WLM அத்தியாயம் 19

“பெரிய இவள் போல அவனுக்கு சமாதானம் சொல்லி அனுப்பி விட்டேன். ஆனால் உள்ளேயோ என் மனம் உலைக்களத்தில் கொதித்துக்கொண்டு  இருந்தது. அம்மா என்னை  திட்டியதுண்டு, ஏன் அடித்தது கூட உண்டு. ஆனால் எல்லாவற்றிலும் கண்டிப்பு தான் தெரியுமே தவிர இப்படி வெறுப்பாக பேசியதேயில்லை. கண்களை முட்டி வழியத்துடித்த கண்ணீரை எப்படியோ அடக்கிக்கொண்டேன்! வரும் நாட்களில் வாழ்க்கை எனக்கு எதையெல்லாம் வைத்துக்கொண்டு காத்திருக்கிறதோ எனக்கு சுத்தமாய் தெரியவில்லை”

ஒற்றைக்கையில் கட்டுடன் ஒரு பையை தூக்க முயற்சித்தவளை கண்டுவிட்டு காண்டீனில் சிற்றுண்டி வாங்க வந்திருந்த அவளுடைய ஜுனியர் பெண்கள் ஓடி வந்துவிட்டனர்.

“மைதிலி அக்கா! இப்போவா வந்தீங்க… பிளாஸ்டர் கூட கழட்டலையே..ஏன் இன்னும் ஒரு கிழமை நிண்டுட்டு வந்திருக்கலாமே!!!” கேட்டபடியே  அவர்களில் ஒருத்தி டிராவலிங் பாக்கை தன கையில் எடுத்துக்கொண்டாள்.

“இல்லடா..ப்ராஜெக்ட் டைட்டில் கொடுத்தபடி இருக்கிறது. மீதி வேலைகளை பார்த்தால் தானே நான் இந்த வருஷம் பாஸ் அவுட் ஆக முடியும்? இல்லாவிட்டால் உங்களோடு தான் வரவேண்டியிருக்கும்..” என்று சிரித்தவள் “நன்றி மக்களே உங்களுடைய கால்ஸ், மெசேஜஸ் எல்லாத்துக்கும்” என்றாள்  

“போங்கக்கா..எங்களுக்கு தான் நீங்க இல்லாம பொழுது போகல. ஆனா நீங்க செம ஜாலியா சாப்பிட்டு ஸ்டெடியாகி வந்திருக்கீங்க! மைத்திக்கா கண்ணையும் முகத்தையும் பாரு” என்று இன்னொருத்தி சிரித்தாள்

ஒரு கணம் ஜெர்க்கானவள் “சரி சரி ரொம்ப ஓட்டாதீங்க மக்களே..”என்று பேச்சை மாற்ற முயல இன்னொருத்தி மீதி இரண்டு சின்னப்பைகளையும் கையில் எடுத்துக்கொண்டாள்.

“லூசுகளா..இந்த பிளாஸ்டிக் பாக்கை நான் எடுத்து வர மாட்டனா? என்  ஒரு கை நல்லாத்தானே இருக்கு!அநியாயத்துக்கு பாசமா இருக்கீங்களே மக்கா”  என்று அலுத்துக்கொண்ட மைதிலி  அவர்கள் கேட்கமாட்டார்கள் என்று தெரியுமாதலால் பேசாமல்  தன்னுடைய ரூமை நோக்கி நடந்தாள்.

“உங்களுக்கு லன்ச் எப்படி? சாப்பிட்டீங்களா? இல்லைஇனிமேத்தானா?”

“கொண்டு வந்தேண்டா,..ஆமாம் சுமியை பார்த்தீங்களா?” என்று கேட்டாள்.

“பார்த்தோம். ஒரு ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி தான் ஹாஸ்டல் வந்தாங்க..நாங்க ஸ்டடி ஹால்ல இருந்து கூப்பிட்டோம். சுமிக்காக்கு கேட்கல.”

மைதிலிக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து விட்டது. எண்ணங்களை முகத்த்தில் இருந்து மறைப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டாள் அவள்

மஞ்சு ஆன்ட்டி தவிர மீதி எல்லாருமே அவள் மஞ்சு ஆன்ட்டியின் சேனபுர வீட்டில் தங்கியதாக தான் நினைப்பார்களே தவிர உண்மை வெளியில் வராது என்று ஆயிரம் தடவை தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும் அவளுக்கு சாதாரணமாக அவர்கள் யாரையும் எதிர்கொள்ள முடியவில்லை.

அவனிருக்கும் இடத்தில் அவன் குடும்பத்தார் சூழ இருந்ததாக நினைத்ததாலேயே அவளது காயங்களை பற்றிக்கூட கொஞ்சமும் கணக்கெடுக்காத அளவுக்கு அம்மாவுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே..உண்மை தெரிந்தால் அவளை நேரில் வந்து வெட்டிப்போட்டு விட மாட்டாரா?

 நடுவில் பெரிய கிரவுண்ட் வைத்து அதை சுற்றி சதுரமாக கட்டப்பட்டிருந்த நான்கு மாடி ஹாஸ்டலில்  விசிட்டர்ஸ் அறையை தாண்டியதும் மாணவிகளின் அறைகள்  வரிசையாக அமைந்திருந்தன. அதுவும் வலப்பக்க தரைத்தளம் மற்றும் அதற்கு மேலே இருந்த தளங்களில் அவர்களுடைய பீட மாணவிகளே இருந்த படியால் அநேகமான எல்லாருமே விபத்து பற்றி அறிந்திருந்தனர். ஜூனியர்களுக்கு பரீட்சை சமயமாதலால் ஒவ்வொரு ரூமுக்கு வெளியேயும் யாராவது ஒருவர் ஹாரிடோரின் அரைச்சுவரில் ஏறி அமர்ந்து கொண்டு புத்தகங்களை தங்களின் முன்னே பரப்பிக்கொண்டிருந்ததனால் தேர் அசைவது போல அவள் எல்லோரின் நலன் விசாரிப்புகளுக்கும் பதில் சொல்லி சொல்லியே நகர வேண்டியிருந்தது.

 “அக்கா நீங்க அநியாயத்துக்கு பேமஸா இருக்கீங்க! முடியல…தெரிஞ்சிருந்தா  மற்றப் பக்கமாக வந்திருக்கலாம்

ஹா ஹா சும்மா இருங்கடி!!!

 ஒருவழியாக அவர்கள் ‘ப’ வடிவத்தின் முடிவில் இருந்த படிகளில் ஏறி மைதிலியின் அறையை சென்றடைய அவளை முந்திக்கொண்டு அறைக்கதவை தட்டோ தட்டென்று தட்டினார் அவளது இளவல்கள்.

“ரூம் திறந்து தான் இருக்கு!” சுமியின் குரல் உள்ளிருந்து வர ஆர்ப்பாட்டமாய் கதவைத்திறந்து இவர்கள் உள்ளே செல்ல கொஞ்சம் படபடப்புடனேயே உள்ளே நுழைந்து தன்னுடைய பெட்டில் அமர்ந்தாள் மைதிலி. அதற்குள் அவளுடைய பெட்டில் மூன்று பேரும் சுமியின் பெட்டில் மூன்று பேரும் கதிரையில் ஒருத்தியுமாய் அவர்கள் அறையை ஆக்கிரமித்திருந்தனர்.

ஆக்சிடன்ட் மற்றும் மைதிலியை பற்றி பேசுவதை தவிர்த்து விட்டு  புதிதாக மகா இல்லுப்பள்ளமவில் வந்திருக்கும் ஜூனியர்களை பற்றிக்கேட்டு அவர்களை போனில் ராகிங் செய்தது பற்றியும் அதற்கு அந்த குட்டிப்பெண்கள் பேசிய பதில்களையும் அவர்கள் நடித்துக்காட்ட அந்த அறையே கலகலத்துக்கொண்டிருந்தது. இந்த களேபரத்தில் பெரியவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கொலைவெறியுடன் பார்த்துவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டதையோ அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை என்பதையோ சின்னவர்கள்  கவனிக்கவில்லை.

உங்களுக்கெல்லாம் எக்ஸாம் இல்லையாடி?” சுமி சிரித்துக்கொண்டே கேட்க அவர்களும் படித்து போரடித்ததால் இடைவேளை விட்டிருப்பதாக சிரித்துக்கொண்டே திருப்பினர்.

“சீஸ் பட்டன்ஸ் சாப்பிடறீங்களா?” என்றபடி சூப்பர் மார்க்கெட்டில் சிந்த்தக வாங்கிகொடுத்த  சீஸ் பட்டஸ் டின்னை உடைத்துக்கொடுத்தாள் மைதிலி. மறுகணம் அறை முழுவதும் அந்த டின் இழுபட்டு ஐந்து நிமிடத்துக்குள்ளே முழுவதும் காலியாய் போனது!!!

இப்படியே ஒரு முக்கால் மணி நேரம் அறையையே இரண்டாக்கிகொண்டிருந்தவர்களில்  ஒருத்திக்கு  கான்டீனில் சாப்பாடு முடிந்துவிடும் என்று அப்போது தான் பீதி கிளம்ப ஒரு வழியாய் அறையை விட்டு வெளியேறினர் அவளது இளவல்கள்.

மைதிலி மற்றும் சுமித்ரா இருவருமே பிரச்சனைகளை மறந்து வயிறு வலிக்கும் படி சிரித்து ஓய்ந்திருந்த படியால் இப்போது ஒருவரை ஒருவர் நிதானமாக எதிர்நோக்க முடிந்தது.

மைதிலி சுமித்ராவை ஏறிட அவளும் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஏன்டி இப்படி செஞ்சே?”

….

“உங்கம்மா எனக்கு போன் பண்ணி கேக்குறாங்க “மைதிலிக்கு என்னாச்சு? ஏன்மா எங்களுக்கு சொல்லலை? உன்னையும் என் பொண்ணு மாதிரித்தானே பார்த்தேன் நீயாவது சொல்லியிருக்கலாமேன்னு!”

“நான் என்ன சொல்றது..இந்த ஆக்சிடன்ட் பத்தி சொன்னேன். அவங்க அழவே ஆரம்பிச்சுட்டாங்க.. நான் அன்னிக்கு நியூஸ் பார்த்துட்டு மைதிலி கிட்ட கேட்டேன்மா,..அது எங்களோட ஜூனியர்ஸ் என்று சொல்லிட்டாள். டீவில கைல கட்டு போட்டுட்டு இருக்காளே.. தலைல வேற பிளாஸ்டர் பார்த்த ஞாபகம்..பெருசா ஒண்ணும் இல்லையே என்று!”

மைதிலிக்கு கண்ணீர் வந்துவிட்டது. உதட்டை கடித்துக்கொண்டு நின்றாள்.

“ஏன்டி பேசமாட்டேங்கிற!!! அதெல்லாம் விட அவங்களுக்கு அவனை நல்லாவே தெரிஞ்சிருக்கு! அந்த பையன்கிட்ட இப்போ திடீர்னு  இவ எப்படி போனா? இது எவ்வளவு நாளா நடக்குது? நீயும் இதுக்கு சப்போர்ட்டான்னு என்னை நாக்கை புடுங்கிக்கற அளவுக்கு கேள்வி கேட்டாங்க.. ஏன் இப்படி செஞ்ச நீ!!! “அவ்வளவு குற்றச்சாட்டுக்களையும் காதால் கேட்ட நினைவில் சுமியின் குரலில் கோபம் ஏறிக்கொண்டிருந்தது.

“இருடி.. நான் சொல்றதை கேளு..முதல்ல சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது!” என்று ஆரம்பித்துவிட்டு ஐயோ மைத்தி நீ இப்போது நடந்ததை சொல்லவா போகிறாய் என்று அவளே விழித்தாள்

நல்ல வேளை அது மற்றவளுக்கு சரியாக புரியவில்லை,

“என்னடி தெரியாது? சிந்த்தக சிங்கப்பூர் போயிருக்கான். அவனோட அம்மா அப்பா தங்கச்சி மூணு பேர் மட்டும் தான் வீட்ல இருக்கோம்னு தானேடி என்கிட்டே சொன்ன? இப்போ திடீர்னு அவன் எங்கிருந்து வந்தான்?”

அப்படி உன்னிடம் சொன்னதும் உன்னை ஒத்துக்கொள்ள வைத்ததும் நான் அல்ல அவனே தான் என்று சொல்லவா முடியும்? உதட்டை கடித்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் மைதிலி.

“ஆன்ட்டி கேக்கறாங்க. என்ன இருந்தாலும் ஏற்கனவே அப்படி ஒரு பிரச்சனை இவங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கும் போது அவன் இருக்கும் வீட்டில் இவள் போய் தங்கலாமா? என்னதான் அப்பா அம்மா கூடவே இருந்தாலும் இது நன்றாகவா இருக்கு? அந்த வீட்டு மனிதர்களுக்குத்தான் அறிவில்லை என்றால் உங்கள் ரெண்டு பேருக்கும் எங்கே போனது அறிவு? நான் அப்படியா உங்களை வளர்த்தேன்னு!”

…..

“எனக்கு பதிலே சொல்ல முடியல. நான் சொல்லவா முடியும்? இவ என்கிட்டயும் பொய் தான் சொன்னான்னு! பேசாம திட்டு வாங்கிட்டு அழுதபடி இருந்தேன் வேற என்ன பண்றது?

சாரிடி..

பேசாதே…உங்கம்மா பேசினதை கேட்டதுல இருந்து எனக்கு ரொம்பவே குற்ற உணர்ச்சியா இருக்கு..

…………

“சத்தியமா உனக்கு பைத்தியம் தான்டி  பிடிச்சிருக்கு..அதுதான் எல்லாம் வேணாம்னு மூணு வருஷமா நல்லாத்தானேடி இருந்த..திடீர்னு என்ன ஆச்சு?” சுமித்ரா அவளருகில் வந்து அமர்ந்தபடி குழப்பமாய் கேட்க மைதிலி விருட்டென நிமிர்ந்தாள். கண்கள் கலங்கி மழை பொழிய தயாராய் காத்திருந்தன.

“நான் மூணு வருஷமா நல்லா இருக்கேன்னு உனக்கு தெரியுமா? உன் மனசை தொட்டு சொல்லுடி. நான் சந்தோஷமா தான் இருக்கேனா?” குரலும் கலங்கித்தான் போயிருந்தது

இது உண்மையை உடைத்து பேசும் நேரம்..இப்போதும் அவள் பேசாவிட்டால் அவளுக்காக வாய் திறக்க அங்கே யாரும் வரப்போவதில்லை.

அந்தக் கேள்வி மற்றவளின் கண்ணில் வலியை வரவழைத்தது போலவே அவளுக்கு மைதிலியின் நிலையையும் புரியவைத்தது போலும்.

எழுந்து வந்து தோழியின் அருகில் அமர்ந்து கொண்டவள் “நீ போகப்போக சரியாகிடுவாய் என்று  நான் நினைச்சேன்டி” என்று உள்ளே போன குரலில் சொன்னாள்.

“எப்போ?” இப்போது மைதிலியின் குரலில் அழுத்தம்

“உனக்குன்னு ஒருத்தன் வரும் போது..”

“சுதாவை உனக்கு இல்லைன்னு சொல்லிட்டு வேற ஒருத்தனை கொடுத்து சந்தோஷமா இருன்னு சொன்னா நீ இருப்பியா?”

சுமியின் கண்களில் சின்னதாய் ஒரு அதிர்வு.

“இல்லைல்ல? என்னை மட்டும் ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க? எனக்கும் அப்போ இதெல்லாம் புரியல டி.. நானே நிறைய யோசிச்சு நமக்குள்ள ஒத்து வராதுன்னு நானே முடிவு பண்ணி பிரிஞ்சு வந்துட்டேன்..மூணு வருஷமா வெளியே மட்டுமே சிரிச்சு சிரிச்சு உள்ளே நிரந்தமாவே வெறுமை ஆகிடுமோன்னு பயம் வந்திருச்சு.. என் வாழ்க்கையை என்னால இப்படியே கொண்டு போயிட முடியாது.”

“அவனை பார்க்கணும்னு தோணினதை என்னால அடக்கவே முடியல.போகும் போது சத்தியமா வேறே எந்த எண்ணமும்  இல்ல.. ஆனா அங்கே போனதும் தான் என்னையே எனக்கு புரிஞ்சது. ஆக்சிடன்ட்டுக்கு  பிறகு திரும்பவும் நான் ஏன் அங்கே போனேன்னு நான் உனக்கு சொல்லப்போறதில்லை. ஆனா எனக்கு அந்த டைம் தேவைப்பட்டது. அதனால தான் உன்கிட்ட பொய் சொன்னேன்” தான் பேசுவதை மற்றவள் புரிந்து கொள்கிறாளா என்று ஆழம் பார்த்தபடி அவள் தொடர்ந்தாள்.

“நீங்கல்லாம் நினைக்கிற போல இல்லைடி அவன். ஏன் அவனை மாதிரி ஒருத்தன் இந்த உலகத்துலயே கிடையாது! எனக்கு அவன் வேணும்! எங்கப்பாம்மாவை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணிடுவேன் என்று நம்பறேன். அவனும் அதுவரை என்னை காண்டாக்ட் பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கான். உன்னால என்னை புரிஞ்சுக்க முடியுதா?”

அவளின் குரலிலும் பேச்சிலும் இருந்த நேர்மை எதிரில் இருந்தவளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவளின் தோள்களில் கரம் பதித்தாள்.

“பத்தொன்பது வயதில லவ் பண்றேன்னு வந்து நின்றாயடி.. நான் பயந்தே போனேன்..அப்போது எனக்கும் இந்த விஷயத்தில் புரிதல் போதாது..உன்னை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்போது இவ்வளவு உறுதியும் நம்பிக்கையுமாக நீ சொல்லும் போது உன்னை நம்பாமல் உனக்கு சப்போர்ட் பண்ணாமல் நான் இருப்பேனா?”

தாங்க்ஸ்டி..லவ் யூ சோ மச்!!! இவள் பாய்ந்து அவளின் கழுத்தை கட்டிக்கொள்ள “சனியனே விடுடி” என்று அலறியபடி அவளை விடுவித்தாள் சுமித்ரா.

“ஏய் லூசே..ஏன்டி போய் காமரா முன்னாடி போஸ் கொடுத்து டீவில வந்த? தப்பு பண்ணா அதை தடயமில்லாம பண்ணணும்..இப்படியா மாட்டுறது?” அவள் கலாய்க்க

“அது ஒரு துன்பியல் சம்பவம் மறுபடி ஞாபகப்படுத்தாதே” என்று மறுபடி முகம் சிவந்தாள் மைதிலி

ஹா ஹா போய்த்தொலை!!!

இருவருமாக சேர்ந்து மைதிலியின் வீட்டுக்கு போன் செய்து சுமிதான் பாவம் அவளுக்காக திட்டுக்களை வாங்கினாலும் ஒருவழியாக அவளின் காயங்களை பற்றி சொல்லி ப்ளீஸ் பண்ணி பேசி அவளின் அப்பாவிடம் சமாதானம் செய்து வைத்தாள்.

“ஜூனியர்களை பார்க்க தான் போனாள், உங்களிடம் சொன்னால் நீங்கள் அங்கே போவதாக நினைத்துக்கொள்வீர்கள் என்று பயந்து விட்டாள்”

“ஆக்சிடன்ட் ஆனதும் அந்த ஆன்ட்டி ஓடிப்போயிருக்கிறார்கள். இவள் ஹாஸ்டலுக்கு போகிறேன் என்று சொல்லவும் அவர்கள் தங்களுடைய வீட்டுக்கு கூட்டிப்போய் விட்டார்கள்.”

“அவர்களுக்கு விஷயம் தெரியாதாகையால் இவளுக்கு மறுக்க முடியவில்லை.”

“அதன்பிறகு இவள் தனியாக போகக்கூடாதென்று அவன் கூட்டிக்கொண்டு வந்தான்”

இப்படியெல்லாம் சொல்லி கடைசியில் காயங்களைப்பற்றி பேச மிதுவுக்கு இப்போ எப்படியிருக்கு? என்று மணிமாறன் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் மைதிலியின் அம்மா மட்டும் “நீ என்ன சொன்னாலும் சரி. அவ கிட்ட நான் பேசவே மாட்டேன்” என்று உறுதியாகவே சொல்லிவிட்டார்.

அம்மாவின் கோபம் கொஞ்ச நாளைக்கு இருக்கும் என்றாலும் இறுதியாக அவர் காது கொடுத்து கேட்டதும் அப்பாவிடம் பேசி சமாதானமானதுமே  உற்சாகத்தை தர தன்னுடைய ரிசர்ச் சூப்பர்வைசரை தேடிக்கொண்டு அன்று மாலையே கிளம்பினாள் மைதிலி.

@@@

அவள் ஹாஸ்டலில் இருந்து வீட்டினரோடு ஓரளவுக்கு சமாதானம் ஆன அதே நாள் அதே நேரம் அன்னையின் கோபக்கணைகளின் முன்னே இறுகிய  முகத்தோடு நின்றுகொண்டிருந்தான் சிந்தக்க

அப்பா அவனைப்போலவே முகம் இறுக அமர்ந்திருக்க மஞ்சு தான் எகிறிக்கொண்டிருந்தார். செய்தியை பார்த்த நேரத்திலிருந்து கொதித்துப்போய் இருந்தவர் அவன் திரும்பி ஊர் வரும் நேரத்துக்காக காத்துக்கொண்டிருந்தது வேற அவரது டென்ஷனை ஏற்றியிருந்தது வெளிப்படையாக தெரிந்தது.

“வீட்டுல தங்கச்சி இருப்பா. அவ முன்னாடி இதெல்லாம் பேச வேண்டாம்னு தான் இங்கே வந்தோம். என்ன காரியம்டா பண்ணிருக்க நீ? பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்?”

…………………..

“பதில் பேசுடா! என் மகன் கெட்டிக்காரன், அவன் செஞ்சா எல்லாமே சரியாத்தான் இருக்கும் என்று பெருமையா சொல்வேனே..இப்போ என்ன ஆச்சு பாருங்க!!!! கொஞ்சம் காசு பணம் மதிப்பு சேர்ந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணலாமா? பாருங்க வாயை திறக்கறானான்னு!!!” அவர் கணவரிடம் திரும்பி அரற்ற ஆரம்பிக்க அவர் மஞ்சுவின் தோளைப்பற்றினார்.

“டென்சன் ஆகாம அமைதியா கேளு.. நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு..இனிமே டென்சன் ஆகித்தான் என்ன ஆகப்போகுது.. அவன் தப்பு பண்ணறவன் இல்ல..நீ பொறுமையா கேளு!!!”

தந்தையின் நம்பிக்கையே அவனை நெகிழ வைத்தது. ஆனால் அந்த முடிவை எடுக்கும் போது அவனுக்கு உலகமே நினைவிலில்லையே.. அவள் மட்டும் தானே மனதில் இருந்தாள்..

“பாருங்க நாம எவ்வளவு பேசறோம்! அவன் வாயே திறக்க மாட்டேன்றான்! நான் ஹாஸ்பிட்டல்லயே கவனிச்சேங்க..அப்போவே எனக்கு பக்குன்னு தான் இருந்துது. என்னதான் மைதிலியை  நமக்கு பிடிச்சாலும் அவ அம்மா அப்பா சம்மதிப்பாங்களா? அது தெரியாம இவன் காலை விடறானே இவன் கூட பேசணும். ஆறுதலா வீட்டுக்கு வரட்டும்னு நான் காத்துட்டிருந்தேன். இப்போ என்னடான்னா இப்படியாகிருச்சு”

“இனிமே நாமளே நினைச்சாலும் அவங்க வீட்டுப்பக்கம் போக முடியுமா? நாங்களும் இதுக்கு உடந்தைன்னு அவங்க யோசிக்க மாட்டாங்களா? ஏன்டா எங்க வீட்ல கொண்டு வந்து அவளை விட்டிருக்கலாமே! எப்படிப்பட்ட பேரை வாங்கித்தந்திருக்க பார்!”

“அவங்களுக்கு தெரியாது..” மௌனத்தை உடைத்தான் அவன்

“என்ன தெரியாது.”

“அவங்க நம்ம வீட்ல தான் இவ்ளோ நாளும் மைதிலி இருந்ததா நினைக்கிறாங்க. நீங்க சொல்லலைன்னா அது அவங்களுக்கு தெரியவரப்போறதில்லை. “

“என்னங்க பேசறான் இவன்? அவ வீட்ல வந்து தங்குன கதையை விடு. ஆக்சிடன்ட்ல அடிபட்டவடா. ஒருவேளை ஏதாவது ஆகியிருந்தா அவ அப்பாம்மாவுக்கு யார் பதில் சொல்றது? இவ்வளவு பெரிய விஷயத்தை அவங்க கூட பகிர்ந்துக்கவே இல்லன்னு அவங்க மனசு எப்படி கஷ்டப்படும்? நினைச்சுப்பார்த்தியா நீ?”

உண்மைதானே..அவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. பேசாமல் தலையை குனிந்து கொண்டிருந்தான் சிந்தக்க

“மைதிலிக்கு போன் பண்ணனும்னு நினைச்சேன். போன் எடுத்தா ஏதும் திட்டி விட்ருவேனோன்னு நான் இன்னும் பண்ணல..அவளை திட்டவும் மனசு வராது! இவனுக்குத்தான் அறிவில்லைன்னா அவளுக்கு எங்க போச்சு அறிவு?”

“அவளுக்கு போன் பண்ணாதீங்கம்மா..

“இப்போ மட்டும் வாய் எங்கிருந்து வருதுப்பா.. ஏன் சரிபாதி தப்பு அவமேலயும் இருக்குல்ல?”

இல்லம்மா. அவளுக்கு எதுவுமே தெரியாது. அவனுக்கு நடந்ததை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் யாருமே அவளை தவறாக நினைப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. கைகளால் மேஜையை இறுகப்பற்றியபடி அவன் நின்று கொண்டிருந்தான்

அவன் உடல்மொழியிலே எதைப்படித்தார்களோ என்னங்க இவன்? என்றபடி தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் கலவரமாக பார்த்துக்கொண்டனர்.

அவர்கள் வேறேதும் கற்பனை செய்யமுன் படபடவென சின்னக்குரலில் நடந்ததை சொல்லி முடிக்க பெற்றவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

என்னப்பா இது? தற்செயலாக இது வெளியே தெரிந்தால் எவ்வளவு பெரிய அவமானம் ஆகியிருக்கும்? என்று தந்தையும் பேச்சுவராமல் தாயும் பதட்டமாய் அவனையே பார்த்தார்கள். அவர்கள் எளிய மனிதர்கள். இதெல்லாம் அவர்களின் கற்பனைக்கும் எட்டுவதில்லை.

அவர்கள் தன்னை பார்த்த பார்வையை தாங்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்து நடந்ததையெல்லாம் சொல்லி முடித்தபோது அங்கே சற்றுநேரம் மௌனம் தான் நிலவியது.

ஏன்பா அவளை மனசுல வச்சிருக்கேன்னு முன்னாடியே சொல்லிருக்கலாமே.. நாங்க அவங்கப்பாம்மாட்ட எப்படியாவது கேட்டிருப்போமே..நான் வேற என் பங்குக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு தொல்லை பண்ணிட்டேன்.

விடுங்கம்மா..மைதிலி ஒத்துக்காம எப்படிம்மா அவங்க கிட்ட போகமுடியும்?

“அவன் சொல்றதும் சரிதான்.”

“ஆனாலும் நீ பண்ணது தப்புப்பா” மஞ்சுவுக்கு மனம் ஆறுவதாக இல்லை.

“சரி விடு மஞ்சு நடந்தது நடந்து விட்டது. இனிமேல் தப்பு சரி சொல்லி என்னாகப்போகிறது?” என்று மனைவியை அடக்கியவர் “ஒன்று மட்டும் சொல்றேன் மகன். எப்போது நாங்கள் வேணுமோ தயங்காம கூப்பிடு. நாங்க ரெண்டு பேரும் உனக்காக வருவோம். ஆனா இப்போ போனா எடுத்த எடுப்பிலேயே கல்யாணம் பேச வர்றாங்கன்னு கோபம் தான் அதிகமாகும். அதுக்கு முன்னாடி நீ அவங்க அப்பா அம்மாவை நேர்ல பார்த்து உன் பக்கத்தை புரியவைக்கறது நல்லதுன்னு படுது.” என்று யோசனையாக சொன்னார் அவன் அப்பா.

“எப்படிங்க இவன் தனியா? இப்போ பண்ண போல ஏடாகூடமா எதையும் பண்ணிடப்போறான்!”

“ஷ் மஞ்சு. அவனுக்கு தெரியும். அவன் பார்த்துப்பான். நீ வா அங்கே சஜினி வகுப்பு  முடிஞ்சு வந்திருப்பா”

மகளின் ஞாபகம் வந்ததுமே அவசரமாக எழுந்து கொண்டவர் மதியம் சாப்பிட்டியா என்று அன்னையாக விசாரிக்கவும் தவறவில்லை.

“ஆனாலும் இந்த மைத்திக்கு போன் போட்டு கேக்காம விடமாட்டேன். பூனைக்குட்டி போல பழகிட்டு எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்கா!”

“அவகிட்ட எதையும் கேட்காதீங்கம்மா!”

“பார்த்தீங்களா இவனை! அவளை நான் ஒரு கேள்வியும் கேட்ககூடாதாம்!” என்று சந்தோஷமாக கணவரிடம் சிரித்த மஞ்சு “என்னவோ செய்து கொள்ளுங்கள்!” என்றபடி அப்பாவோடு வெளியேற அவர்களோடு மனம் விட்டு பேசியதில் மனதுக்கு பெரும் ஆசுவாசம் கிடைத்தது போன்ற நிம்மதியுடன்  சோபாவிலேயே படுத்துக்கொண்டான் அவன்.

அவள் வீட்டினரோடு  பேசினாளா திட்டினார்களா அழுகிறாளா எதுவும் தெரியாமல் பைத்தியம் பிடிப்பது போலிருந்தது. அதைவிட ஐந்து நாட்களும் நிறைந்திருந்த வீடு இன்றைக்கு ஓவென்று வெறிச்சோடிப்போய் கிடப்பதாகப்பட்டது.

‘சே அவசரப்பட்டு தொடர்பு கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டோமோ.’. என்று மனம் அவனை திட்டினாலும் எல்லோரும் தன் காதலிக்கு மரியாதை செய்ய வேண்டுமானால் இதை விட வேறு வழியில்லை அது அவனுடைய கடமையும் அல்லவா? என்ற எண்ணமே அவனை தடுத்தாட்கொண்டது.

சோமரத்னவுக்கு போன் செய்து இன்றிரவில் இருந்து வீட்டுக்கு வந்துவிட சொன்னவனுக்கு லேசாக பசிப்பது போலிருந்தது.  மதியம் வாங்கிய உணவுப்பார்சலை ஞாபகமாய் தூக்கிப்போட்டவன் பிரிட்ஜை திறந்து அதில் இருந்த பிட்டை வெளியே எடுத்து மைக்ரோவேவில் வைத்தான்.

 அதை தயாரிக்க அவள் பட்ட பாடு ஞாபகம் வந்து உதட்டில் புன்முறுவலை கொடுத்தது. சாப்பிட்டிருப்பாளா?

ஆனால் அவளைப்பற்றியெல்லாம் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை என்றே மனதுக்குப் பட்டது!

இங்கே வந்திருக்கும் போது  சும்மா இப்படி சமாளி என்று ஒற்றை வரியில் அவன் முடித்து விட அவளுடைய அம்மா அம்மா நண்பர்கள் போன் செய்த போதெல்லாம் டிசைன் டிசைனாக அவள் அளந்து விட்ட கதைகளை கேட்டு அவனே  மலைத்துத்தான் போயிருந்தான். சரியான திருடி அவள். இப்போதைக்கு தன்னை சந்தேகப்பட்டு விட்டீர்கள் என்று அவளுடைய அப்பாவை அழவைத்தாலும் வைத்துக்கொண்டிருப்பாள். 

சிரிப்போடு சிக்கன் கறியையும் சூடாக்கி எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேஜையை நோக்கி போனான். இன்டர்நெட்டை கனெக்ட் செய்து ஐபாடை ஆன் செய்ய மெசேஜ் அவளிடம் இருந்து வந்து குதித்தது.

“நீங்கள் தானே பேசமாட்டேன் என்று சொன்னீர்கள் நான் இல்லையே!” என்று முதல் வரி விளக்கம் கொடுத்துவிட்டு சுமி பிளாட் ஆகிவிட்டதாகவும், அப்பாவிடம் அழுது மன்னிப்பு கேட்டு, சில பல பொய்களை உணர்ச்சிகரமாக சொல்லி அவரை சரியாக்கி விட்டதாகவும், அம்மா மட்டும் பேசமாட்டேன் என்று அடம்பிடிப்பதாகவும் மெசேஜ் செய்தவள் பிறகு சூப்பர் வைசரை போய் பார்த்தது, அவர் சொன்னது எல்லாவற்றையும் மெசேஜ் செய்திருந்தாள்.

பதில் பேசாமல் ஒரு ஸ்மைலி அனுப்பினால் கூட அவளுடன்தொடர்பு கொண்டதாகிவிடுமா என்று ஒருகணம் சிந்தித்தவன் தன்னையே அடக்கிக்கொண்டான். தான் பார்த்தும் ரிப்ளை செய்யாமல் இருப்பதை கண்டு விட்டு மனதுக்குள் எப்படியெல்லாம் திட்டுவாள் என்று தெரியாதா என்ன? சிரிப்போடு சாப்பிட ஆரம்பித்தான் அவன்.

அன்றில் இருந்து இந்த விஷயத்தில் இரண்டு நாளாக என்ன செய்யலாம் என்பது தான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

ஹார்ட் பேஷன்டிடம் போய் அதிரடியை அரங்கேற்றுவது முட்டாள்தனம். திடீரென்று போய் பெண்ணை கொடுங்கள் என்று நிற்கவும் முடியாது. பேசாமல் கோர்ட்டில் போய் அமர்ந்து விடலாமா என்று கூட சிந்தித்தான் அவன்.

மைதிலி சொன்னதெல்லாம் வைத்து பார்த்தபோது அப்பா கொஞ்சம் மென்மையானவ,ர் அம்மா தான் கொஞ்சம் பிடிவாதி என்று புரிந்தது. ஆனால் இருவரையும் தான் எப்படி அணுகுவது?

அவர்கள் அவன் பேசுதை இடையில் முறித்துக்கொண்டு போகாமல் காது கொடுத்து கேட்கவேண்டும். அதே நேரம் அவன் எப்படிப்பட்டவன் என்று புரிந்து கொண்டு மனமிளகவும் வேண்டும். முக்கியமான விடயம் இதெல்லாம் வெகு இயல்பாக நடக்க வேண்டும்!

எப்படி?

கடைசியாக அந்த சிந்தனை அவன் மனதில் உதித்தபோது அவர்கள் பிரிந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.

உடனடியாகவே மொபைலை எடுத்து ராஜநாயகம் என்றிருந்த இலக்கத்தை அழுத்தினான் அவன்

மறுமுனையில் உற்சாகமாக ஹலோ சொன்னது ஒரு முதிர்ந்த ஆண்குரல்

“ராஜா சார்.. ஸ்கூல் ஆண்டுவிழா எப்போ வருது?” அவன் தான் கேட்டான்

“அடுத்த மாசம் பத்தாம் திகதி. நான் கூட சீப் கெஸ்ட்டாக கூப்பிடுவதற்கு உனக்கு தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் சொல் என்று கேட்டிருந்தேனே..மறந்துவிட்டாயா?” என்று பதில் கேள்வி கேட்டது மறுமுனை

“மறக்கவில்லை ராஜா சார். ஒரு ஐடியா மனதில் வந்தது. நீங்கள் யாரையும் முடிவு செய்து விட்டீர்களா? என்று கேட்பதற்காக தான் போன் செய்தேன்.” மெல்ல மெல்ல வார்த்தைகளை கோர்த்தான் சிந்ததக்க.

“முடிவு செய்திருந்தால் உன்னிடம் சொல்லியிருப்பேன் தானே. உன் ஐடியாவை சொல்” என்று ஊக்கினார் ராஜநாயகம்

“இல்லை..இப்போதெல்லாம் அடிக்கடி அந்த பிரதேசத்தில் குற்ற செயல்கள், இளைஞர்கள் வன்முறையில் இறங்குவது போன்ற செய்திகளையும் தானே கேட்கிறோம். ஆண்டுவிழாவுக்கு ஒரு நீதிபதியை அழைத்தால் என்ன? அவரால் இளைய சமுதாயத்துக்கு சரியான அறிவுரை வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.”

“நல்ல ஐடியா தான் நீ யாரையோ மனதில் வைத்திருக்கிறாய் போலத்தெரிகிறதே! சொல் பார்க்கலாம்.”

“லயன்ஸ் கிளப்பில் எல்லாம் ஆக்டிவ்வாக இருப்பாரே, ஜட்ஜ் மணிமாறன்? அவரை  கேட்டுப்பார்க்கலாம் என்று நினைத்தேன்.”

“நல்ல ஐடியா தான்,, மணிமாறனை நித்யராஜூக்கு நன்றாகவே தெரியும். உனக்கு பர்சனலாக அவரைத்தெரியுமா?”

“இல்லை சார். நான் அவரைப்பற்றி நல்லவிதமாக கேள்விப்பட்டேன் அவ்வளவு தான்”

“சரி அப்படியாயின் நான் நித்யராஜ் மூலமாக பேசிப்பார்க்கிறேன். போன வாரம் கூட ஏதோ ஸ்கூலில் அவர் பேசியதாக செய்தி வந்தது தான்..ஆனால் இங்கே இவ்வளவு தூரம் வர சம்மதிப்பாரா தெரியவில்லை பேசிப்பார்ப்போம்.”

ராஜநாயகம் கட் செய்துவிட சின்ன சிரிப்பும் பதட்டமுமாய் கட்டிலில் விழுந்தான் சிந்தக்க.

இத்தனை நாட்கள் எங்களை  டிசைன் டிசைனாக ஆட்டிப்படைத்த விதியே..இந்த ஒருதடவை என் திட்டத்துக்கு நீ கட்டுப் படேன் !!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *