Responsive Menu
Add more content here...

WLM அத்தியாயம் 9

மீனுக்கு உணவு இல்லாவிட்டால் அது எப்படியோ அழுக்குகளை உண்டாவது சமாளித்துக்கொள்ளும். ஆனால் அதனுடைய வீடான நீரில் இருந்து தரைக்கு போய் வாழ நினைத்தால்  செத்து விடும் என்ற எண்ணத்தை மனதில் உருவேற்றியே அப்போதெல்லாம் நான் அவனை நினைக்காதிருக்க என் மனதை தயார்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் எது நீர் எது உணவு என்பதை அப்படியே தலைகீழாக புரிந்து வைத்திருந்தேன் என்பது பிரிந்து வந்தபின் தானே புரிகிறது!

ஒரு வாரம் ஓடிப்போயிருந்தது. மைதிலி இப்படியொரு உணர்வை இதுவரை அனுபவித்ததே இல்லை.

சுமி அவளுக்கு பாடசாலைக்காலத்தில் இருந்தே ரொம்பவும் நெருக்கமானவள். அவளது எந்தவொரு முடியும் சுமியின் முகம் பார்த்தே இருக்கும். அவளும் அப்படித்தான் ஆனால் அவர்களுடைய நட்பில் கண்டிப்பான பணியை செய்வது சுமிதான்.

தன்னோடு கூடவே அவளுக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைத்திருக்கவே மைதிலியின் வாழ்க்கையில் எந்தவொரு மாறுதலும் வந்துவிடவில்லை. புதிதாக கிடைத்த நண்பிகளோடெல்லாம் சேர்ந்து பேசி கலகலத்தாலும் அவளது தனிப்பட்ட வட்டத்துக்குள் இவள் மட்டுமே இருந்தாள். சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதும் அவளோடு மட்டும் தான். அங்கிருந்த  தமிழ் பெண்கள் தங்களுக்குள் இரண்டு நெருக்கமான நட்புவட்டங்களை உருவாக்கியிருந்தனர். இரண்டிரும் இவர்கள் இருவரும் இருந்ததில்லை.

இப்போது சுமி முகமே பார்க்காமல் இருந்துவிட ரொம்பவும் தனிமைப்பட்டுப்போனாள் மைத்தி. சுமிக்காவது அறையில் இரண்டு தமிழ் நண்பிகள் இருப்பார்கள். சாப்பிடப்போக விரிவுரைக்கு போகவென அவள் அவர்களோடு சுற்றிக்கொண்டிருப்பாள். மைத்தி என்ன செய்வாள்? சமீப காலங்களாக  மனதில் உருவாகியிருந்த விலகல்  காரணமாய் தன் அறையில் இருக்கும் மீதி சிங்களத்தோழிகளோடும் சேரமுடியாமல் சுமியை விட்டு விட்டு இப்போது மட்டும் தங்களோடு சேர்த்து கொள்கிறாயா என்று மற்றவர்கள் கேட்பார்கள் என்ற ஆதங்கத்தில் அவர்களோடும் சேராமல் பாவம் அவள் தனியாகவே வலம் வந்தாள்.

டைனிங் ஹாலில் கடைசி பெஞ்சின் ஓரமாக இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் தனக்கு இரண்டு பெஞ்சுகள் முன்னால் வரிசையாக அமர்ந்திருந்தவர்களை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தாள்.

சுமிக்கு மட்டும் அந்த ‘சுதாரக’ இல்லையா என்ன? கோபமாய் எண்ணிக்கொண்ட மனம் உடனேயே தோழிக்கு ஆதரவு தெரிவித்தது. அவன் தான் “உனது கண்கள் அழகானவை” என்று ஒவ்வொரு வசனமாக தமிழ் கற்றுக்கொண்டு அவளை சுற்றிவருகிறான். அவள் அவனை விட கல்லையும் மண்ணையும் பார்ப்பதையே கொஞ்சம் ரசனையாய் செய்வாள்!..ம்ஹ்ம்…பாவம் அந்த அப்பாவியும் விடாமுயற்சியோடு அவளை தொடரத்தான் செய்கிறது!

சுதாரகவை சுதா முறைப்பதும், சுதாவை கோபப்படுத்துவதற்காகவே செந்தூரன் உள்ளிட்ட மற்றவர்கள் சுதாரகவுக்கு தமிழ் வசனங்களை சொல்லிக்கொடுத்து அனுப்புவதும், சுதாரக சுமியிடம் தமிழ்ப்புலமையை காட்டுவது மட்டுமல்லாமல் இவளிடமும் அதை கொண்டு வந்து கொட்டுவதும் அவர்கள் வந்த காலத்தில் இருந்தே நடக்கும் தொடர்நாடகம்!

வழக்கம் போலவே கிரேவி இல்லாமல் இறுக்கமாக சமைக்கப்பட்ட துன்பமான கறிகள், கூடவே சோறு. காலை மதியம் இரவு மூன்று நேரமுமே சோற்றை சந்தோஷமாக சாப்பிடும் அவர்களிடையே இட்லி தோசை பிட்டு, இடியாப்பம் பாராட்டா என்று வகைவகையாய் சாப்பிட்டு இன்புறும் நம்மவர்கள் சமாளிப்பது கடினம் தான்! வழக்கம் போலவே ஓரமாய் கொறித்துவிட்டு எழுந்து இருளில் வெளியேறினாள் மைத்தி. டப்புக்கு முன்னே ஒரு கூட்டமே காத்திருந்தது, தானும் போய் நின்று பிளேட்டை கழுவி சமையலறையில் வைத்து விட்டு வேகமாய் வெளியே வந்தாள் அப்படியே ஹாஸ்டல் போய் விடும் எண்ணத்தில்.

கொய்யா மரத்தை தாண்டியிருருக்க மாட்டாள்.  மைதிலி!!! என்ற கயல்விழியின் குரல் அவளை அங்கேயே நிற்கவைத்தது,

ரைட்டு…சைத்தான் சைக்கிள்ள வருது!!!! மனமோ எட்டுகாதம் அலறி ஓடியது!

கயல்விழி அங்கே ஆல்பர்ப்பஸ் ஆன்ட்டி என்ற பெயரை சம்பாதித்து வைத்திருப்பவள். அவளிடம் சிக்கியவர்களின் வாயைக்கிளறி மொத்தப்பேருக்கும் வெகுளித்தனமாக சொல்லியும் விடுவதில் அவள் பெயர் போனவள். மைதிலிக்குள் அலாரம் தொடர்ந்து அடித்தது.

என்ன கயல்? கவனத்தை கண்களில் இருந்து மறைத்துக்கொண்டு சாதாரணம் போல கேட்டாள் மைத்தி.

உனக்கு என்னடி ஆச்சு? கயலிடம் கொஞ்சம் பரபரப்பு..

என்ன சொல்ற?

“ரெண்டு நாளா ஒரு மாதிரியாவே இருக்க? யார்கூடவும் பேசாம தனியாவே இருக்கற போலிருக்கு..சுமி கூட ஏதாவது பிரச்சனையா? அவளும் எல்லாரையும் கடிச்சு தின்றேன்ற அளவுக்கு தான் இருக்கா!”

“அப்படில்லாம் ஒண்ணுமில்லையே..சுமி சொன்னாளா உனக்கு? ஒண்ணும் தெரியலையே நான் அவ கிட்ட கேக்கறேன் இரு!” போனை கையில் எடுத்தபடி வார்த்தைகளை ஜாக்கிரதையாக கோர்த்தாள் அவள்

“இல்லல்ல.. என்னடி நீ? நானே நோட் பண்ணதை வச்சுத்தான் கேட்டேன்..சுமி என்கிட்டே எதுவும் சொல்லல” கயலின் குரலில் அவசரமாய் சுருதி குறைந்தது.

அதானே! அவ கிட்ட போய் கேட்டுடுவியா நீ? உன்னை சப்பி துப்பிர மாட்டா? வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டவள் “வேறொன்றும் இல்லை தானே! நான் ரூமுக்கு போறேன் கயல். அப்பா கால் பண்ணுவேன்” என்று தப்பிக்க முயன்றாள்.

“ஏய் மைதிலி.. இன்னொரு விஷயம்டி.. இந்த தினேஷை கொஞ்சம் கவனிச்சுக்கோ.. கொஞ்ச நாள் முன்னே நீ சித்தப்பா வந்திருந்தார்னு சொன்னேல்ல..அன்னிக்கு உன் சித்தப்பா ஒண்ணும் வரல நீ உங்க பார்ம் பாமிலி வீட்டுக்கு தான் அன்னிக்கு முழுக்க போயிருந்ததா யாரோ சொன்னாங்களாம்னு சொல்லிட்டு திரியுறான்!”

“உண்மையாவா சொல்ற?” மனம் உள்ளே நடுங்கினாலும் வெளியே தைரியமாய் கேட்டாள் அவள்.

“ஆமாம்டி.”.

“அவன் ஒரு லூசு.. இதெல்லாம் நான் காதுல போடல..என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும் போ”

“அப்படி விட்டுறாதே சொல்லிட்டேன். இப்போ ரெண்டு நாளாவே இந்த கதை தான் ஓடிட்டு இருக்கு. நீயும் அந்த அண்ணாவும் லவ் பண்றதா நம்மாளுங்க எல்லாரும் சொல்றாங்க.. செந்தூரன் ஒருத்தன் தான் உனக்கு சப்போர்ட் பண்றான். சுமிகிட்ட கேட்டா அவ எரிஞ்சு விழறாளே தவிர பதில் சொல்ல மாட்டேங்குறா. அப்படின்னா உண்மையோனு சந்தேகம் வராதா? இந்த தினேஷை நீ அடக்கி வைக்கலன்னா இது உண்மை போலவே பரவி சீனியர்சுக்கெல்லாம் கதை போய்டும். சீனியர்ஸ் இன்னும் நமக்கு வெல்கம் பார்ட்டி கொடுக்கலை. பார்த்துக்க!”

கயல் தன் வேலையை செய்து விட்டு போய்விட சட்டென தன்னை சுற்றி குளிர் அதிகமானது போல வெடவெடத்தாள் மைத்தி.  அவளே ஒருவழியாய் மனதை மாற்றிக்கொள்ள முயற்சித்தாலும் இவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே.

முதல் நாள் மெசெஜ்க்கு பதில் அனுப்பாமல் விட்டதை எப்படி எடுத்துக்கொண்டானோ தெரியவில்லை.

மறுநாள் இரவும் மெசேஜ் வந்தது. அதற்கும் அவள் பதில் அனுப்பவில்லை. மூன்றாம் நாள் போன் செய்தான். இவள் கட் பண்ணிவிட்டாள்.

உடனே “ஓ புரிகிறது… என்னிடம் உன் தேவை முடிந்து விட்டது தானே!” என்று குத்தலாக மெசேஜ் அனுப்பினான்.. அழுதாளே தவிர அதற்கும் ரிப்ளை பண்ணவில்லை.அதன் பின் அவனும் மெசேஜ் அனுப்புவதை நிறுத்திவிட்டான். ஆனால் அதற்கும் ஒரு தடவை அழுது தீர்த்தாள் அவள்!

நாளை அவன் நிச்சயம் பூஜைக்கு வருவான். அங்கே பார்க்க வேண்டியிருக்கும் என்ற நிச்சயத்தால் தான் சந்தோஷப்படுவதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருந்தவள் இப்போது அவர்கள் இருவரையும் நம்மவர்கள் எல்லோரும் பார்க்கப்போகிறார்களே அவனை அவள்தான்  வரவழைத்தாள் என்று சந்தேகம் கொள்வார்களோ? என்று பயப்பட ஆரம்பித்தாள்.

இப்போவே இவ்வளவு தூரம் பேசுபவர்களுக்கு நாளை அவலும் கிடைத்ததாகி விடுமே!

எல்லாம் உன்னால் வந்தது மைத்தி! மஞ்சு ஆன்ட்டிக்கு பூஜை பற்றி ஏன் சொன்னாய்? என்று தன்னையே மனம் கடிந்து கொள்ள ஆரம்பிக்க “மன்சு ஆன்ட்டி அதை மகனிடம் சொன்னாலும் அவன் இப்போது இருக்கும் கோபத்தில் உன்னை பார்க்க வருவானா?” என்ற கேள்வியும் கூடவே எழுந்தது!

நாளை பௌர்ணமி. போயா விடுமுறை. அருகில் இருக்கும் பெரிய விகாரையில் பூஜை நடைபெறும். மைதிலியின் பாட்ச் மாணவர்கள் மகா இல்லுப்பள்ளம வந்து ஆறுமாதங்களை முடித்துக்கொண்டு திரும்பப்போவதை முன்னிட்டும் பரீட்சைகளுக்கு முன்னரான ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் பொருட்டும் அன்றைக்கு பூஜையில் மாணவர்கள் எல்லோருமே கலந்து கொள்ளவேண்டும் என்று பாட்ச் சார்பில் அறிவிப்பு விடுவிக்கப்பட்டிருந்தது.

விடுமுறை நாளுக்கே உரிய சோம்பலுடன் விடிந்த மறுநாள் மதியமளவில் பரபரக்க ஆரம்பித்தது.  அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் போய் பூக்கள் பறித்து வந்து தலை முழுகி வெள்ளை நிற ஆடைகளோடு எல்லோரும் விகாரைக்கு புறப்பட்டபோது தன்னுடைய அறை நண்பிகளோடு இவளும் வரிசையில் சேர்ந்துகொண்டாள். அருகிலேயே இருப்பதாலும் நூற்றுக்கணக்கில் சைக்கிள்களை கொண்டுபோய் நிறுத்தி அங்கே இடைஞ்சலை ஏற்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்திலும் அவர்கள் நடந்து தான் புறப்பட்டிருந்தனர். பெண்களை முன்னே போகவிட்டு ஆண்கள் பின்னே வந்துகொண்டிருந்தனர்.

வழக்கமான அமைதி இல்லாமல் மைக்கில் ஓதும் சத்தத்தோடு கோவில் முழுதும் மக்களும் நிறைந்திருந்தார்கள். காணுமிடமெல்லாம் வெண்மையாய் தெரிந்து கொண்டிருந்தது. செருப்பை அதற்குரிய காப்பாளரிடம் கொண்டு போய் கொடுத்துவிட்டு  தாதுகோபத்தை சுற்றிகொண்டு அவள்  வர முதலாவதாகவே கண்ணில் பட்டான் சிந்தக!

சட்டென சுற்றும் முற்றும் யாராவது கவனிகிறார்களா? என்று தான் பார்த்தாள் மைதிலி. நம்மவர்கள் கூட்டமாக பின்னே வந்துகொண்டிருக்கிறார்கள் போலும். யாரையும் காணவில்லை.

முதலில் சிந்தகவும் அவளை கவனிக்கவில்லை. வெள்ளை ஷர்ட் மற்றும் நீல டெனிம் அணிந்தபடி ஒருகாலை மடக்கி குத்திட்டு வைத்துக்கொண்டு மற்ற முழங்கால் நிலத்தில் படும் வகையில் அமர்ந்திருந்து வட்ட வடிவ பெரும் தட்டு ஒன்றில் பூக்களை அடுக்கிக்கொண்டிருந்தான். முகத்தில் அமைதியுடன் முதல் வளையம் வெள்ளைப்பூக்கள், அடுத்த வளையம் ரோஜாப்பூக்கள் என்று தட்டை சிரத்தையுடன் நிரப்பிக்கொண்டிருந்தான் அவன்..

தமிழ்ப்படங்களில் எல்லாம் இப்படி தலையே நிமிராமல் ஹீரோயின்கள் தான் கோலம் போடுவார்கள். ஹீரோ பக்கத்தில் நின்று ரொமாண்டிக் லுக் விடுவார்! சமய சந்தர்ப்பம் பாராமல் மனம் கவுண்டர் கொடுக்க நான் ஹீரோயினும் இல்லை அவன் ஹீரோவும் இல்லை என்று மனதுக்கு ஒரு கொட்டு வைத்தவள் மீண்டும் நிமிர்ந்தபோது அவன் நிமிர்ந்து  அவள் முகத்தையே உறுத்துப்பார்த்துக்கொண்டிருந்தான். கடுகத்தனையும் புன்னகை இல்லாமல் அந்த கபிலக்கண்களில் இருந்த தீட்சண்யம் அவளைவிதிர்விதிர்க்க செய்ய சட்டென அவ்விடம் விட்டு அகன்றாள் மைதிலி.

 பிறகு தலைமை பிக்கு மற்றும் அவரது உதவியாளர்கள் வந்து மேடை போன்றிருந்த இடத்துக்கு  வந்து சேர்ந்ததும் எல்லோரும் அவருக்கு முன்னேமணலில் அமர்ந்து கொள்ள தானும் அவன் பார்வைக்கு மறைவாயும் நம்மவர்களின் பார்வைக்கு மறைவாயும் அங்கே கிளைபரப்பி நின்ற அரசமரத்தின் அடிமரத்தோடு சாய்ந்து அமர்ந்து கொண்டாள்

பூஜை ஆரம்பித்தது. சற்று நேரம் பிரித் ஓதிக்கொண்டிருந்தவர்கள் இடையில் நிறுத்த சில ஆண்கள் முன் வந்து பூக்கள், நறுமணப்பொருட்கள் கொண்ட தட்டுக்களை பயபக்தியுடன் எடுத்துக்கொண்டு சென்று முன்னே வைத்தனர். சிந்தக்கவும் ஒரு தட்டை சுமந்து கொண்டு முன்னே போய்க்கொண்டிருந்ததை கண்டாள் மைதிலி.

அவனுக்கு இதெல்லாம் ஆத்மார்த்தமாய்  பிணைக்கப்பட்டிருக்கிறது! அவளுக்கோ அதை வேடிக்கை பார்க்கும் மனநிலைமட்டும் தான்! அதேபோலத்தானே அவனும் அவளுடைய ஆத்மார்த்த பிணைப்புக்களை வேடிக்கை பார்ப்பான்.. உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளத்தெரியாமல்!

தங்களுக்குள் இருந்த இடைவெளி தெளிவாகவே புலப்பட ஆரம்பித்திருந்தது அவளுக்கு. அவன் உணர்வுகளை புரிந்து அதையே நானும் உணர்வது முக்கியல்ல, மற்றவர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பக்குவமே காதலில் முக்கியம் என்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அப்போதெல்லாம் அவளுக்கு தாங்கள் பிரியவேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டும் காரணங்களாகவே அவை தென்பட்டன.

மனது விலக நினைக்கும் போது பார்க்கும் பார்வையும் அப்படியே மாறிவிடுகிறது பாரேன்! அவள் உள்ளுக்குள் கசப்பாய் சிரித்துக்கொண்டு திரும்ப அவன் திரும்பி வந்துகொண்டிருந்தான் அவளையே பார்த்தபடி! இவ்வளவு நேரமும் செய்த தீர்மானங்கள் மறக்க கண்களால் தானும் அவன் பார்வையை கௌவி நின்றவள்  பட்டென்று உணர்வு வர கண்களை விலக்கி இடப்புறம் திரும்ப அங்கே நேரெதிராக அமர்ந்து கொண்டு சுமி அவளை கண்ணாலேயே சாம்பலாக்க முயற்சித்துக்கொண்டிருந்தாள்!

பதிலுக்கு ஏக்கமாய் ஒரு பார்வையை நண்பியிடம் அனுப்பியவளுக்கு அவளுக்கு இரண்டு வரிசைகளுக்கு பின்னே அமர்ந்திருந்த சுதாரக எட்டிப்பார்த்து புன்னகைத்ததில் எல்லாம் மறந்து போய் சிரிப்பு பொங்கி விட்டது.

மூன்றுதலைக்கொள்ளி எறும்பாய் தலையைக் குனிந்து கொண்டு தனக்கு முன்னிருந்த மண்ணில் மைத்தி என்று விரல்களால் எழுதினாள் அவள்.

பிறகு அவள் நிமிர்ந்து பார்த்தபோது சிந்தகவை காணவில்லை.

பூஜை முடிந்திருந்தது.  மாணவர்கள் எல்லாம் வரிசையாக நின்று அந்த தலைமைப்பிக்குவின் காலில் பணிந்து ஆசீர்வாதம்வாங்கிக்கொண்டிருந்தனர். வழக்கமாக வரும் கோபத்தோடு வேறுவழியில்லாமல் அவளும் அந்த வரிசையில் போய் நின்றுகொண்டிருந்தாள். இவர்களோடு வெளியே போனால் இது ஒரு தொல்லை. கூடப்படித்த நண்பர்களின் அம்மா அப்பா வந்தால் கூட அவர்களின் கால்களில் விழுந்து எழுந்து தான் வழியனுப்புவார்கள். வேறு வழியில்லாமல் வணங்காமுடிகளான நம்மவர்களும் குனிந்து வணங்குவது போல பாவ்லா செய்வது தான் வழக்கம்.

“மைதிலி.. வெளியே போகும் போது தயவு செய்து கொஞ்சம் பின்னே நில். நான் உன் கூட பேச வேண்டும். இதற்கு மேல் நான் உன்னை தொந்தரவு செய்யப்போவதில்லை. “ தலைமை மதகுருவின் கால்களில் லேசாக குனிந்து எழுந்தவளின் காதில் சிந்தகவின் குரல் ரகசியமாய் ஓலிக்க சட்டென நிமிர்ந்தவள் விழிகளால் தேடினாள்.

நிமிர்ந்து கூட்டத்தில் இருந்து விலகி வெளியே போய்க்கொண்டிருந்தான்.

அவன் என்னை காதலிக்கிறாயா? என்று கேட்டு விடுவானோ? என்பதை விட அவனோடு தான் பேசுவதை நம்மவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ற பயம் தன் அவளுக்கு அப்போது அதிகமாக இருந்தது. நிமிடத்தில் யோசித்து வாசலருகே போய்க்கொண்டிருந்த கயல்விழியை துரத்திப்பிடித்தாள்.

வெளியே ஆண்கள் நின்றுகொண்டு “இருட்டு..ஆகவே முன்னால் சில ஆண்களை நடக்க , நடுவில் பெண்களை நடக்குமாறு சொல்லிக்கொண்டிருக்க பெண்கள் வரிசையில் வேகமாய் நுழைந்து முதலிருவராக கயல்விழியும் மைதிலியும் நடக்க ஆரம்பித்தனர். தூரத்தில் இருந்தே அதை கவனித்து விட்டவன் சுழித்த புருவங்களுடன் அவள் தன் கண்ணுக்கு மறையுமட்டும் பார்த்துக்கொண்டே நின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!