Responsive Menu
Add more content here...

WLM அத்தியாயம் 15

“நாங்கள் காதலித்த காலத்தில் கூட அதிகமாய் ஒன்றாக  இருந்ததோ சுதந்திரமாக கலகலவென்று பேசிக்கொண்டதோ கிடையாது. ஆனால் இன்றைக்கு அந்த வீட்டில் அவனுடனான எனது தருணங்களில் என் வீட்டில் என் பெற்றோரோடு நான் இருக்கும் தளர்வும் ஆசுவாசமும் என்னையறியாமலே பற்றிக்கொள்ள என் நாவுப்பூட்டு கழன்று கொண்டிருந்தது. அவனிடம் என்னை மிகச்சுதந்திரமாக உணர்ந்தேன்.”

பாதிச்சிரிப்பு உதட்டிலேயே உறைந்து போக “நான் வெளியே இருக்கேன்” என்று முணுமுணுத்துவிட்டு நெஸ்டமோல்ட் கப்பை எடுத்துக்கொண்டு கீழே ஹாலுக்கு வந்தாள் மைதிலி.

மனமும் நாவும் உன் கட்டுப்பாட்டை விட்டு போய்விட்டன போலிருக்கின்றனவே… இப்போது என்னை பார்த்தால் இங்கிருந்து போவதற்காய் அவ்வளவு தூரம் அவனோடு சண்டை போட்டு போராடியவள் என்று யாராவது சொல்வார்களா? நீயே அவனிடம் விண்ணப்பம் வைத்து கிளம்பி வந்தவள் போலத்தான் இருக்கிறாய்!!! மனச்சாட்சி குத்திக்காட்டியத்தில் அவளுக்கு ரொம்பவே அவமானமாக இருந்தது. 

வெளியே கதவுகள்  திறந்து தான் இருந்தன. இருட்டில் கலந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த மரங்களை பார்த்துக்கொண்டே வெளியே வந்தவள்  மெதுவாய் போய் படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள். உயரமாய் மரங்களாலேயே எல்லையிடப்பட்ட பெரிய பரப்பளவில் இருந்தது வீடு. கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் அளவு இருக்கலாம் அந்த வளவு. அவன் சொன்னது சரிதான், வெளியாரின் தலையீடுகள் அற்ற தனிமையான ஒரு இல்லம் இது!

அவளது வாழ்க்கை இந்த புள்ளியில் வந்து நிற்கும் என்று அவள் கற்பனை கூட செய்திருக்கவில்லை. காதலுக்காக மட்டும் தானே இவ்வளவு தூரம் அவள் துணிந்தாள்? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..இதன் பிறகு அவளது வாழ்க்கை பழைய பாதைக்கு திரும்பவே போவதில்லை!

ஒருவேளை அவனின் திட்டம் கூட அதுதானோ? அவளுக்கு அப்போதைக்கு எதையுமே சொல்லத்தெரியவில்லை.

தனக்கு பக்கத்தில் வாயகன்ற மண்பானை ஒன்றில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு அதில் பூக்கள் மிதந்து கொண்டிருக்க ஒரு பெருமூச்சுடன் விரல்களால் அந்த நீரின் அமைதியை கலைத்தபடி சுற்றிலும் பார்வையை செலுத்தியவள் மண்ணில் இருந்து வீட்டுக்கான படிக்கட்டுக்கள் ஆரம்பிக்கும் இடத்தில் அரைவட்டமாய் செதுக்கப்பட்டிருந்த கல்லைக்கண்டதும் ஆர்வமாய் எழுந்து போய் பார்த்தாள்!

சந்திரவட்டக்கல் தானே இது? புராதன காலங்களில் பலவகை உருவங்கள் செதுக்கப்பட்டு அரண்மனைகளினதும், தாதுகோபங்களினதும் நுழைவாயிலில் பதிக்கப்படும் அந்த அரைவட்டக்கல் அனுராத புரக்காலம், பொலநறுவைக்காலம் என்று இரண்டு காலங்களுக்குரியது. கால் மிதிக்கும் இடம் என்பதால் பொலநறுவைக்கால சந்திரவட்டக்கல்லில் இந்துமத தாக்கம் காரணமாக அதலிருந்த பசுவின் உருவம் நீக்கப்பட்டதாக வரலாற்றில் அவள் படித்திருக்கிறாள்.   

பெரிய துட்டகைமுனு..அரண்மனை கட்டி சந்திரவட்டக்கல் பதிச்சிருக்கார்!.. மூஞ்சி முகரைக்கட்டை..

ஒவ்வொருநாளும் காலையில் இந்தக்கல்லின் மேலேயே கலர் கலராக ரங்கோலிக்கோலம் போட்டு வைத்தால் எப்படி இருக்கும் என்று அவனை வம்பிழுக்கும் ஆசை ஒன்று தோன்றி மறைய அது கொடுத்த புன்னகையோடு தன் சஞ்சலங்களை மறந்துபோய் அந்த வீட்டை சுற்றிப்பார்க்க எழுந்து கொண்டாள் அவள்.

ஹாலின் ஒரு பக்கம் புத்த மதத்தில் அவர்கள் வணங்கும் யந்திரம் மாட்டப்பட்டிருந்தது,

மறுபக்கம் தாவணி அணிந்து பொட்டு வைத்துக்கொண்டிருந்த அழகுப்பெண் ஒருத்தி குனிந்து தலையில் துண்டுடன் கோலம் போட்டுக்கொண்டிருக்கும் ஓவியம் இருந்தது. நமக்காகவா? என்று மனதுக்குள் பரவிய குளுமை அவள் உதட்டிலும் சிரிப்பை மீண்டும் ஒட்டவைத்தது.

அந்த வீட்டில் ஒவ்வொரு பகுதியும் அவளை இயல்பு மனநிலைக்கு எப்படியோ திருப்பிக்கொண்டிருந்தது. தான் எடுத்திருந்த மிகப்பெரும் ரிஸ்க்கை மறந்தாள். யாருக்கேனும் விஷயம் தெரிந்தால் என்னாகும் என்ற பயத்தை மறந்தாள். ஏன் நாளை எனக்கே என்னாகும் என்ற பதட்டத்தைக்கூட அவள் மறந்தாள். சிந்தக அவளுடையவன், இங்கே அவளும் அவனும் மட்டும் ஒன்றாக வாழும் கனவு நனவாகிக்கொண்டிருக்கிறது என்ற எண்ணம் மட்டுமே அவளை ஆட்கொள்ள அந்த வாழ்க்கைக்கேயுரிய இனிமையும் இலகுத்தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக அவளை சுற்றிக்கொள்ள ஆரம்பித்தன.

சோபாவுக்கு மேலே கொஞ்சம் பெரிய படம் சட்டமிடப்பட்டிருந்தது. சிவப்பு வர்ண க்ளோக் மற்றும் தொப்பியுடன் MBA பட்டமளிப்பு விழா புகைப்படத்தில்  சிரித்துக்கொண்டிருந்தவனை பார்க்கவே மனதில் பெரும் நிறைவாக இருந்தது, சாதித்து விட்டானே! இந்த மூன்று வருடகாலத்தில் “மச்சி” என்ற புதுப்பெயரில் அவனுடைய கம்பனி வகைதொகையின்றி வளர்ந்ததும் இல்லாமல் உள்ளூர் உதைபந்தாட்ட போட்டிகளுக்கு ஸ்பான்சராக அடிக்கடி டிவியில் அவன் தென்படுவதுன்பு. அப்போதெல்லாம் தான் சாதித்ததை  போலவே பெருமிதம் கொண்டு அவள் கண்கலங்குவதுண்டு!  

நாங்கள் மட்டும் சேருவோமாக இருந்திருந்தால்  என்னுடைய பட்டமளிப்பு புகைப்படத்தையும் இதற்குப்பக்கத்திலே மாட்டி வைத்திருக்கலாம்! ப்ச்…

பார்க்கிறான் பார் பார்வை! ஆன்ட்டி, அங்கிள் ரெண்டு பேருக்குமே கண் இந்த கலரில் இருக்காது. இவனுக்கு மட்டும் எப்படி இப்படியொரு கலர்? அந்த புகைப்படத்தை கண்களில் இருந்து ஆரம்பித்து கன்னத்தின் கோடு வரை  நடுங்கும் விரல்களாய் மெல்ல அவளையறியாமலே வருடினாள் மைதிலி.

“சூப் ரெடி!!!”

திடுக்கிட்டுப்போய் கையை இழுத்துக்கொண்டு திரும்பியவள் அவன் எதையும் கவனிக்காதவன் போல ஆவி பறக்கும் இரண்டு கண்ணாடி கோப்பைகளை டைனிங் டேபிளில் வைத்துக்கொண்டிருப்பதை கண்டு விட்டு உதட்டை கடித்த படி அவனை நெருங்கினாள்.

“இடியாப்பம் கொஞ்சம் தூரத்துல இருந்து ஆர்டர் பண்ணி வாங்கினேன்..உங்களோடதை போல இருக்காதுதான். ஆனால் உனக்கு சாப்பிட இலகுவாக இருக்கும்.” இலகுவாய் பேசியபடியே அவளுக்கு பரிமாரியவன் “சாப்பிட முடியும் தானே?” என்று உறுதிப்படுத்தியபடி தன்னுடைய சூப் கோப்பையை அருகே இழுத்துக்கொண்டாள்.

இருவரின் தனிமையில் பதட்டப்படுவது நான் மட்டுமல்ல என்று  அவளுக்கு புரிந்தது. அவனும் டென்ஷனாக தான் இருக்கிறான்!

“வலக்கை ஒகேயா தானே இருக்கு! சாப்பிடுவேன்” என்றபடி இடியாப்பத்துக்கு என இருந்த கறியை தவிர்த்து விட்டு சூப்பையே அதன் மேலே விட்டுக்கொண்டு இடியாப்ப சிக்கலை பிரித்தவள் மெல்ல வாயிலிட்டாள்.

இரண்டு நாட்கள் காய்ந்து போயிருந்த வாய்க்கு சூப்பிலிருந்த மிளகின் காரம் அமிர்தம் போல இருந்தது.

“சூப் செமயா இருக்கு..இடியாப்பம் கொஞ்சம் ரப்பா தான் இருக்கு. ஆனாலும் சூப் சேர்த்து சாப்பிடும் போது ஒண்ணும் தெரியல..” என்று பெரியமனதுடன் அந்த இடியாப்பத்தை மன்னித்தவள் அவன் இடியாப்பத்தை தொடாமல் சூப்பை மட்டும் சாப்பிடுவதை கண்டுவிட்டு “உங்களுக்கு இரவு சூப் மட்டும் போதுமா?” என்று கேட்டாள்.

ஹ்ம்ம்…. இப்போதெல்லாம் இரவில் சோறு சாப்பிடுவதை நான் நிறுத்தி விட்டேன். முன்பு நிறைய விளையாடுவேன்..ஆகவே அது சரியாக இருந்தது. இப்போது விளையாடுவதே அபூர்வமாகி விட்டது. கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாலும் தொப்பை போட்டு விடுகிறது!!!

ஹா ஹா ஹா

நீயும் கொஞ்சமே கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் மைதிலி. உனக்கு சூட் ஆகுது!!! ரசனையாய் அவனுடைய கண்கள் அவளைத்தொட்டு போயின.

சின்னதாய் அசட்டு சிவப்பொன்று முகத்துக்கு ஏறிக்கொள்ள சாப்பாட்டை பார்ப்பதுபோல அவள் குனிந்து கொண்டாள். அதன் பிறகு இருவருக்குமிடையில் சாப்பிட்டு முடித்து கழுவி வைக்கும் வரை மௌனமே ஆட்சிசெய்து கொண்டிருந்தது.

அவளை எதையும் கழுவ அவன் அனுமதிக்கவில்லை கையில் தண்ணீர் பட்டுவிடும் என்று வெளியே விரட்டிவிட்டான்.

ஹாலுக்குள் இருந்த குட்டிப்புத்தர் சிலைக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு எதிரே தென்பட்ட இரட்டை அறைகளில் ஒன்றில் லக்ஷ்மியின் படம் இருப்பதைப்போன்று தோன்ற ஆர்வமாய் உள்ளே நுழைந்தாள் மைதிலி..

பூஜையறை!!! யாருக்கானது என்று சொல்லியா தெரியவேண்டும்?

ஒரு பக்கம் முழுக்க அடைத்துக்கொண்ட பிரமாண்டமான சிவன் உருவப்படம். அது நாம் வணங்கும் படமாக இல்லாமல் கொஞ்சம் பான்டசி கலந்து கண்காட்சிகளுக்காக வரையப்பட்ட படம் போல அழகாய் இருந்தது.

அடுத்தபக்கம் முழுக்க சுவரில் படங்கள் மாட்டப்பட்டு இருந்தன. முதல் பார்வையிலேயே சிரிப்பு  பொங்கி  வர சுவரில் சாய்ந்து கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

சிறு குழந்தையொன்று க்ளேயில் செய்த நாய் பூனைகள் தோற்றத்தில்  அப்படி இல்லாவிட்டாலும் அவர்களின் முயற்சி அப்படியே நெஞ்சை அள்ளிக்கொண்டு போகுமே..அப்படித்தான் இருந்தது அவளுக்கு.. அந்த முயற்சியை செய்தவனை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட தோன்றிய உணர்வை கட்டுப்படுத்தவே முடியவில்லை!

படத்தட்டு,,செயற்கை நித்யகல்யாணி மற்றும் மல்லிகைப்பூக்கள், ஊதுபத்தி வாசனை.. சுற்றிப்பார்க்க சிரிப்பு அப்படியே இதழ்களில் உறைந்தது.

காத்திருந்தேன் காத்திருந்தேன்..என்று சொன்னான் தான் அப்போதெல்லாம் அது அவளுக்கு பெரிதாக உரைக்கவில்லை. ஆனால் இப்படியெல்லாம் பார்த்துபார்த்து செய்து வைத்துக்கொண்டு அவன் இருப்பான் என்று அவள் எண்ணியும் பார்க்கவில்லை. இவள் மட்டும் இங்கே வராமல் இருந்திருந்தால்??? பாவம் இந்த அடையாளங்களோடேயே வாழ்ந்திருப்பானா? ஹையோ இந்த அன்புக்கு அவள் தகுதியானவள் தானா? கண்ணை கரித்துக்கொண்டு வந்தது..

நான் இவனுக்கு ஒன்றுமே செய்யவில்லை தானே!

அவளது சிந்தனையை அறுத்து “என்ன அவ்வளவு சிரிப்பு? பிடிக்கலையா?” என்று கேட்டபடி பூஜையறைக்குள் நுழைந்தான் சிந்தக!

“ரொம்ப பிடிச்சிருக்கு! ஆனால் சில படங்களின் இடங்களை மாற்றியாக வேண்டும்!” தேர்வெழுதி விட்டு காத்திருக்கும் மாணவன் போன்ற அவன் முகம் பார்த்ததும் அவளையறியாமலே மீண்டும் புன்னகை பூத்து விட்டிருந்தது.

ஏன் சிரிக்கிறாய்??

மீண்டும் பொங்கி வந்த சிரிப்போடு “இல்ல…இந்த படத்தை எந்தக்கடைல வாங்கினீங்க?” என்றபடி   அவள் கை காட்டிய இடத்தில் தம்பூரோடு நாரதர் நின்று கொண்டிருந்தார்!

“இங்கே எங்கே வாங்கறது? நானே கூகிளில் தேடி டவுன் லோட் பண்ணி பிரேம் பண்ணி வச்சேன்.. எனக்கு தெரிஞ்சதை மட்டும் செலெக்ட் பண்ணிட்டு முக்கியமான யாரையும் விட்டுட்டா? அந்த பயத்துல தான் நான் எல்லாத்தையும் பிரிண்ட் போட்டு வச்சேன்..யார்கிட்டயும் கேட்கவும் முடியாதுல்ல?” அவனும் சிரித்தபடியே  விளக்கம் சொன்னான்

 “அது வந்து இவரை நாங்கள் பூஜையறையில் வைத்தது வணங்குவதில்லை! அழைப்பில்லாமலே வந்து கலகம் செய்பவர் இவர்..நீங்கள் அவரை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்ததும் இல்லாமல் பூஜையறையில் வேறு மாட்டி வைத்தால் எப்படி? “ என்றவள் நாரதரின் மகிமைகளை பற்றி நீளமாய் எடுத்து சொன்னாள்.

லேசான அசட்டு சிரிப்புடன் நாரதர் படத்தை கழற்றி கையில் எடுத்து விட்டவன் இன்னும் சிரிப்பு முகம் மாறாமல் நின்றவளின்  தலையில் வலிக்காமல் கொட்டினான்.

“எனக்கு நாளைக்கு நல்லூர் கந்தனை டவுன்லோட் பண்ணி கொடுங்க!அப்புறம் இந்த சிவாவை அறையில மாட்டி வைக்கலாம். இங்கே வைக்க நான் வேற சிவன் படம் தருகிறேன்.”

அப்புறம்? வேறே என்ன பண்ணணும்?

“படங்கள் எல்லாமே இடம் மாற்ற வேண்டும். சாமியறையில் இப்படி ஜோடி ஜோடியாக பொதுவாக வைப்பது இல்லை. முப்பெரும் தேவிகள் ஒன்றாக முருகனும் கணபதியும் ஒன்றாக இப்படித்தான் அனேகமாக வைப்பார்கள். “

“நான் கூகிளில் யார் மனைவி யார் என்று தேடிப்பார்த்து தான் வைத்தேன்!!!”

ஐயோ..கூகிள் அப்படித்தான் சொல்லும் அதற்காக? ஜோடியாக வைத்தெல்லாம் வணங்க முடியாது!!! சொல்லியபடியே மடமடவென தேவியர் மூவரையும் ஒன்றாக்கியவள் பிரம்மா விஷ்ணுவை கழற்றி இவன் கையில் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக பிள்ளையார் முருகன் வைத்து கொஞ்சம் தள்ளி கிருஷ்ணனையும் வைத்தாள்.

 கழற்றவா என்று கேட்காமல் உரிமையோடு அவள் எல்லாவற்றையும் மாற்றி அடுக்குவதை பார்த்து இதட்கடையில் சிறு சிரிப்பு அரும்ப “ஏன் உங்களுக்கு பிரிப்பதிலேயே அவ்வளவு ஆனந்தம்?” என்று தூண்டில் போட்டான் அவன்!

அது சரியாக அவன் எதிர்பார்த்த இடத்தில் போய் தைக்க “ஹலோ…என்ன டபிள் மீனிங்கா? என்று போர்க்கொடி உயர்த்தினாள் அவள்.

“ஆமாம் என்றே வையேன்..எப்போதும் பிரிந்து போவதிலும், பிரிப்பதிலும் தான் குறியாக இருக்கிறீர்கள் என்று பார்த்தால் பாவம் கடவுள்களை கூட ஜோடியாக இருக்க விடுவதில்லை!” வேண்டுமென்றே சீண்டினான் அவன்.

“மிஸ்டர்..விட்டா பேசிட்டே போறீங்க! நீங்கள் மட்டும் என்ன? உங்கள் புத்தருக்கு யசோதரா மனைவி தானே? இருவரையும் சேர்த்தா வைத்திருக்கிறீர்கள்? பாவம் அந்த மனுஷனை ஒரு அரசமரத்துக்கு கீழே தன்னந்தனியாகத்தானே உட்கார வைத்திருக்கிறீர்கள்? சரி இங்கேயாவது பாதுகாப்பாய் கூரைக்கு கீழே இருக்கிறார் என்று பார்த்தால் பாவம் எங்கள் வன்னிக்காட்டுக்குள் கூட தன்னந்தனியாக இருக்கிறார் மனுஷன்!!” அவளது குரலில் கிண்டல் நிரம்பி வழிந்தது.

“ஏய்!!!  இன்னொரு மதம் பற்றி முழுசா தெரியாம கிண்டல் பண்ண கூடாது!!”

“ஹலோ.. நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டா பேசினீர்கள்? சரி அதை விடுங்கள் உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே..ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? பஸ்ஸில் இடம்பிடிக்க யன்னல் வழியே  பாக்கை போடுவதை போல  ஊரில் எங்காவது அரச மரம் இருந்தால் போதும் அங்கெல்லாம் ஒரு சித்தார்த்தரை நட்டு வைத்து விடுவது!!! செய்வது எல்லாமே படிப்பது வேதம் எரிப்பது சிவன் கோவில் வகை வேலைதான்! இவரு வந்துட்டார் பேசறதுக்கு!”

அவள் சொன்ன விதத்தில் பீறிட்ட சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியவன் “ஏன் இப்போது சண்டையை இழுக்கிறாய்?” என்று அவளை முறைத்தான்

நீங்கள் தானே முதலில் எங்களை வம்புக்கு இழுத்தீர்கள்?

நான் உண்மையை சொன்னேன்.

நானும் உண்மையை தான் சொன்னேன்.

ஒரு சில கணங்கள் மாறி மாறி முறைத்துக்கொண்டே நின்றவர்களில் மைதிலி தான் முதலில் சிரிக்க ஆரம்பித்தவள் பிறகு அவனும் வெடிக்க சற்று நேரம் அவர்களின் இணைந்த சிரிப்பொலி அந்த வீட்டுக்குள் இன்னிசையாய் பரவியது.

இயல்பாய் அவளின் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன் அந்த வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் அவளுக்கு சுற்றிக்காட்டினான். ஏன் இவற்றை இங்கே வைத்தேன்..எதிர்காலத்தில் என்ன செய்ய திட்டமிட்டு இப்படிக்கட்டினேன் எல்லாவற்றையும் அவன் விளக்கி சொன்னான். அந்த வீட்டின் கட்டமைப்பில் தன் உணர்வுகளின் மீதான கரிசனம் தான் முதன்மையாய் வைக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்து கொள்ள முடிந்தது மைதிலிக்கு. இதையெல்லாம் அவளுடைய வீட்டினர் புரிந்து கொள்வார்களா?

ஹேய் மைதிலி!!!!

எ…என்ன சொன்னீங்க?

எலியட்ட யங்த கியலா மங் அஹுவே!அவனுடைய பார்வை அவளை ஊடுருவி நினைவுகளை வெளியில் எடுத்து விடும் போலிருக்க இமைகளை தாழ்த்தினாள் அவள்..

வெளியே போவாமாவா? இந்த இருட்டுக்குள்ளேயா? என்று நினைத்தவள் பதில் கேள்வி கேட்காமல் தலையாட்டினாள்.

வெளியே படிகளில் இறங்கியவன் ஓரமாய் இருந்த சுவிட்சை தட்ட மெல்லிய வெளிச்சம் இருளை விரட்ட ஆரம்பித்தது. பக்கவாட்டில் நடந்தவன் மாமரத்தின் கீழிருந்த சீமெண்ட் பெஞ்சினை கையினால் ஒரு தடவை தட்டி விட்டு அமர்ந்து பக்கத்தில் அமரும் படி அவளுக்கும் சைகை காட்டினான்.

இருவர் மட்டுமே அமரக்கூடிய குட்டி பெஞ்ச். இரண்டு பக்கமும் கைப்பிடிகள் இல்லாவிட்டாலாவது கொஞ்சம் விலகி உட்காரமுடியும். ஆனால்… அவளது கண்களில் என்ன கண்டானோ கையை மெதுவாக பிடித்திழுத்து தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.

சுற்றிலும் இருள், லேசான குளிர்காற்று தனிமை, தன் தோள்களை உரசியபடி அமர்ந்திருந்த அவன்..எல்லாம் சேர்த்து இதயத்தில் தறிகெட்டு ஓடிய ரயில் போல படபடக்கும் உணர்வுகளோடு அமர்ந்திருந்தவள் தன் கையை அவன் தன் கைக்குள் போதித்து கொள்ள கொதிக்கும் பாலில் குளிர் நீர் பட்டதை போல அடங்கிப்போனாள்.

“ நான் உங்களை டீவில பார்ப்பேன், ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். இப்போ கூட ரொம்ப பெருமையா இருக்கு உங்க வளர்ச்சி பார்த்து..ஏன்னா நீங்க ஆரம்ப கட்டத்தில் ஸ்க்வீசிஸ் கம்பனியாக இருந்தபோதே பார்த்திருக்கிறேன் இல்லையா.. “ அவள் புன்னகைக்க அவனும் மலர புன்னகை செய்தான்.

ஒக்கம ஓயாநிகிந்தா பட்டங்கத்தேக்க தமாய்! எல்லாமே உன்னில் தான் ஆரம்பித்தது. என் வளர்ச்சி உன்னை அடையும் ஒரு படியாக இருக்கக்கூடும் என்பதும் ஒரு நப்பாசை தான்..பிடிவாதமாய் MBA சேர்ந்தேன்.. வார இறுதி நாட்களில் கொழும்பு போய் வர வேண்டி நேரிட்டது. உன் உலகம் விரிந்தது. அதிர்ஷ்ட வசமாக என் க்ளாசிலேயே கைத்தொழில் மேம்பாட்டு அமைச்சில் பணிபுரியும் ஒருவர் மற்றும் பெரும் கம்பனிகளின் உத்தியிகத்தர்கள் என பலர் இணைந்திருந்தார்கள்.  நாங்கள் நண்பர்கள் ஆன பிறகு தான் அரசாங்கமே என்னை போன்ற தொழில் முனைவர்களுக்கு எவ்வளவு வாய்ப்புக்களை உதவிகளை வழங்க காத்திருக்கிறது என்று அறிந்து கொண்டேன்.. மற்ற நண்பர்கள் மூலமாக அவர்களின் கம்பனிகளை போய் பார்த்தேன்..தொடர்புகளை வளர்த்துக்கொண்டேன்.  இரண்டு நாள் கொழும்பில் தங்கிருப்பேன். ஒரு நாள் வகுப்புக்களுக்காக என்றால் இன்னொரு நாள் என் தொழிலுக்காக..

“சரியான துறையில் சரியான மனிதர்களின் வழிகாட்டலுடன் ஆரம்பித்ததாலேயோ என்னவோ இம்முறை எல்லாமே எனக்கு தொட்டதெல்லாம் துலங்கியது. ஆண்டவனின் ஆசீர்வாதம்.. ஆரம்பித்து வைத்தவளும் எனக்கு எல்லாமாக இருப்பவளும் நீ என்பதால் தான் எம்ம்மிருவரின் முதலெழுத்துக்களையும் கொண்டு….”

எனக்கு தெரியும்…என்று ரகசியமாய் சொன்னாள் மைதிலி.

“நீ புரிந்து கொள்வாய் என்று எனக்கும் தெரியும்” என்று அதே தொனியில் சொல்லியவன் தான்  பற்றியிருந்த அவளுடைய கைகளை தன் உதடுகளுக்கு எடுத்துச்சென்று அழுத்தமாய் முத்தத்தை பதித்தான் சிந்தக. “நன்றி மைதிலி. நீ மட்டும் என்னை தேடி வராதிருந்தால் நான் என்னவாகியிருப்பேன்? சொல்லும் போதே அவனின் குரல் கரகரத்தது. பதில் ஏதும் தோன்றாமல் அவனை ஏறிட்டுப்பார்த்தவள் வழக்கம் போலவே அந்த கபில சுழலுக்குள் சிக்கிக்கொண்டாள்

நீயாவது என்னை டிவியில் பார்ப்பதாக சொன்னாய். எனக்கு என்னிடம் இருந்த ஒரே ஒரு புகைப்படம் மட்டும் தான் தஞ்சம்.. என்று பெருமூச்சு விட்டவன் சிறிது மௌனத்தின் பின் “ஏன் வந்தாய்..இவ்வளவு நாளும் இருந்துவிட்டு திடீரென ஏன் வந்தாய்? அப்படி வந்தும் கூட என்னை பார்த்துவிட்டாவது போக நீ நினைக்கவில்லையே” என்று ஆதங்கமாய் கேட்டபடி  அவள் முகத்தை தன்புறம் திருப்பினான் ஏதோ அவளுக்குள் இருந்து பதிலை எடுத்துக்கொள்ள முனைபவன் போல..

ஏன் வந்தேன்… தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள் மைதிலி.

ஒரு கட்டத்தில் எனக்கு வாழ்க்கை வெறுமையாய் போய்விட்டது சிந்தக.. என்னை சுற்றி எல்லாரும் சிரித்துக்கொண்டிருப்பார்கள். நான் மட்டும் வெறுமனே மேலாக சிரித்துக்கொண்டிருப்பேன்.  நான் ஒன்றை நினைத்து விட்டால் அதிலேயே பிடிவாதமாய் நின்று விடுவேன். நம் விஷயத்திலும் அப்படித்தான் இருந்தேன். இனிமேல் நினைக்கவே கூடாது என்று அடிமனதில் போட்டு புதைத்து விட்டு சதா அந்த சிந்தனைகளே வராத வண்ணம் மனம் களைத்துப்போகும் வண்ணம் எதவையாவது செய்து கொண்டே இருப்பேன். ஆனால் என்னை சுற்றி உலகம் மாறிக்கொண்டே வந்தது..

அன்றைக்கு எனக்கு எங்களை அழித்த எதிரிகள் முகாமை சேர்ந்தவனை உணர்வே இல்லாமல் திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது. குற்ற உணர்ச்சி என்னை கொன்றுவிடும் என்று தானே சொன்னேன். அது உணர்ச்சிகளின் வேகத்தில் முதிர்ச்சியில்லாத மனநிலையில் நான் சொன்னது தான்.

எங்களுக்கு நிரஞ்சன்  என்று ஒரு ஒரு அசிஸ்டன்ட் லெக்சரர் இருந்தார். தமிழ் மாணவர்களுடைய ஆதர்சம் அவர்! காரணம் விரிவுரைகளிலேயே எல்லாரும் இருக்கும் போது மிகத்தைரியமாக குருடர்கள் பார்த்த யானை போல நீங்கள் எல்லோரும் இந்த பிரச்னையை பார்க்கிறீர்கள் என்று சாடுவார். கஷ்டமான இடங்களில் முழு மாணவர்களின் முன்னேயும் தமிழில் எங்களுக்கு புரிய வைக்க அவர் தயங்குவதேயில்லை. எங்களுக்கெல்லாம் பாசமான அண்ணா அவர். ஆனால் அவருடைய காதலி ஒரு சிங்களப்பெண் என்று எங்களுக்கு பிறகு தான் தெரிந்தது. ஆக்ரோஷமாக அவரை பிடித்து சண்டை போட்டோம். அப்போது அவர் சொன்னது இதுதான்..

“எவ்வளவு தடவைகள் ஊரோடு இடம்பெயர்ந்திருக்கிறோம். கூழோ கஞ்சியோ மொத்தமாக காய்ச்சி குடிக்கும் போது இந்து கிறீஸ்தவன் முஸ்லிம் என்று நாங்கள் மத வேறுபாடுகளை பார்த்திருக்கிறோமா? அனைவரும் திருப்தியாக உண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைத்தானே பொது நோக்கமாய் கொண்டு ஒரே சமூகமாய் ஒன்றாய் நின்றோம்? இதேபோலத்தான் நாங்கள் இருவருமே மனிதனை மனிதனாக சமத்துவத்துடன் நடத்தப்படவேண்டும் என்ற கொள்கைகொண்டிருக்கிறோம். என்னையும் நான் சார் சமுதாயத்தையும் அவள் கறைப்படுத்த மாட்டாள் என்று நான் நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாய நோக்கத்தை விட இன்னும் உங்களோடு பகிர முடியாத எங்களிருவருக்கும் மட்டுமே  சொந்தமான  இனிய விஷயங்களிலும் ஒரே மனமாக இருக்கிறோம். மனம் ஒன்றிய பிறகும் பிறப்பு சார் வேறுபாடுகளை மனத்தால் அண்ட விடுவது நல்லமனிதனுக்கு அழகல்ல!”

அன்றைக்குத்தான்  என் மனம் முதன் முதலாய் நம்மை குறித்து இன்னொரு கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்தது. ஆனாலும் என் மனதில் அழிக்கவே முடியாத ஓவியமாக நீங்கள் படிந்திருக்கிரீர்கள் என்பது தெரியாமல் நானாகவே வலியப்போய் ஏன் வில்லங்கங்களை தேடிக்கொள்வான் என்ற மனநிலையோடு ஒதுங்கியே இருந்தேன்.

காலம் மாற ஆரம்பித்தது.. அதே போலத்தான் என் உலகமும்! நாங்கள் சர்வதாரணமாய் யாழ்ப்பாணம் பஸ்ஸில் போய் வர ஆரம்பித்தோம். சிங்கள பஸ்..கண்டக்டர் டிரைவர் எல்லாருமே அவர்கள்… போகும் வழி தான் அப்படி மாறியது என்று பார்த்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் சிங்கள மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள். சர்வசாதாரணமாக அவர்கள் டவுனில் சுற்றுவார்கள்.. சுற்றுலா பயணிகளாக வர ஆரம்பித்தார்கள்..நான் டவுனை சேர்ந்தவள்.. வீட்டுக்கு போகும் போதும் அங்கே உலாவும் போதும் ஒரு சிங்களக் குரலையாவது கேட்காமல் இருக்க முடியவில்லை. எல்லாமே உங்களைத்தான் நினைவு படுத்தும்..அவர்களை காணும் போதெல்லாம் என் மனசாட்சி என்னை குத்தும்… இவ்வளவு பேர் சர்வதாரணமாக சுற்றுகிறார்கள்..வியாபாரம் செய்கிறார்கள்..வேறுவழியின்றி எல்லோரையும் ஏற்றுக்கொள்ளத்தானே செய்கிறார்கள். நான் மட்டும் ஏன் நமக்காக போராடக்கூடாது? ஏன் நாங்கள் இருவரும் சேரகூடாது என்று..

எனக்குள் நடந்துகொண்டிருந்த அந்தப் போராட்டம் உங்களுக்கு சாதகமாக தீவிரமாகிக்கொண்டே வந்தது. என்னுடைய பாதுகாப்புவேலிகளை உடைத்துக்கொண்டு உங்கள் நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. அப்போது தான் நீங்கள் என்னை தொடர்பே கொள்ளாமல் விலக்கி வைத்துவிட்டீர்களே…நானாக எப்படி போவது என்ற ஏக்கம் உருவானது.

இந்த வருடம் ஹாஸ்டலில் இரண்டு பேருக்கு ஒரு அறை வீதம் கொடுத்திருந்தார்கள். நானும் சுமியும் ஒன்றாக போனோம். அங்கே போனதும் தான் எனக்கு பிரச்சனை ஆரம்பித்தது. அவள் சுதாவை காதலிக்க ஆரம்பித்திருக்கிறாள். பாதி நேரம் நான் அங்கிருப்பதே அவளுக்கு கண்ணில் தெரியாது. அவனுக்காக அசைன்மென்ட் செய்வது சின்ன சின்ன உணவுகள் செய்வது என்று அவளுடைய உலகமே மாறிப்போய் விட்டது..தனிமையாய் உணர்ந்த நான் உங்களை ரொம்பவே தேட ஆரம்பித்தேன். நீங்களும் என்னை தொடர்பு கொள்ளவேயில்லையே..அதுவும் சேர்ந்து கொண்டு  என்னை வாட்டியது.

வந்து பார்க்க வேண்டும் என்று ரொம்பவே ஏங்குவேன் ஆனாலும் என்னுடைய பக்கம் முழுமையாக சரி என்று தெரியாமல் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்க கூடாது என்று உறுதியாக இருந்தேன்..அதற்கு அடுத்த லீவுக்கு வீட்டுக்கு போய் எப்படியோ தைரயத்தை வரவழைத்துக்கொண்டு வீட்டில் விஷயத்தை சொல்ல அப்பா பதில் கூட பேசவில்லை. அப்படியே கதிரையில் சுருண்டு விட்டார். முதல் ஹார்ட்  அட்டாக்!!! சொன்னேன் தானே…”  இப்போது சொல்லும் போதும் அவளுக்கு அந்த விஷயத்தை சாதாரணமாய் கடக்க இயலவில்லை.

எனக்கு எப்படியிருக்கும் சொல்லுங்கள்? எனக்கு அப்பா என்றால் உயிர்! அவரின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் ஒன்றை நான் எப்படி நாடுவேன்..இனிமேல் வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.. ஆனாலும் உங்களை பார்க்காதிருக்க முடியவில்லை. நேரில் ஒருதடவையாவது உங்களை பார்த்துவிடவேண்டும் என்ற அசட்டு எண்ணம் என் பகுத்தறிவை ஜெயித்து விட கிடைத்த வாய்ப்பில் ஒட்டிக்கொண்டு இங்கே வந்து விட்டேன்..ஆனால் மகா இல்லுப்பள்ளம வந்ததுமே உணர்வுகள் என்னை சுழற்றியடிக்க ஆரம்பித்து விட மிரண்டு தான் போனேன்.. உங்கள் வீட்டுக்கு போனதும் என் நிலைமை சொல்லவே முடியாது.. அந்த நேரம் வீட்டில் உங்களைக்கண்டிருந்தால் கதறிகொண்டு வந்து நெஞ்சில் விழுந்திருப்பேன்.. என்னை நான் அப்படி வெளிக்காட்டிக்கொண்டால் நீங்கள் என்னை போக விட்டு விடுவீர்களா? இது என் அப்பாவின் உயிர்ப்பிரச்சினை சிந்தக.. என் சுயநலத்தால் அவரை இழந்துவிட முடியாது. அதுதான் நான் உங்களைப்பார்க்க பயந்து ஓடினேன்.. ஆனால் விதியின் விளையாட்டை பார்த்தீர்களா?” அவளுக்கு கண்ணில் நீர் நிற்காமல் வழிந்தது.. “ இனிமேல் நான்…..”

“வேண்டாம் கண்ணம்மா.. விட்டு விடு.. நம் தலையில் எப்படி எழுதியிருக்கிறதோ அது நடக்கட்டும்..” அவளை இழுத்து நெஞ்சுக்குள் சிறு குஞ்சாக அணைத்துக்கொண்டவன் அவளின் உச்சந்தலையில் தாடையை பதித்துக்கொண்டான்.

கூச்சத்தில் நெளிந்தவள் நெளிந்து வளைந்து விலக முயன்றாள்.

ஹா ஹா ஹா வாய்விட்டு சிரித்தபடி அவளை விடுவித்தவன் குறும்பாய் அவள் கண்களையே பார்க்க முயல அழுகை மறந்து முகம் சிவந்து விட்டு அவன் தோளில் ஒரு அடி வைத்தாள் அவள்.

சிரித்துக்கொண்டே வானத்தை பார்த்தவன் “நிலா, நட்சத்திரங்கள் எல்லாம் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கிற போல இருக்கு…” என்றான்.

ஹ்ம்ம்.. அவ்வளவு குளிராவும் இல்ல…

பாட்டு போடலாமா? என்று அவளிடம் கேட்டபடி அவன் மொபைலில் இருந்து ஒரு ஹிந்திப்பாடலை ஒலிக்க விட்டான்..

ப்ச்,,,இதுல ஒரு மண்ணாங்கட்டி பீலிங்கும் வரல…எனக்கு தமிழ்ப்பாட்டு வேணும்..இல்லையா?

ரெண்டே ரெண்டு பாட்டு வச்சிருக்கேன்…..

எது?

சின்ன சின்ன ஆசை, உயிரே….

அனேகமாக எல்லா சிங்கள இளைஞர்களும் இந்த ரெண்டு பாடலையும் தெரிந்து வைத்திருப்பார்கள்..இவனும் வேறுபாடில்லாமல் அதையே சொன்னதும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது..

“ரெகார்ட் தேஞ்சே போச்சு போங்க…வாடா மாப்பில்லே..வழைபல்ல தொப்பில்லே.. சிந்தாக் தா சிந்தாத் சிந்தாத்.. இதையும் டவுன்லோட் பண்ணிருக்கலாமே..அவள் கலாய்க்க ஆரம்பித்தாள்

“ஹா ஹா ஹா.. லிரிக்ஸ் புரியாம பாட்டெல்லாம் மனசுல நிக்காது!”

ஏன் எனக்கு மொழி தெரியாத போதே  இராஜ், பாத்ய சந்தோஷ் பாட்டெல்லாம் பிடிக்குமே..தேடல் இருக்கணும் சாரே!

அதிகமா பேசக்கூடாது..முடிஞ்சா நீ தான் ஒரு பாட்டுப்பாடேன்..சிரித்தபடி  இவள் புறம் திரும்பி இமைகளை உயர்த்தி கண்ணாலேயே சவால் விட்டான் அவன்

அவனையே பார்த்தாள் அவள்..இந்தக்கணம் இனி எப்போதாவது அவளுக்கு திரும்ப கிடைக்குமா?

“கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு..

உன் கண்ணு ரண்டும் என்னை மயக்கும் தவுசண்ட் வால்ட்டு பவரு..

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு..”

நான் பாடுவது அவனுக்கு புரியாதென்ற ரகசிய சிரிப்போடு பாட ஆரம்பித்தாள் அவள்.

அவன் சிரிப்பு முகம் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு அர்த்தம் கேட்டான்.

“அர்த்தம் வந்து In the midst of dark night, you are sitting under the tree , gazing at the glittering sky………….”

அவள் தொடர்ந்து கொண்டே போக…”பியூட்டிபுல்” என்றபடி அவளது விளக்கத்தில் குறுக்கிட்டு அவளை நெருங்கி கன்னத்தில் முத்தமிட்டவனின் கண்களில் இருந்த சிரிப்பு அப்போது அவளுக்கு புரியவில்லை.

மொபைல் போன் அடித்து அவர்களை வெட்டிப்பிரித்தது..

”அம்மா காலிங்!”

யாரோ முகத்தில் ஐஸ் வாட்டர் தெளித்ததை போல பதறிப்போய் ஆன்சர் செய்தாள் அவள்

சாப்பிட்டாச்சா மிது? கான்டீன்ல இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? என்று வெள்ளையாய் கேட்ட தந்தையின் குரல் அவளுக்கு அழுகையை வரவழைத்தது.

இப்படி ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி இதுவரை இருந்த உணர்வை மூழ்கடித்து அவளை சூழ்ந்துகொண்டது.

அவளின் மனநிலை உணர்ந்தோ என்னவோ ஆறுதலாய் அவளின் தோளில் அவன் கைவைக்க கோபமாய் தட்டி விட்டாள் அவள்..

இவனால் தானே இவ்வளவும்!!!! நானே வேண்டாம் என்று தானே விலகிப்போனேன்..அதையும் இதையும் சொல்லி இப்படி நம்பிக்கை துரோகம் செய்ய வைத்து விட்டானே என்ற இயலாமையில் அவனை வெறித்தவள் பிறகு ஒரே ஓட்டமாக தான் இருந்த அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக்கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!