WLM அத்தியாயம் 20

“என்னதான் திட்டம் போட்டாலும் எல்லாமே அந்த திட்டப்படியே தான் நடந்தாலும் முடிவுரையை மட்டும் விதி தலைகீழாக எழுத்து விடுவது என் விஷயத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே. இந்த தடவையாவது நான் நினைத்தது சரியாக நடக்குமா? நானும் அவளும் ஒன்றாக சேருவோமா? எனக்கு அதைப்பற்றி சிந்திக்கவே பயமாக இருந்தது.”

கிளிநொச்சி சென்ட் மேரிஸ் கல்லூரியின் இரண்டாம் மாடியில் நின்றுகொண்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் சிந்தக்க. சுற்றிலும் காடு தான் கண்ணுக்கு தெரிந்தது. சும்மாவே வன்னிப்பெருநிலப்பரப்பு காடுகளை அதிகம் கொண்டிருக்கும். இதில் உடைந்து கிடந்த வீடுகளை சுற்றி மரங்கள் வேறு மூடி வளர்ந்திருந்ததில் எது உண்மைக்காடு என்றே அங்கே வித்யாசம் தெரிவதில்லையே . அந்த பாடசாலையும் சிதைவுகளை மீறிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் எழுந்து கொண்டிருந்தது.

அது ஒன்றும் பெரிய பாடசாலை இல்லைத்தான். மொத்தமே மூன்று இரண்டு மாடிக்கட்டிடங்கள் தான் இருக்கும். ஆறாம் ஆண்டில் இருந்து ஓலெவல் வரை மொத்தமே 400 மாணவர்களுக்கு உள்ளே தான் இருப்பார்கள். ஆனாலும் அவனுக்கு அப்போது இது பெரிய விஷயமாகத்தான் இருந்தது.

இது அவன் உள்ளே வந்ததன் பிறகு நடக்கும் இரண்டாவது ஆண்டுவிழா! தோரணங்கள் கட்டி கலர் பேப்பர்களால் மாணவர்கள் தாங்களே செய்திருந்த சிறு சிறு அலங்காரங்கள் என பாடசாலை விழாக்கோலம் பூண்டிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பான்ட் குழுவுக்கு உரிய இசைக்கருவிகள் தருவிக்கப்பட்டு அவர்கள் பயில ஆரம்பித்திருந்தார்கள். தங்கள் பாடசாலையின் வர்ணமான கருஞ்சிவப்பும் வெள்ளையிலும் ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து வாசலோரமாக பிரதம விருந்தினர்களை மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“சேர்.. உங்களை கீழே வரட்டாம். எல்லாரும் வந்திட்டினமாம்.”  எட்டாம் வகுப்பு பையனொருவன் அவனிடம் சொல்லிவிட்டு சிட்டாய் மறைந்தான். அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மணிமாறனின் கார் பாடசாலைப்பெயர் இருந்த கம்பி வளைவைத்தாண்டிக்கொண்டு பாடசாலைக்குள் நுழைந்தது. அதிபர் வேகவேகமாய் காரை நோக்கிப்போக கணவனும் மனைவியும் அதற்குள் இறங்கி விட்டார்கள். இது தான் தன்னுடைய மாமனார் மாமியாரை அவன் முதல் முதலாக நேரில் பார்க்கும் தருணம். இருவருமே அசைவுகள் முதற்கொண்டு அப்படியே மைதிலியை நினைவு படுத்த வந்த சிரிப்பை அடக்கி சாதாரணமாய் முகத்தை வைத்துக்கொள்ள போராடியபடியே கீழிறங்கி வந்தான் சிந்தக்க!

