Responsive Menu
Add more content here...

WLM அத்தியாயம் 4

“எனக்கு “சின்னச்சின்ன ஆசை” பாடல் ரொம்பவும் பிடிக்கும். எனக்கு தமிழ் புரியாது, தமிழனையும் தெரியாது..ஆனால் அந்த இசையும் அதிலிருந்த ஜீவனும் எனக்கு ரொம்பவே நெருக்கம். மைதிலி..அவளை முதன் முதலில் கண்டபோது அந்தப்பாடல் தான் எனக்கு மனதில் வந்தது. அந்த ஜீவன் அவளிடம் இருப்பதாய் தோன்றியது. அவளை பார்க்கப்பிடித்திருந்தது, ரசிக்கப்பிடித்திருந்தது..தயக்கமின்றி செய்தேன். ஆனால் என்னுடைய சிறிய வட்டத்தில் வேலை, முன்னேற்றம் நிம்மதி என்றிருந்த என் வாழ்வில் அதுவே புயலாய் வீச ஆரம்பிக்கும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை”

“மச்சா…சுஷாந்த் வர்றேன்னு சொல்லிருந்தானே!!! நீ கிளம்பிட்டிருக்க?” உள்ளிருந்து குரல் ராஜீவின் குரல் கேட்டது.

“வரமாட்டான். நீ கீயை எடுத்துக்கொண்டு வந்து சேர்!!!” ஸ்டோரின் உட்புறம் நோக்கி தானும் குரல் கொடுத்த சிந்தக தன் பல்சரை ஸ்டார்ட் செய்தான்.

இன்றைக்கு ஏதோ விழா நடந்ததோ? ஆங்காங்கே அலங்காரங்கள் தொங்கியதை பார்த்தபடியே அவன் சப் காம்பஸ் வளாகத்தை நெருங்கினான்.

அடுத்தது ஹாஸ்டல்..

பாதை வளைவில் வண்டியை வளைத்தவனின் விழிகள் வழக்கம் போல வேலியோரம் தேடுதல் செய்ய அவன் தேடியவள் விழிகளில் சிக்குண்டாள்.

அவளுக்கு ரொம்ப பிடித்தமானதாக இருக்கவேண்டும். அடிக்கடி இந்த சட்டையோடு தான் அவள் தென்படுவாள். கருஞ்சிவப்பும்  கருப்பும் கலந்த செக் துணியில் கழுத்தில்  லேஸ் காலர் வைத்து சின்னக்குழந்தை போல  இடுப்பில் பெல்ட்டும் கட்டிக்கொண்டிருப்பாள். இன்றும் தயக்கமாய் அவனை ஏறிட்டவள் அவன் கடக்கும் வரை புத்தகத்தில் பார்வையை பதித்திருந்து விட்டு அவன் கடந்ததும் அவனையே பார்வையிட்டுக்கொண்டிருந்ததை கண்ணாடி வழி நமுட்டுசிரிப்போடு பார்த்தவன் பாதை மீண்டும் வளைய ஒரு பெருமூச்சுடன் அவள் கண்களுக்கும் மறைந்து போனான்

இது கிட்டத்தட்ட ஒருவாரமாய் தொடரும் விளையாட்டு! விடுமுறை நாட்களில் காலையும் வாரநாட்களில் மாலை ஐந்தரையளவிலும் தவறாமல் அவனும் வருவான். அவளும் அங்கேயே அமர்ந்திருப்பாள். அவள் மென்மலர் முக தரிசனம் மட்டுமே அப்போதைக்கு முக்கியமாய்ப்பட மற்றவை மறந்து அவன் அதை அனுபவிப்பான்

மைதிலி…

முதன் முதலில் ங்கா சொல்லி பேசப்பழகும் குழந்தையை நேசிக்காமல் எப்படி இருக்கமுடியும்?

 அவளும் அவன் கண்களுக்கு அப்படித்தான் தெரிந்தாள். மழலைத்தனமான உச்சரிப்புடன் அவனது மொழியை அவள் பேச ஆரம்பித்த  அழகில் தான் அவன் முதலில் விழுந்திருக்க வேண்டும். அவளை கவனிக்க ஆரம்பித்தான்..

வில்லான இமைகளுக்கிடையில் உடையின் நிறத்துக்கேற்ப அவள் வைத்துக்கொள்ளும் பொட்டு, சலங்கைகளில்லாமல் மெல்லிய நூல்போல அவள் பாதத்தை தழுவியிருங்கும் கொலுசு, அவ்வப்போது அவள் போட்டுக்கொள்ளும் ஜிமிக்கி எல்லாமே அவனுக்கு புதுசுதான். அவனிடம் அவள் காண்பித்த வெட்கம், மறைந்திருந்து அவனை திருட்டுத்தனமாக நோட்டமிடும் கள்ளத்தனம், குழந்தைத் தனமான அவளது நடத்தைகள் என்று அவளிடம் எல்லாமே அவனுக்கு பிடித்திருந்தன.

இவள் என் மனைவியாக கிடைத்தால்? என்ற ஆசை இப்போதெல்லாம் பூதாகரமாய் வளர்ந்து அவனின் சிந்தனாசக்தியையே விழுங்கிக்கொள்கிறது. ஆனால் அதன் சாத்தியக்கூறு நூறுக்கு ஒருவிதம் கூட இல்லை என்பதை அவன் நன்றாகவே அறிந்தும் இருந்தான்.

அவளுடைய அப்பா ஒரு மாஜிஸ்ட்ரேட்! அவனுடைய வீடோ படிக்காத விவசாயகுடும்பம்! ஏன் அவனுக்கு கூட டிகிரி வாழ்க்கைக்கு தேவை என்ற எண்ணம் இருக்கவில்லை. தனக்கு பிடித்த துறையில் ஒரு டிப்ளோமா அத்தோடு அவன் தொழிலில் இறங்கிவிட்டான்!

அவள் பேசும் ஆங்கிலம், அவளோடு ஒட்டியிருக்கும் வசதியான வீட்டுப்பெண்ணுக்கேயுரிய நடையுடை பாவனைகள் எல்லாமே இருவருக்கிடையிலும் முரண் தானே!

ஆனால் அவளோடு கூடவந்த பெண் ஹாலில் இருந்து பேசிச்சிரிக்கும் போது அவனுடைய அம்மாவுக்கு உதவியாக கத்தியை தூக்கிக்கொண்டு வந்து காய்கறி வெட்டித்தந்து அந்த சின்ன சமையலறையிலும் தெரிந்த ஓரிரண்டு சொற்களை வைத்துக்கொண்டு ஆங்கில வாசனையே அறியாத அவனுடைய தாயாரோடு மைதிலி பொருந்திப்போகும் அழகு அவனுடைய ஆசையை அணைக்காமல் திரி தூண்டும்.

அவள் படித்து முடிக்க இன்னும் முழுதாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் உண்டு. முயன்றால் அதற்குள் அவனாலும் ஒரு அளவுக்கு கௌரவமான நிலைக்கு வந்து பெண் கேட்க இயலும் தான். ஆனால் மதம் மாறவே மறுக்கும் சமூகத்தில் இனம் மாறி மாஜிஸ்ட்ரேட் அவனுக்கு மகளை தருவாரா?

அவனிடம் தன்னை மறந்து பார்வையால் அவளை வெளிப்படுத்தி விட்டாலும் பிறகு வரும் நாட்கள் அவன் புறமே திரும்பாமல் வைராக்கியமாய் இருக்க முயல்வது அவளுக்குள் நிகழும் போராட்டத்தை அவனுக்கு சொல்லும். அவள் வரும் நேரங்களில் விலகிப்போய் இந்த பிரச்னையை தீர்க்கலாமென்றால் அவனுடைய முழுக்குடும்பமும் அவளை சதா கொண்டாடித்தீர்த்து அவனை திரிசங்கு சொர்க்கத்தில் நிறுத்தி வைத்தனர்.

“மைத்தி இதை இப்படிச்சொன்னாள்”

“இது மைத்தி கொடுத்தது.”

“இது மைத்திக்கு ரொம்ப பிடிக்கும்.ரசித்து சாப்பிடுவாள்”

“இதை மைத்திக்கு தெரிந்திருக்காது, காண்பிக்க வேண்டும்!”

பொய்யாக அலுத்துகொண்டாலும் அவர்கள் அப்படி அவளைக்குறித்து பேசிக்கொண்டே இருப்பதை தான் அவன் மனமும் விரும்பும்!!

அவளை விலக்கவும் முடியாமல் உரிமையாய் சேர்த்துக்கொள்ளவும் முடியாமல் தவிக்க ஆரம்பித்துவிட்டான் சிந்தக. …

ஒழுங்காய் போய்க்கொண்டிருந்த அவனது வாழ்க்கையை ஒரு சீட்டுக்கட்டை போல கலைத்துப்போட்டு விட்டாளே!

வீட்டின் முன்னே பைக்கை பூட்டிக்கொண்டு இறங்கியவன் சஜி  ஓடிவருவது தெரிய கொஞ்சம் நிதானித்தான்

“கடைக்கு எங்காவது போகவேண்டுமா?” அவளின் முகத்தில் விழுந்த முடியை காதோரம் ஒதுக்கியபடி கேட்டான் அவன்

“இல்லைண்ணா..நாளைக்கு அம்மாவோட பிறந்த நாளுக்கு கேக் வாங்கிட்டிங்களா?”

“ஓ..நாளைக்கு காலைல டான்னு கொண்டுவது தந்துருவாங்க”

அப்படியா..அம்மாவுக்கு தெரியாம பண்ணணும்ணா.. வீட்ல பலூன் எல்லாம் கட்டி..” கண்களில் கனவு மின்ன பேசிக்கொண்டே போனவளின் தலையில் செல்லமாய் தட்டினான் அவன்.

“லூசு! அம்மாவுக்கு தெரியாம இந்த குட்டி வீட்ல எப்படி ரகசியமா பண்ண முடியும்?”

“நான் அப்பாகிட்ட கேட்டேன்.. நாளைக்கு காலைலயே அம்மாவை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்களான்னு… அவர் ஒத்துக்கிட்டார். அப்படின்னா மதியம் வரை எங்களுக்கு அலங்காரம் பண்ண டைம் இருக்கும். நீ லீவ் போட்டுடேன் அண்ணா?”

தன் குட்டித்தங்கை எப்படியெல்லாம் யோசிக்கிறாள் என்ற ஆச்சர்யத்துடன் “பெரிய வேலைலாம் பார்க்கற வாலு! நாளைக்கு சனிக்கிழமை இல்லையா? லீவ் எல்லாம் போட முடியாது. வேண்டுமானால் அம்மா திரும்பி வந்து கேக் வெட்டிய பின்  நான் ஆபீஸ் கிளம்பறேன்.” என்று உறுதி தந்தான் அவன்.

அதற்குள் “மகள்! அண்ணா வீட்டுக்குள் வர முன்னே என்ன பேச்சு வேண்டியிருக்கு? அவன் கொஞ்ச நேரம் ஆறுதலாய் உக்காரட்டும் விடு!” என்று கிச்சனில் இருந்து அம்மாவின் சத்தம் கேட்க இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அடுத்தநாள் காலையில் சஜினியின் திட்டப்படி பெற்றோர் இருவரும் காலை ஆறுமணிக்கெல்லாம் கோவிலுக்கு கிளம்பிவிட தந்தை இல்லாததால் தோட்டத்துக்குள் இறங்கி தண்ணீர் விட வேண்டியவற்றுகெல்லாம் வெட்டி விட்டு வேலைகளை முடித்துக்கொண்டு கிட்டத்தட்ட சேற்றில் குளித்திருந்தவன்  தோட்டக்கிணற்றிலேயே குளித்து முடித்தான். பிறகு  தலையை அசைத்து நீர்த்துளிகளை பறக்க விட்டபடி வீட்டுக்குள் நுழைந்தான். அப்படியே நின்றான்

கிச்சனில் இருந்து வாயில் பலூனோடு வெளியே வந்த மைதிலி பட்டென்று நின்று முகம் சிவந்து பிறகு சரேலென மீண்டும் கிச்சனுக்குள் புகுந்து விட அதன் பிறகே இமை மூடியது அவனுக்கு.

இவளை அழைத்ததை சஜி சொல்லவே இல்லையே!!!

தன்னை மேலாடையில்லாமல் பார்த்து அவள் அதிர்ந்ததை கண்டு சிரிப்பு முகிழ அறைக்குள் போய் அவசரமாய் உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தான் அவன்

அவனை பார்த்தும் பார்க்காதவளாய் சஜினியுடன் அமர்ந்து பலூன் ஊதிக்கொண்டிருந்தாள் மைதிலி

வழக்கமாய் ஜீன்ஸ், டாப்ஸ் என்று தான் அணிந்து வருவாள். இன்றைக்கு பார்ட்டி என்றோ என்னவோ சுடிதார் அணிந்து கொண்டிருந்தாள். வெள்ளை டாப்ஸ், பச்சை பாட்டம், மென்மையாய் ஒரு பச்சை ஷால், காதுகளில் குட்டியாய் ஒரு ஜிமிக்கி வழக்கம் போல பச்சை நிறப்பொட்டு! கொஞ்சமாய் கலர் வளையல்கள். அப்படியே அவளை அள்ளித்தூக்கிக்கொள்ள வேண்டும் போல் ஒரு வேகம் முளைக்க விடு விடுவென அவளை தாண்டிக்கொண்டு வாசல் கதவடியில் போய் நின்றான் அவன்!

“பார்ட்டி என்று சொல்லி விட்டு வெறும் பலூனும் கேக்கும் தானா?” தங்கையிடம் அவள் கேட்பது கேட்டது.

வேற என்ன வாங்கணும்?

அவர்களுக்கு புரியாமல் எதையோ தமிழில் சொன்னவள் பிறகு வாயினால் பெரிய லிஸ்டே போட ஆரம்பித்தாள்.

அவளும் தங்கையும் பேசிக்கொள்வது அவனுக்கு சிரிப்பை தான் மூட்டியது. திரும்பி நிற்கும் வசதியில் சிரிப்பை மறைத்துக்கொண்டான்

சஜிக்கு அவ்வளவாக ஆங்கிலம் வராது. இவளுக்கு வாயில் சிங்களம் ததிங்கினத்தோம் போடும்! ஆகவே எழுபது வீதம் சைகையும் மீதி இருவருக்கும்தெரிந்த பொதுவான சொற்களுமாய் எப்படியோ புரிந்து கொள்கிறார்களே!

கொஞ்ச நேரத்தில் சஜி எழுந்து ரிப்பன் ஏதும் இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்றபடி உள்ளே மறைந்தாள்

அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது புரிந்ததால் தலையை குனிந்து கொண்டு வேண்டுமென்றே பலூனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவளை விடாமல்  சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் இப்போதைக்கு நிமிரப்போவதில்லையென புரிந்ததும் அவளை நோக்கி நடந்து அருகில் ஒட்டி இருந்த நாற்காலியில் அமர்ந்தான். சட்டென இமை மலர்த்தி அவனைப்  பார்த்தவள் மீண்டும் பலூனை பார்க்க ஆரம்பித்தாள்

கையை நீட்டி அவள் அருகில் வைத்துக்கொண்டிருந்த பையை எடுத்தான் சிந்தக.

அவள் தடுக்க கைகளை நீட்டி விட்டு பிறகு இறுக மடக்கிக்கொள்ள அவளையே பார்த்தபடி சுவாதீனமாக அந்த பையை பிரித்தான்.

உள்ளே அழகிய சேலையொன்று  பாக்கிங்கில் இருந்தது.

“எப்போ வாங்கின இதை?”

“அது..நான் கொஞ்ச நாள் முன்னாடி எங்கம்மாக்குன்னு  வாங்கி வச்சிருந்தேன். சஜி நேத்து திடீர்னு சொல்லவும் ஆன்ட்டிக்கு வேறு வாங்க முடியல..அதையே எடுத்துட்டு வந்துட்டேன்.”

ஹ்ம்ம்.. அம்மாவுக்கு வாங்கியதை அவனுடைய அம்மாவுக்கு எடுத்து வந்திருக்கிறாள்.. அவளோடு கூட வருபவர்களையும் அவனுடைய அம்மா அவளைப்போலவே தான்  கவனித்தார். ஆனால் யாருமே இவளளவுக்கு திரும்ப பாசத்தை காட்டியதில்லையே..

“ஆமாம் யாரோடு இங்கே வந்தாய்? தனியாகவா?” இவ்வளவு நேரமும் மனதை உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை அவன் கேட்டு விட்டான்.

“இல்லை அமில..எங்களோட படிக்கற பையன் தான் கூட்டிட்டு வந்தான்.. “

இனம்புரியாத ஒரு கோபம் சுறு சுறுவென மண்டைக்குள் ஏற “எதுல?” என்று வினவினான் ஒற்றை வார்த்தையாக.

“இல்லல ..அவன் தன்னோட சைக்கிளில் வந்தான். நான் என்னோட சைக்கிளில் வந்தேன். சைக்கிள் முன் பக்கம் இருக்குது.” அவளுக்கும் அவனுக்கு அதை விளக்கிவிடும் வேகம்!

கொஞ்ச நேரம் மௌனமாய் கழிய மீண்டும் அவனே ஆரம்பித்தான்.

“மைத்தி…என்னோடு கடைக்கு வருகிறாயா? நீ கொஞ்சம் முன்னே சொன்னதெல்லாம் வாங்கி வரலாம்.”

“நான் எப்படி வர்றது? நான் எழுதி தர்றேன் நீங்க வாங்கிட்டு வரீங்களா?” தயக்கமாய் கேட்டவளை முறைத்தான் அவன்.

“ஏன்? அந்த பையனோடு வந்தாயே…”

“நான் என்னோட சைக்கிள்ள தானே வந்தேன்!”

அப்போதுதான் அவள் சொல்வது அவனுக்கு புரிந்தது!  சிரித்தபடி “நானும்… உன்னை என்னுடைய பைக்கில் வர சொல்லி கூப்பிடவில்லையே?” என்று கண்சிமிட்டினான்.

“அப்போ?”

“நடந்து போகலாம். கடை பக்கத்தில் தான் இருக்கிறது.”

@@*(**()___))@@

“என்ன சொன்ன நீ இப்போ?”

“ஒண்ணும் இல்லையே.. “

“ஏய்! ஒழுங்கா இப்போ சொல்லப்போறியா இல்லையா?”

“சும்மா மிரட்டாம நான் என்ன பேசறேன்னு முடிஞ்சா கண்டுபிடிங்க!!!”

“படிக்கிறேன்..கூடிய சீக்கிரமே தமிழ் கத்துக்கறேன்”

“பார்க்கலாம்..”

“இப்போ கடைக்கு போகலாம் வா” என்ற படி எழுந்தவன்  உள்ளேயிருந்த தங்கையிடம் சொல்லிக்கொண்டு வெளியே நடந்தான்.

ஏறக்குறைய பின்னாலே ஓடி வந்தாள் அவள்.

“காம்பசுக்கு போனபிறகு என்னை ..எங்களையெல்லாம் மறந்து விடுவாய் தானே..”

“நான் நீங்கள் கிடையாது. நீங்கள் வேண்டுமானால் எங்களையெல்லாம் மறந்துவிடக்கூடும்.”

“பார்க்கலாம்!” என்று அவளைப்போலவே சொன்னவன்  “இப்போ என்ன வாங்க வேண்டுமென்று சொல்” என்றபடி தெருவில் தென்னை மரத்தின் மட்டைகளை சீவி அழகாய் தாயரித்திருந்த கதவினை திறந்து கொண்டு கடைக்குள் நுழைந்தான் சிந்தக.

கிரேப் பேப்பர்..

என்ன கலர்?

கிரீன் அண்ட் வைட்

போர்ட்.. ஹாப்பி பர்த்டே பானர் இங்கே இருக்காது.. நாம எழுதி கட் பண்ணிக்கலாம்.

கலர் ?

லைட் கிரீன்

ஒவ்வொன்றாக அவள் சொல்லசொல்ல ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்த கடைக்காரருக்கு சொல்லி வாங்கிக்கொண்டவன் அவனாகவே  பிஸ்கட், கொஞ்சம் மிக்சர், கொஞ்சம் வாழைப்பழம், பெரிய சோடா பாட்டில் ஒன்றும் வாங்கிக்கொண்டான்

கடைசியாக முன்னே அடுக்கிக்கிடந்த வர்ண ஜெலி பாட்டிலை கையில் எடுத்தபடி  “மைதிலிக்கு  ஜெலி பிடிக்குமா?” கேட்க

“எதுக்கு..வேணாம்..” என்று தலையாட்டி மறுத்தாள் அவள்

“ப்ச்..வாங்கத்தான் போறேன். உனக்கு பிடிக்கலன்னா வேற வாங்கிக்கலாம்.”

“அப்போ தள்ளுங்க நான் எடுத்துக்கறேன்” என்றவள் அவனிடம் இருந்த போத்தலை கைப்பற்றி பச்சை நிறத்தில் வேறு வேறு வடிவங்களில் இருந்த ஜெலிகளை மட்டும் பொறுக்கி எடுத்தாள்

ஒருவழியாய் கடைகாரருக்கு பணம் கொடுத்துவிட்டு பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் இருவரும்..

“ஏன் தலைமுடியையும் பச்சை கலர்ல டை பண்ணிக்க வேண்டியது தானே?”

“ஏன் நீங்க மட்டும் கருப்பு கலர்ல அடிக்கடி ட்ரஸ் பண்றீங்க…நான் ஏதும் கிண்டல் பண்ணினேனா?”

‘அந்தளவுக்கு என்னை கவனிக்கிறாயா நீ?’ என்று மனதில் எண்ணிக்கொண்டவன் வேறேதும் பேசவில்லை.சுகமாய் ஒரு தென்றல் தன்னை வருடிப்போனது போன்ற இதத்தோடு அவன் அவளோடு கூட நடந்து கொண்டிருந்தான்.

வீட்டில் எல்லாவற்றையும் பரப்பி வைத்துக்கொண்டு மூவருமாய் ஹாலை அலங்கரித்து முடித்த போது நேரம் பத்தரை ஆகியிருந்தது. அந்த ஒன்றரை மணி நேரத்தில் ஆண்டாண்டு காலமாய் அவனோடு பழகியவள் போல தயக்கங்களை மறந்து அவள் அவனோடு சீண்டி சிரிக்க ஆரம்பித்திருக்க தன்னை மறந்து தான் போனான் அவன்!

சஜினி வாசலில் அமர்ந்து எதையோ போர்டில் வரைந்து கொண்டிருந்தாள்

இவள் ஹாலுக்குள் நடந்த படி ஜெல்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

பச்சை..பச்சைக்கிளியே.. என்று மெல்ல அவளை சீண்ட ஆரம்பித்தான் சிந்தக. தான் சொன்னதில் அவளுக்கு “பச்சை” என்பது  மட்டும் புரியும் என்று அவனுக்கு நிச்சயமாய் தெரியும்.

பதிலுக்கு களு…என்று ஆரம்பித்து எதையோ சொன்னவள் அவளை பார்த்து குறும்பாய் சிரித்தாள். அதை தெரிந்து கொள்ளவே வேண்டும் போலாகிவிட்டது அவனுக்கு.

“தைரியம் இருந்தால் அதன் அர்த்தத்தை சொல்லு” என்று தூண்டில் போட்டான்

 “கறுப்பான வாய் கொண்டவன் கருவாயன்!” தயங்காமல் புரிய வைத்ததும் அல்லாமல் இமைகளை ஏற்றி இறக்கி அவள் சவாலுக்கழைக்கவும் செய்தாள்!

அடுத்த கணம் அவன் என்ன செய்தான் என்று அவனுக்கே புரியவில்லை கணங்களில் நிகழ்ந்து முடிந்ததிருந்தது அது!

அவளின் கையை பிடித்து இழுத்தவன் வயிற்றோடு சேர்த்து அவள் அசையாமல் தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டு காதுகளை முறுக்கியிருந்தான்.

சில கணங்கள் இருவருக்குமே உணரவில்லை புரிந்ததும் பட்டென அவன் கையை எடுத்துக்கொள்ள சரேலென விலகி நின்றாள் அவளும்.

அவளுக்கு புரிய வைத்துவிடும் பொருட்டு மைத்தி என்று அழைத்தவன் கண்களில் ஒரு நீர் வீழ்ச்சியே வழிய ஆரம்பித்திருக்க இரண்டடி பின்னே வைத்து அவள் யன்னலுக்கு வெளியே பார்வையை பதித்ததை கண்டதும் அவள் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக உள்ளுக்குள் இருந்து கோபம் சுறு சுறுவென பொங்கி வந்தது அவனுக்கு!

அவன் என்ன வேண்டுமென்றா செய்தான்?

என் கை பட்டதுமே இப்படி ரியாக்ட் செய்கிறாளே பிறகு நாள்தோறும் விகாரையோரம் வந்து நின்று அவனைப்பார்ப்பது அவனை சீண்டி விடுவதற்கா?

அன்றைக்கு அவன் கண்முன்னாலேயே அந்த சுதாகரின் கையை சாதாரணமாகத்தானே பற்றினாள். அவள் கையை தொடக்கூட தகுதியில்லாதவனா அவன்?

கட்டுப்பாடில்லாத கோபத்தோடு அவளை பிடித்து தன்புறம் திருப்ப ஒரு எட்டு எடுத்து வைத்தவன் வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தமும் கூடவே அம்மா வரும் சத்தமும் கேட்டு வெளியே நடந்தான்.

அவளோ பின் வாசல் வழியே கிணற்றை நோக்கி ஓடினாள்

அம்மா உள்ளே வந்து ஏற்பாடுகளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தபோது செயற்கையான ஒரு சிரிப்புடன்  உள்ளே வந்து வாழ்த்துச் சொன்னாள் மைதிலி.

அழுத முகத்தை நன்றாக தண்ணீர் விட்டு அடித்து கழுவியிருப்பாள் போலும். கண்மை முழுதும் கரைந்து போயிருந்தது. அவளை எரிக்கும் பார்வை பார்த்தவன் அதன் பிறகு அவளின் பக்கமே திரும்பவில்லை. கேக் வெட்டியதுமே “சாப்பிட்டு போடா” என்ற அம்மாவின் குரலை காதில் வாங்காமல் வராத போனை காரணம் காட்டி அலுவலகத்துக்கும் கிளம்பி போய்விட்டான்.

அன்றிலிருந்து அவள் வரும் நாட்களில் வீட்டில் இருக்காமலும் சப் காம்பஸ் வீதியையே தவிர்த்தும் அவளை தன் நினைவுகளில் இருந்து வெளியேற்ற முயன்றவனால் அன்றைய நாள் தன்னோடு மோதிய அவளது மென்மையையும் சில கணங்களே நீடித்த அவர்களின் அணைப்பின் இனிமையையும் மறக்கவே முடியவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!