WLM அத்தியாயம் 7

“அந்த நிகழ்வு பல்வேறு வகைகளில் என்னை நெகிழ்த்தி விட்டிருந்தது. இனமத வேறுபாடின்றி ஒரே போல துடித்து பதறி ஒன்றாக சேர்ந்து நிலாவையும் சிந்துவையும் காப்பாற்றி அழைத்து வந்தது, நாமெல்லாம் ஒன்று போன்ற ஒரு ஒற்றுமை உணர்வையே அந்த வாரம் முழுவதும் ஹாஸ்டலில் தோற்றுவித்திருந்தது. நாட்டுநிலவரங்களை கேளாமல்  எனக்கு நானே தடை விதித்திருந்ததும் அவனின் அருமை பெருமைகளை அந்த வாரம் முழுக்க நிலா அபிநயித்துக்கொண்டிருந்ததும் கூட இதற்கு காரணங்களாகியிருக்கலாம். ஆக மொத்தத்தில் அந்த சனிக்கிழமை சிந்தகவை பார்க்க நான்  போனபோது எனக்குள்ளே போட்டுக்கொண்டிருந்த அவனுக்கான எதிர்ப்பு வேலி ரொம்பவே பலவீனமாயிருந்தது. அன்றைக்கு அவனுடன் அப்படியெல்லாம் பேசி உரிமை எடுத்துக்கொள்வேன் என்று சத்தியமாய் நானே நினைத்திருக்கவில்லை”

“உன்னை பார்க்கவே சிரிப்பு வருதுடி.. ஹி ஹி “ வினிதா சிரித்த படியே கடந்து செல்ல எதிரே ரூமில் இருந்து வெளியே வந்த சிந்துவும் சிரிக்க ஆரம்பித்தாள். சமயத்தில் வெளியே வந்த மின்மினி மைதிலியின் முகத்தை பார்த்துப்பம்மி மீண்டும் தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள்.

“துரோகி!” என்று கொலைவெறியாய் அவளை முறைத்தவள் அனிச்சையாய் தலையை கோதி விட்டுக்கொண்டு நாக்கை துருத்திக்காண்பித்து விட்டு ஹாஸ்டல் வாசலை நோக்கிப்போனாள்.

சைக்கிளை எடுத்துக்கொண்டு டின்னர் ஹால் பக்கம் போக அங்கே ஏற்கனவே தயாராக நின்றுகொண்டிருந்த செந்தூரன் அவளைக்கண்டதுமே வாய்விட்டு சிரித்தான்.

“என்ன மைத்தி? நைட் கறையான் புற்றுக்குள் போய் தூங்கினாயா? இப்படி அரிச்சு வச்சிருக்கு!!!!” அவனது நக்கலை கேட்டு “மின்மினீ!!!” என்று பல்லைக்கடித்தாள் மைத்தி.

“நினைச்சேன்.. அவளையெல்லாம் நம்பி ஹா ஹா” அவன் இன்னும் பலமாய் சிரித்தான்

ஏய் சும்மா ஓவரா கலாய்க்காதே!!! சொல்லிட்டேன்!

“சரி சரி..ஆமாம்.. உன்னை கூட்டிப்போய் விட்டால் சரிதானே..நான் உள்ளே வர வேண்டியதில்லையே..”

“இல்ல்ல..நான் கால் பண்ணதும் அவர் வெளியே வர்றேன்னு சொன்னார்.. அதுக்கு பிறகு நான் மானேஜ் பண்ணுவேன்..நீ கிளம்பிடு..”

“ஹ்ம்ம்.. “

“உன் ப்ளான் என்ன இன்னிக்கு? நான் கஷ்டப்படுத்திட்டேனா?”

“ச்சே ச்சே..நாங்கல்லாம் டவுனுக்கு போறோம்..உன்னை விட்டுட்டு நான் ஜங்க்ஷனுக்கு வர பசங்களும் வர்றதுக்கு சரியா இருக்கும்!”

ஓகேடா..”

பிரதான வீதிக்குசென்று அதன் வழியே கொஞ்சம் தூரம் சென்றபின் விகாரைக்கு பக்கத்தில் இருக்கும் பராக்கிரம ரோட் வழியே திரும்பி இருநூறு மீட்டர் உள்ளே வர சொல்லியிருந்தான் சிந்தக.         

இருமருங்கும் நெல்லி மரங்கள் சூழ்ந்திருந்த பராக்கிரம ரோட் வழியே இருவருமாக திரும்பினர்.

கம்பீரமாக நின்ற Squecies வரவேற்புப்பலகை அவர்கள் இருவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அந்தகுட்டி வீட்டில் இருக்கும் ஒருவனது தொழிற்சாலை என்னமோ குடிசை கைத்தொழில் அளவில் தான் இருக்கும் என்று மனதுக்குள் வடிவம் பெற்றிருந்ததை எண்ணி மானசீகமாக தலையில் கொட்டினாள் மைத்தி. ஒரு தரமான பெரிய நிறுவனத்துக்குரிய சகல அம்சங்களையும் உள்ளடக்கி அது வளர்ந்து கொண்டிருப்பதை ஆங்காங்கே முளைத்துக்கொண்டிருந்த புதிய அமைப்புக்கள் அறிவித்தன. அந்தப்பகுதிக்கே அடையாளம் போல தொழிற்சாலைக்குள்ளேயும் பெரும் நெல்லிமரங்கள் தான் நின்றுகொண்டிருந்தன.   

வாசலில் இறங்கிக்கொண்டு அவனுக்கு போன் செய்ய “ஓயா அவில்லாத?”   என்றபடி இரண்டாவது ரிங்கிலேயே ஆன்சர் செய்தவன் போன் கட்டாகி சில கணங்களில் வாசலை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான்.

அலுவலக உடை எல்லாம் அவன் அணிந்துகொண்டிருக்கவில்லை. காலர் வைத்த டிஷர்ட்டை பாண்டுக்குள் இன் செய்துகொண்டிருந்தான். லேசான ஜெல்லில் பளபளத்த தலை அவனுடைய கண்ணுக்கு கான்ட்ராஸ்ட்டாய் தெரிவதை அவள் பார்த்துக்கொண்டிருந்த போதே அருகில் வந்துவிட்டவன் இருவருக்கும் வணக்கம் சொல்லி விட்டு செந்தூரனிடம் கை குலுக்கினான்.

அவனும் லேசான வெட்கமாய் கைகுலுக்க “நீயும் உள்ளே வாயேன். பாக்டரியை  சுற்றி காட்டுகிறேன்” என்று அவனுக்கு வரவேற்பு விடுத்தான் சிந்தக.

‘அவனே அவளை வாசலில் விட்டு விட்டு டவுனுக்கு போக  துடித்துக்கொண்டிருக்கிறான்..இவனானால்’ என்று எண்ணியவள் “இல்லல்ல அவன் டவுனுக்கு..” என்று ஆரம்பிக்க, அதற்குள் செந்தூரனோ “தாங்க் யூ அண்ணா. ஐ வுட் லவ் டு!” என்றபடி சைக்கிளை உள்ளேயே விட்டிருக்க முகம் சிவந்து போனாள் மைத்தி. போதாகுறைக்கு செந்தூரனோடு நடந்தபடியே அவளை திரும்பிப்பார்த்து மற்றவன் சிரித்த கேலிச்சிரிப்பும் அவள் முகச்சிவப்பை அதிகரிக்கவே செய்தன.

துரோகி செந்தூர்!

சிஸ்டமாட்டிக்கான அலுவலகம் அவனது. முன்புறம் காகித மற்றும் முகாமைத்துவ பணிகளுக்காக இவனோடு சேர்த்து நான்கு அலுவலர்கள் இருக்க அவர்களை உட்புறம் அழைத்துக்கொண்டு போனான் அவன்.

தற்போதைக்கு மாம்பழம், மாதுளை மற்றும் அன்னாசி, ஆரஞ்சு ஆகிய பழச்சாறுகளை மட்டுமே தயாரிப்பதாக சொன்னவன் பழங்கள் கும்பல் கும்பலாக மரப்பெட்டிகளில் இருந்து இறக்கி தரம் பிரிக்கப்படும் இடத்தை கடந்து  நான்கு தனித்தனி பிரிவுகளில் ஜூஸ் தயாரிப்பு இடம்பெறும் பகுதிக்கு அவர்களை அழைத்து சென்றான்.

செந்தூரன் ஆர்வமாய் கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்ததை பார்க்கும் போது இவன் நம்மை எப்போது உள்ளே கூப்பிடுவான் என்று காத்துக்கொண்டிருந்ததை போலவே  இருக்கிறதே..இது தெரியாமல் வாயை விட்டு மொக்கை வாங்கிவிட்டோமே என்று எண்ணிக்கொண்டவளுக்கு செந்தூர் எப்போது கிளம்புவான் என்றிருந்தது! பின்னே அவளுக்கு கிடைத்ததே இரண்டு மணி நேரம் ..அதில் பாதியை இவன் சாப்பிட்டால்?

ஜூஸ் தயாரிப்பு பணிகளில் பெரும்பான்மையானவை   அதற்கென்றே இருந்த பாரிய இயந்திரங்கள் மூலம் தான் நடந்து கொண்டிருந்தன. தோல் நீக்கி, விதை நீக்கி, பழக்கூழாக்கி, கெடுதலற்ற ப்ரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்பட்டு சாறாக வெளியே வரும் வரை சங்கிலித்தொடர் போல இயந்திரங்களே பணி செய்து கொண்டிருந்தன. சாறு வெளியே வரும் இடத்தில் இருந்த தொழிலாளி கீழிருந்த வட்ட வடிவ சக்கரத்தில் ஆறு பாட்டில்களை அதற்குரிய வட்ட பள்ளத்தில் நிறுத்தி வைக்க அந்த சக்கரம் சரியான நேர இடைவெளியில் இயந்திரத்தின் வாய்க்குப் போய் உரியளவு சாறு நிறைந்ததும் விலக்கிக்கொண்டு அடுத்த போத்தலை வாய்க்கு நேரே கொணர்ந்தது.

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும், அவனிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டும் வந்த செந்தூரனிடம் இருந்தும் சிந்தக தகவல்களை கறந்து கொண்டிருப்பதை கவனிக்கவே செய்தாள் மைத்தி.

“ஒரு பெரிய பன்முகமான தொழில்களை மேற்கொள்ளும் பிராண்ட் நிறுவனம் ஒன்றின் பெயர் சொன்னவன் அவர்கள் தான் ஆரம்பத்தில் எங்களை இது சம்பந்தமாக  பயிற்றுவித்து தங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட பழச்சாறுகளை நாங்கள் தயாரித்து தரும்படி எங்களுக்கு ஆர்டர் கொடுத்தார்கள்.  “  

“கிட்டத்தட்ட அந்த கம்பனி பழச்சாறுகளுக்காக அவுட் சோர்ஸ் செய்யப்பட்ட கம்பனியாக தான் நங்கள் இயங்கினோம். என்ன இயந்திரங்கள் வாங்க வேண்டும். எங்களுக்கான வங்கிக்கடன், பயிற்சிகள் சகலத்தையும் அவர்களே செய்தார்கள். தயாரிக்கும் பழச்சாறுகளை மொத்தமாக அந்த கம்பனி லோகோ போட்டு எடுத்துக்கொள்ளும். வெளியே நாங்கள் விற்கக்கூடாது. ஆனால் லாபம் முழுக்க எங்களுடையது தான். என்னுடையதைப்போல இப்படி இந்த மாவட்டத்தில் மூன்று தொழிற்சாலைகள் இருந்தன. ஒரு வருஷம் இவ்வாறு இயங்கியதன் பின்னர் அந்தக்கம்பனி ஏனோ பழச்சாறு, ஜாம் தயாரிக்கும் வேலையை நிறுத்திக்கொண்டது.

சில பல யோசனைகளுக்கு பிறகு நானும் என்னைப்போல இதே மாவட்டத்தில் அந்த கம்பனிக்கு வேலை செய்து கொண்டிருந்த என் நண்பன் ராஜீவ்வும் எங்களுக்கு கிடைத்திருந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு நாங்களே சொந்தமாக ஆரம்பித்து விட்டோம்.   கொஞ்சம் கொஞ்சமாக ஜாம் தயாரிப்பு போன்ற வேறு பல தயாரிப்புக்கள் பக்கமும் போகலாம் என்றிருக்கிறோம். அவ்வளவு தான் இந்த கம்பனி வரலாறு!”

கருப்பு ஸ்கர்ட், வெள்ளை ப்ளவுசில் பளிச்சென்றிருந்த பெண்ணொருத்தி ட்ரேயில் பழச்சாறுகளை கொணர்ந்து மூவருக்கும் புன்னகையுடன் தர அதை எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு சென்றவர்கள் ரசித்து அருந்தினர். பழச்சாறு கம்பனியிலேயே தயாரித்த பழச்சாறு சுவையாய் இருப்பது ஆச்சரியமா என்ன?

அருந்தி முடித்ததும் நன்றியுடன் செந்தூர் விடைபெற “மைதிலியை அழைத்துச்செல்வதற்காக என்று நீ அவசரமாய் டவுனில் இருந்து வரவேண்டாம். இன்றைக்கு டெலிவரிக்காக எங்கள் வண்டி சப்காம்பஸ் பக்ககமாக போக வேண்டியிருக்கிறது. மைதிலியையும் அவளுடைய சைக்கிளையும் நான் கொண்டு போய் விட்டு விடுகிறேன்” என்று சிரித்தபடியே சிந்தக சொன்னான்

உடனேயே செந்தூர் ஒரு மேலதிக தாங்க்ஸ் அண்ணாவோடு உற்சாகமாக செல்ல மைதிலி அடேய் என்று மனதுக்குள் அலறினாள். எப்படி கைகழுவி விட்டுப்போகிறான் பார்!

செந்தூரின் தலை மறைந்ததுமே அவள் புறம் திரும்பியவன் அவளிடம் கேட்ட முதலாவது கேள்வி “உன் தலைமுடியை யார் இப்படி செய்தது? என்பதுதான்!

“நம்பி மின்மினியிடம் தலையை கொடுத்தேன். முன்புறம் பிரிஞ்ஜஸ் வேட்டிவிடுவதாக சொல்லி இப்படி மங்கி கிராப்பில் கொண்டு வந்து விட்டுவிட்டாள்.” அவள் நீளமாக வருத்தப்பட்ட படி கண்ணை மறைத்து முன்னே விழுந்து கொண்டிருந்த முடியை பாண்டினால் வாரி மீண்டும் பின்னே தள்ளுவதை பார்த்து  சிரிப்பும் வந்துவிட “சரி சரி விடு. பீல் ஆகாதே” என்பதோடு அந்த விஷயத்தை விட்டுவிட்டவன் அவளை தன்னுடைய அலுவலக அறைக்குள் அழைத்துச்சென்றான்

உள்ளே தனியாக ஒரு டேபிளும் பிளாஸ்டிக் நாற்காலியும் இருந்தது.

“உனக்காக பச்சை நாற்காலி எடுத்து வைத்தேன்! உட்கார்” என்று சிரிக்காமல் சொல்லிவிட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவன் அவள் சிரிப்புடன் நாற்காலியில் அமர்ந்ததும் “என்ன கேட்கவேண்டுமோ கேள் பதில் சொல்கிறேன்” என்றான்.

தனக்கு கேட்க தேவையான அனைத்து விடயங்களையும் ஒன்று விடாமல் லிஸ்ட் போட்டு ஒரு பைலில் போட்டுக்கொண்டிருந்தவள் அவனிடம் ஒவ்வொன்றாய் கேட்க ஆரம்பித்தாள்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரங்கள் அவளுக்கு பொறுமையாகவும் தெளிவாகவும்  பதிலளித்த சிந்தக்கவும்  அந்த ப்ராஜெக்ட்டின் வடிவம் குறித்து அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.

அடிக்கடி போன்கால்களும் வந்துகொண்டே இருந்தது.

இவன் மட்டும் இதை சரியானபடி நடத்தி சரியான சந்தைப்படுத்தல் வசதிகளும் கிடைத்தால் எங்கேயோ போய்விடுவான் என்று தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை மைத்திக்கு.

“உங்கள் நிறுவன லோகோ ஒட்டிய பிளாஸ்டிக் போத்தல்களை அவுட்சோர்சிங் மூலம் வேறொரு கம்பனியில் கொடுத்து தயார் செய்து வாங்கிக்கொள்வதாக கூறினீர்களே..ஒரு போத்தலுக்கு உங்களுக்கு எவ்வளவு செலவாகும்?” மைதிலி கேட்டுக்கொண்டிருக்க

“மச்சா மே…” என்றபடி கதவைத்திறந்து கொண்டு உள்ளே வந்த இன்னொருவன் மைதிலியைக்கண்டு விழிகளை விரித்தான். சிந்தக அதை ரசிக்கவில்லை என்பது அவன் வந்தவனை உறுத்து விழித்ததிலேயே தெரிந்தது.

அவன் இதிலெல்லாம் பாதிக்கப்படுபவன் போலவே தெரியவில்லை. “யார் மச்சான் இது?” என்று அப்பாவி போல சிந்தகவிடமே கேட்டுவிட்டான்.

“மைதிலி இவன் தான் ராஜீவ். என்னுடைய பார்ட்னர் என்று சொன்னேனே. இவனும் நானும் தான் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இந்த வண்டியை ஓட்டுகிறோம். ராஜீவ்..இது மைதிலி. நான் சொன்னேனே..ப்ராஜெக்ட் செய்ய ஐந்து மாணவர்கள்  எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்று. அவர்களில் ஒருத்தி.”

ஓ..என்றவன் “இவளின் சைக்கிளையா கொண்டு போய் விடச்சொன்னாய்?” என்று சிந்தகவிடம் கேட்க

“என் சைக்கிளை எங்கே விட்டீர்கள்?” என்று அவசரமாய் கேட்டாள் மைத்தி.

“பயம் வேண்டாம். உங்கள் ஆடிட்டோரியம் பக்கத்தில் உள்ள கடையில் சொல்லி நிறுத்தி வைத்து விட்டு வந்தேன்” என்றவன் அவளின் உச்சரிப்பில் அவளை கண்டுகொண்டு “நீங்கள்..நீங்கள் தமிழ் தானே..” என்று கேட்டான்.

மைதிலிக்கு தன்னுடைய சைக்கிள் ஏன் அங்கே போனது என்ற கேள்வி மறந்து அவனின் குழந்தைத்தனம் சிரிப்பை வரவழைத்தது. “ஆமாம்” என்று புன்னகை செய்தாள்.

உடனே அவன் “வீட்டு ..எங்கே?” என்று தமிழை கொலை செய்து விட்டு தமிழில் காவியமே எழுதிவிட்டவன் போல பெருமையாய் அவளை பார்க்க வேறு செய்தான்.

“யாழ்ப்பாணம்!”

உடனே “ஓ… எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்” என்றவன் “வனக்கம், வாங்கே..போங்கே…சாப்பிடீங்களா?” என்று சரமாரியாக திறமை காட்ட ஆரம்பிக்க  இதேதடா தமிழுக்கு வந்த சோதனை என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானாள் மைதிலி.

“டேய்!!! இப்ப எதுக்கு வந்த நீ?” என்று சிந்தக அதட்ட “ஹி ஹி உன்னை பார்க்க நிஜாம்  வந்திருக்கிறார், ஹாலில் அமரவைத்தேன். சீக்கிரம் வா” என்றபடி மைதிலிக்கு ஒரு அகன்ற புன்னகையை கொடுத்துவிட்டு வெளியேறினான் ராஜீவ்,

வாயில் ஏதோ முணுமுணுத்த சிந்தகவிடம் “பார்ட்னர் என்று சொல்லிவிட்டு இப்படி மிரட்டுகிறீர்களே” என்று சிரிப்புடன் கேள்வி கேட்டாள் மைதிலி

“அவன் என் தம்பி போல.. ஸ்லீப்பிங் பார்ட்னராக இருக்கிறான். கொஞ்சம் விளையாட்டுத்தனம் அதிகம் ஆனால் வெள்ளை மனம்…நாங்கள் பேசிக்கொள்வதே இப்படித்தான்” என்று விளக்கம் தந்தபடி ஒரு பைலுடன் எழுந்தவன் “ஒரு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்திரு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனான்.

அவன் போன இரண்டாம் நிமிடம் உள்ளே வந்த அதே பெண் “கையில் ஒரு குட்டி கண்ணாடி கோப்பை  நிறைய பச்சை நிற ஜெல்லியும் ஸ்பூனும் எடுத்து வந்து கொடுத்துவிட்டு பெரிய புன்னகையோடு அகன்றாள்

சட்டென்று அவன்.. அவள்.. அதே பச்சை ஜெல்லி சம்பந்தப்பட்ட இன்னொரு நாள் அவள் நினைவில் வந்து படபடப்பூட்டியது. இவ்வளவு நேரமும் நல்லாத்தானே போனது! இப்போது இப்படி அதை அவன் நினைவு படுத்தாவிட்டால் தான் என்ன? என்று மனதுக்குள் அவனை திட்டிக்கொண்டே ஜெல்லியை காலி செய்து கொண்டிருந்தாள் அவள்

அவன் வரும் போது கையில் ஜெல்லியோடு உட்கார்ந்திருந்தால் தானே அவன் எதையாவது குறிப்பால் உணர்த்த முயல்வான்? என்று எண்ணியபடியே அவசர அவசரமாக காலி செய்தவள் எழுந்து கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தாள். அவளை வெற்றுக்கொப்பையுடன் கண்டதுமே அந்த பெண் ஓடி வந்து அதை வாங்கிச்செல்ல நல்ல பிள்ளையாக திரும்பி வந்து தன்னிடத்தில் அமர்ந்து கொண்டிருந்தாள் அவள்.

சற்று நேரம் கழித்து உள்ளே வந்தவன் “சாப்பிட்டு விட்டாயா” என்று சர்வசாதாரணமாய் கேட்டு விட்டு அவள் தலையசைத்ததும் “சரி கடைசியில் என்ன கேட்டாய்?” என்று கேள்விகளுக்கு தாவிவிட மிகவும் ஏமாற்றமாய் உணர்ந்தாள் அவள்.

ஒருவழியாக சகலமும் கேட்டு பதில் வாங்கி முடிந்ததும் நன்றியுரைத்தவளிடம் “உனக்கு இப்போதே ஹாஸ்டல் போயாக வேண்டுமா? ஏதும் வேலை இருக்கிறதா? என்று கேட்டான் சிந்தக.

“இல்லையே..இன்றைக்கு முழுவதும் நான் ப்ரீ தான். “ அவனை அவசரப்படுத்தி தொல்லை செய்யக்கூடாது என்று தான் அப்படிச்சொன்னாள் அவள்.

“செந்தூரனிடம் உன்னை கொண்டு போய் விடுவதாக சொல்லியிருந்தேன். ஆனால் லோட்கள் சேர மதியமாகும் போலிருக்கிறது. இனிமேல் அவனை திரும்ப கூப்பிடுவது பாவம்.. நீ கொஞ்சம் காத்திருக்க முடியுமா? என்று கேட்டான்.

பாவம் என்று சொல்லி  அவனை கூப்பிடும் ஐடியாவுக்கு பெரிய லாக்காக  போட்டுவிட்டு அவளிடம் கேட்டால் முடியும் என்று சொல்வதை தவிர வேறு வழி என்ன? அதை விட சைக்கிளை வேற கொண்டு போய் அங்கே விட்டுவிட்டதன் பின் செந்தூரன் வந்து தான் என்ன பிரயோஜனம்?

“உங்களுக்கு தொல்லையாக இருக்காதா நான் வேண்டுமானால் வெளியே காத்திருக்கவா? “ என்று மட்டும் கேட்டாள் மைதிலி.

“இல்லையில்லை..அது நன்றாக இருக்காது. இங்கேயே இரு” என்றவன் கணனியில் வேலை செய்து கொண்டே அவளிடம் பேச ஆரம்பித்தான்.

அவளது ஸ்டடி லீவ். பரீட்சைக்கான தயார்படுத்தல்கள்.,,அப்பா அம்மா…வீடு..யாழ்ப்பாணம்.. இங்கே பிடித்திருக்கிறதா? அவனுக்கு அவளிடம் கேட்பதற்கு அத்தனை விடயங்கள் இருந்தன.

“பத்துநாட்கள்  ஸ்டடி லீவுக்கு வீட்டுக்கு போகவில்லையா நீ?”

“எப்படி போவது? இப்போது நிலைமை சரியில்லை. தரை வழிப்பாதை பூட்டியிருப்பதால் திருகோணமலை போய் அங்கிருந்து கப்பலில் தான் யாழ்ப்பாணம் போக வேண்டும். களைப்புப்போக போக இரண்டு நாள் வர இரண்டு நாள் என்று பயணமே நான்கு நாட்களை விழுங்கி விடும்” என்று சோகமாய் சொன்னாள் அவள்.

ஆமோதிப்பாய் கேட்டுக்கொண்டான் அவன்

வண்டி வரவில்லை என்று காரணம் சொல்கிறானே.. வெளியே தானே இவனுடைய பைக் நிற்கிறது..என்னை அதில் கொண்டு போய் விட்டால் என்ன? பெரிய தூரமும் இல்லையே..வேண்டுமென்றே அவளை நிறுத்தி வைத்திருக்கிறானோ? என்று லேசாக சந்தேகமும் வந்தது மைத்திக்கு..ஆனால் அவனோ பேச்சில் அவளையும் ஈடுபடுத்தி எல்லாவற்றையும் மறக்கடித்தான்.

அவள் அங்குமிங்கும் கால்களை மாற்றி அமர்வதை கண்டுவிட்டு நான் வேண்டுமானால் “உனக்கு பேப்பரும் கலர் பென்களும் தருகிறேன்..வரைந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறாயா?” என்று அவன் சீண்ட மேஜையில் இருந்த கார்ட் ஒன்றை தூக்கி அவன் மீது வீசினாள் மைத்தி.அதை லாவகமாக பிடித்தபடி கண்களால் சிரித்தவனை நேராக நோக்கவே முடியவில்லை அவளுக்கு..

“நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?” கேட்டு விட்ட பிறகு தான் தவறாக எடுத்துக்கொள்வானோ என்று நாக்கை கடித்துக்கொண்டே கடைக்கண்ணால் அவன் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள் அவள்.

முகத்தில் திரையிட்டால் போல ஒரு கருமை வந்து விழ சில கணங்கள் அவளையே நேராகப்பார்த்துக்கொண்டிருந்தவன் அவன் அமர்ந்திருந்த மேஜையின் ஓரமாக இருந்த பைலில் இரண்டு தட்டு தட்டி “இதில் இருக்கும் பார்” என்றான்.

தயக்கத்தை ஆர்வம் வென்றுவிட எழுந்து வந்தவள் சிந்தக நிவேதன் ரத்னாயக்க என்று கருப்பு மையில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த அந்த பைலை எடுத்துக்கொண்டு மேஜையில் சாய்ந்து நின்றபடியே புரட்டினாள்.

ஆங்கிலத்தில் ஒரு டிப்ளோமா அது தவிர ஏதோ மார்க்கட்டிங் மானேஜ்மென்ட் சம்பந்தமாக இரண்டு வருட டிப்ளோமா மொத்தம் இரண்டு டிப்ளோமாக்களை வைத்திருந்தான். ஏ லெவலில் மூன்று c வாங்கியிருந்தான். அவனுக்கு படிப்பை விட விளையாட்டு profile தான் பிரகாசமாக இருந்தது.

“நான் உன்னைப்போல எல்லாம் ஏ லெவலில் அரச பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான ரிசல்ட் வாங்கவில்லை. நான் சார்ந்த ஊரில் யாரும் அதை எங்களுக்கு அழுத்தமாக பதியவைக்கவும் இல்லை. நான் வெறும் டிப்ளோமா ஹோல்டர் தான்..” வழக்கமான அழுத்தம் இல்லாமல் லேசான கரகரப்புடன் அவன் பேசியதே ஒரு மாதிரியாக இருந்தது அவளுக்கு..

“இதெல்லாம் ஒரு மாட்டரா? என் பெரிப்பா GA தெரியுமோ?அவருக்கு ஸ்றீலங்கன் யூனிவர்சிடீஸ் குவாலிட்டி என்ற பேர்ல ஸ்டடீசை இருபத்து நாலு வயசு வரை இழுக்குறதுல சம்மதம் இல்ல. அவரோட பையனை அவர் ஓலெவலுக்கு மேல ஸ்கூல்ல படிக்க வைக்காம உடனேயே ஒரு டிப்ளோமாவுல சேர்த்து விட்டார்.. அது முடிச்சதும் பிறகு அவனே சொந்தமா ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டே  ஏதோ ரெண்டு வருஷம் இன்னொரு டிப்ளோமா பண்ணினான். இப்போ அமெரிக்கா போய்ட்டான் மேல படிக்க! யூ ஆர் வேஸ்டிங் யுவர் டைம்னு எனக்கு இப்போ அட்வைஸ் பண்றான் அவன்!” படபடவென பேசியவளை புன்னகை முகத்தில் தோன்ற பார்த்துக்கொண்டே இருந்தான் அவன்.

ஆனா நீங்க கண்டிப்பா மேலே படிக்கணும்!!!

இனிமேயா?

இனிமேத்தான்! இப்படி பண்ணலாமா?

எப்படி?அதே தொனியில் திரும்பிக்கேட்டவனின் குரலில் இருந்த குறும்பை இவள் கவனிக்கவில்லை.

“நீங்க இப்போ சின்ன அளவுல பண்றீங்க! பெரிய அளவுக்கு போகும் போது M.D பெயருக்கு பின்னே ஒரு MBA ஆவது வேண்டாமா? கண்டிப்பா நீங்க MBA படிக்கணும்!! எங்கே சேரலாம்? என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள் “கொழும்பு யூனி? இல்லல்ல வேணாம். ஏற்கனவே நல்ல ப்ரோபெஷன்ல இருக்கீங்க. உங்களுக்கு காண்டாக்ட்ஸ் அண்ட் எக்ஸ்போஷர் கிடைக்கணும்னா ஒரு பாரின் MBA தான் சரி..” என்றாள்.

ஒய்..என்னிடம் டிகிரியே இல்ல..நீ மாஸ்டர்ஸ்  பத்தி கனவு காணறியா? எவன் சேர்த்துப்பான் என்னை? அவனது குரலே நம்பிக்கையின்மையை தான் காட்டியது.

ஹையோ கவர்ன்மென்ட் யூனிவர்சிட்டில தான் நூற்றியெட்டு கண்டிஷன்ஸ்..இப்போ ட்ரெண்டே மாறிப்போச்சு. ப்ரைவேட்டா நீங்க பண்ணலாம். இப்போ நீங்க ரெண்டு டிப்ளோமா வச்சிருக்கீங்க. மூணு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு.இதுவே போதும்..டிகிரி கேட்க மாட்டான்” என்று இழுத்துவிட்டு  “ஒரு நாலு லட்சம் காசு உங்களால புரட்ட முடியுமா? என்று அவனிடம்கேட்டாள்!

அவன் புரட்டிடலாம் என்றான்

சரி.. அப்படின்னா நீங்க ICBT கொழும்பு பிராஞ்சுக்கு  கால் பண்ணி UK இல்லனா USA காம்பஸ் ஆபர் பண்ற மாஸ்டர்ஸ் எதுக்காவது அப்ளை பண்ணுங்க. அவங்க உங்களை டிகிரி இல்லாததால மாஸ்டர்சுக்கு முன்னே ஒரு ஆறுமாச  பௌண்டேஷன் கோர்ஸ் பண்ண சொல்வாங்க..அது முடிச்சதும் நேரா மாஸ்டர்ஸ் பண்ணிடலாம். ஒண்ணரை வருஷம் மட்டும் தான். என்னோட பிரண்டோட அக்கா அப்படித்தான் செஞ்சாங்க. அதுக்கப்புறம் உங்க லெவலே மாறிடும்..நிறைய பிசினஸ் காண்டாக்ட்ஸ் கிடைக்கும்.. நீங்களும் கான்பிடண்டா எங்களைப்போல டிகிரி ஹோல்டர்ஸ்க்கு வேலை கொடுப்பீங்க..ஆனா அப்போல்லாம் நீங்க என்னை ஞாபகம் வச்சிருப்பீங்களோ மாட்டீங்களோ?” என்று குறும்பாய் சிரித்து இமைகளை உயர்த்தினாள் மைதிலி.

கடகடவென சிரித்து விட்டவன் “உனக்கு எல்லாமே ஈசி தானா? இதெல்லாம் சாத்தியமா? என்று சிந்திக்க மாட்டாயா?” என்று கேட்டான்.

“ப்ச் நம்பலைல்ல? உங்களுக்கு பணம் புரட்ட முடியும் தானே..இப்போவே ICBTகு கால் பண்ணி கேட்டுடுவோம்!”

ஏய் ஏய்..நானே மெதுவா விசாரிக்கிறேன்.

அதெல்லாம் முடியாது..இப்போ சும்மா அரட்டை தானே அடிச்சிட்டு இருக்கீங்க..நெட்ல தேடுங்க

அவன் மைத்தி.. என்று ஆரம்பிக்க

பொறுமையை கைவிட்டு மானிட்டரை தன் புறம் திருப்பியவள் ICBT கொழும்பு பிரான்ச் நம்பரை தேடி எடுத்து தானே தொலைபேசியில் அழைத்தாள். ஸ்பீக்கர் மோடில்  போட்டு விட்டு இவனது கல்வித்தகுதி அனுபவத்தை சொல்லி MBA படிக்கும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்க அவள் சொன்னதுபோலவே அவர்களும் ஜூன் மாதம் ஆரம்பிக்கும் பவுண்டேஷன் கோர்ஸில் வந்து சேர்ந்து கொள்ள  சொல்லி விட சிந்தக அயர்ந்து தான் போனான்.

அழைப்பை கட் செய்து விட்டு “என்ன போய் சேர்றீங்களா?” என்ற படி மீண்டும் அவள் இமைகளால் அவனை சவாலுக்கழைத்தாள்

“உன் பிரன்ட் மினிக்கு தாங்க்ஸ் சொல்லிடு.. நீ தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது நெத்தில முடியும் சேர்ந்து டான்ஸ் ஆடுறது போலவே இருக்கு!” என்றான் அவன் சம்பந்தமே இல்லாமல் அவளை ரசனையாய் பார்த்தபடியே.

லேசாய் கன்னம் சிவந்தவள் ஏற்கனவே அவசரப்பட்டு அவன் படிப்பு விஷயத்தில் மூக்கை நுழைத்து விட்டோமோ என்று சிந்தனையில் இருந்ததால் அதைப்பற்றி பேசாமல் “உங்க வண்டி எப்போ வரும்?” என்று பேச்சை மாற்றினாள்

“ஏன் இங்கே இருப்பது உனக்கு கஷ்டமாக இருக்கிறதா?”

அப்படியில்லை..

பிறகு ஏன் கேட்கிறாய்?

இல்லை உங்கள் வேலையை நான் டிஸ்டர்ப் பண்ணிக்கொண்டிருக்கிறேனே..

அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் கேட்கவேண்டும் என்று நினைத்தேன். நீ பேசறதை பார்க்கும் போது நீ ஜெயிக்க முடியாத கேசே இருக்காதே. நீ ஏன் உங்க அப்பாவை பின் பற்றி லாயர் ஆக ஆசைப்படவில்லை?” என்று  என்று பேச்சை மாற்றினான்.

“ஐயோ யார் படவில்லை? எனக்கு எங்க அப்பா முன்னாடி நின்னு யுவர் ஆனர் என்று வாதாட எவ்வளவு ஆசை தெரியுமா? இப்போது பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லி என் அம்மா தான் சதி செய்து என் ஆசையை குழப்பி விட்டார். “

சிரித்துக்கொண்டு தலையசைத்தவன் “சரி..சாப்பிடலாமா ? உனக்கு பசிக்கவில்லையா? ராஜிவ் உனக்கும் சேர்த்து தான் சாப்பாடு வாங்கி வைத்திருப்பான்”

ஐயோ நான் ஹாஸ்டல் போய்..

அதெல்லாம் இல்லை நீ வருகிறாய் என்று அவன் எழுந்து வெளியே செல்ல பின்னாலேயே ஓடினாள் அவள்.

அன்று மதியம் இருவரோடும் சேர்ந்து உணவுண்டு ஒருவழியாக சிந்தக்க அவளை ஹாஸ்டலுக்கு அழைத்து செல்கிறேன் என்று மனமிரங்கியபோது மணி மூன்று ஆகியிருந்தது.

அவனோடு வெளியே வந்தவள் அவன் பைக்கை நோக்கிப்போக விழித்தாள். இந்த பைக் காலையில் இருந்தே இங்கே தானே இருந்தது! அவன் முக்கியமான வேலை எதுவும் செய்தது போலவும் தெரியவில்லை. வெட்டி அரட்டை அடித்த நேரம் அவளை அப்போவே கொண்டு போய் விட்டிருக்கலாமே..வேண்டுமென்றே அவளை அங்கே தன்னோடு வைத்துக்கொண்டிருந்திருக்கிறான்!

ஆனால் அந்த சந்தேகத்தை அவள் அவனிடம் கேட்கவில்லை, அவனும் அவளிடம் எதையும் சொல்லவும் இல்லை.

பராக்கிரம ரோடில் வலப்புறமாக சென்று மெயின் ரோடில் ஏற வேண்டிய வண்டி இடப்புறமாக சென்று கொண்டிருந்ததை கவனித்தவள் அவனிடம் நாம் எதிர்ப்பக்கமல்லவா போகவேண்டும் என்று விசாரித்தாள்

ஷ் என்று வாயில் கைவைத்து காண்பித்தவன் அவளுடைய குழப்பமுகத்தை கண்ணாடியில் பார்த்து முறுவலித்தபடியே வண்டியை விரட்டினான். சில நிமிஷங்களில் வண்டி ஒரு மணல் பாதையில் திரும்பி சுற்றிலும் மதில் போடப்பட்டிருந்த ஒரு இடத்தின் கேட்டுக்கு முன்னால் போய் நின்றது. லேசான படபடப்புடன் ஆளே இல்லாத அந்த சுற்றுப்புறத்தை பயத்துடன் பார்த்தவள் அவனிடம் அதைப்பற்றி கேட்டால் என்னை சந்தேகப்படுகிறாயா என்று திட்டிவிடுவானோ என்ற யோசனையோடு கேட்டை விரியத்திறந்து புன்னகைத்த அவனை பின் பற்றி உள்ளே அடியெடுத்து வைத்தாள்.

உள்ளே அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது!

ஒரு மீற்றர் இடைவெளியில் வரிசையாய் நடப்பட்ட குட்டை மாதுளை மரங்கள் உடல் முழுதும் சிவப்புக்கனிகளை தாங்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு ஏக்கருக்கும் மேலான அந்த நிலத்தில் காட்சி கொடுத்தன. தூவல் பாசன முறையில் ஆங்காங்கே இருந்த ஸ்ப்ரிங்க்லர்கள் அவற்றுக்கு சதா நீர்த்துளிகளை விசிறிக்கொண்டே இருக்க ஈரமாய் பளபளத்த பசிய இலைகளுக்கு நடுவில் செக்கச்சிவந்த பசிய மாதுளைகள் கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் அச்சுப்பிசகாமல் ஒரு மீட்டர் தூர இடைவெளியில் பார்க்கவே கொள்ளை அழகாக இருந்தது.

“இது என்னுடைய நிலம் தான். என் அம்மாவழி தாத்தா கொடுத்தது. மாதுளை ஜூசுக்கு தேவையான பழங்களை இங்கே நானே பயிரிட்டு வளர்ந்து எடுத்துக்கொள்கிறேன்” என்று அவன் மேலும் விபரம் சொன்னான்.

லேசான மணல் தன்மையுடன் இருந்த மண்ணில் இத்தனை வளமா என்ற ஆச்சர்யத்துடனே கையில் வைத்திருந்த குட்டி டிஜிட்டல் காமராவால் தோட்டத்தை படங்களாக பதித்துக்கொண்டவள் பையை முதுகில் போட்டுக்கொண்டு மாதுளை இலைகளை தடவியபடி நீள நடக்க ஆரம்பித்தாள்.

கொஞ்சம் தூரத்தில் பழங்கள் சமீபத்தில் பறிக்கப்பட்டிருக்க வேண்டும் உடலெங்கும் பூக்களை மட்டும் இறைத்துக்கொண்டு மரங்கள் நின்றது அவள் கண்ணை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டது.

காமரா கொண்ட மொபைல் வாங்கிக்கொடுத்தால் அவளது படிப்புக்கேட்டுவிடும் என்று வெறும் ரேடியோ கூட இல்லாத நோக்கியா வெர்ஷனை வாங்கிக்கொடுத்த அம்மாவை மனதுக்குள் சபித்த படி டிஜிட்டல் காமராவை திருப்பி தன் முகத்தை பூக்களோடு சேர்த்து அவள் படம் பிடிக்க முயன்றாள்.

க்ளிக்கிய படத்தை மீண்டும் பார்த்துவிட்டு முகம் பெரிதாக தெரிவதைகண்டு அலுப்புடன் நிமிர்ந்தவளின் பார்வையில் சிந்தகவின் சோனி எரிக்சன் மொபைல் அவளையே பார்ப்பது விழுந்தது.

  இவன் நம்மை படம் எடுக்கிறானா? என்று படபடப்பானாள் அவள் . கேட்டுவிடலாம் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனை பார்க்க அவனோ எதுவுமே நடவாததை போல அவளை நெருங்கினான்.

கேள் கேட்டு விடு..என்னை புகைப்படம் எடுத்தாயா என்று கேள் என்று மூளை உந்த நாக்கோ சதி செய்து மேலண்ணத்தில் போய் ஒட்டிக்கொண்டது.

என்னிடம் கேட்டால் நான் போட்டோ எடுத்து தர மாட்டேனா? என்று கடிந்து கொண்டவன் அவள் கையில் இருந்த காமராவை எடுத்தான். போ போய் நில்

மறுக்க முடியாமல் போய் பூக்களின் அருகில் நின்று புன்னகைத்தவளுக்கு அவன் தன்னை கமராக்கண்கள் வழியே பார்க்கிறான் என்ற எண்ணமே இயல்பாக நிற்க விடாமல் செய்தது.

அவள் தடுமாறுவதை உணர்ந்தோ என்னவோ பிறகு அவனே “அங்கே நில் இங்கே இப்படி நில்” என்று அவளை டைரக்ட் செய்ய ஆரம்பித்தான்.

இங்கில்லை..கொஞ்சம் பின்னே ஆம் அப்படித்தான்!!

இல்லை நான் இந்த இரண்டுக்கும் நடுவில் நின்றுகொள்கிறேனே என்றபடி நடுவில் இருந்த வரப்பு போன்ற அமைப்பில் கால் வைத்தவள் அது பொறிந்து விழும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொதேர் என்று நடுவில் போய் விழுந்து விட்டாள்.

மின்னல் வேகத்தில் அருகில் வந்து விட்டவன் கவனமாக பார்த்து கால்வைப்பதில்லையா என்று கடிந்தபடி அவளின் தோள்களைப்பிடித்து தூக்கி நிறுத்தினான்.

தனிமையும் சட்டென்று நிகழ்ந்து விட்ட நெருக்கமும் இருவருக்குமே ஒரு மயக்கத்தை கொடுக்க ஆரம்பித்தது. இடது தோள் மீதிருந்த கை அப்படியே இருக்க அவளுடைய கண்களை மறைத்துக்கொண்டிருந்த அந்த வெட்டப்பட்ட முடியை வலதுகை விரல்களால் நெற்றியில் வளைவாக ஒதுக்கி விட்டான் அவன்.

பிறகு “அடுத்த மாசம் எக்ஸாம்..இனிமேல் நன்றாகப்படி. தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதே..உன் பரீட்சை முடிந்ததும் நான் உன்னிடம் நிறைய பேச வேண்டும். புரிந்ததா? ப்ராஜெக்ட் விஷயமாக உனக்கேதும் தேவை என்றால் தயங்காமல் கேள்” என்று மட்டும் சொல்லி விட்டு வேகமாய் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தான் சிந்தக.

வழியெங்கும் பைக்கில் இருவருமே பேசிக்கொள்ளவில்லை.

அவளை கடைக்கு முன்னே இறக்கி விட்டவன் அவள் சைக்கிளை எடுத்து வர கொண்டு வந்திருந்த இரண்டு பைகளையும் அவளிடம் கொடுத்தான். தடிமனாக இருந்த பையை காட்டி இது உனக்கு..என்றவன் மற்றதை செந்தூரனிடம் கொடுத்துவிடு” என்றான்.

நன்றி சொல்லி வாங்கிக்கொண்டவள் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் முந்திக்கொண்டு அவன் செல்ல அவனுடைய பைக் கண்ணாடியில் தன் முகம் தெரிவதை கண்டு பாதையை பார்ப்பது போல நேராகவே பார்த்துக்கொண்டு ஓட்ட ஆரம்பித்தாள் மைதிலி. ஹாஸ்டல் கேட்டுக்குள் நுழைந்து திரும்பிப்பார்த்தாள். அன்றைக்கு போலவே தலையசைத்து விட்டு பைக்கை திருப்பிக்கொண்டு கண்களுக்கு மறைய ஆரம்பித்தான் சிந்தக.

பையில் நிறைய மாதுளம்பழங்களும் இரண்டு பாட்டில் ஆரஞ்சு ஜூசும் இருந்தது. அதை நண்பிகளோடு பகிர்ந்தவள் சனியிரவு ஆதலால் வெறுமையாக இருந்த அறையில் இரவிரவாய் மாதுளைத்தோட்ட பின்னணியில் கண்ணில் மயக்கமும் வெட்கமுமாய் நிற்கும் தன் புகைப்படங்களையே மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள்

அவற்றில் ஒன்றில் கூட அவன் இல்லை தான். ஆனால் அவற்றை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் அவன் மட்டும் தான் நினைவுக்கு வந்து கொண்டிருந்தான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *