WLM அத்தியாயம் 1

“நான் ஏன் இங்கு வந்தேன் என்று எனக்கே தெளிவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னே என் நெஞ்சில் மலர்ந்த பூ கருகிவிட்டது என்று தான் எண்ணியிருந்தேன்…ஆனால் இரவின் குளிரில் , தனிமையில் அதன் வாசம் வருவதை உணரும் போது தான் அது கருகும் பூ அல்ல என்று புரிந்து கொண்டேன். என்ன செய்வது? எல்லாப்பூக்களும் பூஜைக்கு செல்வதில்லையே..இறுதியாக ஒரே ஒரு தடவை அவன் முகத்தை பார்த்து விட வேண்டும். அது போதும் எனக்கு!”

மகா இல்லுப்பள்ளம பெண்கள் ஹாஸ்டலின் பத்தொன்பதாம் நம்பர் அறையில் மேஜையில் ஏறி அமர்ந்து கொண்டு கெத்தான நிமிர்வுடன் தனக்கு நேரெதிரே பம்மியபடி அமர்ந்திருந்த இரண்டு முதல் வருட மாணவிகளிடம் பேசிக்கொண்டிருந்தாள் மைதிலி.

 “உங்கட பெயர் என்ன என்று கேட்கலாமா?” தயக்கமாய் ஒருத்தி வினவினாள்

“ஏன்? இந்த அக்கா தான் வந்து ராக்கிங் பண்ணினா என்று என்னை போட்டுக்கொடுக்கவா?” என்று பதிலுக்கு சிரிக்காமல் கேட்டவள்” உங்களுக்கு சீனியர் என்று தெரிந்தால் மட்டும் போதும்” என்று கறாராய் சொல்லி விட்டு  “சைக்கிள் வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள்.

இருவருமே “ஆம்” என்றார்கள். ஒருத்தியிடம் கீயை வாங்கிக்கொண்டவள் இன்னமும் உள்ளே ஜூனியர்களோடு பேசிக்கொண்டிருந்த சக மாணவியிடம் தலையசைத்தபடி அறையை சாத்தினாள் மைதிலி.

அந்த அறைக்கதவில் வெளிப்புறமாக கீயினால் ‘மைத்தீ’ என்று அவள் பெயர் அங்கே வந்த ஆண்டுடன் பொறிக்கப்பட்டிருந்தது பளிச்சென்று தெரிந்தது. சிரிப்புடன் அதை மொபைலில் படம் எடுத்துக்கொண்டவள் ஹாஸ்டல் ஹாரிடோரில் இறங்கி நடந்தாள்.

இந்த ஹாஸ்டலில் ஒவ்வொரு இடத்திலும் அவளது ஆன்மா லயித்து லயித்து வாழ்ந்ததே..

அதோ அந்த கைப்பிடிச்சுவரில் அமர்ந்து தான் எல்லோருமாக பேசிக்கொண்டிருப்பார்கள்..

வலப்புறம் ஸ்டடி ஹால்..அவள் மட்டும் அங்கே போனதே கிடையாது!

சதுரமாக அறைகள் அமைக்கப்பட்டிருக்க நடுவில் நாற்சார் போல நிலத்தில் ஒரு பெரிய நெல்லிமரம் இருக்கும். இன்றும் காய்த்துக்கிடந்த நெல்லிக்காய்களை சந்தோஷமாய் பார்த்தவள் வார்டனின் அறையை கடந்து வெளியே நடந்தாள்.

பெண்கள் ஹாஸ்டலுக்கு முன்னே கம்பிவேலியோரமாக  சின்னதாய் ஒரு புத்தர் சிலை வைத்து ஒற்றை அறை போல ஒரு வணங்கும் இடம் இருக்கும். சுற்றிலும் அரசமரம் கிளைபரப்பிக்கிடக்க குளுமை சூழ்ந்த அந்த இடம் தான் அவள் நடந்து கொண்டே படிக்கும் இடம்.. அங்கே தான் மைத்தி பழியாய் கிடப்பாள்..

படிக்க மட்டுமா அங்கே கிடந்தாய் நீ? மனசின் மெல்லிய அடுக்கொன்று அந்தகேள்வியின் கனம் தாளாமல் நடுங்கிற்று.

கோவிலின் பின்னிருந்த  தார் போட்ட வீதியில் அவள் கண்கள் போய் நிலை கொண்டன…. அந்த வீதி தான் சுற்றிலும் இருந்த கிராமங்களை அந்த உப பல்கலைக்கழகம் வழியாக பிரதான வீதியுடன் தொடுக்கும் நீண்ட நெடிய பணியை செய்யும்.

பரிச்சயமான ஒலியுடன் கறுப்பு பல்சர் ஒன்று அந்த வழியில் கடக்க சட்டென்று பரவிய குழந்தை தனமான மகிழ்வுடன் இமைக்குடைகளை மலர்த்தி ஏறிட்டு பார்த்து விட்டு ஏமாற்றமாய் தனக்குத்தானே கொட்டிக்கொண்டாள் மைத்தி.

மூன்று வருஷமாகப்போகிறது..இன்னும் உனக்கு பைத்தியம் தெளியவில்லையே..இந்த மண்ணில் கால்வைத்ததும் நடுவில் கடந்து போன வருடங்களை மறந்து அதே மைத்தியாக அன்று விட்ட புள்ளியில் உடலும் உணர்வுமாய் மனம் போய் நின்றுகொண்ட மாயம் தான் என்ன?

சட்டென்று தன்னை ஆக்கிரமித்த உணர்வுகளோடு போராட முடியாமல் அந்த பெண் ஷாலினியின் சைக்கிளை கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் இவளோடு வந்த பத்துப்பேரில் இருவர் ஏற்கனவே சைக்கிளோடு தயாராக ஆண்கள் ஹாஸ்டலின் முன் நின்று கொண்டிருக்க மெல்ல பெடல் வலித்தபடி அவர்களை நெருங்கினாள்

பரந்த காட்டின் நடுவில் அந்த உப பல்கலைக்கழக வளாகம் அதை சுற்றிலும் பல்வேறு தாவர ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலங்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் அருகருகே இரண்டு ஹாஸ்டல்கள், நடுவில் டைனிங் ஹால், சற்றுத்தொலைவில்  ஆடிடோரியம்  சுற்றிலும் சின்னதாய் கிராமங்கள், பயிர்நிலங்கள், அருகே ஒரு விகாரை அவ்வளவு தான் அந்த பிரதேசத்தின் சாட்டலைட் வரைபடம். தமிழர்களின் வாடையே இல்லாத பிரதேசம் அது என்று தைரியமாக சொல்லிவிடலாம்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய தொழினுட்பமும் முகாமைத்துவமும் கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்பட்டால் முதல் ஆறுமாத வதிவிட செயன்முறை பயிற்சியை இங்கே தான் கழித்தாக வேண்டும். அதன் பிறகே மலையகத்தில் அமைந்திருக்கும் பிரதான பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். வெறுமனே முதல் வருட மாணவர்கள் அவர்களுக்கான சில விரிவுரையாளர்கள், வெகுசில ஆராய்ச்சி மாணவர்கள் தவிர வேறு யாருமே அந்த சுற்றுப்பிரதேசத்தில் இருக்க மாட்டார்கள். மாணவர்களில் கூட தமிழ் மாணவர்கள் இருநூறுக்கு இருபது என்ற கணக்கில் தான் இருப்பார்கள்.

மைத்திலி  அனித்யாய கோ? (மைதிலி  மற்றவர்கள் எங்கே?)

எனகமங்! பொட்டக் இன்னக்கோ..(வருகிறார்கள். கொஞ்சம் இருங்களேன்) என்று கிண்டலாய் சொல்லிவிட்டு சைக்கிள் பெடலில் நின்றபடியே சில பல சுழற்சிகளை செய்தாள் மைத்தி..

நேற்று இரவு மகா இல்லுப்பள்ளமவுக்கு பத்து மாணவர்களில் ஒருவளாக ஜூனியர்களை பார்க்க கிளம்புகிறேன் என்று சொன்னதை அவளது தோழிகள் யாரும் ரசிக்கவில்லை!

“லூசா மைத்தி நீ? இந்த நேரம் என்னத்துக்கு இவ்வளவு தூரம் போறாய்??” தமிழின் குரல் தூரமாய் தலைக்குள்ளே இன்னும் ஒலித்தது!

 “ஒருநாளும் பாட்ச் கூட்டங்கள் ஒண்டுக்குமே நீ போறதில்ல.. திடீரென்று என்னடி ஆயிற்று?? ஜூனியர்சை பார்க்கோணும் எண்டு அவ்வளவு ஆசையா?” சுமியின் குரலில் தீவிரமான சந்தேகம்.

“இல்ல லூசு. மேகா தான் கேட்டா. தமிழ் மக்கள் யாருமே வரலையே..நீயாவது  சும்மா வா..ஜாலியா போயிட்டு வரலாம்னு. கொஞ்ச நாளா சுத்த போர் வேற! அதுதான் ஓகே சொல்லிட்டேன். வேற ஒண்ணும் இல்ல.” மைத்தியின் சமாளிப்பு நண்பிகளின் ஏறிய இமைகளை இறக்கவில்லை. அவர்களுக்குள்ளே சில பல கிசுகிசுப்புக்களுக்கே அது வித்திட்டதை அவள் அறியாமலுமில்லை. ஆனாலும் அவள் பின் வாங்கவில்லை.

சைக்கிள்கள் கூட்டமாய் தார் ரோட்டில் இடப்பக்கமாய் இறங்கி  சேனபுர கிராமத்தை நோக்கி சென்றது. தன்னை முந்திக்கொண்டு சென்ற அமிலவுக்கு புன்னகையோடு வழிவிட்டவள் அவனுடைய சைக்கிளில் முன் பக்க காரியரில் அவன் கைகளுக்கிடையில் தொற்றிக்கொண்டிருந்த இஷங்காவை கண்டு சட்டென அதிர்ந்து பின் அவர்களை பார்க்காததை போல பாதையில் கவனம் வைத்து பெடல் வலிக்க ஆரம்பித்தாள்.

இஷங்கா நல்ல பெண். இன்னொருவனை காதலிப்பவள்.  ஆனால் அமிலவோடு …என்று சிறகு விரிக்க முயன்ற சிந்தனையை  சட்டென்று இழுத்துப்பிடித்து சிறையில் அடைத்தாள் மைதிலி.

முதல் வருடம் இங்கிருந்த போது அவள் பார்க்காத காட்சியா இது?

ஹ்ம்ம்..இவர்கள் தான் எவ்வளவு இலகுவாக இதையெல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள்! தமிழன் தான் சும்மா ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான  சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் ரொமான்டிசைஸ் செய்து வாழ்க்கையை சிக்கலாக்கி வைக்கிறானா? மைத்தியின் மனதின் அடுக்குகளில் இருந்து ஒரு ஞாபகப்பறவை கூடு திறந்து சிறகடித்து பறந்தது.

“மே மைத்திலி.. பலாகன!!! (கவனம்)”  கூட வந்தவன் ஒருவன் குரல் கொடுத்ததில் சுய உணர்வுக்கு வந்தவள் தார்ப்பாதை முடிந்து மணல் பாதை ஆரம்பிக்கும் இடத்தில் சரிய ஆரம்பித்த சைக்கிளை திருப்பி மீண்டும் மணல் குறைவான பகுதிக்கு வந்து சேர்ந்தாள்.

இனி இந்த மணல் பாதையில் ஒரு இருபது நிமிடங்கள் சைக்கிள் மிதித்தால் அவள் போக வேண்டிய இடம் வந்துவிடும். பாதையோடு கூடவே ஓடிய பெரிய நீர்ப்பாசன கால்வாயில் சர்வசாதாரணமாக பெண்கள் குறுக்கே ஒரு நீளமான துணியை சுற்றிக்கொண்டு குளித்துக்கொண்டும் உடை துவைத்துக்கொண்டும் இருந்தனர். இங்கே வந்த ஆரம்பத்தில் இந்த காட்சியை விழி தெறிக்க பார்த்ததும் இந்த பெண்களை மனதுக்குள் திட்டோ திட்டென்று திட்டியதும் நினைவு வந்து சிரிப்பு தொற்றிக்கொண்டது மைத்திக்கு. அவர்களுடைய கலாசாரமே இதுதானே..

சமீர அண்ணா அன்றைக்கு போல இன்றைக்கும் கடையின் முன்புறம் வர்ண ஜெலி போத்தல்களை அடுக்கி வைத்துக்கொண்டு மும்முரமாக வியாபாரத்தில் இருந்தார். அந்த சுற்று வட்டாரத்தில் இருந்த ஒரே ஒரு பலசரக்கு கடை இந்த சமீரவினுடையது மட்டுமே..

சைக்கிளை நிறுத்தி அவரை நலம் விசாரித்து தங்களை நினைவிருக்கிறதா என்று இவர்கள் கேட்க உற்சாகமாய் பேசியவர் “நங்கி தாம கொளபாட்ட ஜெல்லி த கண்ணே?” (தங்கச்சி, இன்னும் பச்சை நிற ஜெலி தான் சாப்பிடுகிறாயா?) எனக்கேட்டு மைதிலியை அதிரவைத்தார்.

பதிலுக்கு சிறு வெட்கமாய் புன்னகைத்து சமீரவின் குழந்தையை பற்றி நலம் விசாரித்தவள் சைக்கிளை நோக்கி வந்தாள். மற்றவர்கள் இன்னமும் சமீரவோடு அளவளாவி முடித்திருக்கவில்லை.

கொளபாட்ட! (பச்சை நிறம்)

இன்னொருவனின் குரல் அவள் ஞாபகங்களில் பேரோசையாய் கேட்டது..

“நீ ஒரு குழந்தை போல!!! ஏன் வேறு நிறங்கள் உனக்கு பிடிக்காதா?” என்று சிரிப்புடன் கேட்ட அவன்

“மைத்தி நான் அம்மாவிடம் சொல்லி எல்லாமே உனக்கு பச்சை நிறத்தில் சமைக்க வைத்து எடுத்து வந்தேன்” குறும்பு தவள அவளை சீண்டிய அவன்

“போடி..எனக்கு உன் முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லை” என்று கடுங்கோபமாய் விரட்டியடித்த அவன்…

ஐயோ சிந்தக!!!!

இரண்டு வருடங்களாய் இவன் ஞாபகங்கள் என்னை இப்படிக்கொல்லவில்லையே. இந்த மண்ணில் கால் வைத்ததும் அவை என்னை துரத்தி கொல்கின்றவே! இங்கே வந்தது தவறோ?” அடக்கி வைத்த கண்ணீர் பொல பொலவென வெளியே வர அவசரமாய் மற்றவர்கள் காண முன்னர் டிஷூ கொண்டு துடைத்து விட்டாள் அவள்

மீண்டும் சைக்கிள்  மிதிக்க சில நிமிஷங்களில் சேனபுர கிராமத்தின் முகப்பு அவள் கண் முன் பட்டது. வந்த சைக்கிள்கள் குழுக்களாய் பிரிந்து ஒவ்வொரு வீதியிலும் திரும்பி மறைய தான் அந்த ஆலமரம் வரை போக வேண்டும் என்று சொல்லி அமிலவையும் இஷங்காவையும் பின் தொடர்ந்தாள் மைத்தி. அமிலவும் இஷங்காவும் அவள் போகவேண்டிய மஞ்சு ஆன்ட்டி வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்குத்தான் போகவேண்டும். மஞ்சள் கோன் பூக்கொடிகளும் நந்தியாவட்டை பூக்களும் இன்னபிற வர்ண குரோட்டன்களாலும் அழகுபடுத்தப்பட்டிருந்த அந்த குட்டி வீடு அவள் பார்வையில் படப்பட இதயப்படபடப்பும் அதிகரித்துக்கொண்டே போனது.

அவனை காண முடியுமா?

திருமணமே செய்து கொண்டிருப்பானா?

“மைத்திலி ..உனக்கு தனியாக போக முடியும் தானே?”

“yeah. Why not?” என்று இஷங்காவிடம் சிரித்தபடி முன் வீட்டில் அவர்கள் இருவரும் உதிர்ந்துகொள்ள அடுத்த வீட்டுக்கான பாதையில் அவள் மட்டும் தனியே நடந்தாள் மைதிலி .

இந்த மூன்று ஆண்டுகளுக்கும்  அந்த வீட்டில் மாற்றமே இல்லை. ஓலையால் கிடுகு இருபக்கமும் நெருக்கமாக அழகாக வேயப்பட்ட சின்னதொரு பாதை இரு மருங்கும் கார்னேஷன் பூக்கள் மஞ்சள் கார்ன் பூக்களுடன் அவ்வீட்டின் கேட்டினை நோக்கி அழைத்து செல்லும். கேட்டை திறந்தால் சின்னதாய் ஒரு செங்கல் வீடு. அதன் பின்னே தான் தோட்டமும் வயல்நிலமும் விரிந்திருந்தன.

இந்த குட்டி வீடு தானே மஞ்சு ஆன்ட்டி, சமந்த அங்கிள், சிந்தக, சஜினிகுட்டி, அவள் என்று அது வரை அனுபவித்தறியாத ஒரு வாழ்க்கையை மைதிலிக்கு காட்டியது. ஒருகணம் நினைவுகளின் வேகத்தில் தடுமாறி நின்றாள் அவள்.

எதையோ கழுவி விட்டு வெளியே ஊற்ற வந்த மஞ்சு ஆன்ட்டி இவளை கண்டு ஒரு கணம் அதிர்ந்து பாத்திரத்தை கீழே வைத்து விட்டு “மைத்தீ” என்ற கூவலுடன் ஓடி வந்து அவளை இறுக அணைத்து கொஞ்சமாய் அழுதே விட்டார்.

அவரது கையின் ஈரமும் சற்றே புஷ்டியான உடலின் அழுத்தமும் தாய்க்கோழியின் வெதுவெதுப்பான முத்தமாய் மைத்தியின் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது. எளிய மனிதர்களின் பாசத்துக்கு ஏது இன மத எல்லைகள்? சத்தம் கேட்டு ஓடி வந்த சஜினியும் “மைத்தி அக்கி” என்று சிரித்தபடி ஓடி வந்து அவளது கையை பற்றிக்கொண்டாள்.

“என்னம் கியலா கிவ்வே நானே துவ”..(வருகிறேன் என்று சொல்லவே இல்லையே மகளே”) என்று செல்லமாய் அவளை வைதவர் கை பற்றி உள்ளே அழைத்துப்போனார். வீட்டில் இருந்த மூங்கில் கதிரைகள் மாறி சோபா புதிதாய் நுழைந்திருந்தது. வீட்டின் வெளிப்புறம் அப்படியே இருந்தாலும் உட்புறம் மிக வசதியாக மாறியிருந்தது உடனேயே புலப்பட்டது.

“அப்பா மைத்தி அக்கா வந்திருக்கிறாள்” போனில் உற்சாகமாய் சஜினி தந்தைக்கு தகவல் சொன்னவள் அவளோடு ஒட்டி அமர்ந்துகொண்டாள். அவள் சஜிக்காக வாங்கி வந்த ஸ்கர்ட் அவளுக்கு ரொம்பவே பிடித்தது என்று அவளது மலர்ந்த முகமே சொன்னது.

“அம்மா சுகமா இருக்காங்களா? அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு? எங்களுக்கு இதெல்லாம் வாங்கி வரவில்லைஎன்றால் தான் என்ன?” என்று படபடத்தபடி அவள் அவருக்காய் வாங்கி வந்திருந்த சேலையை தோளில் போட்டு ஆசையாய் தடவிக்கொண்டு மஞ்சு ஆன்ட்டி  அவளை விசாரித்துக்கொண்டிருக்க மைத்தியின் கவனம் அங்கில்லை.

அவளுக்கு சொல்லாமல் அங்கே எதுவும் நடக்காது தானென்றாலும் அந்த ராட்சஷன் மைதிலிக்கு சொல்ல வேண்டாம் என்று சொன்னாலும் சொல்லக்கூடியவன் என்ற எண்ணத்தில் சிந்தகவின் திருமணப்புகைப்படம் ஏதும் அங்கிருக்கிறதா என்று கழுகுக்கண்களால் தேடி இல்லை என்றதுமே நிம்மதியாய் சாய்ந்து அமர்ந்து மஞ்சுவின் பேச்சுக்கு காது கொடுத்தாள் மைத்தி.

“எல்லாரும் சுகமாத்தான் இருக்காங்க. அம்மா உங்களை ரொம்ப விசாரிச்சதா சொல்ல சொன்னாங்க!” என்றவள் கையில் உரித்த கோழியுடன் பிரவேசித்த சஜினியின் அப்பா சமந்தவை கண்டதும் “ஹலோ அங்கிள் எப்படியிருக்கீங்க?” என்று என்று கேட்டு புன்னகைத்தாள்

“கொஹோமத துவ?” (எப்படியிருக்கிறாய் மகள்?) என்ற நலன்விசாரிப்புடன் வந்தவர் கோழியை மனைவியின் கையில் கொடுத்தார்.

“இன்றைக்கு சாப்பிட்டுட்டு தான் போகணும்!” என்ற அன்புக்கட்டளையுடன் மஞ்சு எழுந்து ஹாலை ஒட்டி இருந்த சிறிய சமையலறைக்குள் நுழைய மைத்தி தான் வாங்கி வந்திருந்த ஷர்ட்டை சமந்தவிடம் தந்து விட்டு அவரை பின் தொடர்ந்தாள்

“நான் இரண்டு மணிக்கெல்லாம் அங்கே இருக்கணும் ஆன்ட்டி..இன்னொரு நாள் சாப்பிட வர்றேனே..”

“அட இதோ ரெண்டு நிமிஷத்தில் குழம்பு வைத்து விடுவேன். ஏற்கனவே சோறு கறிகளெல்லாம் ஆயிற்று. இனிப்போனால் உன்னை எப்போது காண்போமோ! அதெல்லாம் இரண்டு மணிக்கு முன்னேயே போய் விடலாம்.”

“அப்போ நான் ஏதும் செய்து தரட்டுமா?”

“ஒன்றும் தேவையில்ல. போய் வெளியே ஹால்ல சஜினி கூட பேசிட்டிரு.”

புன்னகையோடு வெளியே வந்தவளுக்கு தொண்டை வரையில் கேள்வி ஒன்று தொக்கி நின்றுகொண்டிருந்தது.எப்படிக்கேட்பது? எங்கே  ஆரம்பிப்பது?

ஹாலில் சஜினியின் அருகில் போய் அமர்ந்தவளின் பார்வை வலப்பக்கமாய் இருந்த சின்ன ஷோ கேசில் போய் ஆணியடித்தது போல நிலை கொண்டது. அதற்குள் சின்னதாய் ஒரு போட்டோ பிரேம். அதற்குள் இந்த சின்னக்குடும்ப அங்கத்தவர்கள் நால்வரும் அடங்கிப்போயிருந்தனர். அவள் தேடியவனோ வழக்கமான மயக்கும் கபில விழிகளும் முறைப்புப்பார்வையும் கொண்டு திமிராகவே நின்று கொண்டிருந்தான்.  

“இது சித்தியோட பொண்ணு கல்யாணத்தன்னிக்கு எடுத்தது மைத்தி அக்கி..”

மாட்டிக்கொண்டவளாய் திடுக்கிட்டாலும் சாதாரணம் போல கேட்டுக்கொண்டு “ஓ… அண்ணா எங்கே சஜி? நான் அவருக்கும் ஒன்று வாங்கி வந்தேன். இதை அவரிடம் தந்து விடுகிறாயா?” இவ்வளவு நேரமும் வாய்க்குள் துடித்துக்கொண்டிருந்த கேள்வியை தயக்கமாய் வெளியே துப்பி விட்டு கையில் இருந்த சின்னதொரு புத்தகப்பார்சலை நீட்டினால் மைத்தி. ‘Born to rule’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது அது.

“கொடுத்துர்றேன்” என்றாள் சஜி..அதை இப்படியும் அப்படியும் புரட்டியபடி

“நான் கே.. கேட்டேன் ..சுகம் கேட்டேன் என்றும் சொல்லிவிடு.”

“அண்ணா இப்பல்லாம் வீட்டுக்கு வர்றதே வாரம் ஒருநாள் தான். டவுன்ல நிலம் வாங்கி வீடு கட்டிட்டான். வேலை படிப்புன்னு அவன் செம பிசி. வரும்போதெல்லாம் அவனுக்கும் அம்மிக்கும் ஒரே சண்டை தான்..”

“சண்டையா எதுக்கு?”

“கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றான்னு அம்மி திட்டுவாங்க…அங்கே அவன் வீட்டுக்கு வந்து இருங்க, இல்லன்னா இந்த வீட்டை பெருசா கட்டுவோம்னு அவன் கத்துவான்”

“ஓ…” கேட்கையிலே முகத்தில் அதிகமான சந்தோஷத்தை காட்டி விட்டோமா என்று மைத்திக்கு பயம் வந்த நொடி சஜியின் கூர்மையான பார்வை அவளை ஊடுருவி பார்த்ததோ?

அன்றைய நாள் இரண்டு மணி வரை அவர்களோடேயே சேர்ந்து சாப்பிட்டு பழைய ஞாபகங்களை எல்லாம் மீட்டி ஆனந்தமானாலும் ஏமாற்றம் பெரிதாக வளர்ந்து கொண்டே இருந்தது. பின்னே இத்தனை மைல்கள் பயணம் செய்து அவள் இங்கே வந்ததே சிந்தகவை பார்க்கத்தானே!

இந்த வருடத்தோடு அவளது நான்காம் வருடம் முடிந்து விடும். இனி இங்கே வர சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னவோ?அவன் எப்படிக்கோபப்பட்டாலும் பரவாயில்லை  கடைசியாய் ஒருதடவை அவனை விழிகளில் நிரப்பிக்கொள்கிறேன் என்று ஆசையோடு வந்தவளுக்கு அந்தக்கொடுப்பினை கூட வாய்க்கவில்லையா?

எண்ணி வந்தபடியே அவனை அழைக்கலாம், இல்லையாயின் இவர்களிடம் கேட்டுக்கொண்டு அவனை போய் பார்க்கலாம். ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்றை செய்துவிட்டு திரும்பி அதே உறுதியுடன் உன்னால் காம்பஸ் திரும்ப முடியுமா? இல்லை என்று தான் மனம் சொன்னது. இந்த இடம் அவளது உறுதியை எப்படிப்பாதிக்கும் என்று தான் இன்று முழுவதும் சாம்பிள் கிடைத்துக்கொண்டே இருக்கிறதே.. வேண்டாம் அவனுடைய இடத்துக்கு வந்து போய் அந்த பழைய ஞாபகங்களை சுவாசித்ததே போதும். திரும்பி விடு மைதிலி அது மட்டும் தான் புத்திசாலித்தனமான முடிவு. அறிவின் கட்டளையை மீறும் துணிவில்லை அவளுக்கு.

இரண்டு மணிக்கெல்லாம் மஞ்சு குடும்பத்தாரிடம் விடைபெற்று கூட வந்தவர்களுடன் இணைந்து இரண்டரை மணியளவில் அவர்கள் வந்த பஸ் மீண்டும் புறப்பட்டது. தன் பின்னே ஓடிய வயல் நிலங்கள், மரங்கள், ஆடிட்டோரியம், மாந்தோப்பு எல்லாவற்றையும் யன்னல் வழி எக்கி ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே வந்தவள் பிரதான வீதியில் இணையும் இடத்தில் விழிகள் நிலைகுத்த அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தாள்

கருப்பு நிற suv வண்டி தெருவோரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க    அதன் பக்கப்புறத்தில் போன் பேசுவது போல சாய்ந்து நின்றுகொண்டு  அவளையே ஊன்றி பார்த்துக்கொண்டிருந்தவன் சிந்தகவே தானா?

கண்களும் பார்வையும் அவனே தான் என்று சொல்ல திடுக் திடுக் என இதயத்தில் ஓட ஆரம்பித்த பதட்ட ரேகையுடன் அவனையே இமைக்காமல் பார்த்தாள் மைதிலி..

அன்றைக்கு பார்த்ததற்கு எவ்வளவு மாற்றம் அவனிடம்? நடை, உடை பாவனை எல்லாமே மொத்தமாய் மாறிப்போயிருந்தது. ஆனால் அவளை ஈர்த்த அவனுடைய திமிரான நிமிர்வும், அடங்காத தலைமுடியும், பார்த்ததுமே அவளை மெஸ்மரிசம் செய்து விடும் கண்களும் அப்படியே மாறாமல்…

இருவரிடமும் அசைவில்லை. அவளது கண்கள் கலங்கி தளும்பி பார்வை தடுமாற, மைதிலி இருந்த வண்டி சிந்தகவை கடந்து ஊர்ந்து பிரதான தெருவில் வேகமெடுத்தது. பிறகு மெல்ல மெல்ல அவளின் கண்களுக்கு அவன் மறைந்தே போனான். விம்மலும் அழுகையும் பொங்கி வர தலையை உள்ளிளுத்துக்கொண்டு சீட்டில் சுருண்டாள் மைத்தி.

இரும்பாக இறுகிப்போன தாடையுடன் கதவை இறுக்கமாய் பற்றிஇருந்தவனும் காலை மண்ணில் கோபமாய் உதைத்தபடி வண்டியில் ஏறி கதவை அறைந்து சாத்தினான். அந்த வண்டியை துரத்திச்சென்று அவளை இழுத்துக்கொண்டு வந்து விட வேண்டும் என்று செல்களெல்லாம் அடம் செய்ய கையாலாகாதவனாய் ஸ்டியரிங்கிலேயே கவிழ்ந்தான் சிந்தக.           

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *