலவுக்கு புன்னகையோடு வழிவிட்டவள் அவனுடைய சைக்கிளில் முன் பக்க காரியரில் அவன் கைகளுக்கிடையில் தொற்றிக்கொண்டிருந்த இஷங்காவை கண்டு சட்டென அதிர்ந்து பின் அவர்களை பார்க்காததை போல பாதையில் கவனம் வைத்து பெடல் வலிக்க ஆரம்பித்தாள்.

இஷங்கா நல்ல பெண். இன்னொருவனை காதலிப்பவள்.  ஆனால் அமிலவோடு …என்று சிறகு விரிக்க முயன்ற சிந்தனையை  சட்டென்று இழுத்துப்பிடித்து சிறையில் அடைத்தாள் மைதிலி.

முதல் வருடம் இங்கிருந்த போது அவள் பார்க்காத காட்சியா இது?

ஹ்ம்ம்..இவர்கள் தான் எவ்வளவு இலகுவாக இதையெல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள்! தமிழன் தான் சும்மா ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான  சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் ரொமான்டிசைஸ் செய்து வாழ்க்கையை சிக்கலாக்கி வைக்கிறானா? மைத்தியின் மனதின் அடுக்குகளில் இருந்து ஒரு ஞாபகப்பறவை கூடு திறந்து சிறகடித்து பறந்தது.

“மே மைத்திலி.. பலாகன!!! (கவனம்)”  கூட வந்தவன் ஒருவன் குரல் கொடுத்ததில் சுய உணர்வுக்கு வந்தவள் தார்ப்பாதை முடிந்து மணல் பாதை ஆரம்பிக்கும் இடத்தில் சரிய ஆரம்பித்த சைக்கிளை திருப்பி மீண்டும் மணல் குறைவான பகுதிக்கு வந்து சேர்ந்தாள்.

இனி இந்த மணல் பாதையில் ஒரு இருபது நிமிடங்கள் சைக்கிள் மிதித்தால் அவள் போக வேண்டிய இடம் வந்துவிடும். பாதையோடு கூடவே ஓடிய பெரிய நீர்ப்பாசன கால்வாயில் சர்வசாதாரணமாக பெண்கள் குறுக்கே ஒரு நீளமான துணியை சுற்றிக்கொண்டு குளித்துக்கொண்டும் உடை துவைத்துக்கொண்டும் இருந்தனர். இங்கே வந்த ஆரம்பத்தில் இந்த காட்சியை விழி தெறிக்க பார்த்ததும் இந்த பெண்களை மனதுக்குள் திட்டோ திட்டென்று திட்டியதும் நினைவு வந்து சிரிப்பு தொற்றிக்கொண்டது மைத்திக்கு. அவர்களுடைய கலாசாரமே இதுதானே..

சமீர அண்ணா அன்றைக்கு போல இன்றைக்கும் கடையின் முன்புறம் வர்ண ஜெலி போத்தல்களை அடுக்கி வைத்துக்கொண்டு மும்முரமாக வியாபாரத்தில் இருந்தார். அந்த சுற்று வட்டாரத்தில் இருந்த ஒரே ஒரு பலசரக்கு கடை இந்த சமீரவினுடையது மட்டுமே..

சைக்கிளை நிறுத்தி அவரை நலம் விசாரித்து தங்களை நினைவிருக்கிறதா என்று இவர்கள் கேட்க உற்சாகமாய் பேசியவர் “நங்கி தாம கொளபாட்ட ஜெல்லி த கண்ணே?” (தங்கச்சி, இன்னும் பச்சை நிற ஜெலி தான் சாப்பிடுகிறாயா?) எனக்கேட்டு மைதிலியை அதிரவைத்தார்.

பதிலுக்கு சிறு வெட்கமாய் புன்னகைத்து சமீரவின் குழந்தையை பற்றி நலம் விசாரித்தவள் சைக்கிளை நோக்கி வந்தாள். மற்றவர்கள் இன்னமும் சமீரவோடு அளவளாவி முடித்திருக்கவில்லை.

கொளபாட்ட! (பச்சை நிறம்)

இன்னொருவனின் குரல் அவள் ஞாபகங்களில் பேரோசையாய் கேட்டது..

“நீ ஒரு குழந்தை போல!!! ஏன் வேறு நிறங்கள் உனக்கு பிடிக்காதா?” என்று சிரிப்புடன் கேட்ட அவன்

“மைத்தி நான் அம்மாவிடம் சொல்லி எல்லாமே உனக்கு பச்சை நிறத்தில் சமைக்க வைத்து எடுத்து வந்தேன்” குறும்பு தவள அவளை சீண்டிய அவன்

“போடி..எனக்கு உன் முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லை” என்று கடுங்கோபமாய் விரட்டியடித்த அவன்…

ஐயோ சிந்தக!!!!

இரண்டு வருடங்களாய் இவன் ஞாபகங்கள் என்னை இப்படிக்கொல்லவில்லையே. இந்த மண்ணில் கால் வைத்ததும் அவை என்னை துரத்தி கொல்கின்றவே! இங்கே வந்தது தவறோ?” அடக்கி வைத்த கண்ணீர் பொல பொலவென வெளியே வர அவசரமாய் மற்றவர்கள் காண முன்னர் டிஷூ கொண்டு துடைத்து விட்டாள் அவள்

மீண்டும் சைக்கிள்  மிதிக்க சில நிமிஷங்களில் சேனபுர கிராமத்தின் முகப்பு அவள் கண் முன் பட்டது. வந்த சைக்கிள்கள் குழுக்களாய் பிரிந்து ஒவ்வொரு வீதியிலும் திரும்பி மறைய தான் அந்த ஆலமரம் வரை போக வேண்டும் என்று சொல்லி அமிலவையும் இஷங்காவையும் பின் தொடர்ந்தாள் மைத்தி. அமிலவும் இஷங்காவும் அவள் போகவேண்டிய மஞ்சு ஆன்ட்டி வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்குத்தான் போகவேண்டும். மஞ்சள் கோன் பூக்கொடிகளும் நந்தியாவட்டை பூக்களும் இன்னபிற வர்ண குரோட்டன்களாலும் அழகுபடுத்தப்பட்டிருந்த அந்த குட்டி வீடு அவள் பார்வையில் படப்பட இதயப்படபடப்பும் அதிகரித்துக்கொண்டே போனது.

அவனை காண முடியுமா?

திருமணமே செய்து கொண்டிருப்பானா?

“மைத்திலி ..உனக்கு தனியாக போக முடியும் தானே?”

“yeah. Why not?” என்று இஷங்காவிடம் சிரித்தபடி முன் வீட்டில் அவர்கள் இருவரும் உதிர்ந்துகொள்ள அடுத்த வீட்டுக்கான பாதையில் அவள் மட்டும் தனியே நடந்தாள் மைதிலி .

இந்த மூன்று ஆண்டுகளுக்கும்  அந்த வீட்டில் மாற்றமே இல்லை. ஓலையால் கிடுகு இருபக்கமும் நெருக்கமாக அழகாக வேயப்பட்ட சின்னதொரு பாதை இரு மருங்கும் கார்னேஷன் பூக்கள் மஞ்சள் கார்ன் பூக்களுடன் அவ்வீட்டின் கேட்டினை நோக்கி அழைத்து செல்லும். கேட்டை திறந்தால் சின்னதாய் ஒரு செங்கல் வீடு. அதன் பின்னே தான் தோட்டமும் வயல்நிலமும் விரிந்திருந்தன.

இந்த குட்டி வீடு தானே மஞ்சு ஆன்ட்டி, சமந்த அங்கிள், சிந்தக, சஜினிகுட்டி, அவள் என்று அது வரை அனுபவித்தறியாத ஒரு வாழ்க்கையை மைதிலிக்கு காட்டியது. ஒருகணம் நினைவுகளின் வேகத்தில் தடுமாறி நின்றாள் அவள்.

எதையோ கழுவி விட்டு வெளியே ஊற்ற வந்த மஞ்சு ஆன்ட்டி இவளை கண்டு ஒரு கணம் அதிர்ந்து பாத்திரத்தை கீழே வைத்து விட்டு “மைத்தீ” என்ற கூவலுடன் ஓடி வந்து அவளை இறுக அணைத்து கொஞ்சமாய் அழுதே விட்டார்.

அவரது கையின் ஈரமும் சற்றே புஷ்டியான உடலின் அழுத்தமும் தாய்க்கோழியின் வெதுவெதுப்பான முத்தமாய் மைத்தியின் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது. எளிய மனிதர்களின் பாசத்துக்கு ஏது இன மத எல்லைகள்? சத்தம் கேட்டு ஓடி வந்த சஜினியும் “மைத்தி அக்கி” என்று சிரித்தபடி ஓடி வந்து அவளது கையை பற்றிக்கொண்டாள்.

“என்னம் கியலா கிவ்வே நானே துவ”..(வருகிறேன் என்று சொல்லவே இல்லையே மகளே”) என்று செல்லமாய் அவளை வைதவர் கை பற்றி உள்ளே அழைத்துப்போனார். வீட்டில் இருந்த மூங்கில் கதிரைகள் மாறி சோபா புதிதாய் நுழைந்திருந்தது. வீட்டின் வெளிப்புறம் அப்படியே இருந்தாலும் உட்புறம் மிக வசதியாக மாறியிருந்தது உடனேயே புலப்பட்டது.

“அப்பா மைத்தி அக்கா வந்திருக்கிறாள்” போனில் உற்சாகமாய் சஜினி தந்தைக்கு தகவல் சொன்னவள் அவளோடு ஒட்டி அமர்ந்துகொண்டாள். அவள் சஜிக்காக வாங்கி வந்த ஸ்கர்ட் அவளுக்கு ரொம்பவே பிடித்தது என்று அவளது மலர்ந்த முகமே சொன்னது.

“அம்மா சுகமா இருக்காங்களா? அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு? எங்களுக்கு இதெல்லாம் வாங்கி வரவில்லைஎன்றால் தான் என்ன?” என்று படபடத்தபடி அவள் அவருக்காய் வாங்கி வந்திருந்த சேலையை தோளில் போட்டு ஆசையாய் தடவிக்கொண்டு மஞ்சு ஆன்ட்டி  அவளை விசாரித்துக்கொண்டிருக்க மைத்தியின் கவனம் அங்கில்லை.

அவளுக்கு சொல்லாமல் அங்கே எதுவும் நடக்காது தானென்றாலும் அந்த ராட்சஷன் மைதிலிக்கு சொல்ல வேண்டாம் என்று சொன்னாலும் சொல்லக்கூடியவன் என்ற எண்ணத்தில் சிந்தகவின் திருமணப்புகைப்படம் ஏதும் அங்கிருக்கிறதா என்று கழுகுக்கண்களால் தேடி இல்லை என்றதுமே நிம்மதியாய் சாய்ந்து அமர்ந்து மஞ்சுவின் பேச்சுக்கு காது கொடுத்தாள் மைத்தி.

“எல்லாரும் சுகமாத்தான் இருக்காங்க. அம்மா உங்களை ரொம்ப விசாரிச்சதா சொல்ல சொன்னாங்க!” என்றவள் கையில் உரித்த கோழியுடன் பிரவேசித்த சஜினியின் அப்பா சமந்தவை கண்டதும் “ஹலோ அங்கிள் எப்படியிருக்கீங்க?” என்று என்று கேட்டு புன்னகைத்தாள்

“கொஹோமத துவ?” (எப்படியிருக்கிறாய் மகள்?) என்ற நலன்விசாரிப்புடன் வந்தவர் கோழியை மனைவியின் கையில் கொடுத்தார்.

“இன்றைக்கு சாப்பிட்டுட்டு தான் போகணும்!” என்ற அன்புக்கட்டளையுடன் மஞ்சு எழுந்து ஹாலை ஒட்டி இருந்த சிறிய சமையலறைக்குள் நுழைய மைத்தி தான் வாங்கி வந்திருந்த ஷர்ட்டை சமந்தவிடம் தந்து விட்டு அவரை பின் தொடர்ந்தாள்

“நான் இரண்டு மணிக்கெல்லாம் அங்கே இருக்கணும் ஆன்ட்டி..இன்னொரு நாள் சாப்பிட வர்றேனே..”

“அட இதோ ரெண்டு நிமிஷத்தில் குழம்பு வைத்து விடுவேன். ஏற்கனவே சோறு கறிகளெல்லாம் ஆயிற்று. இனிப்போனால் உன்னை எப்போது காண்போமோ! அதெல்லாம் இரண்டு மணிக்கு முன்னேயே போய் விடலாம்.”

“அப்போ நான் ஏதும் செய்து தரட்டுமா?”

“ஒன்றும் தேவையில்ல. போய் வெளியே ஹால்ல சஜினி கூட பேசிட்டிரு.”

புன்னகையோடு வெளியே வந்தவளுக்கு தொண்டை வரையில் கேள்வி ஒன்று தொக்கி நின்றுகொண்டிருந்தது.எப்படிக்கேட்பது? எங்கே  ஆரம்பிப்பது?

ஹாலில் சஜினியின் அருகில் போய் அமர்ந்தவளின் பார்வை வலப்பக்கமாய் இருந்த சின்ன ஷோ கேசில் போய் ஆணியடித்தது போல நிலை கொண்டது. அதற்குள் சின்னதாய் ஒரு போட்டோ பிரேம். அதற்குள் இந்த சின்னக்குடும்ப அங்கத்தவர்கள் நால்வரும் அடங்கிப்போயிருந்தனர். அவள் தேடியவனோ வழக்கமான மயக்கும் கபில விழிகளும் முறைப்புப்பார்வையும் கொண்டு திமிராகவே நின்று கொண்டிருந்தான்.  

“இது சித்தியோட பொண்ணு கல்யாணத்தன்னிக்கு எடுத்தது மைத்தி அக்கி..”

மாட்டிக்கொண்டவளாய் திடுக்கிட்டாலும் சாதாரணம் போல கேட்டுக்கொண்டு “ஓ… அண்ணா எங்கே சஜி? நான் அவருக்கும் ஒன்று வாங்கி வந்தேன். இதை அவரிடம் தந்து விடுகிறாயா?” இவ்வளவு நேரமும் வாய்க்குள் துடித்துக்கொண்டிருந்த கேள்வியை தயக்கமாய் வெளியே துப்பி விட்டு கையில் இருந்த சின்னதொரு புத்தகப்பார்சலை நீட்டினால் மைத்தி. ‘Born to rule’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது அது.

“கொடுத்துர்றேன்” என்றாள் சஜி..அதை இப்படியும் அப்படியும் புரட்டியபடி

“நான் கே.. கேட்டேன் ..சுகம் கேட்டேன் என்றும் சொல்லிவிடு.”

“அண்ணா இப்பல்லாம் வீட்டுக்கு வர்றதே வாரம் ஒருநாள் தான். டவுன்ல நிலம் வாங்கி வீடு கட்டிட்டான். வேலை படிப்புன்னு அவன் செம பிசி. வரும்போதெல்லாம் அவனுக்கும் அம்மிக்கும் ஒரே சண்டை தான்..”

“சண்டையா எதுக்கு?”

“கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றான்னு அம்மி திட்டுவாங்க…அங்கே அவன் வீட்டுக்கு வந்து இருங்க, இல்லன்னா இந்த வீட்டை பெருசா கட்டுவோம்னு அவன் கத்துவான்”

“ஓ…” கேட்கையிலே முகத்தில் அதிகமான சந்தோஷத்தை காட்டி விட்டோமா என்று மைத்திக்கு பயம் வந்த நொடி சஜியின் கூர்மையான பார்வை அவளை ஊடுருவி பார்த்ததோ?

அன்றைய நாள் இரண்டு மணி வரை அவர்களோடேயே சேர்ந்து சாப்பிட்டு பழைய ஞாபகங்களை எல்லாம் மீட்டி ஆனந்தமானாலும் ஏமாற்றம் பெரிதாக வளர்ந்து கொண்டே இருந்தது. பின்னே இத்தனை மைல்கள் பயணம் செய்து அவள் இங்கே வந்ததே சிந்தகவை பார்க்கத்தானே!

இந்த வருடத்தோடு அவளது நான்காம் வருடம் முடிந்து விடும். இனி இங்கே வர சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னவோ?அவன் எப்படிக்கோபப்பட்டாலும் பரவாயில்லை  கடைசியாய் ஒருதடவை அவனை விழிகளில் நிரப்பிக்கொள்கிறேன் என்று ஆசையோடு வந்தவளுக்கு அந்தக்கொடுப்பினை கூட வாய்க்கவில்லையா?

எண்ணி வந்தபடியே அவனை அழைக்கலாம், இல்லையாயின் இவர்களிடம் கேட்டுக்கொண்டு அவனை போய் பார்க்கலாம். ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்றை செய்துவிட்டு திரும்பி அதே உறுதியுடன் உன்னால் காம்பஸ் திரும்ப முடியுமா? இல்லை என்று தான் மனம் சொன்னது. இந்த இடம் அவளது உறுதியை எப்படிப்பாதிக்கும் என்று தான் இன்று முழுவதும் சாம்பிள் கிடைத்துக்கொண்டே இருக்கிறதே.. வேண்டாம் அவனுடைய இடத்துக்கு வந்து போய் அந்த பழைய ஞாபகங்களை சுவாசித்ததே போதும். திரும்பி விடு மைதிலி அது மட்டும் தான் புத்திசாலித்தனமான முடிவு. அறிவின் கட்டளையை மீறும் துணிவில்லை அவளுக்கு.

இரண்டு மணிக்கெல்லாம் மஞ்சு குடும்பத்தாரிடம் விடைபெற்று கூட வந்தவர்களுடன் இணைந்து இரண்டரை மணியளவில் அவர்கள் வந்த பஸ் மீண்டும் புறப்பட்டது. தன் பின்னே ஓடிய வயல் நிலங்கள், மரங்கள், ஆடிட்டோரியம், மாந்தோப்பு எல்லாவற்றையும் யன்னல் வழி எக்கி ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே வந்தவள் பிரதான வீதியில் இணையும் இடத்தில் விழிகள் நிலைகுத்த அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தாள்

கருப்பு நிற suv வண்டி தெருவோரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க    அதன் பக்கப்புறத்தில் போன் பேசுவது போல சாய்ந்து நின்றுகொண்டு  அவளையே ஊன்றி பார்த்துக்கொண்டிருந்தவன் சிந்தகவே தானா?

கண்களும் பார்வையும் அவனே தான் என்று சொல்ல திடுக் திடுக் என இதயத்தில் ஓட ஆரம்பித்த பதட்ட ரேகையுடன் அவனையே இமைக்காமல் பார்த்தாள் மைதிலி..

அன்றைக்கு பார்த்ததற்கு எவ்வளவு மாற்றம் அவனிடம்? நடை, உடை பாவனை எல்லாமே மொத்தமாய் மாறிப்போயிருந்தது. ஆனால் அவளை ஈர்த்த அவனுடைய திமிரான நிமிர்வும், அடங்காத தலைமுடியும், பார்த்ததுமே அவளை மெஸ்மரிசம் செய்து விடும் கண்களும் அப்படியே மாறாமல்…

இருவரிடமும் அசைவில்லை. அவளது கண்கள் கலங்கி தளும்பி பார்வை தடுமாற, மைதிலி இருந்த வண்டி சிந்தகவை கடந்து ஊர்ந்து பிரதான தெருவில் வேகமெடுத்தது. பிறகு மெல்ல மெல்ல அவளின் கண்களுக்கு அவன் மறைந்தே போனான். விம்மலும் அழுகையும் பொங்கி வர தலையை உள்ளிளுத்துக்கொண்டு சீட்டில் சுருண்டாள் மைத்தி.

இரும்பாக இறுகிப்போன தாடையுடன் கதவை இறுக்கமாய் பற்றிஇருந்தவனும் காலை மண்ணில் கோபமாய் உதைத்தபடி வண்டியில் ஏறி கதவை அறைந்து சாத்தினான். அந்த வண்டியை துரத்திச்சென்று அவளை இழுத்துக்கொண்டு வந்து விட வேண்டும் என்று செல்களெல்லாம் அடம் செய்ய கையாலாகாதவனாய் ஸ்டியரிங்கிலேயே கவிழ்ந்தான் சிந்தக.           

வித் லவ் மைதிலி

error: Content is protected !!