அவசரப்படுகிறேனோ? இது கூட ஒரு வகையில் ஆபத்தான அறுவைச்சிகிச்சை தான். பலனளிக்கலாம்..பலனளிக்காவிட்டால் உயிரே போய் விடலாம். ஆனாலும் அவன் துணிந்து விட்டான். இன்னும் ஒரே ஒரு தடவை போராடிப்பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான். அவன் மீது பற்றிக்கொண்ட நெருப்பை அணைக்கக்கூடியவளே தானும் கூடச்சேர்ந்து எரியும் போது, இருவரின் வாழ்வுக்காகவும் இனி அவன் தானே முயன்றாக வேண்டும்?
மச்சா…மே அஹன்னப்பங்!!!! மறுமுனையில் அலறிய ராஜீவின் குரலை காதில் வாங்காதவனாய் “நீ ஹெல்ப் பண்ணறதுன்னா பண்ணு. இல்லன்னா மாறு!!!” என்று கோபமாய் சொன்னவன் காலை கட் செய்தான்.
ராஜீவ் நிச்சயம் வருவான் என்ற நம்பிக்கை இருந்தது. இந்த உலகில் அவனை உண்மையாய் நேசிக்கும், அவனால் நேசிக்கப்படும் வெகுசிலரில் ராஜீவும் ஒருவனல்லவா.
அடுத்து அம்மாவின் நம்பருக்கு அழைத்தான் சிந்தக.
“ஹலோ புத்தா..” என்றபடி உடனே லைனில் வந்தார் மஞ்சு.
மீண்டும் ராஜீவ் வெயிட்டிங்கில் வந்து கொண்டிருக்க லேசான சிரிப்புடன் அவனை கட் செய்தவன் அன்னையிடம் தொடர்ந்தான்.
ஹலோ அம்மி. சாப்பிட்டீங்களா?
மைத்தியை வார்டுக்கு மாத்தினதும் இப்போ தான் சாப்பிட்டுட்டு பாத்திரம் எல்லாம் கழுவி வைக்க வெளியே கான்டீன் பக்கம் வந்தேன்பா.
ஓ..மைதிலி பேசாம சாப்பிட்டாளா? என்ன சாப்பிட்டா?
என்னதான் பெயின்கில்லர் கொடுத்தாலும் பெயின் இருக்கும் தானே..அதிகமா பேசாம தான் இருந்தா.. லைட்டா பிஸ்கட்டும் பாலும் தான் கொடுத்தேன். அதைக்கூட முழுக்க சாப்பிடல.
ஹ்ம்ம்..நாளைக்கு ஒகே ஆயிடுவா.. ஹ்ம்ம் அம்மா..ஒண்ணு சொல்லணுமே
என்னப்பா..
“நாளைக்கு காலைல ஏழு மணிக்கெல்லாம் நீங்க வீட்டுக்கு போய்டுங்க. அவங்கப்பா வர்றார்ல..” மெல்ல ஆரம்பித்தான் சிந்தக.
“என்னப்பா சொல்ற? அவர் வரட்டும். அவர் கூட இருந்து அவளை அனுப்பிட்டு தான் நான் வருவேன்.”
ஒருதடவை கைகளால் முகத்தை அழுத்தி துடைத்தவன் தொடர்ந்தான். “உங்களுக்கு புரியலம்மா.. அவ வீட்ல சொல்லாம தான் நம்மள பார்க்க வந்திருக்கா. அவங்கப்பா சரியான கோபத்துல இருக்கார், நான் போன் பண்ணப்போவே என் கிட்ட ஒரு மாதிரியா தான் பேசினார். இவளை அவர் இந்த நிலைமைல பார்க்கிற நேரம் நாமளும் அங்கே இருந்தோம்னா அவர் கோபம் தான் இன்னும் அதிகமாகும். அது மைதிலிக்கு எப்படியிருக்கும்? நீங்க வீட்டுக்கு போய்டுங்க. நான் அவர் வரும் வரை மைத்திலி கூட அங்கே இருந்துட்டு அவர் வந்ததும் மெல்ல நழுவிடறேன்..”
கொஞ்சம் மறுமுனை மௌனமானதன் பின்னர் சரியென்றது!
சரிம்மா.. நாளைக்கு என் கூட ராஜீவும் ஹாஸ்பிட்டலுக்கு வர்றேன்னான்..அவன் கூடவே நீங்க வீட்டுக்கு போய்டலாம்.
சரிப்பா…
வச்சிர்றேன்..
ஹ்ம்ம்..
கொஞ்சம் பெரிய பெருமூச்சொன்றை விட்டபடி சாய்வு நாற்காலியில் மொத்தமாய் சரிந்தான் அவன். மேலே நட்சத்திரங்கள் மின்னி மின்னி ஒளிர்ந்து கொண்டிருந்தன. என்னென்னவோ சிந்தனைகள், திட்டங்கள், கணித்தல்கள், ஊகங்கள் எல்லாம் படப்புதிர்கள் போல துண்டுகளாய் கண்முன் விடை கேட்டு மிதப்பதாய் பட்டது. எவ்வளவு நேரம் அப்படியே வானத்தை பார்த்துக்கொண்டு இருந்தானோ தெரியவில்லை. தம்பி தூங்கலையா என்ற சோமரத்னவின் குரலில் கலைந்து எழுந்தான்.
“எல்லாமே பிரிட்ஜ்ல வச்சுட்டேன்..அவ்வளவு தானே?” என்று வினவியவரிடம் ஆமாம் என்று தலையசைத்தவன் பாக்கட்டில் இருந்து ஒரு ஐயாயிரம்ரூபாய் தாளினை எடுத்து அவரை தாண்டிச்செல்லும் போது அவரின் கையில் வைத்து அழுத்தி விட்டு தன்னுடைய அறைக்குள் புகுந்தான்.
மேசையில் அவளுடைய போன் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்தது. மொபைலை சார்ஜரில் இருந்து துண்டித்து எடுத்துக்கொண்டு கட்டிலுக்கு போனவன் சாய்ந்த வாக்கில் அமர்ந்த படி அதை ஆன் செய்தான்..
அந்த சுமியை காண்டாக்ட் லிஸ்டில் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு மெசேஜ் மழையையே பொழிந்து வைத்திருந்தாள் அந்த பெண். மெசேஜ் பால்டரை திறந்தவன் அதில் சுமி என்ற சப் பால்டரை திறந்து டெக்ஸ்ட் பாக்ஸில் நிதானமாய் டைப் செய்ய ஆரம்பித்தான்.
அந்த பெண்ணோடு மேசேஜிலேயே போராடி அவன் விரும்பும் வண்ணம் ஒருவாறு அவளை ஒத்துக்கொள்ள செய்துவிட்டு அந்த மொபைலை சுவிட்ச் ஆப் செய்து அன்றைக்கு அவன் தூங்க வெகுநேரமானது.
காலையில் அவசர அவசரமாய் உணவு காரியரை எடுத்துக்கொண்டு காரை நோக்கி ஏறக்குறைய ஓடினான் சிந்தக. கடைக்கு போய்விட்டு தான் ஹாஸ்பிட்டல் போகவேண்டும். நேரமாகி விடுமே..
அம்மா சஜினியின் ஒரு செட் உடையை அவசரமாக எடுத்து வைத்துக்கொண்டு வந்தார் தான். ஆனாலும் மனம் கேட்காமல் அந்த ஏழுமணி வேளையிலும் அலைந்து திறந்திருந்த ஒரு கடையை கண்டு பிடித்து இலகுவாக அணியக்கூடியதாய் கருநீலத்தில் முன்புறம் பட்டன்கள் வைத்த டாப்ஸ் மற்றும் ஒரு ஸ்கர்ட் வாங்கிக்கொண்டு விட்டான்! ஏழரைக்கெல்லாம் ஹாஸ்பிட்டல் போய் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வார்டை கண்டுபிடித்து உள்ளே சென்றும் விட்டான்.
அப்போது தான் அவளை எழுப்பிக்கொண்டிருந்தார் அம்மா..
கண்விழிக்கும் போதே ஆணொருவனின் பார்வையில் இருக்கும் கூச்சத்துடன் தன் விழிகளை அவன் முகம் தவிர்த்து அந்த அறைமுழுவதும் அவள் படரவிடுவதை உணர்ந்து “இவளுக்கு இதை மாற்ற ஹெல்ப் பண்ணுங்கம்மா” என்று சொல்லியபடி பார்சலை கொடுத்து விட்டு அறையை விட்டு வேகமாக வெளியேறினான் அவன்.
தனித்தனி அறைகளாக இருந்த வார்டுகளுக்கு எதிரே கண்ணுக்கு குளிச்சியாக பூந்தோட்டம் அமைத்து வைத்திருந்தார்கள். பூக்களைப்பார்த்துக்கொண்டே வராண்டாவில் நடந்து வலப்புற வளைவில் திரும்பினான் சிந்தக.
இந்த ஆண்கள் வார்டில் தான் அந்த பையனை அனுமதித்திருக்க வேண்டும். எதிர்ப்பட்ட நர்ஸ் ஒருவரிடம் கேட்டுக்கொண்டு அந்தப்பையனின் அறைக்குள் நுழைந்தான். அந்தப்பையன் இன்னும் நல்ல தூக்கத்தில் தான் இருந்தான்.
இரவு முழுவதும் கால் வலியால் முனகிக்கொண்டே இருந்தவன் காலையில் தான் தூங்கினானாம். அவனுக்கு தலையில் பலமாக அடிபட்டதால் எதற்கு ஸ்கான் உட்பட சகல சோதனைகளையும் செய்து எதுவுமில்லை என்று உறுதிப்படுத்தி விட்டி நாளைக்காலை டிஸ்சார்ஜ் செய்வதாக சொல்லியிருக்கிறார்கள் என்று அவனுடைய தாயார் தகவல் சொன்னார். எதுவுமே இருக்காது என்று ஆறுதல் சொன்னவன் ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் என்று சம்பிரதாயமாய் சொல்லிவிட்டு மீண்டும் மைதிலியின் வார்டை நோக்கி நடந்தான்.
இந்த தடவை அவன் உள்ளே நுழைந்தபோது இருவரும் அறைக்குள் இருக்கவில்லை.
“காலையும் தலையையும் நனைக்க கூடாது. தண்ணீர் பட்டுட்டா காயம் ஆறவே ஆறாது. கொஞ்சநாளைக்கு நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு..எல்லாம் சரியாகிடும்.” பாத்ரூமுக்குள் அம்மா அவளுக்கு அறிவுரை சொல்வது கேட்டது.
மீண்டும் மொபைல் சத்தமிட்டது “அடேய் வெளிய வரப்போறியா இல்லையா?” என்ற ராஜீவின் மிரட்டலுடன்! நாவுக்குள் அடக்கிய சிரிப்புடன் சைலன்ட் மோடில் போட்டுவிட்டு பாக்கட்டில் வைத்து விட்டு நிமிர மைதிலி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
சிந்தகவா? கொக்கா? கண்ணால் பார்த்தே கச்சிதமாய் அவளுக்கு உடை வாங்கிய தன்னுடைய திறமையை தானே மெச்சிக்கொண்டவன் அவள் முகத்தை ஏறிட்டுப்பார்த்தான். அப்போது அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது கண்களை கண்டதும் “நான் செய்வது தவறா?” என்று மீண்டும் முதலில் இருந்து அவனுக்குள் இருந்த ஜென்டில்மன் ஆரம்பிக்கவும் வாசலில் “கொஹோமத நங்கி?” என்ற ராஜீவின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
அவள் நன்றாக இருப்பதாக சொல்லி ராஜீவிடம் புன்னகைத்தாள் மைதிலி.
சாப்பிடீங்க?
“டேய்..அதான் உனக்கு வரலைல்ல? அப்புறமும் ஏண்டா சித்ரவதை பண்ற? விடு!” கேலியாக இடைப்புகுந்த சிந்தகவை அவன் கொலைவெறியாய் முறைக்க ஆரம்பிக்க, அதை கணக்கெடுக்காதவனாய் ரகசியமாய் கைகளை நீட்டி “எங்கே?” என்று சைகை செய்தான் அவன்.
“மைத்தி..அப்பா வர்றதுக்குள்ள சாப்பிட்டு மருந்துகளை போட்டிரு என்ன?” என்றபடி சோமரத்ன கொடுத்த மைதிலிக்கான உணவை எடுத்து ஊட்டிவிடுவதற்காக ஸ்பூனில் அள்ளினார்.
“என் வலக்கை நல்லாத்தானே இருக்கு ஆன்ட்டி. கொடுங்க நானே சாப்பிடுறேன்” என்றவள் கிண்ணத்தை அம்மாவிடம் இருந்து வாங்கி தானே சாப்பிட ஆரம்பித்தாள்.
அவர்களின் கவனத்தை கலைக்காமல் சிந்தக்விடம் “வெளியே வாடா, பேசணும்!” என்று ராஜீவ் அழைத்தான்.
“ஒண்ணும் தேவையில்ல.. அம்மாவ கூட்டிட்டு கிளம்பு..” அவனுடைய நியாயங்களை கேட்க இவன் தயாரில்லை!
“டேய் நான் சொல்றதை கொஞ்சம்..” என்று கவலையாக ராஜீவ் ஆரம்பிக்க சட்டென அவன் கண்களை பார்த்தவன் “என்னை புரிஞ்சுக்கடா…” என்று கெஞ்சலாக சொல்ல ஒரு நிமிடம் அவன் பார்வையை தாங்கி நின்ற ராஜீவ் என்ன புரிந்து கொண்டானோ…பாக்கட்டில் இருந்து சின்ன பெட்டியொன்றை எடுத்து இவன் கைக்குள் திணித்து விட்டு “ஆன்ட்டி நான் கீழே வெயிட் பண்றேன். நீங்க வந்துடுங்க’ என்றுவிட்டு மைதிலியிடமும் ஒற்றை வார்த்தையில் விடைபெற்றுக்கொண்டு வேகமாய் வெளியேறினான்.
இவனுக்கு என்னாச்சு? ஏன் இப்படி பறக்கிறான்? என்று ஒரு நிமிஷம் குழம்பியவர் பிறகு அவனுக்கு என்ன அவசரமோ என்று தானாகவே சமாதானமடைந்து தான் கொண்டு வந்த பையில் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்தார்.
பிறகு மைதிலியின் கையை பற்றி முத்தமிட்டவர் “அப்பா திட்டத்தான் செய்வார். பெத்தவங்களுக்குத்தான் புரியும் இதெல்லாம். நீ கஷ்டப்படாதே..சந்தோஷமா இரு..நல்லா சாப்பிடு. போன் பண்ணு அடிக்கடி” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு கண்கலங்கியபடி அவள் சொன்ன நன்றியையும் பெற்றுக்கொண்டு “பார்த்து அனுப்பிட்டு வா” என்று அவனுக்கும் சொல்லிவிட்டு வேகமாய் ராஜீவை தேடி நடந்தார் அவனுடைய அம்மா
“நானும் வரேன்மா” என்றபடி அம்மாவின் பின்னேயே இரண்டடி எடுத்து வைத்தான் சிந்தக
“இல்லல்ல..ராஜீவ் கீழே தானே இருப்பான் நான் போய்க்கிறேன்” என்றவர் “இதோ பாருப்பா.. என்னை கேட்டால் நீ அவளோடு கூட இருந்து அனுப்பி வைப்பது தான் சரி. பெரியவங்க திட்டத்தான் செய்வாங்க. அதற்காக? எனக்கு போகவே மனதில்லை. ஆனால் என்னவோ நீ சொல்கிறாய் என்பதனால் தான் கிளம்புகிறேன்” என்று அவனுக்கும் சொல்லிவிட்டு நடந்து ஹாரிடோரில் மறைந்தார் மஞ்சு.
அவர் சொன்னதெல்லாம் அவன் காதிலேயே விழவில்லை.மூன்றாண்டுகளின் பின் இருவரும் தனிமையில் ஒரே அறையில்! ஏதோ ஒரு இனம்புரியாப்படபடப்பு தன்னை சுற்றிக்கொள்ள திரும்பி ஒவ்வொரு அடியையும் அழுத்தமாய் எடுத்து வைத்து கதவை நோக்கி நடந்தவன் பிறகு கதவைப்பற்றிக்கொண்டு உள்ளே பார்த்தான். மைதிலியோ அவனை கண்டுவிட்டு கட்டிலில் எழுந்து அமர்ந்தபடி அங்கிருந்த தண்ணீர் பாட்டிலின் லேபிளை மிக முக்கியம் போல படிப்பதாக பாவனை செய்து கொண்டிருந்தாள். வேண்டுமென்று கதவருகில் கைகட்டி நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்! சில நிமிஷங்கள் அவளும் நிமிரவில்லை. அவனும் பார்வையை விலக்கிக்கொள்வதாயில்லை. இறுதியில் வேறுவழியின்றி அவளே நிமிர்ந்தாள்! முகம் முழுக்க சிவந்து போயிருந்தது!
“என்ன தண்ணீர் எங்கிருந்து வருகிறதாம்?” கேலியாக இழுத்தான் அவன்
“இல்லை..லேபிள் புதிதாக இருக்கிறதென்று தான் பார்த்தேன்.” அவள் எதையோ சொல்லி வைத்தாள்
ஹ்ம்ம்… இப்போது நடக்க முடிகிறதா?
அதெல்லாம் பிரச்சனையேயில்லை. இந்த காயம் கூட இப்போ வலிக்கவில்லை! கைதான் என் பிரச்சனை!
ஹ்ம்ம்..சரி.. இருவருக்கும் இடையில் பெரிதாகிக்கொண்டே போன அழுத்தம் இதோ உடையப்போகிறது என்ற நிலையில் இருந்தது.
என் பிரண்ட்ஸ் எப்போ வராங்களாம்? அவளின் அடுத்த கேள்வி அதற்கு அப்படியே குளிர்நீரூற்றி மொத்தத்தையும் அணைத்தது.
“இன்னும் அரைமணி நேரத்துல நாங்கள் ஸ்டேஷன் ரோடுக்கு போய் வெயிட் பண்ணினால் சரியாக இருக்கும்!” என்று அவளின் முகத்தை பாராமலே சொன்னவன் “நீ ரெடியா இரு. நான் போய் டிஸ்சார்ஜ் பார்மாலிட்டீசை முடித்துவிட்டு வருகிறேன்.” என்றபடி வேக வேகமாய் வெளியேறினான்.
எப்போ பார் போகிறேன் என்று துடிப்பவளைத்தான் உன் வாழ்க்கையில் இருந்து விலக்க முடியாமல் தோற்றுப்போகிறாய் என்று அவனுடைய மனமே அவனை கேலி பேசியது
அவசர அவசரமாய் வேலைகளை முடித்து தலைமை வைத்தியரிடமும் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டவன் ரூமை நெருங்கியபோது அவளை ஸ்ட்ரெட்சரில் வைத்து தள்ளியபடி தாதிகள் தயாராய் வந்து கொண்டிருந்தார்கள். மீண்டும் ஒரு தடவை அறையை சரிபார்த்தவன் அவர்களுக்கு முன்னே நடந்து தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு முன்புறமாக வந்தான்.
அவள் முன் சீட்டில் ஏறியதும் ஒரு கையால் பெல்ட் போட தடுமாறுவதை பார்த்துவிட்டு அவளது முகத்தை பாராமலே எக்கி பெல்ட்டை தானே மாட்டி விட்டான். பின்னர் வண்டியை மீண்டும் வேகமெடுத்து ஹாஸ்பிட்டல் வளாகத்தை தாண்டி தெருவில் இறக்கினான்.
“நான் அவங்ககிட்ட சொன்னேன்.. ஐயோ ஸ்ட்ரெச்சர் வேணாம்..நான் நடந்தே வருவேன்னு. ஆனா அவங்க கேக்கல”
சமாதான படலமாமா?
“அது ஹாஸ்பிட்டல் பார்மாலிட்டி..யாரா இருந்தாலும் இப்படியான ட்ரீத்மென்டுக்கு வந்தால் இப்படித்தான் கொண்டுபோய் விடுவார்கள். “ விட்டேற்றியாய் சொல்லிவிட்டு சாலையிலே கவனத்தை வைத்திருந்தான் அவன்
உள்ளே போன ஒரு ஓ.. வோடு அவள் கண்ணாடிப்பக்கம் திரும்ப
நீ அந்த பையனை போய் பார்த்தியா? என்று மீண்டும் ஆரம்பித்தான் இவன்!
“ஆமாம். நேற்றிரவு வார்ட் மாற்றியபோது கொஞ்ச நேரம் வெளியில் இருந்தோம். அப்போது பேசினேன். அவனுக்கு நல்ல அடி!”
சிந்தக பதில் பேசவில்லை..வண்டி பிரதான வீதியில் இருந்து இறங்கி கிளை வீதியொன்றில் திரும்பியது வண்டி..
மைதிலி..
ஹ்ம்ம்..
நேற்று ஏன் இங்கே வந்தாய்?
சட்டென முகம் வெளுக்க நிமிர்ந்தவள்..”ரொம்ப நாளாச்சு..எல்லாரையும் பார்த்து..இனிமே வர முடியுமோ தெரியலைன்னு பார்த்துட்டு போகலாம்னு தான்..” திக்கி திணறி பதில் சொன்னாள்
பொய்.. ஏன் இங்கே வந்தாய்? யாரை பார்க்க இங்கே வந்தாய்?
அவனது அதட்டலில் முகத்தை ஏறிட்டு பார்த்தவளின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
அழாதேடி! இப்படி பார்த்து பார்த்து தான் என் வாழ்க்கையை நாசம் பண்ணினே! அப்படியே போக வேண்டியது தானே… ஏமாத்துக்காரி போய்ட்டான்னு நான் நிம்மதியா இருந்திருப்பேனே..மறுபடி வந்து புண்ணை கிண்டி கிளருறதுல அப்படியென்ன அல்ப சந்தோசம் உனக்கு? ஆவேசமாய் கேள்வி கேட்டான் அவன்
சிந்தக….
என் பேரை சொல்லாதே! வந்தாச்சு..பார்த்தாச்சு.. நான் போறேன்னு கண்ணுல தண்ணிய காட்டிட்டு திரும்பி போயாச்சு..அப்புறம்?
…..
இனிமே என்ன ப்ளான்னு கேட்டேன்! நடந்ததை எல்லாம் மறந்துட்டு யாராவது வெளிநாட்டு மாப்பிள்ளை கூட….
சிந்தக!!!!!!!
என்னடி? நான் தப்பா சொல்லிட்டேனா? நீ தான் என்னை பார்க்கவே வரலியே..எங்க வீட்டுக்காரங்களை தானே பார்க்க வந்த? அவ்வளவு தூரம் என்னை மறந்துட்ட உனக்கு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்குறது மட்டும் கஷ்டமா?
என்னை கொல்லாதீங்களேன்… என்று சொல்லியபடி அவள் முகத்தை தன் ஒரு கையால் மூடிக்கொண்டு அழ ஆரம்பிக்க வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு அவளுடைய கரத்தை வலுக்கட்டாயமாக முகத்தில் இருந்து விலக்கினான் அவன்.
“நீ என்னை கொல்றதை விடவா? ஒருநாளைக்கு புரிஞ்சுக்கிட்டு நீ வருவே வருவேன்னு ஒவ்வொரு நாளும் நம்பிக்காத்திருந்தேன்.இப்போ கூட.. ச்சே..நான் யாருக்கு என்ன பாவம் பண்ணினேன்” தன்னுடைய நெற்றியில் அவன் அறைந்துகொள்ள மன்றாட்டமாய் அவன் கையை பற்றியவள்
“நான் தான் பாவம் பண்ணினேன்.. உங்களை விட இவ்வளவு வேறுபாடுகளோட பிறந்தது என் தப்பு..அப்படியிருந்தும் மனசில உங்களை நினைச்சது தப்பு.. இப்போ கடைசியா உங்க முகத்தை பார்த்துட்டு இனிமே ரொம்ப தூரமா எல்லாரையும் விட்டு தனியா போயிடணும்னு கிளம்பி வந்தேனே அது ரொம்ப பெரிய தப்பு!!!” விம்மலுடன் பேசியவளின் விழிகளில் கண்ணீர் அருவியாக கொட்ட ஆரம்பிக்க அவளின் முகத்தை பிடித்திழுத்து தன் நெஞ்சில் அழுத்தினான் அவன்.
“மூணு வருஷத்துக்கு முன்ன இருந்தது போல இப்போ எதுவுமே இல்லடி. எல்லாமே மாறிப்போச்சு. முன்னெல்லாம் உன் ஊர்ப்பக்கம் காலே வைக்காத நான் இடைப்பட்ட காலத்துல எத்தனை தடவை போனேன்னு எனக்கு ஞாபகம் இல்ல..அந்தளவுக்கு காலம் மாறிப்போச்சு. அதைவிட, நம்ம சந்தோஷத்துக்காக நாம கொஞ்சம் போராடுறதுல என்ன தப்பு? ஏன் ரெண்டு பேரையுமே வருத்திக்கிட்டு பிரிஞ்சு போறதுலே குறியா இருக்க?” அவனின் ஆதங்கம் பேச்சிலும் குரலிலும் அப்படியே வெளிப்பட்டது
“இல்ல… சிந்தக எதுவுமே மாறல..மாறினது போல வெளியே கலர் பூசுறாங்க. ஆனா மனுஷங்க அப்படியே தான் இருக்கோம். எங்கப்பாம்மா மனசை உடைக்க என்னால முடியாது. “
“அதுக்காக என்னோட மனசை உடைக்கறதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல அப்படித்தானே!!!”
“கூடவே நானும் தானே உடைஞ்சு போயிருக்கேன்..ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்களேன்..” அவள் கெஞ்சினாள்
பல்லை கடித்தபடி வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்தவன் வேகம் கூட்டி பறந்தான்.. வரும் கோபத்துக்கு அப்படியே வண்டியை ஏதாவது கட்டிடத்தில் மோதி வெடிக்க வைத்து விட்டு அப்படியே செத்துவிட்டால் என்ன? என்று கூட சிந்தனை வந்தது அவனுக்கு..பயணம் முழுக்க விம்மலும் கண்ணீருமாய் இருந்தவளின் பக்கம் அவன் திரும்பக்கூட இல்ல.
வண்டி ஸ்டேஷன் ரோடின் பின் புறத்தில் ஏறி அவன் சொன்ன சந்தியை நெருங்கி விட்டிருந்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தியவன் பேசாமலே அமர்ந்திருந்தான்.
மெதுவாக அவனது கைக்கு மேல் தன் கையை வைத்தாள் அவள்.
“சாரி சிந்தக.. நாம சேர்ந்தா வரப்போற சிக்கல்களும் என் அப்பா அம்மாவுக்கு அவை கொடுக்க கூடிய வேதனைகளும் ரொம்பவே அதிகம். இந்த மூணு வருஷத்துல உங்களை பார்க்கணும்னு நான் நினைக்காத நாள் இல்ல. ஆனாலும் அதுக்குப்பிறகு நடக்கப்போறவைகளை சந்திக்கிற துணிச்சல் எனக்கு இல்லவே இல்ல. அதுதான் நீங்க என்னை வெறுத்துடுவீங்கன்னு கணக்குப்போட்டு தள்ளியே இருந்தேன்.. ஒரு வேளை என்னை மறந்து நீங்க உங்களுக்கான வாழ்க்கைக்கு திரும்பியிருந்தால் நான் வந்து அதை கலைச்சிடக் கூடாதுன்னும் அப்படி வந்தா என்னாலேயே உறுதியா இருக்க முடியாது என்ற பயத்துலயும் தான் நேத்தும் உங்களை வந்து பார்க்கல..”
“உங்க வீடு, உங்களை சேர்ந்தவங்க, உங்களோட வளர்ச்சி, தூரத்துல இருந்து பார்த்த நீங்க…இதெல்லாமே எனக்கு போதுமா இருந்திச்சு..நான் இப்படியே மேல்படிப்புன்னு சொல்லி எங்காவது போய்டுவேன். உடனடியா இல்லைன்னாலும் நீங்களும் உங்களுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு பொண்ணை பார்ப்பீங்க.. சந்தோஷமா இருப்பீங்க. நான் போறேன் சிந்தக.. என்னை விட்ருங்க.. “
மூச்சு விடாமல் பேசியவளை பார்த்துக்கொண்டே இருந்தவன் அதற்கு மேல் பேசமுடியாமல் அவள் விக்கி விக்கி அழவும் தன்னுடைய பார்க்கட்டில் இருந்து வெட் டிஷூவை எடுத்துக்கொடுத்தான்.
“சரி. அழுகையை நிறுத்தி முகத்தை துடை. உன் பிரண்ட்ஸ் இப்போ வந்துருவாங்க.”
தலையசைத்தபடி மறுக்காமல் வாங்கியவள் முகத்தை துடைக்க இரண்டாம் நிமிஷம் அப்படியே மயங்கி தொய்ந்து அவன் தோளிலேயே சரிந்தாள்!
“எனக்கு வேற வழி தெரியலடி..உன்னை என்னால விட்டுக்கொடுக்கவே முடியாது. இதனால் வர்ற விளைவுகளை நானே ஏத்துக்கிறேன். நீ என்னை புரிஞ்சுகிட்டா மட்டும் எனக்கு போதும்” மயங்கி தன் தோளில் கிடந்தவளிட்ம் மானசீகமாய் சொன்னவன் அவளுடைய தலையை குஷனை கொண்டு முட்டுக்கொடுத்து விட்டு வேகமெடுத்து பிரதான வீதியில் வலப்பக்கம் திரும்பும் சந்தியில் திரும்பி பறந்தான். அவன் ஓட்டிய வேகத்துக்கு அரைமணி நேரத்துக்கெல்லாம் அவனுடைய வீட்டுக்கு செல்லும் உயரப்பாதையில் வண்டி ஏற ஆரம்பித்திருந்தது.