WLM அத்தியாயம் 21

“ஆசைப்பட்டு கேட்பதெல்லாம் கேட்கும் நேரத்தில் கிடைக்காமல் நாம் எதிர்பாராத ஒரு தருணத்தில் நம் தலையில் வலிய வந்து பொழிவது தான் வாழ்க்கை போலும்.  நானும் அப்படியொரு தருணத்தை தான் அன்றைக்கு சந்தித்தேன்.”

அடுத்த வாரம் முழுக்க அவனுக்கு நரக நாட்களாய் தான் நகர்ந்தது. இனிமேல் எதை எப்படி நகர்த்தப்போகிறேன் என்று அவனுக்கு புரியவே இல்லை.

மைதிலியிடம் இருந்து வரும் மெசேஜ்கள் தான் அவனை கொஞ்சம் உயிர்ப்புடன் வைத்திருந்தன.

“இன்றோடு கைக்கட்டுக்கு விடுதலை. ஆனால் இடக்கை கொஞ்சம் வளைந்து போனது போலவே ஒரு பீலிங்..”

“நாளை நான் கொழும்புக்கு போகிறேன். அங்கே ஒரு வாரம் பெரிம்மா வீட்டில் இருப்பேன். ரிசர்ச்சுக்கான கேள்விக்கொத்துகளை கம்பனி அலுவலர்களிடம் கொடுத்து நிரப்பி வாங்கி வந்தால் மீதி அனாலிசிஸ் ஐ ஹாஸ்டலில் வைத்தே முடித்து விடலாம்.”

“கொழும்புக்கு வந்து விட்டேன்.”

“இந்த கம்பனியின் HR டிபார்ட்மென்ட்டில் ஒருத்தன் என்னை சைட்டோ சைட்டாக சைட்டடிக்கிறான்.”

“ஒட்டுமொத்தமாக நிரப்பிய பேப்பர்களை அந்த அவன் தானே வாங்கி வைத்திருக்கிறேன் என்னை வந்து வாங்கிக்கொள்ளும் படி சொன்னான்.”

“ஐயோ இவன் தொல்லை தாங்கல..”

“ஹா ஹா உங்களுக்கு தெரியுமா? இப்போது என்னுடைய மொபைலில் நாமிருவரும் இருக்கும் படத்தை ஸ்க்ரீன் சேவராக வைத்து தவறுதலாக விடுவது போல அவன் மேஜையில் விட்டு விட்டு வாஷ்ரூம் போனேன். திரும்பி வந்து பார்த்தால் அவன் முகம் கடு கடு என்று இருக்கிறது. அதன் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சைத்தான் ஒழிந்தான்..மைதிலிக்கே வெற்றி!!!”

“எல்லாம் முடிந்தது. எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு விட்டேன். நாளை திரும்பவும் கண்டிக்கு போகிறேன்.”

“ஷாப்பிங் போகிறேன். சீதாவுக்கு மினி ஸ்கர்ட் ஒன்று வாங்கலாம் என்று இருக்கிறேன். வாட் சே?”

தன்னை கடைக்கண்ணால் பார்த்த மாமியார் ஞாபகம் வர வாய் விட்டு சிரித்தான் சிந்தக்க.

 நான் ஏதும் செய்வேன் என்று தானே சிரித்த படி உற்சாகமாக சுற்றுகிறாள் இவள். நானானால் தோற்றுப்போயல்லவா வந்திருக்கிறேன்.

அவளின் இந்த உற்சாகம் நிலைக்கவேண்டுமே.. மனம் ஏக்கமாய் எண்ணிக்கொண்டது.

“அடோ.. என்ன கனவிலே டூயட் பாடுகிறாயா??” அவனைப்பிடித்து ராஜீவ் உலுக்கினான்

“பச்..இப்போ எனக்கு அது தான் குறை. விடுடா..” அலுப்பாக முணுமுணுத்தான் சிந்தக.

“விட்ரா விட்ரா.. முறைக்காத மாமனார் உலகத்துல உண்டா என்ன? எல்லாம் சரியாயிடும். நான் வேணும்னா பேசிப்பார்க்கவா?” என்று கண்சிமிட்டினான் மற்றவன்.

கையெடுத்து கும்பிட்டவன் சிரிப்போடு அவனுக்கு பதில் சொல்ல வாயெடுக்க போன் மணி ஒலித்தது. செக்ரிட்டரி தான் பேசினாள்.

“சார். உங்களைப்பார்க்க ஜட்ஜ் ராஜித சேனநாயக்க மற்றும் ஒரு கப்பிள் வந்திருக்காங்க. உள்ளே அனுப்பவா?”

அனுப்புங்க என்றவனுக்குள் எண்ணங்கள் தாறுமாறாக ஓடியதை கட்டுப்படுத்த முடியவில்லை.

“சரி நீ யார்னு பார். நான் கிளம்பறேன்” என்றபடி நடக்க ஆரம்பித்த ராஜீவை “என் கூட இருடா” என்று தடுத்தவன் அவசரமாக cc டிவியில் கண்ணை பதித்தான் 

அவனின் பதட்டத்தை ஆச்சர்யமாக பார்த்தபடி “யார்ரா?” என்ற ராஜீவ் தானும் ஸ்க்ரீனில் விழிகளை பதிக்க கதவு தட்டப்பட்டது! தொடர்ந்து க்ளிக்கிட்டு திறந்த கதவின் பின்னே ஜட்ஜ் ராஜிதவும் அவருக்கு பின்னே மணிமாறன் தம்பதியினரும் நின்று கொண்டிருந்தனர்.

“உள்ளே வாங்க” என்று அவன் சுய உணர்வுக்கு வந்து அழைப்பதற்குள் இரண்டு நாற்காலிகளே இருந்த மேஜையின் அருகில் மூன்றாவது சுழலும் நாற்காலியை போட்டான் ராஜீவ்.

“எப்படியிருக்கிறாய் சிந்தக்க? பிஸ்னஸ் எல்லாம் எப்படிபோகிறது?” கேட்டபடியே ராஜிதவும் அவரை தொடர்ந்து மற்ற இருவரும் அமர்ந்து கொள்ள தானும் அமர்ந்தான் சிந்தக்க. அவர்களோடு அமராமல் கொஞ்சம் விலகி அந்த அறைக்குள்ளிருந்த அடுத்த மேஜைக்கு முன்னிருந்த கதிரையை அவர்களை பார்க்குமாறு திருப்பி விட்டு அதில் அமர்ந்து கொண்டான் ராஜீவ்.

“நன்றாக போகிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? பார்த்து ஒரு வருடமாகிவிட்டது” என்று சம்பிரதாயமாக ராஜிதவை சிந்தக்க விசாரித்தாலும் கண்கள் மணிமாறனையே தொட்டு வந்தன.

“எனக்கென்ன? ஹாப்பியா இருக்கேன்.” என்றவர் “இவன் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு இவ்ளோ நாளும் ஏன் சொல்லலை? போனவாரம் எனக்கு இவன் போன் பண்ணப்போ தான் விஷயமே தெரிஞ்சது.” அவர் சிரிப்புடன் சொல்ல ஆனந்த அதிர்ச்சியால் தாக்கப்பட்டவன் மணிமாறனை தான் பார்த்தான் அவரோ சிநேகமாக  புன்னகைத்தார்.

நிலைமையை புரிந்து கொண்ட ராஜீவ் “ட்ரின்க் எடுத்துட்டு வர்றேன்” என்று சிரிப்புடன் முணு முணுத்தபடி மெல்ல நழுவி வெளியேறிவிட்டான்.

“இங்க பாருப்பா.. இவன் போனவாரம் போன் பண்ணி மைதிலி இப்படியொரு பையனை லவ் பண்றா, எனக்கு விசாரிச்சு சொல்லுன்னு டீட்டெயில்ஸ் சொன்னான். உன்னைத்தான் எனக்கு நல்லா தெரியுமே. எனக்கு தெரிஞ்ச வரை நல்ல பையன் ஆனாலும் உன் திருப்திக்காக முழுக்க விசாரிச்சிடலாம்னு சொல்லிட்டு நான் அனுராத புரம் வந்து ஒரு வாரம் உன் வேலையா தான் இருக்கேன். எல்லாரும் திருப்தியா நல்ல சர்ட்டிபிகேட் தான் கொடுக்கிறாங்க. அதனால தான் இவனை நேர்லயே கிளம்பி வான்னு சொல்லிட்டேன். என் வேலை முடிஞ்சது. இனிமே நீங்க பேசிக்கோங்க. சரியா?”

“நான் கேட்பதெல்லாம் நிஜம் தானா?” அவன் ஆனந்தமாய் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான்.

அதற்குள் ட்ரிங்க்ஸ் பரிமாறப்பட மறுப்பு சொல்லாமல் எடுத்துக்கொண்டவர்கள் குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை.

பிறகு ராஜித எழுந்து கொண்டார்.

“மணி அப்ப நான்  கிளம்பறேன். நீ பேசிட்டு ஆறுதலா வா. நான் வரேன் சிந்தக்க”

“தாங்க் யூ சார்.”

“இருக்கட்டும் இருக்கட்டும்..அப்புறமா என்னை பலமா கவனிங்க” என்று சிரித்தார் அவர்.

“எப்படி போவாய்? நீ வேண்டுமானால் கார் எடுத்துட்டு போறியா?” என்று மணிமாறன் கேட்க.

“இல்லையில்லை. காப்பை கால் பண்ணினா உடனே வந்துருவான்” என்றபடி திரும்பியவரை “ வேணாம் சார், உங்களை நான் டிராப் பண்ண சொல்றேன்” என்று தடுத்த சிந்தக அலுவலக டிரைவருடன் அவரை அனுப்பி வைத்தான்.

அவர் போனதும் கனத்த மௌனம் உள்ளே சுற்றிக்கொண்டிருக்க மூவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் சில நிமிஷம் தவித்து தான் போயினர்.

“என்னில் நம்பிக்கை வந்து இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி.”சிந்தக்க தான் ஆரம்பித்து வைத்தான்

“மைதிலி என் மகளும் தானேப்பா..அவள் சந்தோஷமாய் இருக்கவேண்டும் என்பது தானே எங்கள் ஆசையும்..” மணிமாறன் மென்மையாய் சொன்னார்.

பிறகு மீண்டும் அவர்களுக்கிடையில் சுற்றிக்கொண்ட மௌனத்தை தொடர்ந்து “அலுவலகத்தை சுற்றிப்பார்க்கலாம் வருகிறீர்களா?” என்று தயக்கமாய் அழைத்தான் அவன்.

பார்க்கலாமே என்று உடனேயே எழுந்து கொண்டவர்கள் அவனோடு வர பாக்டரி முழுக்க விரிவாக சுற்றிக்காண்பித்தான் அவன். மணிமாறன் அவனிடம் ஆர்வமாக கேள்வி கேட்டு அங்கிருந்தவர்களுடன் ஓரிரு வார்த்தைகள் பேசி என்று இயல்பானாலும் சீதா மட்டும் இறுக்கமான புன்னகையோடே வலம் வருவதை சிந்தக்க கவனிக்கவே செய்தான். அதன் காரணமும் சற்றுநேரத்திலேயே அவனுக்கு தெரியவந்தது.

சீதா வாஷ்ரூம் போயிருக்க வேண்டும். ப்ராசசிங் அறைக்குள் என்னவோ கேட்டுக்கொண்டிருந்த அதிகாரிக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தவனின் அருகில் வந்தார் மணிமாறன்,

எதாவது ப்ராப்ளமா அங்கிள்?

பெரிதாக புன்னகைத்தவர் “ஒன்றுமில்லை. சீதா வாஷ்ரூம் போயிருக்கா . அவ வர்றதுக்குள்ள உங்ககிட்ட நான் பேசியாகணும்..” என்றவர் பக்கத்தில் நின்ற அதிகாரியிடம் “என் வைப் வந்தா நாங்கள் வேற செக்ஷனுக்கு போயிட்டோம்னு சொல்லி இங்கேயே உக்கார வைங்க” என்று கண்ணடித்து விட்டு அவனோடு நடக்க  அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.

இப்படி குழந்தைத்தனமான உற்சாகத்துடன் இருக்கும் மனிதரால் எப்படி வக்கீலாக அதன் பின் நீதிபதியாக எல்லாம் தொழிலில் சாதிக்க முடிந்தது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட மனதை மண்டையில் கொட்டி அடக்கினான் அவன். மனுஷன் இப்போ என்ன குண்டை தூக்கி போடப்போறாரோ தெரியல..அதுக்குள்ளே உனக்கு இந்த ஆராய்ச்சி வேறயா?

கான்பரன்ஸ் ஹாலுக்கு தான் அவரை அழைத்துப்போயிருந்தான். உள்ளே வந்து கதவை தாளிட்டதுமே “போனவாரம் ஸ்கூல்ல உங்களை பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு தம்பி. அப்போதிருந்த கோபத்தில் உடனே ஏதும் வார்த்தையை விட்டிருப்பேன் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” என்று அவன் கையை பிடித்துக்கொள்ள அவனுக்கு தலையே சுற்றியது,

“மைதிலி எங்களுக்கு ஒரே பொண்ணு. பொத்தி பொத்தி வளர்த்தோம். அவளை படிக்கறதுக்காக இவ்வளவு தூரம் அனுப்பறதே முதல்ல  சீதாவுக்கு இஷடமில்ல. அவ ஒழுக்கம், கண்ணியம்னு அதையே பிடிச்சுட்டு இருப்பா. நான் தான் மிது நம்ம கூடவே இருந்தா மாச்சூர்ட் ஆகமாட்டா அவ வெளியே போகட்டும்னு அனுப்பி வைச்சேன்.”

அவ வெளியே படிக்கப்போய் கொஞ்ச நாள்லயே காதலிக்கிறேன்னு வந்து சொன்னதும் முதல்ல என்னாலையும் அதை தாங்கிக்க முடியல தான். என் மனசுக்கு உடனே நீங்க யாரோ..எங்களை சேர்ந்தவங்க கூட இல்ல..எனக்கு உங்க பாஷை அவ்வளவா தெரியாது..இனிமே என் ஒரே பொண்ணு எனக்கில்லைன்னு தான் தோணிச்சு.. விழுந்துட்டேன். சீதாவும் ரொம்ப கோபப்பட்டா. நானாவது என் பொண்ணு ஆசைப்பட்டதை விசாரிச்சு பார்க்கணும்னு இருந்தேன். அவ வேண்டவே வேணாம்னு சொல்லிட்டா. காரணம் உங்க பக்கத்துக்கு இளைஞர்கள் மேல நல்ல புரிந்துணர்வு  எங்க பக்கத்துக்கு இல்லைன்னு உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. மைதிலியும் என்னால பயந்து போய் இனிமே இந்த பேச்சை எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டா.. நாங்களும் அவ படிச்சு முடிக்கட்டும் இது வயசுக்கோளாறாயிருந்தால் அதுவாவே சரியாயிடும்னு விட்டுட்டோம்.”

“ஆனா அவ மறக்காமலே இருந்ததும்,  இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்ச்தும் உங்க வீட்ல வந்து எங்களுக்கு தெரியாம தங்கியிருந்ததையும் சீதாவால தாங்கிக்கவே முடியல. பெண் குழந்தைகள் தப்பு பண்ணினா அம்மாக்கள் அதை தாங்களே பண்ணின தப்பா, தங்களுக்கு வந்த அவப்பெயரா தான் எடுத்துப்பாங்க தம்பி. இப்போ வரை அவ மைதிலி கிட்ட பேச மாட்டேங்கிறா. நான் இப்படியா அவளை வளர்த்தேன் என்கிற ஆதங்கம். ஆனா எனக்கு புரிஞ்சது தம்பி. மைதிலியோட அப்பாவா அவளோட படிப்பு முடிஞ்சதும் நான் உங்க வீட்டுக்கு வந்து பேசியாகணும்னு. அப்போ கூட மனசுக்குள்ள ரொம்ப வருத்தம் தான்.”

“ஆனா போனவாரம் உங்களை அந்த ஸ்கூல்ல சந்திச்சப்போ நான் எதிர்பார்க்கவேயில்லைன்னு தான் சொல்லணும். நீங்க தமிழ்ல பேசினதுமே எனக்கு உங்களை வேற மாதிரி பார்க்கணும்னு தோணவேயில்லை. எந்த வேறுபாடுகளும் இல்லாம மனுஷனை மனுஷனா பார்க்கிறவனால மட்டும் தானே அந்த ஸ்கூல்ல அவ்ளோ இன்வெஸ்ட் பண்ண முடியும்? இவன் கூட என் பொண்ணு சந்தோஷமா தான் இருப்பான்னு எனக்கு அப்போவே தோணிடுச்சு. உங்க நடவடிக்கைகள் எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. மகளுக்கு வந்தவன் எனக்கும் மகன் தானே.. நான் ரொம்ப சந்தோஷமாயிட்டேன். ஆனா சீதாவை நினைச்சு தான் கவலையா இருந்தது.  ரொம்ப குழப்பத்துல இருந்தேன்.

“ஏற்கனவே மைதிலி அவ பேச்சை மீறி போனது அவ மனசுல இருக்கு.இதுல நானும் உடனேயே உங்க பக்கம் சாய்ஞ்சுட்டா அவ மனசு ரொம்ப கஷ்டப்படும். அதை விட என் பொண்ணுக்கு அப்பாவா திருப்தியா உங்க பின்புலங்கள் பற்றி நான் விசாரிக்காமல் சட்டுன்னு எதுவும் வாய் விட்டு விடவும் கூடாதே.  அதுதான் நீங்க நேரடியா என்னிடம் பேசியபோது மறுத்து சொல்லிக்கொண்டே இருந்தேன். நீங்கள் தப்பாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.” அவர் தயக்கமாய் அவன் முகம் பார்க்க பளிச்சென்று சிரித்தான் அவன்,

“அதெல்லாம் இல்லை.. நீங்கள் வேண்டாம் என்றே சொல்லிவிட்டீர்கள்..இனிமேல் என்ன செய்யப்போகிறேன் என்று தான் பயத்துடன் இருந்தேன். இன்றைக்கு எல்லாமே எனக்கு இன்ப அதிர்ச்சி!!! ஆனால் அங்கிள், இப்போது  ஆன்ட்டி சம்மதித்து விட்டார்களா? இப்போது கூட முகம் சரியாக இல்லையே..”

“அதையேன் கேட்கிறீர்கள். அன்றைக்கு நான் உங்களிடம் பேசிவிட்டு அந்தப்பக்கம் போனதுமே அவள் என்னை கோபமாக வறுத்தெடுத்து விட்டாள். மைதிலி இவ்வளவு தூரம் துணிந்த பிறகு இன்னொருவனுக்கு அவளை கொடுக்க முடியுமா? இல்லை காலம் பூராகவும் அவளை இப்படியே வைத்திருக்க முடியுமா? வீட்டில் கலந்து பேசி சொல்கிறோம் என்று சமாளிக்காமல் இப்படி முடியாது என்று கவிழ்த்துக்கொட்டி விட்டு வருகிறீர்களே உங்களுக்கு அறிவிருக்கிறதா? என்று எனக்கு செம கிழி”

என்று அவர் மனைவியின் குரலின் ஏற்ற இறக்கங்களை இமிடேட் செய்ய பக்கென்று சிரித்து விட்டவன் “சாரி அங்கிள்” என்று முணு முணுத்தான்.

“விடுப்பா.. இதெல்லாம் அரசியலில் சகஜம்!” என்று சிரித்தவர் தொடர்ந்தார்.

“அப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது. இந்த சான்சை பக்கென்று பிடித்து ஏதோ எனக்கு பிடிக்காமல் அவளுக்காகத்தான் செய்வது போல நடித்தபடி  ராஜிதவிடம் உங்களை பற்றி முழுதாக விசாரிக்க சொல்லிவிட்டேன்.”

ஹா ஹா ஹா அங்கிள்! எனக்கு உங்கள் இருவரையும் ரொம்பவே பிடித்திருக்கிறது!

எங்களுக்கும் தான்! ஆனால் எனக்கு ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் இருக்கிறது!

என்ன அங்கிள்?

என் அப்பா தமிழ்ப்பண்டிதர் ராமநாதர். ராமனாதருடைய ஒரே பேத்தி மிது தான். அவள் வழி வாரிசுகளுக்கு எப்படியாவது தமிழை குத்துமதிப்பாகவாவது எழுதப்படிக்க கற்றுக்கொடுத்து விடுங்கள்! இவளை இங்க்லீஷ் மீடியத்தில் சேர்த்தேன் என்பதையே என் அப்பா சாகும் வரை மன்னிக்கவில்லை. இப்போது இதுவும் என்றால் இரவில் என் கழுத்தை திருகினாலும் திருகி விடுவார்.

கண்டிப்பா அங்கிள்

எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கிறது.

என்னது?

“சீதாவும் என்னுடைய ஓவர் ஆக்டிங்கை நம்பி  எனக்கு உங்களை பிடிக்காது என்று நினைத்துக்கொண்டு  தானும் விருப்பமேயில்லாமல் வேறு வழியின்றி இந்த சம்பந்தத்தை மைதிலிக்கு பேச வருவதாக ஓவர் ஆக்டிங் செய்கிறாளோ என்பது தான்.”

சிரித்து விட்டான் சிந்தக்க. “ஆனால் ஆன்ட்டியின் முகம் பார்க்க வாடிப்போய்த்தான் இருந்தது. “

“வாடவைத்துக்கொண்டிருக்கிறாள் என்பது தான் சரி. அவளுக்கு கோபம் வந்தால் எப்படி ரியாக்ஷன் இருக்கும் என்று அனுபவப்பட்டவன் நான் சொல்கிறேன். ஒரு டெஸ்ட் பண்ணி பார்த்து விடலாம். நான் இங்கேயே இருக்கிறேன், நீங்கள் வேண்டுமானால் அவளிடம் போய் இங்கே அழைத்து வாருங்கள். வரும் வழியில் உங்களிடம் பேசுவாள் பாருங்களேன்.”

சிரித்தபடியே அவரை அங்கே அமர வைத்து விட்டு எழுந்து நடந்தான் சிந்தக்க..

எவ்வளவு இனிய மனிதர்கள்! மைதிலியின் பெற்றோர் பின்னர் வேறெப்படி இருக்க முடியும்? அவனை சட்டென்று தங்கள் குடும்பத்துக்குள் அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டது ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.

மணிமாறனை உள்ளே அமர வைத்திருப்பதாக சொல்லி சீதாவை அழைத்துக்கொண்டு சென்றான் அவன்.

“தம்பி..மிது அப்பா உங்ககிட்ட கடுமையா பேசிட்டார் என்றால் மனசுல வச்சுக்காதீங்க. அவருக்கு குழந்தை மனசு..கொஞ்ச நாள் உங்க கூட பழகினாலே அவருக்கு உங்களை ரொம்ப பிடிச்சிடும்.” என்று  மெல்லிய குரலில் சீதா கணவருக்காக சமாதானம் சொன்ன போது அவனுக்கு சிரிப்பை எப்படி அடக்குவது என்று சத்தியமாக புரியவில்லை.

“விடுங்க ஆன்ட்டி..அங்கிள் அப்படியெல்லாம் வெறுப்பாக பேசவில்லை.” என்று சொல்லிவிட்டு கான்பரன்ஸ் ஹாலுக்கு உள்ளே போக அந்த குறும்பு மனிதரோ “எப்படி நான் சொன்னது சரிதானா?” என்று கண்ணாலேயே கேட்டார். மாமியாருக்கு தெரியாமல் கண்ணாலேயே தானும் அவருக்கு பதில் சொல்லி மௌனச்சிரிப்பில் கலந்து கொண்டபோது அந்தக்குடும்பத்தில் நிஜமாகவே தானும் கலந்து விட்ட உணர்வில்  நிறைவாக உணர்ந்தான் சிந்தக்க. அந்த சமயம் மைதிலி அருகில் இல்லாததை நினைத்து மனம் ரொம்பவே ஏங்கிப்போனது.

திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு மட்டுமல்ல இரு குடும்பங்களின் இணைப்பு என்று சும்மாவா சொன்னார்கள்?

“மிதுவுக்கு இப்போதைக்கு சொல்லாதீங்க தம்பி..இன்னும் ரெண்டு மாசம் தானே இருக்கு..அவ படிப்பு முடிய! வீட்டுக்கு வந்து சர்ப்ரைசா தெரிஞ்சுக்கட்டும்”

ஹா ஹா சரி. நீங்க என்னை வா போ என்றே சொல்லுங்க அங்கிள்..மரியாதையெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு.

“ச்சே ச்சே அதெல்லாம் வீட்டுக்கு வந்த மருமகனை வா போ என்று கூப்பிடக்கூடாது”  சீதா முந்திக்கொண்டு சொல்ல மீண்டும் அங்கொரு மௌனச்சிரிப்பு வெடித்தது.

பிறகு அவர்களை அழைத்துக்கொண்டு போகும் வழியில், அவனது வீட்டை காண்பித்து விட்டு  அதன் பின்னர் பெற்றோரின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான் சிந்தக்க.

அன்று மாலை அவர்கள் கிளம்பிய பின்னர் இரவுணவை அம்மா வீட்டில் முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தவன் அந்த மாமரத்தடி பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டு மைதிலுக்கு போன் செய்தான்.

எடுத்த எடுப்பிலேயே “என்ன சபதம் எல்லாம் காற்றில் தானா?” என்று நக்கலாக கேட்டாலும் கொள்ளை உற்சாகம் அவளின் குரலிலே தெரிந்தது.

“உன் கிட்ட பேசாம இருக்க முடியலடி.” அதுதான் சபதத்தை கொஞ்சம் அமெண்ட் பண்ணிட்டேன். நமுட்டு சிரிப்போடு பதில் சொன்னான் அவன்.

அது சரி!!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *