Responsive Menu
Add more content here...

WLM அத்தியாயம் 8

“அவள் பாக்டரிக்கு வந்த நாளன்று  தான் என் வாழ்க்கை இனி முன் போல் இருக்கப்போவதில்லை என்று உணர்ந்து கொண்டேன்.  அவள் எனை விட்டுப்போன பின்னர் என் வாழ்க்கையில் நான் செய்த அத்தனை பாய்ச்சல்களுக்கும் அத்திபாரமிட்டது அந்த நாள் தான். அவள் ஆசையாய் உலாவிய என் மாதுளை நிலம் தான் அவள் மூலை முடுக்குகளெல்லாம் உலவித்திரிந்த என் வீட்டை விட அவளை அதிகம் நினைவுறுத்திக்கொண்டிருந்தது.”

அவள் தன் கண்ணை விட்டு மறைந்ததுமே இந்த இனிமை அவனுக்கு நிலைக்குமா? என்ற பயம் சிந்தக்கவுக்குள் முளை விட்டு விட்டது.

இத்தனை நாளும்  அவள் தன்னுடைய தகுதியை குறைவாக நினைக்கிறாள் என்ற எண்ணத்தில் யார் மீது என்று தெரியாமல் ஒரு கோபத்துடனேயே சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு அவள் தயங்கியது அவனது கல்வித்தகுதிகளை எண்ணி அல்ல என்று இன்று தெளிவாகவே புரிந்தது.

அவள் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதைவிட அவைகள் எல்லாம் குறைகளாகவே அவளுக்கு தெரியவில்லை. அவைகளையெல்லாம் சற்றே முயன்றால் கை சொடுக்கும் நேரத்தில் நிவிர்த்தி செய்து விடலாம் என்பதை அவள் உறுதியாக நம்பினாள்.

அப்படியானால் அவள் அன்றைக்கு அழுதது அவனை விட்டு விலகியோடியது எல்லாமே அவனும் அவளும் வேறு வேறு இனம் என்பதாலா? அப்படித்தான் என்று அனுமானம் கிடைத்ததும் அவனுக்கு மனப்பாரம் கொஞ்சம் குறைந்தது. காரணம் அவன் என்றைக்கும் துவேஷம் கொண்டவன் அல்ல.

மனிதர்கள் கொள்கைகளுக்கும் நிலத்துக்கும் மோதிக்கொண்டு உயிர்விடுவதில் அவனுக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை. யுத்தம் தொடர்பான செய்திகளை கூட நாட்டின் குடிமகனாய் பிறந்து விட்ட தலைவிதி என்று தெரிந்து கொள்வதை தவிர கொஞ்சம் ஆழமான தேடல் உள்ளவன் ஆதலால் சாதாரண மக்களை இலகுவில் சென்றடையாத செய்திகளை தெரிந்து கொண்டு நடுநிலையில் சிந்திக்கவும் அவனுக்கு முடியும்.

அவன் இப்படித்தான் என்று அவளுக்கு புரியவைத்தால் அவள் அவனை ஏற்றுக்கொண்டு விடுவாள் தானே.. குறிப்பிட்ட இனத்தில் பிறந்து விட்ட  காரணத்த்துக்காக மட்டும் அவனை ஒதுக்கும் பொல்லா மனம் கொண்டவள் அவள் அல்ல என்று அவன் நம்பினான். ஆனாலும் அவர்கள் தாண்ட வேண்டிய எதிர்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன என்பது அவனுக்கு தெரியும். ஆனால் மைத்தியின் துணை அவனோடு கூடவே இருக்குமானால் அவனால் எதையும் ஜெயித்து விட முடியாதா?

இன்றைக்கு காலையில் அவனுடைய எதிர்காலம் பற்றி மடமடவென்று அவள் திட்டமிட்டதை கண்டு அவன் அயர்ந்து தான் போய் விட்டான். தொழிலில் எக்கச்சக்கம் கனவுகளும் ஆசைகளும் வானளாவி உள்ளது தான் ஆனால் தன் படிப்பு சம்பந்தமாய் அவன் அதிகமாய் சிந்தித்தது இல்லை. தன் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் சப்காம்பசுக்கு வருடாவருடம் வந்து போகும் மாணவர்களை பார்க்கும் போது மனதின் மூலையில் அவனுக்கும் ஓர் ஆசை இருக்கத்தான் செய்தது. என்றாவது எப்படியாவது ஒரு பட்டத்தை வாங்கி விடவேண்டும். பட்டதாரி ஆகவேண்டும். அவனது ஆகக்கூடிய கனவே இப்படித்தான் இருந்தது. அதை தாண்டி அவன் ஆசைப்பட்டதில்லை

ஆனால் இன்று அவள் எடுத்த எடுப்பிலேயே MBA வுக்கு போனதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முதலில் சிரிப்பு வந்தது. பிறகு மிகத்தெளிவாக அவள் பேசிய விதத்தில் ஒரு வேளை முடியுமோ என்று மனதின் ஓரத்தில் எதிர்பார்ப்பு வந்து அதுவாகவே ஒட்டிக்கொண்டது.

பேச்சோடு நில்லாமல் மடமடவென்று போன் போட்டு அவன் முன்னேயே அவள் தெளிவு படுத்த அவனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. இவ்வளவு வருஷமாக ஏற்பட்ட இடைவெளியை ஜஸ்ட் லைக் தட் கடந்து விட முடியுமா? அவனிடம் இருக்கும் தகுதிகளோடு ஆறுமாசத்துக்கு ஒரு பவுண்டேஷன் கோர்ஸ் மற்றும் கொஞ்சம் பணம்…அவர்களுக்கு அது இப்போதைக்கு கொஞ்சமல்ல தான். ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கும் போது அவன் கைநழுவ விடும் முட்டாள் அல்லவே.. மொத்தமாக ஒரு இரண்டு வருடங்களை செலவழிக்க வேண்டியிருக்கும்!

இப்போதைக்கு தொழிலில் அவர்களுக்கு ஏற்படும் தேக்கம் மார்க்கட்டிங்கினால் தான். எங்கே போனாலும் ஊரை கேட்டதும் ஒரு படிக்காத மேதையாக தான் உடனே அவன் கணிக்கப்படுவான். எங்காவது மீட்டிங்களுக்கு போக வேண்டி நேரிட்டாலும் மெத்த படித்தவர்களுக்கு முன்னால் நாம் டை, கோட் போட்டிருக்க ஒருகணம் தாழ்வு மனப்பான்மை வந்து போவது உண்மைதான். படிக்காதவர்கள் ,கிராமத்தான்கள், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாது என்ற பொதுவான  கருத்தியலே அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பிரகாசமான வாய்ப்புக்களைஎல்லாம் தடுத்து விடுவதும் உண்மையே..

அவனுக்கு மட்டும் அந்த இடைவெளியை கடக்க முடிந்தால் அவன் சகலரையும் ஊதித்தள்ளி விடுவான். தன்னுடைய திறமையிலும் கட்டளை ஆளுமையிலும் அவனுக்கு ரொம்பவே நம்பிக்கை இருந்தது. தலைநகரில் ஒரு பிரபலமான நிறுவனத்தில் பட்டப்பின் படிப்புக்கான வாய்ப்பு நிச்சயம் அந்த இடைவெளியை கடக்க வைக்கும்! அவனுக்கு தன்னம்பிக்கை தரும். அதை விட அதை இப்போவே உடனேயே ஆரம்பிக்க வேண்டும்  என்று உந்தித்தள்ளியவள் மைதிலி தான். அவளுக்கு மூன்று வருடங்களில் படிப்பு முடியும் போது அவள் தைரியமாக அவளுடைய அப்பாவிடம் இவன் அப்படியான தகுதிகளை கொண்டவன் நல்லவன் என்று காட்டி தைரியமாய் பேசவேண்டாமா? அவள் படித்து முடிக்கும் முன் இன பேதத்தையே மறந்து பெண்ணை தர வைக்கும் அளவுக்கு நாம் முன்னேறியாகவேண்டும் என்று அவனுக்குள் ஒரு வெறியே முளைத்திருந்தது.

பைக்கை பார்க் செய்து விட்டு செருப்பை கழற்றி அதற்குரிய இடத்தில் கொடுத்தவன் வாசலிலேயே விற்றுக்கொண்டிருந்த தாமரைப்பூக்கள் இரண்டை வாங்கிக்கொண்டு புத்தபிரானின் சன்னிதானத்துக்குள் நடந்தான்.

நிரமலமாய் சயனித்துக்கொண்டிருந்த புத்த பிரானின் காலடியில் தாமரைப்பூக்களை வைத்தவன் ஒரு நிமிடம் அமைதி கேட்டு விழிமூடி நின்று விட்டு திரும்பி நடந்தான். அவர்களின் வழிபாட்டுமுறையில் அவர்கள் புத்தபிரானை ஆசிரியராகத்தான் கொள்வார்கள். கோரிக்கைகள் எல்லாம் அவரிடம் வைப்பதில்லை. நல்லதை செய்து தர்ம வழியில் நடத்தலையே பௌத்தம் போதிக்கிறது.

வெளியே சுட்டி விளக்குகளை மக்கள் அதற்குரிய தட்டில் எண்ணிலடங்காமல் வைத்து நிரப்பியிருந்தார்கள். சில எரிந்து கொண்டிருக்க சில அணைந்து போய் புதிதாய் எரிப்பவர்களுக்கு இடநெருக்கடியை ஏற்படுத்தியபடி கிடந்தன. சிந்தக எரிந்து கொண்டிருப்பவைகளை மட்டும் விட்டு விட்டு எரியாதவைகளை பொறுக்கி எடுக்க இன்னொரு இளைஞன் முன்வந்து அந்த தட்டை ஒரு துடைப்பான் கொண்டு துடைத்தான்.

ஒவ்வொன்றாக அந்த சுட்டிகளில் இருந்த திரிகளை எடுத்து வீசி விட்டு அவற்றை கொண்டு போய் மக்கள் சுட்டிகளை வாங்கும் இடத்துக்கு பொறுப்பாக இருந்த இளம்பிக்குவிடம் கொடுத்து விட்டு வந்து மதிலோரம் அமர்ந்து கொண்டான் சிந்தக

அந்த சூழலின் அமைதியே அவனுக்கு அவன் செய்ய வேண்டியதை சொன்னது போலிருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டை நோக்கி வண்டியோட்ட ஆரம்பித்திருந்தான் அவன்.

அன்று இரவு வீட்டில் அனைவரும் டிவிக்கு முன்னே அமர்ந்திருந்தார்கள். வழக்கம் போலவே அரைமணி நேர செய்திகளில் இருபது நிமிடத்தை யுத்த செய்திகளே விழுங்கிக்கொண்டிருக்க சானல்கள் தாங்கள் சார்ந்த பக்கத்தின் சார்பாக செய்திகளை வழங்கிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த சானலும் வன்னிப்பகுதியின் முக்கால்வாசி நிலம் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் இன்னும் கால்பகுதியையே கைப்பற்ற வேண்டியுள்ளதாகவும் பெருமையோடு அறிவித்துக்கொண்டிருந்தது.

சீக்கிரம் கைப்பற்றி முடிக்கட்டும்.அதன் பிறகாவது அமைதிப்படுவார்களா? என்று எரிச்சலுடன் எண்ணிக்கொண்டவன் தந்தையிடம் தான் படிக்கப்போகும் விபரம் சொல்லி அதற்காக செய்ய இருப்பதையும் சொல்ல அவர் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்.

“படிக்கிறது நல்ல விஷயம் தான் தம்பி. ஆனால் அந்த மாதுளை நிலம், உன்னுடைய ஒரே சொத்து. உன்னுடைய உழைப்பில் வளர்ந்து நிற்பது. அதைப்போய் அடமானம் வைத்தாக வேண்டுமா? வேண்டுமானால் எங்கள் வீட்டை அடமானம் வைக்கலாம்.” என்று அவர் சொல்ல ஒரேயடியாய் மறுத்தான் அவன்.

“குடியிருக்கும் வீடு அடமானத்தில் இருக்க வேண்டாம் அப்பா.. மிகப்பிடித்த ஒன்றுக்கு நெருக்குதல் வந்தால் தான் ஜெயிக்கும் வெறி வரும். அதையே அடமானம் வைக்கிறேன். கொஞ்சம் கட்டுப்பாடாக இருந்தால் ஒரு வருடத்திலேயே மீட்டு விடக்கூடியது தான் “ அவன் நம்பிக்கையோடு சொன்னதை அவர்கள் மறுத்துப்பேசத்துணியவில்லை

எல்லாம் முடிவானதும் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பாய்ச்சல் உண்டானதைப்போன்ற உணர்வோடு தன்னுடை மொபைலில் புகைப்படமாய் அடங்கியிருந்தவளை பார்த்து ஆசையாய் சிரித்தான். நெற்றியில் குதறப்பட்டு கிடந்த முடி மொத்தமாய் கண்களை மறைத்திருக்க மாதுளம் பூக்கொப்பினை தன் முகத்தினருகே இழுத்து வைத்துக்கொண்டு காமராவை திருப்பி தன்னையே அவள் புகைப்படமெடுக்க ஆயத்தமானபோது அவளது முகத்தையும் பூக்களையும் மட்டும் பச்சைப்பின்னணியில் அவன் காமராவுக்குள் சிறைப்பிடித்திருந்தான்.

இதை கழுவி பிரேம் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்..என்னோடேயே! இதைப்போலவே அவளையும்..

இந்த போட்டோவை காண்பித்து இதே போல அவளின் கண் முன்னாலும் அதற்கு முத்தமிட்டால் காலையில் கன்னம் சிவந்ததை போலவே சிவப்பாளா? சிரிப்புடன் மொபைலை இதழ்களில் ஒற்றி எடுத்தவன் தலையை உதறினான்.

இல்லை இல்லை..கொஞ்ச நாட்கள் அவளை குழப்பக்கூடாது. பரீட்சை முடிந்த கையேடு மனதை உடைத்து சொல்லிவிட்டுத்தான் மறுவேலையே…

ஆனாலும் மனம் கேட்காமல் அவளுக்கு அனுப்பி வைத்த மெசேஜுக்கு பதில் நீண்டநேரமாய் பதில் வராமலே இருக்க அவன் தூக்கம் வராமல் மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தான்.

@@@

அதே நேரம் மைத்தி ஹாஸ்டலில் டின்னர் ஹாலுக்குள் தன் பட்டாளத்தோடு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

அன்றைய நாள் நிகவுகளில் மனதை திளைக்க வைத்துக்கொண்டு பேச்சின்றி சாப்பிட்டுக்கொண்டிருந்தவளை மற்றவர்கள் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.

எதிரே டிவி அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென ஓவென்ற சத்தம் காதைப்பிளக்க பலர் டிவியை நோக்கி எழுந்து ஓட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் இவர்கள்.

அங்கே வன்னியில் ஏதோ ஓர் ஊர் கைப்பற்றப்பட்ட வெற்றிச்செய்தி ஆரவாரமாக அறிவிக்கபட்டுக்கொண்டிருக்க மாறி மாறி கைலாகு கொடுத்த வண்ணம் அவர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தனர்.

இவர்கள் யாரின் முகத்திலும் ஈயாடவில்லை..

அங்கிருந்து உடனே எழுந்து வந்தது போலவும் தோன்றக்கூடாது. அதே நேரம் அங்கிருக்கவும் பிடிக்காமல் மெல்ல நழுவி வெளியே வந்ததும் தான் மூச்சே வந்தது.

‘“தேவையில்லாம வாயை விடாதீங்க மக்களே” நிலா அறிவுறுத்தினாள்

“அவங்க நாடு ஜெயிக்கும் போது அவங்க சந்தோஷப்படறாங்க. அது இயல்பு தானே..அப்படி எடுத்துக்கொண்டு விடுங்க.”

“நமக்கும் இது தானே நாடு. அப்போ நாம ஏன் சந்தோஷப்படல?”

“அது தான் அவங்க நம்மை துரோகிங்கறாங்க”

உக்கும்..

“இந்த கேள்விக்கு மட்டும் பதில் தெரிந்திருந்தால் இந்த பிரச்சனைகள் எதுவுமே வந்திருக்காது!” கிண்டலாய் சொன்னாள் சுமி.

மைதிலி எதுவுமே பேசவில்லை.. தன்னை சுற்றி கேட்ட குரல்களில் தொலைந்திருந்தவளுக்கு தன் மனதுக்குள்ளேயும் வெளியேயும் நடக்கும் போராட்டத்தினை யாருடனாவது பகிர்ந்து கொள்ளாவிட்டால் இனிமேல் தாங்க முடியாது என்று தோன்றிற்று

சுமியின் தோளில் தட்டினாள் அவள்.

என்னடி?

நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்?

சொல்லேண்டி?

இல்ல..சீரியசான விஷயம்..கோவில் பக்கம் போலாமா? அவள் குரலை தழைக்க அவளை ஆச்சர்யமாய் பார்த்தபடி “இருட்டுடி..” என்று தயங்கினாள் சுமி.

“அதான் நிலா இருக்கே வா!”

சுமியை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு வந்தவள் எடுத்த எடுப்பிலேயே “நான் காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்று அவளிடம் போட்டுடைத்தாள்.

அதிர்ந்து வாயைப்பிளந்ததவள் யாரை என்று கேட்டாள்

சிந்தக்க!

அவனா? என்னடி சொல்ற? விளையாடறியா?

நிஜமாக தான் சொல்றேன்..

அவன் உன்கிட்ட சொன்னானா?

இல்ல..நான் லவ் பண்றேன்..அவரும் என்னை லவ் பண்றார்னு எனக்கு தெரியும். ஆனா என்னால….என்று ஆரம்பித்து அவள் என்ன சொல்லியிருப்பாளோ 

அவளை இடைமறித்து “மைத்தி நீயாடி இது? என்னால நம்பவே முடியல.. “ என்று சட்டென கலங்கிய விழிகளோடு சுமி சொல்ல அவள் விக்கித்து போனாள்

ஏன் அழுகிறாள் இவள்? நிச்சயம் இவளிடம் ஒரு எதிர்ப்பை எதிரார்த்திருந்தாள் தான். ஆனால் ஆழமான தன் காதல் பற்றி சொன்னால் புரிந்து கொண்டு தனக்கேதும் வழி சொல்வாள் என்பதை தான் அவள் எதிர்பார்த்தது! இப்படி கண்கலங்குவதை அல்ல!

“படித்து முடித்து விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடிய ஏதாவது வேலை தான் தேடிக்கொள்வேன் என்று அடிக்கடி சொல்வாயே..பாதிப்பை கொடுத்தவர்களில் ஒருவனையே வாழ்க்கைதுணையாய் நினைக்க எப்படி முடிந்தது?”

“என்னடி..அவன் சிங்களவன் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக என்னால எப்படி லவ் பண்ணாமலிருக்க முடியும்? அவன் நல்லவன்டி..துவேசி இல்ல” மைதிலிக்கும் கண் கலங்கிவிட்டது.

“துவேசி இல்லைத்தான். நல்லவன் தான் ..ஆனால் இப்போது அவன் வீட்டுக்கு போனாலும் அவனும் இதே பிரேக்கிங் நியூசை கேட்டு இவர்களைப்போலவே சந்தொஷப்பட்டுக்கொண்டிருப்பான். தவறு அவன் மீது இல்லைடி.. அடிப்படையிலேயே நாம் வேறு வேறு..இதையெல்லாம் நான் உனக்கு சொல்லவேண்டி இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! ப்ளீஸ்டி இது உனக்கு வேணாம்!”

“என்னால எதுலயும் கன்சன்ரேட் பண்ணவே முடியலடி..அவன் ஞாபகமாவே இருக்கு..அவன் மட்டும் இல்லையென்றால் நான் லைப்பில் இப்படியே இருந்து விடுவேன்.”

“ஒரு அடி அடித்தால் போய் உருண்டு விழுவாய்..எனக்கு நல்லா வருது வாயில! ஸ்கூல்ல பிருந்தனை நீ  சைட் அடிச்சுட்டு இப்படி தானே சொல்லிட்டு இருந்த..ரெண்டு நாளிலேயே மறந்து போகல? வேணாம்னு நினைச்சா நம்மால அதை ஒதுக்க முடியும் டி..”

“லூசு தனமா பேசாதே..பிருந்தன்லாம் விளையாட்டுக்கு பண்ணது..இது அப்படியில்லை..உனக்கு எப்படி சொல்லி புரியவைக்குறதுன்னே தெரியல..”

“ரொம்ப பேசாதேடி..எனக்கு புரியவைக்கறத எப்படி உங்கப்பாட்ட போய் சொல்வ? சேனபுர கிராமத்து படிக்காத சிங்களவன் ஒருத்தனை நான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னா? அறிவிருக்காடி..ஒத்துப்பாங்களா உங்க வீட்ல? எல்லாமே பிரச்சனையாயில்ல இருக்கு உங்க ரெண்டு பேர் நடுவுல?”

“இது என் வாழ்க்கைடி.. நான் எப்படியாவது அவரையும் மேலே கொண்டு வருவேன்….”

“நடக்கறதை பார்த்தா கொஞ்சம் கூட மனசுல பீல் வரவேயில்லையா? இவ்வளவு நடந்த பிறகும் உன்னை மாதிரி ஆளுங்க அவனுங்க பின்னாலேயே எப்படி போறீங்க..? அவனா பண்றான்னு கேட்காதே..அவனுங்க எல்லாருமே ஒண்ணுதான்! ஒண்ணு மட்டும் சொல்றேண்டி! நீ மட்டும் அவன் கூட சீரியஸ் ஆனேன்னு வை! லைப்ல என்னோடான பிரண்ட்ஷிப் உனக்கு இல்லவே இல்லை. அது மட்டும் இல்ல..நாளைக்கே ஆன்ட்டி கிட்ட போன் பண்ணி சொல்றேன் எல்லாத்தையும்! அங்கே சொல்லிக்கோ உன்னோட நியாயங்களை!” எழுந்து கிட்டத்தட்ட கத்தி விட்டு சுமி ஹாஸ்டலுக்கு போக அவளிடம் சொன்னது தவறோ என்று தீவிரமாய் சிந்தித்தாள் மைத்தி..

டைனிங் ஹாலுக்குள் இன்னும் ஆரவாரச்சத்தம் விட்ட பாடில்லை.

தானும் எழுந்து ஹாஸ்டலுக்குள் நுழைந்தவளுக்கு சுமி அம்மாவுக்கெல்லாம் இப்போ உடனேயே சொல்லமாட்டாள் என்ற நிச்சயம் இருந்தாலும் அவள் கேட்ட கேள்விகள் விடை தெரியாமல் அவளுக்கு முன்னே தொங்கிக்கொண்டிருப்பதாய் பட்டது.

உன்னை மாதிரி ஆளுங்க? சுமியா அதை மைதிலிக்கு சொல்லுகிறாள்.

“எதற்கு மைதிலி இந்த பிரச்சனை பற்றி பேசினாலே ரத்தகொதிப்பு வந்தவள் போல ரியாக்ட் செய்கிறாய்?..நீ உணர்ச்சி வசப்படுவதால் மட்டும் எதை மாற்றிவிடப்போகிறாய்? இப்போதைக்கு பல்லைக்கடித்துக்கொண்டு எல்லாவற்றையும் நாங்கள் ஜீரணிக்க  வேண்டியவர்கள் மட்டுமே! நீ இப்படி ரியாக்ட் செய்வதால் தான் அந்த பீ க்ரூப் லீடர் உன்னிடம் அடிக்கடி வம்பு வளர்க்கிறான். அமைதியாக இரு” இதெல்லாம் இதே சுமி அவளுக்கு வழக்கமாக சொல்லும் வசனங்கள் அல்லவா?

நான் என்றைக்குமே அவர்களின் பின்னால் போக மாட்டேன். போகவே மாட்டேன். என் மனதில் இந்த குற்ற உணர்ச்சியை என்றைக்குமே தவிர்க்கவும் முடியாது

“எதைப்பற்றியும் யோசிக்காமல் எக்சாமுக்கு படி. ஆல் த பெஸ்ட்..” மொபைல் அவனது மெசேஜை சுமந்து வந்திருந்தது.

இதுதான் அவன் அவளுக்கு அனுப்பும் முதல் மெசேஜ்!

ரிப்ளை பண்ணாமல் போனை எடுத்து அருகில் வைத்துவிட்டு மற்றவர்கள் வர முன்னே படுத்து பெட்ஷீட்டால் தலையையும் சேர்த்து மூடிக்கொண்டாள் மைதிலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!