அவன் வாசலை நெருங்கியபோது அதிபர் கணவன் மனைவி இருவருக்கும் மாலை அணிவித்துக்கொண்டிருந்தார். இவனைக்கண்டதும் ராஜநாயகம் எங்கே போய்விட்டாய் என்று கடிந்தபடி தோளில் கைபோட்டு அங்கே அழைத்து சென்றார். பிறகு வேறும் மூன்று மாணவிகள் பூமாலை கொண்டு வந்து ஒன்றை அதிபருக்கும் மற்றைய இரண்டையும் முறையே ராஜநாயகம் மற்றும் சிந்தக்கவுக்கு அணிவித்தனர். அதன் பின்னர் பான்ட் வாத்தியத்துடன் அவர்கள் ஆண்டு விழா மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

“நன்றி சார். கேட்டதும் உடனே ஒத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வந்ததற்கு!” என்று அதிபர் அவனுடைய மாமனாருக்கு சொன்னதும் அவர் உடனே “இதில் என்ன இருக்கிறது? இந்த மாணவர்கள் தான் உண்மையில் தேவையுள்ளவர்கள். நாங்களும் நம்மால் முடிந்ததை செய்ய கடமைப்பட்டவர்கள்” என்றார்,

முதலில் இருவரும் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அதன் பின்னர் ஊர்வலம் மண்டப வாயிலுக்கு வரும் போது தான் தன் மாமியார் மாமனார் காதை கடிப்பதை கவனித்தான். அதற்கு அவர் இருக்காது என்று என்னவோ சொல்லி மறுக்க மாமியார் மட்டும் மைதிலியை போலவே கடைக்கண்ணால் அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே நடக்க அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.  அப்போது தான் பரபரப்பில் அறிமுகத்தை மறந்த அதிபர் அவர்களின் பக்கம் திரும்பினார்.

“மணிமாறன் சார். இவர் தான் ராஜநாயகம் இந்த பிரதேச மாணவர்களின் கல்வி விருத்தியை நோக்கமாக கொண்டு ஒரு NGO நடாத்தி வருகிறார்” என்று அந்த பெயரை சொல்ல மணிமாறனும் அடையாளம் கண்டு கொண்டு அந்த நிறுவனம் பற்றி அவரை விசாரித்து வாழ்த்து சொன்னார்.

அதன் பிறகு இவனது நிறுவனத்தின் பெயர் சொல்லி அவன் முழுப்பெயரை அதிபர் சொல்ல கணவன், மனைவி இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து மீண்டன. மணிமாறனின் கண்களில் சின்னதாய் ஒரு கோபம் குடியேற அவரது மனைவியோ அவன் முகத்தில் எதையோ தேடுவது போல பார்த்துக்கொண்டிருந்தார்.உணர்ச்சிகளை காண்பிக்காமல் மெல்லிய புன்னகையோடு அவர்களை ஏறிட்டான் இவன்.

“போரின் பின் இந்த ஸ்கூலை கிட்டத்தட்ட கைவிட்டே விட்டார்கள். ஆட்களும் இல்லை. நிதியும் இல்லை. இதுவரை நடாத்தியவர்கள் எங்கே என்றும் தெரியவில்லை. பிறகுதான் ஆபத்பாந்தவராய் ராஜ நாயகம் ஐயா உள்ளே வந்தார். பிறகு அவரே பல தொடர்புகளை பெற்று  நிதி திரட்டி கல்வி அமைச்சு மூலமாக பிற வசதிகள் பெற்று ஒரு வழியாக இதை இயங்க வைத்தார். அப்படி வந்தவர்தான் சிந்தக்க..முதல் வருடம் பலருடன் இணைந்து நிதியளித்தாலும், இப்போது முழுக்க முழுக்க இந்த ஸ்கூலை அவருடைய கம்பனியே  தான் பொறுப்பெடுத்திருக்கிறது.”

“நாங்கள் மட்டும் அல்ல எங்களது இரண்டு சகோதர நிறுவனங்களும் சேர்ந்து தெற்கில் பலரிடம் நிதி திரட்டித்தான் தான் இதை செய்கிறோம்” என்று பணிவாக சொன்னவன் “உங்களைப்பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று விட்டு  அவன் தமிழில் பேசுவதை சுத்தமாக எதிர்பாராதவராய் விழிவிரித்த மைதிலியின் அம்மாவிடம் மரியாதை நிமித்தமாக கை குவித்தான்.

“எங்களையெல்லாம் விட அட்சர சுத்தமாய் தமிழ் பேசுகிறான் பார்த்தீர்களா?” என்று சிரித்த ராஜநாயகம் அவனின் தோள்களில் செல்லமாய் தட்ட அவர்கள் மண்டபத்துக்குள் நுழைந்திருந்தார்கள்.

மாணவர்கள் எழுந்து நிற்க அவர்கள் நடுவில் நுழைந்தவர்கள் மேடையில் ஏற , எவ்வளவு வற்புறுத்தியும் மேடையில் ஏறாமல் வலப்பக்கம் ஆசிரியர்களுக்கு போடப்பட்டிருந்த கதிரையின் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டான் சிந்தக்க.

முதலில் தலைமை உரை, அறிமுக உரையெல்லாம் முடிந்ததும் விருந்தினர்களை மீண்டும் கீழே அனுப்பி விட்டு மாணவர்களின் கலைநிகழ்வுகள் ஆரம்பமாயின.

அவனைக்கண்ட கோபம் இருந்தாலும் மாணவர்களின் உற்சாகத்தோடு சேர்ந்து கொண்டு நிகழ்வுகளை ரசித்துக்கொண்டிருந்த மாமனாரை அவனுக்கு ரொம்பவும் பிடித்தது. ஆனால் அவருக்கு அவனை பிடிக்க வேண்டுமே..

மறுபடி பிரதம விருந்தினர் உரையின் போது மேடை ஏறியவர் அழகாக கதைகள் போலவே மாணவர்களுக்கு சிரிக்க சிரிக்க உரையாற்றியது எல்லோரையும் ரசிக்க வைத்தது. சாம்பலில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் போல அந்த மாவட்டம் தழைக்க வேண்டும். சகல பரிமாணங்களிலும் வளர வேண்டும் என்று அவர் சொன்னபோது கைதட்டல்கள் பறந்தன. இனிமேல் அந்த பாடசாலையின் சாதாரண தர பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான போட்டிப்பரீட்சைக்கான முன்னோடி வினாத்தாள்களை பதிப்பித்து வழங்கும் பொறுப்பு என்னுடையது என்று மேடையிலேயே அறிவித்தார் மணிமாறன்.

அவரின் செயற்பாடுகள், குண இயல்புகளை பார்த்ததை வைத்து தங்களை நிச்சயமாக அவர் புரிந்து கொள்வார் என்று அவனுக்குள் பெரு நம்பிக்கையே வளர்ந்து விட்டிருந்தது.

மதிய உணவுக்கு வன்னியின் காரசாரமான உணவு வகைகள் விருந்தினர்களுக்காக பெற்றோரினால் சமைத்து  அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவராக தமக்கு வேண்டியவற்றை பரிமாறிக்கொண்டு போய் அமர, திட்டமிட்டு காத்திருந்து  தானே போய் மணிமாறனின் அருகில் அமர்ந்து கொண்டான் சிந்தக்க.

“என்ன நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறாய்? இப்படியெல்லாம் நீ செய்தால் நான் மயங்கி என் ஒரே பெண்ணை தூக்கி தந்துவிடுவேன் என்று நினைக்கிறாயா?” அவர் அடிக்குரலில் கேட்டதை அவன் சட்டென்று எதிர்பார்க்கவில்லை.

மெல்ல சிரித்தான் அவன் “ஆமாம் அங்கிள் இரண்டு வருஷம் முன்னே நான் இதை செய்ய ஆரம்பிக்கும் போது உங்கள் மகள் எனக்கு நீ வேண்டாம் என்று என்னை விட்டு போயிருந்தாள். இன்றைக்கு வரைக்கும் அவளுக்கு இந்த ஸ்கூல் விபரமெல்லாம் தெரியாது. அவளிடமே இதை காண்பிக்காதவன்  உங்களிடம் எதற்காக நாடகமாடவேண்டும்? எனக்கு உங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு” என்று பணிவாக ஆனால் அழுத்தம் திருத்தமாக சொன்னான் அவன்.

“அதை விடு. அவளை எதற்காக உங்கள் வீட்டில் கொண்டு வைத்திருந்தாய்?நான் ஒரு கம்ப்ளையின்ட் கொடுத்திருந்தால் மொத்தக்குடும்பமும் உள்ளே போயிருப்பீர்கள்.  தெரியுமா?”

“அதற்கு முன்னே இத்தனை மைல் பயணம் செய்து எங்கள் வீட்டுக்கு மைத்தி வந்தபோது உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தாளா? என்று மட்டும் யோசித்து பாருங்கள்.” அவன் ஆணித்தரமாய் கேட்டான்

“டேய்!!! அவள் குழந்தைடா.. நீ அவள் மனதை கலைத்து விட்டாய்!” என்று பொருமியவர் அவர் பின்னே வந்து எதையோ கேட்ட அதிபருக்கு திடுக்கிட்டு திரும்பி பதில் சொல்லி சமாளித்தார்.

அவர்கள் மீண்டும் தனிமையில் விடப்பட்டபோது சிந்தக்க அவரை நிமிர்ந்து பார்த்தான்.

“ஏன் அங்கிள் என்னை வேண்டாமென்கிறீர்கள்? நான் ஒரு சிங்களவன் என்பதாலா? ஒரு நீதிபதி நீங்களே இப்படி பிரிவினை பேசலாமா?”

“நான் ஒன்றும் அதற்காகவெல்லாம் சொல்லவில்லை. நீ யார்? உன்னை எப்படி நம்புவது? யாரை நம்பி என் குழந்தையை நான் அவ்வளவு தூரம் அனுப்புவேன். அவள் அங்கே தனித்துப்போய் விடமாட்டாளா?” அவர் உண்மையிலேயே ஏக்கமாக தான் கேட்டார்.

“அங்கிள் அவள் என் உயிர். உங்களைப்போலவே நான் அவளை கவனமாக பார்த்துக்கொள்வேன். என் அப்பா அம்மா எல்லாருக்குமே அவள் என்றால் உயிர் தான். எங்களை நம்பி அனுப்புங்கள். நீங்கள் மாப்பிள்ளை பார்த்தால் கூட ஒரு நம்பிக்கையில் தானே அவளை திருமணம் செய்து அனுப்புவீர்கள். என்னை சும்மாவெல்லாம் நம்பி அனுப்பவேண்டாம். என்னையும் ஆட்கள் வைத்து விசாரியுங்கள் எங்கள் வீட்டை வந்து பாருங்கள். நான் எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொள்ளுங்கள் அதன் பிறகு முடிவெடுங்கள்.”

…..

தேவைக்கதிகமாக சம்பாதிக்கிறேன்.அவளை மகாராணியாக என்னால் வைத்துக்கொள்ள முடியும். ஒரு வேளை அது தான் உங்கள் கவலை என்றால்

……

நீங்கள் ஒருவேளை பயப்படலாம். அவளின் அடையாளங்களை நான் அழித்து விடுவேனென . அந்த பயமே உங்களுக்கு வேண்டாம். அவளை அவளாகவே வாழ வைப்பது என் பொறுப்பு.

இருந்தாலும்….

இதோ இந்த ஊருக்கு நான் ஏன் செய்யவேண்டும் என்று தோன்றியது? என் மனைவியின் பக்கம் இனிமேல் என்னதும் தானே.. அவளை எப்போதோ மனதில் அப்படி நினைக்க ஆரம்பித்து விட்டேன். அவளுக்கு யுத்தம் இந்த பிரதேசத்தை சிதைத்து விட்டதென்று பெரும் ஆதங்கம் உண்டு.  இந்த ஊரின் மீள் கட்டுமானத்தில் அவளால் பங்களிக்க முடிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாள் என்று தோன்றியது. என்னுடையதெல்லாம் அவளுடையது தானே.. அவளுக்காகத்தான் முதல் தடவை நான் இங்கே வந்தேன். அதன் பிறகு தானாகவே இந்த பாடசாலை என் உறவாக மாறிவிட்டது. இங்கே பாருங்கள்…இதைஎல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக்காட்டவில்லை. என் வாழ்க்கை எப்போதோ அவளை மையமாக வைத்து இயங்க ஆரம்பித்து விட்டது என்று புரிய வைக்கத்தான் முயல்கிறேன்.

அன்றைக்கு கூட உங்கள் சம்மதத்தின் பின் தான் இனிமேல் உன்னை தொடர்பு கொள்வேன் என்று தான் மைதிலியிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டுத்தான் வந்தேன். இன்றை வரைக்கும் நான் அதை மீற வில்லை. நீங்கள் சம்மதிக்காவிட்டால் கூட நான் சொன்ன வாக்கை காப்பாற்றித்தான் ஆகவேண்டும். மைதிலி கூட உங்கள் மனதை காயப்படுத்தி என்னோடு வரமாட்டாள். ஆனால் காலம் முழுவதும் நாங்கள் இப்படியே தான் காத்திருப்போம். அது மட்டும் நிச்சயம்.

“என்ன மிரட்டுகிறாயா?”

மிரட்டல் எல்லாம் இல்லை ஜஸ்டிஸ்.எங்கள் நிலைமையை சொன்னேன்.

“நீ ஏன் பேசமாட்டாய்? இப்போது உன் வயது பேசுகிறது. உனக்கு வயதாகி ஒரு குழந்தை இருந்தால் தான் உனக்கு என் மனமும் வலியும்  புரியும்.”

“உங்கள் மகளை கைப்பிடிக்காவிட்டால் அது நடக்க வாய்ப்பே இல்லை ஜஸ்டிஸ். அப்படி எனக்கு வலிக்க வைக்கவாவது சம்மதியுங்கள்” என்று பளிச்சென புன்னகைத்தவன் கடைசியாக கேட்கிறேன் எங்களுக்காக கொஞ்சம் யோசியுங்கள்”  என்று முடித்தான்.

அவர் ஏதாவது சாதகமாக சொல்வாரா என்று சற்று நேரம் அவரையே பார்த்திருந்தவன் அவர் அவனை பாராமல் பிளேட்டை அளைந்து கொண்டிருக்க ஏமாற்றத்துடன் நிமிர்ந்தான்

பிறகு “ வர்றேன் ஆன்ட்டி” என்று வெளுத்த முகத்துடன் அவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டிருந்த சீதாவிடம் கைகுவித்து விட்டு விடு விடுவென்று அவ்விடத்தில் இருந்து அகன்று  வந்துவிட்டான் சிந்தக.

எப்படியோ சமாதானம் செய்து விடலாம் என்று ஆசையோடு வந்தவனுக்கு அவர் பிடிகொடுக்காமலே பேசியது பலத்த ஏமாற்றம் தான்.

சில நேரங்களில் அவரது முகபாவம் அவன் பேச்சை மனதில் நல்ல விதமாக பரீட்சிக்கிறார் என்று தோன்றவைத்தது. ஆனால் அவர் பதிலோ நெகட்டிவ்வாகவே வந்து கொண்டிருந்ததில்  அவன் சோர்ந்து போனான்.

மனதில் இப்படித்தான் என்று முடிவு கட்டிக்கொண்டால் அதன் பின் என்னதான் நாம் தலைகீழாக நின்றாலும் அந்த அபிப்ராயத்தை மாற்ற முடிவது இல்லை. நம்முடைய விஷயத்திலும் இவர் அப்படியேதும் முடிவு வைத்திருப்பாரோ..நமக்கும் அப்படித்தான் ஆகிவிடுமோ என்று பயம் அவனை கவ்விக்கொண்டது.

ராஜ நாயகம் கணவன் மனைவி இருவரையும் அழைத்துக்கொண்டு பாடசாலையை சுற்றி காண்பிக்க செல்வது தூரத்தே தெரிந்தது,   அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் அதிபரிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றான் சிந்தக.

இவர் இப்படியே மறுப்பாக பெசிக்கொண்டிருந்தால் அடுத்து என்ன தான் செய்வது? இவரை எப்படித்தான் அணுகுவது? நம்பிக்கையும் சந்தோஷமுமாக கிளம்பி வந்தவன் வேதனை சூழ ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *