WLM அத்தியாயம் 17

There will be no ‘us’ in future..இவ்வளவு நாளும் நானே அதை முடிவு செய்து அதற்கேற்றபடி நடந்தும் வந்தேன் என்பதை மறந்து நான் அசைவற்று நின்று கொண்டிருந்தேன். இனிமேல் இவனை பிரிந்து வாழ்வது எனக்கு சாத்தியமாகுமா? எனக்கு நீதி வேண்டும் என்று அடம்பிடித்து இப்படியொரு நிலைக்கு அவளை கொண்டு வந்து விட்டு இன்னும் ஐந்து நாட்களுக்கு பின் நாம் பார்ப்போமா மாட்டோமா என்றே தெரியாது என்று எவ்வளவு சாதாரணமாக சொல்கிறான்! இறைவனே என் காலத்தை இந்தப்புள்ளியிலேயே உறைய வைத்துவிட மாட்டாயா?

அவ்வளவு நேரமும் தன்னிச்சுற்றி படர்ந்து கிடந்த இனிமையில் திளைத்துக்கொண்டிருந்தவள் அவன் சொன்ன சொல்லில் விழிப்பு வந்தது போல தன்னை தானே உலுக்கிக்கொண்டாள். இது எவ்வளவு இயல்பாக என் மனதை விட்டு மறைந்து போய் அவளே அவர்களின் எதிர்காலம் குறித்து பேசும் அளவுக்கு ஆகியிருக்கிறது!அவசரமாய் தனக்கு இன்னும் எவ்வளவு நாள் லீவ் இருக்கும் என்று கணக்குப்பார்த்துக்கொண்டவள் பிறகு தன்னிலை உணர்ந்தே சுயபச்சாத்தாபத்தில் கண்ணீர் பொங்கி வர அவனை விட்டு விலகி வெளியே நடந்து மாமரத்தின் கீழே அமர்ந்தாள்.

இந்த வீடு, அதன் வெளிப்புற வடிவமைப்பு, மாமரம் எல்லாமே அவளுக்கு தன்னுடைய வீட்டில் இருப்பதைப்போலவே ரிலாக்ஸான உணர்வை எப்படி கொடுக்க முடிகிறது என்று ஆச்சரியமாய் நினைத்திருக்கிறாள். ஆனால் இங்கிருந்து போனபிறகு இந்த வீடு கொடுத்த சொந்தத்தை, இனிமையை கனவு போன்ற அழகிய நிமிடங்களை இனிமேல் அவளது சொந்த வீடால் கொடுக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது.

“பிரைட் ரைஸ் செய்வதற்கு உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு என் தலையில் எல்லாவற்றையும் சுமத்தி அம்போ என்று விட்டுவிட்டு இங்கே வந்து அமர்ந்து கொண்டால் என்ன அர்த்தம்?” அவனின் தமிழ்க்குரல் கேட்டதில் அவள் திடுக்கிட்டுத்திரும்ப அதற்குள் சில்வர் கரண்டியால் அவளுடைய தலையில் செல்லமாய்த்தட்டி விட்டு கண்சிமிட்டினான் அவன்.

நான் அப்செட்டாக இருக்கிறேன் என்று தமிழில் பேசி சமாதானப்படுத்துகிறானா என்று நினைத்துக்கொண்டாலும் இதற்கு அவன் தன் மொழியிலேயே பேசலாம் என்று அலுப்புடன் நினைவு வருவதை தடுக்க முடியவில்லை. அப்படியே ஹஸ்கி டோன் வந்து ஒட்டிக்கொள்கிறது இவன் பேசும் போது!!!! இருக்கும் பிரச்சனை போதாதென்று இவன் வேறு! என்று அலுத்துக்கொண்டு பெஞ்சை விட்டு எழுந்தாள் மைதிலி.

“சாரி..என்னமோ யோசிச்சிட்டு இங்கே வந்து உக்கார்ந்துட்டேன்” என்று சொல்லியபடி அவள் கிச்சனை நோக்கி போக அவனும் அவளை பின் தொடர ஆரம்பித்திருந்தான்.

செய்முறைபார்த்து  அவள் அளவுகளையும் தேவையான பொருட்களையும் வாசிக்க வாசிக்க அவன் அவற்றை எடுத்துப்போட்டு கிளறி சொதப்பல்களும் சமாளிபிகேஷன்களுடனும் கூடிய அன்றைய சமையல் இனிமையாய்  தொடர்ந்தது. ஆச்சரியத்திலும் ஆச்சர்யமாய் அது சுவையாகவே இருந்தும் விட ரசித்து உண்டனர் இருவரும்.

பிளேட்டை சிங்கில் வைத்துவிட்டு டாப்பை திறந்து விட்டு அவள் கழுவ எத்தனிக்க அவன் பிளேட்டை வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டான்.

பிகுபண்ணிக்கொள்ளாமல் விலகியவள் மதியத்துக்கான தன்னுடைய மாத்திரைகளை எடுத்தபடி “எங்காவது வெளியே போலாமா?” என்று அவனிடம் கேட்டாள்.

“உனக்கென்ன இங்கே சுற்றுலா வந்ததாக நினைப்பா? கை ஒடிந்திருப்பது போதாதென காலிலும் தலையிலும் தையல் வேறு! அதுதான் இங்கிருக்கும்போது  திகட்ட திகட்ட பார்த்திருப்பாயே எல்லா இடமும்! ஒரு இடமும் அழைத்துக்கொண்டு போகமாட்டேன், வேண்டுமானால் போய் படுத்து தூங்கு இல்லாவிட்டால் என்னுடைய லப்டாப்பில் எதையாவது வாசித்துக்கொண்டிரு..”

பட படவென அவன் பொரிந்ததை எதிர்பாராததால் ஒரு நிமிஷம் விழித்தாள் அவள்.

“அதை கொஞ்சம் சாஃப்டா சொன்னா என்னவாம்!! திட்டற மாதிரியே சொல்றீங்க?…நான் என்ன கேட்டேன்னு புரிஞ்சுக்காம காச் மூச்சுன்னு கத்தினா அப்புறம் அவ்ளோ தான் சொல்லிட்டேன்..”

“என்னடி பண்ணுவ?” அவன் அவளை அருகே இழுத்து கண்ணால் சவால் விட்டான்.

“சப்பா.. யார்ப்பா உங்க தமிழ் டீச்சர் பயபுள்ள அநியாயத்துக்கு சின்சியரா சொல்லிக்கொடுத்திருக்கான்! நான் என்ன செய்வேன்னா கேக்கறீங்க? நாங்கல்லாம் பேராதெனிய தமிழ்ச்சங்கம் தெரியுமோ..முழு தூய தமிழ் சொல் மட்டுமில்ல தூய சிங்கள சொற்கள் கூட எனக்கு தெரியும். அர்ச்சனை பண்ணி விட்ருவேன்..”

எஹேமத? (அப்படியா?)” என்று கிண்டலாய் இழுத்தவன்  “எங்கே ஒரு சொல் சொல்லு பார்க்கலாம்…” என்றபடி அவளை இன்னும் நெருக்கினான்.

அவனுடைய கண்களை பார்த்ததுமே ஒற்றைக்கையை மேலே உயர்த்தி சிரித்தபடி விலகியவள் “நான் என்ன கேட்டேன்னு கடைசிவரை கேட்கவே இல்ல!” என்று குற்றம் சுமத்தினாள்

“சரி சொல்லு.”

“இங்கே பக்கத்தில எங்காவது சிவன் கோவில் இருக்குமா? என்னமோ இன்னிக்கு போகணும் போல தோணுது..அதுதான் அப்படி ஆரம்பிச்சேன்!”

“இதை நேரே கேட்கவேண்டியது தானே.. சிவன் கோவில்….. கெக்கிராவவில் இருந்து அனுராதபுரம்  போகும் வழியில் சின்னதாய் ஒரு கோவில் இருக்கிறது.. பிறகு அதிலிருந்து இன்னும் ஒருமணி நேரம் போனால் இன்னுமொரு இந்துக்கோவில் வரும். ஆனால் அது சிவன் கோவிலா இல்லையா என்று எனக்கு தெரியாது. எங்கே போகலாம்?

சின்னக்கோவிலுக்கே போவோமா?

ஹ்ம்ம்… ஆறுமணி போல புறப்பட்டோமெனில் ஆட்கள் யாருமில்லாமல் நாம் மட்டும் பார்த்து விட்டு வரலாம்.

சரி..

மாலை ஐந்து மணிக்கெல்லாம் தன்னுடைகள் வைக்க அவன் கொடுத்திருந்த சூட் கேசினை ஆராய்ந்து கொண்டு நின்றாள் மைதிலி.

ஒரு சுடிதார் இல்லாமல் போய்விட்டதே! அவள் லேசாய் வருத்தப்பட

பச்..லூசு.. சுடிதார் இருந்தாலும் அதை அணிந்து கொள்ள உதவிக்கு அவனிடமா போய் நிற்பாய்? என்று மனம் மண்டையில் மானசீகமாக கொட்டியது

இருப்பதில் நீளமான ஸ்கர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டவள் கண்ணாடியில் பார்த்தபோது  அவளுக்கு திருப்தி ஏற்படவில்லை. பொட்டும் வைக்க முடியாது. அதுதான் நெற்றியில் ஹாரிபாட்டரின் தழும்பு போல தையல் போட்டு பிளாஸ்திரி வேறு போட்டு விட்டிருக்கிறார்களே!

கூந்தலை வாரிகொண்டே வெளியே போனவள் நாலைந்து நந்தியாவட்டை பூக்களை பறித்து ஒன்றாய் சேர்த்து கிளிப்போடு சேர்த்து தலையில் குத்திக்கொண்டு கூந்தலை லூசாக விட்டாள்.  இப்போது கொஞ்சம் கோவிலுக்கு போகும் உணர்வு வந்ததாக பட்டது. பிறகு ஒரு பொலுத்தீன் பையை எடுத்துக்கொண்டு போய் அங்கிருந்த சிவப்பு செம்பருத்திகளையும் நந்தியாவட்டைகளையும் கொஞ்சமாய் பறித்து சேர்க்க ஆரம்பித்தாள் அவள்.

சிந்தக வரும் அரவம் கேட்டது. 

பின்பக்கமிருந்து அவனும் இரண்டு ரோஜாக்களை பறித்து வந்திருக்க அதையும் பையில் போட்டுக்கொண்டு கோவிலை நோக்கி புறப்பட்டனர் இருவரும்.

என்னமோ கோவிலை நெருங்க நெருங்க தனக்கான தீர்வுகள் முழுக்க முழுக்க அந்த சிவனிடம் தான் இருப்பதாகப்பட்டது அவளுக்கு. இருந்த மன அழுத்தத்தை முழுவதுமாய் சிவனிடம் கொட்டிவிட்டு என் வாழ்க்கையை ஏன் இப்படி ஆக்கினாய் என்று கேட்டு அழ வேண்டும் போலிருந்தது.

வண்டி நின்றுவிட கேள்வியை திரும்பி பார்த்தவள் சிந்தக முன்னே வந்து கொண்டிருந்த பெண்ணையும் ஒரு ஏழு வயது மதிக்கப்படக்கூடிய பெண்ணையும் பார்த்துக்கொண்டே இறங்குவதை கவனித்தாள்.

பெரிய புன்னகையுடன் அந்த பெண் இவனுக்கு வணக்கம் சொல்வதையும் அந்த குட்டிப்பெண் வெட்கப்புன்னகையுடன் சிரிப்பதையும் கண்டு ஆர்வமாய் இவள் எட்டிப்பார்க்க தலையசைத்து இவளை வர சொன்னான் அவன்.

தயக்கமாய் இறங்கிப்போனவளை எங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினர் என்று மட்டும் அறிமுகம் செய்தவன் அந்த குட்டிப்பெண்ணை காட்டி “மேடம் மாலைதீவுக்கு போயிட்டு வந்தாங்க போனவாரம். செஸ்ல ஏஷியன் ரன்னர் அப். “ என்று பெருமையுடன் அறிமுகம் செய்தான்.

அவள் கைகுலுக்கி வாழ்த்துச்சொல்ல அவளின் அம்மா இவளிடம் தொடர்ந்தார். “தம்பி இல்லைன்னா இதெல்லாம் முடிஞ்சிருக்காதும்மா..இவங்கப்பா சண்டைல செத்துப்போய்ட்டார்..வர்ற பென்ஷன் குடும்ப செலவுக்குத்தான் போதும்..இப்படிப்பட்ட செலவுகளுக்கு நான் எங்கே போவேன்.. தம்பி தான் எதேச்சையா இவளை பற்றி கேள்விப்பட்டு நானே இவள் படிப்பும் விளையாட்டும் சம்பந்தமான சகலத்தையும் பண்றேன்னு பொறுப்பெடுத்திச்சு..”

அப்போதுதான் அது இராணுவ வீரன் ஒருவனின் குடும்பம் என்று அவளுக்கு புரிந்தது. கள்ளமில்லா அந்த குட்டிப்பெண்ணை பார்க்கும் போது அழுகை தான் வந்தது.

இவளின் அப்பா கெட்டவனோ, அப்பாவியோ அவனையே நம்பியிருந்த குடும்பத்துக்கு அவன் தானே எல்லாம்.. பாவம். இந்தப்போர் தான் எத்தனை குடும்பங்களை சீர்குலைத்து போட்டிருக்கிறது!

நான் தமிழ் என்று தெரிந்தால் எப்படி ரியாக்ட் செய்வார்கள்?

நான் இவர்களை குற்றம் சொல்வது போலவே, அழகாக சிரித்த அந்த குட்டிப்பெண்ணும் என் அப்பாவின் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று என்மீது வெறுப்பை கொட்டுவாளோ?

யோசனைகளுடன் பேசாமலே மௌனமாக வந்துகொண்டிருந்தவள் கிராப்புற சூழலுக்குள் வண்டி நுழைந்ததனால் பசிய வயல்களும் நீர்ப்பாசன கால்வாய்களுமாய் வெகு அழகாயிருந்த இடத்தை தன்னை மறந்து ரசிக்க ஆரம்பித்தாள்

அதோ அந்த ஜங்க்ஷன் திரும்பும் இடத்தை பார் அதில் ஒரு ஆலமரம் தெரியுதே..அதன் கீழே குட்டியாக தெரிவது தான் கோவில்.. சிந்தக கைகளால் சுட்டிக்காட்டினான்.

அந்த வீதியின் ஓரத்தில் அவன் காரை நிறுத்த பரபரப்புடன் இறங்கியவள் மறுபக்கம் இருந்த தண்ணீர் தொட்டியில் கால்களை கழுவினாள்

அவளுக்கு அருகே பான்ட்டை மேலே மடித்து விட்டுக்கொண்டு சிரத்தையாய் கால்களை கழுவியவனை அவளது பார்வை தொட்டுத்தொட்டு போனது.

கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே இருந்த குட்டித்திண்ணையில் இருவரும் ஏறினர்.

அடடே சாமியை உள்ளே வைத்து பூட்டிவிட்டார்கள்!!!! அவன் ஏமாற்றமாய் சொல்ல அவளுக்கு சிரிப்பு வந்தது.

அது கர்ப்பக்கிரகம். உள்ளே தான் சிவலிங்கம் இருக்கும்..இது தனியான ஏரியா இல்லையா..அதனால் பூஜை நடக்கும் போது தான் திறப்பார்கள் போலிருக்கிறது! அதனால் என்ன பரவாயில்லை..

பூட்டிய இரும்பு கேட்டின் வெளியே பூக்களை வைத்துவிட்டு கம்பிகளுக்குள்ளே தெரிந்த சிவலிங்கத்தை நோக்கி கைகூப்பி நின்றாள் அவள்.

கண்கள் இதற்குத்தான் காத்திருந்ததை போல கலங்கி தளும்பி வழிய ஆரம்பித்தன.

என்ன செய்யப்போகிறேன்? உள்ளிருந்தவனிடம் கேட்டாள் அவள். எனக்கு ஏன் சந்தோஷம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று காட்டிக்காட்டி பறித்துக்கொள்கிறாய்? நான் பாட்டுக்கு ஊருக்கு போய் சேர்ந்திருப்பேனே..காயம் பட வைத்து இவனை மீண்டும் கொண்டு வந்து இன்னும் இன்னும் சிக்கலாக்கி வைக்கிறாயே…

அப்பாவுக்கு ஒருதடவை நெஞ்சு வலி என்னால் வந்துவிட்டது. இனி நான் எப்படி அவரிடம் அந்த பேச்சை எடுப்பேன்? முடியவே முடியாதே… அப்படியானால் இந்த பிரச்சனைக்கு என்ன தான் முடிவு? பிரிவு தானா? அப்படியானால் என் பஸ்ஸை ஆக்சிடண்டாக்கி எதற்கு அவனிடம் என்னை மீண்டும் கொண்டு வந்து சேர்த்தாய்?

யார் பதில்சொல்வார்கள்.. விபரிக்க முடியாத தெய்வீக அமைதியுடன் சிவலிங்கம் பூக்களின் நடுவில் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது.

கண்ணை திறந்து அவனை தேடினாள் மைதிலி

 அந்த குட்டித்திண்ணையின் ஓரமாய் இருந்த சுவரில் கால்களை நீட்டி சாய்ந்துகொண்டு விழிகளை மூடியிருந்தான் அவன் .

ஒரு நிமிஷம் விழிஎடுக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் தில்லைக்கூத்தனிடம் திரும்பினாள்.

“எனக்கு இவனை சொந்தமாக கொடுத்து விடேன்?” தன்னை மீறி வந்து விழுந்த வேண்டுதலின் அதிர்வில் அதன்பிறகு எதையும் கேட்கத்தோன்றாமல் சிறிது நேரம் கைகூப்பி நின்றவள் கேட்டுக்கு வெளியே இருந்த விபூதியை பிளாஸ்டருக்கு மேலே போட்டு சநதனமும் குங்குமமும் வைத்தாள் பிறகு சந்தனத்தை மட்டும் எடுத்து வந்து விரல்களால் தொட்டு அவனுடைய நெற்றியிலும் வைத்துவிட்டாள். நெற்றியில் பரவிய குளுமை காரணமாய் கண்களை திறந்தவனிடமும் உடைக்க விரும்பாத மௌனம்

தானும் அவனுடைய அருகில் அமர்ந்தாள் மைதிலி. சுற்றிலும் நன்றாக இருள் பிடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

ஐந்து நாளில் ஒரு நாள் முடிந்து கொண்டிருக்கிறது..இன்னும் நான்கே நாட்களில் நான் இங்கிருந்து போயாக வேண்டும்! அதன் பிறகு அவர்களுக்கு என்ன ஆகும்? இனி இவனை நான் வாழ்நாளில் காண்பேனா? தவிப்பு அவளைப்போட்டு அலைக்கழிக்க அவனுடைய நீட்டியிருந்த காலில் சரிந்து தலையை வைத்துக்கொண்டாள் அவள். கண்ணீர் வழிந்து பான்ட்டினை நனைக்க அவன் விரல்களோ மிக மென்மையாய் அவளுடைய தலைமுடியை வருடி விட்டுக்கொண்டிருந்தன.

ஒரு கட்டத்தில் தாளாமல் நிமிர்ந்தவள் அவனுடைய கண்களும் ரத்த வர்ணம் கொண்டிருப்பதை கண்டு அவனுடைய கையை இறுகப்பற்றினாள்.

மைத்தி..

“என்னை விட்டுடாதீங்க சிந்தக….எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..ஏதாவது பண்ணுங்க..என்னால அப்பா கிட்ட பேச முடியாது..அவங்களை விட்டுட்டு உங்க கூட ஓடியும் வர முடியாது. அப்பாக்கு என்னால ஏதாவது ஆச்சுன்னா செத்துப்போயிருவேன் சிந்தக..உங்களை விட்டுட்டும் என்னால இருக்க முடியாது. ஏதாவது பண்ணுங்க.. எனக்கு உங்க கூட ரொம்ப சந்தோஷமா வாழணும்..எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..” பொங்கி வந்த அழுகையுடன் வாய் விட்டு கதறியபடி அவனின் புஜங்களில் முகம் புதைத்தவளை இழுத்து நெஞ்சில் சாத்திக்கொண்டவன் விம்மல் அடங்கும் வரை தட்டிக்கொடுத்தான்

அவளாகவே ஒரு கட்டத்தில் நிமிர அவனுடைய கண்களும் கசிந்திருந்தன.

வா போகலாம் என்றபடி அவளின் கையை பற்றி அழைத்துக்கொண்டு போய் வண்டியில் ஏற்றினான்.

வண்டி மெயின் ரோட்டில் ஏறும் வரை இருவருமே எதுவும் பேசவில்லை.

வெறிச்சோடியிருந்த சாலையில் வண்டியை கொஞ்சம் ஓரங்கட்டியபடி அவளின் பக்கமாய் திரும்பினான் அவன்

“நாளைக்கு காலைல நானே உன்னை கூட்டிட்டு போய் ஹாஸ்டல்ல விட்டுர்றேன் மைத்தி..”

நான் என்ன சொன்னேன்..இவன் என்ன சொல்கிறான் என  அவள் அதிர்ச்சியாய் பார்க்க அவளின் வலக்கையை எடுத்து உதட்டில் ஒற்றி விட்டு “நீ இந்த வார்த்தையை சொல்ல மாட்டியான்னு ஏங்கினேன் மைதிலி. அவ்வளவு இலகுவாக என்னை விட்டுக்கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது என்பது தான் என் ஆதங்கமாய் இருந்தது. அன்றைக்கு ஹாஸ்பிட்டலில் வைத்து உங்களை நான் விட்டு கொடுக்க மாட்டேன்பா ன்னு உங்கப்பா பத்தியே தான் சொல்லிட்டிருந்த.. அப்போ தான் நான் இன்னும் உனக்கு விட்டுக்கொடுக்கவே முடியாத உறவா ஆகலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்துது..இவ்வளவு பொய் சொல்லி உன்னை இங்கே கூட்டிட்டு வந்ததும் அதுக்காகத்தான். நீ போறதுக்குள்ள என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு சொல்ல மாட்டியான்னு ஒரு நப்பாசை.. ஆனா அதெல்லாம் தப்பு..நீ என்ன மாதிரி நெருக்கடில இருந்தேன்னு நீ இங்கே வந்தப்புறம் உன்னை பார்க்க பார்க்கத்தான் எனக்கு  புரிய ஆரம்பிச்சது.. இப்போ சொன்னியே என்னவாவது பண்ணுங்கன்னு.. இனி நான் பார்த்துக்கறேன் கண்ணம்மா..உங்கப்பா பத்தி கவலைப்படாதே.. அவருக்கு ஒண்ணும் ஆகாது.. நீ உன் மீதி இருக்கற செமஸ்டரை முடி.. அதுக்குள்ளே நான் எல்லாத்துக்கும் ஒரு வழி பண்றேன்”

என்ன பண்ண முடியும்? என்று யோசித்தாலும் அவன் இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதே ஆறுதலாக இருந்தது. அதுக்கு என்னை என் கூட்டிட்டு போய் ஹாஸ்டல்ல விடணும்? என்று பொய்க்கோபமாக கேள்வி கேட்டாள் அவள்

பட்டென்று சிரித்து விட்டவன் “நான் பண்ணது ரொம்ப தப்புன்னு முதல் நாளே புரிஞ்சு போச்சுடி..ஆனாலும் ஒரு வைராக்கியத்துல அஞ்சு நாள் என் கூட உன்னை வச்சுகிட்டேன்..இப்போ ரெண்டு பேர் மனசும் தெளிவா இருக்குல்ல.. இனி நாம எங்கே இருந்தாலும் ஒண்ணுதான்..இனியும் நீ குற்ற உணர்ச்சியோட எதுக்கு இருக்கணும்..நாளைக்கே நாம ஹாஸ்டல் போறோம்.. “ என்றான் முடிவாக

 உண்மைதானே..மலர்ச்சியாய் அவன் முகம் பார்த்து சிரித்தாள் மைதிலி

முதல்ல காலைல கொஞ்சம் ஷாப்பிங் பண்ணணும்..

எதுக்கு?

இன்னும் நாலு நாள் லீவ்ல ஹாஸ்டல்ல தனியா நிப்பேல்ல..சாப்பிடுற ஐட்டங்கள், சூப் வகைகள் கொஞ்சம் எடுத்துட்டு போ..ஹாஸ்டல்ல நானா வந்து பண்ணித்தர முடியும்?

 ஹா ஹா

சிரித்தவளின் கன்னத்தில் அவசரமாய் ஒரு முத்தம் பதித்தான் அவன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *