WLM அத்தியாயம் 22
“சட்டென என் வாழ்க்கையில் யாரோ மந்திரக்கோலை பிடித்து ஆட்டி போயின போயின துன்பங்கள் என்று சொன்னதைப்போல எப்படியோ எல்லாமே அதனதன் இடத்தில் கச்சிதமாய் போருந்திப்போயிருந்தன. இனிமேல் நான் நேசித்தவர்கள் எல்லாருமே எனக்கே எனக்குத்தான். அருகில் இருந்தவனின் புஜத்தினை என் முகத்தோடு சேர்த்து இறுக பிடித்துக்கொண்டேன். இனி ஆயுளுக்கும் விட்டு விடும் எண்ணம் இல்லாமல்!”
இரண்டு மாதங்களின் பின்னொரு நாள்…
வீட்டுக்கு எடுத்து செல்வதற்காக சகல சாமான்களையும் பாக் செய்து தயாராய் வைத்து விட்டு ஹாஸ்டலை சுற்றிக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள் மைதிலி. நாளையோடு இந்த மலை வாழ்க்கைக்கு இறுதிநாள்! மனம் முழுக்க போவேனா என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தது. நான்கு வருடங்கள் எப்படி கண் மூடித்திறக்கும் முன் ஓடி மறைந்து விட்டன!
அவளுக்கு பேராதேனியவை பிரிவதை விடவும் இன்னொரு பெரிய கவலை தான் மனதை மிகவும் அழுத்தியது. வீட்டுக்கு போன பின்னே நான் எப்படி சிந்தக்கவோடு சுதந்திரமாய் பேச முடியும்? அப்பா அம்மா சம்மதிப்பார்களா? இனி திருமணம் வரை என்னென்ன அடிதடிகளை அவள் பார்க்க வேண்டியிருக்குமோ?
இந்த இரண்டு மாதங்களும் அலைச்சலை பொருட்படுத்தாமல் வார இறுதிகளில் அவன் கண்டிக்கு வந்து விடுவதும், அவளையும் சமயங்களில் அவளது நட்புக்கள், ஜூனியர் பெண்களை கூட கூடக்கூட்டிக்கொண்டு வெளியே செல்வதுமாய் அப்படியே பழகிப்போய்விட்டது. இனி அவனை பார்க்கவே முடியாதே…
இப்போது கூட இந்த வார இறுதியில் இரண்டு நாட்களாக கண்டியில் தான் தங்கியிருக்கிறான். ஏதோ மீட்டிங் விஷயம் என்றான். ஆனால் அவளுக்கென்றால் அவள் பாக் செய்தவைகளை பஸ்ஸில் கொண்டு சென்று சிரமப்படுவாள் என்பதற்காகவே இந்த இரண்டு நாளும் அவன் இங்கே வந்திருக்கிறான் என்று தான் தோன்றியது. இனிமேல் பெற்றோராக பார்த்து அவனை அவளுக்கு கொடுக்கும் வரை அவனை நேரில் பார்க்கக்கூட முடியாது என்றால் அவள் என்னதான் செய்வாள்?
அவனுக்கு இந்த கவலைகளெல்லாம் இல்லையா? பெரிய இவன் போல நான் சம்மதிக்க வைப்பேன் என்று அறிக்கை விட்டானே தவிர எந்த முயற்சியும் எடுப்பது போலில்லை. அவனிடம் அதைப்பற்றி இன்றைக்கு எப்படியாவது பேசியேஆகவேண்டும்.
சுமி ஏழு மணிக்கெல்லாம் சுதாவோடு ட்ரெயினில் கிளம்புகிறாள். நாமும் நைட்டில் போனாலென்ன என்று கேட்டால் ச்சே ச்சே அது நல்லாயிருக்காது என்று சொல்லிவிட்டான். அவளுக்குத்தான் அவமானமாக போய்விட்டது. அவன் தான் இப்படியென்றால் இந்த அப்பா கூட சும்மா இங்கே ஹாஸ்டல் மாறினால் கூட மிது நான் வரட்டுமா? நீயே சமாளிப்பாயா? என்று கேட்பவர் இப்போது மொத்தமாக காலி செய்து கொண்டு வீட்டுக்கு வரப்போகிறேன் என்று தெரிந்தும் ஒரு வார்த்தை நான் வான் கொண்டு வருகிறேன் என்று கேட்கவில்லை! அவ்வளவு கோபமா என் மேல்?
போன் ஐந்தரை என்று காட்டிக்கொண்டிருக்க அவள் கிளம்பும் நேரம் உதவி செய்யாமல் நாம் இங்கே சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று குற்ற உணர்வுடன் எண்ணியபடியே ரூமுக்கு போனவள் சுமி குளிக்க போயிருந்ததால் அவளுக்கும் தனக்குமாய் காபி கலந்து வைத்து விட்டு காத்திருந்தாள்.
ஏற்கனவே எல்லாவற்றையும் இரண்டு பெரிய சூட்கேச்களுக்குள் அடக்கி முடித்திருந்தாள் சுமி . ஆகவே அவளின் கைப்பை மட்டும் தான் வெளியே கிடந்தது. விரிப்புக்கள் கூட அகற்றப்பட்டு வெற்று மெத்தையாக இருந்த கட்டிலை பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது.
எழுந்து நின்று மழை லேசாக தூறத்தொடங்கிருந்ததை யன்னல் வழி பார்வையிட்டாள் அவள்.
உடைமாற்றிகொண்டு வந்து அமர்ந்தவள் காபியை எடுத்துக்கொண்டாள். யாராவது ஒருவர் ஆரம்பித்திருந்தால் இருவரும் கண்டிப்பாக அழுதிருப்பார்கள் ஆனால் இருவருமே அந்த பேச்சையே விட்டுவிட்டு பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர்.
“அண்ணா..வரமாட்டாரா மைத்தி? நான் அவரிடம் சொல்லிக்கொண்டு போகலாம் என்று நினைத்தேன்.”
“இல்லடி. நாளைக்காலைல அஞ்சு மணிக்கு நேராவே இங்க வந்துடறேன்னு சொன்னார்.”
“சரி சரி நான் அவருக்கு மெசேஜ் போட்டுட்டு போறேன். “
“ஹ்ம்ம்”
“அண்ணாவாம்..அண்ணாவும் தங்கையும் சமாதானமாக எவ்வளவு நாட்கள் எடுத்தன! அவளுக்கு சிரிப்பு வர பேச்சை மாற்றினாள் அவள்
“நானும் நைட்டே கிளம்பிருக்கணும்டி.. தனியா இன்னிக்கு இந்த ரூம்ல இருக்க எனக்கு ஒரு மாதிரியா பீல் ஆகுது..”
“லூசு..”
கதவு படபடவென தட்டும் சத்தம் கேட்டு தானாகவே சிரிப்பு ஒட்டிக்கொள்ள கதவை எழுந்து போய் திறந்தாள் மைதிலி.
அவள் எதிர்பார்த்தது போலவே “சுமி அக்கா” என்று கத்திக்கொண்டு ஓடிவந்து அவளை க்ரூப் ஹக் செய்து சிரிக்க வைத்து மூடை நொடியில் மாற்றிவிட்டனர் அவர்களுடைய இளவல்கள்.ஜூனியர்களின் சத்தம் கேட்டதுமே அடுத்தடுத்த அறைகளில் இருந்து அவர்களுடைய தோழிகளும் கிளம்பி வர அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த அறை ஒரு குட்டி தமிழ்ச்சங்கமாக மாறியிருந்தது.
ஆறரைக்கெல்லாம் சுதா வாடகை வண்டியோடு அங்கே வரும் வரை கலகலவென்றிருந்தது அந்த அறை. பிறகு எல்லோருமாக சேர்ந்து சூட்கேஸ்களை தூக்கிவந்து வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு சந்தோஷமாகவே கலைந்து செல்ல மைதிலி மட்டும் தனியாக உதிர்ந்து அறைக்கு வந்து சேர்ந்தாள்.
தன்னுடைய பொருட்கள் எல்லாவற்றையும் மீண்டுமொருதடவை சரிபார்த்தவள் எழுந்து நண்பிகளின் அறைகள் மற்றும் ஜூனியர்களின் அறைக்கு விசிட் செய்து பை சொன்னாள். அவள் திரும்பி அறைக்கு வந்தபோது நேரம் பத்தரையை தாண்டி இருந்தது. கப்போர்ட் புத்தக அலுமாரி, அங்கே நிரம்பியிருக்கும் சின்ன சின்ன டின்கள் கூட இல்லாமல் இருந்த அறையின் வெறுமை அவளை ஹோவென தாக்கியது. லைட்டை அணைத்து விட்டு படுத்தவளுக்கு தன்னுடைய பிரச்சனைகள் எல்லாம் நினைவில் வந்து சுற்றிக்கொள்ள கண்ணீர் வடித்தபடி வெகு நேரம் படுத்திருந்தாள் மைதிலி.
காலை நாலரைக்கெல்லாம் அலார சத்தத்தில் எழுந்து விட்டவள் குளித்து விட்டு வர சிந்தக்க கால் செய்து கொண்டிருந்தான் அவள் எழுந்து விட்டாளா என்று பார்ப்பதற்காக. ஐந்து மணிக்கெல்லாம் அவள் சூட்கேஸ்களை உருட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியேறும் போது அந்த ஹாரிடோர் நீளத்துக்கும் விளக்குகள் அணைக்கப்பட்டு நண்பிகள் நல்ல தூக்கத்தில் இருந்தார்கள். ஏனோ துக்கம் தொண்டையை அடைக்க இருளில் தனியாக கடைசித்தடவையாய் அந்த ஹாரிடோரில் நடந்தவள் செக்கியூரிட்டியிடம் ஹாஸ்டலின் கிரில் கேட்டை திறக்க சொல்லிவிட்டு பெட்டிகளை படியில் வைத்து விட்டு நிற்க வெளிச்சத்தை பரப்பியபடி வந்து நின்றது சிந்தக்கவின் வண்டி.
உடனடியாக இறங்கி வந்தவன் சூட்கேஸ்களை வண்டியில் பின்னால் போட்டுவிட்டு சுற்றிக்கொண்டு வர தானும் ஏறி பெல்டை போட்டுக்கொண்டிருந்தாள் மைதிலி.
“அபி கிஹில்லா என்னம் ஐயே! அந்த செக்கியூரிட்டியிடம் அவன் விடைபெற தானும் கையசைத்து விடை பெற்றவள் காலைதூக்கி மேலே போட்டுக்கொண்டு அவன் காருக்குள்ளே போட்டுகொண்டிருந்த “saans mein teri” பாடலுக்கு எந்த கமன்ட்டும் அடிக்காமல் ஸ்ரேயா கோஷலின் குரலை கேட்டபடி வெளியே விடிந்தும் விடியாத நிலையில் இருந்த மலைப்பாதையையும் தன் பின்னே மறையும் ஹாஸ்டல்கள் பல்வேறு பீடங்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
என்ன பீலிங்கா மைத்திக்கு? அவன் குறும்பாய் கேட்க
“ஒண்ணும் இல்ல.” என்று விறைப்பாய் பதில் சொன்னாள் அவள்
ஹ்ம்ம்… வேறென்ன??? பசிக்கிதா? அவன் இன்னும் சீண்ட
“இல்லைங்குறேன்..” என்று சிலிர்த்தபடி ஸ்பீக்கரை சவுண்டாக வைத்தவள் எதற்கென்றே தெரியாத கோபத்துடன் வாயை இறுக மூடிக்கொண்டிருந்தாள்.
கண்டி நகரை விட்டு தாண்டும் வரை அவனும் எதுவும் பேசவில்லை,
ஆறரை மணிக்கெல்லாம் வழியில் பாதையோர கடையில் சுடச்சுட தேநீர் வாங்கிக்கொடுத்தவன் அவளின் முகத்தையே பார்த்தான்.
உடனே திரும்பி விடு விடுவென வண்டிக்குள் போக முற்பட்டவளின் தோளை பிடித்து திருப்பியவன் “அழுதியா?” என்று கேட்டான்.
“இல்லன்னு சொல்றேன்ன்ல..அப்புறம் என்ன அழுதியா நோழுதியா?” வழக்கமில்லாத வழக்கமாய் அவனிடமே எரிந்து விழுந்தவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் அதன் மேலே எதுவும் துருவாமலே வண்டியை ஓட்டினான்.
ஆனால் எட்டரை மணிக்கெல்லாம் காலை உணவு சாப்பிட ஓர் உணவகத்துக்கு அழைத்துப்போன போதும் அவள் மூட் மாறாமலே இருந்ததை கவனித்தான் சிந்தக்க
பத்தே நிமிடங்களில் வண்டி கொஞ்சம் போக்குவரத்து குறைந்த தனிமையான பிரதேசத்துக்கு வந்ததும் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு “உனக்கு என்ன தான் பிரச்சனை?” என்று கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டான்.
“ஆமாம். எனக்குத்தான் எல்லா பிரச்சனையும்! உங்களுக்கு ஒண்ணுமே இல்ல..” என்று வெடித்தவள் “மைத்திம்மா” என்று அவன் தோளில் கைபோட அவ்வளவு நேரமும் இருந்த அழுத்தம் உடைந்து அவன் தோளிலேயே சரிந்து விக்கியழ ஆரம்பித்தாள் மைதிலி.
“என்னம்மா என்னாச்சு?” இப்போது அவன் தான் பதறிப்போனான்.
“இனிமே நான் உங்களை எப்படி பார்ப்பேன். அடுத்த சனிக்கிழமை நீங்க என்னை பார்க்க வரமாட்டீங்களே.. நான் வீட்ல இருந்தா இப்படில்லாம் ரொம்ப நேரம் போன் பேச முடியாது.உங்களுக்கு என்னை பிரியறோமே என்று கொஞ்சம் கூட பீலிங்கே இல்ல…” அவள் விம்மல்களுக்கிடையில் குற்றம் சாட்டினாள்
“என்ன நீ!!! லூசு.. நான் உன்னை அப்படியே விட்டுவிடுவேனா? நீ வீட்டுக்கு போனதும் நான் வந்து உன் அப்பாவிடம் பேசி எப்படியாவது சம்மதம் வாங்காமல் விட்டு விடுவேனா?”
அது அவ்வளவு ஈசி இல்லை..”
ஏன்மா..அவங்களும் உன்மேல பாசம் வச்சிருப்பாங்கல்ல. அப்படி உனக்கு பிடிக்காததை செய்ய வைக்க மாட்டாங்க..முதல்ல நீ நல்லது நடக்கும்னு நம்பு”
“அப்பா இப்போல்லாம் மாறிட்டார்”
“என்னடி சொல்ற?” இது அவனுக்கே புதிய தகவல் அல்லவா?
“ஆமா..நான் வீட்டுக்கு வர்றேன்னு சொல்ல சரி பிரண்ட்ஸ் கூடத்தானே என்று காஷுவலா கேட்டுட்டு விட்டுட்டாங்க.. முன்னர் எல்லாம் நான் சங்கமித்தா ஹாஸ்டல்ல இருந்து விஜயவர்த்தன போனா கூட நான் வரட்டுமா மிது? நீ எப்படி சாமான்களை தனியாக கொண்டு போவே என்று ஆயிரம் தடவை கேட்பார். நான் தான் வேணாம்பா வேணாம்பான்னு தடுத்து நிறுத்தணும்..இப்போ என்னடான்னா அவங்க ஒரு ஒகே சரியோட என்னை கை கழுவி விட்டாங்க..”
அவள் பொரும மானசீகமாக தலையில் கைவைத்துக்கொண்டான் சிந்தக்க. “அப்படி இல்லம்மா.. நான் சொல்றேன்ல..அழாதே”
“உங்களுக்கென்ன தெரியும்? சும்மா எதையாவது சொல்லாதீங்க? என்றபடி அவள் அழுகையை தொடர்ந்தாள்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவளின் மனதுக்குள் கிடந்த அழுத்தங்கள் எல்லாம் வெளியே வந்ததோ என்னவோ கட்டுப்படுத்தவே முடியாத கேவல்களும் விக்கல்களுமாய் அழுகை கூடிக்கொண்டே போக அவன் தான் பாவம் அயர்ந்து போனான்.
ஒரு கட்டத்தில் தாள முடியாமல் அவளை தன்னிடமிருந்து பிரித்து தன் முகத்தை பார்க்குமாறு அவளை வலுக்கட்டாயமாக நிமிர்த்திபிடித்தவன்
அழுகைய நிறுத்துன்னு சொல்றேன்ல..என்று பெரிய குரலில் ஒரு அதட்டல் போட்டான். பட்டென்று அழுகையை நிறுத்தி விட்டு அவனை ஏறிட்டு பார்த்தாள் அவள்
சிவந்திருந்த கண்களும் வீங்கிய இமைகளுமாய் அவளிருந்த கோலமே அவனுக்கு தன்மேலே கோபத்தை உண்டுபண்ணியது. ச்சே கொடுமைக்காரன்டா நீ என்று தன்னையே மனதில் திட்டிக்கொண்டான். பின் அவளே ஹாரிபாட்டர் தழும்பு என்று செல்லமாக அழைத்துக்கொள்ளும் அவளது தையல் தழும்பின் மேல் வந்து விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கிவிட்ட படி பேச வாயெடுக்க அவளோ கோபாவேசமாய் அவன் கையை தட்டி விட்டாள்.
இது வீடு நெருங்க நெருங்க கூடுமே தவிர குறையாது. அவள் இப்படி அழுவதை எப்படி நாலு மணிநேரத்துக்குமேல் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? என்று ஒரு முடிவுக்கு வந்தவன் பாதையை கவனித்தான்.
இந்தபகுதியில் ஒன்பது மணிக்கு மேல் தான் ஒன்று ரெண்டு வாகனங்கள் போக ஆரம்பிக்கும். இப்போதைக்கு இங்கேயே சொல்லி விடுவது தான் நல்லது!
“ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேட்டுட்டு அப்புறமா அழு..இப்போ இங்கிருந்து அசைஞ்சேன்னு வை..அவ்ளோ தான்!!! இப்படியே உக்காந்திருக்கணும்!”
மிரட்டலாக சொன்னவன் அவளின் பார்வையை கவனிக்காதவன் போல வண்டியின் பின் புறம் போய் ஒரு பார்சலை எடுத்துக்கொண்டு தன் சீட்டுக்கு வந்தான். அவளின் பார்வை இப்போது ஆர்வமாய் கவனிப்பதை கடைக்கண்ணால் பார்த்தபடி அதற்குள் இருந்த ஒரு டின்னை வெளியே எடுத்து அவள் முன்னே வைத்தான்.
அப்போது அவள் முகம் காட்டிய உணர்வுகளை ஆயுளுக்கும் மறக்கவே முடியாது அவனால்!
முதலில் ஒரு குழப்பம் பிறகு அடையாளம் கண்டுகொண்ட புரிதல்..பிறகு அது கொடுத்த ஊகங்கள் கண்ணீருடன் சேர்ந்து பொங்கிய சிரிப்பு என்று அவள் முகமும் உடல் மொழியும் மாற மாற சிரிப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தான் அவன்
“ஹேய்!!! இது அம்மாவோட பாட்டில்!!! ஆப்பிள் ஸ்வீட்ஸ் வேற இருக்கு! எப்படி கிடைச்சது உங்களுக்கு?” என்று கிரீச்சிட்டபடி ஆப்பிள் வடிவில் இருந்த அந்த போத்தலை கையில் எடுத்து அவசரமாய் ஆராய்ந்தாள் அவள்
ஆப்பிள் பச்சையில் கராம்பினால் ஆன காம்புகளுடன் நிரம்பிக்கிடந்த குட்டி ஆப்பிள் ஸ்வீட்கள் போத்தலுக்குள் குலுங்கின.
“இது அம்மாவோடதே தான்.. அம்மா எப்படி உங்களுக்கு கொடுத்தாங்க? அப்படி என்றால் வீட்டில் நீங்க பேசிட்டீங்களா? வீட்ல ஒகே சொல்லிட்டாங்களா? எப்போ நடந்தது? ஏன் யாருமே எனக்கு சொல்லலை?”
அவனது டீஷர்ட்டை கொத்தாக பற்றியிழுத்து வைத்துக்கொண்டு அவள் கேள்விகளை மழையாய் பொழிய ஒரு கணம் திணறித்தான் போனான் அவன்.
“எப்போன்னு கண்டுபிடி பார்க்கலாம்? என்று சிரிப்புடன் இமைகளை உயர்த்தி சவால் விட்டான்..
ஒரு நிமிஷம் நெற்றியை சுருக்கியவள் “ஹேய் ஹேய் எனக்கு தெரியும்….பேசமாட்டேன்னு சொல்லிட்டு அப்புறமா கால் பண்ணீங்களே அன்றைக்கு தானே..” என்று உற்சாகமாய் கூவியவள் அவனது கள்ளச்சிரிப்பே அது தான் உண்மை என்று உணர்த்த “பாவிகளா ரெண்டு மாசத்துக்கு மேல என்னை ஏமாத்திட்டீங்களே” என்று உக்கிரமானாள்
நிலைமை மோசமானதை உணர்ந்து மாமனாரை மாட்டி விட்டால் நாம் கொஞ்சம் சமாளிக்கலாம் என்று சிரிப்புடன் அவருக்கு கால் செய்தவன் ஸ்பீக்கரில் போட்டான்.
அவரோ அவனுக்கு மேலாக ஆன்சர் செய்ததுமே..” தம்பி ஓகேவா? எல்லாம் பிரச்சனையில்லாமல் ஏத்த முடிஞ்சதா? நான் தான் வர்றேன்னு சொன்னேனே.. நீங்க தான் வேணாம்னு சொல்லிட்டீங்க “ என்று குறைப்பட்டுக்கொண்டார்.
முறைப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தாள் மைதிலி.
“இல்லை அங்கிள்..எல்லாம் ஒகே..நாங்கள் ஒரு ரெண்டு மணிக்கெல்லாம் அங்கே இருப்போம். ஆன்ட்டியை ஸ்பெஷலாக சமைக்க சொல்லுங்கள்” என்று ஏற்றி வைத்தான் அவன்
“வெளியே இருந்து தான் பேசறீங்களா? மிது எப்படி ரியாக்ட் பண்ண போறான்னு பார்க்க ரொம்ப ஆசையா காத்துட்டு இருக்கோம்..அதெல்லாம் நடந்துட்டு தான் இருக்கு..சீதா எழுந்ததுல இருந்து கிச்சனை விட்டு வெளியவே வரல..” என்று சிரித்தார்.
“சரி அங்கிள் நான் வந்து பேசறேன்.அவளுக்கு டவுட் வந்துரப்போகுது” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தவன் அவளை பார்த்து கண் சிமிட்டினான்.
“பார்த்தாயா? நான் மட்டும் குற்றவாளி இல்லை!!!” அவன் தோளை தொட்டு திருப்ப முயன்றான் அவன்
“போடா” கேவலுடன் கையை தட்டி விட்டாள் அவள்
“ஏய்!!!”
“போடா நீ..” மீண்டும் நெஞ்சில் கைவைத்து அவனை தள்ளிவிட்டவள் கேவலை நிறுத்தவில்லை.
கண்ணம்மா..என்ன?
பட்டென்று கன்னத்தில் ஒரு அடி விழுந்தது. அதிர்ச்சியாகி விழித்தான் அவன்
இவ்வளவு நாளும் எவ்வளவு யோசிச்சு யோசிச்சு அழுதிருப்பேன் தெரியுமா? நேத்துக்கூட நைட் முழுக்க அழுதுட்டே இருந்தேன். என்னை பற்றி உங்க யாருக்குமே அக்கறையில்ல..அப்பிள் ஸ்வீட் சாப்பிடுங்க போங்க..
“அப்படியில்ல..உங்கப்பாக்கு உன்னை சர்ப்ரைஸ் பண்ண ஆசை..அவர் தான் இந்த ஐடியாவே கொடுத்தார்..நான் ஒத்துக்கிட்டேன்..எனக்கும் நீ என்னை நம்பி சந்தோஷமா இருக்கற போலத்தான் இருந்துது..நீ இப்படி பீல் பண்ணுவன்னு தெரிஞ்சா நான் முதல் நாளே சொல்லியிருப்பேனே..இப்போ நினைக்க கஷ்டமா இருக்கு.சாரிம்மா”
“போ நீ.”. கண்ணீர் முகம் இன்னும் மாறவில்லை அவளுக்கு.. மனம் முழுக்க சிக்கல்களோடு இருந்தவளின் முன் யாரோ மந்திரக்கோலை ஆட்டி அவ்ளோ தான்.. முடிஞ்சது.. எழுந்து போ என்றால் யாரால் உடனே நம்ப முடியும்?
கொஞ்சம் கொஞ்சமாக மனதுக்குள் உண்மை பதிய சந்தோசம் பிரவாகமாய் பொங்கி வந்தது அவளுக்குள்.
எப்படி சாதித்தான் இதை?
அவளையறியாமலே எதிரில் இருந்தவனை பற்றி அருகே இழுத்தவள் கண்கள், கன்னம், தாடை என்று முத்தமிட ஆரம்பிக்க அவன் திணறித்தான் போனான். ஒரு நிமிஷத்துக்குள்ளாகவே சுதாகரித்துக்கொண்டவன் நிலைமையை தன் கையில் எடுத்துக்கொண்டு முத்தமிடும் பணியை தன் வேலையாக்கிக்கொண்டான். கைகள் அவளை இழுத்து தன்னோடு இறுக்கிக்கொள்ள எத்தனை நிமிஷங்கள் அப்படியே இருந்தனரோ தெரியாது முதலில் சுதாகரித்தவனும் அவன் தான்!
“பப்ளிக் ரோட் டி!!!!” என்று சிரித்தபடி விளையாட்டாய் அவளை கதவோரம் தள்ளி விட தளர்ந்து சீட்டில் விழுந்தவளும் “அதான் கருப்புக்கண்ணாடி போட்டிருக்கே, அப்புறம் என்ன?” என்று கண்ணடித்து சிரித்தாள்
“ரொம்ப கேட்டுப்போய்ட்ட பக்கி!!!” என்று அவளின் தோளில் அவன் ஒரு அடி வைக்க “என்னது பக்கியா? தமிழ் பக்கியையா சொன்னீங்க?” என்று கேட்டுவிட்டு அவன் சிரிப்புடன் தலையசைக்க “இதெல்லாம் யார்ரா உங்களுக்கு சொல்லித்தர்வன்?” என்று சிரிக்க ஆரம்பித்தாள் மைதிலி
“எல்லாம் உன் பிரண்ட்ஸ் பேசறதுல இருந்த கத்துக்கிறது தான்.”
அவன் வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்து பாதைக்கு கொண்டுவர ஆப்பிள் ஸ்வீட் போத்தலை திறந்து ஒன்றொன்றாக எடுத்து வாயில் போட்டபடி அவனை கேள்விக்கணைகளால் குளிப்பாட்ட ஆரம்பித்தாள் அவள்
“ஹ்ம்ம்…இந்தளவுக்கு வந்தாச்சா? இதை எப்போ கொடுத்தாங்க அம்மா?”
“யாழ்ப்பாணத்துல ஒரு பாக்டரி திறக்க போறோம் அதுக்காக அடிக்கடி போவேன்..அப்போல்லாம் உங்க வீட்டுக்கு போவேன்..நான் எதெல்லாம் விரும்பி சாப்பிடறேனோ அதெல்லாம் அடுத்த தடவை பாக் பண்ணி வச்சு கொடுப்பாங்க உங்கம்மா..”
“ஓஹோ…. சூப்பர்!” என்று அவள் கண்ணை உருட்ட
பொறாமைப்படாதே…என்று சிரித்தான் அவன்
“ஷ்..சப்பா.. அதை விடுங்க எனக்கு என்ன நடந்தது என்று கதையை முழுக்க சொல்லுங்க!” என்று அவள் கேட்க அவனும் முழுமையாகவே என்ன நடந்தது என்று அவளுக்கு சொன்னான்.
“எனக்கு அவங்களை நினைக்க அழுகையா வருது! எனக்கு விஷயத்தை சொல்லிட்டேன்னு சொல்லாதீங்க..தெரியாத மாதிரியே நான் மெயின்டெயின் பண்றேன்..இல்லைன்னா மணி காத்து போன பலூன் போல ஆயிடுவார்”
சிரிப்புடன் தலையசைத்தான் அவன்.
‘ஆமாம். அந்த ஸ்கூல் எங்கே இருக்கு. எனக்கு ஏன் ஒண்ணுமே சொல்லலை?” அவள் முகத்தில் சிணுக்கம்.
“நான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வச்சிருந்தேன்”
‘சரி விடுங்க..இப்போ போகும் போது போய் பார்க்கலாமா?”
“வேணாம்..நேரம் ஆயிடும். சாப்பிடாம காத்துட்டு இருப்பாங்கல்ல..இன்னொரு நாளைக்கு வருவோம்.”
“சரி..ஆனாலும் மஞ்சு ஆன்ட்டி, அங்கிளை விடுங்க..சஜினி கூட எனக்கு சொல்லாம மறைச்சுட்டாளே”.
‘’ஹா ஹா அவ இப்போல்லாம் உங்கம்மா கட்சிக்கு மாறிட்டா”
“இருக்கட்டும் இருக்கட்டும்!!!”
A 9 பாதை நீண்டு போய்க்கொண்டே இருந்தது. தொடர்ந்து அவனிடம் இரண்டு மாதக்கதைகளையும் கேட்டபடி இருந்தவள் ஒரு கட்டத்தில் தூங்கிப்போய் விட தலையை நேராக வைத்து விட்டவன் வண்டியில் நிறுத்தப்பட்டிருந்த மியூசிக் ப்ளேயரை மீண்டும் போட்டுவிட்டான்.
மீண்டும் அவள் கண்விழிக்கும் போது அவர்கள் ஆனையிறவு செக் பாயின்டையும் தாண்டி இருந்தார்கள்.அடிக்கடி வந்து போவபன் மற்றும் செல்வாக்கு காரணமாக அவர்களை இறங்கி வரச்சொல்லி யாரும் பரிசோதிக்கவில்லை. ஆகவே தூக்கம் கலையாமல் அவளால் தூங்க முடிந்தது.
மிருசுவில் பகுதியில் தான் திடுக்கிட்டு விழித்தவள் கண்ணை உருட்டி அங்குமிங்கும் பார்க்க அவளையே ஓரப்பார்வையில் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அவளிடம் வம்பிழுக்கும் ஆசை முளைத்தது.
“மைதிலி உங்கப்பா என்கிட்டே ஒரே ஒரு விஷயம் கேட்டார்” மெல்ல ஆரம்பித்தான் அவன்
என்னது?
என் பசங்களுக்கு அட்லீஸ்ட் கொஞ்சமாவது தமிழ் எழுத படிக்க தெரியணுமாம்.
சட்டென்று குங்கும வண்ணம் கொண்டவள் “மணிக்கு விவஸ்தையே இல்ல!!! எல்லாம் எங்க தமிழ்த்தாத்தா பண்ற வேலை” என்று முணு முணுத்தாள்
என்ன கத்து கொடுக்கலாமா?
……
“பதிலையே காணோம்? ஹா ஹா ஹா” அவன் அவளை பார்வையாலேயே விடாமல் சீண்ட விழிகளை அங்கும் இங்கும் பதித்து சமாளிக்க முயன்றவள் கடைசியில் “போடா” என்ற படி அவன் புறமே திரும்பி அமர்ந்தாள்
“ஆமாம். நம்ம பசங்க எந்த லாங்குவேஜ் பேசுவாங்க?”
மறுபடி ஆரம்பித்து விட்டாளா என்று விழிகளை சுழற்றினான் அவன். அவள் எங்கே வருகிறாள் என்று அவனுக்கு புரியாதா என்ன? “இயல்பா எந்த லாங்குவேஜ் வருதோ அதை பேசுவாங்க.. என் வீட்ல யாரும் யாரையும் போர்ஸ் பண்ண முடியாது. அது நீயா இருந்தாலும் சரி, நானா இருந்தாலும் சரி!!! புரிஞ்சதா?” சீரியசாகவே சொன்னான் அவன்.
“சரிங்க மகாராஜா..”
கிண்டலாய் வாய்பொத்தி சொன்னவளின் தலையில் வலிக்காமல் கொட்டியவன் அவளுடைய கையை எடுத்து உள்ளங்கையை உதட்டில் ஒற்றினான்.
அவனின் அந்த செய்கை எப்போதுமே கொடுக்கும் பரவசத்துடன் அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள் மைதிலி.
கண்ணெதிரே “யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது” என்ற பெயர்ப்பலகை கம்பீரமாய் நின்றது.
எனக்கென்றொரு பாரம்பரியமும் பெறுமதியும் காலத்தால் அழியாமல் இருந்து கொண்டே இருக்கும். தயவு கூர்ந்து கசடுகளை விடுத்து மனிதத்தை மட்டும் போர்த்திக்கொண்டு உள்ளே வாருங்கள் என்று மௌனமாய் வேண்டிக்கொள்வதைப்போல அதன் பின்னணியில் நின்ற மரங்கள் மெலிதாய் சிலிர்த்து அடங்கின. தன் முகத்தை இன்னும் நெருக்கமாய் அவன் தோளில் புதைத்துக்கொண்டாள் அவள்.
முற்றும்.
WLM அத்தியாயம் 21
“ஆசைப்பட்டு கேட்பதெல்லாம் கேட்கும் நேரத்தில் கிடைக்காமல் நாம் எதிர்பாராத ஒரு தருணத்தில் நம் தலையில் வலிய வந்து பொழிவது தான் வாழ்க்கை போலும். நானும் அப்படியொரு தருணத்தை தான் அன்றைக்கு சந்தித்தேன்.”
அடுத்த வாரம் முழுக்க அவனுக்கு நரக நாட்களாய் தான் நகர்ந்தது. இனிமேல் எதை எப்படி நகர்த்தப்போகிறேன் என்று அவனுக்கு புரியவே இல்லை.
மைதிலியிடம் இருந்து வரும் மெசேஜ்கள் தான் அவனை கொஞ்சம் உயிர்ப்புடன் வைத்திருந்தன.
“இன்றோடு கைக்கட்டுக்கு விடுதலை. ஆனால் இடக்கை கொஞ்சம் வளைந்து போனது போலவே ஒரு பீலிங்..”
“நாளை நான் கொழும்புக்கு போகிறேன். அங்கே ஒரு வாரம் பெரிம்மா வீட்டில் இருப்பேன். ரிசர்ச்சுக்கான கேள்விக்கொத்துகளை கம்பனி அலுவலர்களிடம் கொடுத்து நிரப்பி வாங்கி வந்தால் மீதி அனாலிசிஸ் ஐ ஹாஸ்டலில் வைத்தே முடித்து விடலாம்.”
“கொழும்புக்கு வந்து விட்டேன்.”
“இந்த கம்பனியின் HR டிபார்ட்மென்ட்டில் ஒருத்தன் என்னை சைட்டோ சைட்டாக சைட்டடிக்கிறான்.”
“ஒட்டுமொத்தமாக நிரப்பிய பேப்பர்களை அந்த அவன் தானே வாங்கி வைத்திருக்கிறேன் என்னை வந்து வாங்கிக்கொள்ளும் படி சொன்னான்.”
“ஐயோ இவன் தொல்லை தாங்கல..”
“ஹா ஹா உங்களுக்கு தெரியுமா? இப்போது என்னுடைய மொபைலில் நாமிருவரும் இருக்கும் படத்தை ஸ்க்ரீன் சேவராக வைத்து தவறுதலாக விடுவது போல அவன் மேஜையில் விட்டு விட்டு வாஷ்ரூம் போனேன். திரும்பி வந்து பார்த்தால் அவன் முகம் கடு கடு என்று இருக்கிறது. அதன் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சைத்தான் ஒழிந்தான்..மைதிலிக்கே வெற்றி!!!”
“எல்லாம் முடிந்தது. எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு விட்டேன். நாளை திரும்பவும் கண்டிக்கு போகிறேன்.”
“ஷாப்பிங் போகிறேன். சீதாவுக்கு மினி ஸ்கர்ட் ஒன்று வாங்கலாம் என்று இருக்கிறேன். வாட் சே?”
தன்னை கடைக்கண்ணால் பார்த்த மாமியார் ஞாபகம் வர வாய் விட்டு சிரித்தான் சிந்தக்க.
நான் ஏதும் செய்வேன் என்று தானே சிரித்த படி உற்சாகமாக சுற்றுகிறாள் இவள். நானானால் தோற்றுப்போயல்லவா வந்திருக்கிறேன்.
அவளின் இந்த உற்சாகம் நிலைக்கவேண்டுமே.. மனம் ஏக்கமாய் எண்ணிக்கொண்டது.
“அடோ.. என்ன கனவிலே டூயட் பாடுகிறாயா??” அவனைப்பிடித்து ராஜீவ் உலுக்கினான்
“பச்..இப்போ எனக்கு அது தான் குறை. விடுடா..” அலுப்பாக முணுமுணுத்தான் சிந்தக.
“விட்ரா விட்ரா.. முறைக்காத மாமனார் உலகத்துல உண்டா என்ன? எல்லாம் சரியாயிடும். நான் வேணும்னா பேசிப்பார்க்கவா?” என்று கண்சிமிட்டினான் மற்றவன்.
கையெடுத்து கும்பிட்டவன் சிரிப்போடு அவனுக்கு பதில் சொல்ல வாயெடுக்க போன் மணி ஒலித்தது. செக்ரிட்டரி தான் பேசினாள்.
“சார். உங்களைப்பார்க்க ஜட்ஜ் ராஜித சேனநாயக்க மற்றும் ஒரு கப்பிள் வந்திருக்காங்க. உள்ளே அனுப்பவா?”
அனுப்புங்க என்றவனுக்குள் எண்ணங்கள் தாறுமாறாக ஓடியதை கட்டுப்படுத்த முடியவில்லை.
“சரி நீ யார்னு பார். நான் கிளம்பறேன்” என்றபடி நடக்க ஆரம்பித்த ராஜீவை “என் கூட இருடா” என்று தடுத்தவன் அவசரமாக cc டிவியில் கண்ணை பதித்தான்
அவனின் பதட்டத்தை ஆச்சர்யமாக பார்த்தபடி “யார்ரா?” என்ற ராஜீவ் தானும் ஸ்க்ரீனில் விழிகளை பதிக்க கதவு தட்டப்பட்டது! தொடர்ந்து க்ளிக்கிட்டு திறந்த கதவின் பின்னே ஜட்ஜ் ராஜிதவும் அவருக்கு பின்னே மணிமாறன் தம்பதியினரும் நின்று கொண்டிருந்தனர்.
“உள்ளே வாங்க” என்று அவன் சுய உணர்வுக்கு வந்து அழைப்பதற்குள் இரண்டு நாற்காலிகளே இருந்த மேஜையின் அருகில் மூன்றாவது சுழலும் நாற்காலியை போட்டான் ராஜீவ்.
“எப்படியிருக்கிறாய் சிந்தக்க? பிஸ்னஸ் எல்லாம் எப்படிபோகிறது?” கேட்டபடியே ராஜிதவும் அவரை தொடர்ந்து மற்ற இருவரும் அமர்ந்து கொள்ள தானும் அமர்ந்தான் சிந்தக்க. அவர்களோடு அமராமல் கொஞ்சம் விலகி அந்த அறைக்குள்ளிருந்த அடுத்த மேஜைக்கு முன்னிருந்த கதிரையை அவர்களை பார்க்குமாறு திருப்பி விட்டு அதில் அமர்ந்து கொண்டான் ராஜீவ்.
“நன்றாக போகிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? பார்த்து ஒரு வருடமாகிவிட்டது” என்று சம்பிரதாயமாக ராஜிதவை சிந்தக்க விசாரித்தாலும் கண்கள் மணிமாறனையே தொட்டு வந்தன.
“எனக்கென்ன? ஹாப்பியா இருக்கேன்.” என்றவர் “இவன் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு இவ்ளோ நாளும் ஏன் சொல்லலை? போனவாரம் எனக்கு இவன் போன் பண்ணப்போ தான் விஷயமே தெரிஞ்சது.” அவர் சிரிப்புடன் சொல்ல ஆனந்த அதிர்ச்சியால் தாக்கப்பட்டவன் மணிமாறனை தான் பார்த்தான் அவரோ சிநேகமாக புன்னகைத்தார்.
நிலைமையை புரிந்து கொண்ட ராஜீவ் “ட்ரின்க் எடுத்துட்டு வர்றேன்” என்று சிரிப்புடன் முணு முணுத்தபடி மெல்ல நழுவி வெளியேறிவிட்டான்.
“இங்க பாருப்பா.. இவன் போனவாரம் போன் பண்ணி மைதிலி இப்படியொரு பையனை லவ் பண்றா, எனக்கு விசாரிச்சு சொல்லுன்னு டீட்டெயில்ஸ் சொன்னான். உன்னைத்தான் எனக்கு நல்லா தெரியுமே. எனக்கு தெரிஞ்ச வரை நல்ல பையன் ஆனாலும் உன் திருப்திக்காக முழுக்க விசாரிச்சிடலாம்னு சொல்லிட்டு நான் அனுராத புரம் வந்து ஒரு வாரம் உன் வேலையா தான் இருக்கேன். எல்லாரும் திருப்தியா நல்ல சர்ட்டிபிகேட் தான் கொடுக்கிறாங்க. அதனால தான் இவனை நேர்லயே கிளம்பி வான்னு சொல்லிட்டேன். என் வேலை முடிஞ்சது. இனிமே நீங்க பேசிக்கோங்க. சரியா?”
“நான் கேட்பதெல்லாம் நிஜம் தானா?” அவன் ஆனந்தமாய் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான்.
அதற்குள் ட்ரிங்க்ஸ் பரிமாறப்பட மறுப்பு சொல்லாமல் எடுத்துக்கொண்டவர்கள் குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை.
பிறகு ராஜித எழுந்து கொண்டார்.
“மணி அப்ப நான் கிளம்பறேன். நீ பேசிட்டு ஆறுதலா வா. நான் வரேன் சிந்தக்க”
“தாங்க் யூ சார்.”
“இருக்கட்டும் இருக்கட்டும்..அப்புறமா என்னை பலமா கவனிங்க” என்று சிரித்தார் அவர்.
“எப்படி போவாய்? நீ வேண்டுமானால் கார் எடுத்துட்டு போறியா?” என்று மணிமாறன் கேட்க.
“இல்லையில்லை. காப்பை கால் பண்ணினா உடனே வந்துருவான்” என்றபடி திரும்பியவரை “ வேணாம் சார், உங்களை நான் டிராப் பண்ண சொல்றேன்” என்று தடுத்த சிந்தக அலுவலக டிரைவருடன் அவரை அனுப்பி வைத்தான்.
அவர் போனதும் கனத்த மௌனம் உள்ளே சுற்றிக்கொண்டிருக்க மூவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் சில நிமிஷம் தவித்து தான் போயினர்.
“என்னில் நம்பிக்கை வந்து இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி.”சிந்தக்க தான் ஆரம்பித்து வைத்தான்
“மைதிலி என் மகளும் தானேப்பா..அவள் சந்தோஷமாய் இருக்கவேண்டும் என்பது தானே எங்கள் ஆசையும்..” மணிமாறன் மென்மையாய் சொன்னார்.
பிறகு மீண்டும் அவர்களுக்கிடையில் சுற்றிக்கொண்ட மௌனத்தை தொடர்ந்து “அலுவலகத்தை சுற்றிப்பார்க்கலாம் வருகிறீர்களா?” என்று தயக்கமாய் அழைத்தான் அவன்.
பார்க்கலாமே என்று உடனேயே எழுந்து கொண்டவர்கள் அவனோடு வர பாக்டரி முழுக்க விரிவாக சுற்றிக்காண்பித்தான் அவன். மணிமாறன் அவனிடம் ஆர்வமாக கேள்வி கேட்டு அங்கிருந்தவர்களுடன் ஓரிரு வார்த்தைகள் பேசி என்று இயல்பானாலும் சீதா மட்டும் இறுக்கமான புன்னகையோடே வலம் வருவதை சிந்தக்க கவனிக்கவே செய்தான். அதன் காரணமும் சற்றுநேரத்திலேயே அவனுக்கு தெரியவந்தது.
சீதா வாஷ்ரூம் போயிருக்க வேண்டும். ப்ராசசிங் அறைக்குள் என்னவோ கேட்டுக்கொண்டிருந்த அதிகாரிக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தவனின் அருகில் வந்தார் மணிமாறன்,
எதாவது ப்ராப்ளமா அங்கிள்?
பெரிதாக புன்னகைத்தவர் “ஒன்றுமில்லை. சீதா வாஷ்ரூம் போயிருக்கா . அவ வர்றதுக்குள்ள உங்ககிட்ட நான் பேசியாகணும்..” என்றவர் பக்கத்தில் நின்ற அதிகாரியிடம் “என் வைப் வந்தா நாங்கள் வேற செக்ஷனுக்கு போயிட்டோம்னு சொல்லி இங்கேயே உக்கார வைங்க” என்று கண்ணடித்து விட்டு அவனோடு நடக்க அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
இப்படி குழந்தைத்தனமான உற்சாகத்துடன் இருக்கும் மனிதரால் எப்படி வக்கீலாக அதன் பின் நீதிபதியாக எல்லாம் தொழிலில் சாதிக்க முடிந்தது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட மனதை மண்டையில் கொட்டி அடக்கினான் அவன். மனுஷன் இப்போ என்ன குண்டை தூக்கி போடப்போறாரோ தெரியல..அதுக்குள்ளே உனக்கு இந்த ஆராய்ச்சி வேறயா?
கான்பரன்ஸ் ஹாலுக்கு தான் அவரை அழைத்துப்போயிருந்தான். உள்ளே வந்து கதவை தாளிட்டதுமே “போனவாரம் ஸ்கூல்ல உங்களை பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு தம்பி. அப்போதிருந்த கோபத்தில் உடனே ஏதும் வார்த்தையை விட்டிருப்பேன் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” என்று அவன் கையை பிடித்துக்கொள்ள அவனுக்கு தலையே சுற்றியது,
“மைதிலி எங்களுக்கு ஒரே பொண்ணு. பொத்தி பொத்தி வளர்த்தோம். அவளை படிக்கறதுக்காக இவ்வளவு தூரம் அனுப்பறதே முதல்ல சீதாவுக்கு இஷடமில்ல. அவ ஒழுக்கம், கண்ணியம்னு அதையே பிடிச்சுட்டு இருப்பா. நான் தான் மிது நம்ம கூடவே இருந்தா மாச்சூர்ட் ஆகமாட்டா அவ வெளியே போகட்டும்னு அனுப்பி வைச்சேன்.”
அவ வெளியே படிக்கப்போய் கொஞ்ச நாள்லயே காதலிக்கிறேன்னு வந்து சொன்னதும் முதல்ல என்னாலையும் அதை தாங்கிக்க முடியல தான். என் மனசுக்கு உடனே நீங்க யாரோ..எங்களை சேர்ந்தவங்க கூட இல்ல..எனக்கு உங்க பாஷை அவ்வளவா தெரியாது..இனிமே என் ஒரே பொண்ணு எனக்கில்லைன்னு தான் தோணிச்சு.. விழுந்துட்டேன். சீதாவும் ரொம்ப கோபப்பட்டா. நானாவது என் பொண்ணு ஆசைப்பட்டதை விசாரிச்சு பார்க்கணும்னு இருந்தேன். அவ வேண்டவே வேணாம்னு சொல்லிட்டா. காரணம் உங்க பக்கத்துக்கு இளைஞர்கள் மேல நல்ல புரிந்துணர்வு எங்க பக்கத்துக்கு இல்லைன்னு உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. மைதிலியும் என்னால பயந்து போய் இனிமே இந்த பேச்சை எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டா.. நாங்களும் அவ படிச்சு முடிக்கட்டும் இது வயசுக்கோளாறாயிருந்தால் அதுவாவே சரியாயிடும்னு விட்டுட்டோம்.”
“ஆனா அவ மறக்காமலே இருந்ததும், இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்ச்தும் உங்க வீட்ல வந்து எங்களுக்கு தெரியாம தங்கியிருந்ததையும் சீதாவால தாங்கிக்கவே முடியல. பெண் குழந்தைகள் தப்பு பண்ணினா அம்மாக்கள் அதை தாங்களே பண்ணின தப்பா, தங்களுக்கு வந்த அவப்பெயரா தான் எடுத்துப்பாங்க தம்பி. இப்போ வரை அவ மைதிலி கிட்ட பேச மாட்டேங்கிறா. நான் இப்படியா அவளை வளர்த்தேன் என்கிற ஆதங்கம். ஆனா எனக்கு புரிஞ்சது தம்பி. மைதிலியோட அப்பாவா அவளோட படிப்பு முடிஞ்சதும் நான் உங்க வீட்டுக்கு வந்து பேசியாகணும்னு. அப்போ கூட மனசுக்குள்ள ரொம்ப வருத்தம் தான்.”
“ஆனா போனவாரம் உங்களை அந்த ஸ்கூல்ல சந்திச்சப்போ நான் எதிர்பார்க்கவேயில்லைன்னு தான் சொல்லணும். நீங்க தமிழ்ல பேசினதுமே எனக்கு உங்களை வேற மாதிரி பார்க்கணும்னு தோணவேயில்லை. எந்த வேறுபாடுகளும் இல்லாம மனுஷனை மனுஷனா பார்க்கிறவனால மட்டும் தானே அந்த ஸ்கூல்ல அவ்ளோ இன்வெஸ்ட் பண்ண முடியும்? இவன் கூட என் பொண்ணு சந்தோஷமா தான் இருப்பான்னு எனக்கு அப்போவே தோணிடுச்சு. உங்க நடவடிக்கைகள் எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. மகளுக்கு வந்தவன் எனக்கும் மகன் தானே.. நான் ரொம்ப சந்தோஷமாயிட்டேன். ஆனா சீதாவை நினைச்சு தான் கவலையா இருந்தது. ரொம்ப குழப்பத்துல இருந்தேன்.
“ஏற்கனவே மைதிலி அவ பேச்சை மீறி போனது அவ மனசுல இருக்கு.இதுல நானும் உடனேயே உங்க பக்கம் சாய்ஞ்சுட்டா அவ மனசு ரொம்ப கஷ்டப்படும். அதை விட என் பொண்ணுக்கு அப்பாவா திருப்தியா உங்க பின்புலங்கள் பற்றி நான் விசாரிக்காமல் சட்டுன்னு எதுவும் வாய் விட்டு விடவும் கூடாதே. அதுதான் நீங்க நேரடியா என்னிடம் பேசியபோது மறுத்து சொல்லிக்கொண்டே இருந்தேன். நீங்கள் தப்பாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.” அவர் தயக்கமாய் அவன் முகம் பார்க்க பளிச்சென்று சிரித்தான் அவன்,
“அதெல்லாம் இல்லை.. நீங்கள் வேண்டாம் என்றே சொல்லிவிட்டீர்கள்..இனிமேல் என்ன செய்யப்போகிறேன் என்று தான் பயத்துடன் இருந்தேன். இன்றைக்கு எல்லாமே எனக்கு இன்ப அதிர்ச்சி!!! ஆனால் அங்கிள், இப்போது ஆன்ட்டி சம்மதித்து விட்டார்களா? இப்போது கூட முகம் சரியாக இல்லையே..”
“அதையேன் கேட்கிறீர்கள். அன்றைக்கு நான் உங்களிடம் பேசிவிட்டு அந்தப்பக்கம் போனதுமே அவள் என்னை கோபமாக வறுத்தெடுத்து விட்டாள். மைதிலி இவ்வளவு தூரம் துணிந்த பிறகு இன்னொருவனுக்கு அவளை கொடுக்க முடியுமா? இல்லை காலம் பூராகவும் அவளை இப்படியே வைத்திருக்க முடியுமா? வீட்டில் கலந்து பேசி சொல்கிறோம் என்று சமாளிக்காமல் இப்படி முடியாது என்று கவிழ்த்துக்கொட்டி விட்டு வருகிறீர்களே உங்களுக்கு அறிவிருக்கிறதா? என்று எனக்கு செம கிழி”
என்று அவர் மனைவியின் குரலின் ஏற்ற இறக்கங்களை இமிடேட் செய்ய பக்கென்று சிரித்து விட்டவன் “சாரி அங்கிள்” என்று முணு முணுத்தான்.
“விடுப்பா.. இதெல்லாம் அரசியலில் சகஜம்!” என்று சிரித்தவர் தொடர்ந்தார்.
“அப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது. இந்த சான்சை பக்கென்று பிடித்து ஏதோ எனக்கு பிடிக்காமல் அவளுக்காகத்தான் செய்வது போல நடித்தபடி ராஜிதவிடம் உங்களை பற்றி முழுதாக விசாரிக்க சொல்லிவிட்டேன்.”
ஹா ஹா ஹா அங்கிள்! எனக்கு உங்கள் இருவரையும் ரொம்பவே பிடித்திருக்கிறது!
எங்களுக்கும் தான்! ஆனால் எனக்கு ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் இருக்கிறது!
என்ன அங்கிள்?
என் அப்பா தமிழ்ப்பண்டிதர் ராமநாதர். ராமனாதருடைய ஒரே பேத்தி மிது தான். அவள் வழி வாரிசுகளுக்கு எப்படியாவது தமிழை குத்துமதிப்பாகவாவது எழுதப்படிக்க கற்றுக்கொடுத்து விடுங்கள்! இவளை இங்க்லீஷ் மீடியத்தில் சேர்த்தேன் என்பதையே என் அப்பா சாகும் வரை மன்னிக்கவில்லை. இப்போது இதுவும் என்றால் இரவில் என் கழுத்தை திருகினாலும் திருகி விடுவார்.
கண்டிப்பா அங்கிள்
எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கிறது.
என்னது?
“சீதாவும் என்னுடைய ஓவர் ஆக்டிங்கை நம்பி எனக்கு உங்களை பிடிக்காது என்று நினைத்துக்கொண்டு தானும் விருப்பமேயில்லாமல் வேறு வழியின்றி இந்த சம்பந்தத்தை மைதிலிக்கு பேச வருவதாக ஓவர் ஆக்டிங் செய்கிறாளோ என்பது தான்.”
சிரித்து விட்டான் சிந்தக்க. “ஆனால் ஆன்ட்டியின் முகம் பார்க்க வாடிப்போய்த்தான் இருந்தது. “
“வாடவைத்துக்கொண்டிருக்கிறாள் என்பது தான் சரி. அவளுக்கு கோபம் வந்தால் எப்படி ரியாக்ஷன் இருக்கும் என்று அனுபவப்பட்டவன் நான் சொல்கிறேன். ஒரு டெஸ்ட் பண்ணி பார்த்து விடலாம். நான் இங்கேயே இருக்கிறேன், நீங்கள் வேண்டுமானால் அவளிடம் போய் இங்கே அழைத்து வாருங்கள். வரும் வழியில் உங்களிடம் பேசுவாள் பாருங்களேன்.”
சிரித்தபடியே அவரை அங்கே அமர வைத்து விட்டு எழுந்து நடந்தான் சிந்தக்க..
எவ்வளவு இனிய மனிதர்கள்! மைதிலியின் பெற்றோர் பின்னர் வேறெப்படி இருக்க முடியும்? அவனை சட்டென்று தங்கள் குடும்பத்துக்குள் அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டது ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.
மணிமாறனை உள்ளே அமர வைத்திருப்பதாக சொல்லி சீதாவை அழைத்துக்கொண்டு சென்றான் அவன்.
“தம்பி..மிது அப்பா உங்ககிட்ட கடுமையா பேசிட்டார் என்றால் மனசுல வச்சுக்காதீங்க. அவருக்கு குழந்தை மனசு..கொஞ்ச நாள் உங்க கூட பழகினாலே அவருக்கு உங்களை ரொம்ப பிடிச்சிடும்.” என்று மெல்லிய குரலில் சீதா கணவருக்காக சமாதானம் சொன்ன போது அவனுக்கு சிரிப்பை எப்படி அடக்குவது என்று சத்தியமாக புரியவில்லை.
“விடுங்க ஆன்ட்டி..அங்கிள் அப்படியெல்லாம் வெறுப்பாக பேசவில்லை.” என்று சொல்லிவிட்டு கான்பரன்ஸ் ஹாலுக்கு உள்ளே போக அந்த குறும்பு மனிதரோ “எப்படி நான் சொன்னது சரிதானா?” என்று கண்ணாலேயே கேட்டார். மாமியாருக்கு தெரியாமல் கண்ணாலேயே தானும் அவருக்கு பதில் சொல்லி மௌனச்சிரிப்பில் கலந்து கொண்டபோது அந்தக்குடும்பத்தில் நிஜமாகவே தானும் கலந்து விட்ட உணர்வில் நிறைவாக உணர்ந்தான் சிந்தக்க. அந்த சமயம் மைதிலி அருகில் இல்லாததை நினைத்து மனம் ரொம்பவே ஏங்கிப்போனது.
திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு மட்டுமல்ல இரு குடும்பங்களின் இணைப்பு என்று சும்மாவா சொன்னார்கள்?
“மிதுவுக்கு இப்போதைக்கு சொல்லாதீங்க தம்பி..இன்னும் ரெண்டு மாசம் தானே இருக்கு..அவ படிப்பு முடிய! வீட்டுக்கு வந்து சர்ப்ரைசா தெரிஞ்சுக்கட்டும்”
ஹா ஹா சரி. நீங்க என்னை வா போ என்றே சொல்லுங்க அங்கிள்..மரியாதையெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு.
“ச்சே ச்சே அதெல்லாம் வீட்டுக்கு வந்த மருமகனை வா போ என்று கூப்பிடக்கூடாது” சீதா முந்திக்கொண்டு சொல்ல மீண்டும் அங்கொரு மௌனச்சிரிப்பு வெடித்தது.
பிறகு அவர்களை அழைத்துக்கொண்டு போகும் வழியில், அவனது வீட்டை காண்பித்து விட்டு அதன் பின்னர் பெற்றோரின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான் சிந்தக்க.
அன்று மாலை அவர்கள் கிளம்பிய பின்னர் இரவுணவை அம்மா வீட்டில் முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தவன் அந்த மாமரத்தடி பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டு மைதிலுக்கு போன் செய்தான்.
எடுத்த எடுப்பிலேயே “என்ன சபதம் எல்லாம் காற்றில் தானா?” என்று நக்கலாக கேட்டாலும் கொள்ளை உற்சாகம் அவளின் குரலிலே தெரிந்தது.
“உன் கிட்ட பேசாம இருக்க முடியலடி.” அதுதான் சபதத்தை கொஞ்சம் அமெண்ட் பண்ணிட்டேன். நமுட்டு சிரிப்போடு பதில் சொன்னான் அவன்.
அது சரி!!!!
WLM அத்தியாயம் 19
“பெரிய இவள் போல அவனுக்கு சமாதானம் சொல்லி அனுப்பி விட்டேன். ஆனால் உள்ளேயோ என் மனம் உலைக்களத்தில் கொதித்துக்கொண்டு இருந்தது. அம்மா என்னை திட்டியதுண்டு, ஏன் அடித்தது கூட உண்டு. ஆனால் எல்லாவற்றிலும் கண்டிப்பு தான் தெரியுமே தவிர இப்படி வெறுப்பாக பேசியதேயில்லை. கண்களை முட்டி வழியத்துடித்த கண்ணீரை எப்படியோ அடக்கிக்கொண்டேன்! வரும் நாட்களில் வாழ்க்கை எனக்கு எதையெல்லாம் வைத்துக்கொண்டு காத்திருக்கிறதோ எனக்கு சுத்தமாய் தெரியவில்லை”
ஒற்றைக்கையில் கட்டுடன் ஒரு பையை தூக்க முயற்சித்தவளை கண்டுவிட்டு காண்டீனில் சிற்றுண்டி வாங்க வந்திருந்த அவளுடைய ஜுனியர் பெண்கள் ஓடி வந்துவிட்டனர்.
“மைதிலி அக்கா! இப்போவா வந்தீங்க… பிளாஸ்டர் கூட கழட்டலையே..ஏன் இன்னும் ஒரு கிழமை நிண்டுட்டு வந்திருக்கலாமே!!!” கேட்டபடியே அவர்களில் ஒருத்தி டிராவலிங் பாக்கை தன கையில் எடுத்துக்கொண்டாள்.
“இல்லடா..ப்ராஜெக்ட் டைட்டில் கொடுத்தபடி இருக்கிறது. மீதி வேலைகளை பார்த்தால் தானே நான் இந்த வருஷம் பாஸ் அவுட் ஆக முடியும்? இல்லாவிட்டால் உங்களோடு தான் வரவேண்டியிருக்கும்..” என்று சிரித்தவள் “நன்றி மக்களே உங்களுடைய கால்ஸ், மெசேஜஸ் எல்லாத்துக்கும்” என்றாள்
“போங்கக்கா..எங்களுக்கு தான் நீங்க இல்லாம பொழுது போகல. ஆனா நீங்க செம ஜாலியா சாப்பிட்டு ஸ்டெடியாகி வந்திருக்கீங்க! மைத்திக்கா கண்ணையும் முகத்தையும் பாரு” என்று இன்னொருத்தி சிரித்தாள்
ஒரு கணம் ஜெர்க்கானவள் “சரி சரி ரொம்ப ஓட்டாதீங்க மக்களே..”என்று பேச்சை மாற்ற முயல இன்னொருத்தி மீதி இரண்டு சின்னப்பைகளையும் கையில் எடுத்துக்கொண்டாள்.
“லூசுகளா..இந்த பிளாஸ்டிக் பாக்கை நான் எடுத்து வர மாட்டனா? என் ஒரு கை நல்லாத்தானே இருக்கு!அநியாயத்துக்கு பாசமா இருக்கீங்களே மக்கா” என்று அலுத்துக்கொண்ட மைதிலி அவர்கள் கேட்கமாட்டார்கள் என்று தெரியுமாதலால் பேசாமல் தன்னுடைய ரூமை நோக்கி நடந்தாள்.
“உங்களுக்கு லன்ச் எப்படி? சாப்பிட்டீங்களா? இல்லைஇனிமேத்தானா?”
“கொண்டு வந்தேண்டா,..ஆமாம் சுமியை பார்த்தீங்களா?” என்று கேட்டாள்.
“பார்த்தோம். ஒரு ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி தான் ஹாஸ்டல் வந்தாங்க..நாங்க ஸ்டடி ஹால்ல இருந்து கூப்பிட்டோம். சுமிக்காக்கு கேட்கல.”
மைதிலிக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து விட்டது. எண்ணங்களை முகத்த்தில் இருந்து மறைப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டாள் அவள்
மஞ்சு ஆன்ட்டி தவிர மீதி எல்லாருமே அவள் மஞ்சு ஆன்ட்டியின் சேனபுர வீட்டில் தங்கியதாக தான் நினைப்பார்களே தவிர உண்மை வெளியில் வராது என்று ஆயிரம் தடவை தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும் அவளுக்கு சாதாரணமாக அவர்கள் யாரையும் எதிர்கொள்ள முடியவில்லை.
அவனிருக்கும் இடத்தில் அவன் குடும்பத்தார் சூழ இருந்ததாக நினைத்ததாலேயே அவளது காயங்களை பற்றிக்கூட கொஞ்சமும் கணக்கெடுக்காத அளவுக்கு அம்மாவுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே..உண்மை தெரிந்தால் அவளை நேரில் வந்து வெட்டிப்போட்டு விட மாட்டாரா?
நடுவில் பெரிய கிரவுண்ட் வைத்து அதை சுற்றி சதுரமாக கட்டப்பட்டிருந்த நான்கு மாடி ஹாஸ்டலில் விசிட்டர்ஸ் அறையை தாண்டியதும் மாணவிகளின் அறைகள் வரிசையாக அமைந்திருந்தன. அதுவும் வலப்பக்க தரைத்தளம் மற்றும் அதற்கு மேலே இருந்த தளங்களில் அவர்களுடைய பீட மாணவிகளே இருந்த படியால் அநேகமான எல்லாருமே விபத்து பற்றி அறிந்திருந்தனர். ஜூனியர்களுக்கு பரீட்சை சமயமாதலால் ஒவ்வொரு ரூமுக்கு வெளியேயும் யாராவது ஒருவர் ஹாரிடோரின் அரைச்சுவரில் ஏறி அமர்ந்து கொண்டு புத்தகங்களை தங்களின் முன்னே பரப்பிக்கொண்டிருந்ததனால் தேர் அசைவது போல அவள் எல்லோரின் நலன் விசாரிப்புகளுக்கும் பதில் சொல்லி சொல்லியே நகர வேண்டியிருந்தது.
“அக்கா நீங்க அநியாயத்துக்கு பேமஸா இருக்கீங்க! முடியல…தெரிஞ்சிருந்தா மற்றப் பக்கமாக வந்திருக்கலாம்
ஹா ஹா சும்மா இருங்கடி!!!
ஒருவழியாக அவர்கள் ‘ப’ வடிவத்தின் முடிவில் இருந்த படிகளில் ஏறி மைதிலியின் அறையை சென்றடைய அவளை முந்திக்கொண்டு அறைக்கதவை தட்டோ தட்டென்று தட்டினார் அவளது இளவல்கள்.
“ரூம் திறந்து தான் இருக்கு!” சுமியின் குரல் உள்ளிருந்து வர ஆர்ப்பாட்டமாய் கதவைத்திறந்து இவர்கள் உள்ளே செல்ல கொஞ்சம் படபடப்புடனேயே உள்ளே நுழைந்து தன்னுடைய பெட்டில் அமர்ந்தாள் மைதிலி. அதற்குள் அவளுடைய பெட்டில் மூன்று பேரும் சுமியின் பெட்டில் மூன்று பேரும் கதிரையில் ஒருத்தியுமாய் அவர்கள் அறையை ஆக்கிரமித்திருந்தனர்.
ஆக்சிடன்ட் மற்றும் மைதிலியை பற்றி பேசுவதை தவிர்த்து விட்டு புதிதாக மகா இல்லுப்பள்ளமவில் வந்திருக்கும் ஜூனியர்களை பற்றிக்கேட்டு அவர்களை போனில் ராகிங் செய்தது பற்றியும் அதற்கு அந்த குட்டிப்பெண்கள் பேசிய பதில்களையும் அவர்கள் நடித்துக்காட்ட அந்த அறையே கலகலத்துக்கொண்டிருந்தது. இந்த களேபரத்தில் பெரியவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கொலைவெறியுடன் பார்த்துவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டதையோ அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை என்பதையோ சின்னவர்கள் கவனிக்கவில்லை.
உங்களுக்கெல்லாம் எக்ஸாம் இல்லையாடி?” சுமி சிரித்துக்கொண்டே கேட்க அவர்களும் படித்து போரடித்ததால் இடைவேளை விட்டிருப்பதாக சிரித்துக்கொண்டே திருப்பினர்.
“சீஸ் பட்டன்ஸ் சாப்பிடறீங்களா?” என்றபடி சூப்பர் மார்க்கெட்டில் சிந்த்தக வாங்கிகொடுத்த சீஸ் பட்டஸ் டின்னை உடைத்துக்கொடுத்தாள் மைதிலி. மறுகணம் அறை முழுவதும் அந்த டின் இழுபட்டு ஐந்து நிமிடத்துக்குள்ளே முழுவதும் காலியாய் போனது!!!
இப்படியே ஒரு முக்கால் மணி நேரம் அறையையே இரண்டாக்கிகொண்டிருந்தவர்களில் ஒருத்திக்கு கான்டீனில் சாப்பாடு முடிந்துவிடும் என்று அப்போது தான் பீதி கிளம்ப ஒரு வழியாய் அறையை விட்டு வெளியேறினர் அவளது இளவல்கள்.
மைதிலி மற்றும் சுமித்ரா இருவருமே பிரச்சனைகளை மறந்து வயிறு வலிக்கும் படி சிரித்து ஓய்ந்திருந்த படியால் இப்போது ஒருவரை ஒருவர் நிதானமாக எதிர்நோக்க முடிந்தது.
மைதிலி சுமித்ராவை ஏறிட அவளும் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஏன்டி இப்படி செஞ்சே?”
….
“உங்கம்மா எனக்கு போன் பண்ணி கேக்குறாங்க “மைதிலிக்கு என்னாச்சு? ஏன்மா எங்களுக்கு சொல்லலை? உன்னையும் என் பொண்ணு மாதிரித்தானே பார்த்தேன் நீயாவது சொல்லியிருக்கலாமேன்னு!”
“நான் என்ன சொல்றது..இந்த ஆக்சிடன்ட் பத்தி சொன்னேன். அவங்க அழவே ஆரம்பிச்சுட்டாங்க.. நான் அன்னிக்கு நியூஸ் பார்த்துட்டு மைதிலி கிட்ட கேட்டேன்மா,..அது எங்களோட ஜூனியர்ஸ் என்று சொல்லிட்டாள். டீவில கைல கட்டு போட்டுட்டு இருக்காளே.. தலைல வேற பிளாஸ்டர் பார்த்த ஞாபகம்..பெருசா ஒண்ணும் இல்லையே என்று!”
மைதிலிக்கு கண்ணீர் வந்துவிட்டது. உதட்டை கடித்துக்கொண்டு நின்றாள்.
“ஏன்டி பேசமாட்டேங்கிற!!! அதெல்லாம் விட அவங்களுக்கு அவனை நல்லாவே தெரிஞ்சிருக்கு! அந்த பையன்கிட்ட இப்போ திடீர்னு இவ எப்படி போனா? இது எவ்வளவு நாளா நடக்குது? நீயும் இதுக்கு சப்போர்ட்டான்னு என்னை நாக்கை புடுங்கிக்கற அளவுக்கு கேள்வி கேட்டாங்க.. ஏன் இப்படி செஞ்ச நீ!!! “அவ்வளவு குற்றச்சாட்டுக்களையும் காதால் கேட்ட நினைவில் சுமியின் குரலில் கோபம் ஏறிக்கொண்டிருந்தது.
“இருடி.. நான் சொல்றதை கேளு..முதல்ல சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது!” என்று ஆரம்பித்துவிட்டு ஐயோ மைத்தி நீ இப்போது நடந்ததை சொல்லவா போகிறாய் என்று அவளே விழித்தாள்
நல்ல வேளை அது மற்றவளுக்கு சரியாக புரியவில்லை,
“என்னடி தெரியாது? சிந்த்தக சிங்கப்பூர் போயிருக்கான். அவனோட அம்மா அப்பா தங்கச்சி மூணு பேர் மட்டும் தான் வீட்ல இருக்கோம்னு தானேடி என்கிட்டே சொன்ன? இப்போ திடீர்னு அவன் எங்கிருந்து வந்தான்?”
அப்படி உன்னிடம் சொன்னதும் உன்னை ஒத்துக்கொள்ள வைத்ததும் நான் அல்ல அவனே தான் என்று சொல்லவா முடியும்? உதட்டை கடித்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் மைதிலி.
“ஆன்ட்டி கேக்கறாங்க. என்ன இருந்தாலும் ஏற்கனவே அப்படி ஒரு பிரச்சனை இவங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கும் போது அவன் இருக்கும் வீட்டில் இவள் போய் தங்கலாமா? என்னதான் அப்பா அம்மா கூடவே இருந்தாலும் இது நன்றாகவா இருக்கு? அந்த வீட்டு மனிதர்களுக்குத்தான் அறிவில்லை என்றால் உங்கள் ரெண்டு பேருக்கும் எங்கே போனது அறிவு? நான் அப்படியா உங்களை வளர்த்தேன்னு!”
…..
“எனக்கு பதிலே சொல்ல முடியல. நான் சொல்லவா முடியும்? இவ என்கிட்டயும் பொய் தான் சொன்னான்னு! பேசாம திட்டு வாங்கிட்டு அழுதபடி இருந்தேன் வேற என்ன பண்றது?
சாரிடி..
பேசாதே…உங்கம்மா பேசினதை கேட்டதுல இருந்து எனக்கு ரொம்பவே குற்ற உணர்ச்சியா இருக்கு..
…………
“சத்தியமா உனக்கு பைத்தியம் தான்டி பிடிச்சிருக்கு..அதுதான் எல்லாம் வேணாம்னு மூணு வருஷமா நல்லாத்தானேடி இருந்த..திடீர்னு என்ன ஆச்சு?” சுமித்ரா அவளருகில் வந்து அமர்ந்தபடி குழப்பமாய் கேட்க மைதிலி விருட்டென நிமிர்ந்தாள். கண்கள் கலங்கி மழை பொழிய தயாராய் காத்திருந்தன.
“நான் மூணு வருஷமா நல்லா இருக்கேன்னு உனக்கு தெரியுமா? உன் மனசை தொட்டு சொல்லுடி. நான் சந்தோஷமா தான் இருக்கேனா?” குரலும் கலங்கித்தான் போயிருந்தது
இது உண்மையை உடைத்து பேசும் நேரம்..இப்போதும் அவள் பேசாவிட்டால் அவளுக்காக வாய் திறக்க அங்கே யாரும் வரப்போவதில்லை.
அந்தக் கேள்வி மற்றவளின் கண்ணில் வலியை வரவழைத்தது போலவே அவளுக்கு மைதிலியின் நிலையையும் புரியவைத்தது போலும்.
எழுந்து வந்து தோழியின் அருகில் அமர்ந்து கொண்டவள் “நீ போகப்போக சரியாகிடுவாய் என்று நான் நினைச்சேன்டி” என்று உள்ளே போன குரலில் சொன்னாள்.
“எப்போ?” இப்போது மைதிலியின் குரலில் அழுத்தம்
“உனக்குன்னு ஒருத்தன் வரும் போது..”
“சுதாவை உனக்கு இல்லைன்னு சொல்லிட்டு வேற ஒருத்தனை கொடுத்து சந்தோஷமா இருன்னு சொன்னா நீ இருப்பியா?”
சுமியின் கண்களில் சின்னதாய் ஒரு அதிர்வு.
“இல்லைல்ல? என்னை மட்டும் ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க? எனக்கும் அப்போ இதெல்லாம் புரியல டி.. நானே நிறைய யோசிச்சு நமக்குள்ள ஒத்து வராதுன்னு நானே முடிவு பண்ணி பிரிஞ்சு வந்துட்டேன்..மூணு வருஷமா வெளியே மட்டுமே சிரிச்சு சிரிச்சு உள்ளே நிரந்தமாவே வெறுமை ஆகிடுமோன்னு பயம் வந்திருச்சு.. என் வாழ்க்கையை என்னால இப்படியே கொண்டு போயிட முடியாது.”
“அவனை பார்க்கணும்னு தோணினதை என்னால அடக்கவே முடியல.போகும் போது சத்தியமா வேறே எந்த எண்ணமும் இல்ல.. ஆனா அங்கே போனதும் தான் என்னையே எனக்கு புரிஞ்சது. ஆக்சிடன்ட்டுக்கு பிறகு திரும்பவும் நான் ஏன் அங்கே போனேன்னு நான் உனக்கு சொல்லப்போறதில்லை. ஆனா எனக்கு அந்த டைம் தேவைப்பட்டது. அதனால தான் உன்கிட்ட பொய் சொன்னேன்” தான் பேசுவதை மற்றவள் புரிந்து கொள்கிறாளா என்று ஆழம் பார்த்தபடி அவள் தொடர்ந்தாள்.
“நீங்கல்லாம் நினைக்கிற போல இல்லைடி அவன். ஏன் அவனை மாதிரி ஒருத்தன் இந்த உலகத்துலயே கிடையாது! எனக்கு அவன் வேணும்! எங்கப்பாம்மாவை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணிடுவேன் என்று நம்பறேன். அவனும் அதுவரை என்னை காண்டாக்ட் பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கான். உன்னால என்னை புரிஞ்சுக்க முடியுதா?”
அவளின் குரலிலும் பேச்சிலும் இருந்த நேர்மை எதிரில் இருந்தவளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவளின் தோள்களில் கரம் பதித்தாள்.
“பத்தொன்பது வயதில லவ் பண்றேன்னு வந்து நின்றாயடி.. நான் பயந்தே போனேன்..அப்போது எனக்கும் இந்த விஷயத்தில் புரிதல் போதாது..உன்னை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்போது இவ்வளவு உறுதியும் நம்பிக்கையுமாக நீ சொல்லும் போது உன்னை நம்பாமல் உனக்கு சப்போர்ட் பண்ணாமல் நான் இருப்பேனா?”
தாங்க்ஸ்டி..லவ் யூ சோ மச்!!! இவள் பாய்ந்து அவளின் கழுத்தை கட்டிக்கொள்ள “சனியனே விடுடி” என்று அலறியபடி அவளை விடுவித்தாள் சுமித்ரா.
“ஏய் லூசே..ஏன்டி போய் காமரா முன்னாடி போஸ் கொடுத்து டீவில வந்த? தப்பு பண்ணா அதை தடயமில்லாம பண்ணணும்..இப்படியா மாட்டுறது?” அவள் கலாய்க்க
“அது ஒரு துன்பியல் சம்பவம் மறுபடி ஞாபகப்படுத்தாதே” என்று மறுபடி முகம் சிவந்தாள் மைதிலி
ஹா ஹா போய்த்தொலை!!!
இருவருமாக சேர்ந்து மைதிலியின் வீட்டுக்கு போன் செய்து சுமிதான் பாவம் அவளுக்காக திட்டுக்களை வாங்கினாலும் ஒருவழியாக அவளின் காயங்களை பற்றி சொல்லி ப்ளீஸ் பண்ணி பேசி அவளின் அப்பாவிடம் சமாதானம் செய்து வைத்தாள்.
“ஜூனியர்களை பார்க்க தான் போனாள், உங்களிடம் சொன்னால் நீங்கள் அங்கே போவதாக நினைத்துக்கொள்வீர்கள் என்று பயந்து விட்டாள்”
“ஆக்சிடன்ட் ஆனதும் அந்த ஆன்ட்டி ஓடிப்போயிருக்கிறார்கள். இவள் ஹாஸ்டலுக்கு போகிறேன் என்று சொல்லவும் அவர்கள் தங்களுடைய வீட்டுக்கு கூட்டிப்போய் விட்டார்கள்.”
“அவர்களுக்கு விஷயம் தெரியாதாகையால் இவளுக்கு மறுக்க முடியவில்லை.”
“அதன்பிறகு இவள் தனியாக போகக்கூடாதென்று அவன் கூட்டிக்கொண்டு வந்தான்”
இப்படியெல்லாம் சொல்லி கடைசியில் காயங்களைப்பற்றி பேச மிதுவுக்கு இப்போ எப்படியிருக்கு? என்று மணிமாறன் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் மைதிலியின் அம்மா மட்டும் “நீ என்ன சொன்னாலும் சரி. அவ கிட்ட நான் பேசவே மாட்டேன்” என்று உறுதியாகவே சொல்லிவிட்டார்.
அம்மாவின் கோபம் கொஞ்ச நாளைக்கு இருக்கும் என்றாலும் இறுதியாக அவர் காது கொடுத்து கேட்டதும் அப்பாவிடம் பேசி சமாதானமானதுமே உற்சாகத்தை தர தன்னுடைய ரிசர்ச் சூப்பர்வைசரை தேடிக்கொண்டு அன்று மாலையே கிளம்பினாள் மைதிலி.
@@@
அவள் ஹாஸ்டலில் இருந்து வீட்டினரோடு ஓரளவுக்கு சமாதானம் ஆன அதே நாள் அதே நேரம் அன்னையின் கோபக்கணைகளின் முன்னே இறுகிய முகத்தோடு நின்றுகொண்டிருந்தான் சிந்தக்க
அப்பா அவனைப்போலவே முகம் இறுக அமர்ந்திருக்க மஞ்சு தான் எகிறிக்கொண்டிருந்தார். செய்தியை பார்த்த நேரத்திலிருந்து கொதித்துப்போய் இருந்தவர் அவன் திரும்பி ஊர் வரும் நேரத்துக்காக காத்துக்கொண்டிருந்தது வேற அவரது டென்ஷனை ஏற்றியிருந்தது வெளிப்படையாக தெரிந்தது.
“வீட்டுல தங்கச்சி இருப்பா. அவ முன்னாடி இதெல்லாம் பேச வேண்டாம்னு தான் இங்கே வந்தோம். என்ன காரியம்டா பண்ணிருக்க நீ? பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்?”
…………………..
“பதில் பேசுடா! என் மகன் கெட்டிக்காரன், அவன் செஞ்சா எல்லாமே சரியாத்தான் இருக்கும் என்று பெருமையா சொல்வேனே..இப்போ என்ன ஆச்சு பாருங்க!!!! கொஞ்சம் காசு பணம் மதிப்பு சேர்ந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணலாமா? பாருங்க வாயை திறக்கறானான்னு!!!” அவர் கணவரிடம் திரும்பி அரற்ற ஆரம்பிக்க அவர் மஞ்சுவின் தோளைப்பற்றினார்.
“டென்சன் ஆகாம அமைதியா கேளு.. நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு..இனிமே டென்சன் ஆகித்தான் என்ன ஆகப்போகுது.. அவன் தப்பு பண்ணறவன் இல்ல..நீ பொறுமையா கேளு!!!”
தந்தையின் நம்பிக்கையே அவனை நெகிழ வைத்தது. ஆனால் அந்த முடிவை எடுக்கும் போது அவனுக்கு உலகமே நினைவிலில்லையே.. அவள் மட்டும் தானே மனதில் இருந்தாள்..
“பாருங்க நாம எவ்வளவு பேசறோம்! அவன் வாயே திறக்க மாட்டேன்றான்! நான் ஹாஸ்பிட்டல்லயே கவனிச்சேங்க..அப்போவே எனக்கு பக்குன்னு தான் இருந்துது. என்னதான் மைதிலியை நமக்கு பிடிச்சாலும் அவ அம்மா அப்பா சம்மதிப்பாங்களா? அது தெரியாம இவன் காலை விடறானே இவன் கூட பேசணும். ஆறுதலா வீட்டுக்கு வரட்டும்னு நான் காத்துட்டிருந்தேன். இப்போ என்னடான்னா இப்படியாகிருச்சு”
“இனிமே நாமளே நினைச்சாலும் அவங்க வீட்டுப்பக்கம் போக முடியுமா? நாங்களும் இதுக்கு உடந்தைன்னு அவங்க யோசிக்க மாட்டாங்களா? ஏன்டா எங்க வீட்ல கொண்டு வந்து அவளை விட்டிருக்கலாமே! எப்படிப்பட்ட பேரை வாங்கித்தந்திருக்க பார்!”
“அவங்களுக்கு தெரியாது..” மௌனத்தை உடைத்தான் அவன்
“என்ன தெரியாது.”
“அவங்க நம்ம வீட்ல தான் இவ்ளோ நாளும் மைதிலி இருந்ததா நினைக்கிறாங்க. நீங்க சொல்லலைன்னா அது அவங்களுக்கு தெரியவரப்போறதில்லை. “
“என்னங்க பேசறான் இவன்? அவ வீட்ல வந்து தங்குன கதையை விடு. ஆக்சிடன்ட்ல அடிபட்டவடா. ஒருவேளை ஏதாவது ஆகியிருந்தா அவ அப்பாம்மாவுக்கு யார் பதில் சொல்றது? இவ்வளவு பெரிய விஷயத்தை அவங்க கூட பகிர்ந்துக்கவே இல்லன்னு அவங்க மனசு எப்படி கஷ்டப்படும்? நினைச்சுப்பார்த்தியா நீ?”
உண்மைதானே..அவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. பேசாமல் தலையை குனிந்து கொண்டிருந்தான் சிந்தக்க
“மைதிலிக்கு போன் பண்ணனும்னு நினைச்சேன். போன் எடுத்தா ஏதும் திட்டி விட்ருவேனோன்னு நான் இன்னும் பண்ணல..அவளை திட்டவும் மனசு வராது! இவனுக்குத்தான் அறிவில்லைன்னா அவளுக்கு எங்க போச்சு அறிவு?”
“அவளுக்கு போன் பண்ணாதீங்கம்மா..
“இப்போ மட்டும் வாய் எங்கிருந்து வருதுப்பா.. ஏன் சரிபாதி தப்பு அவமேலயும் இருக்குல்ல?”
இல்லம்மா. அவளுக்கு எதுவுமே தெரியாது. அவனுக்கு நடந்ததை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் யாருமே அவளை தவறாக நினைப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. கைகளால் மேஜையை இறுகப்பற்றியபடி அவன் நின்று கொண்டிருந்தான்
அவன் உடல்மொழியிலே எதைப்படித்தார்களோ என்னங்க இவன்? என்றபடி தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் கலவரமாக பார்த்துக்கொண்டனர்.
அவர்கள் வேறேதும் கற்பனை செய்யமுன் படபடவென சின்னக்குரலில் நடந்ததை சொல்லி முடிக்க பெற்றவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.
என்னப்பா இது? தற்செயலாக இது வெளியே தெரிந்தால் எவ்வளவு பெரிய அவமானம் ஆகியிருக்கும்? என்று தந்தையும் பேச்சுவராமல் தாயும் பதட்டமாய் அவனையே பார்த்தார்கள். அவர்கள் எளிய மனிதர்கள். இதெல்லாம் அவர்களின் கற்பனைக்கும் எட்டுவதில்லை.
அவர்கள் தன்னை பார்த்த பார்வையை தாங்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்து நடந்ததையெல்லாம் சொல்லி முடித்தபோது அங்கே சற்றுநேரம் மௌனம் தான் நிலவியது.
ஏன்பா அவளை மனசுல வச்சிருக்கேன்னு முன்னாடியே சொல்லிருக்கலாமே.. நாங்க அவங்கப்பாம்மாட்ட எப்படியாவது கேட்டிருப்போமே..நான் வேற என் பங்குக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு தொல்லை பண்ணிட்டேன்.
விடுங்கம்மா..மைதிலி ஒத்துக்காம எப்படிம்மா அவங்க கிட்ட போகமுடியும்?
“அவன் சொல்றதும் சரிதான்.”
“ஆனாலும் நீ பண்ணது தப்புப்பா” மஞ்சுவுக்கு மனம் ஆறுவதாக இல்லை.
“சரி விடு மஞ்சு நடந்தது நடந்து விட்டது. இனிமேல் தப்பு சரி சொல்லி என்னாகப்போகிறது?” என்று மனைவியை அடக்கியவர் “ஒன்று மட்டும் சொல்றேன் மகன். எப்போது நாங்கள் வேணுமோ தயங்காம கூப்பிடு. நாங்க ரெண்டு பேரும் உனக்காக வருவோம். ஆனா இப்போ போனா எடுத்த எடுப்பிலேயே கல்யாணம் பேச வர்றாங்கன்னு கோபம் தான் அதிகமாகும். அதுக்கு முன்னாடி நீ அவங்க அப்பா அம்மாவை நேர்ல பார்த்து உன் பக்கத்தை புரியவைக்கறது நல்லதுன்னு படுது.” என்று யோசனையாக சொன்னார் அவன் அப்பா.
“எப்படிங்க இவன் தனியா? இப்போ பண்ண போல ஏடாகூடமா எதையும் பண்ணிடப்போறான்!”
“ஷ் மஞ்சு. அவனுக்கு தெரியும். அவன் பார்த்துப்பான். நீ வா அங்கே சஜினி வகுப்பு முடிஞ்சு வந்திருப்பா”
மகளின் ஞாபகம் வந்ததுமே அவசரமாக எழுந்து கொண்டவர் மதியம் சாப்பிட்டியா என்று அன்னையாக விசாரிக்கவும் தவறவில்லை.
“ஆனாலும் இந்த மைத்திக்கு போன் போட்டு கேக்காம விடமாட்டேன். பூனைக்குட்டி போல பழகிட்டு எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்கா!”
“அவகிட்ட எதையும் கேட்காதீங்கம்மா!”
“பார்த்தீங்களா இவனை! அவளை நான் ஒரு கேள்வியும் கேட்ககூடாதாம்!” என்று சந்தோஷமாக கணவரிடம் சிரித்த மஞ்சு “என்னவோ செய்து கொள்ளுங்கள்!” என்றபடி அப்பாவோடு வெளியேற அவர்களோடு மனம் விட்டு பேசியதில் மனதுக்கு பெரும் ஆசுவாசம் கிடைத்தது போன்ற நிம்மதியுடன் சோபாவிலேயே படுத்துக்கொண்டான் அவன்.
அவள் வீட்டினரோடு பேசினாளா திட்டினார்களா அழுகிறாளா எதுவும் தெரியாமல் பைத்தியம் பிடிப்பது போலிருந்தது. அதைவிட ஐந்து நாட்களும் நிறைந்திருந்த வீடு இன்றைக்கு ஓவென்று வெறிச்சோடிப்போய் கிடப்பதாகப்பட்டது.
‘சே அவசரப்பட்டு தொடர்பு கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டோமோ.’. என்று மனம் அவனை திட்டினாலும் எல்லோரும் தன் காதலிக்கு மரியாதை செய்ய வேண்டுமானால் இதை விட வேறு வழியில்லை அது அவனுடைய கடமையும் அல்லவா? என்ற எண்ணமே அவனை தடுத்தாட்கொண்டது.
சோமரத்னவுக்கு போன் செய்து இன்றிரவில் இருந்து வீட்டுக்கு வந்துவிட சொன்னவனுக்கு லேசாக பசிப்பது போலிருந்தது. மதியம் வாங்கிய உணவுப்பார்சலை ஞாபகமாய் தூக்கிப்போட்டவன் பிரிட்ஜை திறந்து அதில் இருந்த பிட்டை வெளியே எடுத்து மைக்ரோவேவில் வைத்தான்.
அதை தயாரிக்க அவள் பட்ட பாடு ஞாபகம் வந்து உதட்டில் புன்முறுவலை கொடுத்தது. சாப்பிட்டிருப்பாளா?
ஆனால் அவளைப்பற்றியெல்லாம் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை என்றே மனதுக்குப் பட்டது!
இங்கே வந்திருக்கும் போது சும்மா இப்படி சமாளி என்று ஒற்றை வரியில் அவன் முடித்து விட அவளுடைய அம்மா அம்மா நண்பர்கள் போன் செய்த போதெல்லாம் டிசைன் டிசைனாக அவள் அளந்து விட்ட கதைகளை கேட்டு அவனே மலைத்துத்தான் போயிருந்தான். சரியான திருடி அவள். இப்போதைக்கு தன்னை சந்தேகப்பட்டு விட்டீர்கள் என்று அவளுடைய அப்பாவை அழவைத்தாலும் வைத்துக்கொண்டிருப்பாள்.
சிரிப்போடு சிக்கன் கறியையும் சூடாக்கி எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேஜையை நோக்கி போனான். இன்டர்நெட்டை கனெக்ட் செய்து ஐபாடை ஆன் செய்ய மெசேஜ் அவளிடம் இருந்து வந்து குதித்தது.
“நீங்கள் தானே பேசமாட்டேன் என்று சொன்னீர்கள் நான் இல்லையே!” என்று முதல் வரி விளக்கம் கொடுத்துவிட்டு சுமி பிளாட் ஆகிவிட்டதாகவும், அப்பாவிடம் அழுது மன்னிப்பு கேட்டு, சில பல பொய்களை உணர்ச்சிகரமாக சொல்லி அவரை சரியாக்கி விட்டதாகவும், அம்மா மட்டும் பேசமாட்டேன் என்று அடம்பிடிப்பதாகவும் மெசேஜ் செய்தவள் பிறகு சூப்பர் வைசரை போய் பார்த்தது, அவர் சொன்னது எல்லாவற்றையும் மெசேஜ் செய்திருந்தாள்.
பதில் பேசாமல் ஒரு ஸ்மைலி அனுப்பினால் கூட அவளுடன்தொடர்பு கொண்டதாகிவிடுமா என்று ஒருகணம் சிந்தித்தவன் தன்னையே அடக்கிக்கொண்டான். தான் பார்த்தும் ரிப்ளை செய்யாமல் இருப்பதை கண்டு விட்டு மனதுக்குள் எப்படியெல்லாம் திட்டுவாள் என்று தெரியாதா என்ன? சிரிப்போடு சாப்பிட ஆரம்பித்தான் அவன்.
அன்றில் இருந்து இந்த விஷயத்தில் இரண்டு நாளாக என்ன செய்யலாம் என்பது தான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
ஹார்ட் பேஷன்டிடம் போய் அதிரடியை அரங்கேற்றுவது முட்டாள்தனம். திடீரென்று போய் பெண்ணை கொடுங்கள் என்று நிற்கவும் முடியாது. பேசாமல் கோர்ட்டில் போய் அமர்ந்து விடலாமா என்று கூட சிந்தித்தான் அவன்.
மைதிலி சொன்னதெல்லாம் வைத்து பார்த்தபோது அப்பா கொஞ்சம் மென்மையானவ,ர் அம்மா தான் கொஞ்சம் பிடிவாதி என்று புரிந்தது. ஆனால் இருவரையும் தான் எப்படி அணுகுவது?
அவர்கள் அவன் பேசுதை இடையில் முறித்துக்கொண்டு போகாமல் காது கொடுத்து கேட்கவேண்டும். அதே நேரம் அவன் எப்படிப்பட்டவன் என்று புரிந்து கொண்டு மனமிளகவும் வேண்டும். முக்கியமான விடயம் இதெல்லாம் வெகு இயல்பாக நடக்க வேண்டும்!
எப்படி?
கடைசியாக அந்த சிந்தனை அவன் மனதில் உதித்தபோது அவர்கள் பிரிந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.
உடனடியாகவே மொபைலை எடுத்து ராஜநாயகம் என்றிருந்த இலக்கத்தை அழுத்தினான் அவன்
மறுமுனையில் உற்சாகமாக ஹலோ சொன்னது ஒரு முதிர்ந்த ஆண்குரல்
“ராஜா சார்.. ஸ்கூல் ஆண்டுவிழா எப்போ வருது?” அவன் தான் கேட்டான்
“அடுத்த மாசம் பத்தாம் திகதி. நான் கூட சீப் கெஸ்ட்டாக கூப்பிடுவதற்கு உனக்கு தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் சொல் என்று கேட்டிருந்தேனே..மறந்துவிட்டாயா?” என்று பதில் கேள்வி கேட்டது மறுமுனை
“மறக்கவில்லை ராஜா சார். ஒரு ஐடியா மனதில் வந்தது. நீங்கள் யாரையும் முடிவு செய்து விட்டீர்களா? என்று கேட்பதற்காக தான் போன் செய்தேன்.” மெல்ல மெல்ல வார்த்தைகளை கோர்த்தான் சிந்ததக்க.
“முடிவு செய்திருந்தால் உன்னிடம் சொல்லியிருப்பேன் தானே. உன் ஐடியாவை சொல்” என்று ஊக்கினார் ராஜநாயகம்
“இல்லை..இப்போதெல்லாம் அடிக்கடி அந்த பிரதேசத்தில் குற்ற செயல்கள், இளைஞர்கள் வன்முறையில் இறங்குவது போன்ற செய்திகளையும் தானே கேட்கிறோம். ஆண்டுவிழாவுக்கு ஒரு நீதிபதியை அழைத்தால் என்ன? அவரால் இளைய சமுதாயத்துக்கு சரியான அறிவுரை வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.”
“நல்ல ஐடியா தான் நீ யாரையோ மனதில் வைத்திருக்கிறாய் போலத்தெரிகிறதே! சொல் பார்க்கலாம்.”
“லயன்ஸ் கிளப்பில் எல்லாம் ஆக்டிவ்வாக இருப்பாரே, ஜட்ஜ் மணிமாறன்? அவரை கேட்டுப்பார்க்கலாம் என்று நினைத்தேன்.”
“நல்ல ஐடியா தான்,, மணிமாறனை நித்யராஜூக்கு நன்றாகவே தெரியும். உனக்கு பர்சனலாக அவரைத்தெரியுமா?”
“இல்லை சார். நான் அவரைப்பற்றி நல்லவிதமாக கேள்விப்பட்டேன் அவ்வளவு தான்”
“சரி அப்படியாயின் நான் நித்யராஜ் மூலமாக பேசிப்பார்க்கிறேன். போன வாரம் கூட ஏதோ ஸ்கூலில் அவர் பேசியதாக செய்தி வந்தது தான்..ஆனால் இங்கே இவ்வளவு தூரம் வர சம்மதிப்பாரா தெரியவில்லை பேசிப்பார்ப்போம்.”
ராஜநாயகம் கட் செய்துவிட சின்ன சிரிப்பும் பதட்டமுமாய் கட்டிலில் விழுந்தான் சிந்தக்க.
இத்தனை நாட்கள் எங்களை டிசைன் டிசைனாக ஆட்டிப்படைத்த விதியே..இந்த ஒருதடவை என் திட்டத்துக்கு நீ கட்டுப் படேன் !!!!
WLM அத்தியாயம் 20
“என்னதான் திட்டம் போட்டாலும் எல்லாமே அந்த திட்டப்படியே தான் நடந்தாலும் முடிவுரையை மட்டும் விதி தலைகீழாக எழுத்து விடுவது என் விஷயத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே. இந்த தடவையாவது நான் நினைத்தது சரியாக நடக்குமா? நானும் அவளும் ஒன்றாக சேருவோமா? எனக்கு அதைப்பற்றி சிந்திக்கவே பயமாக இருந்தது.”
கிளிநொச்சி சென்ட் மேரிஸ் கல்லூரியின் இரண்டாம் மாடியில் நின்றுகொண்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் சிந்தக்க. சுற்றிலும் காடு தான் கண்ணுக்கு தெரிந்தது. சும்மாவே வன்னிப்பெருநிலப்பரப்பு காடுகளை அதிகம் கொண்டிருக்கும். இதில் உடைந்து கிடந்த வீடுகளை சுற்றி மரங்கள் வேறு மூடி வளர்ந்திருந்ததில் எது உண்மைக்காடு என்றே அங்கே வித்யாசம் தெரிவதில்லையே . அந்த பாடசாலையும் சிதைவுகளை மீறிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் எழுந்து கொண்டிருந்தது.
அது ஒன்றும் பெரிய பாடசாலை இல்லைத்தான். மொத்தமே மூன்று இரண்டு மாடிக்கட்டிடங்கள் தான் இருக்கும். ஆறாம் ஆண்டில் இருந்து ஓலெவல் வரை மொத்தமே 400 மாணவர்களுக்கு உள்ளே தான் இருப்பார்கள். ஆனாலும் அவனுக்கு அப்போது இது பெரிய விஷயமாகத்தான் இருந்தது.
இது அவன் உள்ளே வந்ததன் பிறகு நடக்கும் இரண்டாவது ஆண்டுவிழா! தோரணங்கள் கட்டி கலர் பேப்பர்களால் மாணவர்கள் தாங்களே செய்திருந்த சிறு சிறு அலங்காரங்கள் என பாடசாலை விழாக்கோலம் பூண்டிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பான்ட் குழுவுக்கு உரிய இசைக்கருவிகள் தருவிக்கப்பட்டு அவர்கள் பயில ஆரம்பித்திருந்தார்கள். தங்கள் பாடசாலையின் வர்ணமான கருஞ்சிவப்பும் வெள்ளையிலும் ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து வாசலோரமாக பிரதம விருந்தினர்களை மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“சேர்.. உங்களை கீழே வரட்டாம். எல்லாரும் வந்திட்டினமாம்.” எட்டாம் வகுப்பு பையனொருவன் அவனிடம் சொல்லிவிட்டு சிட்டாய் மறைந்தான். அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மணிமாறனின் கார் பாடசாலைப்பெயர் இருந்த கம்பி வளைவைத்தாண்டிக்கொண்டு பாடசாலைக்குள் நுழைந்தது. அதிபர் வேகவேகமாய் காரை நோக்கிப்போக கணவனும் மனைவியும் அதற்குள் இறங்கி விட்டார்கள். இது தான் தன்னுடைய மாமனார் மாமியாரை அவன் முதல் முதலாக நேரில் பார்க்கும் தருணம். இருவருமே அசைவுகள் முதற்கொண்டு அப்படியே மைதிலியை நினைவு படுத்த வந்த சிரிப்பை அடக்கி சாதாரணமாய் முகத்தை வைத்துக்கொள்ள போராடியபடியே கீழிறங்கி வந்தான் சிந்தக்க!
அவன் வாசலை நெருங்கியபோது அதிபர் கணவன் மனைவி இருவருக்கும் மாலை அணிவித்துக்கொண்டிருந்தார். இவனைக்கண்டதும் ராஜநாயகம் எங்கே போய்விட்டாய் என்று கடிந்தபடி தோளில் கைபோட்டு அங்கே அழைத்து சென்றார். பிறகு வேறும் மூன்று மாணவிகள் பூமாலை கொண்டு வந்து ஒன்றை அதிபருக்கும் மற்றைய இரண்டையும் முறையே ராஜநாயகம் மற்றும் சிந்தக்கவுக்கு அணிவித்தனர். அதன் பின்னர் பான்ட் வாத்தியத்துடன் அவர்கள் ஆண்டு விழா மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
“நன்றி சார். கேட்டதும் உடனே ஒத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வந்ததற்கு!” என்று அதிபர் அவனுடைய மாமனாருக்கு சொன்னதும் அவர் உடனே “இதில் என்ன இருக்கிறது? இந்த மாணவர்கள் தான் உண்மையில் தேவையுள்ளவர்கள். நாங்களும் நம்மால் முடிந்ததை செய்ய கடமைப்பட்டவர்கள்” என்றார்,
முதலில் இருவரும் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அதன் பின்னர் ஊர்வலம் மண்டப வாயிலுக்கு வரும் போது தான் தன் மாமியார் மாமனார் காதை கடிப்பதை கவனித்தான். அதற்கு அவர் இருக்காது என்று என்னவோ சொல்லி மறுக்க மாமியார் மட்டும் மைதிலியை போலவே கடைக்கண்ணால் அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே நடக்க அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அப்போது தான் பரபரப்பில் அறிமுகத்தை மறந்த அதிபர் அவர்களின் பக்கம் திரும்பினார்.
“மணிமாறன் சார். இவர் தான் ராஜநாயகம் இந்த பிரதேச மாணவர்களின் கல்வி விருத்தியை நோக்கமாக கொண்டு ஒரு NGO நடாத்தி வருகிறார்” என்று அந்த பெயரை சொல்ல மணிமாறனும் அடையாளம் கண்டு கொண்டு அந்த நிறுவனம் பற்றி அவரை விசாரித்து வாழ்த்து சொன்னார்.
அதன் பிறகு இவனது நிறுவனத்தின் பெயர் சொல்லி அவன் முழுப்பெயரை அதிபர் சொல்ல கணவன், மனைவி இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து மீண்டன. மணிமாறனின் கண்களில் சின்னதாய் ஒரு கோபம் குடியேற அவரது மனைவியோ அவன் முகத்தில் எதையோ தேடுவது போல பார்த்துக்கொண்டிருந்தார்.உணர்ச்சிகளை காண்பிக்காமல் மெல்லிய புன்னகையோடு அவர்களை ஏறிட்டான் இவன்.
“போரின் பின் இந்த ஸ்கூலை கிட்டத்தட்ட கைவிட்டே விட்டார்கள். ஆட்களும் இல்லை. நிதியும் இல்லை. இதுவரை நடாத்தியவர்கள் எங்கே என்றும் தெரியவில்லை. பிறகுதான் ஆபத்பாந்தவராய் ராஜ நாயகம் ஐயா உள்ளே வந்தார். பிறகு அவரே பல தொடர்புகளை பெற்று நிதி திரட்டி கல்வி அமைச்சு மூலமாக பிற வசதிகள் பெற்று ஒரு வழியாக இதை இயங்க வைத்தார். அப்படி வந்தவர்தான் சிந்தக்க..முதல் வருடம் பலருடன் இணைந்து நிதியளித்தாலும், இப்போது முழுக்க முழுக்க இந்த ஸ்கூலை அவருடைய கம்பனியே தான் பொறுப்பெடுத்திருக்கிறது.”
“நாங்கள் மட்டும் அல்ல எங்களது இரண்டு சகோதர நிறுவனங்களும் சேர்ந்து தெற்கில் பலரிடம் நிதி திரட்டித்தான் தான் இதை செய்கிறோம்” என்று பணிவாக சொன்னவன் “உங்களைப்பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று விட்டு அவன் தமிழில் பேசுவதை சுத்தமாக எதிர்பாராதவராய் விழிவிரித்த மைதிலியின் அம்மாவிடம் மரியாதை நிமித்தமாக கை குவித்தான்.
“எங்களையெல்லாம் விட அட்சர சுத்தமாய் தமிழ் பேசுகிறான் பார்த்தீர்களா?” என்று சிரித்த ராஜநாயகம் அவனின் தோள்களில் செல்லமாய் தட்ட அவர்கள் மண்டபத்துக்குள் நுழைந்திருந்தார்கள்.
மாணவர்கள் எழுந்து நிற்க அவர்கள் நடுவில் நுழைந்தவர்கள் மேடையில் ஏற , எவ்வளவு வற்புறுத்தியும் மேடையில் ஏறாமல் வலப்பக்கம் ஆசிரியர்களுக்கு போடப்பட்டிருந்த கதிரையின் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டான் சிந்தக்க.
முதலில் தலைமை உரை, அறிமுக உரையெல்லாம் முடிந்ததும் விருந்தினர்களை மீண்டும் கீழே அனுப்பி விட்டு மாணவர்களின் கலைநிகழ்வுகள் ஆரம்பமாயின.
அவனைக்கண்ட கோபம் இருந்தாலும் மாணவர்களின் உற்சாகத்தோடு சேர்ந்து கொண்டு நிகழ்வுகளை ரசித்துக்கொண்டிருந்த மாமனாரை அவனுக்கு ரொம்பவும் பிடித்தது. ஆனால் அவருக்கு அவனை பிடிக்க வேண்டுமே..
மறுபடி பிரதம விருந்தினர் உரையின் போது மேடை ஏறியவர் அழகாக கதைகள் போலவே மாணவர்களுக்கு சிரிக்க சிரிக்க உரையாற்றியது எல்லோரையும் ரசிக்க வைத்தது. சாம்பலில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் போல அந்த மாவட்டம் தழைக்க வேண்டும். சகல பரிமாணங்களிலும் வளர வேண்டும் என்று அவர் சொன்னபோது கைதட்டல்கள் பறந்தன. இனிமேல் அந்த பாடசாலையின் சாதாரண தர பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான போட்டிப்பரீட்சைக்கான முன்னோடி வினாத்தாள்களை பதிப்பித்து வழங்கும் பொறுப்பு என்னுடையது என்று மேடையிலேயே அறிவித்தார் மணிமாறன்.
அவரின் செயற்பாடுகள், குண இயல்புகளை பார்த்ததை வைத்து தங்களை நிச்சயமாக அவர் புரிந்து கொள்வார் என்று அவனுக்குள் பெரு நம்பிக்கையே வளர்ந்து விட்டிருந்தது.
மதிய உணவுக்கு வன்னியின் காரசாரமான உணவு வகைகள் விருந்தினர்களுக்காக பெற்றோரினால் சமைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவராக தமக்கு வேண்டியவற்றை பரிமாறிக்கொண்டு போய் அமர, திட்டமிட்டு காத்திருந்து தானே போய் மணிமாறனின் அருகில் அமர்ந்து கொண்டான் சிந்தக்க.
“என்ன நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறாய்? இப்படியெல்லாம் நீ செய்தால் நான் மயங்கி என் ஒரே பெண்ணை தூக்கி தந்துவிடுவேன் என்று நினைக்கிறாயா?” அவர் அடிக்குரலில் கேட்டதை அவன் சட்டென்று எதிர்பார்க்கவில்லை.
மெல்ல சிரித்தான் அவன் “ஆமாம் அங்கிள் இரண்டு வருஷம் முன்னே நான் இதை செய்ய ஆரம்பிக்கும் போது உங்கள் மகள் எனக்கு நீ வேண்டாம் என்று என்னை விட்டு போயிருந்தாள். இன்றைக்கு வரைக்கும் அவளுக்கு இந்த ஸ்கூல் விபரமெல்லாம் தெரியாது. அவளிடமே இதை காண்பிக்காதவன் உங்களிடம் எதற்காக நாடகமாடவேண்டும்? எனக்கு உங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு” என்று பணிவாக ஆனால் அழுத்தம் திருத்தமாக சொன்னான் அவன்.
“அதை விடு. அவளை எதற்காக உங்கள் வீட்டில் கொண்டு வைத்திருந்தாய்?நான் ஒரு கம்ப்ளையின்ட் கொடுத்திருந்தால் மொத்தக்குடும்பமும் உள்ளே போயிருப்பீர்கள். தெரியுமா?”
“அதற்கு முன்னே இத்தனை மைல் பயணம் செய்து எங்கள் வீட்டுக்கு மைத்தி வந்தபோது உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தாளா? என்று மட்டும் யோசித்து பாருங்கள்.” அவன் ஆணித்தரமாய் கேட்டான்
“டேய்!!! அவள் குழந்தைடா.. நீ அவள் மனதை கலைத்து விட்டாய்!” என்று பொருமியவர் அவர் பின்னே வந்து எதையோ கேட்ட அதிபருக்கு திடுக்கிட்டு திரும்பி பதில் சொல்லி சமாளித்தார்.
அவர்கள் மீண்டும் தனிமையில் விடப்பட்டபோது சிந்தக்க அவரை நிமிர்ந்து பார்த்தான்.
“ஏன் அங்கிள் என்னை வேண்டாமென்கிறீர்கள்? நான் ஒரு சிங்களவன் என்பதாலா? ஒரு நீதிபதி நீங்களே இப்படி பிரிவினை பேசலாமா?”
“நான் ஒன்றும் அதற்காகவெல்லாம் சொல்லவில்லை. நீ யார்? உன்னை எப்படி நம்புவது? யாரை நம்பி என் குழந்தையை நான் அவ்வளவு தூரம் அனுப்புவேன். அவள் அங்கே தனித்துப்போய் விடமாட்டாளா?” அவர் உண்மையிலேயே ஏக்கமாக தான் கேட்டார்.
“அங்கிள் அவள் என் உயிர். உங்களைப்போலவே நான் அவளை கவனமாக பார்த்துக்கொள்வேன். என் அப்பா அம்மா எல்லாருக்குமே அவள் என்றால் உயிர் தான். எங்களை நம்பி அனுப்புங்கள். நீங்கள் மாப்பிள்ளை பார்த்தால் கூட ஒரு நம்பிக்கையில் தானே அவளை திருமணம் செய்து அனுப்புவீர்கள். என்னை சும்மாவெல்லாம் நம்பி அனுப்பவேண்டாம். என்னையும் ஆட்கள் வைத்து விசாரியுங்கள் எங்கள் வீட்டை வந்து பாருங்கள். நான் எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொள்ளுங்கள் அதன் பிறகு முடிவெடுங்கள்.”
…..
தேவைக்கதிகமாக சம்பாதிக்கிறேன்.அவளை மகாராணியாக என்னால் வைத்துக்கொள்ள முடியும். ஒரு வேளை அது தான் உங்கள் கவலை என்றால்
……
நீங்கள் ஒருவேளை பயப்படலாம். அவளின் அடையாளங்களை நான் அழித்து விடுவேனென . அந்த பயமே உங்களுக்கு வேண்டாம். அவளை அவளாகவே வாழ வைப்பது என் பொறுப்பு.
இருந்தாலும்….
இதோ இந்த ஊருக்கு நான் ஏன் செய்யவேண்டும் என்று தோன்றியது? என் மனைவியின் பக்கம் இனிமேல் என்னதும் தானே.. அவளை எப்போதோ மனதில் அப்படி நினைக்க ஆரம்பித்து விட்டேன். அவளுக்கு யுத்தம் இந்த பிரதேசத்தை சிதைத்து விட்டதென்று பெரும் ஆதங்கம் உண்டு. இந்த ஊரின் மீள் கட்டுமானத்தில் அவளால் பங்களிக்க முடிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாள் என்று தோன்றியது. என்னுடையதெல்லாம் அவளுடையது தானே.. அவளுக்காகத்தான் முதல் தடவை நான் இங்கே வந்தேன். அதன் பிறகு தானாகவே இந்த பாடசாலை என் உறவாக மாறிவிட்டது. இங்கே பாருங்கள்…இதைஎல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக்காட்டவில்லை. என் வாழ்க்கை எப்போதோ அவளை மையமாக வைத்து இயங்க ஆரம்பித்து விட்டது என்று புரிய வைக்கத்தான் முயல்கிறேன்.
அன்றைக்கு கூட உங்கள் சம்மதத்தின் பின் தான் இனிமேல் உன்னை தொடர்பு கொள்வேன் என்று தான் மைதிலியிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டுத்தான் வந்தேன். இன்றை வரைக்கும் நான் அதை மீற வில்லை. நீங்கள் சம்மதிக்காவிட்டால் கூட நான் சொன்ன வாக்கை காப்பாற்றித்தான் ஆகவேண்டும். மைதிலி கூட உங்கள் மனதை காயப்படுத்தி என்னோடு வரமாட்டாள். ஆனால் காலம் முழுவதும் நாங்கள் இப்படியே தான் காத்திருப்போம். அது மட்டும் நிச்சயம்.
“என்ன மிரட்டுகிறாயா?”
மிரட்டல் எல்லாம் இல்லை ஜஸ்டிஸ்.எங்கள் நிலைமையை சொன்னேன்.
“நீ ஏன் பேசமாட்டாய்? இப்போது உன் வயது பேசுகிறது. உனக்கு வயதாகி ஒரு குழந்தை இருந்தால் தான் உனக்கு என் மனமும் வலியும் புரியும்.”
“உங்கள் மகளை கைப்பிடிக்காவிட்டால் அது நடக்க வாய்ப்பே இல்லை ஜஸ்டிஸ். அப்படி எனக்கு வலிக்க வைக்கவாவது சம்மதியுங்கள்” என்று பளிச்சென புன்னகைத்தவன் கடைசியாக கேட்கிறேன் எங்களுக்காக கொஞ்சம் யோசியுங்கள்” என்று முடித்தான்.
அவர் ஏதாவது சாதகமாக சொல்வாரா என்று சற்று நேரம் அவரையே பார்த்திருந்தவன் அவர் அவனை பாராமல் பிளேட்டை அளைந்து கொண்டிருக்க ஏமாற்றத்துடன் நிமிர்ந்தான்
பிறகு “ வர்றேன் ஆன்ட்டி” என்று வெளுத்த முகத்துடன் அவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டிருந்த சீதாவிடம் கைகுவித்து விட்டு விடு விடுவென்று அவ்விடத்தில் இருந்து அகன்று வந்துவிட்டான் சிந்தக.
எப்படியோ சமாதானம் செய்து விடலாம் என்று ஆசையோடு வந்தவனுக்கு அவர் பிடிகொடுக்காமலே பேசியது பலத்த ஏமாற்றம் தான்.
சில நேரங்களில் அவரது முகபாவம் அவன் பேச்சை மனதில் நல்ல விதமாக பரீட்சிக்கிறார் என்று தோன்றவைத்தது. ஆனால் அவர் பதிலோ நெகட்டிவ்வாகவே வந்து கொண்டிருந்ததில் அவன் சோர்ந்து போனான்.
மனதில் இப்படித்தான் என்று முடிவு கட்டிக்கொண்டால் அதன் பின் என்னதான் நாம் தலைகீழாக நின்றாலும் அந்த அபிப்ராயத்தை மாற்ற முடிவது இல்லை. நம்முடைய விஷயத்திலும் இவர் அப்படியேதும் முடிவு வைத்திருப்பாரோ..நமக்கும் அப்படித்தான் ஆகிவிடுமோ என்று பயம் அவனை கவ்விக்கொண்டது.
ராஜ நாயகம் கணவன் மனைவி இருவரையும் அழைத்துக்கொண்டு பாடசாலையை சுற்றி காண்பிக்க செல்வது தூரத்தே தெரிந்தது, அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் அதிபரிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றான் சிந்தக.
இவர் இப்படியே மறுப்பாக பெசிக்கொண்டிருந்தால் அடுத்து என்ன தான் செய்வது? இவரை எப்படித்தான் அணுகுவது? நம்பிக்கையும் சந்தோஷமுமாக கிளம்பி வந்தவன் வேதனை சூழ ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தான்.
WLM அத்தியாயம் 18
இந்த தடவை நம்மிடைய எந்த ஒளிவு மறைவும் இல்லாததாலும் இருவரிடமுமே எதிர்காலம் குறித்த அசைக்க முடியாத நம்பிக்கை ஒரு வளர்ந்திருந்ததாலும் பிரிவு பெரிதாக தெரியவில்லை. அதை விட என்னவன் நல்லவன் என்ற கர்வமே என் மனம் முழுதும் நிறைந்து கிடந்தது. இன்னும் நான்கு மாதங்களை ஒருவழியாய் ஓட்டி பட்டப்படிப்பை முடித்து விட்டு அவனோடு வாழும் கனவுகளை நான் கண்களில் பூட்டிக்கொண்டிருக்க விதி தானும் தன் போக்கில் எங்களுக்காய் ஒரு வேலை செய்து வைத்துக்கொண்டு காத்திருந்தது.
மைத்தி!!! சீக்கிரம் வா…இப்போ புறப்பட்டால் தான் பேராதெனிய போய் சேர முடியும்! ஹாலுக்குள் இருந்து சிந்தகவின் குரல் கேட்டது.
வரேன்..கொஞ்சம் இருங்களேன்.. என்று குரல் கொடுத்தபடி அவன் வாங்கிக்கொடுத்த உடைகளை எல்லாம் ஒரு சின்ன பக்பாக் ஒன்றில் அடைத்து வைத்திருந்தவள் இதர சாமான்கள் எல்லாவற்றையும் அதற்குள் அடைத்துவிட்டு அறையை ஒருகணம் நோட்டமிட்டாள் மைதிலி.
பூஜையறைக்குள் இருந்த பான்டசி சிவன் இப்போது அவளது அறையில் மாட்டப்பட்டிருந்தார். சீ யூ சூன் சிவா என்று அவருக்கு விடைகொடுத்தவள் பக் பாக்கினை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
அவளது கையில் ப்ரோட்டிநெக்ஸ் மக்கினை திணித்தவன் சீக்கிரம் குடித்து முடி என்று விட்டு தான் சூப்பர்மார்க்கெட்டில் வாங்கி வந்த பொருட்களை இரண்டு பைகளில் போட்டுவிட்டு இவளுடைய பக்பாக்கையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் வண்டியில் வைத்து விட்டு வந்தான்.
போன் எடுத்தாயா? ஷுவர் தானே சார்ஜர் ஹாஸ்டலில் இருக்கிறதென்று? உன்னுடைய மருந்துகளை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு இன்றைக்கு வாங்கிய சாமான்களுடன் வைத்திருக்கிறேன். நீ கொண்டு வந்த ஹான்ட் பாக்கையும் வைத்தாயிற்று. வேறு என்ன? வேறு என்ன? என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஹாலில் நடைபழகியவனை புன்னகையுடன் பார்த்தாள் மைதிலி. பிறகு அவன் அடிக்கடி செய்வதைப்போல அவனுடைய வலக்கையை பிடித்து அதை தன் உதடுகளில் ஒற்றினாள்.
மைத்தி….
சிரிப்பு முகம் மாறாமலே அவனை ஏறிட்டவள் “என்னை அனுப்பி வைப்பதில் ஐயாவுக்கு அவ்வளவு சந்தோஷம்! ஓடி ஓடி எல்லா வேலைகளும் செய்கிறார்!!!” என்று சீண்டினாள்.
உனக்கென்ன தெரியும் என்னைப்பற்றி! அவளை தன் புறமாய் பிடித்திழுத்தவன் அவளது நெற்றி முடியை ஒதுக்கிவிட்டான். எப்போதுமே அனிச்சை செயலாய் இதை அவன் செய்வதை மைதிலி கவனித்திருக்கிறாள். அவனை ஒட்டி புஜங்களில் சாய்ந்து நின்றாள் அவள். சிறிது நேரம் மௌனமாய் அவளை நெஞ்சில் சாய்த்து வைத்திருந்தவன் பிறகு நெற்றியில் முத்தமிட்டு அவள் கவனத்தை கலைத்தான்..
நேரமாகிறது கண்ணம்மா.. போகலாமா?
ஹ்ம்ம் இன்னொரு தடவை கண்ணம்மா சொன்னால் தான் வருவேன்! அவள் செல்லமாய் அடம்பிடிக்க
உன்னை!!! இவ்வளவு நாளும் கூட இருக்கும் போது வாய்க்குள் முட்டையை வைத்துக்கொண்டு அறைக்குள் ஒளித்திருந்து விட்டு கிளம்பும் நேரத்தில் எல்லாவற்றையும் செய்! என்று சலித்துக்கொண்டவன் “இப்போது வரப்போகிறாயா? இல்லை இப்படியே தூக்கிக்கொண்டு போகவா?” என்று மிரட்டினான்.
அவன் சொன்னதை செய்யக்கூடியவன் என்ற பயத்தில் “ஒண்ணும் தேவையில்லை!!” என்று அறிவித்து விட்டு வேகமாய் அவள் முன்னே ஓட அவனுடைய சிரிப்புச்சத்தம் அவளை இனிமையாய் தொடர்ந்தது.
எட்டுமணிக்கெல்லாம் வழியில் ஒரு பெரிய உணவகத்தில் காலை உணவை முடித்துக்கொண்டவர்கள் மீண்டும் பேராதெனிய நோக்கி பயணத்தினை ஆரம்பித்தனர்.
ஒன்பது மணி வரை சளசளத்துக்கொண்டே வந்த மைதிலி பிறகு வண்டி கொஞ்சம் கொஞ்சமாய் மலைப்பிரதேசத்தை நோக்கி மேலேற ஆரம்பிக்க தன்னையறியாமலே தூங்கிப்போனாள்
அவன் இடையில் வண்டியை நிறுத்தியதோ இருவருக்கும் மதிய உணவு பார்சல் வாங்கியதோ அறியாத அளவுக்கு தூங்கிக்கொண்டே வந்தவள் பதினோரு மணி அளவில் தான் கண்விழித்தாள. கண்ணுக்கு முன்னே பெரும் மலைகள் தான் தெரிந்தன. அதற்குள் பக்கத்தில் வந்துவிட்டோமா என்று கண்ணைக்கசக்கியபடி பார்த்தால், சிந்தக வண்டியை நிறுத்தி ஒருவரிடம் என்னமோ விசாரித்துக்கொண்டிருந்தான்.
அவர்களுக்கு முன்னேயும் ஒரு பத்து வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.
“கல்லை இப்போதைக்கு அகற்ற மாட்டார்கள் தம்பி. கிரேன் எல்லாம் வந்து ரொம்ப நேரமெடுக்கும். பேசாமல் சுற்றி கடுகண்ணாவ வழியாக போய் விடுங்கள். இன்னொரு மணி நேரம் அதிகமாக எடுக்கும். ஆனால் இங்கே காத்திருப்பதை விட பரவாயில்லை.” அந்த மனிதர் சொல்லி விட்டு சென்றார்
எட்டிப்பார்த்தாலும் எதுவும் தெரியவில்லை..மேடும் பள்ளமுமாக பாம்புகளின் வளைவு போல இருக்கும் மலைப்பாதைகளில் அருகில் போனால் தவிர எதையும் பார்க்க முடியாது
என்னாச்சு?
எழுந்து விட்டாயா? உலகமே தெரியாமல் என்னடி அவ்வளவு தூக்கம்…எனக்கு ரொம்பவே போரடித்து விட்டது!
ஹாஹா..ஆமாம். ஏன் முன்னால் வண்டியெல்லாம் நிற்கிறது? என்ன நடந்தது? என்று கேட்டாள் மைதிலி.
இரவு இந்தப்பக்கம் நல்ல மழையாம்..இரண்டு பாறைகள் உருண்டு ரோட்டில் இருக்கின்றன.
பெருசா?
ஆமாம். கொஞ்சம் பெருசுதானாம்
எதற்கும் எந்த சேதமும் இல்லையே?
இல்லை..நல்லவேளையாக எதுவும் ஆகவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.
இந்த மலைபிரதேசத்தில் இது தான் பெரும் ஆபத்து. அப்பப்போ இப்படி மண் சரிவு ஏற்பட்டு பேரழிவு ஏற்படுத்துவதும் பிரமாண்டமான பாறைகள் பாதையில் உருண்டு விழுவதும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கும்.
நாம் திருப்புவோம் மைதிலி. கடுக்கண்ணாவ வழியாக போகலாம். இங்கே காத்திருப்பது வேஸ்ட்
எதிரே மக்கள் வண்டிகளில் இருந்து இறங்கி அந்த பாறைகளை பார்க்க போய்க்கொண்டு இருந்தார்கள்,
நாங்களும் போய் பார்த்துவிட்டு திரும்பி போவோமே…
லூசு..இன்னும் சில மீட்டர் தூரத்தில் தான் என்னுடைய பட்டர்ப்ரூட் பிளான்டேஷன் இருக்கிறது. என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள். வேண்டாம்,
மைதிலியின் நாவில் அப்போது சனிதான் பிடித்திருக்க வேண்டும்.
உருண்டு விழுந்த பாறைகளை பார்க்கும் ஆவலில் “அதனாலென்ன? யாருக்கும் என்னை தெரியாது தானே..ப்ளீஸ்..போவோம்” என்று பிடிவாதமாய் கெஞ்சி கெஞ்சி அவனை சம்மதிக்க வைத்து பாறைகளை பார்க்க அழைத்துப்போனாள் மைதிலி.
வழக்கமாக பாதையில் விழும் பாறைகளை போல அல்லாமல் பிரமாண்டமாக ஒன்றன் மேல் ஒன்றாக முழுப்பாதையிலும் ஒரு பைக் போகும் இடைவெளியை மட்டும் விட்டு விட்டு அடைத்துக்கொண்டிருந்த பாறைகளை பார்க்க பயம் தான் வந்தது.
அந்த இடத்தில் ஒரு காரோ வானோ இருந்திருந்தால் நிச்சயம் அப்பளமாகி விட்டிருக்கும்.
சிந்தக சொன்னதுபோலவே கூட்டமாய் கூடியிருந்த மக்களில் சிலர் அவனோடு கைகுலுக்கிப்பேச லோக்கல் டிவி நிரூபர் ஒருவர்எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை ஓடிவந்து சிந்தகவிடம் மைக்கை நீட்டினார். “ பார்ரா அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா நீ?” என்று சிரிப்புடன் ரகசியமாய் அவனுக்கு சிரிப்பு மூட்ட முயன்ற மைதிலி அவன் ஏன் இப்படி கொலைவெறியாய் முறைக்கிறான் என்று புரியாமல் புன்னகையை குறைத்துக்கொண்டு அவனை ஏறிட்டாள்
அதற்குள் மைக்கை நீட்டியவர் ஏதோ கேள்வி கேட்க அவனும் அதிகாரிகளின் கவனக்குறைவு பற்றி எதையோ சொல்லிவிட்டு வேக வேகமாய் அவ்விடம் விட்டகன்றான். பின்னாலேயே ஓடினாள் மைதிலி.
“அறிவிருக்கா? தள்ளிப்போய் நில் என்று எவ்வளவு தரம் சைகை காட்டினேன்..புரிந்து கொண்டாயா நீ?” அவன் எரிந்து விழ முணுக்கென கண்ணில் நீர் கோர்த்து விட்டது அவளுக்கு..நான் அவனுக்கு அவமானமா? எண்ணியதையே கேட்டும் விட்டாள் அவள்..
“லூசு! உனக்கு புரியவே இல்லையா? அது டிவி சானல்..என் பக்கத்துல போஸ் கொடுத்துட்டு நிக்கிறியே..எத்தனை பேர் நியூஸ் பார்ப்பாங்க! நம்ம குட்டு வெளிய வந்துறாதா?”
அப்போது தான் அது உறைக்க வாயை பிளந்தவள் பிறகு லோக்கல் டிவி சானல் எல்லாம் தெரிஞ்சவங்க பார்க்க மாட்டாங்க என்று நடுக்கத்துடன் தன்னை சமாதானம் செய்தாள்.
“லோக்கல் டிவி சானலா ? நியூஸ் பர்ஸ்ட் லோகோவை பார்க்கலையா நீ?”
ஐயோ நியூஸ் பர்ஸ்டா என்று அலறிப்போனவள் யாருமே மதியம் நியூஸ் பார்க்க கூடாது என்று மனதுக்குள் பதட்டமாய் வேண்டுதல் வைக்க ஆரம்பித்தாள். பயத்தில் கிட்டத்தட்ட கண்ணீரே வந்து விட்டது அவளுக்கு.
அப்போதே அவன் திருப்பிக்கொண்டு போகலாம் என்று கேட்டதற்கு ஒத்துக்கொண்டிருந்தால் இவ்வளவு நடந்திருக்குமா? அதைத்தான் விடு மைக்கை கண்டதுமே நீ அலர்ட் ஆகியிருக்க வேண்டாமா? இப்போது என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லையே…
இப்போது எதற்காக அழுகிறாய் ஒன்றும் ஆகிவிடவில்லை அமைதியாக இரு.. சிந்தகவின் குரலில் இருந்த அழுத்தமே அவனும் யோசிக்கிறான் என்பதைத்தான் காட்டியது.
பேசாமல் அவன் தோளில் தோளில் தலை சாய்த்துக்கொண்டவள் கடுகண்ணாவ வந்து சேரும் வரை எதையுமே பேச வில்லை.
பன்னிரண்டு மணி நியூஸ் இப்போது ஆரம்பிக்கும் மைதிலி என்றவன் சிரச fm ஐ டியூன் செய்தான்.. நியூஸ் பர்ஸ்ட் ஜிங்கிளை கேட்கவே பயமாக இருக்க காதைத்தீட்டிக்கொண்டு இந்த செய்திக்காக காத்திருந்தாள் மைதிலி.
பயந்தது போலவே அக்குரணவில் பாறைகள் உருண்டு விழுந்து பாதை முடக்கப்பட்டது என்று செய்தி சொன்னவர்கள் பரபரப்பை கூட்டுவதற்காய் மச்சிஸ் நிறுவன அதிபர் சிந்தக நிவேதன் ரத்னாயக்க அவ்வழியில் மயிரிழையில் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது என்றும் சேர்த்துச்சொல்ல இருவரும் பதட்டமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். சிரச டீவி, fm, சூரியா டிவி, சூர்யா fm எல்லாமே ஒரே குழுமம் ஆதலால் ஷக்தி டிவியிலும் இதே நியூஸ் தமிழில் வரும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
மைதிலி முற்றிலும் வியர்த்துப்போயிருந்தாள். அழகான கவிதை ஒன்று நிறைவு பேரும் தருணத்தில் தண்ணீர் ஒன்றினை கொட்டிக்கவிழ்த்தது போல என்ன எப்படியாயிற்று என்று அழுகையாய் வந்தது..
என்னதான் இருந்தாலும் தவறுகளை மறைத்து விடவே முடியாதோ..அவமானப்பட்டுத்தான் ஆகவேண்டுமோ..
ஹாஸ்டலில் யாரும் இந்த நேரம் செய்தி பார்க்கப்போவதில்லை. அவர்கள் விரிவுரையில் இருப்பார்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் பார்ப்பார்களே.. மஞ்சு ஆன்ட்டி..அப்பா அம்மா.. ஐயோ!!!
சிந்தகவின் போன் மாறி மாறி ரிங் பண்ண ஆரம்பித்தது. ஆளாளுக்கு அவனுக்கு என்ன ஆனது என்று விசாரித்துக்கொண்டிருக்க கைகளை இயலாமையுடன் ஒரு தடவை மேலே உயர்த்தியவன் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று முகப்புத்தகத்தில் ஸ்டேடஸ் போட்டுவிட்டு போனை ஆப் செய்து வைத்து விட்டான்
ஒரு கால் மணிநேரம் வாகனச்சத்தம் தவிர வண்டிக்குள் எதுவுமே கேட்கவில்லை.
இன்னொரு கால் மணி நேரம் போயிருக்கும்… மைதிலியின் மொபைல் டிஸ்ப்ளேயில் அம்மா காலிங் என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தன.
விழி பிதுங்கி விடும் போல நடுக்கத்துடன் அதையே வெறித்துக்கொண்டிருந்தவளை கவனித்தவன் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினான். பிறகு மொபைலை ஆன்சர் செய்து ஸ்பீக்கர் மோடில் போட்டு விட்டு பேசு என்று இறைஞ்சலாய் சொன்னான்.
ஹலோ.. அவளுடைய குரலா என்று மைதிலிக்கே சந்தேகமாய் இருட்ன்ஹது.
மறுமுனையில் அம்மாவின் அழுகைக்குரல் வயிற்றை பிசைய அவளுக்கும் கண்ணில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.
அம்மா..
ஒரு சீரறான மூச்சின் பின் தாயின் குரல் தெளிவாகவே கேட்டது. “நீ என் பிள்ளையாடி? என்ன காரியம் செய்திருக்கிறாய்! அதைவிட எப்படியெல்லாம் எங்கள் எல்லாரையும் ஏமாற்றுவாய் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அப்பாவை பற்றி நினைத்துப்பார்த்தாயா நீ.. உன்னை பெற்று ஆசையாய் வளர்த்ததற்கு எங்களுக்கு நல்ல பரிகாரம் செய்து விட்டாய்..”
அம்மா… கேவலாய் மறுபடி அழைத்தாள் மைதிலி. அவளைச்சுற்றி அவனின் கரம் இரும்பாய் இறுகிப்போயிருந்தது.
“பேசாதேடி.. இனிமே எந்தக்காலத்திலும் வீட்டுப்பக்கம் வந்துராதே..பெத்த பிள்ளை என்றாலும் ஒழுக்கம் இல்லாதவளை வெட்டிப்போடக்கூட நான் தயங்க மாட்டேன். நீ இல்லை என்றே நாங்கள் இருந்து விடுகிறோம். நீ எங்கே போவாயோ என்ன செய்வாயோ.. மறுபடி எங்கள் முகத்தில் விழித்து அந்த மனுஷனின் உயிரை குறைத்து விடாதே…”
அத்தோடு மறுமுனை துண்டித்துக்கொள்ள சிலையாய் அப்படியே அமர்ந்திருந்தாள் மைதிலி. இதற்காகத்தானே பயந்தாள் அன்றைக்கு..
இப்போது கண்ணீர் முற்றிலும் நின்று விட்டிருந்தது அவளுக்கு.
மைத்திம்மா..சாரி…அதை சொல்லவே எனக்கு தகுதியில்லைதான்..எல்லாம் நான் செய்த காரியம் தானே..என்னால் தானே உனக்கு..
அவனுடைய வாயை கைகளால் பொத்தியவள் “எனக்கு ஒன்றுமில்லை சிந்தக.. நீங்கள் வண்டியை எடுங்கள்” என்று சொல்லிவிட்டு தெருவிலேயே விழிகளை பதித்து வைத்திருந்தாள் அவள்
அவளின் தோளைப்பற்றி உலுக்கியவன் “ஏண்டி இப்படி இருக்க? உனக்கு என்னாச்சு? எனக்கு பயமா இருக்கு? ஏதாவது பேசும்மா? நான் அப்படி பண்ணிருக்க கூடாது..நான் ஒரு முட்டாள் ” என்று அரற்றிய படி அவளின் கன்னத்தில் தட்டினான் சிந்தக
“ப்ச்.. அம்மா என்னை இனிமேல் வராதே என்று சொல்லிவிட்டார்கள்” சோகமாய் சொன்னவளுக்கு திடீரென கண்ணீர் உடைத்துக்கொண்டு வர முன்பக்கமாய் கவிழ்ந்து கிடந்து விம்மலுடன் கண்ணீர் பெருக்க ஆரம்பித்தாள் அவள்.
அவன் நிலைதான் பரிதாபம்..எதை எப்படி சமாளிப்பது என்று தெளிவாக ப்ளான் போட்டு வைத்திருந்தவன் அவனுக்கு மேலாக விதி போட்ட பிளானை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனின் பக்கத்தில் புன்னகையோடு நின்றவளை பார்த்தபிறகு அவன் என்னதான் சத்தியம் செய்து நான் தான் வலுக்கட்டாயமாய் அவளை கடத்திப்போனேன் என்று சொன்னாலும் அவள் பக்கம் தவறில்லாமல் இருக்கும் என நம்புவார்களா? அவள் தான் சிறுபிள்ளையாக அடம்பிடித்தாள் என்றால் நான் ஏன் வண்டியை விட்டு இறங்கினேன் என்று தன்னையே நொந்து கொண்டு அவனும் இறுகிப்போய் அமர்ந்திருந்தான்
அழுகையின் இடையே அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் இருந்த கோலத்தை கண்டு அதிர்ந்து தான் போனாள். இப்படி கண்ணெல்லாம் சிவந்து இவன் உடைந்து போகுமளவுக்கு அவன் மட்டுமா தவறு செய்தான்? அவளும் தானே.. முதல் படி அவனுடையது என்றாலும். அதற்கு சம்மதம் தெரிவித்ததும் முக்கால்வாசிக்கும் மேலான தருணங்களில் இப்படி பகுத்தறிவையே மறந்து விடும் அளவுக்கு ஆத்மார்த்தமான மகிழ்ச்சியோடு இருந்ததும் அவளல்லவா! அவன் மட்டும் மறுகுவதா?
கண்களை துடைத்துக்கொண்டவள் அவனின் தோள்களில் தட்டினாள். வண்டியை எடுங்கள் போவோம்.
மைதிலி..
ஷ்..இனிமேல் எதுவும் பேசாதீர்கள் சிந்தக. இந்த ஐந்து நாள் என் வாழ்க்கையில் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்த நாட்கள். நானாக சம்மதித்து தான் கூட இருந்தேன். எனக்கும் சரி அளவு பங்கு இந்த தவறில் இருக்கிறது. அதை விட இப்போது நடந்த முட்டாள் தனத்துக்கு நான் மட்டும் தானே காரணம்! அம்மா அப்பா மனமுடைந்து போனார்களே என்பதை தான் என்னால் தாங்க முடியவில்லை. ஆனால் நான் புரிய வைத்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களை பார்த்து பேசி புரிந்து கொண்டால் இவ்வளவுநாளும் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் சேர்த்து அவர்கள் சந்தோஷமாகி விடுவார்கள்..அவள் புன்னகைக்க முயன்றாள்.
அவளது கைகளை பற்றி அழுத்தியவன் வண்டியை மீண்டும் போக்குவரத்தில் கலந்தான்.
அரைமணி நேரத்தில் பேராதெனிய காம்பஸ் வளாகத்துக்குள் வண்டி நுழைந்தது. அவள் சங்கமித்தா ஹாஸ்டலுக்கு வழி சொல்ல வண்டி பாதையில் இருந்து விலகி ஹாஸ்டல் இருந்த மலையில் ஏறி கிரீச்சிட்டு நின்றது.
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கூடவே வந்தவன் விசிட்டர்ஸ் ஹால் வரை கொண்டு வந்து வைத்தான்.
“கவலைப்படாதேம்மா..நீ பெருந்தன்மையாய் சொன்னாலும் இது நான் ஆரம்பித்த விஷயம். நான் தான் முடிக்க வேண்டும். உன் பெற்றோரிடம் சம்மதம் வாங்கும் வரை இனிமேல் உன்னை தொடர்பு கொள்ள மாட்டேன். என்னை நம்பி நீ எதைப்பற்றியும் யோசிக்காமல் நன்றாக சாப்பிடு..படிப்பில் கவனம் செலுத்து. நான் இருக்கிறேன். பார்த்துக்கொள்வேன்” என்று உறுதியாய் சொன்னவன். ஒரு பையை கையில் எடுத்து கொடுத்தான்.
இதில் ப்ரோடிநேக்ஸ் இருக்கிறது. எலும்பு பொருந்த வேண்டும். தினமும் குடி.. என்றவன் பிறகு இன்னொரு பாக்கை எடுத்து ஒரு பாக்சை மட்டும் அவளிடம் கொடுத்தான். இது மதிய உணவு. எதையாவது யோசித்து சாப்பிடாமல் மட்டும் இருந்து விடாதே..
கண்ணைக்கரித்துக்கொண்டு வர தலையை மட்டும் அசைத்தவள் வருகிறேன் என்று தலையை அசைத்தபடி அவன் போனதை பார்த்துக்கொண்டு வெகு நேரம் அப்படியே நின்றாள்.
WLM அத்தியாயம் 17
There will be no ‘us’ in future..இவ்வளவு நாளும் நானே அதை முடிவு செய்து அதற்கேற்றபடி நடந்தும் வந்தேன் என்பதை மறந்து நான் அசைவற்று நின்று கொண்டிருந்தேன். இனிமேல் இவனை பிரிந்து வாழ்வது எனக்கு சாத்தியமாகுமா? எனக்கு நீதி வேண்டும் என்று அடம்பிடித்து இப்படியொரு நிலைக்கு அவளை கொண்டு வந்து விட்டு இன்னும் ஐந்து நாட்களுக்கு பின் நாம் பார்ப்போமா மாட்டோமா என்றே தெரியாது என்று எவ்வளவு சாதாரணமாக சொல்கிறான்! இறைவனே என் காலத்தை இந்தப்புள்ளியிலேயே உறைய வைத்துவிட மாட்டாயா?
அவ்வளவு நேரமும் தன்னிச்சுற்றி படர்ந்து கிடந்த இனிமையில் திளைத்துக்கொண்டிருந்தவள் அவன் சொன்ன சொல்லில் விழிப்பு வந்தது போல தன்னை தானே உலுக்கிக்கொண்டாள். இது எவ்வளவு இயல்பாக என் மனதை விட்டு மறைந்து போய் அவளே அவர்களின் எதிர்காலம் குறித்து பேசும் அளவுக்கு ஆகியிருக்கிறது!அவசரமாய் தனக்கு இன்னும் எவ்வளவு நாள் லீவ் இருக்கும் என்று கணக்குப்பார்த்துக்கொண்டவள் பிறகு தன்னிலை உணர்ந்தே சுயபச்சாத்தாபத்தில் கண்ணீர் பொங்கி வர அவனை விட்டு விலகி வெளியே நடந்து மாமரத்தின் கீழே அமர்ந்தாள்.
இந்த வீடு, அதன் வெளிப்புற வடிவமைப்பு, மாமரம் எல்லாமே அவளுக்கு தன்னுடைய வீட்டில் இருப்பதைப்போலவே ரிலாக்ஸான உணர்வை எப்படி கொடுக்க முடிகிறது என்று ஆச்சரியமாய் நினைத்திருக்கிறாள். ஆனால் இங்கிருந்து போனபிறகு இந்த வீடு கொடுத்த சொந்தத்தை, இனிமையை கனவு போன்ற அழகிய நிமிடங்களை இனிமேல் அவளது சொந்த வீடால் கொடுக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது.
“பிரைட் ரைஸ் செய்வதற்கு உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு என் தலையில் எல்லாவற்றையும் சுமத்தி அம்போ என்று விட்டுவிட்டு இங்கே வந்து அமர்ந்து கொண்டால் என்ன அர்த்தம்?” அவனின் தமிழ்க்குரல் கேட்டதில் அவள் திடுக்கிட்டுத்திரும்ப அதற்குள் சில்வர் கரண்டியால் அவளுடைய தலையில் செல்லமாய்த்தட்டி விட்டு கண்சிமிட்டினான் அவன்.
நான் அப்செட்டாக இருக்கிறேன் என்று தமிழில் பேசி சமாதானப்படுத்துகிறானா என்று நினைத்துக்கொண்டாலும் இதற்கு அவன் தன் மொழியிலேயே பேசலாம் என்று அலுப்புடன் நினைவு வருவதை தடுக்க முடியவில்லை. அப்படியே ஹஸ்கி டோன் வந்து ஒட்டிக்கொள்கிறது இவன் பேசும் போது!!!! இருக்கும் பிரச்சனை போதாதென்று இவன் வேறு! என்று அலுத்துக்கொண்டு பெஞ்சை விட்டு எழுந்தாள் மைதிலி.
“சாரி..என்னமோ யோசிச்சிட்டு இங்கே வந்து உக்கார்ந்துட்டேன்” என்று சொல்லியபடி அவள் கிச்சனை நோக்கி போக அவனும் அவளை பின் தொடர ஆரம்பித்திருந்தான்.
செய்முறைபார்த்து அவள் அளவுகளையும் தேவையான பொருட்களையும் வாசிக்க வாசிக்க அவன் அவற்றை எடுத்துப்போட்டு கிளறி சொதப்பல்களும் சமாளிபிகேஷன்களுடனும் கூடிய அன்றைய சமையல் இனிமையாய் தொடர்ந்தது. ஆச்சரியத்திலும் ஆச்சர்யமாய் அது சுவையாகவே இருந்தும் விட ரசித்து உண்டனர் இருவரும்.
பிளேட்டை சிங்கில் வைத்துவிட்டு டாப்பை திறந்து விட்டு அவள் கழுவ எத்தனிக்க அவன் பிளேட்டை வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டான்.
பிகுபண்ணிக்கொள்ளாமல் விலகியவள் மதியத்துக்கான தன்னுடைய மாத்திரைகளை எடுத்தபடி “எங்காவது வெளியே போலாமா?” என்று அவனிடம் கேட்டாள்.
“உனக்கென்ன இங்கே சுற்றுலா வந்ததாக நினைப்பா? கை ஒடிந்திருப்பது போதாதென காலிலும் தலையிலும் தையல் வேறு! அதுதான் இங்கிருக்கும்போது திகட்ட திகட்ட பார்த்திருப்பாயே எல்லா இடமும்! ஒரு இடமும் அழைத்துக்கொண்டு போகமாட்டேன், வேண்டுமானால் போய் படுத்து தூங்கு இல்லாவிட்டால் என்னுடைய லப்டாப்பில் எதையாவது வாசித்துக்கொண்டிரு..”
பட படவென அவன் பொரிந்ததை எதிர்பாராததால் ஒரு நிமிஷம் விழித்தாள் அவள்.
“அதை கொஞ்சம் சாஃப்டா சொன்னா என்னவாம்!! திட்டற மாதிரியே சொல்றீங்க?…நான் என்ன கேட்டேன்னு புரிஞ்சுக்காம காச் மூச்சுன்னு கத்தினா அப்புறம் அவ்ளோ தான் சொல்லிட்டேன்..”
“என்னடி பண்ணுவ?” அவன் அவளை அருகே இழுத்து கண்ணால் சவால் விட்டான்.
“சப்பா.. யார்ப்பா உங்க தமிழ் டீச்சர் பயபுள்ள அநியாயத்துக்கு சின்சியரா சொல்லிக்கொடுத்திருக்கான்! நான் என்ன செய்வேன்னா கேக்கறீங்க? நாங்கல்லாம் பேராதெனிய தமிழ்ச்சங்கம் தெரியுமோ..முழு தூய தமிழ் சொல் மட்டுமில்ல தூய சிங்கள சொற்கள் கூட எனக்கு தெரியும். அர்ச்சனை பண்ணி விட்ருவேன்..”
எஹேமத? (அப்படியா?)” என்று கிண்டலாய் இழுத்தவன் “எங்கே ஒரு சொல் சொல்லு பார்க்கலாம்…” என்றபடி அவளை இன்னும் நெருக்கினான்.
அவனுடைய கண்களை பார்த்ததுமே ஒற்றைக்கையை மேலே உயர்த்தி சிரித்தபடி விலகியவள் “நான் என்ன கேட்டேன்னு கடைசிவரை கேட்கவே இல்ல!” என்று குற்றம் சுமத்தினாள்
“சரி சொல்லு.”
“இங்கே பக்கத்தில எங்காவது சிவன் கோவில் இருக்குமா? என்னமோ இன்னிக்கு போகணும் போல தோணுது..அதுதான் அப்படி ஆரம்பிச்சேன்!”
“இதை நேரே கேட்கவேண்டியது தானே.. சிவன் கோவில்….. கெக்கிராவவில் இருந்து அனுராதபுரம் போகும் வழியில் சின்னதாய் ஒரு கோவில் இருக்கிறது.. பிறகு அதிலிருந்து இன்னும் ஒருமணி நேரம் போனால் இன்னுமொரு இந்துக்கோவில் வரும். ஆனால் அது சிவன் கோவிலா இல்லையா என்று எனக்கு தெரியாது. எங்கே போகலாம்?
சின்னக்கோவிலுக்கே போவோமா?
ஹ்ம்ம்… ஆறுமணி போல புறப்பட்டோமெனில் ஆட்கள் யாருமில்லாமல் நாம் மட்டும் பார்த்து விட்டு வரலாம்.
சரி..
மாலை ஐந்து மணிக்கெல்லாம் தன்னுடைகள் வைக்க அவன் கொடுத்திருந்த சூட் கேசினை ஆராய்ந்து கொண்டு நின்றாள் மைதிலி.
ஒரு சுடிதார் இல்லாமல் போய்விட்டதே! அவள் லேசாய் வருத்தப்பட
பச்..லூசு.. சுடிதார் இருந்தாலும் அதை அணிந்து கொள்ள உதவிக்கு அவனிடமா போய் நிற்பாய்? என்று மனம் மண்டையில் மானசீகமாக கொட்டியது
இருப்பதில் நீளமான ஸ்கர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டவள் கண்ணாடியில் பார்த்தபோது அவளுக்கு திருப்தி ஏற்படவில்லை. பொட்டும் வைக்க முடியாது. அதுதான் நெற்றியில் ஹாரிபாட்டரின் தழும்பு போல தையல் போட்டு பிளாஸ்திரி வேறு போட்டு விட்டிருக்கிறார்களே!
கூந்தலை வாரிகொண்டே வெளியே போனவள் நாலைந்து நந்தியாவட்டை பூக்களை பறித்து ஒன்றாய் சேர்த்து கிளிப்போடு சேர்த்து தலையில் குத்திக்கொண்டு கூந்தலை லூசாக விட்டாள். இப்போது கொஞ்சம் கோவிலுக்கு போகும் உணர்வு வந்ததாக பட்டது. பிறகு ஒரு பொலுத்தீன் பையை எடுத்துக்கொண்டு போய் அங்கிருந்த சிவப்பு செம்பருத்திகளையும் நந்தியாவட்டைகளையும் கொஞ்சமாய் பறித்து சேர்க்க ஆரம்பித்தாள் அவள்.
சிந்தக வரும் அரவம் கேட்டது.
பின்பக்கமிருந்து அவனும் இரண்டு ரோஜாக்களை பறித்து வந்திருக்க அதையும் பையில் போட்டுக்கொண்டு கோவிலை நோக்கி புறப்பட்டனர் இருவரும்.
என்னமோ கோவிலை நெருங்க நெருங்க தனக்கான தீர்வுகள் முழுக்க முழுக்க அந்த சிவனிடம் தான் இருப்பதாகப்பட்டது அவளுக்கு. இருந்த மன அழுத்தத்தை முழுவதுமாய் சிவனிடம் கொட்டிவிட்டு என் வாழ்க்கையை ஏன் இப்படி ஆக்கினாய் என்று கேட்டு அழ வேண்டும் போலிருந்தது.
வண்டி நின்றுவிட கேள்வியை திரும்பி பார்த்தவள் சிந்தக முன்னே வந்து கொண்டிருந்த பெண்ணையும் ஒரு ஏழு வயது மதிக்கப்படக்கூடிய பெண்ணையும் பார்த்துக்கொண்டே இறங்குவதை கவனித்தாள்.
பெரிய புன்னகையுடன் அந்த பெண் இவனுக்கு வணக்கம் சொல்வதையும் அந்த குட்டிப்பெண் வெட்கப்புன்னகையுடன் சிரிப்பதையும் கண்டு ஆர்வமாய் இவள் எட்டிப்பார்க்க தலையசைத்து இவளை வர சொன்னான் அவன்.
தயக்கமாய் இறங்கிப்போனவளை எங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினர் என்று மட்டும் அறிமுகம் செய்தவன் அந்த குட்டிப்பெண்ணை காட்டி “மேடம் மாலைதீவுக்கு போயிட்டு வந்தாங்க போனவாரம். செஸ்ல ஏஷியன் ரன்னர் அப். “ என்று பெருமையுடன் அறிமுகம் செய்தான்.
அவள் கைகுலுக்கி வாழ்த்துச்சொல்ல அவளின் அம்மா இவளிடம் தொடர்ந்தார். “தம்பி இல்லைன்னா இதெல்லாம் முடிஞ்சிருக்காதும்மா..இவங்கப்பா சண்டைல செத்துப்போய்ட்டார்..வர்ற பென்ஷன் குடும்ப செலவுக்குத்தான் போதும்..இப்படிப்பட்ட செலவுகளுக்கு நான் எங்கே போவேன்.. தம்பி தான் எதேச்சையா இவளை பற்றி கேள்விப்பட்டு நானே இவள் படிப்பும் விளையாட்டும் சம்பந்தமான சகலத்தையும் பண்றேன்னு பொறுப்பெடுத்திச்சு..”
அப்போதுதான் அது இராணுவ வீரன் ஒருவனின் குடும்பம் என்று அவளுக்கு புரிந்தது. கள்ளமில்லா அந்த குட்டிப்பெண்ணை பார்க்கும் போது அழுகை தான் வந்தது.
இவளின் அப்பா கெட்டவனோ, அப்பாவியோ அவனையே நம்பியிருந்த குடும்பத்துக்கு அவன் தானே எல்லாம்.. பாவம். இந்தப்போர் தான் எத்தனை குடும்பங்களை சீர்குலைத்து போட்டிருக்கிறது!
நான் தமிழ் என்று தெரிந்தால் எப்படி ரியாக்ட் செய்வார்கள்?
நான் இவர்களை குற்றம் சொல்வது போலவே, அழகாக சிரித்த அந்த குட்டிப்பெண்ணும் என் அப்பாவின் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று என்மீது வெறுப்பை கொட்டுவாளோ?
யோசனைகளுடன் பேசாமலே மௌனமாக வந்துகொண்டிருந்தவள் கிராப்புற சூழலுக்குள் வண்டி நுழைந்ததனால் பசிய வயல்களும் நீர்ப்பாசன கால்வாய்களுமாய் வெகு அழகாயிருந்த இடத்தை தன்னை மறந்து ரசிக்க ஆரம்பித்தாள்
அதோ அந்த ஜங்க்ஷன் திரும்பும் இடத்தை பார் அதில் ஒரு ஆலமரம் தெரியுதே..அதன் கீழே குட்டியாக தெரிவது தான் கோவில்.. சிந்தக கைகளால் சுட்டிக்காட்டினான்.
அந்த வீதியின் ஓரத்தில் அவன் காரை நிறுத்த பரபரப்புடன் இறங்கியவள் மறுபக்கம் இருந்த தண்ணீர் தொட்டியில் கால்களை கழுவினாள்
அவளுக்கு அருகே பான்ட்டை மேலே மடித்து விட்டுக்கொண்டு சிரத்தையாய் கால்களை கழுவியவனை அவளது பார்வை தொட்டுத்தொட்டு போனது.
கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே இருந்த குட்டித்திண்ணையில் இருவரும் ஏறினர்.
அடடே சாமியை உள்ளே வைத்து பூட்டிவிட்டார்கள்!!!! அவன் ஏமாற்றமாய் சொல்ல அவளுக்கு சிரிப்பு வந்தது.
அது கர்ப்பக்கிரகம். உள்ளே தான் சிவலிங்கம் இருக்கும்..இது தனியான ஏரியா இல்லையா..அதனால் பூஜை நடக்கும் போது தான் திறப்பார்கள் போலிருக்கிறது! அதனால் என்ன பரவாயில்லை..
பூட்டிய இரும்பு கேட்டின் வெளியே பூக்களை வைத்துவிட்டு கம்பிகளுக்குள்ளே தெரிந்த சிவலிங்கத்தை நோக்கி கைகூப்பி நின்றாள் அவள்.
கண்கள் இதற்குத்தான் காத்திருந்ததை போல கலங்கி தளும்பி வழிய ஆரம்பித்தன.
என்ன செய்யப்போகிறேன்? உள்ளிருந்தவனிடம் கேட்டாள் அவள். எனக்கு ஏன் சந்தோஷம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று காட்டிக்காட்டி பறித்துக்கொள்கிறாய்? நான் பாட்டுக்கு ஊருக்கு போய் சேர்ந்திருப்பேனே..காயம் பட வைத்து இவனை மீண்டும் கொண்டு வந்து இன்னும் இன்னும் சிக்கலாக்கி வைக்கிறாயே…
அப்பாவுக்கு ஒருதடவை நெஞ்சு வலி என்னால் வந்துவிட்டது. இனி நான் எப்படி அவரிடம் அந்த பேச்சை எடுப்பேன்? முடியவே முடியாதே… அப்படியானால் இந்த பிரச்சனைக்கு என்ன தான் முடிவு? பிரிவு தானா? அப்படியானால் என் பஸ்ஸை ஆக்சிடண்டாக்கி எதற்கு அவனிடம் என்னை மீண்டும் கொண்டு வந்து சேர்த்தாய்?
யார் பதில்சொல்வார்கள்.. விபரிக்க முடியாத தெய்வீக அமைதியுடன் சிவலிங்கம் பூக்களின் நடுவில் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது.
கண்ணை திறந்து அவனை தேடினாள் மைதிலி
அந்த குட்டித்திண்ணையின் ஓரமாய் இருந்த சுவரில் கால்களை நீட்டி சாய்ந்துகொண்டு விழிகளை மூடியிருந்தான் அவன் .
ஒரு நிமிஷம் விழிஎடுக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் தில்லைக்கூத்தனிடம் திரும்பினாள்.
“எனக்கு இவனை சொந்தமாக கொடுத்து விடேன்?” தன்னை மீறி வந்து விழுந்த வேண்டுதலின் அதிர்வில் அதன்பிறகு எதையும் கேட்கத்தோன்றாமல் சிறிது நேரம் கைகூப்பி நின்றவள் கேட்டுக்கு வெளியே இருந்த விபூதியை பிளாஸ்டருக்கு மேலே போட்டு சநதனமும் குங்குமமும் வைத்தாள் பிறகு சந்தனத்தை மட்டும் எடுத்து வந்து விரல்களால் தொட்டு அவனுடைய நெற்றியிலும் வைத்துவிட்டாள். நெற்றியில் பரவிய குளுமை காரணமாய் கண்களை திறந்தவனிடமும் உடைக்க விரும்பாத மௌனம்
தானும் அவனுடைய அருகில் அமர்ந்தாள் மைதிலி. சுற்றிலும் நன்றாக இருள் பிடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.
ஐந்து நாளில் ஒரு நாள் முடிந்து கொண்டிருக்கிறது..இன்னும் நான்கே நாட்களில் நான் இங்கிருந்து போயாக வேண்டும்! அதன் பிறகு அவர்களுக்கு என்ன ஆகும்? இனி இவனை நான் வாழ்நாளில் காண்பேனா? தவிப்பு அவளைப்போட்டு அலைக்கழிக்க அவனுடைய நீட்டியிருந்த காலில் சரிந்து தலையை வைத்துக்கொண்டாள் அவள். கண்ணீர் வழிந்து பான்ட்டினை நனைக்க அவன் விரல்களோ மிக மென்மையாய் அவளுடைய தலைமுடியை வருடி விட்டுக்கொண்டிருந்தன.
ஒரு கட்டத்தில் தாளாமல் நிமிர்ந்தவள் அவனுடைய கண்களும் ரத்த வர்ணம் கொண்டிருப்பதை கண்டு அவனுடைய கையை இறுகப்பற்றினாள்.
மைத்தி..
“என்னை விட்டுடாதீங்க சிந்தக….எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..ஏதாவது பண்ணுங்க..என்னால அப்பா கிட்ட பேச முடியாது..அவங்களை விட்டுட்டு உங்க கூட ஓடியும் வர முடியாது. அப்பாக்கு என்னால ஏதாவது ஆச்சுன்னா செத்துப்போயிருவேன் சிந்தக..உங்களை விட்டுட்டும் என்னால இருக்க முடியாது. ஏதாவது பண்ணுங்க.. எனக்கு உங்க கூட ரொம்ப சந்தோஷமா வாழணும்..எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..” பொங்கி வந்த அழுகையுடன் வாய் விட்டு கதறியபடி அவனின் புஜங்களில் முகம் புதைத்தவளை இழுத்து நெஞ்சில் சாத்திக்கொண்டவன் விம்மல் அடங்கும் வரை தட்டிக்கொடுத்தான்
அவளாகவே ஒரு கட்டத்தில் நிமிர அவனுடைய கண்களும் கசிந்திருந்தன.
வா போகலாம் என்றபடி அவளின் கையை பற்றி அழைத்துக்கொண்டு போய் வண்டியில் ஏற்றினான்.
வண்டி மெயின் ரோட்டில் ஏறும் வரை இருவருமே எதுவும் பேசவில்லை.
வெறிச்சோடியிருந்த சாலையில் வண்டியை கொஞ்சம் ஓரங்கட்டியபடி அவளின் பக்கமாய் திரும்பினான் அவன்
“நாளைக்கு காலைல நானே உன்னை கூட்டிட்டு போய் ஹாஸ்டல்ல விட்டுர்றேன் மைத்தி..”
நான் என்ன சொன்னேன்..இவன் என்ன சொல்கிறான் என அவள் அதிர்ச்சியாய் பார்க்க அவளின் வலக்கையை எடுத்து உதட்டில் ஒற்றி விட்டு “நீ இந்த வார்த்தையை சொல்ல மாட்டியான்னு ஏங்கினேன் மைதிலி. அவ்வளவு இலகுவாக என்னை விட்டுக்கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது என்பது தான் என் ஆதங்கமாய் இருந்தது. அன்றைக்கு ஹாஸ்பிட்டலில் வைத்து உங்களை நான் விட்டு கொடுக்க மாட்டேன்பா ன்னு உங்கப்பா பத்தியே தான் சொல்லிட்டிருந்த.. அப்போ தான் நான் இன்னும் உனக்கு விட்டுக்கொடுக்கவே முடியாத உறவா ஆகலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்துது..இவ்வளவு பொய் சொல்லி உன்னை இங்கே கூட்டிட்டு வந்ததும் அதுக்காகத்தான். நீ போறதுக்குள்ள என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு சொல்ல மாட்டியான்னு ஒரு நப்பாசை.. ஆனா அதெல்லாம் தப்பு..நீ என்ன மாதிரி நெருக்கடில இருந்தேன்னு நீ இங்கே வந்தப்புறம் உன்னை பார்க்க பார்க்கத்தான் எனக்கு புரிய ஆரம்பிச்சது.. இப்போ சொன்னியே என்னவாவது பண்ணுங்கன்னு.. இனி நான் பார்த்துக்கறேன் கண்ணம்மா..உங்கப்பா பத்தி கவலைப்படாதே.. அவருக்கு ஒண்ணும் ஆகாது.. நீ உன் மீதி இருக்கற செமஸ்டரை முடி.. அதுக்குள்ளே நான் எல்லாத்துக்கும் ஒரு வழி பண்றேன்”
என்ன பண்ண முடியும்? என்று யோசித்தாலும் அவன் இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதே ஆறுதலாக இருந்தது. அதுக்கு என்னை என் கூட்டிட்டு போய் ஹாஸ்டல்ல விடணும்? என்று பொய்க்கோபமாக கேள்வி கேட்டாள் அவள்
பட்டென்று சிரித்து விட்டவன் “நான் பண்ணது ரொம்ப தப்புன்னு முதல் நாளே புரிஞ்சு போச்சுடி..ஆனாலும் ஒரு வைராக்கியத்துல அஞ்சு நாள் என் கூட உன்னை வச்சுகிட்டேன்..இப்போ ரெண்டு பேர் மனசும் தெளிவா இருக்குல்ல.. இனி நாம எங்கே இருந்தாலும் ஒண்ணுதான்..இனியும் நீ குற்ற உணர்ச்சியோட எதுக்கு இருக்கணும்..நாளைக்கே நாம ஹாஸ்டல் போறோம்.. “ என்றான் முடிவாக
உண்மைதானே..மலர்ச்சியாய் அவன் முகம் பார்த்து சிரித்தாள் மைதிலி
முதல்ல காலைல கொஞ்சம் ஷாப்பிங் பண்ணணும்..
எதுக்கு?
இன்னும் நாலு நாள் லீவ்ல ஹாஸ்டல்ல தனியா நிப்பேல்ல..சாப்பிடுற ஐட்டங்கள், சூப் வகைகள் கொஞ்சம் எடுத்துட்டு போ..ஹாஸ்டல்ல நானா வந்து பண்ணித்தர முடியும்?
ஹா ஹா
சிரித்தவளின் கன்னத்தில் அவசரமாய் ஒரு முத்தம் பதித்தான் அவன்.
WLM அத்தியாயம் 16
16
நானும் அவளும் இணைந்து வாழும் வாழ்வு இனிமையாக இருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறேன் ஆனால் இப்படியொரு வாழ்க்கையை நிச்சயமாய் நான் கற்பனை செய்யவே இல்லை.. இவ்வளவு அழகான ஒரு கனவு எங்காவது இருக்க முடியுமா? கனவே அப்படிஎன்றால் அது நனவானால் எப்படி இருக்கும்? அதுதான் இவ்வளவு போராட்டங்களையும் மனக்கஷ்டங்களையும் நாங்கள் சந்திக்கின்றோமோ என்னவோ?
தாளமுடியாமல் அவளது கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு அவளின் நெற்றியில் லேசாக ஓரங்களில் பசையிழந்து உரிய ஆரம்பித்திருந்த பிளாஸ்திரியை விரல்களால் அழுத்தம் கொடுத்து நெற்றியில் மீண்டும் ஒட்டி வைத்தான் சிந்தக.
நாளையுடன் ஆக்சிடன்ட் ஆகி மூன்று நாட்களாகிறது. டாக்டர் உன்னை ஐந்து நாட்களில் டிரெஸ்ஸிங் மாற்ற சொல்லியிருக்கிறாரில்லையா?
“இங்கே எப்படி மாற்றுவது? நம்மை பிடித்து விடுவார்கள்!” அவளின் குரல் ரகசியமாய் கேட்டது.
“அதை யோசிக்காமல் இருப்பேனா? அனுராதபுரத்தில் என் நண்பன் விராஜ் இருக்கிறான். அவன் டிரெஸ்ஸிங் செய்து விடுவான்….அங்கிருந்து வரும் போது பார்மர்ஸ் கேட்டில் காய்கறி வாங்கி வரலாம்!ஓகேவா?” கேட்டவனின் விரல்கள் இப்போது அவளின் நெற்றியில் புரண்ட குட்டித்தலைமுடியை பிளாஸ்டர் பக்கம் இருந்து விலக்கி நீளமான முடிக்கற்றைகளுக்குள் திணிக்க முயன்றன.
“நீ இதையே உன் ஹேர் ஸ்டைலாக்கிட்டியா?” முதல் தடவை அவள் முன்புறத்தலைமுடியை எலி அரித்தது போல வெட்டிக்கொண்டு வந்து நின்ற கோலம் என்றேனும் மறக்கக்கூடியதா? அன்றைய நாளின் நினைவில் இன்று சிரிப்பு முளைத்தது அவனுக்கு..
“ஹ்ம்ம்..நீங்கதான் அன்னிக்கு எனக்கு சூட் ஆகுதுன்னு சொன்னீங்களே..” அவள் கவனம் இவனிடம் இல்லை..தன்போக்கில் பதில் சொல்லிவிட்டு வானத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளை இன்னும் நெருக்கி தன் தாடையை அவள் தலையில் வலிக்காமல் அழுத்திக்கொண்டான் அவன்.
“யாரோ என்னமோ சொன்னாங்களே…என்னமோ இப்போதைக்கு என் மனசுல…”என்று சிரிப்புடன் மெல்ல இழுத்தாள்அவள்
“யார் என்ன சொன்னது?” குரலில் அவனது சிரிப்பு அப்படியே தெரிந்தது
“சொன்னவங்களுக்கு தான் தெரியும்!”
ரொம்ப நல்லதா போச்சு..உனக்கும் எனக்கும் அது தெரியாது தானே!
அடிங்கொய்யால!!!! அவள் சரேலென விலகிக்கொண்டு அவனுடைய தோள்களில் மொத்த ஆரம்பித்தாள்.
“ஏய் கை வலிக்க போகுது!!!” என்று அதட்டியபடி அவளது வலக்கையை பற்றி அவளை கட்டுப்படுத்த முனைய அவளது போன் ரிங்கிற்று…
அப்படியே பனிச்சிலை போல உறைந்து போனாள் அவள்.
யார் அழைத்திருப்பார்கள் என்று புரிந்ததில் இவன் முகமும் இறுகியது. மறுமுனை பேசியதையும் அதற்கு இவள் முகம் காட்டிய முகபாவனைகளையும் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தவன் தன் ஒரு கையை ஆறுதலாய் அவளின் தோளின் மீது வைத்தாள்.
படீரென உதறியவள் எழுந்து வேக வேகமாய் உள்ளே ஓட எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் உள்ளுக்குள் வலித்தது அவனுக்கு. கைகளை தலைக்குக்கீழே கொடுத்துக்கொண்டு வானத்தை வெறித்தான் அவன்.
இவளின் வேதனைக்கெல்லாம் நான் தானே காரணம்! அவளுக்கு நானும் அப்பாவைப்போல விட்டுக்கொடுக்கவே முடியாத உறவாக மாறிவிடவேண்டும் என்ற உந்துதலில் வேறு எந்த விஷயமும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் அவனருகில் மனம் விட்டு சிரிப்பதும் மறுநிமிஷம் குழம்பிப்போவதுமாக அவள் தவிப்பதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்க அவனுக்கு நான் செய்தது தவறோ என்ற கேள்வி மனதுக்குள் வந்து கொண்டே இருந்தது.
எழுந்து வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு தாளிட்டுக்கொண்டிருந்த அவளது அறைக்குள்ளிருந்து மென் விசும்பல் சத்தத்தை கேட்க முடிந்தது. அந்த அறைக்குள் தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள் ஆனால் அவனால் உள்ளே சென்று ஆறுதல் சொல்லமுடியாது. இப்படி அவள் வருத்தப்படும் போது தன்னுடைய அறைக்குள் சென்று தூங்கவும் முடியாமல் அறைக்கு வெளியே இருந்த சோபாவில் தன்னை சுருட்டிக்கொண்டு அறைக்குள் கேட்ட குரலுக்கு வலியோடு காது கொடுத்துக்கொண்டிருந்தான் அவன்
சற்று நேரத்தில் இன்னொரு ரிங் டோன் கேட்டது. இப்போது அவளின் குரல் கொஞ்சம் தைரியமாக சற்றே உயர்வாக கேட்டது. அனேகமாக அந்த ஹாஸ்டல் அம்மணியாகத்தான் இருக்கவேண்டும்! அவன் மட்டும் மைதிலியோடு சேர்வானாக இருந்தால் முதலில் அவளிடம் இருந்து வெட்டிவிட வேண்டியது அந்த சுமித்ராவைத்தான்! என்ன ஒரு திமிர்!!! அன்றைக்கு என்னமோ தன் பிள்ளைக்கு CID வேலை பார்ப்பவள் போல என்ன பேச்சு!!! அதுவும் சிந்தக பற்றியே என்ன திமிராய் கேட்டாள்! எல்லாம் இந்த மைதிலி கொடுக்கும் இடம்! பெற்றோருக்குத்தான் பயப்படுகிறாள் என்றால் இந்த பெண்ணிடம் ஏன் இப்படி அடங்கிப்போகிறாள்? நீ உன் வேலையை பார்த்துகொண்டு போ என்று திட்டி விடுவதற்கு??
அறையில் சத்தம் அடங்கியதும் அவனது விழிகளும் மெல்ல சொக்கி மூடிக்கொண்டன. கொஞ்சம் சுருண்டு சோபாவில் தனக்கு வசதி செய்து கொண்டான் அவன்
காலை தயக்கமாய் எழுந்து வந்தவளிடம் அவன் எதுவுமே கேட்கவுமில்லை . எதையும் புரிந்து கொண்டதாய் காண்பித்துக்கொள்ளவும் இல்லை.
நீங்கள் அலுவலகம் போக தேவையில்லையா என்று கேட்டவளுக்கு
“மொபைலிலும் ஆன்லைனிலும் சமாளிக்கிறேன். மீதியை ராஜீவ் பார்த்துக்கொள்வான் எனக்கும் இது ஒரு மூச்சு விடும் விடுமுறையாக இருக்கட்டுமே என்று சிரித்தவனுக்கு பதிலாக மைதிலியிடம் இருந்து ஒரு மெல்லிய சிரிப்புத்தான் வந்தது.
ஆனாலும் அவன் காலை உணவுக்கு சான்ட்விச் செய்ய போனதும் கூடவே உள்ளே வந்து சின்ன சின்ன உதவிகள் செய்து தந்தபடி கூடவே இருந்தது ஆறுதலாக இருந்தது.
அப்படியே தொடர்ந்த இரண்டு நாட்களில் மெல்ல மெல்ல அவளோடு பேசி, சிரிக்க வைத்து கரம் போர்ட், செஸ் விளையாடி, படம் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியடைந்து விட்டான் என்று தான் சொல்லவேண்டும். போன் வரும் தருணங்கள் தவிர மீதி நேரங்கள் அவள் சந்தோஷமாகவே இருப்பதாகப்பட்டது. ஏற்கனவே மனதில் மறுகிக்கொண்டிருப்பவளுக்கு இன்னும் மனக்கஷ்டம் தரக்கூடாது என்ற எண்ணத்தில் மறந்தும் அவளை நெருங்காமல் தள்ளியே நின்று கொண்டிருந்தான் அவன். பலனாக அடுத்த நாள் மாலையில் வழக்கம் போல அவள் வம்பிழுக்க ஆரம்பித்து விட்டது பெரு மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு.
நாளை காலை ஏழு மணிக்கு என்னை எழுப்பி விடு. நாளை ஐந்தாம் நாள் தானே ..விராஜிடம் போய் டிரெஸ்ஸிங் செய்து விட்டு அப்படியே farmers’ gate போய் காய்கறி வாங்கி வரலாம். சோமரத்ன பிரிட்ஜில் வைத்து விட்டுப்போன கறிகள் எல்லாம் காலி!!! என்று சொல்லிவிட்டு தலையணையை எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் போட்டு விட்டு சுருண்டு கொள்ள ஆரம்பித்தவனுக்கு எதிர் சோபாவில் கையைக்கட்டிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள் மைதிலி
ஐ அத நிதாகண்ணத்த?(இன்றைக்கு நீ தூங்கப்போவதில்லையா?)
நீங்கள் உங்கள் அறைக்கு போகும் வரை..இல்லை!
உனக்கு கை ஒடிந்து போயிருக்கிறது. உன்னை அறையில் தனியாக விட்டு விட்டு எனக்கு அங்கே தூக்கம் வராது. அத்தோடு இது எனக்கு வசதியானது தான்!
ஐயோ எனக்கு ஒன்றும் இங்கே பயமில்லை. நீங்கள் போய்கட்டிலில் படுத்துக்கொண்டு தூங்குங்கள்!
பச்.. எனக்கு தூக்கம் வராது என்று சொல்கிறேனல்லவா? போய் படு.
மாட்டேன்.. நீங்கள் அறைக்குள் போய் படுங்கள் அவளும் அவனுக்கு சரியாக பிடிவாதம் செய்தாள்
நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு உன்னிஷ்டம்! கொஞ்சம் கோபமாகவே சொன்னவன் டிவியை போட்டுக்கொண்டு புட்பால் மாட்சை தேட ஆரம்பித்தான்!
சிறிது நேரம் கோபமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் பிறகு வெகு வேகமாக எழுந்து அவனது அறைக்குள் போக “அங்கே என்ன?” என்று காற்றில் கேள்விகேட்டபடி அவசரமாய் அவளை பின் தொடர்ந்தாள் அவன்.
கட்டிலில் போட்டிருந்த பெட்ஷீட் தலையணை எல்லாவற்றையும் கோபமாய் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தவளை ஓடிப்போய் தடுத்தவன் இப்போ என்ன உனக்கு பிரச்னை என்று கேட்டான்
இந்த மெத்தையை ஹாலுக்குள் கொண்டு வந்து போடுங்கள்
எதுக்கு இந்த வேலை..
ப்ளீஸ்
அவள் கண்களின் இறைஞ்சல் அவனை என்னமோ செய்தது. உனக்கிப்போ இந்த மெத்தை ஹாலுக்கு வரவேண்டும் அவ்வளவு தானே? என்று மெல்லியகுரலில் கேட்டவன் அதை தூக்கிக்கொண்டு வந்து அவளின் அறைக்கதவுக்கு நேர்முன்னே போட்டான்.. அதற்குள் பெட்ஷீட், தலையணையை ஒற்றைக்கையில் பிடித்து வந்தவளிடம் ஓடிப்போய் பறித்துக்கொண்டவன் அதையும் விரித்து முடிக்க சின்ன புன்னகையோடு குட் நைட் சொன்னாள் அவள்
மனமெல்லாம் நிறைந்து கிடக்க போனவளின் கையை பற்றி உள்ளங்கையை தன்னுதட்டில் பதித்தவன் நீண்ட நாட்களின் பின் அன்றைக்கு நிம்மதியாய் அயர்ந்து தூங்கினான்!
காலையில் அவனை ஒரு கத்தி தன் மழுங்கிய முனையால் அடித்து எழுப்பியது.
திடுக்கிட்டெழுந்தவனின் முன் விடிந்தும் விடியாத பொழுதின் ஒளிப்பின்னணியில் மைதிலியின் முகம் தான் தெரிந்தது. வழக்கம் போல அவனை மயக்கும் சிரிப்புடன் குனிந்து நின்றுகொண்டிருந்தாள். ஆனால் இப்போது நேரம் என்ன? எழும்பி சந்தேகமாய் நேரம் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. நேரம் ஐந்தரை!
ஐந்தரைக்கெல்லாம் எழுந்து என்ன ஸ்கூலுக்கா போகப்போகிறாய்? என்று கேட்டபடி எழுந்து அமர்ந்து கொண்டான் அவன்.
நேற்று சீக்கிரமாகவே நித்திரை கொண்டதால் ஐந்து மணிக்கெல்லாம் எழும்பிட்டேன்..காபி போட்டேன்..
“உனக்கேன் இந்த வேலை? ஒற்றைக்ககையை வைத்துக்கொண்டு காபி போடச்சொல்லி யார் கேட்டது? என்று கடிந்து கொண்டே எழுந்து விட்டவன் ரெண்டே நிமிஷம் என்றபடி பாத்ரூமுக்குள் புகுந்து முகம் கைகால் கழுவிவிட்டு வந்தான்.
என்னை எழுப்பியிருக்கலாம்ல? ஏன் இப்படி?
ப்ச்…ஒரு கை இருக்குதானே..இரண்டு கப் எடுத்துட்டு மாத்தி மாத்தி ரெண்டு கப்புலயும் விட்டு ஆற்றி விட்டேன்.
ஆஹா..அவள் விபரித்த விதத்தில் சந்தேகமாக காபியை எட்டிப்பார்த்தவன் பிறகு சிரித்தபடி இரண்டு மக்குகளை கழுவி எடுத்து வந்து இருவருக்கும் ஊற்றினான்.
பரவால்ல..நல்லாத்தான் இருக்கு! அவள் அதற்குள் ஒருவாய் குடித்து விட்டிருந்தாள்
அதை நான் சொல்லணும்!!! என்றபடி குடித்துப்பார்த்தவனுக்கு உண்மையிலேயே எந்த வேறுபாடும் தெரியவில்லை! கட்டை விரலை உயர்த்திக்காட்டிவிட்டு ஹாலுக்கு வந்தவன் காபியை ரசித்து அருந்த ஆரம்பித்தான் அவன்
இளங்காலையின் லேசான குளிர்.. அவளோடு அதை அனுபவிக்கவேண்டும் போலிருந்தது.
மைதிலி..ஒண்ணு பண்ணலாம்..நாம ஏழுமணி வரை வெயிட் பண்ணாமல் இப்போவே அனுதாரதபுரம் கிளம்பலாமா?
எனக்கு ஒகே!
நான் விராஜுக்கு கால் பண்ணி இருக்கானான்னு பார்க்கிறேன்.
ஹ்ம்ம்..
அடுத்த அரைமணியில் தயாராகி விட்டவர்கள், அனுராதபுரம் நோக்கி பயணப்பட ஆரம்பித்தனர்.
ரிலாக்ஸ்! ஏன் இவ்ளோ டென்க்ஷனா இருக்க? கருப்புக்கண்ணாடி போட்டிருக்கிறது! யாரும் உன்னை பார்க்க மாட்டாங்க. ரெண்டாவது நாங்கள் உன்னை தெரிந்தவர்கள் இருக்கும் பக்கத்தினால் போகப்போவதில்லை.
அதில்லை….
பொய்
அவள் சிரிப்புடன் பதில் சொல்லாமல் சாய்ந்து அமர்ந்துகொள்ள தானும் சிரித்தபடி வண்டியோட்டினான் அவன்.
அனுராதபுரம் இலங்கையின் பண்டைக்கால தலைநகரம் அமைந்திருந்த இடம். ஸ்ரீ மஹா போதி எனப்படும் புத்தர் ஞானம் பெற்ற அரசமரத்தின் வலப்பக்க கிளையின் ஒரு துண்திலிருந்து உருவான மரம், தாதுகோபங்கள், பண்டைய கட்டடக்கலை அமைப்புக்கள், இரட்டை குளம், ருவன் வலிசாய, அரசரின் தோட்டம் என்று அழைக்கப்படும் றன்மசு உயன எல்லாமே ஆங்கிலேயர் ஆட்ச்சிக்கு முன்னே சிறந்து விளங்கிய உள்ளூர் மன்னர்களின் நிபுணத்துவத்தை பறை சற்றும் வண்ணம் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். உல்லாசப்பிரயாணிகளை அனுராதபுரப்பகுதிக்கு கவர்ந்திழுப்பது இந்த புராதன கட்டடக்கலை அமைப்பே ஆகும்.
பதினைந்து நிமிடம் கூட இருக்காது. விராஜின் வீட்டுடன் இணைந்த மருத்துவமனை அதற்குள் வந்துவிட்டிருந்தது. தன் வீட்டுக்கு வந்த விருந்தினர் என்று நண்பனுக்கு அவளை இலகுவாக அறிமுகம் செய்து வைக்க விராஜ் நட்புடன் பேசியபடியே பிளாஸ்டரை கழற்றி தையலை மட்டும் மறைக்கும் அளவுக்கு குட்டியாய் பிளாஸ்டர் போட்டு விட்டான். என்னமோ தலையில் இருந்த ஸ்கார்ப் போனது போல அவள் முகம் இப்போதுதான் வெளிச்சமாக இருப்பது போலிருந்தது அவனுக்கு
பிறகு இருவருமாய் பார்மர்ஸ் கேட்டுக்கு போனார்கள். பிரமாண்டமான இரும்புக்கதவின் உள்ளே வரிசையாக இருந்த குடில்களில் முற்றிலும் பிரெஷாக, பளிச் வர்ணங்களில் ஆரோக்கியமாய் காய்கறிகள் தென்பட்டன. அவை நேரடியாக விவசாயிகளின் கையில் இருந்து இங்கே தான் வரும். விலையும் ஒப்பீட்டளவில் மார்க்கட்டை விட இங்கே குறைவாகவே இருக்கும்.
அடுக்கடுக்காய் அழகாய் அடுக்கப்பட்டிருந்த காய்கறிகளை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்
இந்த கத்தரிக்காய் எங்கள் பக்க சமையலில் மிகவும் முக்கியமானது! ஒரு கத்தரிக்காயை எடுத்து அதன் வழு வழுப்பை ரசித்தபடி சொன்னாள் மைதிலி
ஏன்?
கத்தரிக்காய் பொரித்தகுழம்பு சாப்பிட்டிருக்கிரீர்களா?
நான் அம்மா செய்யும் குழம்பு சாப்பிட்டிருக்கிறேன் அதற்கு மேல அதை பொரித்து செய்தார்களா? பொறிக்காமல் செய்தார்களா என்று எனக்கு எப்படி தெரியும்?
போங்கள்..உங்கள் வாழ்நாளில் பாதி பத்து வீதம் வேஸ்ட்!
சரிதான்!!! அவள் சொன்ன விதத்தில் சிரிப்புத்தான் வந்தது
அடுத்ததாக பீற்ரூட்டை காட்டிகேட்டாள், பீற்றூட் பொரியல் சாப்பிட்டிருக்கிறீர்களா?/
இல்லை..
பச்…என்று அவள் ஆரம்பிக்க இடையில் குறுக்கிட்டவன் “என்ன என் வாழ்நாளில் இருபது வீதத்தை வேஸ்டாக்கி விட்டேனா?” என்று கிண்டலாக கேட்டான்
அவனை ஏதோ சொல்லவந்தவள் மலை போல குவிந்து கிடந்த வாழைப்பூவை கண்டு “வாழைப்பூ!!!!” என்று கூவினாள்
முப்பது வீதம் வேஸ்டா?
கிண்டலா? நீங்கள் மட்டும் நேற்றைக்கு பலாமரத்தின் வேரை மட்டும் விட்டு விட்டு மீதி எல்லாவற்றையும் சமைத்து வைத்து ஒன்றொன்றாக எனக்கு பாடம் நடத்தும் போது நான் பேசாமல் கேட்டுக்கொண்டு தானே இருந்தேன்.
அதுக்குத்தான் இந்த தாக்குதலா? போகட்டும் விடு .. மேடம் நன்றாக சமைப்பீர்களோ? இல்லை சாப்பிடும் வேலை மட்டும் தானா? என்று கேட்டான்
சீதாவை பற்றி என்ன நினைச்சீங்க?பதிலுக்கு திருப்பி கேட்டாள் அவள்
சீதா?
எங்கம்மா தான்! பொதுவாக எங்களோட உணவு முறை தொலைஞ்சு போயிறக்கூடாது என்று இளைய தலைமுறைக்கு கண்டிப்பாக சமையல் கற்றுத்தருவார்கள்! நானெல்லாம் குழந்தையிலிருந்தே நன்றாக சமைப்பேனாக்கும்!! அவள் காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்
குழந்தையிலிருந்தே சமைக்கும் மூஞ்சியை பார் என்று சிரிப்பாக வந்தாலும் இப்போது பேசி அவளிடம் அடி வாங்க அவன் தயாராக இல்லாததால் பதில் பேசாமல் வெறும் சிரிப்புடன் நிறுத்திக்கொண்டான் அவன்.
காய்கறிகளும் மீன், இறைச்சி வகையறாக்களும் வாங்கிக்கொண்டு பத்தரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள் அவர்கள். வேகமாய் ஷார்ட்ஸ் டிஷர்ட்டுக்கு மாறிய சிந்தக வாங்கி வந்த காய்கறிகளை பரப்பி வைத்துக்கொண்டு அன்றைக்கு என்ன சமைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
ஏற்கனவே சிக்கன் வெட்டி வாங்கி வந்திருந்தபடியால் மரக்கறி மட்டும் சமைத்தால் போதும்.
உனக்கு தெரிந்ததே ஏதோ ஒரு முறையில் சமைக்க மட்டும் தான். அதற்கு இவ்வளவு காய்கறி வாங்கி வந்து எதை சமைப்பது என்று வேறு யோசித்துக்கொண்டிருக்கிறாயா என்று மனம் கிண்டல் செய்தது அவனை.
ஆனாலும் உள்ளத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓட ஒரு திருமண வீட்டுக்கே சமைக்க கூடிய அளவு உற்சாகத்துடன் காய்கறிகளுக்கு முன்னே நின்று கொண்டிருந்தான் அவன்
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே..
மைதிலியின் குரல் வெளியே கேட்டது. அவளை நினைத்ததுமே புன்னகை வந்துவிட வாசலை நிமிர்ந்து பார்த்தான் அவன்.
அவளும் உடை மாற்றிவிட்டு இன்றைக்கு அனுராத புரத்தில் வாங்கிவந்த கொஞ்சம் பெரிய கிளிப்பின் உதவியுடன் தலைமுடியை தூக்கி உச்சியில் கிளிப் போட்டுக்கொண்டு வந்திருந்தாள்.
என்ன மெனு வேணும்? என்று எல்லாம் தெரிந்தவன் போன்ற பாவனையில் மைதிலியிடம் கேட்டான் சிந்தக கூகிளாண்டவரின் உதவியோடு சமாளித்து செய்து கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில்!
இன்னிக்கு எனக்கு எங்க வீட்டு சாப்பாடு வேணும்! அவள் குழந்தையாய் கேட்க பட்டென்று உருகிப்போனவன் “லூசு..முன்னாடியே சொல்லியிருந்தா அந்தப்பக்கம் தேடிப்பிடிச்சு வாங்கிட்டு வந்துருக்கலாம்ல..” என்று ஆதங்கமாய் கேட்டான்
ஐயோ அதுக்கில்ல..இவ்ளோ நாளும் உங்க முறைல சாப்பிட்டோம். இனிமேல் எங்க முறைல தானே சாப்பிடணும். டிஸ்க்ரிமிநேஷேன் பண்ணக்கூடாது
இதில் எல்லாம் சமத்துவத்தை நிலைநாட்ட ஆரம்பிச்சுட்டாடா..என்று மனதுக்குள் செல்லமாய் திட்டியபடி அவளை முறைத்தான் அவன்
ஏன் முறைக்கிறீங்க? உங்களுக்கு சமைக்க தெரியாதா?
அடிச்சேன்னா தெரியும்! எனக்கு எங்க பக்கத்து சமையலே ஒரு குத்துமதிப்பாத்தான் தெரியும்.இவ்ளோ நாளும் சோமு செஞ்சு வச்சது இருந்துது// இன்னிக்கு தான் நானே சமைக்கப்போறேன். ஆளைப்பாரு!!!!
டார்லிங் ஒரு ஐடியா. நீ தான் சின்ன குழந்தைல இருந்து சமைப்பேல்ல…அப்படின்னா இன்னிக்கு நீயே சமைக்கலாமே
சட்டென்று ஜெர்க்கானவளை பார்க்க சிரிப்புத்தான் வந்தது.
எனக்குத்தான் கை உடைஞ்சு போயிருக்கே!
அவ்வ்வ் அதான் நான் இருக்கேனேம்மா
நீங்கள் தமிழ் சமையல் சமைக்க முடியாது..ரொம்ப கஷ்டம்
பச் எதெது எப்படி போடணுமா நீ சொல்லு நான் போடறேன்…உன் வலக்கை நல்லாத்தானே இருக்கு! நானும் ஹெல்ப் பண்ணுவேன்..
அது வந்து…என்று அவள் இழுக்க
வாடி வா…அவனுக்கு சிரிப்பு வந்தது/
விழிகளை ஒருதரம் மூடித்திறந்தவள் “செத்தேன்.. சீதா..நான் தான் கிட்சனுக்குள்ளே வரமாட்டேன்னா நீ என்ன பண்ணிருக்கணும்? என்னை அடிச்சு கத்துக்கொடுத்திருக்கணுமா இல்லையா??? இப்போ என்ன பண்ணப்போறேன்?”என்று வாய்விட்டு சொல்ல
என்ன பிரேயர் சொல்றியா? என்றான் அவன் சிரிக்காமல்!
“ஆமாம் சமைக்கப்போறோம்ல..”என்றவள் ஒரு அஞ்சே நிமிஷம் வந்துடறேன் என்றபடி ரூமுக்குள் ஓடியதை பார்த்துஇருந்தவன் அடுத்தக்கணமே வெடிச்சிரிப்பு பொங்கி வர மேடையில் கையை ஊன்றிக்கொண்டு சிரிப்பை அடக்கினான்.
இவள் அறைக்குள் என்ன செய்வாள் என்று அவனுக்கு தெரியாதா?
இன்டர்நெட்டில் ரெசிப்பி ஒன்றை தேடிப்பிடித்து மனப்பாடம் பண்ணிக்கொண்டு வருவாள்
நினைத்ததை போலவே அஞ்சாவது நிமிடத்தில் மொபைலோடு வந்தவள் அதில் ஒரு ரெசிப்பியை காண்பித்து
Even though I am a pro in cooking, I think we should follow these directions. What do you say?
என்று கேட்டாள்!
அனே…யக்கோ!!! ஓயாட்ட மதக்கரன்ன பரிவுனாத? என்று சிரித்தபடியே கேட்டான் அவன்.. (பேய்க்குட்டி! உனக்கு அதற்குள் மனப்பாடம் பண்ண முடியலையா?)
What? Memorize? Why should I memorize? I know it by heart. But I want to follow this recipe for a change!
எட்டி அவளுடைய போனை பறித்தவன்”இது வேண்டாம்..நீயே சமை..எனக்கு உன்னுடைய ஸ்டைல் தான் வேணும்! என்று மிரட்டினான்
“அவ்வ்…எனக்கு கை வலிக்குது..” அவள் கையை வேண்டுமென்றே திருப்பிப்பார்த்தாள்
இப்போகூட தெரியும் என்றே சாதிக்கிறாள் பாரேன்..இவளை!!!!
அவளைப்பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டு முகத்தை பிடித்து உயர்த்தி கண்களுக்குள் பார்த்தபடி “இப்போ சமைக்க போறியா இல்லையா?” என்று மிரட்டினான் அவன்.
எனக்கு கை வலிக்குது…
அவனுடைய உதடுகள் கண்ணிமைகளில் பதிந்தன.
கை வ…வலிக்குது..
உதடுகள் மூக்கிற்கு இறங்கின..கண்கள் கொஞ்சமும் அவள் கண்களை விட்டு விலகவில்லை..”பொறு..”(பொய்)
“சொல்றேன்ல…எனக்கு தெ..தெ..தெரியும்.. ஆனா”
உதடுகள் கொஞ்சம் அழுத்தமாகவே கன்னத்தில் பதிந்தன
“கியன்ன…” (சொல்) மெல்லிய குரலில் சொன்னவனின் உதடுகள் மெல்ல கன்னத்தில் இருந்து இறங்க ஆரம்பித்தன
“எனக்கு சமைக்க தெரியாது..டீயே சுமாரா தான் போடவரும். உங்ககிட்ட சும்மா தான் சொன்னேன்..” அவசர அவசரமாய் சொன்னவளை பார்த்து சிரிப்பு பொங்க அவளை விட்டு விலகி கம்பியை பிடித்தபடி சிரிக்க ஆரம்பித்தான் அவன்.
என்ன சிரிப்புன்னு கேக்கறேன்
எனக்கு உனக்கு சமைக்க வராதென்று நன்றாகவே தெரியும்!
அவள் பல்லை கடித்தாள்
பொடி கால இந்தலா உயன்ன முகுன தமாய் மேக்க!!! (சின்ன வயதில் இருந்தே சமைக்கும் முகம் தான் இது!)
அவன் அவளது முகத்தை திருப்பி பார்த்த்து விட்டு இன்னும் சிரிக்க அவள் சூடாகிவிட்டாள் என்று நன்றாகவே தெரிந்தது.
“எப்படி எப்படி..உங்க கல்ச்சரை அப்படியே பாதுகாத்து கொடுப்பீங்களோ..? அவன் இன்னும் தூபம் போட
“ரொம்பத்த்த்தான்!!!” பொறுக்கமுடியாமல் தமிழில் வெடித்தாள் அவள் .அவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது
அவனை பார்த்து வாயை சிரித்து காண்பித்தாள் பிறகு “ஒரு முத்தம் கொடுக்கறதுக்கு இந்தப்பயம் பயப்படற நீயெல்லாம் பேசக்கூடாதுடா! பெரிய இவன் மாதிரி பேச்சு மட்டும் தான்..வேற எதுவுமே இல்ல..” என்று சொல்லி முடிக்கவில்லை . எதிரே நின்றவளை பிடித்திழுத்து இதழ்களில் இதழ் பதித்தான் அவன்.
கொஞ்ச நேரம் அதிர்ச்சி,கோபம், வெட்கம் கலந்த கலவை முகத்தை சிவப்பாக்க மூச்சு வாங்கியபடி அவனை தள்ளிவிட முயன்றாள்
ஏன்..நீதானேம்மா கேட்டாய்..ஒன்று மட்டும் போதுமா? என்று அட்சரசுத்தமாய் தமிழில் கேட்டுவிட்டு அவளிடம் கண்சிமிட்டினான் அவன்.
பலத்துடன் அவனை உதறியவள் “ஏன் பொய் சொன்னீங்க..” என்று கோபமாய் கேள்வி கேட்டாள்.
நான் எங்கே சொன்னேன்..நீயாக தான் எனக்கு தமிழ் தெரியாது என்று ஊகித்துக்கொண்டிருந்தாய். கொஞ்சம் யோசித்திருந்தால் உனக்கே புரிந்திருக்கும். மூன்று வருடங்களில் தமிழ் பெண்ணை காதலிப்பவன் தமிழ் கற்றுக்கொண்டிருக்கமாட்டானா?
அதை விடுங்க..அன்னிக்கு கூட நீங்க என்கிட்டே நான் பேசின எதுக்கோ விளக்கம் கேட்டீங்களே..அதெல்லாம் நடிப்பில்லையா?
அப்படிப்பேசும்போது தான் கண்ணம்மா உண்மை வருகிறது உன்னிடமிருந்து.!.எனக்கு தமிழ் தெரியுமென்று சொல்லியிருந்தால் அதையெல்லாம் என்னால் கேட்டிருக்கவே முடியாதே..அவன் மீண்டும் கண்சிமிட்டினான்
வெட்கச்சிவப்பும் கோபச்சிவப்பும் சரிசமமாய் கலந்திருக்க கிட்சன் வாசல் படியில் போய் நின்றுகொண்டு வெளியே பார்த்துக்கொண்டிருந்தவளின் தோளை தொட்டு திருப்பினான் சிந்தக
“அனே மட்ட படகினி..எனக்கு பசிக்கிறது. எதையாவது சமைத்து சாப்பிட்டு விட்டு அப்புறமாக நீ வெட்கப்படு!”
நான் ஒண்ணும்… என்று வேகமாக ஆரம்பித்தவளை கையர்த்தியவன் பசிக்கிறது ரொம்பவே என்று வயிற்றை தடவியபடி சொன்னான் அவன்
சரி;; பிரைட் ரைஸ் செய்து சாப்பிடுவோமா. வேலை குறைவு..நான் ரெசிப்பி எடுத்து தந்து ஹெல்ப்பும் பண்ணுவேன்.. அவள் உடனே பழைய நிலைமைக்கு திரும்பி மொபைலை எடுத்துக்கொண்டாள்
சரி சீக்கிரம் தேடிக்கொடு. சொல்லிவிட்டு அரிசியை ரைஸ் குக்கரில் போடுவதற்காக அளந்து எடுக்க ஆரம்பித்தான்.
இது நல்லா வரும்னு நினைக்கிறேன் ஈஸி வேற.. சொல்லிக்கொண்டு ஒரு ரெசிபியை எடுத்து வந்தாள் அவள்.
பாரேன் இவளை! எனக்கு தமிழ் தெரியும் என்று சொன்னதும் ஆங்கிலத்தை நிறுத்தி விட்டாளே! அப்பாவி போல விழிகளை உருட்டினாலும் கால் முதல் தலைவரை காரியக்காரி தான்! மனது அதற்கும் அவளை சிலாகிக்கவே செய்தது.
ஒற்றைக்கையால் காரட் வெட்ட முடியாது. வேண்டுமானால் அந்த காய்கறிகளை பிரித்து அடுக்கு என்றவன் காய்கறி வெட்டும் போர்டையும் கழுவிய காரட்டையும் எடுத்துக்கொண்டு மேஜைப்பக்கம் போனான்.
சிந்தக உங்களுக்கு தான் தமிழ் நல்லாவே வருதே..அதுக்குப்பிறகும் ஏன் என்னோட நீங்க சிங்களத்துலையே கதைக்கிறீங்க?
ஹலோ..நீ எப்போதோ சிங்களம் நன்றாக பேச ஆரம்பித்துவிட்டாய் இன்றை வரைக்கும் ஆங்கிலம் தானே என்னோடு பேசிக்கொண்டிருந்தாய்..
ஆனால் நீங்கள் அதற்குப்பதில் சிங்களத்தில் தானே சொல்வீர்கள்?
பச்..இதெல்லாம் ஒரு பிரச்சனையா? உன் மொழி எனக்கும் என் மொழி உனக்கும் புரியும் அப்படி இருக்கும் போது எந்த மொழியில் பேசினால் என்ன?
எனக்காக நீங்கள் தமிழ் பேச மாட்டீர்களா?
இதெல்லாம் ரொம்ப மோசமான தந்திரம் மைதிலி! எனக்காக நீ சிங்களம் பேசு என்று நானும் கேட்கலாம்! ஆனால் நான் அப்படிப்பட்டவன் கிடையாது. இதோ பார், என் வீட்டில் என் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்த எனக்கு என் மொழி தான் வசதி..என் வீட்டிலேயே என்னால் அன்னியமாக உணர முடியாது. இந்த விஷயத்தில் நான் மாறவே மாட்டேன்’
அப்போ நீ நீயாக இருக்க நான் எதுவும் செய்வேன் என்றெல்லாம் முன்னர் அடித்து விட்டது பொய்தானே?
நீ நீயாகத்தானே இருக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றேன் ஆனால் அதற்காக என்னை விட்டுக்கொடுப்பேன் என்று சொல்லவில்லையே..நான் அப்படி நினைத்தது போல நீ ஏன் என் அடையாளத்தோடு நான் இருக்கவேண்டும் என்று நினைக்கவில்லை?
அவள் உதட்டை கடித்தாள்.. சாரி.. நான் அப்படி நினைச்சுப்பார்க்கல..
விடுமா.. இப்போது நானும் நீயும் பேசிக்கொண்டிருப்பதற்கு என்ன குறை? அவரவர் வாயில் வருவதை பேசுவோம்.
அவள் மனதில் இன்னும் எதிரி முகாமை சேர்ந்தவனை மனதில் நினைத்து விட்ட குற்றவுணர்வு இருக்கிறது அதனால் தான் சகல விஷயத்திலும் தன் பக்கத்தை விட்டு விடக்கூடாது என்று அதே தியானமாக இருக்கிறாள் என்பதை அவன் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தான். எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்தே ஆகவேண்டும் என்பது அவனுக்குள் வெறி போல கனன்று கொண்டே இருக்கிறது. அவன் அதை எப்பாடு பட்டேனும் நடாத்துவான். அப்படியிருக்கும் போது ஆரம்பத்திலேயே அவரவர் எல்லைகளை வகுத்து விடுவது தான் நல்லது!
நாம் பேசுவது ஒகே..நம் வீட்டுக்கு வருபவர்களோடு இப்படி நாங்கள் பேசுவது நன்றாகவா இருக்கும்?
அவளையே ஒருகணம் ஊன்றிப்பார்த்தான் அவன்.
அதற்கெல்லாம் அவசியமே இல்லையே மைதிலி. நீ தான் நாங்கள் இருவரும் சேரவே முடியாது என்று சொல்லிவிட்டாயே.. இன்னும் முழுதாக ஐந்து நாட்கள் கூட இல்லை..அதன் பிறகு நாம் பார்ப்போமா என்று கூட தெரியாது. இதில் எதிர்காலத்தில் நம் வீட்டுக்கு வருபவர்களை பற்றி நீ கற்பனை செய்கிறாயா? நல்ல வேடிக்கை..
விளையாட்டு போலவே சொன்னவன் அவளது முகத்தை ஓரக்கண்ணால் கவனித்தான்.
உண்மை உறைத்திருக்கிறது. விழிகள் நிலைகுத்த அப்படியே நின்று கொண்டிருந்தாள் அவள்
எங்கள் வீட்டுக்கு வருபவர்களை பொறுத்து நாம் பேச்சு மொழியை மாற்றிக்கொள்ளலாம் மைதிலி..இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை!
மெல்லிய குரலில் அவளின் முந்தைய கேள்விக்கு பதில் சொன்னவன். அந்த செய்முறையில் சொன்னது போல முட்டையை எடுத்து அடிக்க ஆரம்பித்தான்.
WLM அத்தியாயம் 15
“நாங்கள் காதலித்த காலத்தில் கூட அதிகமாய் ஒன்றாக இருந்ததோ சுதந்திரமாக கலகலவென்று பேசிக்கொண்டதோ கிடையாது. ஆனால் இன்றைக்கு அந்த வீட்டில் அவனுடனான எனது தருணங்களில் என் வீட்டில் என் பெற்றோரோடு நான் இருக்கும் தளர்வும் ஆசுவாசமும் என்னையறியாமலே பற்றிக்கொள்ள என் நாவுப்பூட்டு கழன்று கொண்டிருந்தது. அவனிடம் என்னை மிகச்சுதந்திரமாக உணர்ந்தேன்.”
பாதிச்சிரிப்பு உதட்டிலேயே உறைந்து போக “நான் வெளியே இருக்கேன்” என்று முணுமுணுத்துவிட்டு நெஸ்டமோல்ட் கப்பை எடுத்துக்கொண்டு கீழே ஹாலுக்கு வந்தாள் மைதிலி.
மனமும் நாவும் உன் கட்டுப்பாட்டை விட்டு போய்விட்டன போலிருக்கின்றனவே… இப்போது என்னை பார்த்தால் இங்கிருந்து போவதற்காய் அவ்வளவு தூரம் அவனோடு சண்டை போட்டு போராடியவள் என்று யாராவது சொல்வார்களா? நீயே அவனிடம் விண்ணப்பம் வைத்து கிளம்பி வந்தவள் போலத்தான் இருக்கிறாய்!!! மனச்சாட்சி குத்திக்காட்டியத்தில் அவளுக்கு ரொம்பவே அவமானமாக இருந்தது.
வெளியே கதவுகள் திறந்து தான் இருந்தன. இருட்டில் கலந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த மரங்களை பார்த்துக்கொண்டே வெளியே வந்தவள் மெதுவாய் போய் படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள். உயரமாய் மரங்களாலேயே எல்லையிடப்பட்ட பெரிய பரப்பளவில் இருந்தது வீடு. கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் அளவு இருக்கலாம் அந்த வளவு. அவன் சொன்னது சரிதான், வெளியாரின் தலையீடுகள் அற்ற தனிமையான ஒரு இல்லம் இது!
அவளது வாழ்க்கை இந்த புள்ளியில் வந்து நிற்கும் என்று அவள் கற்பனை கூட செய்திருக்கவில்லை. காதலுக்காக மட்டும் தானே இவ்வளவு தூரம் அவள் துணிந்தாள்? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..இதன் பிறகு அவளது வாழ்க்கை பழைய பாதைக்கு திரும்பவே போவதில்லை!
ஒருவேளை அவனின் திட்டம் கூட அதுதானோ? அவளுக்கு அப்போதைக்கு எதையுமே சொல்லத்தெரியவில்லை.
தனக்கு பக்கத்தில் வாயகன்ற மண்பானை ஒன்றில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு அதில் பூக்கள் மிதந்து கொண்டிருக்க ஒரு பெருமூச்சுடன் விரல்களால் அந்த நீரின் அமைதியை கலைத்தபடி சுற்றிலும் பார்வையை செலுத்தியவள் மண்ணில் இருந்து வீட்டுக்கான படிக்கட்டுக்கள் ஆரம்பிக்கும் இடத்தில் அரைவட்டமாய் செதுக்கப்பட்டிருந்த கல்லைக்கண்டதும் ஆர்வமாய் எழுந்து போய் பார்த்தாள்!
சந்திரவட்டக்கல் தானே இது? புராதன காலங்களில் பலவகை உருவங்கள் செதுக்கப்பட்டு அரண்மனைகளினதும், தாதுகோபங்களினதும் நுழைவாயிலில் பதிக்கப்படும் அந்த அரைவட்டக்கல் அனுராத புரக்காலம், பொலநறுவைக்காலம் என்று இரண்டு காலங்களுக்குரியது. கால் மிதிக்கும் இடம் என்பதால் பொலநறுவைக்கால சந்திரவட்டக்கல்லில் இந்துமத தாக்கம் காரணமாக அதலிருந்த பசுவின் உருவம் நீக்கப்பட்டதாக வரலாற்றில் அவள் படித்திருக்கிறாள்.
பெரிய துட்டகைமுனு..அரண்மனை கட்டி சந்திரவட்டக்கல் பதிச்சிருக்கார்!.. மூஞ்சி முகரைக்கட்டை..
ஒவ்வொருநாளும் காலையில் இந்தக்கல்லின் மேலேயே கலர் கலராக ரங்கோலிக்கோலம் போட்டு வைத்தால் எப்படி இருக்கும் என்று அவனை வம்பிழுக்கும் ஆசை ஒன்று தோன்றி மறைய அது கொடுத்த புன்னகையோடு தன் சஞ்சலங்களை மறந்துபோய் அந்த வீட்டை சுற்றிப்பார்க்க எழுந்து கொண்டாள் அவள்.
ஹாலின் ஒரு பக்கம் புத்த மதத்தில் அவர்கள் வணங்கும் யந்திரம் மாட்டப்பட்டிருந்தது,
மறுபக்கம் தாவணி அணிந்து பொட்டு வைத்துக்கொண்டிருந்த அழகுப்பெண் ஒருத்தி குனிந்து தலையில் துண்டுடன் கோலம் போட்டுக்கொண்டிருக்கும் ஓவியம் இருந்தது. நமக்காகவா? என்று மனதுக்குள் பரவிய குளுமை அவள் உதட்டிலும் சிரிப்பை மீண்டும் ஒட்டவைத்தது.
அந்த வீட்டில் ஒவ்வொரு பகுதியும் அவளை இயல்பு மனநிலைக்கு எப்படியோ திருப்பிக்கொண்டிருந்தது. தான் எடுத்திருந்த மிகப்பெரும் ரிஸ்க்கை மறந்தாள். யாருக்கேனும் விஷயம் தெரிந்தால் என்னாகும் என்ற பயத்தை மறந்தாள். ஏன் நாளை எனக்கே என்னாகும் என்ற பதட்டத்தைக்கூட அவள் மறந்தாள். சிந்தக அவளுடையவன், இங்கே அவளும் அவனும் மட்டும் ஒன்றாக வாழும் கனவு நனவாகிக்கொண்டிருக்கிறது என்ற எண்ணம் மட்டுமே அவளை ஆட்கொள்ள அந்த வாழ்க்கைக்கேயுரிய இனிமையும் இலகுத்தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக அவளை சுற்றிக்கொள்ள ஆரம்பித்தன.
சோபாவுக்கு மேலே கொஞ்சம் பெரிய படம் சட்டமிடப்பட்டிருந்தது. சிவப்பு வர்ண க்ளோக் மற்றும் தொப்பியுடன் MBA பட்டமளிப்பு விழா புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தவனை பார்க்கவே மனதில் பெரும் நிறைவாக இருந்தது, சாதித்து விட்டானே! இந்த மூன்று வருடகாலத்தில் “மச்சி” என்ற புதுப்பெயரில் அவனுடைய கம்பனி வகைதொகையின்றி வளர்ந்ததும் இல்லாமல் உள்ளூர் உதைபந்தாட்ட போட்டிகளுக்கு ஸ்பான்சராக அடிக்கடி டிவியில் அவன் தென்படுவதுன்பு. அப்போதெல்லாம் தான் சாதித்ததை போலவே பெருமிதம் கொண்டு அவள் கண்கலங்குவதுண்டு!
நாங்கள் மட்டும் சேருவோமாக இருந்திருந்தால் என்னுடைய பட்டமளிப்பு புகைப்படத்தையும் இதற்குப்பக்கத்திலே மாட்டி வைத்திருக்கலாம்! ப்ச்…
பார்க்கிறான் பார் பார்வை! ஆன்ட்டி, அங்கிள் ரெண்டு பேருக்குமே கண் இந்த கலரில் இருக்காது. இவனுக்கு மட்டும் எப்படி இப்படியொரு கலர்? அந்த புகைப்படத்தை கண்களில் இருந்து ஆரம்பித்து கன்னத்தின் கோடு வரை நடுங்கும் விரல்களாய் மெல்ல அவளையறியாமலே வருடினாள் மைதிலி.
“சூப் ரெடி!!!”
திடுக்கிட்டுப்போய் கையை இழுத்துக்கொண்டு திரும்பியவள் அவன் எதையும் கவனிக்காதவன் போல ஆவி பறக்கும் இரண்டு கண்ணாடி கோப்பைகளை டைனிங் டேபிளில் வைத்துக்கொண்டிருப்பதை கண்டு விட்டு உதட்டை கடித்த படி அவனை நெருங்கினாள்.
“இடியாப்பம் கொஞ்சம் தூரத்துல இருந்து ஆர்டர் பண்ணி வாங்கினேன்..உங்களோடதை போல இருக்காதுதான். ஆனால் உனக்கு சாப்பிட இலகுவாக இருக்கும்.” இலகுவாய் பேசியபடியே அவளுக்கு பரிமாரியவன் “சாப்பிட முடியும் தானே?” என்று உறுதிப்படுத்தியபடி தன்னுடைய சூப் கோப்பையை அருகே இழுத்துக்கொண்டாள்.
இருவரின் தனிமையில் பதட்டப்படுவது நான் மட்டுமல்ல என்று அவளுக்கு புரிந்தது. அவனும் டென்ஷனாக தான் இருக்கிறான்!
“வலக்கை ஒகேயா தானே இருக்கு! சாப்பிடுவேன்” என்றபடி இடியாப்பத்துக்கு என இருந்த கறியை தவிர்த்து விட்டு சூப்பையே அதன் மேலே விட்டுக்கொண்டு இடியாப்ப சிக்கலை பிரித்தவள் மெல்ல வாயிலிட்டாள்.
இரண்டு நாட்கள் காய்ந்து போயிருந்த வாய்க்கு சூப்பிலிருந்த மிளகின் காரம் அமிர்தம் போல இருந்தது.
“சூப் செமயா இருக்கு..இடியாப்பம் கொஞ்சம் ரப்பா தான் இருக்கு. ஆனாலும் சூப் சேர்த்து சாப்பிடும் போது ஒண்ணும் தெரியல..” என்று பெரியமனதுடன் அந்த இடியாப்பத்தை மன்னித்தவள் அவன் இடியாப்பத்தை தொடாமல் சூப்பை மட்டும் சாப்பிடுவதை கண்டுவிட்டு “உங்களுக்கு இரவு சூப் மட்டும் போதுமா?” என்று கேட்டாள்.
ஹ்ம்ம்…. இப்போதெல்லாம் இரவில் சோறு சாப்பிடுவதை நான் நிறுத்தி விட்டேன். முன்பு நிறைய விளையாடுவேன்..ஆகவே அது சரியாக இருந்தது. இப்போது விளையாடுவதே அபூர்வமாகி விட்டது. கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாலும் தொப்பை போட்டு விடுகிறது!!!
ஹா ஹா ஹா
நீயும் கொஞ்சமே கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் மைதிலி. உனக்கு சூட் ஆகுது!!! ரசனையாய் அவனுடைய கண்கள் அவளைத்தொட்டு போயின.
சின்னதாய் அசட்டு சிவப்பொன்று முகத்துக்கு ஏறிக்கொள்ள சாப்பாட்டை பார்ப்பதுபோல அவள் குனிந்து கொண்டாள். அதன் பிறகு இருவருக்குமிடையில் சாப்பிட்டு முடித்து கழுவி வைக்கும் வரை மௌனமே ஆட்சிசெய்து கொண்டிருந்தது.
அவளை எதையும் கழுவ அவன் அனுமதிக்கவில்லை கையில் தண்ணீர் பட்டுவிடும் என்று வெளியே விரட்டிவிட்டான்.
ஹாலுக்குள் இருந்த குட்டிப்புத்தர் சிலைக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு எதிரே தென்பட்ட இரட்டை அறைகளில் ஒன்றில் லக்ஷ்மியின் படம் இருப்பதைப்போன்று தோன்ற ஆர்வமாய் உள்ளே நுழைந்தாள் மைதிலி..
பூஜையறை!!! யாருக்கானது என்று சொல்லியா தெரியவேண்டும்?
ஒரு பக்கம் முழுக்க அடைத்துக்கொண்ட பிரமாண்டமான சிவன் உருவப்படம். அது நாம் வணங்கும் படமாக இல்லாமல் கொஞ்சம் பான்டசி கலந்து கண்காட்சிகளுக்காக வரையப்பட்ட படம் போல அழகாய் இருந்தது.
அடுத்தபக்கம் முழுக்க சுவரில் படங்கள் மாட்டப்பட்டு இருந்தன. முதல் பார்வையிலேயே சிரிப்பு பொங்கி வர சுவரில் சாய்ந்து கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
சிறு குழந்தையொன்று க்ளேயில் செய்த நாய் பூனைகள் தோற்றத்தில் அப்படி இல்லாவிட்டாலும் அவர்களின் முயற்சி அப்படியே நெஞ்சை அள்ளிக்கொண்டு போகுமே..அப்படித்தான் இருந்தது அவளுக்கு.. அந்த முயற்சியை செய்தவனை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட தோன்றிய உணர்வை கட்டுப்படுத்தவே முடியவில்லை!
படத்தட்டு,,செயற்கை நித்யகல்யாணி மற்றும் மல்லிகைப்பூக்கள், ஊதுபத்தி வாசனை.. சுற்றிப்பார்க்க சிரிப்பு அப்படியே இதழ்களில் உறைந்தது.
காத்திருந்தேன் காத்திருந்தேன்..என்று சொன்னான் தான் அப்போதெல்லாம் அது அவளுக்கு பெரிதாக உரைக்கவில்லை. ஆனால் இப்படியெல்லாம் பார்த்துபார்த்து செய்து வைத்துக்கொண்டு அவன் இருப்பான் என்று அவள் எண்ணியும் பார்க்கவில்லை. இவள் மட்டும் இங்கே வராமல் இருந்திருந்தால்??? பாவம் இந்த அடையாளங்களோடேயே வாழ்ந்திருப்பானா? ஹையோ இந்த அன்புக்கு அவள் தகுதியானவள் தானா? கண்ணை கரித்துக்கொண்டு வந்தது..
நான் இவனுக்கு ஒன்றுமே செய்யவில்லை தானே!
அவளது சிந்தனையை அறுத்து “என்ன அவ்வளவு சிரிப்பு? பிடிக்கலையா?” என்று கேட்டபடி பூஜையறைக்குள் நுழைந்தான் சிந்தக!
“ரொம்ப பிடிச்சிருக்கு! ஆனால் சில படங்களின் இடங்களை மாற்றியாக வேண்டும்!” தேர்வெழுதி விட்டு காத்திருக்கும் மாணவன் போன்ற அவன் முகம் பார்த்ததும் அவளையறியாமலே மீண்டும் புன்னகை பூத்து விட்டிருந்தது.
ஏன் சிரிக்கிறாய்??
மீண்டும் பொங்கி வந்த சிரிப்போடு “இல்ல…இந்த படத்தை எந்தக்கடைல வாங்கினீங்க?” என்றபடி அவள் கை காட்டிய இடத்தில் தம்பூரோடு நாரதர் நின்று கொண்டிருந்தார்!
“இங்கே எங்கே வாங்கறது? நானே கூகிளில் தேடி டவுன் லோட் பண்ணி பிரேம் பண்ணி வச்சேன்.. எனக்கு தெரிஞ்சதை மட்டும் செலெக்ட் பண்ணிட்டு முக்கியமான யாரையும் விட்டுட்டா? அந்த பயத்துல தான் நான் எல்லாத்தையும் பிரிண்ட் போட்டு வச்சேன்..யார்கிட்டயும் கேட்கவும் முடியாதுல்ல?” அவனும் சிரித்தபடியே விளக்கம் சொன்னான்
“அது வந்து இவரை நாங்கள் பூஜையறையில் வைத்தது வணங்குவதில்லை! அழைப்பில்லாமலே வந்து கலகம் செய்பவர் இவர்..நீங்கள் அவரை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்ததும் இல்லாமல் பூஜையறையில் வேறு மாட்டி வைத்தால் எப்படி? “ என்றவள் நாரதரின் மகிமைகளை பற்றி நீளமாய் எடுத்து சொன்னாள்.
லேசான அசட்டு சிரிப்புடன் நாரதர் படத்தை கழற்றி கையில் எடுத்து விட்டவன் இன்னும் சிரிப்பு முகம் மாறாமல் நின்றவளின் தலையில் வலிக்காமல் கொட்டினான்.
“எனக்கு நாளைக்கு நல்லூர் கந்தனை டவுன்லோட் பண்ணி கொடுங்க!அப்புறம் இந்த சிவாவை அறையில மாட்டி வைக்கலாம். இங்கே வைக்க நான் வேற சிவன் படம் தருகிறேன்.”
அப்புறம்? வேறே என்ன பண்ணணும்?
“படங்கள் எல்லாமே இடம் மாற்ற வேண்டும். சாமியறையில் இப்படி ஜோடி ஜோடியாக பொதுவாக வைப்பது இல்லை. முப்பெரும் தேவிகள் ஒன்றாக முருகனும் கணபதியும் ஒன்றாக இப்படித்தான் அனேகமாக வைப்பார்கள். “
“நான் கூகிளில் யார் மனைவி யார் என்று தேடிப்பார்த்து தான் வைத்தேன்!!!”
ஐயோ..கூகிள் அப்படித்தான் சொல்லும் அதற்காக? ஜோடியாக வைத்தெல்லாம் வணங்க முடியாது!!! சொல்லியபடியே மடமடவென தேவியர் மூவரையும் ஒன்றாக்கியவள் பிரம்மா விஷ்ணுவை கழற்றி இவன் கையில் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக பிள்ளையார் முருகன் வைத்து கொஞ்சம் தள்ளி கிருஷ்ணனையும் வைத்தாள்.
கழற்றவா என்று கேட்காமல் உரிமையோடு அவள் எல்லாவற்றையும் மாற்றி அடுக்குவதை பார்த்து இதட்கடையில் சிறு சிரிப்பு அரும்ப “ஏன் உங்களுக்கு பிரிப்பதிலேயே அவ்வளவு ஆனந்தம்?” என்று தூண்டில் போட்டான் அவன்!
அது சரியாக அவன் எதிர்பார்த்த இடத்தில் போய் தைக்க “ஹலோ…என்ன டபிள் மீனிங்கா? என்று போர்க்கொடி உயர்த்தினாள் அவள்.
“ஆமாம் என்றே வையேன்..எப்போதும் பிரிந்து போவதிலும், பிரிப்பதிலும் தான் குறியாக இருக்கிறீர்கள் என்று பார்த்தால் பாவம் கடவுள்களை கூட ஜோடியாக இருக்க விடுவதில்லை!” வேண்டுமென்றே சீண்டினான் அவன்.
“மிஸ்டர்..விட்டா பேசிட்டே போறீங்க! நீங்கள் மட்டும் என்ன? உங்கள் புத்தருக்கு யசோதரா மனைவி தானே? இருவரையும் சேர்த்தா வைத்திருக்கிறீர்கள்? பாவம் அந்த மனுஷனை ஒரு அரசமரத்துக்கு கீழே தன்னந்தனியாகத்தானே உட்கார வைத்திருக்கிறீர்கள்? சரி இங்கேயாவது பாதுகாப்பாய் கூரைக்கு கீழே இருக்கிறார் என்று பார்த்தால் பாவம் எங்கள் வன்னிக்காட்டுக்குள் கூட தன்னந்தனியாக இருக்கிறார் மனுஷன்!!” அவளது குரலில் கிண்டல் நிரம்பி வழிந்தது.
“ஏய்!!! இன்னொரு மதம் பற்றி முழுசா தெரியாம கிண்டல் பண்ண கூடாது!!”
“ஹலோ.. நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டா பேசினீர்கள்? சரி அதை விடுங்கள் உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே..ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? பஸ்ஸில் இடம்பிடிக்க யன்னல் வழியே பாக்கை போடுவதை போல ஊரில் எங்காவது அரச மரம் இருந்தால் போதும் அங்கெல்லாம் ஒரு சித்தார்த்தரை நட்டு வைத்து விடுவது!!! செய்வது எல்லாமே படிப்பது வேதம் எரிப்பது சிவன் கோவில் வகை வேலைதான்! இவரு வந்துட்டார் பேசறதுக்கு!”
அவள் சொன்ன விதத்தில் பீறிட்ட சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியவன் “ஏன் இப்போது சண்டையை இழுக்கிறாய்?” என்று அவளை முறைத்தான்
நீங்கள் தானே முதலில் எங்களை வம்புக்கு இழுத்தீர்கள்?
நான் உண்மையை சொன்னேன்.
நானும் உண்மையை தான் சொன்னேன்.
ஒரு சில கணங்கள் மாறி மாறி முறைத்துக்கொண்டே நின்றவர்களில் மைதிலி தான் முதலில் சிரிக்க ஆரம்பித்தவள் பிறகு அவனும் வெடிக்க சற்று நேரம் அவர்களின் இணைந்த சிரிப்பொலி அந்த வீட்டுக்குள் இன்னிசையாய் பரவியது.
இயல்பாய் அவளின் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன் அந்த வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் அவளுக்கு சுற்றிக்காட்டினான். ஏன் இவற்றை இங்கே வைத்தேன்..எதிர்காலத்தில் என்ன செய்ய திட்டமிட்டு இப்படிக்கட்டினேன் எல்லாவற்றையும் அவன் விளக்கி சொன்னான். அந்த வீட்டின் கட்டமைப்பில் தன் உணர்வுகளின் மீதான கரிசனம் தான் முதன்மையாய் வைக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்து கொள்ள முடிந்தது மைதிலிக்கு. இதையெல்லாம் அவளுடைய வீட்டினர் புரிந்து கொள்வார்களா?
ஹேய் மைதிலி!!!!
எ…என்ன சொன்னீங்க?
எலியட்ட யங்த கியலா மங் அஹுவே!அவனுடைய பார்வை அவளை ஊடுருவி நினைவுகளை வெளியில் எடுத்து விடும் போலிருக்க இமைகளை தாழ்த்தினாள் அவள்..
வெளியே போவாமாவா? இந்த இருட்டுக்குள்ளேயா? என்று நினைத்தவள் பதில் கேள்வி கேட்காமல் தலையாட்டினாள்.
வெளியே படிகளில் இறங்கியவன் ஓரமாய் இருந்த சுவிட்சை தட்ட மெல்லிய வெளிச்சம் இருளை விரட்ட ஆரம்பித்தது. பக்கவாட்டில் நடந்தவன் மாமரத்தின் கீழிருந்த சீமெண்ட் பெஞ்சினை கையினால் ஒரு தடவை தட்டி விட்டு அமர்ந்து பக்கத்தில் அமரும் படி அவளுக்கும் சைகை காட்டினான்.
இருவர் மட்டுமே அமரக்கூடிய குட்டி பெஞ்ச். இரண்டு பக்கமும் கைப்பிடிகள் இல்லாவிட்டாலாவது கொஞ்சம் விலகி உட்காரமுடியும். ஆனால்… அவளது கண்களில் என்ன கண்டானோ கையை மெதுவாக பிடித்திழுத்து தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.
சுற்றிலும் இருள், லேசான குளிர்காற்று தனிமை, தன் தோள்களை உரசியபடி அமர்ந்திருந்த அவன்..எல்லாம் சேர்த்து இதயத்தில் தறிகெட்டு ஓடிய ரயில் போல படபடக்கும் உணர்வுகளோடு அமர்ந்திருந்தவள் தன் கையை அவன் தன் கைக்குள் போதித்து கொள்ள கொதிக்கும் பாலில் குளிர் நீர் பட்டதை போல அடங்கிப்போனாள்.
“ நான் உங்களை டீவில பார்ப்பேன், ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். இப்போ கூட ரொம்ப பெருமையா இருக்கு உங்க வளர்ச்சி பார்த்து..ஏன்னா நீங்க ஆரம்ப கட்டத்தில் ஸ்க்வீசிஸ் கம்பனியாக இருந்தபோதே பார்த்திருக்கிறேன் இல்லையா.. “ அவள் புன்னகைக்க அவனும் மலர புன்னகை செய்தான்.
ஒக்கம ஓயாநிகிந்தா பட்டங்கத்தேக்க தமாய்! எல்லாமே உன்னில் தான் ஆரம்பித்தது. என் வளர்ச்சி உன்னை அடையும் ஒரு படியாக இருக்கக்கூடும் என்பதும் ஒரு நப்பாசை தான்..பிடிவாதமாய் MBA சேர்ந்தேன்.. வார இறுதி நாட்களில் கொழும்பு போய் வர வேண்டி நேரிட்டது. உன் உலகம் விரிந்தது. அதிர்ஷ்ட வசமாக என் க்ளாசிலேயே கைத்தொழில் மேம்பாட்டு அமைச்சில் பணிபுரியும் ஒருவர் மற்றும் பெரும் கம்பனிகளின் உத்தியிகத்தர்கள் என பலர் இணைந்திருந்தார்கள். நாங்கள் நண்பர்கள் ஆன பிறகு தான் அரசாங்கமே என்னை போன்ற தொழில் முனைவர்களுக்கு எவ்வளவு வாய்ப்புக்களை உதவிகளை வழங்க காத்திருக்கிறது என்று அறிந்து கொண்டேன்.. மற்ற நண்பர்கள் மூலமாக அவர்களின் கம்பனிகளை போய் பார்த்தேன்..தொடர்புகளை வளர்த்துக்கொண்டேன். இரண்டு நாள் கொழும்பில் தங்கிருப்பேன். ஒரு நாள் வகுப்புக்களுக்காக என்றால் இன்னொரு நாள் என் தொழிலுக்காக..
“சரியான துறையில் சரியான மனிதர்களின் வழிகாட்டலுடன் ஆரம்பித்ததாலேயோ என்னவோ இம்முறை எல்லாமே எனக்கு தொட்டதெல்லாம் துலங்கியது. ஆண்டவனின் ஆசீர்வாதம்.. ஆரம்பித்து வைத்தவளும் எனக்கு எல்லாமாக இருப்பவளும் நீ என்பதால் தான் எம்ம்மிருவரின் முதலெழுத்துக்களையும் கொண்டு….”
எனக்கு தெரியும்…என்று ரகசியமாய் சொன்னாள் மைதிலி.
“நீ புரிந்து கொள்வாய் என்று எனக்கும் தெரியும்” என்று அதே தொனியில் சொல்லியவன் தான் பற்றியிருந்த அவளுடைய கைகளை தன் உதடுகளுக்கு எடுத்துச்சென்று அழுத்தமாய் முத்தத்தை பதித்தான் சிந்தக. “நன்றி மைதிலி. நீ மட்டும் என்னை தேடி வராதிருந்தால் நான் என்னவாகியிருப்பேன்? சொல்லும் போதே அவனின் குரல் கரகரத்தது. பதில் ஏதும் தோன்றாமல் அவனை ஏறிட்டுப்பார்த்தவள் வழக்கம் போலவே அந்த கபில சுழலுக்குள் சிக்கிக்கொண்டாள்
நீயாவது என்னை டிவியில் பார்ப்பதாக சொன்னாய். எனக்கு என்னிடம் இருந்த ஒரே ஒரு புகைப்படம் மட்டும் தான் தஞ்சம்.. என்று பெருமூச்சு விட்டவன் சிறிது மௌனத்தின் பின் “ஏன் வந்தாய்..இவ்வளவு நாளும் இருந்துவிட்டு திடீரென ஏன் வந்தாய்? அப்படி வந்தும் கூட என்னை பார்த்துவிட்டாவது போக நீ நினைக்கவில்லையே” என்று ஆதங்கமாய் கேட்டபடி அவள் முகத்தை தன்புறம் திருப்பினான் ஏதோ அவளுக்குள் இருந்து பதிலை எடுத்துக்கொள்ள முனைபவன் போல..
ஏன் வந்தேன்… தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள் மைதிலி.
ஒரு கட்டத்தில் எனக்கு வாழ்க்கை வெறுமையாய் போய்விட்டது சிந்தக.. என்னை சுற்றி எல்லாரும் சிரித்துக்கொண்டிருப்பார்கள். நான் மட்டும் வெறுமனே மேலாக சிரித்துக்கொண்டிருப்பேன். நான் ஒன்றை நினைத்து விட்டால் அதிலேயே பிடிவாதமாய் நின்று விடுவேன். நம் விஷயத்திலும் அப்படித்தான் இருந்தேன். இனிமேல் நினைக்கவே கூடாது என்று அடிமனதில் போட்டு புதைத்து விட்டு சதா அந்த சிந்தனைகளே வராத வண்ணம் மனம் களைத்துப்போகும் வண்ணம் எதவையாவது செய்து கொண்டே இருப்பேன். ஆனால் என்னை சுற்றி உலகம் மாறிக்கொண்டே வந்தது..
அன்றைக்கு எனக்கு எங்களை அழித்த எதிரிகள் முகாமை சேர்ந்தவனை உணர்வே இல்லாமல் திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது. குற்ற உணர்ச்சி என்னை கொன்றுவிடும் என்று தானே சொன்னேன். அது உணர்ச்சிகளின் வேகத்தில் முதிர்ச்சியில்லாத மனநிலையில் நான் சொன்னது தான்.
எங்களுக்கு நிரஞ்சன் என்று ஒரு ஒரு அசிஸ்டன்ட் லெக்சரர் இருந்தார். தமிழ் மாணவர்களுடைய ஆதர்சம் அவர்! காரணம் விரிவுரைகளிலேயே எல்லாரும் இருக்கும் போது மிகத்தைரியமாக குருடர்கள் பார்த்த யானை போல நீங்கள் எல்லோரும் இந்த பிரச்னையை பார்க்கிறீர்கள் என்று சாடுவார். கஷ்டமான இடங்களில் முழு மாணவர்களின் முன்னேயும் தமிழில் எங்களுக்கு புரிய வைக்க அவர் தயங்குவதேயில்லை. எங்களுக்கெல்லாம் பாசமான அண்ணா அவர். ஆனால் அவருடைய காதலி ஒரு சிங்களப்பெண் என்று எங்களுக்கு பிறகு தான் தெரிந்தது. ஆக்ரோஷமாக அவரை பிடித்து சண்டை போட்டோம். அப்போது அவர் சொன்னது இதுதான்..
“எவ்வளவு தடவைகள் ஊரோடு இடம்பெயர்ந்திருக்கிறோம். கூழோ கஞ்சியோ மொத்தமாக காய்ச்சி குடிக்கும் போது இந்து கிறீஸ்தவன் முஸ்லிம் என்று நாங்கள் மத வேறுபாடுகளை பார்த்திருக்கிறோமா? அனைவரும் திருப்தியாக உண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைத்தானே பொது நோக்கமாய் கொண்டு ஒரே சமூகமாய் ஒன்றாய் நின்றோம்? இதேபோலத்தான் நாங்கள் இருவருமே மனிதனை மனிதனாக சமத்துவத்துடன் நடத்தப்படவேண்டும் என்ற கொள்கைகொண்டிருக்கிறோம். என்னையும் நான் சார் சமுதாயத்தையும் அவள் கறைப்படுத்த மாட்டாள் என்று நான் நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாய நோக்கத்தை விட இன்னும் உங்களோடு பகிர முடியாத எங்களிருவருக்கும் மட்டுமே சொந்தமான இனிய விஷயங்களிலும் ஒரே மனமாக இருக்கிறோம். மனம் ஒன்றிய பிறகும் பிறப்பு சார் வேறுபாடுகளை மனத்தால் அண்ட விடுவது நல்லமனிதனுக்கு அழகல்ல!”
அன்றைக்குத்தான் என் மனம் முதன் முதலாய் நம்மை குறித்து இன்னொரு கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்தது. ஆனாலும் என் மனதில் அழிக்கவே முடியாத ஓவியமாக நீங்கள் படிந்திருக்கிரீர்கள் என்பது தெரியாமல் நானாகவே வலியப்போய் ஏன் வில்லங்கங்களை தேடிக்கொள்வான் என்ற மனநிலையோடு ஒதுங்கியே இருந்தேன்.
காலம் மாற ஆரம்பித்தது.. அதே போலத்தான் என் உலகமும்! நாங்கள் சர்வதாரணமாய் யாழ்ப்பாணம் பஸ்ஸில் போய் வர ஆரம்பித்தோம். சிங்கள பஸ்..கண்டக்டர் டிரைவர் எல்லாருமே அவர்கள்… போகும் வழி தான் அப்படி மாறியது என்று பார்த்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் சிங்கள மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள். சர்வசாதாரணமாக அவர்கள் டவுனில் சுற்றுவார்கள்.. சுற்றுலா பயணிகளாக வர ஆரம்பித்தார்கள்..நான் டவுனை சேர்ந்தவள்.. வீட்டுக்கு போகும் போதும் அங்கே உலாவும் போதும் ஒரு சிங்களக் குரலையாவது கேட்காமல் இருக்க முடியவில்லை. எல்லாமே உங்களைத்தான் நினைவு படுத்தும்..அவர்களை காணும் போதெல்லாம் என் மனசாட்சி என்னை குத்தும்… இவ்வளவு பேர் சர்வதாரணமாக சுற்றுகிறார்கள்..வியாபாரம் செய்கிறார்கள்..வேறுவழியின்றி எல்லோரையும் ஏற்றுக்கொள்ளத்தானே செய்கிறார்கள். நான் மட்டும் ஏன் நமக்காக போராடக்கூடாது? ஏன் நாங்கள் இருவரும் சேரகூடாது என்று..
எனக்குள் நடந்துகொண்டிருந்த அந்தப் போராட்டம் உங்களுக்கு சாதகமாக தீவிரமாகிக்கொண்டே வந்தது. என்னுடைய பாதுகாப்புவேலிகளை உடைத்துக்கொண்டு உங்கள் நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. அப்போது தான் நீங்கள் என்னை தொடர்பே கொள்ளாமல் விலக்கி வைத்துவிட்டீர்களே…நானாக எப்படி போவது என்ற ஏக்கம் உருவானது.
இந்த வருடம் ஹாஸ்டலில் இரண்டு பேருக்கு ஒரு அறை வீதம் கொடுத்திருந்தார்கள். நானும் சுமியும் ஒன்றாக போனோம். அங்கே போனதும் தான் எனக்கு பிரச்சனை ஆரம்பித்தது. அவள் சுதாவை காதலிக்க ஆரம்பித்திருக்கிறாள். பாதி நேரம் நான் அங்கிருப்பதே அவளுக்கு கண்ணில் தெரியாது. அவனுக்காக அசைன்மென்ட் செய்வது சின்ன சின்ன உணவுகள் செய்வது என்று அவளுடைய உலகமே மாறிப்போய் விட்டது..தனிமையாய் உணர்ந்த நான் உங்களை ரொம்பவே தேட ஆரம்பித்தேன். நீங்களும் என்னை தொடர்பு கொள்ளவேயில்லையே..அதுவும் சேர்ந்து கொண்டு என்னை வாட்டியது.
வந்து பார்க்க வேண்டும் என்று ரொம்பவே ஏங்குவேன் ஆனாலும் என்னுடைய பக்கம் முழுமையாக சரி என்று தெரியாமல் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்க கூடாது என்று உறுதியாக இருந்தேன்..அதற்கு அடுத்த லீவுக்கு வீட்டுக்கு போய் எப்படியோ தைரயத்தை வரவழைத்துக்கொண்டு வீட்டில் விஷயத்தை சொல்ல அப்பா பதில் கூட பேசவில்லை. அப்படியே கதிரையில் சுருண்டு விட்டார். முதல் ஹார்ட் அட்டாக்!!! சொன்னேன் தானே…” இப்போது சொல்லும் போதும் அவளுக்கு அந்த விஷயத்தை சாதாரணமாய் கடக்க இயலவில்லை.
எனக்கு எப்படியிருக்கும் சொல்லுங்கள்? எனக்கு அப்பா என்றால் உயிர்! அவரின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் ஒன்றை நான் எப்படி நாடுவேன்..இனிமேல் வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.. ஆனாலும் உங்களை பார்க்காதிருக்க முடியவில்லை. நேரில் ஒருதடவையாவது உங்களை பார்த்துவிடவேண்டும் என்ற அசட்டு எண்ணம் என் பகுத்தறிவை ஜெயித்து விட கிடைத்த வாய்ப்பில் ஒட்டிக்கொண்டு இங்கே வந்து விட்டேன்..ஆனால் மகா இல்லுப்பள்ளம வந்ததுமே உணர்வுகள் என்னை சுழற்றியடிக்க ஆரம்பித்து விட மிரண்டு தான் போனேன்.. உங்கள் வீட்டுக்கு போனதும் என் நிலைமை சொல்லவே முடியாது.. அந்த நேரம் வீட்டில் உங்களைக்கண்டிருந்தால் கதறிகொண்டு வந்து நெஞ்சில் விழுந்திருப்பேன்.. என்னை நான் அப்படி வெளிக்காட்டிக்கொண்டால் நீங்கள் என்னை போக விட்டு விடுவீர்களா? இது என் அப்பாவின் உயிர்ப்பிரச்சினை சிந்தக.. என் சுயநலத்தால் அவரை இழந்துவிட முடியாது. அதுதான் நான் உங்களைப்பார்க்க பயந்து ஓடினேன்.. ஆனால் விதியின் விளையாட்டை பார்த்தீர்களா?” அவளுக்கு கண்ணில் நீர் நிற்காமல் வழிந்தது.. “ இனிமேல் நான்…..”
“வேண்டாம் கண்ணம்மா.. விட்டு விடு.. நம் தலையில் எப்படி எழுதியிருக்கிறதோ அது நடக்கட்டும்..” அவளை இழுத்து நெஞ்சுக்குள் சிறு குஞ்சாக அணைத்துக்கொண்டவன் அவளின் உச்சந்தலையில் தாடையை பதித்துக்கொண்டான்.
கூச்சத்தில் நெளிந்தவள் நெளிந்து வளைந்து விலக முயன்றாள்.
ஹா ஹா ஹா வாய்விட்டு சிரித்தபடி அவளை விடுவித்தவன் குறும்பாய் அவள் கண்களையே பார்க்க முயல அழுகை மறந்து முகம் சிவந்து விட்டு அவன் தோளில் ஒரு அடி வைத்தாள் அவள்.
சிரித்துக்கொண்டே வானத்தை பார்த்தவன் “நிலா, நட்சத்திரங்கள் எல்லாம் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கிற போல இருக்கு…” என்றான்.
ஹ்ம்ம்.. அவ்வளவு குளிராவும் இல்ல…
பாட்டு போடலாமா? என்று அவளிடம் கேட்டபடி அவன் மொபைலில் இருந்து ஒரு ஹிந்திப்பாடலை ஒலிக்க விட்டான்..
ப்ச்,,,இதுல ஒரு மண்ணாங்கட்டி பீலிங்கும் வரல…எனக்கு தமிழ்ப்பாட்டு வேணும்..இல்லையா?
ரெண்டே ரெண்டு பாட்டு வச்சிருக்கேன்…..
எது?
சின்ன சின்ன ஆசை, உயிரே….
அனேகமாக எல்லா சிங்கள இளைஞர்களும் இந்த ரெண்டு பாடலையும் தெரிந்து வைத்திருப்பார்கள்..இவனும் வேறுபாடில்லாமல் அதையே சொன்னதும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது..
“ரெகார்ட் தேஞ்சே போச்சு போங்க…வாடா மாப்பில்லே..வழைபல்ல தொப்பில்லே.. சிந்தாக் தா சிந்தாத் சிந்தாத்.. இதையும் டவுன்லோட் பண்ணிருக்கலாமே..அவள் கலாய்க்க ஆரம்பித்தாள்
“ஹா ஹா ஹா.. லிரிக்ஸ் புரியாம பாட்டெல்லாம் மனசுல நிக்காது!”
ஏன் எனக்கு மொழி தெரியாத போதே இராஜ், பாத்ய சந்தோஷ் பாட்டெல்லாம் பிடிக்குமே..தேடல் இருக்கணும் சாரே!
அதிகமா பேசக்கூடாது..முடிஞ்சா நீ தான் ஒரு பாட்டுப்பாடேன்..சிரித்தபடி இவள் புறம் திரும்பி இமைகளை உயர்த்தி கண்ணாலேயே சவால் விட்டான் அவன்
அவனையே பார்த்தாள் அவள்..இந்தக்கணம் இனி எப்போதாவது அவளுக்கு திரும்ப கிடைக்குமா?
“கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு..
உன் கண்ணு ரண்டும் என்னை மயக்கும் தவுசண்ட் வால்ட்டு பவரு..
கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு..”
நான் பாடுவது அவனுக்கு புரியாதென்ற ரகசிய சிரிப்போடு பாட ஆரம்பித்தாள் அவள்.
அவன் சிரிப்பு முகம் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு அர்த்தம் கேட்டான்.
“அர்த்தம் வந்து In the midst of dark night, you are sitting under the tree , gazing at the glittering sky………….”
அவள் தொடர்ந்து கொண்டே போக…”பியூட்டிபுல்” என்றபடி அவளது விளக்கத்தில் குறுக்கிட்டு அவளை நெருங்கி கன்னத்தில் முத்தமிட்டவனின் கண்களில் இருந்த சிரிப்பு அப்போது அவளுக்கு புரியவில்லை.
மொபைல் போன் அடித்து அவர்களை வெட்டிப்பிரித்தது..
”அம்மா காலிங்!”
யாரோ முகத்தில் ஐஸ் வாட்டர் தெளித்ததை போல பதறிப்போய் ஆன்சர் செய்தாள் அவள்
சாப்பிட்டாச்சா மிது? கான்டீன்ல இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? என்று வெள்ளையாய் கேட்ட தந்தையின் குரல் அவளுக்கு அழுகையை வரவழைத்தது.
இப்படி ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி இதுவரை இருந்த உணர்வை மூழ்கடித்து அவளை சூழ்ந்துகொண்டது.
அவளின் மனநிலை உணர்ந்தோ என்னவோ ஆறுதலாய் அவளின் தோளில் அவன் கைவைக்க கோபமாய் தட்டி விட்டாள் அவள்..
இவனால் தானே இவ்வளவும்!!!! நானே வேண்டாம் என்று தானே விலகிப்போனேன்..அதையும் இதையும் சொல்லி இப்படி நம்பிக்கை துரோகம் செய்ய வைத்து விட்டானே என்ற இயலாமையில் அவனை வெறித்தவள் பிறகு ஒரே ஓட்டமாக தான் இருந்த அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக்கொண்டாள்.
WLM அத்தியாயம் 14
ஒவ்வொரு தடவையும் நான் அவனை விட்டு விலகிச்செல்லும் போதெல்லாம் விதிவசத்தால் எப்படியோ அவனருகிலேயே மீண்டும் மீண்டும் போய் சேர்ந்துகொண்டிருந்தேன். எண்ணங்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்குமாமே.. அப்படியாயின் எங்கள் இருவரின் எண்ணங்களும் அறிவின் திட்டங்களை விட மிக மிகப்பலமானவையாய் இருந்திருக்க வேண்டும்!நாங்கள் மீண்டும் மீண்டும் சந்தித்துக்கொண்டே இருந்தோம்.
மசமசவென்ற இருளுக்குள் ஆங்காங்கே மரங்கள் அடர்ந்து கிடக்க நடுவிலேயே காட்டாறு பொங்கி வழிந்து கொண்டிருந்தது. சின்னச்சின்ன விலங்குகள் எல்லாம் பதறி ஓடி அருகே இருந்த மரங்களில் தொற்றிக்கொள்ள சாம்பல் வர்ணமான சின்ன கரடியொன்று தண்ணீரில் அடிபட்டபடி கையில் அகப்பட்ட மரக்கிளைகளை தாவிப்பிடிக்க முயன்று கொண்டு அலையோடு வந்துகொண்டிருந்தது.
பக்கத்திலேயே மரங்களில் தொற்றியபடி ஒரு பெரிய கரடி குட்டியை எப்படியாவது காப்பாற்றி விடும் வேகத்தில் பதைபதைத்து ஓடிவருகிறது. பாவம் குட்டியின் அலறலை விட பெரியகரடியின் பதைபதைப்புத்தான் மனதை பிசைய வைத்தது. அவர்களுக்கு எதிர்த்திசையில் இன்னொரு கரடியொன்றும் அந்த குட்டியையே கண்களில் தேக்கிக்கொண்டு ஆற்றுக்கு எதிராக பாய்ந்து வந்துகொண்டிருந்தது. அதனிடம் ஒரு சொட்டுக்கண்ணீரில்லை வெளிப்படையான பதறல் இல்லை…வேக வேகமாய் வந்து கொண்டிருந்த அந்த கரடி ஒரு சந்தர்ப்பத்தில் நீரின் மேலேயே தாவி அந்த குட்டியை பற்றிக்கொண்டு எதிர்ப்புற மரக்கிளையில் தாவி போராடி ஒருவழியாய் அதை கரை சேர்த்து விடுகிறது. மற்றவன் கைகளில் தன் குட்டி சேர்ந்ததைக்கண்டதும் பெரிய கரடி ஓலமிட ஆரம்பிக்க சிறிய கரடி அதை நோக்கி ஓரடி எடுத்து வைக்கிறது..தன்னை காப்பாற்றிய கரடியை ஒருமுறை திரும்பி பார்க்கிறது..அதன் கண்களும் எதையோ அதனிடம் யாசித்துக்கொண்டிருக்க, அதற்கு குறையாமல் பெரிய கரடியும் ஓலமிட..ஒருகணம் தயங்கிய அந்த சின்னக்கரடி இருவரையும் தவிர்த்து ஆற்றுக்குள்ளேயே பாய்ந்து விடுகிறது.. பிரமாண்டமாய் வந்த அலையொன்று அதை அடித்துச்செல்ல மெல்ல மெல்ல சுயநினைவை இழந்து போகிறது அந்த சின்ன கரடி.
அதன் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் பாரமிழந்து நுரையாய் தழும்பி..அலையோடு அடிபட்டு மெல்ல மெல்ல மெல்ல…
ஏதோ ஒரு அந்தகாரத்துக்குள் நழுவிக்கொண்டிருந்தவளுக்குள் திடீரென்று விழிப்பு ஏற்பட இமைகளை மலர்த்தினாள் மைதிலி. இமைகளும் தலையும் பாரமாய் கனக்க மெல்ல மெல்ல சுய உணர்வு அவளுக்கு ஒரு திடுக்கிடலுடன் தன்னை வெளிப்படுத்தியது. என்ன இருட்டு? நான் எங்கே இருக்கிறேன்….வண்டியில் போய்க்கொண்டிருந்தது தான் தெரியும்? பிறகு என்ன நடந்தது? இது என்ன இடம்? சுனாமியாய் சுழற்றியடித்த கேள்விகளுடன் எழுந்து அமர்ந்து சுற்றாடலை பயத்துடன் கிரகிக்க முயன்றாள் அவள்.
இரவாகி விட்டிருக்கிறது.
இதுவும் ஹாஸ்டல் இல்லை..
என்னவோ தவறு நடந்து விட்டது! இதயம் காது வரை வந்து துடிக்க ஆரம்பிக்க சுற்றாடலை கிரகிக்க முயன்றபடி கட்டிலை விட்டு இறங்க முயன்றாள் அவள்.
“எழுந்து விட்டாயா? மெல்ல மெல்ல தலை சுற்றி விடக்கூடும்” என்றபடி அறையின் வாசற்புறம் இருந்த சோபாவில் இருந்து சிந்தகவின் குரல் கேட்க இவனும் இங்கே தான் இருக்கிறானா? எனக்கு என்ன ஆயிற்று? என்று குழப்பத்தோடு அவனைப்பார்த்தவள் அவன் எழுந்து நிதானமாய் அவளை நெருங்க வியர்த்துத்தான் போனாள்!
பின்னே? வெற்றுமார்புடன் விளக்கு போடப்படாத இருட்டான அறையின் மூலையில் இருந்து இப்படி இவன் எழுந்து வந்தால் அவள் எதை நினைப்பது!!!
எது நடந்ததோ எல்லாம் என் கையை மீறிப்போய் விட்டது என்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது.
“என் பிரண்ட்ஸ் எங்கே? இது என்ன இடம்? ஏன் என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்? எனக்கு என்ன ஆனது?” பதட்டத்தை காண்பித்துக்கொள்ளாமல் குரலில் கடுமையை வரவழைத்தபடி கேள்வி கேட்க முயற்சித்தாள் மைதிலி. மீறி குரல் நடுங்கியது.
அவன் வரும் வழியிலே லைட்டின் சுவிட்சை தட்டிவிட பளீர் என்று மின்வெளிச்சம் அறை முழுவதும் பரவியது.
“உன் தூக்கம் கலைந்து விடும் என்று தான் லைட்டை அணைத்துவிட்டு காத்திருந்தேன்” என்று அவள் கேட்காமலே விளக்கம் சொன்னபடி சுவிச் போர்டுக்கு பக்கத்தில் இருந்த ஹாங்கரில் இருந்து ஆர்ம்கட் டீஷர்ட் ஒன்றை இழுத்து அவன் மாட்டிக்கொண்டதும் தான் இழுத்துப்பிடித்து வைத்த மூச்சை அவளால் வெளிவிடமுடிந்தது!
“ஏன் என்னை சுமி கூட அனுப்பல? “
“வந்தால்தானே அனுப்புவதற்கு?” அவனுடைய குரலில் இருந்த வரவழைக்கப்பட்ட நிதானமே அவளை பயமுறுத்தியது.
“என்ன சொல்றீங்க? அவ ஏன் வராம விட்டா? நீங்க பொய் சொல்றீங்க!!!” மூச்சு வாங்கியது அவளுக்கு.
“ரிலாக்ஸ் மைதிலி. இதை நீ எப்படி எடுத்துப்பியோன்னு தெரியல. சுமித்ராவை நான் அழைக்கவும் இல்லை. அவள் வரவும் இல்லை. அவளை பொறுத்தவரை நீ என் அம்மா வீட்டில் இருக்கிறாய்!”
“என்ன விளையாடறீங்களா????????????? அவகிட்ட நீங்க அப்படி சொன்னீங்களா? நான் எங்கேன்னு தெரியாம அவ அதை நம்பவும் மாட்டா, உடனே போய் எங்கப்பாட்ட சொல்லிருவா! “
“அதுக்காகத்தான் நீயே சொல்றபோல உன் போன்ல இருந்து மெசேஜ் போட்டு அவளை கன்வின்ஸ் பண்ணிட்டேன். அவ உனக்காக இந்த விஷயத்தை உங்க வீட்டுக்கு தெரியாம பார்த்துக்கிறேன்னும் ப்ராமிஸ் பண்ணிருக்கா!”
தலை சுற்றியது மைதிலிக்கு! அப்போ என் போன் தொலைஞ்சது பொய்யா?
“ஆமாம். சாரி. உன்னை நான் கடத்திக்கொண்டு தான் வந்தேன். எனக்கு வேறு வழி தெரியல!” அவன் கண்கள் எங்கோ பார்க்க ஆரம்பிக்க மைதிலிக்கு தனக்கு ப்ளட் ப்ரெஷர் எகிறப்போகிறதோ என்று பயம் வந்துவிட்டது. இவர்களை அவசரக்காரர்கள் என்று சொல்றது எவ்வளவு சரியா இருக்கு!!! எதையுமே யோசிக்காமல் செய்துவிட்டு எவ்வளவு ஈசியா சொல்றான் கடத்திட்டு வந்துட்டேன்னு!!!! கடவுளே… அவளது வாழ்க்கை இனி என்னாகப்போகிறது? கண்கள் கலங்கி தளும்ப உலகம் தனக்கு முன்னே சுழல்வது போலிருந்தது அவளுக்கு.
எட்டி அவனுடைய டிஷர்ட்டை பற்றி உலுக்க ஆரம்பித்து விட்டாள்.
“ஏண்டா இப்படி செஞ்சே…அப்பாம்மா,,,மத்தவங்க முகத்துல எல்லாம் இனிமே நான் எப்படி முழிப்பேன்?மஞ்சு ஆன்ட்டி என்ன நினைப்பாங்க? என் பிரண்ட்ஸ் என்ன நினைப்பாங்க? ஒரு நாள் முழுக்க ஒரு பையனோடு போய் தங்கியவள் என்று… ஐயோ அப்பாவுக்கு ஏதும் ஆகிவிட்டால்?” என்று கண்ணீர் வழிய அவள் பதற அவனோ உணர்ச்சிகளே இல்லாத முகத்துடன் உதட்டை கடித்துக்கொண்டு கல் போல நின்று கொண்டிருந்தான்..
ஐயோ என்று வந்தது அவளுக்கு..
இவனுக்குத்தான் தமிழ் புரியாதே.. அவனிடம் போய்….நெற்றியில் அறைந்து கொண்டவள் ஆவேசமாய் கண்களை துடைத்துக்கொண்டாள்.
“நான் போகிறேன். உன்னை நல்லவன் என்று நம்பித்தான் காதலித்தேன். அந்த நம்பிக்கை மீது ஆணை, எனக்கு ஒரு டாக்சி பிடித்து கொடு.நான் இப்போதே ஹாஸ்டலுக்கு போகிறேன். இல்லையென்றால் கூட பரவாயில்லை. நானே பார்த்துக்கொல்கிறேன்.. என்னுடைய பாக்கும் போனும் எங்கே? சீக்கிரம் கொடுங்க..”
பேசியபடியே அவனை தள்ளி விட்டு அவள் அந்த அறையை விட்டு வெளியேறி ஹாலுக்குள் நுழைந்தாள். பெரிய மாடி வீடுதான் ஆனால் அதன் எந்தவொரு அமைப்பும் கண்ணில் படாமல் அந்த வீட்டில் அவர்கள் இருவரும் மட்டுமே இருக்கிறார்கள் என்ற உண்மை மட்டும் தான் மைதிலியின் முகத்தில் அறைந்தது.
மாலை ஏழு மணி என்று கடிகாரம் காண்பித்தது. பரவாயில்லை. இப்போது கிளம்பினால் காலைக்குள் ஹாஸ்டல் போய்விடலாம். ஒரு வேகத்தில் இங்கே கொண்டு வந்து விட்டானே தவிர என்னை பிடித்து அடைத்து வைக்கும் அளவுக்கெல்லாம் இவன் கொடூரன் கிடையாது! அவளே தனக்கு சமாதானமும் சொல்லிக்கொண்டாள்
எங்கே பின்னாலே அவன் வரவில்லையே என்று சில நிமிடங்கள் அவள் காத்திருக்க உண்மையிலேயே கையில் அவளுடைய பாக்கையும் போனையும் எடுத்துக்கொண்டு அவன் நடந்து வந்துகொண்டிருந்தான். வழக்கமான திமிரும் நிமிர்வும் அவனிடம் சுத்தமாய் தொலைந்து போயிருந்தது.
வேண்டாம் அவனை பார்க்கவே பார்க்காதே..இவன் ஆள்மயக்கி! உன் மனதை கலைத்துவிடுவான். சீக்கிரமாய் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்! அவள் மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக்கொண்டிருந்த போது அவன் அவை ரெண்டையும் மேஜையில் வைத்தான்
“நீ தாராளமாக போகலாம் ஆனால் எனக்கு உன்னிடம் பேசவேண்டும். அதன் பின்னர் நானே உனக்கு டாக்சி அரேஞ் செய்து தருகிறேன். “
அவனின் நிதானம் இவனுக்கு என் உணர்வுகள் புரியவே இல்லையே என்ற இயலாமையை தான் அவளுக்குள் தூண்டியது. அத்தோடு அவள் இருக்கும் நிலைமையின் பாரதூரமும் முகத்தில் அறைந்தது.
பேசவேண்டுமாமே.. அழுகை வெடித்துக்கிளம்பியது அவளிடம்.
“இன்னும் என்னடா பேசவேண்டும் உனக்கு?” என்று ஆவேசமாய் தமிழில் ஆரம்பித்தவள் பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்தாள். “ சத்தியமாய் சொல்கிறேன். உன்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாக இல்லாதிருக்கலாம். எங்களுக்கு உயிர் பிரச்சனை. எங்கள் பேச்சில் இருந்து உடை, நடத்தை வரை சகலத்திலும் எவ்வளவு கவனமாக இருப்போம் தெரியுமா? பெண்மை எவ்வளவு பவித்ரமானது தெரியுமா? இப்போது ஒரு முழுநாளாய் என்னை காணவில்லை என்று அவர்கள்……….முடிக்க முடியாமல் விம்மியவள் பிறகு விம்மல்களுக்கிடையே தொடர்ந்தாள்.
“இதை செய்யமுன்னர் என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருந்தால் அங்கேயே பேசி முடித்திருக்கலாமே.. இப்போது சாகும் வரை என்னோடு இந்த அவப்பெயர் ஒட்டிக்கொண்டிருக்குமே…நான் என்ன செய்வேன்..என் அம்மா அப்பா முகத்தில் எல்லாம் எப்படி விழிக்கப்போகிறேன். எல்லோருக்கும் தெரியும் சிந்தக நான் உங்களை காதலித்த விஷயம்! இப்போது நானே விருப்பப்பட்டு உங்களுடன் போனதாக தான் எடுத்துக்கொள்வார்கள். ஏன் இப்படி செய்தீர்கள்?” அதற்கு மேல் உணர்வுகளை கொட்ட அவளுக்கு ஆங்கிலம் கைகொடுக்க வில்லை..
“ஐயோ இப்படியாகிவிட்டதே…” என்று முகத்தை மூடிக்கொண்டு கதறியவள்
“அவன் உன்னை உபயோகித்து விட்டு தூக்கிப்போட்டுவிடுவான் என்று எல்லாரும் சொன்னார்களே.. என் மானத்தை பற்றி யோசிக்காமல் இப்படி செய்து விட்டீர்களே… உங்களை பார்க்க வந்தது அவ்வளவு பெரிய தவறா?” அவளுக்கு அவன் இப்படிச்செய்து விட்டானே என்ற ஆதங்கம் தான் அதிகமாய் இருந்தது.
மௌனமாய்பேசவிட்டு பார்த்துக்கொண்டே இருந்தவன் அவளது வலக்கையை பற்றி இழுத்து சோபாவில் அழுத்தி அமர்த்தி அவளது கழுத்தில் பற்றி சோபாவோடு ஒட்டவைத்தான். “ யார் யாரை தூக்கிப்போட்டது? என் கண்ணை பார்த்து சொல்லுடி? யார் யாரை தூக்கிப்போட்டது? உனக்கு இங்கே இருக்கும் போது எங்கள் வீடும் நானும் தேவைப்பட்டோம்.. நீ உபயோகித்துக்கொண்டாய். பிறகு மொத்தமாய் தூக்கிப்போட்டு விட்டு ஓடிப்போனாய்! நீயெல்லாம் வந்து பேசுகிறாய் பார் அதுதான் வேடிக்கை!!” அவனும் கோபத்தில் ஆங்கிலத்தை துறந்து விட்டிருந்தான். சும்மாவே கரடுமுரடாக தோன்றும் அவன் மொழி இப்போது கோபத்தில் அவளை இன்னும் மிரட்டியது!
“அடிபட்டுக்கிடப்பவள் என்று பார்க்கிறேன். வருவாய் வருவாய் என்று காத்துக்கிடந்த நான் எங்கே? என்னை ஒரு துரும்பாக கூட மதிக்காமல் ஒரு புத்தகத்தை பிச்சை போட்டுப்போன நீ எங்கே? நீ தானடி என்னை தூக்கிப்போட்டாய்! காதல் காதல் என்று இப்போது வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறாயே.. நேற்று உனக்கு அடிபட்டிருக்காவிட்டால் அப்படியே போயிருப்பவள் தானே..உன்னால் எப்படி இப்படி பேச முடிகிறது. நீ, உன் பெற்றோர் உன்னை சேர்ந்தவர்கள் , அங்கே உன் ஹாஸ்டலில் இருக்கும் அம்மணி! எல்லாருமே சுயநலத்தின் மொத்த வடிவங்கள்! எந்த ஜென்மத்தில் பாவம் செய்தேனோ உன்னைப்போய் காதலித்து தொலைத்து இப்போது வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்!”
அவனுடைய குரலும் குற்றச்சாட்டிலும் அவள் மௌனித்துப்போனாள். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது உண்மைதானே..அவளால் அவன் வாழ்க்கையை இழந்து நிற்கிறானாமா? அவளுடைய கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
கழுத்தில் இருந்த கையை எடுத்துவிட்டு அவளை வெறுப்பாய் ஒருபார்வை பார்த்தவன் “ஆமாம்டி..நீங்கள் கலாச்சாரத்திலும் கண்ணியத்திலும் சிறந்தவர்கள். நாங்கள் காட்டுமிராண்டிகளாகவே இருந்து விட்டு போகிறோம்..” அவனும் தன்போக்கில் பேசிக்கொண்டே இருந்தான்.
“சாரி நான் வேணும்னு சொல்லல..” அவன் வேதனைப்படுவதை பார்க்க தாங்கவில்லை அவளுக்கு.
“ஹ்ம்ம்… எனக்கு வயசு முப்பதாயிடுச்சு. என் செட்ல எல்லாருமே கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு செட்டில் ஆகறாங்க. எனக்கு எப்படியிருக்கும் தெரியுமா? எனக்கு சின்ன வயசுல நிறைய ஆசைடி! இனிய மனைவி, சுட்டி குழந்தைகள், நமக்கே நமக்குன்னு ஒரு வீடு, மனைவி கையால சாப்டணும், குடும்பத்தோட எல்லா இடமும் போய் பார்க்கணும், குழந்தைகளை நிறைய சாதிக்க வைக்கணும்… இப்படி எத்தனை எத்தனை எத்தனை ஆசைகள்.. கடைசில…. கடைசில..எல்லார்க்கும் கல்யாணமாயிடுச்சு.. நான் மட்டும் தனி மரமா நின்னுட்டிருக்கேன். சாகும் வரை என் வாழ்க்கை இப்படித்தான்னும் எனக்கு தெரியும்! எனக்கு ஏன்டி இந்த தண்டனை?”
சிந்தக…
“ஏன்டி நாம சேர முடியாதுன்னு உனக்கு கடைசில தான் தெரிஞ்சதா? முன்னாடி அந்த அறிவெல்லாம் எங்கே போயிருந்தது? நான் எங்கேடி உன்னை தொரத்தி தொரத்தி காதலிச்சேன்? ஆரம்பத்துல நீ பயப்படறன்னு புரிஞ்சுகிட்டு நான் எவ்வளவு விலகிப்போனேன்…நீயும் அப்படியே போயிருக்கலாம் தானே..ஏன் கிட்ட வந்து பேசின? என் வீட்டுக்கு வந்த? நீ நினைச்சிருந்தா அதை தவிர்த்திருக்கலாமே.. காலையும் மாலையும் நான் வர்ற வழில தவறாம நின்னுட்டு இருந்தியே… நான் பார்க்கலைன்னா கூட உன் கண் என்னை விட்டு விலகாது.. அன்னிக்கு உன் வீட்ல நான் கட்டிப்பிடிச்சப்போ உன் காதல் எனக்கு தெரிஞ்சதே.. ஆனா அதுக்குப்பிறகும் உன் கண்ணுல கண்ணீரை பார்த்துட்டு நான் உன் முகத்துலேயே முழிக்கல..நீயாத்தான் எங்கம்மாகிட்ட சொல்லி என்னை தேடி வந்தாய்….எல்லாத்துக்கும் மேல என் கைக்குள்ள கொஞ்சம் கூட விலகாம நீயும் தானே நின்னுட்டிருந்த? கடைசி நாள் கூட!!!! இப்படியெல்லாம் பழகிட்டு, நடந்துக்கிட்டு என் மனசுல ஆசையை வளர்த்துட்டு தூக்கி போட்டுட்டு போறது தான் உன் கலாசாரமா? “
அதற்கு மேல் மைதிலியால் அதை கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.. ”வேணாம் சிந்தக.. இதுக்குமேல பேசாதீங்க..என்னால தாங்க முடியல..”
அவளை கொஞ்சம் இரக்கமாய் நோக்கியவள் நெற்றி ப்ளாஸ்டருக்கு மேலே பறந்த முடிகளை விலக்கி விட்டான்.
“இதுக்கும் கலாச்சாரத்துக்கும் சம்பந்தமே இல்லம்மா..நீ அந்த சொல்லை யூஸ் பண்ணதால தான் நானும் கோபத்துல சொல்லிட்டேன். என்னை பொறுத்தவரை நம்மை மீறி இன்னொருத்தரோட வாழ்க்கைல பாதிப்பை ஏற்படுத்தறோம்னா அது ஒரு பொறுப்பு, உடன்படிக்கை போல..கடைசி வரை காப்பாத்தணும் இல்லன்னா ..பாராதூரமா ஆகமுன்னே விலகி இருக்கணும். அது சாதாரண மனுஷப்பண்பு. நான் அதுல இருந்து இம்மி கூட விலகினதில்ல.. “
“ஆனா நீ என்ன பண்ணின? என் மனசை கலைச்சு விட்டுட்டு உன் பாட்டுல நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்துவராதுன்னு நீயே முடிவெடுத்து விலகிப்போய்ட்ட? உனக்கு காரணம் இருக்கிறது..நீ பிரிந்து தனியே வேதனைப்படுகிறாய்! நான் என்ன பாவம் செய்தேன்? நான் எதற்காக வாழ்நாள் முழுக்க இப்படி தனிமையில் தவிக்க வேண்டும்? இன்னொரு பெண்ணை தேடிக்கொள் என்று மட்டும் சொல்லாதே.. உன் கடமையை இன்னொருத்தி சுமக்கவேண்டியதில்லை. எனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சந்தோஷங்கள் எல்லாம் உன்னை காதலித்ததனால் எனக்கு இல்லாமல் போய் விட்டன. என்னை இப்படி தனிமரமாக நிற்க வைக்க தான் என் அப்பா அம்மா பெற்று வளர்த்தனரா? அவர்கள் மனம் வேதனைப்படாதா? அவர்களை விடு.. நம்மிருவரை மட்டும் பார்க்கலாம். உன்னால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு நியாயம் வேண்டும்!”
நான் இனிமேல் தனிமரம் என்ற அவன் வார்த்தையே அவளை இளக்குவதை பலவீனமாக உணர்ந்தாள் மைதிலி. நம்மால் அவன் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை தானே..
“தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள் சிந்தக்க..நீங்கள் சொன்னது சரி..என்னிலையை யோசித்து நான் அன்றைக்கு விலகியே இருந்திருக்கவேண்டும். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. சத்தியமாய் நான் போராடினேன்..முடியவில்லை. அது என் தவறு. அதற்காய் என் பெற்றோருக்கு மாறா ரணத்தை கொடுக்க என்னால் இயலாது. உங்களை பிரிந்து இரண்டு வருடம் வேண்டாம் என்று தான் இருந்தேன்..ஆனால் அப்படியும் என்னால் உங்களை மறக்க முடியவே இல்லை. கடைசியில் நம்மை பற்றி வீட்டில் பேசினேன்..அன்றைக்கு வீட்டில் வெடித்த அதிர்வுகள் இன்னும் அடங்கவேயில்லை. “ என்று நிறுத்தியவள்
“அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் ஆகிவிட்டது.” என்று ஒவ்வொரு சொல்லாக விம்மல்களுக்கிடையில் உச்சரித்தாள்.
அன்றைக்கு நாங்கள் பட்ட வேதனை அதை சொல்லி புரிய வைக்க முடியாது! அம்மாவின் முகத்தை பார்க்கவே என்னால் முடியவில்லை. வேண்டாம்..என்னை வற்புறுத்தாதீர்கள்..உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் தான் என்னோடு சேர்த்து உங்கள் வாழ்க்கையையும் நாசமாக்கி விட்டேன்…” அவள் அவன் கைகளை எடுத்து அவனது உள்ளங்கையில் முகம் பதித்து கதறினாள்
“காரணங்கள் ஆயிரம் சொல்லலாம் மைதிலி..எனக்கு உன்னால் ஆன இழப்புக்கு என்ன பதில் தரப்போகிறாய்?” அவன் குரல் வெகு அழுத்தமாய் வினவியது.
என்ன சொல்கிறான் இவன் என்ற எண்ணத்துடன் அழுகை பட்டென நிற்க நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள் அவள்.
“எனக்கு உன்னோடு வாழ வேண்டும். கொஞ்ச நாள் என்றாலும் பரவாயில்லை. வாழ்நாள் முழுமைக்கும் நினைத்துக்கொண்டே காலத்தை ஓட்ட எனக்கும் ஒரு நிறைவு வேண்டாமா?”
“எ..என்ன சொல்கிறீர்கள்?”
“இதோ பார்.. நீ வீட்டில் சொல்லிவிட்டு இங்கே வரவில்லை. பத்துநாட்கள் மெடிக்கல் லீவை ஹாஸ்டலில் போய் தங்கி கழிக்க நினைக்கிறாய். உன்னால் எனக்கான இழப்புக்கு ஈடாய் அந்த பத்து நாட்களை நீ எனக்குக்கொடு என்று தான் நான் கேட்கிறேன். “
அவ்வளவு தான் ரௌத்ரம் ஆனவள் எட்டி அவன் டீஷர்ட்டை கொத்தாக பற்றி உலுக்க ஆரமித்தாள்.
“யாரைப்பார்த்து என்னடா கேள்வி கேட்கிறாய்? உன்னை காதலித்து விட்டால் நீ என்ன வேண்டுமானாலும் செய்வாயா? இப்படி ஒரு நினைப்பு எப்படி வந்தது.. சீ அவ்வளவு தானா நீ?” அழுகை பொங்கி வர அவனை தள்ளி விட்டு தன் முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்தாள் அவள்..
“நான் பாவி… உன்னையா நான் காதலித்தேன்.. நீ பட்டுத்தான் தெளிவாய் என்று சொன்னீர்களே அம்மா..இதை விட என்ன பட்டுவிடப்போகிறேன்..என்னை மரியாதையாக நடத்தக்கூட இவனுக்கு மனதில்லையா?” அழுகையின் இடையே புலம்பல்களும் நிற்கவில்லை. எதிரில் நிற்கும் ஒருவனிடம் தன் கவலைகளை சொல்லி அழும் பாவனையில் அழுது கொண்டிருந்தவளை இறுகிப்போன முகபாவனையுடன் பார்த்துக்கொண்டே நின்றவன் ஒரு கட்டத்தில் தாங்க முடியாதவனாய் மைதிலி என்று தோளைத்தொட்டு உலுக்கினான்.
தீச்சுட்டதை போல கைகளை தூக்கிஎறிந்து கண்ணாலேயே அவனை எரித்தாள் அவள்.
“நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாய் கேட்டு விட்டு பிறகு புலம்புகிறாயா?”
இன்னும் என்ன கேட்கவேண்டியிருக்கிறது?
“உன் மரியாதையும் கௌரவமும் குறைய நான் விடுவேனா மைத்திம்மா? என்னை எப்படி நீ தவறாக நினைக்கலாம்.”
அப்போ நான் காதில் கேட்டதென்ன பிரமையா? அழுகை குறைந்து விட அவனை ஏறிட்டுப்பார்த்தாள் அவள்
நான் கேட்டது என் அருகில் நீ இருக்க வேண்டும் என்பதை மட்டும் தான்..வேறு எதுவுமே எனக்கு வேண்டாம். வாழ்நாளில் நான் உன்னிடம் கேட்கும் ஒரேயொரு வரம் இதுதான் என்று வைத்துக்கொள்ளேன். தெரிந்தோ தெரியாமலோ உன்னை மனதில் பதித்து விட்ட காரணத்துக்காக தனியாகவே வாழ்ந்து மடியப்போகிறேனே..எனக்காக நீ இந்த சின்ன சந்தோஷத்தை கொடுக்க மாட்டாயா?
தனிமரம் தனிமரம் என்று அவன் சொல்ல சொல்ல குற்ற உணர்வில் செத்துக்கொண்டிருந்தாள் மைதிலி, அவனும் அவளுடைய பலவீனப்புள்ளியை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான். அவனுடைய கண்களின் யாசகத்துக்கு முன்னால் தன் எதிர்ப்பு பலமிழந்து போவதை வருத்தமாய் உணர்ந்தாள் மைதிலி.
இது எப்படி முடியும் சிந்தக்க? சுமிக்கு எல்லாமே தெரியும்! அவள் நிச்சயம் என் பெற்றோருக்கு சொல்லிவிடுவாள். அவர்கள் இதை தாங்கிக்கொள்ளவே மாட்டார்கள். எந்த பெண்ணும் இதற்கு சம்மதிக்க மாட்டாள் சிந்தக.. உங்கள் வீட்டினருக்கு, என் பிரண்ட்சுக்கு எல்லாம் விஷயம் தெரிந்தால் நான் எப்படி அவர்கள் முகத்தில் எல்லாம் விழிப்பேன்? செத்து விடுவேன் சிந்தக.. அப்படியொன்று நிகழ்ந்தால் நிச்சயம் அதுதான் நடக்கும். நாத்தழுதழுக்க சொன்னாள் அவள்.
அப்படியெல்லாம் எதுவும் ஆகாது மைத்தி. உன் பெயர் கெடும் ஆபத்து இருந்தால் நான் இதை யோசித்துக்கூட இருக்கமாட்டேன். என்னை நம்பு! இதனால் உன் மரியாதை இம்மியளவும் குறையப்போவதில்லை அதை முதலில் ஞாபகம் வைத்துக்கொள்!
எப்படி என்று யோசிக்கிறாயா? அந்த சுமித்ரா உன் உயிர் நண்பி தானே? அந்த அம்மணியை நான் உயிரைக்கொடுத்து நீயாகவே பேசி கன்வின்ஸ் செய்து விட்டேன். அவளைப்பொறுத்தவரை நீ மஞ்சு ஆன்ட்டி வீட்டில் இருக்கிறாய். நான் வேலை விஷயமாக வெளிநாடு போயிருக்கிறேன். அவள் உனக்காக உன் வீட்டுக்கு இந்த விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்வதாகவும் உன் மற்ற தோழிகளுக்கு நீ உன் வவுனியா சித்தப்பா வீட்டில் தங்கியிருப்பதாகவும் சொல்கிறேன் என்று உனக்கு வாக்குக்கொடுத்திருக்கிறாள்.
சுமியா? நான் நம்பமாட்டேன்..நீங்கள் அவளுக்கு மெசேஜ் அனுப்ப முன்னரே அவள் பயந்துபோய் எங்கள் வீட்டுக்கு சொல்லியிருந்தால்?
“சொல்லவில்லை. அவளுக்கு நீ வீட்டுக்கு தெரியாமல் இங்கே வந்தது தெரியுமாதலால் உன்னிடம் இருந்து செய்தி வரும்வரை பயத்துடன் காத்திருந்திருக்கிறாள். அதற்காக முதலில் அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும்! நீ வேண்டுமானால் உன் மொபைலில் எங்களுடைய மெசேஜஸ் பார்.. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்!” என்று வெறுமையாய் புன்னகைத்தவன் தொடர்ந்தான்.
“நேற்று ஒருநாள் மெசேஜில் பேசியது ஒகே..இன்றும் நீ விழிக்கும் வரை நான் சமாளித்துக்கொண்டிருந்தேன்.. இனி நீயே என் அம்மா வீட்டில் இருப்பது போல பேசி உன் குரலை காண்பித்தாயானால் தான் அவள் முழுமையாக நம்புவாள். இல்லையேல் சந்தேகம் வந்துவிடும். “
“உன் பெற்றோரை பொறுத்தவரை நீ ஹாஸ்டலில் தான் இருக்கிறாய். நேற்றும் இன்றும் உன் சார்பில் என் மாமனாருக்கு நான் மெசேஜ் அனுப்பினேன்..இன்றைக்கு அவர்களோடு ஹாஸ்டலில் இருப்பது போல நீ பேசிவிட்டால் அந்த பிரச்சனையும் தீர்ந்தது.”
“என் குடும்பத்தினர், வைத்தியசாலை நிர்வாகம் போலீஸ் எல்லாருக்கும் நீ யாழ்ப்பாணம் போய் விட்டாய் என்று தான் தெரியும். “
“உங்கள் வீட்டினர் இங்கே வரமாட்டார்களா? ” அவளுக்கு எதை சொல்லியாவது அவனுடைய மனதை மாற்றிவிடும் வேகம்!
“இல்லவே இல்லை. ஒருநாள் பால்காய்ச்ச வந்தார்கள் அதன்பின் நான் தான் அங்கே போவேன். மற்றபடிக்கு யாரும் வருவதில்லை. இங்கிருந்த சமையல்காரர் சோமரத்னவையும் அனுப்பிவிட்டேன். பொதுவாகவே இந்த வீட்டுக்கு நான் என் நண்பர்களை அழைப்பதில்லை. அப்படியும் யாரும் திடீரென்று வந்தால் கூட இவ்வளவு பெரிய வீட்டில் நீ மறைவது பெரிய விஷயம் இல்லை.. “
இவனுக்கு எது தான் பிரச்சனையாக தெரியும்? ஆயாசமாய் எண்ணிக்கொண்டவளுக்கு இன்னும் மனதளவில் கூட அவன் கேட்டதை செய்ய தயாராகவே முடியவில்லை. அவசரமாய் மறுப்பதற்கு மனம் இன்னும் காரணங்களை தேடியது.
அவளுடைய முகத்தில் இருந்து மற்றவன் அதை படித்திருக்க வேண்டும். முகத்தை கையால் பற்றி தன்புறம் திருப்பினான்.
என்னை பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா ‘கண்ணம்மா’?”
கெஞ்சலாக ஒலித்த அவன் மொழியில் இணைந்து கொண்ட “கண்ணம்மா?” அவன் உச்சரித்த முதல் தமிழ் சொல்! இமைக்க மறந்து அவனையே பார்த்தாள் மைதிலி. மூன்று சுழி ‘ண’வுக்குரிய உச்சரிப்பு அவர்களின் மொழியில் இல்லை. அவனுக்கு அது மிகக்கடினமான சொல்லாக இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அவன் அதை உச்சரித்த விதம் அப்படியே நெஞ்சை அள்ளிக்கொண்டு போக தன் கவலைகளை மறந்து மீண்டும் ஒருதடவை அதை சொல்ல மாட்டானா என்று அவள் அவனையே பார்த்தாள்.
“எனக்கு உன் அருகில் இருக்க வேண்டும் அவ்வளவுதான் வேண்டும். திருமணத்தோடு வரும் உரிமைகள் எல்லாம் எனக்கு இப்போது நோக்கமில்லை..என் காதல் அதற்காகத்தான் என்று உன்னுடையவர்கள் சுமத்திய பழிச்சொல்லை நிரூபிக்கும் எண்ணமும் எனக்கில்லை. அது தான் உன் பயம் என்றால் அதை நீ மறந்து விடலாம்.”
“அப்படியில்லை சிந்தக..”
பிறகு ஏன் யோசிக்கிறாய்? எதிர்பாராமல் இந்த விடயம் வெளியே தெரிந்து நம்மை யாராவது தேடி வந்தால் கூட உன் பேரில் எந்த தவறுமே வராது. காரணம் இன்ஸ்பெக்டர் சந்திரஸ்ரீ முதல் ஆளாக என்னை தான் கைகாட்டுவார்..உன் வீட்டினரிடம் தகவல் சொல்ல சொன்னதும் உன் போனை அவர் ஒப்படைத்ததும் என்னிடம் தான். அடுத்தது என்னுடைய அம்மாவும்! நானும் நான் தான் உன் விருப்பத்துக்கு மாறாக கடத்தி வந்தேன் என்று ஒப்புக்கொண்டு விடுவேன்..உனக்கு எந்த மரியாதைக்குறைவும் வராது.
அவன் செய்வான் தான்… ஆனால்.. யாருக்கும் தெரியாமல் இப்படியொரு முடிவெடுக்கும் தைரியம் தனக்கிருப்பதாக அவளுக்கு தெரியவில்லை.
அன்றைக்கொருநாள் இதைத்தானே சுதாவும் கேட்டான்..எனக்கும் உனக்கும் தானே நாங்கள் ஒரே சைக்கிளில் ஒன்றாக வந்தது தெரியும் என்று! வெளியாருக்கு தெரியாமல் ரகசியமாக செய்யும் தவறுகள் சரியாகி விடுமா என்று எண்ணித்தானே தவிர்த்தாய்? இப்போது மட்டும் யோசிக்க ஆரம்பித்து விட்டாய்? அவளே தனக்குள் வாதியும் பிரதிவாதியுமாகி வாதாட ஆரம்பித்தாள்
அன்றைக்கு கூட சுதாவை விட்டு விட்டு இவனோடு போவதை தானே தேர்ந்தெடுத்தாய்!
எல்லாவற்றையும் விட சுதாவும் இவனும் ஒன்றா? இவன் அவள் உயிரல்லவா?
உயிர் என்றால் மட்டும் எல்லாவற்றுக்கும் நீ சம்மதிப்பாயா?
அவன் வெறும் அருகாமையை மட்டும் தானே கேட்கிறான். உன்னை காதலித்த பாவத்துக்கு பரிகாரமாய் நீ இதை செய்தால் தான் என்ன?
அவளால் முடிவுக்கு வரவே முடியவில்லை. அந்த எண்ணம் வந்ததுமே மனம் முரண்டு பிடித்து போராடியது.
“கொஞ்சம் யோசியேன் மைத்திம்மா… அப்படி நாம் சிக்கும் வாய்ப்பு கண்ணுக்கு தெரிந்தால் உன்னை மூன்றே மணி நேரத்தில் கொண்டு போய் ஹாஸ்டலில் விட்டு விடுவேன்..கவலைப்படாதே.. “
“……” அவள் பதில் பேசாமல் நகத்தை கடித்தாள்.
வாயில் இருந்த அவளது விரலை வெளியே எடுத்து விட்டு அவளது தாடையை மென்மையாய் வருடியபடி தன் கண்களால் அவள் பார்வையை மொத்தமாய் கைது செய்தவன் “இந்த பத்துநாளும் மட்டும் உலகத்தை, சமூகத்தை, நமக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளை மறந்து நமக்கே நமக்கென வாழ்வோமே. கொஞ்சம் சிந்தித்து பார் கண்ணம்மா.. “ வழக்கம் போலவே அவளை உருகிக்கரைய வைக்கும் அவனுடைய கண்களின் மென்கபில வர்ணத்துக்குள் அவள் சுயம் மறந்து நழுவிக்கொண்டே இருந்தாள். கூடவே அந்த கண்ணம்மாவும் சேர்ந்து கொள்ள இனிமேல் திரும்பி வர முடியாத எல்லைக்கு அவளை அனுப்பி வைக்க முயல்கிறான் இந்த பொல்லாதவன் என்று அவளுக்கு புரிந்தது.
வலுக்கட்டாயமாய் அவன் விழிகளில் இருந்து பார்வையை விலக்கிக்கொண்டவள் யோசனையாய் வெறித்தாள்.
அவனும் இப்போது விலகி எழுந்தான்.
“யோசி.. என் இழப்புகளுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்..நான் எனக்கு மட்டும் சந்தோஷத்தை கேட்கல..உனக்கும் சேர்த்துத்தான் சந்தோஷத்தை கேட்கிறேன்.. கொடுக்க மனதிருந்தால் கொடு. இல்லாவிட்டால்…” என்று இழுத்தபடி மேஜையில் இருந்த ஸ்டிக்கி நோட்பாட்டை எடுத்து எதையோ கிறுக்கி அவளுக்கு முன்னிருந்த டீப்பாயின் கண்ணாடியில் ஓட்டினான்.
“எனக்கு நம்பிக்கையான டாக்சி கம்பனியின் நம்பரும் இந்த வீட்டின் அட்ரசும் இருக்கிறது. இப்போதே நீ கிளம்பினால் விடிவதற்குள் ஹாஸ்டல் போய்விடுவாய். ஆனால் அதன் பின்னர் உன் நிழல் கூட என் மேலோ என் வீட்டினர் மேலோ படியக்கூடாது.” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு பதிவான ஹாலில் இருந்த ஒற்றைப்படியில் ஏறி பின்புறமாய் அவன் மறைந்து விட தலையை வலக்கையில் தாங்கிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் மைதிலி..
மனதுக்குள் அவளது ஆசைகளும், அவளுக்குள் ஆலமரமாய் வேரூன்றிப்போயிருந்த காதலும், அவனின் ஏக்க முகமும் ஒன்று சேர்ந்து அவளை வடிவமைத்திருந்த வளர்ப்பையும், பெற்றோரின் நம்பிக்கையையும் எதிர்த்து ஆவேசமாய் போர் புரிந்தன.
வாழ்நாள் முழுக்க என் பெற்றோருக்காகத்தானே என் ஆசைகளை விட்டுக்கொடுத்தேன். என்னை காதலித்த பாவதுகாய் தனிமரமாகிவிட்டேன் என்கிறானே இவனுக்கு நான் என்ன செய்தேன்? அவன் வாய்விட்டு கேட்பதை செய்யாமல் இங்கிருந்து போனால்…ஒரு கணம் விடாமல் இந்த எண்ணம் என்னை கொல்லாதா?
இங்கே நான் சந்தோஷமாய் இருக்கிறேனோ இல்லையோ,,,அவனிடமும் எனக்கொரு கடமை இருக்கிறது அல்லவா? பிறகு அவன் சொன்ன தேவைக்காக மட்டும் பழகினாள் என்ற குற்றச்சாட்டு உறுதியாகி விடுமே…
அவனோடு இருக்கும் நாட்கள் அவனுக்கு மட்டுமா பொக்கிஷம்? ஒட்டகம் சேமிக்கும் தண்ணீரை போல அவளும் அந்த கனங்களைஎல்லாம் வாழ்நாள் முழுமைக்கும் சேகரிப்பாளே…
இனிமேல் நிழல் கூட படக்கூடாதாமே.. அவன் இருந்துவிடுவானா?
வெகு நேரமாய் தலையை கைகளில் தாங்கிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தவள் ஒரு முடிவுடன் அந்த ஸ்டிக்கி நோட்டை கழற்றி எடுத்துக்கொண்டு அவனை தேடிப்போனாள்
கிச்சனில் எதையோ தயாரித்துக்கொண்டு நின்றிருந்தான் அவன்
சிந்தக…
ஹ்ம்ம்..அவன் முகம் உணர்ச்சிகளை சுத்தமாய் துடைத்திருந்தது.
இங்கே bin எங்கே இருக்கிறது? இந்த பேப்பரை போட வேண்டும்! ஒவ்வொரு சொல்லாக அழுத்திக்கேட்டாள் மைதிலி.
அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மலர்ந்து கண்களும் சிரிக்க ஆரம்பிக்க அவனது மலர்ச்சி அவளது முகத்திலும் சின்னதாய் ஒரு புன்னகையை பிரசவித்தது.
அடுத்த கணம் அவளை நெருங்கியவன் இறுக்கமாய் அணைக்க நன்றி, தவிப்பு ஆறுதல் என்று அத்தனையையும் காண்பித்த அந்த அணைப்பு ஏற்படுத்திய உணர்ச்சி வேகத்தில் கண் கலங்கினாலும் அதையும் தாண்டி சுரீர் என்று வலிக்க “ஹையோ என் கை” என்று அலறினாள் அவள்.
சாரி சாரி..என்ற படி கையை விட்டு விட்டாலும் தாங்க்ஸ் மைத்தி என்று நெற்றியில் முத்தமிட்டு விட்டே விலகினான்.
“ரொம்ப நேரமா சாப்பிடாம இருக்க..இந்தா இதை முதல்ல குடி…” அவன் கலந்து வைத்திருந்த நெஸ்டமோல்ட்டை எடுத்து நீட்ட மறுக்காமல் வாங்கிக்கொண்டாள் அவள்.
தனக்கு நடந்தவைகளை அவளால் இன்னும் நம்பக்கூட முடியவில்லை. அதுவும் தன்னுடைய மனநிலை தான் அவளை இன்னும் ஆச்சர்யப்படுத்தியது. முடிவெடுக்கும் வரை பயமும் படபடப்புமாக எப்படி இருந்தாள்!!!!
இப்போதோ அவளையறியாமலே அவளுக்குள் ஒரு மெலிதான படபடப்பு புகுந்து கொண்டிருந்தது, தான் இப்படி உணர்வதே கொஞ்சம் அவமானமாகவும் வேதனையாகவும் இருக்க உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருந்தாள்.
சூடாக இருந்த பானத்தை ஒரு வாய் பருகியவள் தனக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்று காய்கறி வெட்டியவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளது பயங்களையும் கவலைகளையும், அவனின் ஆயிரம் சமாதானங்ளை தாண்டிய நாளை பற்றிய நடுக்கத்தையும் அவனது அருகாமையும் அந்த வீடும் மெல்ல மெல்ல விலக்கி தன்னை ரிலாக்ஸ் செய்வதை அவளாலேயே உணர முடிந்தது
“எவ்ளோ நாளைக்கு இப்படி என்னை ஏமாத்துவேன்னு நானும் பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு அவன் வெட்டிய காய்கறிகளை ப்ரெஷர் குக்கரில் போட ஆரம்பித்தான் சிந்தக
