WLM அத்தியாயம் 22

“சட்டென என் வாழ்க்கையில் யாரோ மந்திரக்கோலை பிடித்து ஆட்டி போயின போயின துன்பங்கள் என்று சொன்னதைப்போல எப்படியோ எல்லாமே அதனதன் இடத்தில் கச்சிதமாய் போருந்திப்போயிருந்தன. இனிமேல் நான் நேசித்தவர்கள் எல்லாருமே எனக்கே எனக்குத்தான். அருகில் இருந்தவனின் புஜத்தினை என் முகத்தோடு சேர்த்து இறுக பிடித்துக்கொண்டேன். இனி ஆயுளுக்கும் விட்டு விடும் எண்ணம் இல்லாமல்!”

இரண்டு மாதங்களின் பின்னொரு நாள்…

வீட்டுக்கு எடுத்து செல்வதற்காக சகல சாமான்களையும் பாக் செய்து தயாராய் வைத்து விட்டு ஹாஸ்டலை சுற்றிக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள் மைதிலி. நாளையோடு இந்த மலை வாழ்க்கைக்கு இறுதிநாள்! மனம் முழுக்க போவேனா என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தது. நான்கு வருடங்கள் எப்படி கண் மூடித்திறக்கும் முன் ஓடி மறைந்து விட்டன!

அவளுக்கு பேராதேனியவை பிரிவதை விடவும் இன்னொரு பெரிய கவலை தான் மனதை மிகவும் அழுத்தியது. வீட்டுக்கு போன பின்னே நான் எப்படி சிந்தக்கவோடு சுதந்திரமாய் பேச முடியும்? அப்பா அம்மா சம்மதிப்பார்களா? இனி திருமணம் வரை என்னென்ன அடிதடிகளை அவள் பார்க்க வேண்டியிருக்குமோ?

இந்த இரண்டு மாதங்களும்  அலைச்சலை பொருட்படுத்தாமல் வார இறுதிகளில் அவன் கண்டிக்கு வந்து விடுவதும், அவளையும் சமயங்களில் அவளது நட்புக்கள், ஜூனியர் பெண்களை கூட கூடக்கூட்டிக்கொண்டு வெளியே செல்வதுமாய் அப்படியே பழகிப்போய்விட்டது. இனி அவனை பார்க்கவே முடியாதே…

இப்போது கூட இந்த வார இறுதியில் இரண்டு நாட்களாக கண்டியில் தான் தங்கியிருக்கிறான். ஏதோ மீட்டிங் விஷயம் என்றான். ஆனால் அவளுக்கென்றால் அவள் பாக் செய்தவைகளை பஸ்ஸில் கொண்டு சென்று சிரமப்படுவாள் என்பதற்காகவே  இந்த இரண்டு நாளும் அவன் இங்கே வந்திருக்கிறான் என்று தான் தோன்றியது. இனிமேல் பெற்றோராக பார்த்து அவனை அவளுக்கு கொடுக்கும் வரை அவனை நேரில் பார்க்கக்கூட முடியாது என்றால் அவள் என்னதான் செய்வாள்?

அவனுக்கு இந்த கவலைகளெல்லாம் இல்லையா? பெரிய இவன் போல நான் சம்மதிக்க வைப்பேன் என்று அறிக்கை விட்டானே தவிர எந்த முயற்சியும் எடுப்பது போலில்லை. அவனிடம் அதைப்பற்றி இன்றைக்கு எப்படியாவது பேசியேஆகவேண்டும்.

சுமி ஏழு மணிக்கெல்லாம் சுதாவோடு ட்ரெயினில் கிளம்புகிறாள். நாமும் நைட்டில் போனாலென்ன என்று கேட்டால் ச்சே ச்சே அது நல்லாயிருக்காது என்று சொல்லிவிட்டான். அவளுக்குத்தான் அவமானமாக போய்விட்டது. அவன் தான் இப்படியென்றால் இந்த அப்பா கூட சும்மா இங்கே ஹாஸ்டல் மாறினால் கூட மிது நான் வரட்டுமா? நீயே சமாளிப்பாயா? என்று கேட்பவர் இப்போது மொத்தமாக காலி செய்து கொண்டு வீட்டுக்கு வரப்போகிறேன் என்று தெரிந்தும் ஒரு வார்த்தை நான் வான் கொண்டு வருகிறேன் என்று கேட்கவில்லை! அவ்வளவு கோபமா என் மேல்?

போன் ஐந்தரை என்று காட்டிக்கொண்டிருக்க அவள் கிளம்பும் நேரம் உதவி செய்யாமல் நாம் இங்கே சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று குற்ற உணர்வுடன் எண்ணியபடியே ரூமுக்கு போனவள் சுமி குளிக்க போயிருந்ததால் அவளுக்கும் தனக்குமாய் காபி கலந்து வைத்து விட்டு காத்திருந்தாள்.

ஏற்கனவே எல்லாவற்றையும் இரண்டு பெரிய சூட்கேச்களுக்குள் அடக்கி முடித்திருந்தாள் சுமி . ஆகவே அவளின் கைப்பை மட்டும் தான் வெளியே கிடந்தது. விரிப்புக்கள் கூட அகற்றப்பட்டு வெற்று மெத்தையாக இருந்த கட்டிலை பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது.

எழுந்து நின்று மழை லேசாக தூறத்தொடங்கிருந்ததை யன்னல் வழி பார்வையிட்டாள் அவள்.

உடைமாற்றிகொண்டு வந்து அமர்ந்தவள் காபியை எடுத்துக்கொண்டாள். யாராவது ஒருவர் ஆரம்பித்திருந்தால் இருவரும் கண்டிப்பாக அழுதிருப்பார்கள் ஆனால் இருவருமே அந்த பேச்சையே விட்டுவிட்டு பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர்.

“அண்ணா..வரமாட்டாரா மைத்தி? நான் அவரிடம் சொல்லிக்கொண்டு போகலாம் என்று நினைத்தேன்.”

“இல்லடி. நாளைக்காலைல அஞ்சு மணிக்கு நேராவே இங்க வந்துடறேன்னு சொன்னார்.”

“சரி சரி நான் அவருக்கு மெசேஜ் போட்டுட்டு போறேன். “

“ஹ்ம்ம்”

“அண்ணாவாம்..அண்ணாவும் தங்கையும் சமாதானமாக எவ்வளவு நாட்கள் எடுத்தன! அவளுக்கு சிரிப்பு வர பேச்சை மாற்றினாள் அவள்

“நானும் நைட்டே கிளம்பிருக்கணும்டி.. தனியா இன்னிக்கு இந்த ரூம்ல இருக்க எனக்கு ஒரு மாதிரியா பீல் ஆகுது..”

“லூசு..”

கதவு படபடவென தட்டும் சத்தம் கேட்டு தானாகவே சிரிப்பு ஒட்டிக்கொள்ள கதவை எழுந்து போய் திறந்தாள் மைதிலி.

அவள் எதிர்பார்த்தது போலவே “சுமி அக்கா” என்று கத்திக்கொண்டு ஓடிவந்து அவளை க்ரூப் ஹக் செய்து சிரிக்க வைத்து மூடை நொடியில் மாற்றிவிட்டனர் அவர்களுடைய இளவல்கள்.ஜூனியர்களின் சத்தம் கேட்டதுமே அடுத்தடுத்த அறைகளில் இருந்து அவர்களுடைய தோழிகளும் கிளம்பி வர அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த அறை ஒரு குட்டி தமிழ்ச்சங்கமாக மாறியிருந்தது.

ஆறரைக்கெல்லாம் சுதா வாடகை வண்டியோடு அங்கே வரும் வரை கலகலவென்றிருந்தது அந்த அறை. பிறகு எல்லோருமாக சேர்ந்து சூட்கேஸ்களை தூக்கிவந்து வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு சந்தோஷமாகவே கலைந்து செல்ல மைதிலி மட்டும் தனியாக உதிர்ந்து அறைக்கு வந்து சேர்ந்தாள்.

தன்னுடைய பொருட்கள் எல்லாவற்றையும் மீண்டுமொருதடவை சரிபார்த்தவள் எழுந்து நண்பிகளின் அறைகள் மற்றும் ஜூனியர்களின் அறைக்கு விசிட் செய்து பை சொன்னாள். அவள் திரும்பி அறைக்கு வந்தபோது நேரம் பத்தரையை தாண்டி இருந்தது. கப்போர்ட் புத்தக அலுமாரி, அங்கே நிரம்பியிருக்கும் சின்ன சின்ன டின்கள் கூட இல்லாமல் இருந்த அறையின் வெறுமை அவளை ஹோவென தாக்கியது. லைட்டை அணைத்து விட்டு படுத்தவளுக்கு தன்னுடைய பிரச்சனைகள் எல்லாம் நினைவில் வந்து சுற்றிக்கொள்ள கண்ணீர் வடித்தபடி வெகு நேரம் படுத்திருந்தாள் மைதிலி.

காலை நாலரைக்கெல்லாம் அலார சத்தத்தில் எழுந்து விட்டவள் குளித்து விட்டு வர சிந்தக்க கால் செய்து கொண்டிருந்தான் அவள் எழுந்து விட்டாளா என்று பார்ப்பதற்காக. ஐந்து மணிக்கெல்லாம் அவள் சூட்கேஸ்களை உருட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியேறும் போது அந்த ஹாரிடோர் நீளத்துக்கும் விளக்குகள் அணைக்கப்பட்டு நண்பிகள் நல்ல தூக்கத்தில் இருந்தார்கள். ஏனோ துக்கம் தொண்டையை அடைக்க இருளில் தனியாக கடைசித்தடவையாய் அந்த ஹாரிடோரில் நடந்தவள் செக்கியூரிட்டியிடம்  ஹாஸ்டலின் கிரில் கேட்டை திறக்க சொல்லிவிட்டு பெட்டிகளை படியில் வைத்து விட்டு நிற்க வெளிச்சத்தை பரப்பியபடி வந்து நின்றது சிந்தக்கவின் வண்டி.

உடனடியாக இறங்கி வந்தவன் சூட்கேஸ்களை வண்டியில் பின்னால் போட்டுவிட்டு சுற்றிக்கொண்டு வர தானும் ஏறி பெல்டை போட்டுக்கொண்டிருந்தாள் மைதிலி.

“அபி கிஹில்லா என்னம் ஐயே! அந்த செக்கியூரிட்டியிடம் அவன் விடைபெற தானும் கையசைத்து விடை பெற்றவள் காலைதூக்கி மேலே போட்டுக்கொண்டு அவன் காருக்குள்ளே போட்டுகொண்டிருந்த “saans mein teri” பாடலுக்கு எந்த கமன்ட்டும் அடிக்காமல் ஸ்ரேயா கோஷலின் குரலை கேட்டபடி வெளியே விடிந்தும் விடியாத நிலையில் இருந்த மலைப்பாதையையும் தன் பின்னே மறையும் ஹாஸ்டல்கள் பல்வேறு பீடங்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

என்ன பீலிங்கா மைத்திக்கு? அவன் குறும்பாய் கேட்க 

“ஒண்ணும் இல்ல.” என்று விறைப்பாய் பதில் சொன்னாள் அவள்

ஹ்ம்ம்… வேறென்ன??? பசிக்கிதா? அவன் இன்னும் சீண்ட

“இல்லைங்குறேன்..” என்று சிலிர்த்தபடி  ஸ்பீக்கரை சவுண்டாக வைத்தவள் எதற்கென்றே தெரியாத கோபத்துடன் வாயை இறுக மூடிக்கொண்டிருந்தாள்.

கண்டி நகரை விட்டு தாண்டும் வரை அவனும் எதுவும் பேசவில்லை,

ஆறரை மணிக்கெல்லாம் வழியில் பாதையோர கடையில் சுடச்சுட தேநீர் வாங்கிக்கொடுத்தவன் அவளின் முகத்தையே பார்த்தான்.

உடனே திரும்பி விடு விடுவென வண்டிக்குள் போக முற்பட்டவளின் தோளை பிடித்து திருப்பியவன் “அழுதியா?” என்று கேட்டான்.

“இல்லன்னு சொல்றேன்ன்ல..அப்புறம் என்ன அழுதியா நோழுதியா?” வழக்கமில்லாத வழக்கமாய் அவனிடமே எரிந்து விழுந்தவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் அதன் மேலே எதுவும் துருவாமலே வண்டியை ஓட்டினான்.

ஆனால் எட்டரை மணிக்கெல்லாம் காலை உணவு சாப்பிட ஓர் உணவகத்துக்கு  அழைத்துப்போன போதும் அவள் மூட் மாறாமலே இருந்ததை கவனித்தான் சிந்தக்க

பத்தே நிமிடங்களில் வண்டி கொஞ்சம் போக்குவரத்து குறைந்த தனிமையான பிரதேசத்துக்கு வந்ததும்  ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு “உனக்கு என்ன தான் பிரச்சனை?” என்று கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டான்.

“ஆமாம். எனக்குத்தான் எல்லா பிரச்சனையும்! உங்களுக்கு ஒண்ணுமே இல்ல..” என்று வெடித்தவள் “மைத்திம்மா” என்று அவன் தோளில் கைபோட அவ்வளவு நேரமும் இருந்த அழுத்தம் உடைந்து அவன் தோளிலேயே சரிந்து விக்கியழ ஆரம்பித்தாள் மைதிலி.

“என்னம்மா என்னாச்சு?” இப்போது அவன் தான் பதறிப்போனான்.

“இனிமே நான் உங்களை எப்படி பார்ப்பேன். அடுத்த சனிக்கிழமை நீங்க என்னை பார்க்க வரமாட்டீங்களே.. நான் வீட்ல இருந்தா இப்படில்லாம் ரொம்ப நேரம் போன் பேச முடியாது.உங்களுக்கு என்னை பிரியறோமே என்று கொஞ்சம் கூட பீலிங்கே இல்ல…” அவள் விம்மல்களுக்கிடையில் குற்றம் சாட்டினாள்

“என்ன நீ!!! லூசு.. நான் உன்னை அப்படியே விட்டுவிடுவேனா? நீ வீட்டுக்கு போனதும் நான் வந்து உன் அப்பாவிடம் பேசி எப்படியாவது சம்மதம் வாங்காமல் விட்டு விடுவேனா?”

அது அவ்வளவு ஈசி இல்லை..”

ஏன்மா..அவங்களும் உன்மேல பாசம் வச்சிருப்பாங்கல்ல. அப்படி உனக்கு பிடிக்காததை செய்ய வைக்க மாட்டாங்க..முதல்ல நீ நல்லது நடக்கும்னு நம்பு”

“அப்பா இப்போல்லாம் மாறிட்டார்”

“என்னடி சொல்ற?” இது அவனுக்கே புதிய தகவல் அல்லவா?

“ஆமா..நான் வீட்டுக்கு வர்றேன்னு சொல்ல சரி பிரண்ட்ஸ் கூடத்தானே என்று காஷுவலா கேட்டுட்டு விட்டுட்டாங்க.. முன்னர் எல்லாம் நான் சங்கமித்தா ஹாஸ்டல்ல இருந்து விஜயவர்த்தன போனா கூட நான் வரட்டுமா மிது? நீ  எப்படி சாமான்களை  தனியாக கொண்டு போவே என்று ஆயிரம் தடவை கேட்பார். நான் தான் வேணாம்பா வேணாம்பான்னு தடுத்து நிறுத்தணும்..இப்போ என்னடான்னா அவங்க ஒரு ஒகே சரியோட என்னை கை கழுவி விட்டாங்க..”

அவள் பொரும மானசீகமாக தலையில் கைவைத்துக்கொண்டான் சிந்தக்க. “அப்படி இல்லம்மா.. நான் சொல்றேன்ல..அழாதே”

“உங்களுக்கென்ன தெரியும்? சும்மா எதையாவது சொல்லாதீங்க? என்றபடி அவள் அழுகையை தொடர்ந்தாள்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவளின் மனதுக்குள் கிடந்த அழுத்தங்கள் எல்லாம் வெளியே வந்ததோ என்னவோ கட்டுப்படுத்தவே முடியாத கேவல்களும் விக்கல்களுமாய் அழுகை கூடிக்கொண்டே போக அவன் தான் பாவம் அயர்ந்து போனான்.

ஒரு கட்டத்தில் தாள முடியாமல் அவளை தன்னிடமிருந்து பிரித்து தன் முகத்தை பார்க்குமாறு அவளை வலுக்கட்டாயமாக நிமிர்த்திபிடித்தவன்

அழுகைய நிறுத்துன்னு சொல்றேன்ல..என்று பெரிய குரலில் ஒரு அதட்டல் போட்டான். பட்டென்று அழுகையை நிறுத்தி விட்டு அவனை ஏறிட்டு பார்த்தாள் அவள்

சிவந்திருந்த  கண்களும் வீங்கிய இமைகளுமாய் அவளிருந்த கோலமே அவனுக்கு தன்மேலே கோபத்தை உண்டுபண்ணியது. ச்சே கொடுமைக்காரன்டா நீ என்று தன்னையே மனதில் திட்டிக்கொண்டான். பின் அவளே ஹாரிபாட்டர் தழும்பு என்று செல்லமாக அழைத்துக்கொள்ளும் அவளது தையல் தழும்பின் மேல் வந்து விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கிவிட்ட படி பேச வாயெடுக்க அவளோ கோபாவேசமாய் அவன் கையை தட்டி விட்டாள்.

இது வீடு நெருங்க நெருங்க கூடுமே தவிர குறையாது. அவள் இப்படி அழுவதை எப்படி நாலு மணிநேரத்துக்குமேல் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? என்று ஒரு முடிவுக்கு வந்தவன் பாதையை கவனித்தான்.

இந்தபகுதியில் ஒன்பது மணிக்கு மேல் தான் ஒன்று ரெண்டு வாகனங்கள் போக ஆரம்பிக்கும். இப்போதைக்கு இங்கேயே சொல்லி விடுவது தான் நல்லது!

“ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேட்டுட்டு அப்புறமா அழு..இப்போ இங்கிருந்து அசைஞ்சேன்னு வை..அவ்ளோ தான்!!! இப்படியே உக்காந்திருக்கணும்!”

மிரட்டலாக சொன்னவன் அவளின் பார்வையை கவனிக்காதவன் போல வண்டியின் பின் புறம் போய் ஒரு பார்சலை எடுத்துக்கொண்டு தன் சீட்டுக்கு வந்தான்.  அவளின் பார்வை  இப்போது ஆர்வமாய் கவனிப்பதை கடைக்கண்ணால் பார்த்தபடி அதற்குள்  இருந்த ஒரு டின்னை வெளியே எடுத்து அவள் முன்னே வைத்தான்.

அப்போது அவள் முகம் காட்டிய உணர்வுகளை ஆயுளுக்கும் மறக்கவே முடியாது அவனால்!

முதலில் ஒரு குழப்பம் பிறகு அடையாளம் கண்டுகொண்ட புரிதல்..பிறகு அது கொடுத்த ஊகங்கள் கண்ணீருடன் சேர்ந்து பொங்கிய சிரிப்பு என்று அவள் முகமும் உடல் மொழியும் மாற மாற சிரிப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தான் அவன்

“ஹேய்!!! இது அம்மாவோட பாட்டில்!!! ஆப்பிள் ஸ்வீட்ஸ் வேற இருக்கு! எப்படி கிடைச்சது உங்களுக்கு?” என்று கிரீச்சிட்டபடி ஆப்பிள் வடிவில் இருந்த அந்த போத்தலை கையில்  எடுத்து அவசரமாய் ஆராய்ந்தாள் அவள்

ஆப்பிள் பச்சையில் கராம்பினால் ஆன காம்புகளுடன் நிரம்பிக்கிடந்த குட்டி ஆப்பிள் ஸ்வீட்கள் போத்தலுக்குள் குலுங்கின.

“இது அம்மாவோடதே தான்.. அம்மா எப்படி உங்களுக்கு கொடுத்தாங்க? அப்படி என்றால் வீட்டில் நீங்க பேசிட்டீங்களா? வீட்ல ஒகே சொல்லிட்டாங்களா? எப்போ நடந்தது? ஏன் யாருமே எனக்கு சொல்லலை?”

அவனது டீஷர்ட்டை கொத்தாக பற்றியிழுத்து வைத்துக்கொண்டு அவள் கேள்விகளை மழையாய் பொழிய ஒரு கணம் திணறித்தான் போனான் அவன்.

“எப்போன்னு கண்டுபிடி பார்க்கலாம்? என்று சிரிப்புடன் இமைகளை உயர்த்தி சவால் விட்டான்..

ஒரு நிமிஷம் நெற்றியை சுருக்கியவள் “ஹேய் ஹேய் எனக்கு தெரியும்….பேசமாட்டேன்னு சொல்லிட்டு அப்புறமா கால் பண்ணீங்களே அன்றைக்கு தானே..” என்று  உற்சாகமாய் கூவியவள் அவனது கள்ளச்சிரிப்பே அது தான் உண்மை என்று உணர்த்த “பாவிகளா ரெண்டு மாசத்துக்கு மேல என்னை ஏமாத்திட்டீங்களே” என்று உக்கிரமானாள்

நிலைமை மோசமானதை உணர்ந்து மாமனாரை மாட்டி விட்டால் நாம் கொஞ்சம் சமாளிக்கலாம் என்று சிரிப்புடன் அவருக்கு கால் செய்தவன் ஸ்பீக்கரில் போட்டான்.

அவரோ அவனுக்கு மேலாக ஆன்சர் செய்ததுமே..” தம்பி ஓகேவா? எல்லாம் பிரச்சனையில்லாமல் ஏத்த முடிஞ்சதா? நான் தான் வர்றேன்னு சொன்னேனே.. நீங்க தான் வேணாம்னு சொல்லிட்டீங்க “ என்று குறைப்பட்டுக்கொண்டார்.

முறைப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தாள் மைதிலி.

“இல்லை அங்கிள்..எல்லாம் ஒகே..நாங்கள் ஒரு ரெண்டு மணிக்கெல்லாம் அங்கே இருப்போம். ஆன்ட்டியை ஸ்பெஷலாக சமைக்க சொல்லுங்கள்” என்று ஏற்றி வைத்தான் அவன்

“வெளியே இருந்து தான் பேசறீங்களா? மிது எப்படி ரியாக்ட் பண்ண போறான்னு பார்க்க ரொம்ப ஆசையா காத்துட்டு இருக்கோம்..அதெல்லாம் நடந்துட்டு தான் இருக்கு..சீதா எழுந்ததுல இருந்து கிச்சனை விட்டு வெளியவே வரல..” என்று சிரித்தார்.

“சரி அங்கிள் நான் வந்து பேசறேன்.அவளுக்கு டவுட் வந்துரப்போகுது” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தவன் அவளை பார்த்து கண் சிமிட்டினான்.

“பார்த்தாயா? நான் மட்டும் குற்றவாளி இல்லை!!!” அவன் தோளை தொட்டு திருப்ப முயன்றான் அவன்

“போடா” கேவலுடன் கையை தட்டி விட்டாள் அவள்

“ஏய்!!!”

“போடா நீ..” மீண்டும் நெஞ்சில் கைவைத்து அவனை தள்ளிவிட்டவள் கேவலை நிறுத்தவில்லை.

கண்ணம்மா..என்ன?

பட்டென்று கன்னத்தில் ஒரு அடி விழுந்தது. அதிர்ச்சியாகி விழித்தான் அவன்

இவ்வளவு நாளும்  எவ்வளவு யோசிச்சு யோசிச்சு அழுதிருப்பேன் தெரியுமா? நேத்துக்கூட நைட் முழுக்க அழுதுட்டே இருந்தேன். என்னை பற்றி உங்க யாருக்குமே அக்கறையில்ல..அப்பிள் ஸ்வீட் சாப்பிடுங்க போங்க..

“அப்படியில்ல..உங்கப்பாக்கு உன்னை சர்ப்ரைஸ் பண்ண ஆசை..அவர் தான் இந்த ஐடியாவே கொடுத்தார்..நான் ஒத்துக்கிட்டேன்..எனக்கும் நீ என்னை நம்பி சந்தோஷமா இருக்கற போலத்தான் இருந்துது..நீ இப்படி பீல் பண்ணுவன்னு தெரிஞ்சா நான் முதல் நாளே சொல்லியிருப்பேனே..இப்போ நினைக்க கஷ்டமா இருக்கு.சாரிம்மா”

“போ நீ.”. கண்ணீர் முகம் இன்னும் மாறவில்லை அவளுக்கு.. மனம்  முழுக்க சிக்கல்களோடு இருந்தவளின் முன் யாரோ மந்திரக்கோலை ஆட்டி அவ்ளோ தான்.. முடிஞ்சது.. எழுந்து போ என்றால் யாரால் உடனே நம்ப முடியும்?

கொஞ்சம் கொஞ்சமாக மனதுக்குள் உண்மை பதிய சந்தோசம் பிரவாகமாய் பொங்கி வந்தது அவளுக்குள். 

எப்படி சாதித்தான் இதை?

அவளையறியாமலே எதிரில் இருந்தவனை பற்றி அருகே இழுத்தவள் கண்கள், கன்னம், தாடை என்று முத்தமிட ஆரம்பிக்க அவன் திணறித்தான் போனான். ஒரு நிமிஷத்துக்குள்ளாகவே சுதாகரித்துக்கொண்டவன் நிலைமையை தன் கையில் எடுத்துக்கொண்டு முத்தமிடும் பணியை தன் வேலையாக்கிக்கொண்டான். கைகள் அவளை இழுத்து தன்னோடு இறுக்கிக்கொள்ள எத்தனை நிமிஷங்கள் அப்படியே இருந்தனரோ தெரியாது முதலில் சுதாகரித்தவனும் அவன் தான்!

“பப்ளிக் ரோட் டி!!!!” என்று சிரித்தபடி விளையாட்டாய் அவளை கதவோரம் தள்ளி விட தளர்ந்து சீட்டில் விழுந்தவளும் “அதான் கருப்புக்கண்ணாடி போட்டிருக்கே, அப்புறம் என்ன?” என்று கண்ணடித்து சிரித்தாள்

“ரொம்ப கேட்டுப்போய்ட்ட பக்கி!!!” என்று அவளின் தோளில் அவன் ஒரு அடி வைக்க “என்னது பக்கியா? தமிழ் பக்கியையா சொன்னீங்க?” என்று கேட்டுவிட்டு அவன் சிரிப்புடன் தலையசைக்க “இதெல்லாம் யார்ரா உங்களுக்கு சொல்லித்தர்வன்?” என்று சிரிக்க ஆரம்பித்தாள் மைதிலி

“எல்லாம் உன் பிரண்ட்ஸ் பேசறதுல இருந்த கத்துக்கிறது தான்.”

அவன் வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்து பாதைக்கு கொண்டுவர ஆப்பிள் ஸ்வீட் போத்தலை திறந்து ஒன்றொன்றாக எடுத்து வாயில் போட்டபடி அவனை கேள்விக்கணைகளால் குளிப்பாட்ட ஆரம்பித்தாள் அவள்

“ஹ்ம்ம்…இந்தளவுக்கு வந்தாச்சா? இதை எப்போ கொடுத்தாங்க அம்மா?”

“யாழ்ப்பாணத்துல ஒரு பாக்டரி  திறக்க போறோம் அதுக்காக அடிக்கடி போவேன்..அப்போல்லாம் உங்க வீட்டுக்கு போவேன்..நான் எதெல்லாம் விரும்பி சாப்பிடறேனோ அதெல்லாம் அடுத்த தடவை பாக் பண்ணி வச்சு கொடுப்பாங்க உங்கம்மா..”

“ஓஹோ…. சூப்பர்!” என்று அவள் கண்ணை உருட்ட

பொறாமைப்படாதே…என்று சிரித்தான் அவன்

“ஷ்..சப்பா.. அதை விடுங்க எனக்கு என்ன நடந்தது என்று கதையை முழுக்க சொல்லுங்க!” என்று அவள் கேட்க அவனும் முழுமையாகவே என்ன நடந்தது என்று அவளுக்கு சொன்னான்.

“எனக்கு அவங்களை நினைக்க அழுகையா வருது! எனக்கு விஷயத்தை சொல்லிட்டேன்னு சொல்லாதீங்க..தெரியாத மாதிரியே நான் மெயின்டெயின் பண்றேன்..இல்லைன்னா மணி காத்து போன பலூன் போல ஆயிடுவார்”

சிரிப்புடன் தலையசைத்தான் அவன்.

‘ஆமாம். அந்த ஸ்கூல் எங்கே இருக்கு. எனக்கு ஏன் ஒண்ணுமே சொல்லலை?” அவள் முகத்தில் சிணுக்கம்.

“நான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வச்சிருந்தேன்”

‘சரி விடுங்க..இப்போ போகும் போது போய் பார்க்கலாமா?”

“வேணாம்..நேரம் ஆயிடும். சாப்பிடாம காத்துட்டு இருப்பாங்கல்ல..இன்னொரு நாளைக்கு வருவோம்.”

“சரி..ஆனாலும் மஞ்சு ஆன்ட்டி, அங்கிளை விடுங்க..சஜினி கூட எனக்கு சொல்லாம மறைச்சுட்டாளே”.

‘’ஹா ஹா அவ இப்போல்லாம் உங்கம்மா கட்சிக்கு மாறிட்டா”

“இருக்கட்டும் இருக்கட்டும்!!!”

A 9 பாதை நீண்டு போய்க்கொண்டே இருந்தது. தொடர்ந்து அவனிடம் இரண்டு மாதக்கதைகளையும் கேட்டபடி இருந்தவள்  ஒரு கட்டத்தில் தூங்கிப்போய் விட தலையை நேராக வைத்து விட்டவன் வண்டியில் நிறுத்தப்பட்டிருந்த மியூசிக் ப்ளேயரை மீண்டும் போட்டுவிட்டான்.

மீண்டும் அவள் கண்விழிக்கும் போது அவர்கள் ஆனையிறவு செக் பாயின்டையும் தாண்டி இருந்தார்கள்.அடிக்கடி வந்து போவபன் மற்றும் செல்வாக்கு காரணமாக அவர்களை இறங்கி வரச்சொல்லி யாரும் பரிசோதிக்கவில்லை. ஆகவே தூக்கம் கலையாமல் அவளால் தூங்க முடிந்தது.

மிருசுவில் பகுதியில் தான் திடுக்கிட்டு விழித்தவள் கண்ணை உருட்டி அங்குமிங்கும் பார்க்க அவளையே ஓரப்பார்வையில் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அவளிடம் வம்பிழுக்கும் ஆசை முளைத்தது.

“மைதிலி உங்கப்பா என்கிட்டே ஒரே ஒரு விஷயம் கேட்டார்” மெல்ல ஆரம்பித்தான் அவன்

என்னது?

என் பசங்களுக்கு அட்லீஸ்ட் கொஞ்சமாவது தமிழ் எழுத படிக்க தெரியணுமாம்.

சட்டென்று குங்கும வண்ணம் கொண்டவள் “மணிக்கு விவஸ்தையே இல்ல!!!  எல்லாம் எங்க தமிழ்த்தாத்தா பண்ற வேலை” என்று முணு முணுத்தாள்

என்ன கத்து கொடுக்கலாமா?

……

“பதிலையே காணோம்? ஹா ஹா  ஹா” அவன் அவளை பார்வையாலேயே விடாமல் சீண்ட விழிகளை அங்கும் இங்கும் பதித்து சமாளிக்க முயன்றவள் கடைசியில் “போடா” என்ற படி அவன் புறமே திரும்பி அமர்ந்தாள்

“ஆமாம். நம்ம பசங்க எந்த லாங்குவேஜ் பேசுவாங்க?”

மறுபடி ஆரம்பித்து விட்டாளா என்று விழிகளை சுழற்றினான் அவன். அவள் எங்கே வருகிறாள் என்று அவனுக்கு புரியாதா என்ன? “இயல்பா எந்த லாங்குவேஜ் வருதோ அதை பேசுவாங்க.. என் வீட்ல யாரும் யாரையும் போர்ஸ் பண்ண முடியாது. அது நீயா இருந்தாலும் சரி, நானா இருந்தாலும் சரி!!! புரிஞ்சதா?” சீரியசாகவே சொன்னான் அவன்.

“சரிங்க மகாராஜா..”

கிண்டலாய் வாய்பொத்தி சொன்னவளின் தலையில் வலிக்காமல் கொட்டியவன் அவளுடைய கையை எடுத்து உள்ளங்கையை உதட்டில் ஒற்றினான்.

அவனின் அந்த செய்கை எப்போதுமே கொடுக்கும் பரவசத்துடன் அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள் மைதிலி.

கண்ணெதிரே “யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது” என்ற பெயர்ப்பலகை கம்பீரமாய் நின்றது.

எனக்கென்றொரு பாரம்பரியமும் பெறுமதியும் காலத்தால் அழியாமல் இருந்து கொண்டே இருக்கும். தயவு கூர்ந்து கசடுகளை விடுத்து மனிதத்தை மட்டும் போர்த்திக்கொண்டு உள்ளே வாருங்கள் என்று மௌனமாய் வேண்டிக்கொள்வதைப்போல அதன் பின்னணியில் நின்ற மரங்கள் மெலிதாய் சிலிர்த்து அடங்கின. தன் முகத்தை இன்னும் நெருக்கமாய் அவன் தோளில் புதைத்துக்கொண்டாள் அவள்.

முற்றும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *