WLM அத்தியாயம் 18

இந்த தடவை நம்மிடைய எந்த ஒளிவு மறைவும் இல்லாததாலும் இருவரிடமுமே எதிர்காலம் குறித்த அசைக்க முடியாத நம்பிக்கை ஒரு வளர்ந்திருந்ததாலும் பிரிவு பெரிதாக தெரியவில்லை. அதை விட என்னவன் நல்லவன் என்ற கர்வமே என் மனம் முழுதும் நிறைந்து கிடந்தது. இன்னும் நான்கு மாதங்களை ஒருவழியாய் ஓட்டி பட்டப்படிப்பை முடித்து விட்டு அவனோடு வாழும் கனவுகளை நான் கண்களில் பூட்டிக்கொண்டிருக்க விதி தானும் தன் போக்கில் எங்களுக்காய் ஒரு வேலை செய்து வைத்துக்கொண்டு காத்திருந்தது.

மைத்தி!!! சீக்கிரம் வா…இப்போ புறப்பட்டால் தான் பேராதெனிய போய் சேர முடியும்! ஹாலுக்குள் இருந்து சிந்தகவின் குரல் கேட்டது.

வரேன்..கொஞ்சம் இருங்களேன்..  என்று குரல் கொடுத்தபடி அவன் வாங்கிக்கொடுத்த உடைகளை எல்லாம் ஒரு சின்ன பக்பாக் ஒன்றில் அடைத்து வைத்திருந்தவள் இதர சாமான்கள் எல்லாவற்றையும் அதற்குள் அடைத்துவிட்டு அறையை ஒருகணம் நோட்டமிட்டாள் மைதிலி.

பூஜையறைக்குள் இருந்த பான்டசி சிவன் இப்போது அவளது அறையில் மாட்டப்பட்டிருந்தார். சீ யூ சூன் சிவா என்று அவருக்கு விடைகொடுத்தவள் பக் பாக்கினை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

அவளது கையில் ப்ரோட்டிநெக்ஸ் மக்கினை திணித்தவன் சீக்கிரம் குடித்து முடி என்று விட்டு தான் சூப்பர்மார்க்கெட்டில் வாங்கி வந்த பொருட்களை இரண்டு பைகளில் போட்டுவிட்டு இவளுடைய பக்பாக்கையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் வண்டியில் வைத்து விட்டு வந்தான்.

போன் எடுத்தாயா? ஷுவர் தானே சார்ஜர் ஹாஸ்டலில் இருக்கிறதென்று? உன்னுடைய மருந்துகளை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு இன்றைக்கு வாங்கிய சாமான்களுடன் வைத்திருக்கிறேன். நீ கொண்டு வந்த ஹான்ட் பாக்கையும் வைத்தாயிற்று. வேறு என்ன? வேறு என்ன? என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஹாலில் நடைபழகியவனை புன்னகையுடன் பார்த்தாள் மைதிலி. பிறகு அவன் அடிக்கடி செய்வதைப்போல அவனுடைய வலக்கையை பிடித்து அதை தன் உதடுகளில் ஒற்றினாள்.

மைத்தி….

சிரிப்பு முகம் மாறாமலே அவனை ஏறிட்டவள் “என்னை அனுப்பி வைப்பதில் ஐயாவுக்கு அவ்வளவு சந்தோஷம்! ஓடி ஓடி எல்லா வேலைகளும் செய்கிறார்!!!” என்று சீண்டினாள்.

உனக்கென்ன தெரியும் என்னைப்பற்றி! அவளை தன் புறமாய் பிடித்திழுத்தவன் அவளது நெற்றி முடியை ஒதுக்கிவிட்டான். எப்போதுமே அனிச்சை செயலாய் இதை அவன் செய்வதை மைதிலி கவனித்திருக்கிறாள். அவனை ஒட்டி புஜங்களில் சாய்ந்து நின்றாள் அவள். சிறிது நேரம் மௌனமாய் அவளை நெஞ்சில் சாய்த்து வைத்திருந்தவன் பிறகு நெற்றியில் முத்தமிட்டு அவள் கவனத்தை கலைத்தான்..

நேரமாகிறது கண்ணம்மா.. போகலாமா?

ஹ்ம்ம் இன்னொரு தடவை கண்ணம்மா சொன்னால் தான் வருவேன்! அவள் செல்லமாய் அடம்பிடிக்க

உன்னை!!! இவ்வளவு நாளும் கூட இருக்கும் போது வாய்க்குள் முட்டையை வைத்துக்கொண்டு அறைக்குள் ஒளித்திருந்து  விட்டு கிளம்பும் நேரத்தில் எல்லாவற்றையும் செய்! என்று சலித்துக்கொண்டவன் “இப்போது வரப்போகிறாயா? இல்லை இப்படியே தூக்கிக்கொண்டு போகவா?” என்று மிரட்டினான்.

அவன் சொன்னதை செய்யக்கூடியவன் என்ற பயத்தில் “ஒண்ணும் தேவையில்லை!!” என்று அறிவித்து விட்டு வேகமாய் அவள் முன்னே ஓட அவனுடைய சிரிப்புச்சத்தம் அவளை இனிமையாய் தொடர்ந்தது.

எட்டுமணிக்கெல்லாம் வழியில் ஒரு பெரிய உணவகத்தில் காலை உணவை முடித்துக்கொண்டவர்கள் மீண்டும் பேராதெனிய நோக்கி பயணத்தினை ஆரம்பித்தனர்.

ஒன்பது மணி வரை சளசளத்துக்கொண்டே வந்த மைதிலி பிறகு வண்டி கொஞ்சம் கொஞ்சமாய் மலைப்பிரதேசத்தை நோக்கி மேலேற ஆரம்பிக்க தன்னையறியாமலே தூங்கிப்போனாள்

அவன் இடையில் வண்டியை நிறுத்தியதோ இருவருக்கும் மதிய உணவு பார்சல் வாங்கியதோ அறியாத அளவுக்கு தூங்கிக்கொண்டே வந்தவள் பதினோரு மணி அளவில் தான் கண்விழித்தாள. கண்ணுக்கு முன்னே பெரும் மலைகள் தான் தெரிந்தன. அதற்குள் பக்கத்தில் வந்துவிட்டோமா என்று கண்ணைக்கசக்கியபடி பார்த்தால், சிந்தக வண்டியை நிறுத்தி ஒருவரிடம் என்னமோ விசாரித்துக்கொண்டிருந்தான்.

அவர்களுக்கு முன்னேயும் ஒரு பத்து வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.

“கல்லை இப்போதைக்கு அகற்ற மாட்டார்கள் தம்பி. கிரேன் எல்லாம் வந்து ரொம்ப நேரமெடுக்கும். பேசாமல் சுற்றி கடுகண்ணாவ வழியாக போய் விடுங்கள். இன்னொரு மணி நேரம் அதிகமாக எடுக்கும். ஆனால் இங்கே காத்திருப்பதை விட பரவாயில்லை.” அந்த மனிதர் சொல்லி விட்டு சென்றார்

எட்டிப்பார்த்தாலும் எதுவும் தெரியவில்லை..மேடும் பள்ளமுமாக பாம்புகளின் வளைவு போல இருக்கும் மலைப்பாதைகளில் அருகில் போனால் தவிர எதையும் பார்க்க முடியாது

என்னாச்சு?

எழுந்து விட்டாயா? உலகமே தெரியாமல் என்னடி அவ்வளவு தூக்கம்…எனக்கு ரொம்பவே போரடித்து விட்டது!

ஹாஹா..ஆமாம். ஏன் முன்னால் வண்டியெல்லாம் நிற்கிறது? என்ன நடந்தது? என்று கேட்டாள் மைதிலி.

இரவு இந்தப்பக்கம் நல்ல மழையாம்..இரண்டு பாறைகள் உருண்டு ரோட்டில் இருக்கின்றன.

பெருசா?

ஆமாம். கொஞ்சம் பெருசுதானாம்

எதற்கும் எந்த சேதமும் இல்லையே?

இல்லை..நல்லவேளையாக எதுவும் ஆகவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.

இந்த மலைபிரதேசத்தில் இது தான் பெரும் ஆபத்து. அப்பப்போ இப்படி மண் சரிவு ஏற்பட்டு பேரழிவு ஏற்படுத்துவதும் பிரமாண்டமான பாறைகள் பாதையில் உருண்டு விழுவதும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கும்.

நாம் திருப்புவோம் மைதிலி. கடுக்கண்ணாவ வழியாக போகலாம். இங்கே காத்திருப்பது வேஸ்ட்

எதிரே மக்கள் வண்டிகளில் இருந்து இறங்கி அந்த பாறைகளை பார்க்க போய்க்கொண்டு இருந்தார்கள்,

நாங்களும் போய் பார்த்துவிட்டு திரும்பி போவோமே…

லூசு..இன்னும் சில மீட்டர் தூரத்தில் தான் என்னுடைய பட்டர்ப்ரூட் பிளான்டேஷன் இருக்கிறது. என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள். வேண்டாம்,

மைதிலியின் நாவில் அப்போது சனிதான் பிடித்திருக்க வேண்டும்.

உருண்டு விழுந்த பாறைகளை பார்க்கும் ஆவலில் “அதனாலென்ன? யாருக்கும் என்னை தெரியாது தானே..ப்ளீஸ்..போவோம்” என்று பிடிவாதமாய் கெஞ்சி கெஞ்சி அவனை சம்மதிக்க வைத்து பாறைகளை பார்க்க அழைத்துப்போனாள் மைதிலி.

வழக்கமாக பாதையில் விழும் பாறைகளை போல அல்லாமல் பிரமாண்டமாக ஒன்றன் மேல் ஒன்றாக முழுப்பாதையிலும் ஒரு பைக் போகும் இடைவெளியை மட்டும் விட்டு விட்டு அடைத்துக்கொண்டிருந்த பாறைகளை பார்க்க பயம் தான் வந்தது.

அந்த இடத்தில் ஒரு காரோ வானோ இருந்திருந்தால் நிச்சயம் அப்பளமாகி விட்டிருக்கும்.

சிந்தக சொன்னதுபோலவே கூட்டமாய் கூடியிருந்த மக்களில் சிலர் அவனோடு கைகுலுக்கிப்பேச லோக்கல் டிவி நிரூபர் ஒருவர்எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை  ஓடிவந்து சிந்தகவிடம் மைக்கை நீட்டினார். “ பார்ரா அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா நீ?” என்று சிரிப்புடன் ரகசியமாய் அவனுக்கு சிரிப்பு மூட்ட முயன்ற மைதிலி  அவன் ஏன் இப்படி கொலைவெறியாய் முறைக்கிறான் என்று புரியாமல் புன்னகையை குறைத்துக்கொண்டு அவனை ஏறிட்டாள்

அதற்குள் மைக்கை நீட்டியவர் ஏதோ கேள்வி கேட்க அவனும் அதிகாரிகளின் கவனக்குறைவு பற்றி எதையோ சொல்லிவிட்டு வேக வேகமாய் அவ்விடம் விட்டகன்றான். பின்னாலேயே ஓடினாள் மைதிலி.

“அறிவிருக்கா? தள்ளிப்போய் நில் என்று எவ்வளவு தரம் சைகை காட்டினேன்..புரிந்து கொண்டாயா நீ?” அவன் எரிந்து விழ முணுக்கென கண்ணில் நீர் கோர்த்து விட்டது அவளுக்கு..நான் அவனுக்கு அவமானமா? எண்ணியதையே கேட்டும் விட்டாள் அவள்..

“லூசு! உனக்கு புரியவே இல்லையா? அது டிவி சானல்..என் பக்கத்துல போஸ் கொடுத்துட்டு நிக்கிறியே..எத்தனை பேர் நியூஸ் பார்ப்பாங்க! நம்ம குட்டு வெளிய வந்துறாதா?”

அப்போது தான் அது உறைக்க வாயை பிளந்தவள் பிறகு லோக்கல் டிவி சானல் எல்லாம் தெரிஞ்சவங்க பார்க்க மாட்டாங்க என்று நடுக்கத்துடன் தன்னை சமாதானம் செய்தாள்.

“லோக்கல் டிவி சானலா ? நியூஸ் பர்ஸ்ட் லோகோவை பார்க்கலையா நீ?”

ஐயோ நியூஸ் பர்ஸ்டா என்று அலறிப்போனவள் யாருமே மதியம் நியூஸ் பார்க்க கூடாது என்று மனதுக்குள் பதட்டமாய் வேண்டுதல் வைக்க ஆரம்பித்தாள். பயத்தில் கிட்டத்தட்ட கண்ணீரே வந்து விட்டது அவளுக்கு.

அப்போதே அவன் திருப்பிக்கொண்டு போகலாம் என்று கேட்டதற்கு ஒத்துக்கொண்டிருந்தால் இவ்வளவு நடந்திருக்குமா? அதைத்தான் விடு மைக்கை கண்டதுமே நீ அலர்ட் ஆகியிருக்க  வேண்டாமா? இப்போது என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லையே…

இப்போது எதற்காக அழுகிறாய் ஒன்றும் ஆகிவிடவில்லை அமைதியாக இரு.. சிந்தகவின் குரலில் இருந்த அழுத்தமே அவனும் யோசிக்கிறான் என்பதைத்தான் காட்டியது.

பேசாமல் அவன் தோளில் தோளில் தலை சாய்த்துக்கொண்டவள் கடுகண்ணாவ வந்து சேரும் வரை எதையுமே பேச வில்லை.

பன்னிரண்டு மணி நியூஸ் இப்போது ஆரம்பிக்கும் மைதிலி என்றவன் சிரச fm ஐ டியூன் செய்தான்.. நியூஸ் பர்ஸ்ட் ஜிங்கிளை கேட்கவே பயமாக இருக்க காதைத்தீட்டிக்கொண்டு இந்த செய்திக்காக காத்திருந்தாள் மைதிலி.

பயந்தது போலவே அக்குரணவில் பாறைகள் உருண்டு விழுந்து பாதை முடக்கப்பட்டது என்று செய்தி சொன்னவர்கள் பரபரப்பை கூட்டுவதற்காய் மச்சிஸ் நிறுவன அதிபர் சிந்தக நிவேதன் ரத்னாயக்க அவ்வழியில் மயிரிழையில் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது என்றும் சேர்த்துச்சொல்ல இருவரும் பதட்டமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். சிரச டீவி, fm, சூரியா  டிவி, சூர்யா fm எல்லாமே ஒரே குழுமம் ஆதலால் ஷக்தி டிவியிலும் இதே நியூஸ் தமிழில் வரும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

மைதிலி முற்றிலும் வியர்த்துப்போயிருந்தாள். அழகான கவிதை ஒன்று நிறைவு பேரும் தருணத்தில் தண்ணீர் ஒன்றினை கொட்டிக்கவிழ்த்தது போல என்ன எப்படியாயிற்று என்று அழுகையாய் வந்தது..

என்னதான் இருந்தாலும் தவறுகளை மறைத்து விடவே முடியாதோ..அவமானப்பட்டுத்தான் ஆகவேண்டுமோ..

ஹாஸ்டலில் யாரும் இந்த நேரம் செய்தி பார்க்கப்போவதில்லை. அவர்கள் விரிவுரையில் இருப்பார்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் பார்ப்பார்களே.. மஞ்சு ஆன்ட்டி..அப்பா அம்மா.. ஐயோ!!!

சிந்தகவின் போன் மாறி மாறி ரிங் பண்ண ஆரம்பித்தது. ஆளாளுக்கு அவனுக்கு என்ன ஆனது என்று விசாரித்துக்கொண்டிருக்க கைகளை இயலாமையுடன் ஒரு தடவை மேலே உயர்த்தியவன் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று முகப்புத்தகத்தில் ஸ்டேடஸ் போட்டுவிட்டு போனை ஆப் செய்து வைத்து விட்டான்

ஒரு கால் மணிநேரம் வாகனச்சத்தம் தவிர வண்டிக்குள் எதுவுமே கேட்கவில்லை.

இன்னொரு கால் மணி நேரம் போயிருக்கும்… மைதிலியின் மொபைல் டிஸ்ப்ளேயில் அம்மா காலிங் என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தன.

விழி பிதுங்கி விடும் போல நடுக்கத்துடன் அதையே வெறித்துக்கொண்டிருந்தவளை கவனித்தவன் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினான். பிறகு மொபைலை ஆன்சர் செய்து ஸ்பீக்கர் மோடில் போட்டு விட்டு பேசு என்று இறைஞ்சலாய் சொன்னான்.

ஹலோ.. அவளுடைய குரலா என்று மைதிலிக்கே சந்தேகமாய் இருட்ன்ஹது.

மறுமுனையில் அம்மாவின் அழுகைக்குரல் வயிற்றை பிசைய அவளுக்கும் கண்ணில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.

அம்மா..

ஒரு சீரறான மூச்சின் பின் தாயின் குரல் தெளிவாகவே கேட்டது. “நீ என் பிள்ளையாடி? என்ன காரியம் செய்திருக்கிறாய்! அதைவிட எப்படியெல்லாம் எங்கள் எல்லாரையும் ஏமாற்றுவாய் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அப்பாவை பற்றி நினைத்துப்பார்த்தாயா நீ.. உன்னை பெற்று ஆசையாய் வளர்த்ததற்கு எங்களுக்கு நல்ல பரிகாரம் செய்து விட்டாய்..”

அம்மா… கேவலாய் மறுபடி அழைத்தாள் மைதிலி. அவளைச்சுற்றி அவனின் கரம் இரும்பாய் இறுகிப்போயிருந்தது.

“பேசாதேடி.. இனிமே எந்தக்காலத்திலும் வீட்டுப்பக்கம் வந்துராதே..பெத்த பிள்ளை என்றாலும் ஒழுக்கம் இல்லாதவளை வெட்டிப்போடக்கூட நான் தயங்க மாட்டேன். நீ இல்லை என்றே நாங்கள் இருந்து விடுகிறோம். நீ எங்கே போவாயோ என்ன செய்வாயோ.. மறுபடி எங்கள் முகத்தில் விழித்து அந்த மனுஷனின் உயிரை குறைத்து விடாதே…”

அத்தோடு மறுமுனை துண்டித்துக்கொள்ள சிலையாய் அப்படியே அமர்ந்திருந்தாள் மைதிலி. இதற்காகத்தானே பயந்தாள் அன்றைக்கு..

இப்போது கண்ணீர் முற்றிலும் நின்று விட்டிருந்தது அவளுக்கு.

மைத்திம்மா..சாரி…அதை சொல்லவே எனக்கு தகுதியில்லைதான்..எல்லாம் நான் செய்த காரியம் தானே..என்னால் தானே உனக்கு..

அவனுடைய வாயை கைகளால் பொத்தியவள் “எனக்கு ஒன்றுமில்லை சிந்தக.. நீங்கள் வண்டியை எடுங்கள்” என்று சொல்லிவிட்டு தெருவிலேயே விழிகளை பதித்து வைத்திருந்தாள் அவள்

அவளின் தோளைப்பற்றி உலுக்கியவன் “ஏண்டி இப்படி இருக்க? உனக்கு என்னாச்சு? எனக்கு பயமா இருக்கு? ஏதாவது பேசும்மா? நான் அப்படி பண்ணிருக்க கூடாது..நான் ஒரு முட்டாள் ” என்று அரற்றிய படி அவளின் கன்னத்தில் தட்டினான் சிந்தக

“ப்ச்.. அம்மா என்னை இனிமேல் வராதே என்று சொல்லிவிட்டார்கள்” சோகமாய் சொன்னவளுக்கு திடீரென கண்ணீர் உடைத்துக்கொண்டு வர முன்பக்கமாய் கவிழ்ந்து கிடந்து விம்மலுடன்  கண்ணீர் பெருக்க ஆரம்பித்தாள் அவள்.

அவன் நிலைதான் பரிதாபம்..எதை எப்படி சமாளிப்பது என்று தெளிவாக ப்ளான் போட்டு வைத்திருந்தவன் அவனுக்கு மேலாக விதி போட்ட பிளானை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனின் பக்கத்தில் புன்னகையோடு நின்றவளை பார்த்தபிறகு அவன் என்னதான் சத்தியம் செய்து நான் தான் வலுக்கட்டாயமாய் அவளை கடத்திப்போனேன் என்று சொன்னாலும் அவள் பக்கம் தவறில்லாமல் இருக்கும் என நம்புவார்களா? அவள் தான் சிறுபிள்ளையாக அடம்பிடித்தாள் என்றால் நான் ஏன் வண்டியை விட்டு இறங்கினேன் என்று தன்னையே நொந்து கொண்டு அவனும்  இறுகிப்போய் அமர்ந்திருந்தான்

அழுகையின் இடையே அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் இருந்த கோலத்தை கண்டு அதிர்ந்து தான் போனாள். இப்படி கண்ணெல்லாம் சிவந்து இவன் உடைந்து போகுமளவுக்கு அவன் மட்டுமா தவறு செய்தான்? அவளும் தானே.. முதல் படி அவனுடையது என்றாலும். அதற்கு சம்மதம் தெரிவித்ததும் முக்கால்வாசிக்கும் மேலான தருணங்களில் இப்படி பகுத்தறிவையே மறந்து விடும் அளவுக்கு ஆத்மார்த்தமான மகிழ்ச்சியோடு இருந்ததும் அவளல்லவா! அவன் மட்டும் மறுகுவதா?

கண்களை துடைத்துக்கொண்டவள் அவனின் தோள்களில் தட்டினாள். வண்டியை எடுங்கள் போவோம்.

மைதிலி..

ஷ்..இனிமேல் எதுவும் பேசாதீர்கள் சிந்தக. இந்த ஐந்து நாள் என் வாழ்க்கையில் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்த நாட்கள். நானாக சம்மதித்து தான் கூட இருந்தேன். எனக்கும் சரி அளவு பங்கு இந்த தவறில் இருக்கிறது. அதை விட இப்போது நடந்த முட்டாள் தனத்துக்கு நான் மட்டும் தானே காரணம்! அம்மா அப்பா மனமுடைந்து போனார்களே என்பதை தான் என்னால் தாங்க முடியவில்லை. ஆனால் நான் புரிய வைத்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களை பார்த்து பேசி புரிந்து கொண்டால் இவ்வளவுநாளும்  பட்ட கஷ்டத்துக்கெல்லாம் சேர்த்து அவர்கள் சந்தோஷமாகி விடுவார்கள்..அவள் புன்னகைக்க முயன்றாள்.

அவளது கைகளை பற்றி அழுத்தியவன் வண்டியை மீண்டும் போக்குவரத்தில் கலந்தான்.

அரைமணி நேரத்தில் பேராதெனிய காம்பஸ் வளாகத்துக்குள் வண்டி நுழைந்தது. அவள் சங்கமித்தா ஹாஸ்டலுக்கு வழி சொல்ல வண்டி பாதையில் இருந்து விலகி ஹாஸ்டல் இருந்த மலையில் ஏறி கிரீச்சிட்டு நின்றது.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கூடவே வந்தவன் விசிட்டர்ஸ் ஹால் வரை கொண்டு வந்து வைத்தான்.

“கவலைப்படாதேம்மா..நீ பெருந்தன்மையாய் சொன்னாலும் இது நான் ஆரம்பித்த விஷயம். நான் தான் முடிக்க வேண்டும். உன் பெற்றோரிடம் சம்மதம் வாங்கும் வரை இனிமேல் உன்னை தொடர்பு கொள்ள மாட்டேன். என்னை நம்பி நீ எதைப்பற்றியும் யோசிக்காமல் நன்றாக சாப்பிடு..படிப்பில் கவனம் செலுத்து. நான் இருக்கிறேன். பார்த்துக்கொள்வேன்” என்று உறுதியாய் சொன்னவன். ஒரு பையை கையில் எடுத்து கொடுத்தான்.

இதில் ப்ரோடிநேக்ஸ் இருக்கிறது. எலும்பு பொருந்த வேண்டும். தினமும் குடி.. என்றவன் பிறகு இன்னொரு பாக்கை எடுத்து ஒரு பாக்சை மட்டும் அவளிடம் கொடுத்தான். இது மதிய உணவு. எதையாவது யோசித்து சாப்பிடாமல் மட்டும் இருந்து விடாதே..

கண்ணைக்கரித்துக்கொண்டு வர தலையை மட்டும் அசைத்தவள் வருகிறேன் என்று தலையை அசைத்தபடி அவன் போனதை பார்த்துக்கொண்டு வெகு நேரம் அப்படியே நின்றாள். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *