WLM அத்தியாயம் 12
அவசரப்படுகிறேனோ? இது கூட ஒரு வகையில் ஆபத்தான அறுவைச்சிகிச்சை தான். பலனளிக்கலாம்..பலனளிக்காவிட்டால் உயிரே போய் விடலாம். ஆனாலும் அவன் துணிந்து விட்டான். இன்னும் ஒரே ஒரு தடவை போராடிப்பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான். அவன் மீது பற்றிக்கொண்ட நெருப்பை அணைக்கக்கூடியவளே தானும் கூடச்சேர்ந்து எரியும் போது, இருவரின் வாழ்வுக்காகவும் இனி அவன் தானே முயன்றாக வேண்டும்?
மச்சா…மே அஹன்னப்பங்!!!! மறுமுனையில் அலறிய ராஜீவின் குரலை காதில் வாங்காதவனாய் “நீ ஹெல்ப் பண்ணறதுன்னா பண்ணு. இல்லன்னா மாறு!!!” என்று கோபமாய் சொன்னவன் காலை கட் செய்தான்.
ராஜீவ் நிச்சயம் வருவான் என்ற நம்பிக்கை இருந்தது. இந்த உலகில் அவனை உண்மையாய் நேசிக்கும், அவனால் நேசிக்கப்படும் வெகுசிலரில் ராஜீவும் ஒருவனல்லவா.
அடுத்து அம்மாவின் நம்பருக்கு அழைத்தான் சிந்தக.
“ஹலோ புத்தா..” என்றபடி உடனே லைனில் வந்தார் மஞ்சு.
மீண்டும் ராஜீவ் வெயிட்டிங்கில் வந்து கொண்டிருக்க லேசான சிரிப்புடன் அவனை கட் செய்தவன் அன்னையிடம் தொடர்ந்தான்.
ஹலோ அம்மி. சாப்பிட்டீங்களா?
மைத்தியை வார்டுக்கு மாத்தினதும் இப்போ தான் சாப்பிட்டுட்டு பாத்திரம் எல்லாம் கழுவி வைக்க வெளியே கான்டீன் பக்கம் வந்தேன்பா.
ஓ..மைதிலி பேசாம சாப்பிட்டாளா? என்ன சாப்பிட்டா?
என்னதான் பெயின்கில்லர் கொடுத்தாலும் பெயின் இருக்கும் தானே..அதிகமா பேசாம தான் இருந்தா.. லைட்டா பிஸ்கட்டும் பாலும் தான் கொடுத்தேன். அதைக்கூட முழுக்க சாப்பிடல.
ஹ்ம்ம்..நாளைக்கு ஒகே ஆயிடுவா.. ஹ்ம்ம் அம்மா..ஒண்ணு சொல்லணுமே
என்னப்பா..
“நாளைக்கு காலைல ஏழு மணிக்கெல்லாம் நீங்க வீட்டுக்கு போய்டுங்க. அவங்கப்பா வர்றார்ல..” மெல்ல ஆரம்பித்தான் சிந்தக.
“என்னப்பா சொல்ற? அவர் வரட்டும். அவர் கூட இருந்து அவளை அனுப்பிட்டு தான் நான் வருவேன்.”
ஒருதடவை கைகளால் முகத்தை அழுத்தி துடைத்தவன் தொடர்ந்தான். “உங்களுக்கு புரியலம்மா.. அவ வீட்ல சொல்லாம தான் நம்மள பார்க்க வந்திருக்கா. அவங்கப்பா சரியான கோபத்துல இருக்கார், நான் போன் பண்ணப்போவே என் கிட்ட ஒரு மாதிரியா தான் பேசினார். இவளை அவர் இந்த நிலைமைல பார்க்கிற நேரம் நாமளும் அங்கே இருந்தோம்னா அவர் கோபம் தான் இன்னும் அதிகமாகும். அது மைதிலிக்கு எப்படியிருக்கும்? நீங்க வீட்டுக்கு போய்டுங்க. நான் அவர் வரும் வரை மைத்திலி கூட அங்கே இருந்துட்டு அவர் வந்ததும் மெல்ல நழுவிடறேன்..”
கொஞ்சம் மறுமுனை மௌனமானதன் பின்னர் சரியென்றது!
சரிம்மா.. நாளைக்கு என் கூட ராஜீவும் ஹாஸ்பிட்டலுக்கு வர்றேன்னான்..அவன் கூடவே நீங்க வீட்டுக்கு போய்டலாம்.
சரிப்பா…
வச்சிர்றேன்..
ஹ்ம்ம்..
கொஞ்சம் பெரிய பெருமூச்சொன்றை விட்டபடி சாய்வு நாற்காலியில் மொத்தமாய் சரிந்தான் அவன். மேலே நட்சத்திரங்கள் மின்னி மின்னி ஒளிர்ந்து கொண்டிருந்தன. என்னென்னவோ சிந்தனைகள், திட்டங்கள், கணித்தல்கள், ஊகங்கள் எல்லாம் படப்புதிர்கள் போல துண்டுகளாய் கண்முன் விடை கேட்டு மிதப்பதாய் பட்டது. எவ்வளவு நேரம் அப்படியே வானத்தை பார்த்துக்கொண்டு இருந்தானோ தெரியவில்லை. தம்பி தூங்கலையா என்ற சோமரத்னவின் குரலில் கலைந்து எழுந்தான்.
“எல்லாமே பிரிட்ஜ்ல வச்சுட்டேன்..அவ்வளவு தானே?” என்று வினவியவரிடம் ஆமாம் என்று தலையசைத்தவன் பாக்கட்டில் இருந்து ஒரு ஐயாயிரம்ரூபாய் தாளினை எடுத்து அவரை தாண்டிச்செல்லும் போது அவரின் கையில் வைத்து அழுத்தி விட்டு தன்னுடைய அறைக்குள் புகுந்தான்.
மேசையில் அவளுடைய போன் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்தது. மொபைலை சார்ஜரில் இருந்து துண்டித்து எடுத்துக்கொண்டு கட்டிலுக்கு போனவன் சாய்ந்த வாக்கில் அமர்ந்த படி அதை ஆன் செய்தான்..
அந்த சுமியை காண்டாக்ட் லிஸ்டில் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு மெசேஜ் மழையையே பொழிந்து வைத்திருந்தாள் அந்த பெண். மெசேஜ் பால்டரை திறந்தவன் அதில் சுமி என்ற சப் பால்டரை திறந்து டெக்ஸ்ட் பாக்ஸில் நிதானமாய் டைப் செய்ய ஆரம்பித்தான்.
அந்த பெண்ணோடு மேசேஜிலேயே போராடி அவன் விரும்பும் வண்ணம் ஒருவாறு அவளை ஒத்துக்கொள்ள செய்துவிட்டு அந்த மொபைலை சுவிட்ச் ஆப் செய்து அன்றைக்கு அவன் தூங்க வெகுநேரமானது.
காலையில் அவசர அவசரமாய் உணவு காரியரை எடுத்துக்கொண்டு காரை நோக்கி ஏறக்குறைய ஓடினான் சிந்தக. கடைக்கு போய்விட்டு தான் ஹாஸ்பிட்டல் போகவேண்டும். நேரமாகி விடுமே..
அம்மா சஜினியின் ஒரு செட் உடையை அவசரமாக எடுத்து வைத்துக்கொண்டு வந்தார் தான். ஆனாலும் மனம் கேட்காமல் அந்த ஏழுமணி வேளையிலும் அலைந்து திறந்திருந்த ஒரு கடையை கண்டு பிடித்து இலகுவாக அணியக்கூடியதாய் கருநீலத்தில் முன்புறம் பட்டன்கள் வைத்த டாப்ஸ் மற்றும் ஒரு ஸ்கர்ட் வாங்கிக்கொண்டு விட்டான்! ஏழரைக்கெல்லாம் ஹாஸ்பிட்டல் போய் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வார்டை கண்டுபிடித்து உள்ளே சென்றும் விட்டான்.
அப்போது தான் அவளை எழுப்பிக்கொண்டிருந்தார் அம்மா..
கண்விழிக்கும் போதே ஆணொருவனின் பார்வையில் இருக்கும் கூச்சத்துடன் தன் விழிகளை அவன் முகம் தவிர்த்து அந்த அறைமுழுவதும் அவள் படரவிடுவதை உணர்ந்து “இவளுக்கு இதை மாற்ற ஹெல்ப் பண்ணுங்கம்மா” என்று சொல்லியபடி பார்சலை கொடுத்து விட்டு அறையை விட்டு வேகமாக வெளியேறினான் அவன்.
தனித்தனி அறைகளாக இருந்த வார்டுகளுக்கு எதிரே கண்ணுக்கு குளிச்சியாக பூந்தோட்டம் அமைத்து வைத்திருந்தார்கள். பூக்களைப்பார்த்துக்கொண்டே வராண்டாவில் நடந்து வலப்புற வளைவில் திரும்பினான் சிந்தக.
இந்த ஆண்கள் வார்டில் தான் அந்த பையனை அனுமதித்திருக்க வேண்டும். எதிர்ப்பட்ட நர்ஸ் ஒருவரிடம் கேட்டுக்கொண்டு அந்தப்பையனின் அறைக்குள் நுழைந்தான். அந்தப்பையன் இன்னும் நல்ல தூக்கத்தில் தான் இருந்தான்.
இரவு முழுவதும் கால் வலியால் முனகிக்கொண்டே இருந்தவன் காலையில் தான் தூங்கினானாம். அவனுக்கு தலையில் பலமாக அடிபட்டதால் எதற்கு ஸ்கான் உட்பட சகல சோதனைகளையும் செய்து எதுவுமில்லை என்று உறுதிப்படுத்தி விட்டி நாளைக்காலை டிஸ்சார்ஜ் செய்வதாக சொல்லியிருக்கிறார்கள் என்று அவனுடைய தாயார் தகவல் சொன்னார். எதுவுமே இருக்காது என்று ஆறுதல் சொன்னவன் ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் என்று சம்பிரதாயமாய் சொல்லிவிட்டு மீண்டும் மைதிலியின் வார்டை நோக்கி நடந்தான்.
இந்த தடவை அவன் உள்ளே நுழைந்தபோது இருவரும் அறைக்குள் இருக்கவில்லை.
“காலையும் தலையையும் நனைக்க கூடாது. தண்ணீர் பட்டுட்டா காயம் ஆறவே ஆறாது. கொஞ்சநாளைக்கு நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு..எல்லாம் சரியாகிடும்.” பாத்ரூமுக்குள் அம்மா அவளுக்கு அறிவுரை சொல்வது கேட்டது.
மீண்டும் மொபைல் சத்தமிட்டது “அடேய் வெளிய வரப்போறியா இல்லையா?” என்ற ராஜீவின் மிரட்டலுடன்! நாவுக்குள் அடக்கிய சிரிப்புடன் சைலன்ட் மோடில் போட்டுவிட்டு பாக்கட்டில் வைத்து விட்டு நிமிர மைதிலி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
சிந்தகவா? கொக்கா? கண்ணால் பார்த்தே கச்சிதமாய் அவளுக்கு உடை வாங்கிய தன்னுடைய திறமையை தானே மெச்சிக்கொண்டவன் அவள் முகத்தை ஏறிட்டுப்பார்த்தான். அப்போது அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது கண்களை கண்டதும் “நான் செய்வது தவறா?” என்று மீண்டும் முதலில் இருந்து அவனுக்குள் இருந்த ஜென்டில்மன் ஆரம்பிக்கவும் வாசலில் “கொஹோமத நங்கி?” என்ற ராஜீவின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
அவள் நன்றாக இருப்பதாக சொல்லி ராஜீவிடம் புன்னகைத்தாள் மைதிலி.
சாப்பிடீங்க?
“டேய்..அதான் உனக்கு வரலைல்ல? அப்புறமும் ஏண்டா சித்ரவதை பண்ற? விடு!” கேலியாக இடைப்புகுந்த சிந்தகவை அவன் கொலைவெறியாய் முறைக்க ஆரம்பிக்க, அதை கணக்கெடுக்காதவனாய் ரகசியமாய் கைகளை நீட்டி “எங்கே?” என்று சைகை செய்தான் அவன்.
“மைத்தி..அப்பா வர்றதுக்குள்ள சாப்பிட்டு மருந்துகளை போட்டிரு என்ன?” என்றபடி சோமரத்ன கொடுத்த மைதிலிக்கான உணவை எடுத்து ஊட்டிவிடுவதற்காக ஸ்பூனில் அள்ளினார்.
“என் வலக்கை நல்லாத்தானே இருக்கு ஆன்ட்டி. கொடுங்க நானே சாப்பிடுறேன்” என்றவள் கிண்ணத்தை அம்மாவிடம் இருந்து வாங்கி தானே சாப்பிட ஆரம்பித்தாள்.
அவர்களின் கவனத்தை கலைக்காமல் சிந்தக்விடம் “வெளியே வாடா, பேசணும்!” என்று ராஜீவ் அழைத்தான்.
“ஒண்ணும் தேவையில்ல.. அம்மாவ கூட்டிட்டு கிளம்பு..” அவனுடைய நியாயங்களை கேட்க இவன் தயாரில்லை!
“டேய் நான் சொல்றதை கொஞ்சம்..” என்று கவலையாக ராஜீவ் ஆரம்பிக்க சட்டென அவன் கண்களை பார்த்தவன் “என்னை புரிஞ்சுக்கடா…” என்று கெஞ்சலாக சொல்ல ஒரு நிமிடம் அவன் பார்வையை தாங்கி நின்ற ராஜீவ் என்ன புரிந்து கொண்டானோ…பாக்கட்டில் இருந்து சின்ன பெட்டியொன்றை எடுத்து இவன் கைக்குள் திணித்து விட்டு “ஆன்ட்டி நான் கீழே வெயிட் பண்றேன். நீங்க வந்துடுங்க’ என்றுவிட்டு மைதிலியிடமும் ஒற்றை வார்த்தையில் விடைபெற்றுக்கொண்டு வேகமாய் வெளியேறினான்.
இவனுக்கு என்னாச்சு? ஏன் இப்படி பறக்கிறான்? என்று ஒரு நிமிஷம் குழம்பியவர் பிறகு அவனுக்கு என்ன அவசரமோ என்று தானாகவே சமாதானமடைந்து தான் கொண்டு வந்த பையில் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்தார்.
பிறகு மைதிலியின் கையை பற்றி முத்தமிட்டவர் “அப்பா திட்டத்தான் செய்வார். பெத்தவங்களுக்குத்தான் புரியும் இதெல்லாம். நீ கஷ்டப்படாதே..சந்தோஷமா இரு..நல்லா சாப்பிடு. போன் பண்ணு அடிக்கடி” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு கண்கலங்கியபடி அவள் சொன்ன நன்றியையும் பெற்றுக்கொண்டு “பார்த்து அனுப்பிட்டு வா” என்று அவனுக்கும் சொல்லிவிட்டு வேகமாய் ராஜீவை தேடி நடந்தார் அவனுடைய அம்மா
“நானும் வரேன்மா” என்றபடி அம்மாவின் பின்னேயே இரண்டடி எடுத்து வைத்தான் சிந்தக
“இல்லல்ல..ராஜீவ் கீழே தானே இருப்பான் நான் போய்க்கிறேன்” என்றவர் “இதோ பாருப்பா.. என்னை கேட்டால் நீ அவளோடு கூட இருந்து அனுப்பி வைப்பது தான் சரி. பெரியவங்க திட்டத்தான் செய்வாங்க. அதற்காக? எனக்கு போகவே மனதில்லை. ஆனால் என்னவோ நீ சொல்கிறாய் என்பதனால் தான் கிளம்புகிறேன்” என்று அவனுக்கும் சொல்லிவிட்டு நடந்து ஹாரிடோரில் மறைந்தார் மஞ்சு.
அவர் சொன்னதெல்லாம் அவன் காதிலேயே விழவில்லை.மூன்றாண்டுகளின் பின் இருவரும் தனிமையில் ஒரே அறையில்! ஏதோ ஒரு இனம்புரியாப்படபடப்பு தன்னை சுற்றிக்கொள்ள திரும்பி ஒவ்வொரு அடியையும் அழுத்தமாய் எடுத்து வைத்து கதவை நோக்கி நடந்தவன் பிறகு கதவைப்பற்றிக்கொண்டு உள்ளே பார்த்தான். மைதிலியோ அவனை கண்டுவிட்டு கட்டிலில் எழுந்து அமர்ந்தபடி அங்கிருந்த தண்ணீர் பாட்டிலின் லேபிளை மிக முக்கியம் போல படிப்பதாக பாவனை செய்து கொண்டிருந்தாள். வேண்டுமென்று கதவருகில் கைகட்டி நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்! சில நிமிஷங்கள் அவளும் நிமிரவில்லை. அவனும் பார்வையை விலக்கிக்கொள்வதாயில்லை. இறுதியில் வேறுவழியின்றி அவளே நிமிர்ந்தாள்! முகம் முழுக்க சிவந்து போயிருந்தது!
“என்ன தண்ணீர் எங்கிருந்து வருகிறதாம்?” கேலியாக இழுத்தான் அவன்
“இல்லை..லேபிள் புதிதாக இருக்கிறதென்று தான் பார்த்தேன்.” அவள் எதையோ சொல்லி வைத்தாள்
ஹ்ம்ம்… இப்போது நடக்க முடிகிறதா?
அதெல்லாம் பிரச்சனையேயில்லை. இந்த காயம் கூட இப்போ வலிக்கவில்லை! கைதான் என் பிரச்சனை!
ஹ்ம்ம்..சரி.. இருவருக்கும் இடையில் பெரிதாகிக்கொண்டே போன அழுத்தம் இதோ உடையப்போகிறது என்ற நிலையில் இருந்தது.
என் பிரண்ட்ஸ் எப்போ வராங்களாம்? அவளின் அடுத்த கேள்வி அதற்கு அப்படியே குளிர்நீரூற்றி மொத்தத்தையும் அணைத்தது.
“இன்னும் அரைமணி நேரத்துல நாங்கள் ஸ்டேஷன் ரோடுக்கு போய் வெயிட் பண்ணினால் சரியாக இருக்கும்!” என்று அவளின் முகத்தை பாராமலே சொன்னவன் “நீ ரெடியா இரு. நான் போய் டிஸ்சார்ஜ் பார்மாலிட்டீசை முடித்துவிட்டு வருகிறேன்.” என்றபடி வேக வேகமாய் வெளியேறினான்.
எப்போ பார் போகிறேன் என்று துடிப்பவளைத்தான் உன் வாழ்க்கையில் இருந்து விலக்க முடியாமல் தோற்றுப்போகிறாய் என்று அவனுடைய மனமே அவனை கேலி பேசியது
அவசர அவசரமாய் வேலைகளை முடித்து தலைமை வைத்தியரிடமும் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டவன் ரூமை நெருங்கியபோது அவளை ஸ்ட்ரெட்சரில் வைத்து தள்ளியபடி தாதிகள் தயாராய் வந்து கொண்டிருந்தார்கள். மீண்டும் ஒரு தடவை அறையை சரிபார்த்தவன் அவர்களுக்கு முன்னே நடந்து தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு முன்புறமாக வந்தான்.
அவள் முன் சீட்டில் ஏறியதும் ஒரு கையால் பெல்ட் போட தடுமாறுவதை பார்த்துவிட்டு அவளது முகத்தை பாராமலே எக்கி பெல்ட்டை தானே மாட்டி விட்டான். பின்னர் வண்டியை மீண்டும் வேகமெடுத்து ஹாஸ்பிட்டல் வளாகத்தை தாண்டி தெருவில் இறக்கினான்.
“நான் அவங்ககிட்ட சொன்னேன்.. ஐயோ ஸ்ட்ரெச்சர் வேணாம்..நான் நடந்தே வருவேன்னு. ஆனா அவங்க கேக்கல”
சமாதான படலமாமா?
“அது ஹாஸ்பிட்டல் பார்மாலிட்டி..யாரா இருந்தாலும் இப்படியான ட்ரீத்மென்டுக்கு வந்தால் இப்படித்தான் கொண்டுபோய் விடுவார்கள். “ விட்டேற்றியாய் சொல்லிவிட்டு சாலையிலே கவனத்தை வைத்திருந்தான் அவன்
உள்ளே போன ஒரு ஓ.. வோடு அவள் கண்ணாடிப்பக்கம் திரும்ப
நீ அந்த பையனை போய் பார்த்தியா? என்று மீண்டும் ஆரம்பித்தான் இவன்!
“ஆமாம். நேற்றிரவு வார்ட் மாற்றியபோது கொஞ்ச நேரம் வெளியில் இருந்தோம். அப்போது பேசினேன். அவனுக்கு நல்ல அடி!”
சிந்தக பதில் பேசவில்லை..வண்டி பிரதான வீதியில் இருந்து இறங்கி கிளை வீதியொன்றில் திரும்பியது வண்டி..
மைதிலி..
ஹ்ம்ம்..
நேற்று ஏன் இங்கே வந்தாய்?
சட்டென முகம் வெளுக்க நிமிர்ந்தவள்..”ரொம்ப நாளாச்சு..எல்லாரையும் பார்த்து..இனிமே வர முடியுமோ தெரியலைன்னு பார்த்துட்டு போகலாம்னு தான்..” திக்கி திணறி பதில் சொன்னாள்
பொய்.. ஏன் இங்கே வந்தாய்? யாரை பார்க்க இங்கே வந்தாய்?
அவனது அதட்டலில் முகத்தை ஏறிட்டு பார்த்தவளின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
அழாதேடி! இப்படி பார்த்து பார்த்து தான் என் வாழ்க்கையை நாசம் பண்ணினே! அப்படியே போக வேண்டியது தானே… ஏமாத்துக்காரி போய்ட்டான்னு நான் நிம்மதியா இருந்திருப்பேனே..மறுபடி வந்து புண்ணை கிண்டி கிளருறதுல அப்படியென்ன அல்ப சந்தோசம் உனக்கு? ஆவேசமாய் கேள்வி கேட்டான் அவன்
சிந்தக….
என் பேரை சொல்லாதே! வந்தாச்சு..பார்த்தாச்சு.. நான் போறேன்னு கண்ணுல தண்ணிய காட்டிட்டு திரும்பி போயாச்சு..அப்புறம்?
…..
இனிமே என்ன ப்ளான்னு கேட்டேன்! நடந்ததை எல்லாம் மறந்துட்டு யாராவது வெளிநாட்டு மாப்பிள்ளை கூட….
சிந்தக!!!!!!!
என்னடி? நான் தப்பா சொல்லிட்டேனா? நீ தான் என்னை பார்க்கவே வரலியே..எங்க வீட்டுக்காரங்களை தானே பார்க்க வந்த? அவ்வளவு தூரம் என்னை மறந்துட்ட உனக்கு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்குறது மட்டும் கஷ்டமா?
என்னை கொல்லாதீங்களேன்… என்று சொல்லியபடி அவள் முகத்தை தன் ஒரு கையால் மூடிக்கொண்டு அழ ஆரம்பிக்க வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு அவளுடைய கரத்தை வலுக்கட்டாயமாக முகத்தில் இருந்து விலக்கினான் அவன்.
“நீ என்னை கொல்றதை விடவா? ஒருநாளைக்கு புரிஞ்சுக்கிட்டு நீ வருவே வருவேன்னு ஒவ்வொரு நாளும் நம்பிக்காத்திருந்தேன்.இப்போ கூட.. ச்சே..நான் யாருக்கு என்ன பாவம் பண்ணினேன்” தன்னுடைய நெற்றியில் அவன் அறைந்துகொள்ள மன்றாட்டமாய் அவன் கையை பற்றியவள்
“நான் தான் பாவம் பண்ணினேன்.. உங்களை விட இவ்வளவு வேறுபாடுகளோட பிறந்தது என் தப்பு..அப்படியிருந்தும் மனசில உங்களை நினைச்சது தப்பு.. இப்போ கடைசியா உங்க முகத்தை பார்த்துட்டு இனிமே ரொம்ப தூரமா எல்லாரையும் விட்டு தனியா போயிடணும்னு கிளம்பி வந்தேனே அது ரொம்ப பெரிய தப்பு!!!” விம்மலுடன் பேசியவளின் விழிகளில் கண்ணீர் அருவியாக கொட்ட ஆரம்பிக்க அவளின் முகத்தை பிடித்திழுத்து தன் நெஞ்சில் அழுத்தினான் அவன்.
“மூணு வருஷத்துக்கு முன்ன இருந்தது போல இப்போ எதுவுமே இல்லடி. எல்லாமே மாறிப்போச்சு. முன்னெல்லாம் உன் ஊர்ப்பக்கம் காலே வைக்காத நான் இடைப்பட்ட காலத்துல எத்தனை தடவை போனேன்னு எனக்கு ஞாபகம் இல்ல..அந்தளவுக்கு காலம் மாறிப்போச்சு. அதைவிட, நம்ம சந்தோஷத்துக்காக நாம கொஞ்சம் போராடுறதுல என்ன தப்பு? ஏன் ரெண்டு பேரையுமே வருத்திக்கிட்டு பிரிஞ்சு போறதுலே குறியா இருக்க?” அவனின் ஆதங்கம் பேச்சிலும் குரலிலும் அப்படியே வெளிப்பட்டது
“இல்ல… சிந்தக எதுவுமே மாறல..மாறினது போல வெளியே கலர் பூசுறாங்க. ஆனா மனுஷங்க அப்படியே தான் இருக்கோம். எங்கப்பாம்மா மனசை உடைக்க என்னால முடியாது. “
“அதுக்காக என்னோட மனசை உடைக்கறதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல அப்படித்தானே!!!”
“கூடவே நானும் தானே உடைஞ்சு போயிருக்கேன்..ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்களேன்..” அவள் கெஞ்சினாள்
பல்லை கடித்தபடி வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்தவன் வேகம் கூட்டி பறந்தான்.. வரும் கோபத்துக்கு அப்படியே வண்டியை ஏதாவது கட்டிடத்தில் மோதி வெடிக்க வைத்து விட்டு அப்படியே செத்துவிட்டால் என்ன? என்று கூட சிந்தனை வந்தது அவனுக்கு..பயணம் முழுக்க விம்மலும் கண்ணீருமாய் இருந்தவளின் பக்கம் அவன் திரும்பக்கூட இல்ல.
வண்டி ஸ்டேஷன் ரோடின் பின் புறத்தில் ஏறி அவன் சொன்ன சந்தியை நெருங்கி விட்டிருந்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தியவன் பேசாமலே அமர்ந்திருந்தான்.
மெதுவாக அவனது கைக்கு மேல் தன் கையை வைத்தாள் அவள்.
“சாரி சிந்தக.. நாம சேர்ந்தா வரப்போற சிக்கல்களும் என் அப்பா அம்மாவுக்கு அவை கொடுக்க கூடிய வேதனைகளும் ரொம்பவே அதிகம். இந்த மூணு வருஷத்துல உங்களை பார்க்கணும்னு நான் நினைக்காத நாள் இல்ல. ஆனாலும் அதுக்குப்பிறகு நடக்கப்போறவைகளை சந்திக்கிற துணிச்சல் எனக்கு இல்லவே இல்ல. அதுதான் நீங்க என்னை வெறுத்துடுவீங்கன்னு கணக்குப்போட்டு தள்ளியே இருந்தேன்.. ஒரு வேளை என்னை மறந்து நீங்க உங்களுக்கான வாழ்க்கைக்கு திரும்பியிருந்தால் நான் வந்து அதை கலைச்சிடக் கூடாதுன்னும் அப்படி வந்தா என்னாலேயே உறுதியா இருக்க முடியாது என்ற பயத்துலயும் தான் நேத்தும் உங்களை வந்து பார்க்கல..”
“உங்க வீடு, உங்களை சேர்ந்தவங்க, உங்களோட வளர்ச்சி, தூரத்துல இருந்து பார்த்த நீங்க…இதெல்லாமே எனக்கு போதுமா இருந்திச்சு..நான் இப்படியே மேல்படிப்புன்னு சொல்லி எங்காவது போய்டுவேன். உடனடியா இல்லைன்னாலும் நீங்களும் உங்களுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு பொண்ணை பார்ப்பீங்க.. சந்தோஷமா இருப்பீங்க. நான் போறேன் சிந்தக.. என்னை விட்ருங்க.. “
மூச்சு விடாமல் பேசியவளை பார்த்துக்கொண்டே இருந்தவன் அதற்கு மேல் பேசமுடியாமல் அவள் விக்கி விக்கி அழவும் தன்னுடைய பார்க்கட்டில் இருந்து வெட் டிஷூவை எடுத்துக்கொடுத்தான்.
“சரி. அழுகையை நிறுத்தி முகத்தை துடை. உன் பிரண்ட்ஸ் இப்போ வந்துருவாங்க.”
தலையசைத்தபடி மறுக்காமல் வாங்கியவள் முகத்தை துடைக்க இரண்டாம் நிமிஷம் அப்படியே மயங்கி தொய்ந்து அவன் தோளிலேயே சரிந்தாள்!
“எனக்கு வேற வழி தெரியலடி..உன்னை என்னால விட்டுக்கொடுக்கவே முடியாது. இதனால் வர்ற விளைவுகளை நானே ஏத்துக்கிறேன். நீ என்னை புரிஞ்சுகிட்டா மட்டும் எனக்கு போதும்” மயங்கி தன் தோளில் கிடந்தவளிட்ம் மானசீகமாய் சொன்னவன் அவளுடைய தலையை குஷனை கொண்டு முட்டுக்கொடுத்து விட்டு வேகமெடுத்து பிரதான வீதியில் வலப்பக்கம் திரும்பும் சந்தியில் திரும்பி பறந்தான். அவன் ஓட்டிய வேகத்துக்கு அரைமணி நேரத்துக்கெல்லாம் அவனுடைய வீட்டுக்கு செல்லும் உயரப்பாதையில் வண்டி ஏற ஆரம்பித்திருந்தது.
WLM அத்தியாயம் 11
நீ பிரிந்து போனபோது ஒரு கையாலாகாதவனாய்த்தான் கைகட்டி கண்ணீரோடு நின்றேன். நீ திரும்பி எனக்காக வருவாய் என்பதை மந்திரம் போல மனதில் உச்சரித்துக்கொண்டே வெறித்தனமாய் உழைத்தேன். என் கம்பனிப்பெயரை “மச்சி” என்று மாற்றியபோது எல்லோரும் இளையவர்கள் மனதைக்கவரும் சொல்லை நான் கண்டுபிடித்து வெற்றிக்கனியை பறித்துவிட்டதாக என்னை புகழும் போது வாய்விட்டு சிரிக்கத்தான் தோன்றும் எனக்கு! அந்த சொல்லில் நீயும் நானும் தான் இருக்கிறோம் என்று அவர்களுக்கெல்லாம் புரியுமா என்ன? . வெறும் பெயராக உடனிருந்தே என்னை வெற்றியெனும் விண்ணை தொடவைத்தவள் நீ..உன்னை எப்படியடி விட்டுத்தருவேன்?
அவள் கொடுத்துப்போன புத்தகத்தை கையில் சிலுவை சுமப்பவனை போல சுமந்து கொண்டு வந்து வண்டியில் ஏறினான் சிந்தக.
காரின் உள்ளே கதவடைத்துக்கொண்டதும் கரையுடைத்துக்கொண்ட உணர்வுகளை கட்டுப்படுத்த அவனுக்கு வழி தெரியவில்லை!
போயே விட்டாளா? மைதிலி அவனுக்கு இல்லவே இல்லையா?
கையில் இருந்த புத்தகத்தில் பார்வையை பதித்தான் அவன்.
ஆளப்பிறந்தவனாம்!! மடச்சி! அன்றிலிருந்து இன்றுவரை நான் ஆள நினைப்பது உன் ராஜ்யத்தினை மட்டும் தான். மனதுக்கினியவள் கை சேராவிட்டால் உலகையே ஆண்டுதான் என்ன பயன்?அது ஏன் உனக்கு புரியவே இல்லை? கோபமாய் புத்தகத்தை தூக்கி தூர வீசியவன் அது பரிதாபமாய் விழுந்து பக்கங்களை படபடக்க மைதிலியின் கையெழுத்து நீல மையில் எழுதப்பட்டிருந்தது இவன் கண்ணில் பட்டது!
“ஆல் த பெஸ்ட்” என்ற வாசகத்தில் என்று எழுதி இறுதியில் மொட்டையாக மைதிலி என்று கையொப்ப மிட நினைத்திருக்கவேண்டும். மைதிலியின் இறுதி y கலங்கிக் கலைந்திருந்தது. அது ஏன் என்று சிந்திக்க வேறு வேண்டுமா என்ன?
அவன் கைகள் கோபமாய் ஸ்டியரிங்கை இறுக்கின.
எதற்காக இந்த துன்பம்?
மூன்று வருஷமாக…
நாட்டில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன..
அவளும் புரிந்துகொள்வாள். நம்மிருவர் நடுவில் காதல் என்ற இணைப்பு இருக்கும் வரை இவ்வேற்றுமைகளால் நம்மை காயம் செய்ய முடியாது, எல்லா தடைகளையும் அதுவே உடைக்கும் என்று அவளுக்கு தெரிய வரும்
என்னைத்தேடி என்னோடு வாழ அவள் வருவாள்
என்றெல்லாம் நம்பி இருந்தது ஆண்டுகள் ஒன்றாய் ரெண்டாய் மூன்றாய் கடக்க கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்டம் காண..அவள் தன்னை நிஜமாகவே மறந்துவிட்டாளா? இனிமேல் இன்னொருத்தனை திருமணம் செய்து கொண்டு போய்விடுவாளா? போன்ற தேவையில்லாத கற்பனைகளும் அதன் விளைவாய் பொங்கிவரும் கோபமும் அவனுக்கு பழகிப்போயிருந்தது.
பாவி துரோகி..துவேசி..எப்படியெல்லாம் அவளை அர்ச்சித்தாலும் ஒரு நாளில் ஒரு முறையாவது என் மைத்திக்குட்டி என்று அவன் மனம் கொஞ்சாமல் இருந்ததே இல்லை. கானல் நீராய்த்தான் தன் காதல் போய் விட்டது..இனிமேல் காலம் முழுக்க அவனுக்கு அவளது ஞாபகங்கள் தான் கதி என்ற முடிவுக்கு அவன் எப்போதோ வந்திருந்தான்.
அந்த சோளத்தொட்டம், மாதுளை நிலம், அம்மாவின் பிறந்தநாள், அவனுடைய அலுவலகம் என்று அவள் விட்டுப்போன நினைவுகள் அவனை கொல்லும். ஸ்க்குவீசீஸ் ஆக ஆரம்பித்த தொழிலை இப்போது டவுனில் வேறு பெயரில் மிகப்பெரிதாய் விரிவுபடுத்தி அதை வெறும் ஸ்டோராக்கி வைத்திருந்தாலும் அந்த மாதுளை நிலத்தில் உழைப்பதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை. ஒரு வகையில் அந்த உடலுழைப்பு அவனுக்கு சிந்தனைகளில் இருந்து விடுவித்து தூக்கத்தை வரவைக்கும் ஒரு வழியாக கூட இருந்தது உண்மை.
எப்போதாவது இரவின் தனிமையில் தங்களுக்கு சம்பந்தமே இல்லாத பிரச்சனை ஒன்று அவர்களின் காதலை சிதைக்கிறதே என்று வேதனை கொள்ளும் தருணங்களில் அவளை தேடிப்போகவேண்டும். மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று மனம் உந்தி தள்ளுவதுமுண்டு ஆனால் அவ்வளவு தூரம் கெஞ்சி கேட்டும் விட்டுப்போனாள் அல்லவா..அவளே உணர்ந்து அவன் மட்டும் போதுமென திரும்பி வருவது தான் என் காதலுக்கும் எனக்கும் கௌரவம் என்ற எண்ணத்தில் அவன் பல்லைக்கடித்துக்கொண்டு காத்திருந்தான்.
இன்றைக்கு அம்மா அவள் வந்துவிட்டு போகிறாள் என்று தகவல் சொல்லியதும், ஓரளவுக்கு அவர்களை புரிந்து வைத்திருந்த தங்கை அவள் அவனை கண்ணீருடன் கேட்டாள் என்று சொன்னதும் அவள் அவனைத்தேடி வந்துவிட்டாள் என்று எண்ணவைத்ததில் ஒருகணம் அவன் மகிழ்ந்து தான் விட்டான். அவள் நினைத்தால் அவனுக்கு போன் செய்திருக்கலாம். வீட்டில் கேட்டுக்கொண்டு அவனை தேடி வந்திருக்கலாம். ஆனால் வெட்டியது போல விலகிப்போனவள் தன் வீட்டுக்கு திரும்பி வந்ததே தனக்காக தான் என்று மனதுக்கு தெரிந்திருந்ததே..வேறேதும் யோசிக்கவில்லை அவன். அவளை பார்த்து விட வேண்டும் என்று தான் அவர்கள் கடக்கும் இடத்தை அனுமானித்து போய் நின்றான். பஸ்ஸை நிறுத்தி பேசுவது தான் அவனது நோக்கமாக இருந்தது. ஆனால் வளைவில் பஸ் திரும்பும் போதே இருவரும் பார்த்துக்கொண்டு விட்டார்கள்.
கண்டதும் தன்னிடம் ஓடி வந்து இறுக்கிக்கொள்ளும் உணர்வுகளை முகத்தில் காட்டுவாள் என்று இவன் இருக்க கையாலாகாத்தனமும் ஏக்கமுமாய் விம்மி வெடித்தபடி அவள் தலையை உள்ளிழுத்து புதைத்துக்கொள்ள பூமியே காலடியில் நழுவியது அவனுக்கு!
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறதா?
மூன்று ஆண்டுகள் இவளை மாற்றவே இல்லையா?
இப்படி பார்த்து கண்ணீர்விட்டு அழத்தான் இங்கே வந்தாளா? அவனை சேர இல்லையா?
இனி பஸ்ஸை நிறுத்தி பேசி என்ன ஆகப்போகிறது? விரக்தியாய் எண்ணியபடி பஸ்ஸையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அம்மாவிடம் ஏதும் தகவல் தந்திருப்பாளோ குறிப்புக்கொடுத்திருப்பாளோ என்ற நப்பாசையில் அம்மா வீட்டை நோக்கி வண்டியை ஓட்டி வந்திருந்தான் அவன். ஆனால் இன்னும் அப்படி நம்புவதற்காக தன் மேலே வெறுப்பும் விரக்தியும் தோன்றாமலில்லை.
அவனுக்கு மட்டும் உரிமையாய் தந்தது என்றும் சொல்ல முடியாமல், ஒரு கடமைக்கு கொடுத்ததென்றும் சொல்லமுடியாமல் அவனுக்கென்று தேடி வாங்கப்பட்டிருந்த அவளது பரிசே அவனுக்கு அவள் இன்னும் அதே இருதலைக்கொள்ளி எறும்பு நிலையில் தான் இருக்கிறாள் என்று சொல்லி விட்டது. அதற்கு மேல் அவளின் கதைகளை கேட்டுக்கொண்டிருக்க பிடிக்காமல் தன் வீட்டுக்கு கிளம்பி விட்டான் அவன்.
அவள் வராமல் இருந்திருந்தால் கூட அவனுடைய வாழ்க்கை பழகிய தாளத்தில் நகர்ந்திருக்கும். வந்து மீண்டும் மொத்தமாய் கலைத்து விட்டல்லவா போய்விட்டாள்.
அன்றைக்கு உடைந்து நின்றபோது அவள் வருவாள் என்ற நம்பிக்கை இருந்தது..அவளுக்காக வாழ்க்கையில் முன்னேறும் வெறி இருந்தது. ஆனால் இன்று? வரவே மாட்டாள் என்று தெளிவாகவே புரிந்தாயிற்று. இனிமேல் எப்படி மீளப்போகிறான் அவன்?
மீதமிருக்கும் வாழ்க்கை முழுக்க அவளை விட்டுவிட்டு அவன் மட்டுமே தான் தனியாக கழிக்க வேண்டுமா? நினைக்க நினைக்க நெஞ்சு காந்திப்போனது அவனுக்கு.
அவனுடைய வண்டி பாதையை விட்டு பிரிந்து தாரிட்ட தனியார் பாதை வழியாக மேலே ஏறியது. இருபக்கமும் மரத்தோப்புக்களிடையே அமைதியாக நின்றுகொண்டிருந்தது அந்த இரண்டு மாடி ஓட்டு வீடு.
இருவருடைய இடங்களையும் விட்டு விட்டு தலைநகர் போய்த்தான் ஒன்றாக இணைந்து வாழ்தல் சாத்தியம் என்பது யார் சொன்னது? அவனுடைய வேரிலேயே அவளுக்கொரு கூட்டை உருவாக்க முடியும். அதில் அவளுடைய மொத்த அடையாளங்களுடன் அவளை சந்தோஷமாக வாழ வைக்கவும் முடியும் என்பதை வைராக்கியமாக கொண்டு தான் இந்த வீட்டினை ஆசையாசையாய் கட்டினான் அவன். மைதிலியும் சிந்தக்கவும் வாழும் வீட்டில் அவனுடைய புத்தனும் அவளுடைய சிவனும் ஒன்றாக இருக்க முடியாதா? மென் பச்சை வர்ணமடிக்கப்பட்ட வீடு, ஹாலின் மூலையில் அருகருகே இருவருக்கும் தனியான பூஜையறைகள். ஒரு முறை அவள் தங்களுக்கு காட்டிய தன்னுடைய வீட்டுப்படங்களை நினைவு கூர்ந்து அதே போல தன் வீட்டின் மூன்று மூலைகளிலும் யாழ்ப்பாணத்து கறுத்தக்கொழும்பான் மாமரங்களைக்கூட நாட்டி வளர்த்திருந்தான் அவன்.
இன்றைக்கு எல்லாமே அவனை பார்த்து சிரிப்பதாக பட்டது. இனிமேல் என்ன செய்யப்போகிறேன்.. அவனுக்குள் அந்த கேள்வி தான் பூதாகரமாய் முளைத்து நின்றது. கதவைக்கூட தாளிடாமல் சோபாவில் சரிந்து விழுந்து முகட்டை பார்க்க ஆரம்பித்தவனை கிச்சனில் இருந்து மெல்ல எட்டிப்பார்த்து விட்டு மீண்டும் உள்ளே திரும்பிக்கொண்டார் சமையல் காரர் சோமரத்ன.
‘உன்னைப்போலவே அவளாலும் நிச்சயமாய் இன்னொரு வாழ்க்கை அமைத்துக்கொள்ள முடியாது. அப்படியானால் உங்கள் இருவரின் நன்மைக்காக இன்னொரு முயற்சி செய்வதில் என்ன தவறு? இந்த தடவை நீ ஏன் அவளை தேடிப்போகக்கூடாது?’
திடுமென எங்கிருந்தோ வந்த அந்த எண்ணம் அவனை ஒருமுறை உலுக்கிவிட ஹாலின் மூலையில் அமைதியாய் சம்மணமிட்டிருந்த புத்தரின் காலடியில் இருந்து புகைந்து கொண்டிருந்த ஊதுபத்தியின் மணத்தை போலவே அந்த எண்ணமும் அவனை மீறிக்கொண்டு அவனுக்குள்ளே வியாபித்தது.
“தம்பி போன் அடிக்கிது பாருங்க..” சோமரத்ன அவனை உலுப்பும் வரை தூக்கமும் இல்லாத விழிப்பும் இல்லாத நிலையில் சுயம் மறந்து கிடந்தவன் தொலைபேசியை எடுத்து காதில் பொருத்திக்கொண்டான்.
“புத்தா… யூனிவர்சிட்டி பசங்க வந்த பஸ் ஒண்ணுக்கு ஆக்சிடன்டாம்.. மைதிலி போன பஸ் தானோ தெரியல..எனக்கு கையும் ஓடல காலும் ஓடல..எங்களை தேடி இவ்வளவு தூரம் வந்த பொண்ணு…. “ பேசிக்கொண்டிருக்கும் போதே பதட்டத்தில் தாய் அழ ஆரம்பித்து விட அதிர்ந்து போனவன் “அப்படியிருக்காதும்மா” என்று அவசரமாக மறுத்தான். தாயையும் கூடவே தன்னையும் சமாதானம் செய்யும் முகமாக..
இல்லப்பா..பேராதெனியவுல இருந்து வந்தவங்கன்னு தான் பேசிக்கிறாங்க. ஜெனரல் ஹாஸ்பிட்டல்ல தான் வச்சிருக்காங்களாம் எல்லாரையும்.
“ஒகே ஒகேம்மா.. நீ பதறாம இரு.. மைதிலிக்கு எதுவும் ஆகியிருக்காது. நான் உடனே போய் பார்க்கிறேன்” அதற்குள் சொமரத்னவிடம் சைகை செய்தபடி வண்டியின் அருகே வந்திருந்தான் அவன்.
நான் காத்திட்டு இருப்பேன்பா. உடனே போன் பண்ணு..
சரிம்மா.. போனை அணைத்து விட்டு வண்டியை ஜெனரல் ஹாஸ்பிட்டல் பக்கமாக விரட்டியவன் மனம் முழுக்க அவளுக்கு எதுவும் ஆகி விட கூடாது என்றே ஜபித்துக்கொண்டிருந்தது. யாருக்கும் போன் பண்ணி விசாரிக்கும் பொறுமையெல்லாம் அவனுக்கு இல்லை. போ நேரே போ..அவள் அங்கில்லை என்று நீயே நிச்சயப்படுத்திக்கொள் என்று அவனுக்குள் இருந்து எதுவோ துரத்திக்கொண்டிருந்தது.
அவனை கண்டு ஆங்காங்கே உயர்ந்த விழிகளை பொருட்படுத்தாமல் வேகவேகமாய் ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தவன் நேராக வரவேற்புப்பகுதியில் சென்று விசாரித்தான். கொஞ்சமாய் தான் விபரம் கிடைத்தது.
அவள் போன அதே நீல நிற பஸ் தான்!
அப்போதுதான் கொண்டு வந்து அனுமதித்திருந்த படியால் பெயர் விபரங்கள் ஏதும் தெரியவில்லை இன்னும். இருவருக்கு தான் கொஞ்சம் காயங்கள் பலம்..மற்றபடிக்கு பெரிதாக பாதிப்பில்லை என்று ரிசப்ஷனிஸ்ட் புன்னகைத்தார்.
நேராக தலைமை வைத்தியரை தேடிக்கொண்டு போனான் அவன். இடைப்பட்ட காலத்தில் அவனுக்கு வளர்ந்து விட்டிருந்த செல்வாக்கு நேராக அவரது அறைக்கே அழைத்து சென்றது.
“பஸ் வயலுக்குள் விழுந்ததில் புட் போர்டுக்கு பின்னால் இருந்த பெண்ணுக்கும் டிரைவர் சீட்டுக்கு பின்னே இருந்த பையனுக்கும் தான் கொஞ்சம் அதிகம் அடிபட்டிருக்கிறது மற்றவர்கள் இன்றிரவே வீட்டுக்கு கிளம்பகூடிய அளவு கீறல் காயங்கள் மட்டும் தான்”
புட் போர்டுக்கு பின்னே இருந்தவள் அவள் தானே..அவனை பார்க்கும் போதும் புட்போர்ட் குறுக்குக்கம்பியை பிடித்துக்கொண்டிருந்தாளே.. தன் உடல் விறைத்ததை காண்பித்துக்கொள்ளாமல் அந்த ரெண்டு பேருக்கும் ரொம்ப அடியா என்று விசாரித்தான் சிந்தக.
“பையனுக்கு தான் கால்லயும் கைலயும் ப்ராக்ஷர் ஆகிருக்கு அது போக அங்கங்க அடி பட்டிருக்கு. அந்த பொண்ணுக்கு கைல ப்ராக்ஷர்.. நெற்றியிலயும் கால்லயும் உடைந்த கம்பி ஏதோ லேசாக கிழித்திருக்க வேண்டும். தையல் போட்டிருக்கிறது. இன்றைக்கு இங்கே ஓய்வெடுத்தால் நாளைக்கே வீட்டுக்கு கொண்டு போய்விடலாம்..யாரும் பயப்படும் நிலையில் இல்லை” என்றார் அவர் பதிலாக.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த அப்பகுதி இன்ஸ்பெக்டர் சந்திரஸ்ரீயும் சப் இன்ஸ்பெக்டரும் அவனுக்கு ஒரு புன்னகையை தந்து விட்டு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தனர்.
“டாக்டர் ஒரே நிமிஷம், சாரி போர் த டிஸ்டர்பன்ஸ் சிந்தக.” என்ற சந்திரஸ்ரீயிடம் “இட்ஸ் ஒகே சார். நீங்க பேசுங்க..நான் வேணும்னா வெளியே இருக்கேன்.” என்றபடி எழுந்தான் அவன்
“நீங்க உக்காருங்க..அவ்ளோ பெரிய ரகசியம் எல்லாம் இல்ல.” என்று புன்னகைத்தவர் டாக்டரிடம் திரும்பினார்.
“டாக்டர். ஸ்டேஷன்ல வச்சு எல்லோரோட வீட்டுக்கும் இன்போர்ம் பண்ணிட்டோம். இந்த மயக்கத்துல இருக்கற பொண்ணோட பாக்கை தான் காணோம். மொபைல் சுவிட்ச் ஆப்ல இருக்கு! இந்த கலவரத்துலயும் யாரோ திருட்டுப்பய வேலையை காட்டியிருக்கான். அந்த பொண்ணோட ஆளுங்களுக்கு தான் தகவல் சொல்ல முடியல, அந்த பையன் நாளகவை விசாரிக்கும் போது அவ தமிழ்ப்பொண்ணுன்னு சொன்னான். ஹாஸ்டலுக்கு கால் பண்ணி அவ பிரன்ட்சுக்கு சொல்லிட்டா அவ வீட்டுக்கு அவங்க சொல்லிருவாங்கன்னு சொல்றான் அவன். அங்கே ஹாஸ்டலுக்கு கால் பண்ண முன்னே அவளோட கண்டிஷன் எப்படியிருக்குன்னு தெரிஞ்சுகிட்டா யாரையும் டென்ஷன் பண்ணாம பக்குவமா சொல்லிரலாம்னு தான் உங்க கிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தோம்.”
நெற்றியில் சுருக்கமாக உருவாக தொடங்கியிருந்த சிந்தனைகளின் விளைவால் “இன்ஸ்பெக்டர் சார், ஒரு நிமிஷம்” என்று இடைமறித்த சிந்தகவினை மூவருமே ஏறிட்டனர்.
“சார் மைதிலி.. சாரி..எனக்கு அவளை நல்லாவே தெரியும் சார். இங்கே படிக்கும் போதும் சரி போனப்புறமும் சரி அவ எங்களோட பாமிலிக்கு ரொம்பவே க்ளோஸ். இப்போ கூட எங்க வீட்டுக்கு தான் வந்திருந்தா. அதுதான் விஷயம் தெரிஞ்சதும் நான் ஓடிவந்தேன் . அவளோட அப்பா அம்மாவையும் எங்களுக்கு நல்லாவே தெரியும். நானே அவங்களுக்கு பக்குவமா சொல்லிர்றேன். கவலையை விடுங்க”
நல்லவேளை.. அவ்ளோ தூரத்துல இருந்து பதறிட்டு வரப்போறாங்களே அவ அம்மா அப்பான்னு கவலையாவே இருந்தது. இப்போ தான் நிம்மதியாச்சு. அப்போ நீங்களே பக்குவமா சொல்லிடுங்க தம்பி. இந்த பொண்ணு உங்க பொறுப்பு” என்று சொல்லிவிட்டு அவர்கள் விடைபெற தானும் டாக்டரிடம் விடைபெற்று வெளியே வந்தான் அவன்.
அம்மாவுக்கு அழைத்து மைதிலிக்கு ஒரு இரவுஹாஸ்பிட்டலில் தங்குவதற்கு தேவையான பொருட்களுடன் அன்றிரவு தங்க ஆயத்தமாக ஹாஸ்பிட்டலுக்கு வருமாறு பணித்தவன் ஆக்சிடன்ட் வார்டுக்கு வெளியே அழுத விழிகளும் வெளிறிய முகமுமாக இருந்த யாரோ ஒரு பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்த நாளகவை நெருங்கினான்.
உடனேயே அவனை அடையாளம் கண்டு கொண்ட மற்றவன் சிந்தக அண்ணா என்று ஆச்சர்யமாய் அழைத்தபடி அவனுக்கு அருகில் வந்தான்.
திடீரென்று பஸ் கட்டுப்பாடிழந்து பாதையில் இருந்து விலகி வயலுக்குள் வீழ்ந்ததையும் நடு சீட்டில் இருந்த அவன் காயங்களின்றி தப்பித்ததையும் அதிர்ச்சி இன்னும் விலகாமல் விபரித்தவன் பேராதெனிய பல்கலைக்கழகத்துக்கும் பெற்றோருக்கும் தாங்களே தகவல் தெரிவிப்பதாக சொன்ன போலீசார் பஸ்ஸோடு பாக், பொங்கல் எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விட்டார்கள்,கேட்டால் இதோ தருகிறோம் என்று சொன்னவர்கள் இவ்வளவு நேரமாயும் கொண்டுவந்து கொடுக்கவில்லை. ஹாஸ்டலுக்கு தகவல் சொல்வதற்கு நண்பர்களுடைய நம்பர் மனப்பாடமும் இல்லை. என் வீட்டில் அண்ணாவிடம் நண்பர்கள் இருவரின் நம்பர் இருக்கிறது அப்படித்தான் ஹாஸ்டலுக்கு தகவல் சொல்ல வேண்டும். என்று நீளமாய் புலம்பியவனை யோசனையோடு கையமர்த்தினான் அவன்.
ஏனெலில் மைதிலி வீட்டில் சொல்லிவிட்டு வந்திருக்க மாட்டாள் என்று அவனுக்கு ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது. ஆகவே அதற்குள் விஷயத்தை அங்கே கொண்டு செல்ல அவனுக்கு மனதில்லை. அதனால் தான் சந்திர ஸ்ரீயிடமும் தானே சொல்வதாக பொறுப்பெடுத்து செய்தி சேர்வதை தாமதித்தான். எதுவானாலும் மைதிலி விழித்ததும் முடிவு செய்யட்டுமே என்பதுதான் அவனுடைய எண்ணமாக இருந்தது.
“அவசரப்படாதே தம்பி. சொல்ல வேண்டிய பெற்றோருக்கு தெளிவாக சொல்லியாயிற்று தானே..இப்போ நீ போன் பண்ணி ஹாஸ்டலுக்கு சொல்ல அங்கே விஷயம் பரவி மாறி மாறி எல்லோரும் ஆக்சிடன்ட் ஆனவர்களுக்கு போன் செய்து அவர்கள் போன் எடுக்காவிட்டால் பதட்டப்படுவார்களே. போலீஸ் இங்கிருந்து போய் தான் திரும்ப அதையெல்லாம் எடுத்து வருவார்கள் என்று நினைக்கிறேன். அதை விட நான் வேண்டுமானால் இங்கே இன்ஸ்பெக்டரிடம் கேட்டுக்கொண்டு எங்கள் அலுவலக வண்டியொன்றில் அவற்றை எடுத்துக்கொண்டு வந்து தர சொல்கிறேன். அதன் பிறகு போன் போட்டு சொல்.” என்றவன் நாலகவையும் அழைத்துக்கொண்டு இன்ஸ்பெக்டரை நாடி சென்றான்.
அவன் நினைத்தபடியே அவரும் நாங்கள் ஸ்டேஷனுக்கு போய்த்தான் வண்டியை அனுப்ப முடியும். அங்கே வண்டியை அனுப்பி பொருட்களை எடுக்க முடிந்தால் தங்களுக்கு ஒகே என்று தெரிவித்தார்.
அலுவலகத்துக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னவன் நாலகவிடம் திரும்பினான். இப்போ ஒரு ஒருமணிநேரத்துல திங்க்ஸ் வந்துரும். சரி பார்த்து எடுத்துக்கோ என்றவன் அதற்குள் வராண்டாவில் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்த தாயாரை கண்டு அவனிடம் விடைபெற்றான்
தாங்க்ஸ் அண்ணா..
இருக்கட்டும் என்பதுபோல் அவனுடைய புறங்கையில் தட்டிக்கொடுத்துவிட்டு அம்மாவை எதிர்கொண்டு நடந்தான் அவன்.
என்னப்பா இப்படியாயிருச்சே என்று கலங்கியவரின் தோள்களில் கைபோட்டவன் “ மைத்திக்கு ஒண்ணுமில்லம்மா..நாளைக்கே வீட்டுக்கு கூட்டிட்டு போலாமாம். கைல மட்டும் தான் ப்ராக்ஷர். பயப்படாதீங்க” என்றபடி நடத்திக்கொண்டு வந்து அவள் இருந்த ஐ சி யூ வார்டுக்கு முன்னே அவரை அமர்த்திவிட்டு தானும் அமர்ந்து கொண்டான்.
சற்று நேரத்துக்கெல்லாம் “ மைதிலிக்கு இன்னும் ஒரு மணிநேரத்தில் விழிப்பு வந்துவிடும். அதன் பின் சாதாரண வார்டுக்கு மாற்றிவிட்டு காலை பத்துமணியளவில் டிஸ்சார்ஜ் செய்யலாம்” என்று அவளை பரிசோதிக்க வந்த டாக்டர் சொல்லிவிட்டு அவர்களை உள்ளே அனுமதித்து விட்டுப்போனார்.
வேகவேகமாய் முன்னே நடந்த தாயாரை தொடர்ந்து தானும் உள்ளே நுழைந்தான் சிந்தக.
நெற்றியில் இரண்டு தையல்களாம். ஆனால் முழு நெற்றியையும் மறைத்து பிளாஸ்டர் போட்டு விட்டிருந்தார்கள். வலக்காலில் பாண்டேஜ் போட்டிருந்தார்கள். அங்கும் நான்கு தையல் போட்டிருப்பதாக சொல்லியிருந்தார்கள். தையல்கள் கரையும் வகை தானே..ரெண்டு வாரத்தில் ஆறிவிடும். ஆனால் இடக்கை தான் பாண்டேஜ் போட்டு கழுத்தை சுற்றி மாலையிடப்பட்டிருந்தது. எலும்பு பொருந்த ஒரு மாதமாவது எடுக்காதா? அதிர்ச்சியிலும் இரத்தப்போக்கிலும் இமை மடல்கள் வரை வெளிறிப்போய் படுத்துக்கிடந்தவளை இமைக்காமலே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
ஏன் உன்னை சந்தித்தேன்.. ஏன் உன்னிடம் ஈர்க்கப்பட்டேன்..
சரி இது நடக்காது என்று தெரிந்தபின்பும் ஏன் உன்னை கடந்து போக இயலாமல் இருவருமே ஏன் இப்படி வதைபடுகிறோம்?
அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் சிந்த்தக. கிட்டத்தட்ட மூன்று வருடங்களின் பின் இவ்வளவு கிட்டத்தில் அவளின் முகத்தை பார்க்கிறானல்லவா? எந்தவித மாற்றங்களும் இல்லை. முகத்தில் இருந்த பழைய குழந்தைத்தனம் கொஞ்சமே கொஞ்சம் விலகி லேசான முதிர்ச்சி எட்டிப்பார்க்கிறதோ? தலைமுடியை மொத்தமாக சுருட்டி உச்சியில் கொண்டையிட்டிருந்தார்கள். உடைகளும் நகைகளும் மொத்தமாய் களையப்பட்டு ஹாஸ்பிட்டலின் பச்சை ஓவர் கோட் மட்டும் போட்டு விட்டிருந்தார்கள்.
இன்னும் பச்சை நிறம் பிடிக்குமா அவளுக்கு?
இறுக்கத்தையும் மீறிக்கொண்டு புன்னகை ஒன்று அவன் உதட்டில் முளைத்தது.
“மைத்திக்கு அவளோட அப்பான்னா உயிர்..பாரேன் இப்போ கூட அப்பா அப்பான்னு சொல்லிட்டிருக்கா.. “தாயார் சொல்லியபடியே அவளின் காலை சீராக வைக்க அவற்றின் குரலில் பட்டென்று உணர்வுக்கு வந்தவன் அவளை ஊன்றி கவனித்தான்.
ஆமாம். மிக மெதுவாக அவளது உதடுகள் முனகிக்கொண்டிருந்தன. மயக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல்….
சுமி…
அப்பாக்கு..தெரியாது..
அப்பா…
சுமி என்னை ….கூட்டிட்டு போ..
நான் நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது. இவள் வீட்டில் சொல்லிவிட்டு இங்கே வரவில்லை. ஆக வீட்டுக்கு நம் விஷயம் தெரிந்திருக்கிறது! எது எப்படியோ இன்ஸ்பெக்டர் சொல்லாவிட்டாலும் ஆக்சிடென்ட் விஷயம் ஹாஸ்டலுக்கு போனால் உடனேயே வீட்டுக்கு தகவல் போகுமே… சிந்தகவின் புருவங்கள் யோசனையாய் நெரிய அவளோ தொடர்ந்து முனங்கி கொண்டிருந்தாள்.
அப்பா நான் தப்பு பண்ணல..
எனக்கு நீங்க வேணும்பா..
நான்… இங்கே… வந்திருக்க கூடாது..
சுமி..
நான் ..ஹாஸ்டல்ல…
திக்கி திக்கி முணங்கிக்கொண்டிருந்தவளின் பேச்சை மிகக்கஷ்டப்பட்டு கிரகித்தவனின் முகம் இரும்பாய் இறுகிக்கிடக்க உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் மெல்ல எழுந்தான் அவன்.
புத்தா..நீ மைத்தியோட அப்பாம்மாவுக்கு சொல்லிட்டாங்களான்னு பார்த்து நீயாவது போன் பண்ணி சொல்லிடு..இவ கண்ணை திறக்கும் போது அப்பாகிட்ட பேசினா ஆறுதலா இருக்கும்ல?
“போலீஸ். சொல்லிட்டாங்கம்மா…மைதிலியோட அப்பாவும் அம்மாவும் நாளைக்கு காலைலேயே வந்துடுவாங்க” என்றவன் விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறி கண்களை சுழற்றி தேடினான்.
இன்ஸ்பெக்டர் சந்திரஸ்ரீயும் சப் இன்ஸ்பெக்டரும் நாலக உடன் தென்பட்டனர். இன்னும் இரண்டு இளைஞர்கள் கையில் கட்டுடன் இப்போது அவர்களோடு இணைந்திருந்தனர்.
அவர்களை நெருங்கினான்
அவனை கண்டதுமே சந்திர ஸ்ரீ..சொல்லிட்டீங்களா அந்த பொண்ணோட வீட்டுக்கு? என்று தான் கேட்டார்.
சொல்லிட்டேன் சார். அவங்க காலைல புறப்பட்டு ஈவ்னிங் வந்துடுவாங்க.. நாளை காலைல மைதிலியை டிஸ்சார்ஜ் பண்ணினதும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம். அவங்க அங்கே வருவாங்க” என்றான் எல்லாருக்கும் பொதுவாக.
சரி தம்பி அந்த பொண்ணுக்கு ஓகேன்னா சரிதான். என்றவர் மீண்டும் போன்களை பிரித்துக்கொடுக்கும் வேளையில் இறங்கி விட்டார். நாலகவின் தோளில் தட்டியவன் “தம்பி உங்க பாட்ச்ல சுமின்னு ..அந்த பொண்ணு பேர் கூட..ஹ்ம்ம்..சுமித்ரா! அவளோட நம்பர் எடுக்க முடியுமா? மைதிலி அவ பேரை சொல்லி தான் ஏதோ முனகிட்டே இருக்கா! கண் விழிச்சதும் அவ கூட பேசினா ஆறுதலா இருக்கும் என்று கேட்டான்.
மே சிந்தக.. மறந்தே போயிட்டேன். மைத்திலியோட போனை யாரும் எடுக்கல. அது வயலுக்குள்ள விழுந்து கிடந்தது. இந்தாங்க..பாக் எல்லாம் ஒரே சக்தி.. அதுதான் பொழுதின் கவர்ல போட்டோம். இதையும் போனையும் அந்த பொண்ணுகிட்ட கொடுங்க என்றபடி பொறுப்பாய் சேறுபடிந்த பாக்கையும் போனையும் அவனிடம் ஒப்படைத்தார் சந்திரஸ்ரீ.
ஒரு கணம் அதிர்ந்து விட்டாலும் முகத்தில் அதிர்வை காண்பிக்காமல் கவனமாய் புன்னகைத்தபடி சின்னதொரு நன்றியோடு வாங்கிக்கொண்டவன் திரும்பி நடந்தான்.
நல்லவேளை அதில் இருந்த மாஜிஸ்ரேட்டின் நம்பருக்கு இன்ஸ்பெக்டர் அழைத்திருந்தால் கதை முடிந்திருக்கும்!. சமூக ஆர்வலனாகவும் திறமையான இளம் தொழிலதிபனாகவும் அவன் வளர்த்து வைத்திருந்த நன்மதிப்பினாலும் நம்பிக்கையாலும் இன்றைக்கு அவன் தப்பித்தான்!!!
மொபைலை ஆப் செய்து பாக்கட்டுக்குள் போட்டுக்கொண்டவன் கதவை தள்ளித்திறந்தான்.
மைதிலி விழித்திருந்தாள்
கதவைத்திறந்ததுமே அம்மா மேல் பதித்து கிடந்த அவளது விழிகள் இப்போது இவன் மேல் பாய்ந்து நிலைகொண்டன.
மீண்டும் சந்தித்து விட்டோமே என்று வருத்தப்படுகிறாளா? என்று கோபமாய் எண்ணிக்கொண்டவன் பார்வையாலேயே அவளை உறுத்து விழித்தபடி அவளை நெருங்கினான்.
அவளது முகமும் கண்களுமோ அவனால் மொழிபெயர்க்க முடியாத அளவு எண்ணற்ற உணர்வுகளை காண்பித்துக்கொண்டிருந்தது. இவைகள் தானே என்னை நாய் படாபாடுபடுத்துபவை என்ற எண்ணம் வர அவனது கோபம் தான் கூடியது.
அவளுக்கு வலிக்கிறதா? பேச முடிகிறதா? ஆறுதலாய் எதையாவது கேள்.. மனம் உந்தித்தள்ளியது ஆனால் அவன் எதையும் கேட்கவில்லை.
தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளின் முகத்தை இறுகப்பற்றி ஏனடி என்னை இப்படி கொல்கிறாய் என்று கத்தத்தான் வாய் நுனி வரை வந்தது!
அவளின் முகத்தருகே இருந்த டேபிளில் இருந்த பாட்டிலை பட்டென்று சரித்து விட்டவன் பிறகு அதை நிமிர்த்தி வைப்பது போல குனிந்து “அப்பா அப்பான்னு சொல்லிட்டே இருந்தியே..நாளைக்கு உங்க அப்பா வந்து உன்னை கூட்டிட்டு போவார். அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்” என்றான்.
அவள் “எங்கப்பாவா?” என்று திக்கி வார்த்தைகளை கோர்த்தாள். அவள் முகத்தில் வந்து போன அதிர்ச்சியை அவனது மனம் கவனமாய் குறித்துக்கொண்டது.
நீங்களா போன்….பண்ணீங்க?
ஆமாம்!
நீங்க யார்னு …சொன்னீங்க?
சிந்தக்க பேசறேன்னு சொன்னேன். என் பெயரை சொன்னதுமே புரிஞ்சுக்கறதுக்கு நான் என்ன அவர் மருமகனா என்று அவன் குத்தலாய் திரும்ப கேட்டான்.
அவள் உதட்டை கடித்துக்கொண்டு ,கண்ணீர் தழும்ப சுவரைப்பார்க்க ஆரம்பிக்க கதவை நோக்கி திரும்பி ஒரெட்டு வைத்தவன் “அம்மா..நாளைக்கு காலைல இவ அப்பா வந்துடுவார்.. அதுவரை நீங்க இருப்பீங்க தானே..ஏதாவது வேணும்னா போன் பண்ணுங்க” என்று தனது மொழியில் அம்மாவுக்கு சொல்லிவிட்டு தாயார் ஒரே கவனமாக பிஸ்கட்டுக்களை பாலில் இட்டு மென்மையாக்கிக்கொண்டிருப்பதை கவனித்துவிட்டு பிறகு மீண்டும் திரும்பி வந்து அவளை நோக்கி குனிந்தான்.
நாளைக்கு காலைல உன் பிரன்ட் சுமியும் இன்னொரு பையனும் காரோட வந்து உன்னை கூட்டிட்டு போவாங்க. நானே பேராதெனிய வரை உன்னை கொண்டு போய் விட்டிருப்பேன். உனக்குத்தான் பிடிக்காதே.. அதுதான் நான் டிஸ்சார்ஜ் பண்ணி ஸ்டேஷன் ரோட் ஜன்க்ஷனுக்கு கூட்டிட்டு வர்றேன் நீங்க கூட்டிட்டு போங்கன்னு சொல்லிருக்கேன்.
அவளது முகம் பளிச்சென மலர்ந்ததை கவனித்தது போலவே காண்பிக்கவில்லை அவன்.
தாங்க்ஸ்.
ஹ்ம்ம்.. என்றபடி அவன் திரும்ப “என் போன்” என்றாள் அவள் அவசரமாக.
சாரி..உன் போனை யாரோ திருடிட்டு போய்ட்டாங்க… உன் பாக்கும் சேறாக்கிடக்கு..வீட்டுக்கு போய் வாஷ் பண்ணி கொண்டு வந்து தர்றேன்.
ஐயோ..சுமி கூட பேசணுமே… உங்க..போனை..கொஞ்சம்.. என்று அவள் தயங்கினாள்
சாரிம்மா.. இப்போ பேச முடியாது. அவ அவசரமா புறப்பட்டதால போன்ல சார்ஜ் இல்ல..காலைல வந்து கால் பண்றவரை தாக்கு பிடிக்கணும்னு ஆப் பண்ணி வைக்கிறதா உன் கிட்ட சொல்ல சொன்னா.
“ஓ”
ஹாஸ்டல் போய் அங்கே என்ன பண்றதா உத்தேசம்?
ரெண்டு வாரம் மெடிக்கல் லீவ் கிடைக்கும். நான் ஹாஸ்டல்லையே ரெஸ்ட் எடுப்பேன். அங்கேயே ஒரு ஹெல்த் செண்டர் இருக்கு..அங்கே செக் பண்ணிக்கலாம்..மீதியை பிரண்ட்ஸ் பார்த்துப்பாங்க..
என்னவோ உன்னிஷ்டம் என்பது போல தோள்களை குலுக்கியவன் “அம்மாகிட்ட உங்கப்பா வர்றதாவே சொல்லிக்க..அவங்க நீ ஹாஸ்டல் போற விஷயத்தை கேள்விப்பட்டா ஒத்துக்கவே மாட்டாங்க..உங்க வீட்டுக்கு நீ சொல்லாம இருக்கறதும் அவங்களுக்கு ஒத்துக்க முடியாதது. ” என்றான்
ஆன்ட்டிக்கு காலைல தெரிஞ்சிடாதா?
“அதை நான் பார்த்துக்கறேன். அப்புறம் வீட்டுக்கு போக முன்னே உன் பிரண்ட்ஸ் உன்னை பார்க்க வருவானுங்க.அவங்க கிட்டயும் அதையே சொல்லிடு..அப்புறம் ஹாஸ்டல் போனதும் எதையாவது சொல்லி சமாளி. ஏன்னா அவங்க முன்னாடி தான் இன்ஸ்பெக்டர் கிட்ட அப்படி சொல்லிருக்கேன். உனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு என்னை மாட்டி விட்டுறாதே.. அப்புறம் நான் மிஸ்டர் மாஜிஸ்ரேட்டுக்கு போன் பண்ண வேண்டியிருக்கும்” என்று அதட்டலாய் சொன்னவன் அன்னையின் ஆர்வப்பார்வையை கவனிக்காதவன் போல திரும்பி நடந்து அறையை விட்டு வெளியேறினான்.
மனதிலோ எண்ணங்கள் புயலாய் அவனை சுழலடித்துக்கொண்டிருந்தன.
WLM அத்தியாயம் 10
“சூழ்நிலைக்கைதியாக நின்றுகொண்டிருப்பது என்றால் என்னவென்று இன்றைக்குத்தான் நான் அனுபவத்தால் உணர்ந்தேன். அத்தோடு காதலி பிரிந்து செல்லும் வலியையும்! ஆம். அவள் என்னை விட்டு மொத்தமாய் விலகி விட்டாள். நான் கூட கண்ணீர் விட்டு அழுவேன் என்று எனக்கு தெரியவைக்க அவள் என் வாழ்க்கையில் வரவேண்டியிருந்தது போலும்!“
‘ஸ்குவீசீசுக்கு’ முன்னே நின்று கொண்டு வண்டியை முறுக்கிக்கொண்டிருந்தான் சிந்தக. ராஜீவின் சலனத்தையே கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை. அவனது பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருந்தது.
என்ன ஆயிற்று மைதிலிக்கு?
இரண்டு வாரங்களாக சிந்தகவின் தலைக்குள் இந்தக்கேள்வி தான் குடைந்து கொண்டிருந்தது. நேரில் என்னவென்று கேட்டுவிடலாம் என்று அவன் தேடிப்போனபோது என்னமாதிரி ஓடி ஒளிந்தாள்!
சந்தோஷமாக இருப்பது போலவும் தெரியவில்லை..அன்றைக்கும் சதா கண்கலங்கியபடி தனிமையில் தான் உட்கார்ந்திருந்தாள். பிரச்சனையை அவனிடம் சொல்லாமல் தானே மனதுக்குள் வைத்துக்கொண்டு தானும் வருந்தி அவனையும் வருத்தி அவள் துன்புறுவதை அவன் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கவேண்டுமா?
போனால் போடி என்று தான் வீராப்பாக இருந்தவன் எனக்கானவள் என்று மனதில் வரித்து விட்டபிறகு அவள் கண்முன்னே கைநழுவிப்போவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
அவளை எப்படி நெருங்குவது என்று தவித்துக்கொண்டு இருந்தவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது இரண்டு வாரங்களுக்கு பிறகுதான்
அவளுடைய பாடச் மாணவர்கள் மகா இல்லுப்பள்ளமவில் தங்களது காலம் முடிந்து செமஸ்டர் இறுதியை நெருங்கும் போது ஒரு மாபெரும் கண்காட்சியை நிகழ்த்துவார்கள். அந்த மாவட்டம் முழுவதும் தாங்கள் அந்த ஆறுமாதங்களாக பழகியவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அந்த வகையில் அந்த அழைப்பு அவனுடைய குடும்பத்தாருக்கும் நேற்று வந்து சேர்ந்திருந்தது. அவர்கள் யாரும் அங்கே செல்லாத நிலையில் தான் மட்டும் தனியாக போய் இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று அவன் முடிவு செய்திருந்தான்.
இன்றைய நாளை விட்டால் இனிமேல் அவளை பார்க்கும் சந்தர்ப்பமே அமையாது. அவளாக அவனை தேடி வரப்போவதில்லை என்று தான் அன்றைக்கு புரிந்து போனதே. இன்றைக்கு சொல்லாவிட்டால் அவனது காதலுக்கு என்றுமே சமாதி தான்.எப்படியாவது இன்றைக்கு அவளிடம் சொல்லிவிடவேண்டும்! அவளுக்கு நான் நீ நினைப்பது போலில்லை என்று புரியவைத்து விடவேண்டும்! மனதில் வெறிபோலவே கொதித்துக்கொண்டிருந்தது அந்த எண்ணம்!
“மச்சா..ரெண்டு பேரும் தானே போகிறோம். ஒரே பைக்கில் போனால் என்ன?” என்று அலுத்தபடி தன்னுடைய பைக்கை எடுத்து வந்து உறுமலுடன் அருகில் நிறுத்தினான் ராஜீவ்.
“ரெடியா போலாமா?” அவனது குரல் காதில் விழுந்தது போலவே காண்பிக்கவில்லை சிந்தக.
“டேய் நீ அங்கே போவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது நானும் அங்கே வரவேண்டும் என்று அடம் பிடிக்கிறாயே என்னடா நியாயம்?” ராஜீவ் விடாமல் புலம்பினான்.
“ஒரு வேளை அவளை நான் கடத்திக்கொண்டு வர நேரிட்டால் எனக்கு உதவி செய்ய நீ இல்லாமலா?” நமுட்டு சிரிப்புடன் சொன்னவன் பைக்கை ஆக்சிலரேட்டிக்கொண்டு சீறிப்பறந்தான்.
“என்னது கடத்தலா? டேய்!!!” என்று அலறியபடி அவனை துரத்திக்கொண்டு பறந்தான் ராஜீவ்.
ஆடிட்டோரியம் அமைந்துள்ள திடலில் குட்டிக்குட்டி குடில்கள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். சுற்றிலும் விவசாயக்குடும்பங்களே இருப்பதனால் நவீன விவசாய உத்திகள் , பெறுமதி சேர்மானம் , கட்டுமானங்கள், வெகு சமீபத்தில் அறிமுகமான தொழிநுட்பங்கள் பற்றிய விளக்கங்கள், சூழல் பாதுகாப்பு போன்ற பல பிரிவுகளை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் சிந்தகவின் கவனம் எங்கேயும் செல்லவில்லை.
அவனுக்கு அங்கே பல மாணவர்களை தெரிந்திருந்ததால் அவர்கள் புன்னகைத்ததும் அவர்கள் நின்றுகொண்டிருந்த குடிலுக்கு சென்று மரியாதை நிமித்தம் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் கண்களால் தன் பார்க்க வேண்டியவளை தேடிக்கொண்டுதான் அவன் அங்கே நடந்து கொண்டிருந்தான். அன்றைக்கு தான் அங்கே மாணவிகள் சிங்கள முறையில் ஓசிரி சேலையும் ஆண்கள் முழு ப்ரொபெஷனலாகவும் formal உடையலங்காரத்தில் இருக்க எதிர்பாராத விதமாய் இத்தனை பெண்களோடு பேசக்கிடைத்த வாய்ப்பில் கிறங்கி அவன் போட்ட குண்டையும் மறந்து ராஜீவ் குடில்களை சுற்றி வந்தான்.
பெறுமதி சேர்மானம் பற்றிய பகுதியே கலகலப்பாக இருந்தது பாலில் செய்யப்படும் இனிப்புவகைகளை மக்களுக்கு செய்முறை மூலமே விளக்கியும் சாப்பிட்டுக்கொண்டும் மாணவர்களும் பார்க்க வந்த பார்வையாளர்களும் உற்சாகமாக உலாவிக்கொண்டிருந்தனர்.
கண்களால் அவர்களை துளாவியபடியே நடந்துகொண்டிருந்தவனின் கண்ணில் ஒருவழியாய் கையில் ஒரு மார்க்கர் மற்றும் போர்ட் சகிதம் பழச்சாறுகளுக்கு சேர்க்க வேண்டிய இயற்கை நிறமூட்டிகள்பற்றி தன்னுடைய மழலை சிங்களத்தில் விளக்கிக்கொண்டிருந்த மைதிலி பட்டாள்!
இடுப்பில் கொசுவம் வைத்து அவர்கள் அணிவது போல அல்லாமல் தமிழ் முறையில் சேலை அணிந்திருந்தாள். பழுப்பு நிற உடலில் கருநீலக்கரையிட்ட சேலைக்கு கருநீல மேற்சட்டை அம்சமாய் பொருந்தியது. வழக்கம் போலவே கருநீலப்பொட்டு, கருநீலத்தில் காதணிகள் அணிந்து அந்த சுற்றுப்புறத்தையே வெளிச்சமாக்கி கொண்டிருந்தாள் அவள்.
அவளை சுற்றியிருந்த நான்கு குடில்களிலும் விளக்கம் கேட்பது போல நின்று கொண்டு அவளையே பார்க்க ஆரம்பித்தான் அவன். முதலாவது குடிலில் சில நிமிடங்களுக்குலேயே அவள் பார்வை இவனில் பட்டுவிட்டது. குப்பென மலர்ந்த முகம், பிறகு தடுமாற்றம், படபடப்பு, சோகம் பிறகு அவனின் பிடிவாதமான பார்வைக்கு பதிலான தலைகுனிதல் எதுவுமே அவன் கண்ணுக்கு தப்பவில்லை.
அரைமணிநேரம் குடில்களில் சுற்றிசுற்றி அவளையே பார்த்த பின் நேராக அவளது இடத்தை நோக்கி போனான். அவனோடு சேர்த்து இன்னும் மூன்று பார்வையாளர்கள் நின்றிருக்க கண்களையே பார்த்துக்கொண்டிருந்த அவனை தாண்டி மூவருக்கும் சொல்ல நினைத்ததை சொல்லி முடிக்கும் முன் திணறித்தான் போனாள் அவள். நண்பிகள் யாரையாவது உதவிக்கு அழைப்பது போல தேடும் பார்வை வேறு.! பாவம் என்று விழிகளை விலக்க நினைத்தவன் அவள் நண்பிகளை தேடுவது போல அங்கும் இங்கும் பார்க்க வேண்டுமென்றே சந்தேகம் கேட்க ஆரம்பித்தான்.
அது என்று அவள் வாய்திறக்க அந்த இடம் திடீரென பரபரப்பானதில் அவளும் பேச்சை நிறுத்தி திரும்பிப்பார்த்தாள்.
சுழல் போல பரவி பெரிதாகிகொண்டே வந்தது சத்தம். சிலர் பரபரப்புடன் தகவல் பரப்பியபடி ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.முன்புறம் ஆரவாரச்சத்தம் வேறு அதிகரித்துக்கொண்டே வந்தது.
“ரேடியோ இல்லன்னா டீவி அருகிருந்தால் போடுங்க…அறிவிச்சுட்டாங்க!!!”
சட்டென விஷயம் புரிந்து போனது சிந்தகவுக்கு! இந்த வாரம் முழுவதும் எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அறிவிப்பாச்சே. இவள் எப்படி எடுத்துக்கொள்வாள்? தயக்கமாய் மைதிலியை ஏறிட்டவன் இந்த கணம் தன்னை இங்கே நிறுத்திய விதியை மனதார வெறுத்தான்.
யாரோ தங்களின் மொபைலில் ஏதோ ஒரு சானலை அவசரமாக தேடிப்பிடித்தார்கள்.
“கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் நீடித்த இனப்பிரச்சனையில் வெற்றிகரமாக அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. இது இலங்கை மக்கள் அனைவருக்குமான நற்செய்தி.” என்பதை ஒத்த வார்த்தைகளுடன் எல்லா ரேடியோ சானல்களும் அலறின.
சற்றுநேரம் ஓவென்ற சத்தத்தோடு மக்கள் அருகில் இருந்தவர்களுக்கு கைலாகு கொடுத்து மகிழ அந்த இடமே பரபரப்பாய் ஆகியிருந்தது.
மூவின இன மாணவர்களும் இருக்கும் இடத்தில் அதுவும் இந்த யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் இருக்கும் இடத்தில் யுத்த வெற்றியை இப்படிக்கொண்டாடுவது மனிதாபிமானம் ஆகுமா? இந்த மாணவர்களாவது யோசித்திருக்கலாம்! வருத்தமாய் எண்ணியவனுக்கு தன்னிடம் பெரிய புன்னகையோடு கைலாகு கொடுத்து வாழ்த்துபவர்களுக்கு தானும் கைலாகு கொடுத்து புன்னகைத்து மகிழ்ச்சி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அவனை அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாளே என்ன உணர்வாள் என்ற புரிதலில் இயலாமைதான் அவனுக்குள் நிரம்பியிருந்தது.
முகத்தில் எண்ணற்ற உணர்வுகளை காண்பித்த முகத்தோடு. உதடுகள் நடுங்க ஒவ்வொரு அடியாய் பின்னே நகர்ந்து கொண்டிருந்தவளை கைக்குள் எடுத்து ஆறுதலாய் தட்டிக்கொடுக்க வேண்டும் என்ற உந்துதலில் அவள் புறம் நகர்ந்தவன் அவளின் கவனம் அவளுக்கு இவ்வளவு நெருக்கமாய் சிந்தக வந்தும் அவனிடம் இல்லை என்று புரிந்ததும் ஒருகணம் துணுக்குற்றான். அவள் பார்வை அங்கிருந்த இன்னொரு தமிழ்ப்பெண்ணை தொட்டுக்கொண்டிருந்தது. சில கணங்கள் தயக்கமாய் நின்று கொண்டிருந்தவள் பிறகு வேகமாய் ஓடி அந்த பெண்ணின் அருகில் நின்று கொள்ள சற்று நேரத்திலேயே அவர்கள் மூவரானார்கள்.
அவனுக்கு ஏதோ புரிவதை போலிருந்தது.
கண்ணாடி உடைந்தே தான் விட்டதா?
யாரோ வெடிகளையும் வாணங்களையும் எங்கிருந்தோ அதற்குள் வாங்கி வைத்திருக்க மக்களும் மாணவர்களும் சேர்ந்து அதை வெடிக்க ஆரம்பித்தனர்..கூச்சலும் சத்தமும் கொண்டாட்டமுமாக இருக்க இப்போது அந்த இருபெண்களும் இல்லாமல் மைதிலி மட்டும் தனியே நின்று கொண்டிருப்பதை அவன் கண்டான்.
“செய்தி தணிக்கைகள், பக்கச்சார்பான பத்திரிகைகள், எதிர்த்தரப்பை அவர் சார் மக்களுக்கு கொடூரர்களாக உருவேற்றி கொம்பு சீவும் அரசியல்வாதிகள் இத்தனைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட மக்களுக்கு புரிந்துணர்வு எப்படி இருக்கும்?”
எல்லோருமே இங்கே நல்லவர்கள் தான். ஆனால் துரதிஷ்டவசமாய் அவர்கள் நிற்கும் இடம் பார்வையை தீர்மானித்து விடுகிறது.
“பாதிக்கப்பட்ட அப்பாவிப்பொதுமக்களையும் அவர்களின் உடைமைகள் ஊர்களையும் எந்த கணக்கில் சேர்ப்பது? ஒரு தரப்பு வென்றதும் மைதானத்தை சரி செய்து அடுத்த செட் ஆட்டத்துக்காய் தயாராக இது ஏதேனும் கால்பந்தாட்ட திடலா என்ன? எது எப்படியோ இந்தப்பிரச்சனை அவன் காதலை பலி கேட்டு விட்டதே..”வருத்தமாய் ஒரு பெருமூச்சு விட்டவன் மறுகணமே தலை உதறினான். முடியவே முடியாது. நான் அவளை விட்டுத்தர மாட்டேன். எங்களில் நல்லவர்களும் உங்களை புரிந்து கொண்டவர்கள் கூட இருக்கிறோம் என்று நான் நிரூபித்தே ஆவேன்.”
வெடிகளுக்கிடையே மாணவர்களின் சத்தம் அதிகமாக அவன் கவனம் அங்கே திரும்பியது.
ஒரு மாணவன் கொஞ்சம் தூரமாய் நின்று பார்த்துக்கொண்டிருந்த செந்தூரனை கையை பற்றி இழுத்து வந்து கொண்டிருந்தான்.
பிறகு வெடிச்சரம் ஒன்றை பற்றவைக்குமாறு அவனை சற்று அதட்டலாகவே சொன்னான். தயங்கி தயங்கி அவன் பற்றவைக்க ஓவென்ற சத்தம் சுற்றிலும் மாணவர்களிடையே எழுந்தது.
இது என்னவகை நாகரீகம்!!! இதை தான் கல்வி வளர்த்தேடுகிறதா? தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் லேசான அவமானச்சிவப்புடன் நின்ற அந்த இளைஞனை பார்க்க சிந்தகவுக்கு பரிதாபமாய் இருந்தது. அந்த இடத்தில் தன்னை கையாலாகாதவனாய் உணர்ந்தான் அவன்.
மைதிலியை திரும்பிப்பார்த்தான். கண்களில் அழுகை பொங்கியிருக்க கூட்டத்துக்கு பயந்து அவசரமாய் அவள் விலகி செல்வது புரிந்தது; பின் தொடர்ந்தான்.
ஆடிட்டோரியத்துக்கு இடப்பக்கமாய் சத்தங்கள் இல்லாமல் பொதுமக்களும் இல்லாமல் வெறிச்சோடியிருந்த பார்க்கிங் பக்கமாய் சென்று கண்களை சேலைத்தலைப்பால் துடைத்து அழுகையின் தடயங்களை அவள் அழிக்க முற்பட்டுக்கொண்டிருக்க வேகமாய் ஓடி அவள் கையை பற்றினான் அவன்.
மைத்திம்மா…..
அவ்வளது தான் கையை உதறிக்கொண்டவள் அவனை முறைத்தாள்!
“நடந்ததை நினைத்து வருந்தாதே மைதிலி. இது நம் நாட்டின் சாபக்கேடு. ஒரு தரப்பின் இழப்பில் இன்னொரு தரப்பு என்று சந்தோஷப்பட ஆரம்பித்தோமோ அன்று பிடித்த நோய்!”
அவள் தலை நிமிரவே இல்லை..
“இந்த மக்கள் எளியவர்கள் நல்லவர்கள். அவர்களை பொறுத்தவரை நாட்டுக்கு வந்த கஷ்டம் இன்றோடு போய்விட்டது. அதை கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதற்கு பின்னால் இருக்கும் கரும்புள்ளிகள் தெரிவிக்கப்படுவதேயில்லை. அது அவர்கள் தவறும் இல்லை.”
“ஹ!!!” கிண்டலாக இழுத்தவளை சற்று பயத்துடனே தான் பார்த்தான் அவன். ஆவேசப்படும் இந்த மைதிலி அவனுக்கு புதியவள்.
“உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள். எல்லோரும் அப்படித்தானா? அவர்களுக்கு எதுவுமே தெரியாதா?”
அவளது கேள்விக்கு அவனிடம் பதில் இருக்கவில்லை. ஆனால் ஒரு கேள்வி கேட்டான். “உன்னை சேர்ந்தவர்கள் தவறு செய்வார்கள் என்று நூறு வீதம் நம்புவாயா நீ?
“இல்லைதான்..” சிறிது தயங்கினாலும் ஒத்துக்கொண்டாள் அவள்
“அந்த அத்திபாரத்தில் கட்டப்பட்ட கல்லறை தான் இவ்வளவு பிரச்சனைகளும். இந்த பிரச்சனை நம்மிடையே வரவேண்டாம் மைதிலி . இனிமேல் உன்னை பார்க்க முடியாது என்பதால் தான் இப்போதே கேட்கிறேன் மைதிலி. இல்லாவிட்டால் நான் இதை பற்றி இன்று பேசியிருக்க மாட்டேன். நம்மை பற்றி பேசலாமா?”
அவள் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் ஏறிட்டுப்பார்த்தாள்
“நான் உன்னிடம் பேசவேண்டும் என்று சொல்லியிருந்தும் அன்றைக்கு ஏன் ஓடினாய் மைதிலி?”
“எனக்கு உங்களிடம் பேச என்ன இருக்கிறது?” என்று கேட்டுவிட்டு வேகமாய் திரும்பி நடக்க முயன்றாள் அவள். கையை இழுத்துப்பிடித்து நிறுத்தியவன் அவர்கள் இருந்த பக்கமாய் மீண்டும் மக்களின் சத்தம் வர ஆரம்பிக்கவே சுற்றும் முற்றும் பார்த்தான். இந்த பார்க்கிங் வழியாகவே யாரும் காணாமல் வெளியே போய் விடலாம். இப்போது இவளை விட்டால் பிடிக்க முடியாது என்று அவள் முகமே சொல்லிக்கொண்டிருந்தது.
தாமதிக்காமல் அவளது கையை பற்றி இழுத்துக்கொண்டு தன் வண்டிக்கருகில் போனான் சிந்தக.
“வண்டியில் ஏறு”
“முடியாது” கையை விடுவிக்க திமிறினாள் அவள்
“நீ ஏறாவிட்டால் உன்னை வலுக்கட்டாயமாக கொண்டு போக என்னால் இயலும்.பேச மட்டும் தன் கூப்பிடுகிறேன் மைத்தி நான் உனக்கு என்னை புரியவைக்கவே வேண்டும்! நம் நேசத்தின் மீது ஆணை என்னோடு வா.”
ஒரு கணம் உதட்டை கடித்தவள் அவன் பின்னே ஏறி அமர்ந்தாள்
யாரும் காணமுன்னே வண்டி அவ்விடத்தில் இருந்து வெளியேறி பிரதான வீதியில் ஏறியது. ஆச்சர்யம் அதற்குள் செய்தி பரவியிருக்க வேண்டும். வீதியெங்கும் வெடிச்சத்தம் காதைப்பிளந்தது.
சட்டென்று ஞாபகம் வந்தவனாய் வண்டியை நிறுத்தி அவளது பொட்டினை உரித்தெடுத்தவன் அவளது கண்களை பார்க்காமல் வண்டியை மீண்டும் கிளப்பினான். தான் செய்த செயல் அவனுக்கு வருத்தத்தை தந்தாலும் வெறிபிடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு சின்ன தவறு கூட அவளுக்கு ஆபத்தாக முடியலாம். அவளது அடையாளம் வெளியே தெரியாமல் இருப்பது தான் நல்லது என்று தன்னை சமாதானம் செய்தான்.
ஆனால் அவன் எதிர்பார்க்காதது அவனுடைய விளையாட்டு தோழர் குழு வெடிச்சரங்களோடு வண்டியை மறைத்ததை!
“மச்சான்! நியூஸ் கேள்விப்பட்டியா?” என்று உற்சாகமாக கேட்டவர்கள் அவன் தலையசைத்ததும் ஹை பைவ் கொடுத்தார்கள்…லேசான ஆல்ககோல் வாசம் வேறு வந்துகொண்டிருந்தது. கொண்டாட்டம் என்றால் குடி இல்லாமலா? வம்பு வேண்டாமென்று கைகொடுத்து மகிழ்வது போல காண்பித்துக்கொண்டவன் பின்னாலிருப்பவள் பார்த்துக்கொண்டிருப்பாளே என்று எண்ணி ஒரு கணம் உதட்டை கடித்தான்.
“சாக்லேட் எடுத்துக்கடா மச்சி!”
“ஷா கலக்கிறீங்கடா” என்று சொன்னபடி அவளுக்கும் சேர்த்து ரெண்டு எடுத்துக்கொண்டவன் “தங்கச்சி எடுத்துக்கோங்க” என்று அவளிடமே நீட்டுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதை விட அவள் முறைத்தபடியே எனக்கு வேண்டாம் என்று தலையசைத்ததை எதிர்பார்க்கவேயில்லை.
“மைத்திம்மா” என்று கீழ்க்குரலில் அழைத்து அவளுக்கு புரியவைக்க பார்த்தால் அவளோ சாக்லேட் கொடுத்தவனை தீவிரமாக முறைத்துக்கொண்டிருந்தாள்!
“ஏய் என்ன? திமிரா? சாக்லேட் எடுக்கபோகிறாயா இல்லையா?”
ஒருவன் சத்தமாக சொல்லியபடியே மைதிலியை நெருங்க அவள் “மாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாய் தமிழில் சொன்னாள். பிறகு நீ தானே வலுக்கட்டாயமாய் என்னை அழைத்து வந்தாய் நீயே அனுபவி என்பதை போல அவனிடம் பார்வை வேறு!
அவர்கள் வேண்டுமென்றே அவர்களை அவள் அவமரியாதை செய்வதாய் எடுத்துக்கொண்டு அங்கே குட்டிக்கலவரத்தையே உண்டுபண்ண தொடங்க மைத்தியை நோக்கி கை நீட்டிக்கொண்டு வந்தவனை வேகமாய் கீழே தள்ளி விட்டான் சிந்தக
“வேணாம் சுசித!!!! பெண்களிடம் உன் வீரத்தை காட்டதே!!!” என்று அவனிடம் உறுமிவிட்டு தன்னுடைய கோபமும் சேர்ந்து அங்கே நிலைமையை மோசமாக்குவதை புரிந்து கொண்டு அவர்கள் எதிர்பாராதவிதமாய் ஆக்சிலரேட்டிக்கொண்டு சீறிப்பறந்தான்.
அவர்கள் பின்னாலேயே சத்தமிடுவது காதில் கேட்டது. அவனுக்கு தெரிந்தவர்கள் ஆதலால் அவ்வளவு பிரச்சனை ஆகாது என்று நம்பிக்கை இருந்தாலும் இன்றையநாளில் எதையுமே எதிர்வு கூறமுடியாதே, இந்தப்பக்கமாக இவளை திரும்ப அழைத்து வரவே முடியாது! காதலை சொல்ல இன்றைய நாளை தேர்ந்தெடுத்த அவனது மடத்தனத்தை அவனாலேயே மன்னிக்க இயலவில்லை. வேறே வழியில் இன்னொரு நாளைக்கு முயற்சி செய்திருக்கலாம். அவள் விலகிக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்த பதற்றம் வேறு..வேறெதையும் யோசிக்காமல் இழுத்து வந்துவிட்டான்.
அவசரப்பட்டுவிட்டேனோ?
தன்னுடைய தொழிற்சாலையை அவர்கள் தேடி வந்தாலும் வரலாம் என்ற எண்ணத்தில் வளைவுகள் ஒழுங்கைகளுக்குள் எல்லாம் பைக்கை ஓட்டிக்கொண்டே சென்றவன் கடைசியல் காட்டோரமாய் இருந்த தனியான ஒரு வயல்நிலத்தில் பைக்கை நிறுத்தினான்.
அவ்வளவு கோபத்தை முகத்தில் காட்டினாலும் ஒரு வரி கூடப்பேசாமல் அமுக்கமாக நின்றவளை பார்த்து இன்னும் கோபம் தான் வந்தது.
“ஏண்டி..அவங்க தான் இத்தனை பேர் நிக்கறாங்கல்ல?..அந்த சாக்லேட்ட எடுத்து தொலைச்சாத்தான் என்ன? முடியாதுன்னு சொல்ற? குடிச்சிட்டு வேற நிக்கறாங்கன்னு புரியல? உன்னை என் ஒருத்தனால மட்டும் காப்பாத்தியிருக்க முடியுமா? மனசில என்ன புரட்சி வீராங்கனைன்னு நினைப்பா?”
“ஏன் அப்படின்னா நானும் அந்த சாக்லேட்டை சாப்பிட்டு எங்க ஊர் அழிச்சு போச்சுன்னு சந்தோசம் கொண்டாடியிருக்கணுமா?”
“அறிவு இருக்கா உனக்கு? நான் மட்டும் என்ன சந்தோசம் கொண்டாடிட்டா இருக்கேன்? நான் மட்டுமா? பாதிக்கு பாதி அப்படித்தான் இருப்பாங்க! அத்தனை பேர் இருக்கற இடத்துல நம்ம உணர்வுகளை மறைச்சா என்ன தப்பு?”
“நீ பேசுவ தானே நீயும் அவங்களை சேர்ந்தவன் தானே..உங்களுக்கு எங்கள் உணர்வுகள் புரியுமா?”
“லூசு போல பேசாதே மைத்தி நான் அப்படிப்பட்டவன் இல்ல..”
“பார்த்தேனே..செந்தூரன் கையாலேயே பிடிச்சு வெடி கொழுத்த வச்சீங்களே..ஒருத்தர் தடுத்தீங்களா? அப்படியென்ன அல்ப சந்தோசம் உங்களுக்கு?”
“மைத்திம்மா..புரியுதுடா.. இந்தப்பக்கம் இருக்கவங்களுக்கு இங்கே கிடைக்கற செய்திகள் விஷயங்கள் மட்டும் தான் தெரியும்..உண்மை செய்திகள் தெரியாது. அவங்களும் இழப்பை அனுபவிச்சிருக்காங்கதானே..உங்களோடு ஒப்பிடும் போது குறைவுதான் ஆனால் உங்கள் பக்கமே இவர்களுக்கு தெரியாதே.ஆகவே எதுவுமே அவர்களுடைய தவறில்லை. எல்லாம் மாறி அவர்களும் புரிந்து கொள்ள காலம் எடுக்கும்”
இனி என்ன புரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது? இப்போது எதற்காக என்னை இங்கே கொண்டு வந்தீர்கள்?
அவளது முகமும் கண்களும் காட்டிய விலகல் கண்களை அறைந்தது.
ஏன் கொண்டு வந்தேன்…என்ற கேள்வி அவனது மனதிலும் எழுந்தது..
“நான் உன்னை மனதார காதலித்தேன் மைதிலி.. இன மதம் கடந்து மனிதத்தை மட்டும் அடிப்படையாக வைத்து நாங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வோம் என்று நினைத்தென்.. நீயும் என்னை காதலித்தாய் என்று நினைத்தேன்..ஆனால்….”
அவள் உதட்டை கடித்துக்கொண்டு தலை குனிந்து கொள்ள லேசாய் அவனுக்குள் மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது
“ஏன் மைத்தி உனக்கு என் மேல் எந்த வித எண்ணமுமே வரவில்லையா?”
அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நமக்குள்ளே சரி வராது சிந்தக.. “
“அதுதான் ஏன்? என்மேல் நம்பிக்கை இல்லையா? எங்கே இருந்தாலும் நீ நீயாகவே இருக்க நான் உயிரையும் கொடுப்பேனடி.. “
“இப்போ ஒரு அரை மணிநேரம் சாம்பிளே போதும் சிந்தக. உங்கள் ஊரில் நான் பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டுமானால் என் பொட்டை எடுத்து, சாக்லேட் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி முகம் காட்டவேண்டியிருந்தது. அதாவது நான் உங்களில் ஒருத்தியாக உருமாற வேண்டியிருந்தது. இதன் பிறகும் நான் நானாக இங்கே வாழ முடியும் என்று எப்படி சொல்கிறீர்கள்? அதே போல நீங்களும் நிச்சயமாக யாழ்ப்பாணம் வர முடியாது. எனக்கு என் அப்பாவை தெரியும். இது சரி வரவே வராது. “
“மைதிலி அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்மா..இப்போது தானே நிலைமை இப்படியிருக்கிறது. இன்னும் மூன்று வருடங்களில் நிலைமை நிறைய மாறிவிடும். வேண்டுமானால் நாங்கள் கொழும்பு போய்விடலாம். உன் பெற்றோரை உன்னிடம் சேர்ப்பது என் பொறுப்பு!” எவனிடம் என்றும் கெஞ்சி அறியாதவன் அன்றைக்கு தன் காதலுக்காக இறைஞ்சலாய் கேட்டுக்கொண்டிருந்தான்.
“என்னை விட்டு விடுங்கள் சிந்தக.. நான் உங்களை லவ் பண்ணினேன்..முதல் நாளில் இருந்து இது நடக்க கூடாது என்று எனக்கு தெரிந்தே இருந்தது.ஆனாலும் மனதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இப்போது நான் முடிவெடுத்து விட்டேன். எல்லோரையும் வருத்திக்கொண்டு வந்திருக்கும் இந்த காதல் எங்களுக்கு வேண்டாம்.”
அவனுக்குள் கோபம் கோபமாய் வந்தது..
நீ தகுதிகளை காரணம் சொல்லியிருந்தால் கூட பொறுத்துகொண்டிருப்பேனடி.. என் பங்கு அணுவளவு கூட இல்லாத என் பிறப்பை காரணம் காட்டி பிரிந்து செல்வதை என்னால் தாங்கவே முடியவில்லை. “
“நான் இப்போ நினைச்சாலும் இப்படியே உன்னை கொண்டுபோய் எங்காவது கல்யாணம் பண்ணிக்க முடியும். நீயும் என்னை எதிர்க்க மாட்டேன்னும் தெரியும். ஆனா எனக்கும் ஈகோ இருக்குடி. எங்களை குற்றம் சொல்றீங்களே, ஏன் உங்கள் பக்கம் எந்த தவறுமே இருந்தது இல்லையா? என்னாலும் உனக்கு சமமான லிஸ்ட் போடமுடியும்!ஆனால் நான் மனுஷனை மனுஷனாக பார்க்க வேண்டும் என்று நினைப்பவன். உன்னைப்போல அல்ல! உண்மையில் துவேசம் உனக்குத்தானடி!!! நன்றாக யோசி!”
“எங்கள் நிலைமையில் இருந்து பார்த்தால் மட்டுமே உங்களுக்கு என் மனம் புரியும்!” அவள் குரல் நலிந்திருந்தது.
“புரியவே வேணாம்டி..நீ போ..எங்கே வேணுமானாலும் போ..ஆனால் எப்போதுமே இது உன் மனதில் நிலைத்து இருக்கும். இதை மறக்க முடிந்தால் நீ ஒரு மனுஷியே இல்லை.” என்று சொல்லியபடி அவளை பிடித்திழுத்தவன் முரட்டுத்தனமாய் அவள் இதழ்களை சிறையெடுத்தான். எதிர்பாராமல் நடந்ததில் அதிர்ந்து பின் அவன் கைகளில் நெகிழ அதை உணர்ந்தோ என்னவோ அவள் கண்ணீர் கோடிறங்கி அவன் கன்னத்தை நனைத்தது.
பட்டென அவளை உதறி விடுவித்தவன்..”போடி..ஆனா நீயா என்னை தேடி வருவ…இப்போ புரிஞ்சுக்காம பேசறல்ல..கொஞ்சம் உலகம் புரிஞ்சதும் என்னை தேடி வருவே..நீ வரும் வரை நான் உன் பக்கமே திரும்ப மாட்டேன்.” என்று சொல்லியபடி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
கண்ணீரோடு வந்து வண்டியில் அமர்ந்து கொண்டாள் அவள்..
இருந்த குறுக்குப்பாதை வழியெல்லாம் வண்டியோட்டி அவளை ஹாஸ்டலில் கொண்டு வந்து அவன் விடும்வரை ஒரு வார்த்தையும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. பைக்கில் இறங்கி அவள் ஓட்டமாய் திரும்பிப்பார்க்காமலே ஹாஸ்டலுக்குள் ஓட அவளின் பின்னாலேயே அசைந்த சேலைத் தலைப்பு மட்டும் இன்றைக்கு அவளுக்கு பதிலாக தலையசைத்து அவனுக்கு விடை தந்தது போலிருந்தது.
ஆண்மகனுக்கு கண்ணீர் வராதா என்ன? இயலாமை உணர்வுடன் கண்ணீரும் சேர்ந்து பொங்கி வந்தது. அங்கே நில்லாமல் விருட்டென பைக்கை கிளம்பிச்சென்றான் சிந்தக
WLM அத்தியாயம் 9
மீனுக்கு உணவு இல்லாவிட்டால் அது எப்படியோ அழுக்குகளை உண்டாவது சமாளித்துக்கொள்ளும். ஆனால் அதனுடைய வீடான நீரில் இருந்து தரைக்கு போய் வாழ நினைத்தால் செத்து விடும் என்ற எண்ணத்தை மனதில் உருவேற்றியே அப்போதெல்லாம் நான் அவனை நினைக்காதிருக்க என் மனதை தயார்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் எது நீர் எது உணவு என்பதை அப்படியே தலைகீழாக புரிந்து வைத்திருந்தேன் என்பது பிரிந்து வந்தபின் தானே புரிகிறது!
ஒரு வாரம் ஓடிப்போயிருந்தது. மைதிலி இப்படியொரு உணர்வை இதுவரை அனுபவித்ததே இல்லை.
சுமி அவளுக்கு பாடசாலைக்காலத்தில் இருந்தே ரொம்பவும் நெருக்கமானவள். அவளது எந்தவொரு முடியும் சுமியின் முகம் பார்த்தே இருக்கும். அவளும் அப்படித்தான் ஆனால் அவர்களுடைய நட்பில் கண்டிப்பான பணியை செய்வது சுமிதான்.
தன்னோடு கூடவே அவளுக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைத்திருக்கவே மைதிலியின் வாழ்க்கையில் எந்தவொரு மாறுதலும் வந்துவிடவில்லை. புதிதாக கிடைத்த நண்பிகளோடெல்லாம் சேர்ந்து பேசி கலகலத்தாலும் அவளது தனிப்பட்ட வட்டத்துக்குள் இவள் மட்டுமே இருந்தாள். சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதும் அவளோடு மட்டும் தான். அங்கிருந்த தமிழ் பெண்கள் தங்களுக்குள் இரண்டு நெருக்கமான நட்புவட்டங்களை உருவாக்கியிருந்தனர். இரண்டிரும் இவர்கள் இருவரும் இருந்ததில்லை.
இப்போது சுமி முகமே பார்க்காமல் இருந்துவிட ரொம்பவும் தனிமைப்பட்டுப்போனாள் மைத்தி. சுமிக்காவது அறையில் இரண்டு தமிழ் நண்பிகள் இருப்பார்கள். சாப்பிடப்போக விரிவுரைக்கு போகவென அவள் அவர்களோடு சுற்றிக்கொண்டிருப்பாள். மைத்தி என்ன செய்வாள்? சமீப காலங்களாக மனதில் உருவாகியிருந்த விலகல் காரணமாய் தன் அறையில் இருக்கும் மீதி சிங்களத்தோழிகளோடும் சேரமுடியாமல் சுமியை விட்டு விட்டு இப்போது மட்டும் தங்களோடு சேர்த்து கொள்கிறாயா என்று மற்றவர்கள் கேட்பார்கள் என்ற ஆதங்கத்தில் அவர்களோடும் சேராமல் பாவம் அவள் தனியாகவே வலம் வந்தாள்.
டைனிங் ஹாலில் கடைசி பெஞ்சின் ஓரமாக இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் தனக்கு இரண்டு பெஞ்சுகள் முன்னால் வரிசையாக அமர்ந்திருந்தவர்களை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தாள்.
சுமிக்கு மட்டும் அந்த ‘சுதாரக’ இல்லையா என்ன? கோபமாய் எண்ணிக்கொண்ட மனம் உடனேயே தோழிக்கு ஆதரவு தெரிவித்தது. அவன் தான் “உனது கண்கள் அழகானவை” என்று ஒவ்வொரு வசனமாக தமிழ் கற்றுக்கொண்டு அவளை சுற்றிவருகிறான். அவள் அவனை விட கல்லையும் மண்ணையும் பார்ப்பதையே கொஞ்சம் ரசனையாய் செய்வாள்!..ம்ஹ்ம்…பாவம் அந்த அப்பாவியும் விடாமுயற்சியோடு அவளை தொடரத்தான் செய்கிறது!
சுதாரகவை சுதா முறைப்பதும், சுதாவை கோபப்படுத்துவதற்காகவே செந்தூரன் உள்ளிட்ட மற்றவர்கள் சுதாரகவுக்கு தமிழ் வசனங்களை சொல்லிக்கொடுத்து அனுப்புவதும், சுதாரக சுமியிடம் தமிழ்ப்புலமையை காட்டுவது மட்டுமல்லாமல் இவளிடமும் அதை கொண்டு வந்து கொட்டுவதும் அவர்கள் வந்த காலத்தில் இருந்தே நடக்கும் தொடர்நாடகம்!
வழக்கம் போலவே கிரேவி இல்லாமல் இறுக்கமாக சமைக்கப்பட்ட துன்பமான கறிகள், கூடவே சோறு. காலை மதியம் இரவு மூன்று நேரமுமே சோற்றை சந்தோஷமாக சாப்பிடும் அவர்களிடையே இட்லி தோசை பிட்டு, இடியாப்பம் பாராட்டா என்று வகைவகையாய் சாப்பிட்டு இன்புறும் நம்மவர்கள் சமாளிப்பது கடினம் தான்! வழக்கம் போலவே ஓரமாய் கொறித்துவிட்டு எழுந்து இருளில் வெளியேறினாள் மைத்தி. டப்புக்கு முன்னே ஒரு கூட்டமே காத்திருந்தது, தானும் போய் நின்று பிளேட்டை கழுவி சமையலறையில் வைத்து விட்டு வேகமாய் வெளியே வந்தாள் அப்படியே ஹாஸ்டல் போய் விடும் எண்ணத்தில்.
கொய்யா மரத்தை தாண்டியிருருக்க மாட்டாள். மைதிலி!!! என்ற கயல்விழியின் குரல் அவளை அங்கேயே நிற்கவைத்தது,
ரைட்டு…சைத்தான் சைக்கிள்ள வருது!!!! மனமோ எட்டுகாதம் அலறி ஓடியது!
கயல்விழி அங்கே ஆல்பர்ப்பஸ் ஆன்ட்டி என்ற பெயரை சம்பாதித்து வைத்திருப்பவள். அவளிடம் சிக்கியவர்களின் வாயைக்கிளறி மொத்தப்பேருக்கும் வெகுளித்தனமாக சொல்லியும் விடுவதில் அவள் பெயர் போனவள். மைதிலிக்குள் அலாரம் தொடர்ந்து அடித்தது.
என்ன கயல்? கவனத்தை கண்களில் இருந்து மறைத்துக்கொண்டு சாதாரணம் போல கேட்டாள் மைத்தி.
உனக்கு என்னடி ஆச்சு? கயலிடம் கொஞ்சம் பரபரப்பு..
என்ன சொல்ற?
“ரெண்டு நாளா ஒரு மாதிரியாவே இருக்க? யார்கூடவும் பேசாம தனியாவே இருக்கற போலிருக்கு..சுமி கூட ஏதாவது பிரச்சனையா? அவளும் எல்லாரையும் கடிச்சு தின்றேன்ற அளவுக்கு தான் இருக்கா!”
“அப்படில்லாம் ஒண்ணுமில்லையே..சுமி சொன்னாளா உனக்கு? ஒண்ணும் தெரியலையே நான் அவ கிட்ட கேக்கறேன் இரு!” போனை கையில் எடுத்தபடி வார்த்தைகளை ஜாக்கிரதையாக கோர்த்தாள் அவள்
“இல்லல்ல.. என்னடி நீ? நானே நோட் பண்ணதை வச்சுத்தான் கேட்டேன்..சுமி என்கிட்டே எதுவும் சொல்லல” கயலின் குரலில் அவசரமாய் சுருதி குறைந்தது.
அதானே! அவ கிட்ட போய் கேட்டுடுவியா நீ? உன்னை சப்பி துப்பிர மாட்டா? வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டவள் “வேறொன்றும் இல்லை தானே! நான் ரூமுக்கு போறேன் கயல். அப்பா கால் பண்ணுவேன்” என்று தப்பிக்க முயன்றாள்.
“ஏய் மைதிலி.. இன்னொரு விஷயம்டி.. இந்த தினேஷை கொஞ்சம் கவனிச்சுக்கோ.. கொஞ்ச நாள் முன்னே நீ சித்தப்பா வந்திருந்தார்னு சொன்னேல்ல..அன்னிக்கு உன் சித்தப்பா ஒண்ணும் வரல நீ உங்க பார்ம் பாமிலி வீட்டுக்கு தான் அன்னிக்கு முழுக்க போயிருந்ததா யாரோ சொன்னாங்களாம்னு சொல்லிட்டு திரியுறான்!”
“உண்மையாவா சொல்ற?” மனம் உள்ளே நடுங்கினாலும் வெளியே தைரியமாய் கேட்டாள் அவள்.
“ஆமாம்டி.”.
“அவன் ஒரு லூசு.. இதெல்லாம் நான் காதுல போடல..என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும் போ”
“அப்படி விட்டுறாதே சொல்லிட்டேன். இப்போ ரெண்டு நாளாவே இந்த கதை தான் ஓடிட்டு இருக்கு. நீயும் அந்த அண்ணாவும் லவ் பண்றதா நம்மாளுங்க எல்லாரும் சொல்றாங்க.. செந்தூரன் ஒருத்தன் தான் உனக்கு சப்போர்ட் பண்றான். சுமிகிட்ட கேட்டா அவ எரிஞ்சு விழறாளே தவிர பதில் சொல்ல மாட்டேங்குறா. அப்படின்னா உண்மையோனு சந்தேகம் வராதா? இந்த தினேஷை நீ அடக்கி வைக்கலன்னா இது உண்மை போலவே பரவி சீனியர்சுக்கெல்லாம் கதை போய்டும். சீனியர்ஸ் இன்னும் நமக்கு வெல்கம் பார்ட்டி கொடுக்கலை. பார்த்துக்க!”
கயல் தன் வேலையை செய்து விட்டு போய்விட சட்டென தன்னை சுற்றி குளிர் அதிகமானது போல வெடவெடத்தாள் மைத்தி. அவளே ஒருவழியாய் மனதை மாற்றிக்கொள்ள முயற்சித்தாலும் இவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே.
முதல் நாள் மெசெஜ்க்கு பதில் அனுப்பாமல் விட்டதை எப்படி எடுத்துக்கொண்டானோ தெரியவில்லை.
மறுநாள் இரவும் மெசேஜ் வந்தது. அதற்கும் அவள் பதில் அனுப்பவில்லை. மூன்றாம் நாள் போன் செய்தான். இவள் கட் பண்ணிவிட்டாள்.
உடனே “ஓ புரிகிறது… என்னிடம் உன் தேவை முடிந்து விட்டது தானே!” என்று குத்தலாக மெசேஜ் அனுப்பினான்.. அழுதாளே தவிர அதற்கும் ரிப்ளை பண்ணவில்லை.அதன் பின் அவனும் மெசேஜ் அனுப்புவதை நிறுத்திவிட்டான். ஆனால் அதற்கும் ஒரு தடவை அழுது தீர்த்தாள் அவள்!
நாளை அவன் நிச்சயம் பூஜைக்கு வருவான். அங்கே பார்க்க வேண்டியிருக்கும் என்ற நிச்சயத்தால் தான் சந்தோஷப்படுவதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருந்தவள் இப்போது அவர்கள் இருவரையும் நம்மவர்கள் எல்லோரும் பார்க்கப்போகிறார்களே அவனை அவள்தான் வரவழைத்தாள் என்று சந்தேகம் கொள்வார்களோ? என்று பயப்பட ஆரம்பித்தாள்.
இப்போவே இவ்வளவு தூரம் பேசுபவர்களுக்கு நாளை அவலும் கிடைத்ததாகி விடுமே!
எல்லாம் உன்னால் வந்தது மைத்தி! மஞ்சு ஆன்ட்டிக்கு பூஜை பற்றி ஏன் சொன்னாய்? என்று தன்னையே மனம் கடிந்து கொள்ள ஆரம்பிக்க “மன்சு ஆன்ட்டி அதை மகனிடம் சொன்னாலும் அவன் இப்போது இருக்கும் கோபத்தில் உன்னை பார்க்க வருவானா?” என்ற கேள்வியும் கூடவே எழுந்தது!
நாளை பௌர்ணமி. போயா விடுமுறை. அருகில் இருக்கும் பெரிய விகாரையில் பூஜை நடைபெறும். மைதிலியின் பாட்ச் மாணவர்கள் மகா இல்லுப்பள்ளம வந்து ஆறுமாதங்களை முடித்துக்கொண்டு திரும்பப்போவதை முன்னிட்டும் பரீட்சைகளுக்கு முன்னரான ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் பொருட்டும் அன்றைக்கு பூஜையில் மாணவர்கள் எல்லோருமே கலந்து கொள்ளவேண்டும் என்று பாட்ச் சார்பில் அறிவிப்பு விடுவிக்கப்பட்டிருந்தது.
விடுமுறை நாளுக்கே உரிய சோம்பலுடன் விடிந்த மறுநாள் மதியமளவில் பரபரக்க ஆரம்பித்தது. அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் போய் பூக்கள் பறித்து வந்து தலை முழுகி வெள்ளை நிற ஆடைகளோடு எல்லோரும் விகாரைக்கு புறப்பட்டபோது தன்னுடைய அறை நண்பிகளோடு இவளும் வரிசையில் சேர்ந்துகொண்டாள். அருகிலேயே இருப்பதாலும் நூற்றுக்கணக்கில் சைக்கிள்களை கொண்டுபோய் நிறுத்தி அங்கே இடைஞ்சலை ஏற்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்திலும் அவர்கள் நடந்து தான் புறப்பட்டிருந்தனர். பெண்களை முன்னே போகவிட்டு ஆண்கள் பின்னே வந்துகொண்டிருந்தனர்.
வழக்கமான அமைதி இல்லாமல் மைக்கில் ஓதும் சத்தத்தோடு கோவில் முழுதும் மக்களும் நிறைந்திருந்தார்கள். காணுமிடமெல்லாம் வெண்மையாய் தெரிந்து கொண்டிருந்தது. செருப்பை அதற்குரிய காப்பாளரிடம் கொண்டு போய் கொடுத்துவிட்டு தாதுகோபத்தை சுற்றிகொண்டு அவள் வர முதலாவதாகவே கண்ணில் பட்டான் சிந்தக!
சட்டென சுற்றும் முற்றும் யாராவது கவனிகிறார்களா? என்று தான் பார்த்தாள் மைதிலி. நம்மவர்கள் கூட்டமாக பின்னே வந்துகொண்டிருக்கிறார்கள் போலும். யாரையும் காணவில்லை.
முதலில் சிந்தகவும் அவளை கவனிக்கவில்லை. வெள்ளை ஷர்ட் மற்றும் நீல டெனிம் அணிந்தபடி ஒருகாலை மடக்கி குத்திட்டு வைத்துக்கொண்டு மற்ற முழங்கால் நிலத்தில் படும் வகையில் அமர்ந்திருந்து வட்ட வடிவ பெரும் தட்டு ஒன்றில் பூக்களை அடுக்கிக்கொண்டிருந்தான். முகத்தில் அமைதியுடன் முதல் வளையம் வெள்ளைப்பூக்கள், அடுத்த வளையம் ரோஜாப்பூக்கள் என்று தட்டை சிரத்தையுடன் நிரப்பிக்கொண்டிருந்தான் அவன்..
தமிழ்ப்படங்களில் எல்லாம் இப்படி தலையே நிமிராமல் ஹீரோயின்கள் தான் கோலம் போடுவார்கள். ஹீரோ பக்கத்தில் நின்று ரொமாண்டிக் லுக் விடுவார்! சமய சந்தர்ப்பம் பாராமல் மனம் கவுண்டர் கொடுக்க நான் ஹீரோயினும் இல்லை அவன் ஹீரோவும் இல்லை என்று மனதுக்கு ஒரு கொட்டு வைத்தவள் மீண்டும் நிமிர்ந்தபோது அவன் நிமிர்ந்து அவள் முகத்தையே உறுத்துப்பார்த்துக்கொண்டிருந்தான். கடுகத்தனையும் புன்னகை இல்லாமல் அந்த கபிலக்கண்களில் இருந்த தீட்சண்யம் அவளைவிதிர்விதிர்க்க செய்ய சட்டென அவ்விடம் விட்டு அகன்றாள் மைதிலி.
பிறகு தலைமை பிக்கு மற்றும் அவரது உதவியாளர்கள் வந்து மேடை போன்றிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்ததும் எல்லோரும் அவருக்கு முன்னேமணலில் அமர்ந்து கொள்ள தானும் அவன் பார்வைக்கு மறைவாயும் நம்மவர்களின் பார்வைக்கு மறைவாயும் அங்கே கிளைபரப்பி நின்ற அரசமரத்தின் அடிமரத்தோடு சாய்ந்து அமர்ந்து கொண்டாள்
பூஜை ஆரம்பித்தது. சற்று நேரம் பிரித் ஓதிக்கொண்டிருந்தவர்கள் இடையில் நிறுத்த சில ஆண்கள் முன் வந்து பூக்கள், நறுமணப்பொருட்கள் கொண்ட தட்டுக்களை பயபக்தியுடன் எடுத்துக்கொண்டு சென்று முன்னே வைத்தனர். சிந்தக்கவும் ஒரு தட்டை சுமந்து கொண்டு முன்னே போய்க்கொண்டிருந்ததை கண்டாள் மைதிலி.
அவனுக்கு இதெல்லாம் ஆத்மார்த்தமாய் பிணைக்கப்பட்டிருக்கிறது! அவளுக்கோ அதை வேடிக்கை பார்க்கும் மனநிலைமட்டும் தான்! அதேபோலத்தானே அவனும் அவளுடைய ஆத்மார்த்த பிணைப்புக்களை வேடிக்கை பார்ப்பான்.. உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளத்தெரியாமல்!
தங்களுக்குள் இருந்த இடைவெளி தெளிவாகவே புலப்பட ஆரம்பித்திருந்தது அவளுக்கு. அவன் உணர்வுகளை புரிந்து அதையே நானும் உணர்வது முக்கியல்ல, மற்றவர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பக்குவமே காதலில் முக்கியம் என்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அப்போதெல்லாம் அவளுக்கு தாங்கள் பிரியவேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டும் காரணங்களாகவே அவை தென்பட்டன.
மனது விலக நினைக்கும் போது பார்க்கும் பார்வையும் அப்படியே மாறிவிடுகிறது பாரேன்! அவள் உள்ளுக்குள் கசப்பாய் சிரித்துக்கொண்டு திரும்ப அவன் திரும்பி வந்துகொண்டிருந்தான் அவளையே பார்த்தபடி! இவ்வளவு நேரமும் செய்த தீர்மானங்கள் மறக்க கண்களால் தானும் அவன் பார்வையை கௌவி நின்றவள் பட்டென்று உணர்வு வர கண்களை விலக்கி இடப்புறம் திரும்ப அங்கே நேரெதிராக அமர்ந்து கொண்டு சுமி அவளை கண்ணாலேயே சாம்பலாக்க முயற்சித்துக்கொண்டிருந்தாள்!
பதிலுக்கு ஏக்கமாய் ஒரு பார்வையை நண்பியிடம் அனுப்பியவளுக்கு அவளுக்கு இரண்டு வரிசைகளுக்கு பின்னே அமர்ந்திருந்த சுதாரக எட்டிப்பார்த்து புன்னகைத்ததில் எல்லாம் மறந்து போய் சிரிப்பு பொங்கி விட்டது.
மூன்றுதலைக்கொள்ளி எறும்பாய் தலையைக் குனிந்து கொண்டு தனக்கு முன்னிருந்த மண்ணில் மைத்தி என்று விரல்களால் எழுதினாள் அவள்.
பிறகு அவள் நிமிர்ந்து பார்த்தபோது சிந்தகவை காணவில்லை.
பூஜை முடிந்திருந்தது. மாணவர்கள் எல்லாம் வரிசையாக நின்று அந்த தலைமைப்பிக்குவின் காலில் பணிந்து ஆசீர்வாதம்வாங்கிக்கொண்டிருந்தனர். வழக்கமாக வரும் கோபத்தோடு வேறுவழியில்லாமல் அவளும் அந்த வரிசையில் போய் நின்றுகொண்டிருந்தாள். இவர்களோடு வெளியே போனால் இது ஒரு தொல்லை. கூடப்படித்த நண்பர்களின் அம்மா அப்பா வந்தால் கூட அவர்களின் கால்களில் விழுந்து எழுந்து தான் வழியனுப்புவார்கள். வேறு வழியில்லாமல் வணங்காமுடிகளான நம்மவர்களும் குனிந்து வணங்குவது போல பாவ்லா செய்வது தான் வழக்கம்.
“மைதிலி.. வெளியே போகும் போது தயவு செய்து கொஞ்சம் பின்னே நில். நான் உன் கூட பேச வேண்டும். இதற்கு மேல் நான் உன்னை தொந்தரவு செய்யப்போவதில்லை. “ தலைமை மதகுருவின் கால்களில் லேசாக குனிந்து எழுந்தவளின் காதில் சிந்தகவின் குரல் ரகசியமாய் ஓலிக்க சட்டென நிமிர்ந்தவள் விழிகளால் தேடினாள்.
நிமிர்ந்து கூட்டத்தில் இருந்து விலகி வெளியே போய்க்கொண்டிருந்தான்.
அவன் என்னை காதலிக்கிறாயா? என்று கேட்டு விடுவானோ? என்பதை விட அவனோடு தான் பேசுவதை நம்மவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ற பயம் தன் அவளுக்கு அப்போது அதிகமாக இருந்தது. நிமிடத்தில் யோசித்து வாசலருகே போய்க்கொண்டிருந்த கயல்விழியை துரத்திப்பிடித்தாள்.
வெளியே ஆண்கள் நின்றுகொண்டு “இருட்டு..ஆகவே முன்னால் சில ஆண்களை நடக்க , நடுவில் பெண்களை நடக்குமாறு சொல்லிக்கொண்டிருக்க பெண்கள் வரிசையில் வேகமாய் நுழைந்து முதலிருவராக கயல்விழியும் மைதிலியும் நடக்க ஆரம்பித்தனர். தூரத்தில் இருந்தே அதை கவனித்து விட்டவன் சுழித்த புருவங்களுடன் அவள் தன் கண்ணுக்கு மறையுமட்டும் பார்த்துக்கொண்டே நின்றான்.
WLM அத்தியாயம் 8
“அவள் பாக்டரிக்கு வந்த நாளன்று தான் என் வாழ்க்கை இனி முன் போல் இருக்கப்போவதில்லை என்று உணர்ந்து கொண்டேன். அவள் எனை விட்டுப்போன பின்னர் என் வாழ்க்கையில் நான் செய்த அத்தனை பாய்ச்சல்களுக்கும் அத்திபாரமிட்டது அந்த நாள் தான். அவள் ஆசையாய் உலாவிய என் மாதுளை நிலம் தான் அவள் மூலை முடுக்குகளெல்லாம் உலவித்திரிந்த என் வீட்டை விட அவளை அதிகம் நினைவுறுத்திக்கொண்டிருந்தது.”
அவள் தன் கண்ணை விட்டு மறைந்ததுமே இந்த இனிமை அவனுக்கு நிலைக்குமா? என்ற பயம் சிந்தக்கவுக்குள் முளை விட்டு விட்டது.
இத்தனை நாளும் அவள் தன்னுடைய தகுதியை குறைவாக நினைக்கிறாள் என்ற எண்ணத்தில் யார் மீது என்று தெரியாமல் ஒரு கோபத்துடனேயே சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு அவள் தயங்கியது அவனது கல்வித்தகுதிகளை எண்ணி அல்ல என்று இன்று தெளிவாகவே புரிந்தது.
அவள் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதைவிட அவைகள் எல்லாம் குறைகளாகவே அவளுக்கு தெரியவில்லை. அவைகளையெல்லாம் சற்றே முயன்றால் கை சொடுக்கும் நேரத்தில் நிவிர்த்தி செய்து விடலாம் என்பதை அவள் உறுதியாக நம்பினாள்.
அப்படியானால் அவள் அன்றைக்கு அழுதது அவனை விட்டு விலகியோடியது எல்லாமே அவனும் அவளும் வேறு வேறு இனம் என்பதாலா? அப்படித்தான் என்று அனுமானம் கிடைத்ததும் அவனுக்கு மனப்பாரம் கொஞ்சம் குறைந்தது. காரணம் அவன் என்றைக்கும் துவேஷம் கொண்டவன் அல்ல.
மனிதர்கள் கொள்கைகளுக்கும் நிலத்துக்கும் மோதிக்கொண்டு உயிர்விடுவதில் அவனுக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை. யுத்தம் தொடர்பான செய்திகளை கூட நாட்டின் குடிமகனாய் பிறந்து விட்ட தலைவிதி என்று தெரிந்து கொள்வதை தவிர கொஞ்சம் ஆழமான தேடல் உள்ளவன் ஆதலால் சாதாரண மக்களை இலகுவில் சென்றடையாத செய்திகளை தெரிந்து கொண்டு நடுநிலையில் சிந்திக்கவும் அவனுக்கு முடியும்.
அவன் இப்படித்தான் என்று அவளுக்கு புரியவைத்தால் அவள் அவனை ஏற்றுக்கொண்டு விடுவாள் தானே.. குறிப்பிட்ட இனத்தில் பிறந்து விட்ட காரணத்த்துக்காக மட்டும் அவனை ஒதுக்கும் பொல்லா மனம் கொண்டவள் அவள் அல்ல என்று அவன் நம்பினான். ஆனாலும் அவர்கள் தாண்ட வேண்டிய எதிர்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன என்பது அவனுக்கு தெரியும். ஆனால் மைத்தியின் துணை அவனோடு கூடவே இருக்குமானால் அவனால் எதையும் ஜெயித்து விட முடியாதா?
இன்றைக்கு காலையில் அவனுடைய எதிர்காலம் பற்றி மடமடவென்று அவள் திட்டமிட்டதை கண்டு அவன் அயர்ந்து தான் போய் விட்டான். தொழிலில் எக்கச்சக்கம் கனவுகளும் ஆசைகளும் வானளாவி உள்ளது தான் ஆனால் தன் படிப்பு சம்பந்தமாய் அவன் அதிகமாய் சிந்தித்தது இல்லை. தன் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் சப்காம்பசுக்கு வருடாவருடம் வந்து போகும் மாணவர்களை பார்க்கும் போது மனதின் மூலையில் அவனுக்கும் ஓர் ஆசை இருக்கத்தான் செய்தது. என்றாவது எப்படியாவது ஒரு பட்டத்தை வாங்கி விடவேண்டும். பட்டதாரி ஆகவேண்டும். அவனது ஆகக்கூடிய கனவே இப்படித்தான் இருந்தது. அதை தாண்டி அவன் ஆசைப்பட்டதில்லை
ஆனால் இன்று அவள் எடுத்த எடுப்பிலேயே MBA வுக்கு போனதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முதலில் சிரிப்பு வந்தது. பிறகு மிகத்தெளிவாக அவள் பேசிய விதத்தில் ஒரு வேளை முடியுமோ என்று மனதின் ஓரத்தில் எதிர்பார்ப்பு வந்து அதுவாகவே ஒட்டிக்கொண்டது.
பேச்சோடு நில்லாமல் மடமடவென்று போன் போட்டு அவன் முன்னேயே அவள் தெளிவு படுத்த அவனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. இவ்வளவு வருஷமாக ஏற்பட்ட இடைவெளியை ஜஸ்ட் லைக் தட் கடந்து விட முடியுமா? அவனிடம் இருக்கும் தகுதிகளோடு ஆறுமாசத்துக்கு ஒரு பவுண்டேஷன் கோர்ஸ் மற்றும் கொஞ்சம் பணம்…அவர்களுக்கு அது இப்போதைக்கு கொஞ்சமல்ல தான். ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கும் போது அவன் கைநழுவ விடும் முட்டாள் அல்லவே.. மொத்தமாக ஒரு இரண்டு வருடங்களை செலவழிக்க வேண்டியிருக்கும்!
இப்போதைக்கு தொழிலில் அவர்களுக்கு ஏற்படும் தேக்கம் மார்க்கட்டிங்கினால் தான். எங்கே போனாலும் ஊரை கேட்டதும் ஒரு படிக்காத மேதையாக தான் உடனே அவன் கணிக்கப்படுவான். எங்காவது மீட்டிங்களுக்கு போக வேண்டி நேரிட்டாலும் மெத்த படித்தவர்களுக்கு முன்னால் நாம் டை, கோட் போட்டிருக்க ஒருகணம் தாழ்வு மனப்பான்மை வந்து போவது உண்மைதான். படிக்காதவர்கள் ,கிராமத்தான்கள், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாது என்ற பொதுவான கருத்தியலே அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பிரகாசமான வாய்ப்புக்களைஎல்லாம் தடுத்து விடுவதும் உண்மையே..
அவனுக்கு மட்டும் அந்த இடைவெளியை கடக்க முடிந்தால் அவன் சகலரையும் ஊதித்தள்ளி விடுவான். தன்னுடைய திறமையிலும் கட்டளை ஆளுமையிலும் அவனுக்கு ரொம்பவே நம்பிக்கை இருந்தது. தலைநகரில் ஒரு பிரபலமான நிறுவனத்தில் பட்டப்பின் படிப்புக்கான வாய்ப்பு நிச்சயம் அந்த இடைவெளியை கடக்க வைக்கும்! அவனுக்கு தன்னம்பிக்கை தரும். அதை விட அதை இப்போவே உடனேயே ஆரம்பிக்க வேண்டும் என்று உந்தித்தள்ளியவள் மைதிலி தான். அவளுக்கு மூன்று வருடங்களில் படிப்பு முடியும் போது அவள் தைரியமாக அவளுடைய அப்பாவிடம் இவன் அப்படியான தகுதிகளை கொண்டவன் நல்லவன் என்று காட்டி தைரியமாய் பேசவேண்டாமா? அவள் படித்து முடிக்கும் முன் இன பேதத்தையே மறந்து பெண்ணை தர வைக்கும் அளவுக்கு நாம் முன்னேறியாகவேண்டும் என்று அவனுக்குள் ஒரு வெறியே முளைத்திருந்தது.
பைக்கை பார்க் செய்து விட்டு செருப்பை கழற்றி அதற்குரிய இடத்தில் கொடுத்தவன் வாசலிலேயே விற்றுக்கொண்டிருந்த தாமரைப்பூக்கள் இரண்டை வாங்கிக்கொண்டு புத்தபிரானின் சன்னிதானத்துக்குள் நடந்தான்.
நிரமலமாய் சயனித்துக்கொண்டிருந்த புத்த பிரானின் காலடியில் தாமரைப்பூக்களை வைத்தவன் ஒரு நிமிடம் அமைதி கேட்டு விழிமூடி நின்று விட்டு திரும்பி நடந்தான். அவர்களின் வழிபாட்டுமுறையில் அவர்கள் புத்தபிரானை ஆசிரியராகத்தான் கொள்வார்கள். கோரிக்கைகள் எல்லாம் அவரிடம் வைப்பதில்லை. நல்லதை செய்து தர்ம வழியில் நடத்தலையே பௌத்தம் போதிக்கிறது.
வெளியே சுட்டி விளக்குகளை மக்கள் அதற்குரிய தட்டில் எண்ணிலடங்காமல் வைத்து நிரப்பியிருந்தார்கள். சில எரிந்து கொண்டிருக்க சில அணைந்து போய் புதிதாய் எரிப்பவர்களுக்கு இடநெருக்கடியை ஏற்படுத்தியபடி கிடந்தன. சிந்தக எரிந்து கொண்டிருப்பவைகளை மட்டும் விட்டு விட்டு எரியாதவைகளை பொறுக்கி எடுக்க இன்னொரு இளைஞன் முன்வந்து அந்த தட்டை ஒரு துடைப்பான் கொண்டு துடைத்தான்.
ஒவ்வொன்றாக அந்த சுட்டிகளில் இருந்த திரிகளை எடுத்து வீசி விட்டு அவற்றை கொண்டு போய் மக்கள் சுட்டிகளை வாங்கும் இடத்துக்கு பொறுப்பாக இருந்த இளம்பிக்குவிடம் கொடுத்து விட்டு வந்து மதிலோரம் அமர்ந்து கொண்டான் சிந்தக
அந்த சூழலின் அமைதியே அவனுக்கு அவன் செய்ய வேண்டியதை சொன்னது போலிருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டை நோக்கி வண்டியோட்ட ஆரம்பித்திருந்தான் அவன்.
அன்று இரவு வீட்டில் அனைவரும் டிவிக்கு முன்னே அமர்ந்திருந்தார்கள். வழக்கம் போலவே அரைமணி நேர செய்திகளில் இருபது நிமிடத்தை யுத்த செய்திகளே விழுங்கிக்கொண்டிருக்க சானல்கள் தாங்கள் சார்ந்த பக்கத்தின் சார்பாக செய்திகளை வழங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த சானலும் வன்னிப்பகுதியின் முக்கால்வாசி நிலம் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் இன்னும் கால்பகுதியையே கைப்பற்ற வேண்டியுள்ளதாகவும் பெருமையோடு அறிவித்துக்கொண்டிருந்தது.
சீக்கிரம் கைப்பற்றி முடிக்கட்டும்.அதன் பிறகாவது அமைதிப்படுவார்களா? என்று எரிச்சலுடன் எண்ணிக்கொண்டவன் தந்தையிடம் தான் படிக்கப்போகும் விபரம் சொல்லி அதற்காக செய்ய இருப்பதையும் சொல்ல அவர் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்.
“படிக்கிறது நல்ல விஷயம் தான் தம்பி. ஆனால் அந்த மாதுளை நிலம், உன்னுடைய ஒரே சொத்து. உன்னுடைய உழைப்பில் வளர்ந்து நிற்பது. அதைப்போய் அடமானம் வைத்தாக வேண்டுமா? வேண்டுமானால் எங்கள் வீட்டை அடமானம் வைக்கலாம்.” என்று அவர் சொல்ல ஒரேயடியாய் மறுத்தான் அவன்.
“குடியிருக்கும் வீடு அடமானத்தில் இருக்க வேண்டாம் அப்பா.. மிகப்பிடித்த ஒன்றுக்கு நெருக்குதல் வந்தால் தான் ஜெயிக்கும் வெறி வரும். அதையே அடமானம் வைக்கிறேன். கொஞ்சம் கட்டுப்பாடாக இருந்தால் ஒரு வருடத்திலேயே மீட்டு விடக்கூடியது தான் “ அவன் நம்பிக்கையோடு சொன்னதை அவர்கள் மறுத்துப்பேசத்துணியவில்லை
எல்லாம் முடிவானதும் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பாய்ச்சல் உண்டானதைப்போன்ற உணர்வோடு தன்னுடை மொபைலில் புகைப்படமாய் அடங்கியிருந்தவளை பார்த்து ஆசையாய் சிரித்தான். நெற்றியில் குதறப்பட்டு கிடந்த முடி மொத்தமாய் கண்களை மறைத்திருக்க மாதுளம் பூக்கொப்பினை தன் முகத்தினருகே இழுத்து வைத்துக்கொண்டு காமராவை திருப்பி தன்னையே அவள் புகைப்படமெடுக்க ஆயத்தமானபோது அவளது முகத்தையும் பூக்களையும் மட்டும் பச்சைப்பின்னணியில் அவன் காமராவுக்குள் சிறைப்பிடித்திருந்தான்.
இதை கழுவி பிரேம் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்..என்னோடேயே! இதைப்போலவே அவளையும்..
இந்த போட்டோவை காண்பித்து இதே போல அவளின் கண் முன்னாலும் அதற்கு முத்தமிட்டால் காலையில் கன்னம் சிவந்ததை போலவே சிவப்பாளா? சிரிப்புடன் மொபைலை இதழ்களில் ஒற்றி எடுத்தவன் தலையை உதறினான்.
இல்லை இல்லை..கொஞ்ச நாட்கள் அவளை குழப்பக்கூடாது. பரீட்சை முடிந்த கையேடு மனதை உடைத்து சொல்லிவிட்டுத்தான் மறுவேலையே…
ஆனாலும் மனம் கேட்காமல் அவளுக்கு அனுப்பி வைத்த மெசேஜுக்கு பதில் நீண்டநேரமாய் பதில் வராமலே இருக்க அவன் தூக்கம் வராமல் மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தான்.
@@@
அதே நேரம் மைத்தி ஹாஸ்டலில் டின்னர் ஹாலுக்குள் தன் பட்டாளத்தோடு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
அன்றைய நாள் நிகவுகளில் மனதை திளைக்க வைத்துக்கொண்டு பேச்சின்றி சாப்பிட்டுக்கொண்டிருந்தவளை மற்றவர்கள் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.
எதிரே டிவி அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.
திடீரென ஓவென்ற சத்தம் காதைப்பிளக்க பலர் டிவியை நோக்கி எழுந்து ஓட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் இவர்கள்.
அங்கே வன்னியில் ஏதோ ஓர் ஊர் கைப்பற்றப்பட்ட வெற்றிச்செய்தி ஆரவாரமாக அறிவிக்கபட்டுக்கொண்டிருக்க மாறி மாறி கைலாகு கொடுத்த வண்ணம் அவர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தனர்.
இவர்கள் யாரின் முகத்திலும் ஈயாடவில்லை..
அங்கிருந்து உடனே எழுந்து வந்தது போலவும் தோன்றக்கூடாது. அதே நேரம் அங்கிருக்கவும் பிடிக்காமல் மெல்ல நழுவி வெளியே வந்ததும் தான் மூச்சே வந்தது.
‘“தேவையில்லாம வாயை விடாதீங்க மக்களே” நிலா அறிவுறுத்தினாள்
“அவங்க நாடு ஜெயிக்கும் போது அவங்க சந்தோஷப்படறாங்க. அது இயல்பு தானே..அப்படி எடுத்துக்கொண்டு விடுங்க.”
“நமக்கும் இது தானே நாடு. அப்போ நாம ஏன் சந்தோஷப்படல?”
“அது தான் அவங்க நம்மை துரோகிங்கறாங்க”
உக்கும்..
“இந்த கேள்விக்கு மட்டும் பதில் தெரிந்திருந்தால் இந்த பிரச்சனைகள் எதுவுமே வந்திருக்காது!” கிண்டலாய் சொன்னாள் சுமி.
மைதிலி எதுவுமே பேசவில்லை.. தன்னை சுற்றி கேட்ட குரல்களில் தொலைந்திருந்தவளுக்கு தன் மனதுக்குள்ளேயும் வெளியேயும் நடக்கும் போராட்டத்தினை யாருடனாவது பகிர்ந்து கொள்ளாவிட்டால் இனிமேல் தாங்க முடியாது என்று தோன்றிற்று
சுமியின் தோளில் தட்டினாள் அவள்.
என்னடி?
நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்?
சொல்லேண்டி?
இல்ல..சீரியசான விஷயம்..கோவில் பக்கம் போலாமா? அவள் குரலை தழைக்க அவளை ஆச்சர்யமாய் பார்த்தபடி “இருட்டுடி..” என்று தயங்கினாள் சுமி.
“அதான் நிலா இருக்கே வா!”
சுமியை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு வந்தவள் எடுத்த எடுப்பிலேயே “நான் காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்று அவளிடம் போட்டுடைத்தாள்.
அதிர்ந்து வாயைப்பிளந்ததவள் யாரை என்று கேட்டாள்
சிந்தக்க!
அவனா? என்னடி சொல்ற? விளையாடறியா?
நிஜமாக தான் சொல்றேன்..
அவன் உன்கிட்ட சொன்னானா?
இல்ல..நான் லவ் பண்றேன்..அவரும் என்னை லவ் பண்றார்னு எனக்கு தெரியும். ஆனா என்னால….என்று ஆரம்பித்து அவள் என்ன சொல்லியிருப்பாளோ
அவளை இடைமறித்து “மைத்தி நீயாடி இது? என்னால நம்பவே முடியல.. “ என்று சட்டென கலங்கிய விழிகளோடு சுமி சொல்ல அவள் விக்கித்து போனாள்
ஏன் அழுகிறாள் இவள்? நிச்சயம் இவளிடம் ஒரு எதிர்ப்பை எதிரார்த்திருந்தாள் தான். ஆனால் ஆழமான தன் காதல் பற்றி சொன்னால் புரிந்து கொண்டு தனக்கேதும் வழி சொல்வாள் என்பதை தான் அவள் எதிர்பார்த்தது! இப்படி கண்கலங்குவதை அல்ல!
“படித்து முடித்து விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடிய ஏதாவது வேலை தான் தேடிக்கொள்வேன் என்று அடிக்கடி சொல்வாயே..பாதிப்பை கொடுத்தவர்களில் ஒருவனையே வாழ்க்கைதுணையாய் நினைக்க எப்படி முடிந்தது?”
“என்னடி..அவன் சிங்களவன் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக என்னால எப்படி லவ் பண்ணாமலிருக்க முடியும்? அவன் நல்லவன்டி..துவேசி இல்ல” மைதிலிக்கும் கண் கலங்கிவிட்டது.
“துவேசி இல்லைத்தான். நல்லவன் தான் ..ஆனால் இப்போது அவன் வீட்டுக்கு போனாலும் அவனும் இதே பிரேக்கிங் நியூசை கேட்டு இவர்களைப்போலவே சந்தொஷப்பட்டுக்கொண்டிருப்பான். தவறு அவன் மீது இல்லைடி.. அடிப்படையிலேயே நாம் வேறு வேறு..இதையெல்லாம் நான் உனக்கு சொல்லவேண்டி இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! ப்ளீஸ்டி இது உனக்கு வேணாம்!”
“என்னால எதுலயும் கன்சன்ரேட் பண்ணவே முடியலடி..அவன் ஞாபகமாவே இருக்கு..அவன் மட்டும் இல்லையென்றால் நான் லைப்பில் இப்படியே இருந்து விடுவேன்.”
“ஒரு அடி அடித்தால் போய் உருண்டு விழுவாய்..எனக்கு நல்லா வருது வாயில! ஸ்கூல்ல பிருந்தனை நீ சைட் அடிச்சுட்டு இப்படி தானே சொல்லிட்டு இருந்த..ரெண்டு நாளிலேயே மறந்து போகல? வேணாம்னு நினைச்சா நம்மால அதை ஒதுக்க முடியும் டி..”
“லூசு தனமா பேசாதே..பிருந்தன்லாம் விளையாட்டுக்கு பண்ணது..இது அப்படியில்லை..உனக்கு எப்படி சொல்லி புரியவைக்குறதுன்னே தெரியல..”
“ரொம்ப பேசாதேடி..எனக்கு புரியவைக்கறத எப்படி உங்கப்பாட்ட போய் சொல்வ? சேனபுர கிராமத்து படிக்காத சிங்களவன் ஒருத்தனை நான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னா? அறிவிருக்காடி..ஒத்துப்பாங்களா உங்க வீட்ல? எல்லாமே பிரச்சனையாயில்ல இருக்கு உங்க ரெண்டு பேர் நடுவுல?”
“இது என் வாழ்க்கைடி.. நான் எப்படியாவது அவரையும் மேலே கொண்டு வருவேன்….”
“நடக்கறதை பார்த்தா கொஞ்சம் கூட மனசுல பீல் வரவேயில்லையா? இவ்வளவு நடந்த பிறகும் உன்னை மாதிரி ஆளுங்க அவனுங்க பின்னாலேயே எப்படி போறீங்க..? அவனா பண்றான்னு கேட்காதே..அவனுங்க எல்லாருமே ஒண்ணுதான்! ஒண்ணு மட்டும் சொல்றேண்டி! நீ மட்டும் அவன் கூட சீரியஸ் ஆனேன்னு வை! லைப்ல என்னோடான பிரண்ட்ஷிப் உனக்கு இல்லவே இல்லை. அது மட்டும் இல்ல..நாளைக்கே ஆன்ட்டி கிட்ட போன் பண்ணி சொல்றேன் எல்லாத்தையும்! அங்கே சொல்லிக்கோ உன்னோட நியாயங்களை!” எழுந்து கிட்டத்தட்ட கத்தி விட்டு சுமி ஹாஸ்டலுக்கு போக அவளிடம் சொன்னது தவறோ என்று தீவிரமாய் சிந்தித்தாள் மைத்தி..
டைனிங் ஹாலுக்குள் இன்னும் ஆரவாரச்சத்தம் விட்ட பாடில்லை.
தானும் எழுந்து ஹாஸ்டலுக்குள் நுழைந்தவளுக்கு சுமி அம்மாவுக்கெல்லாம் இப்போ உடனேயே சொல்லமாட்டாள் என்ற நிச்சயம் இருந்தாலும் அவள் கேட்ட கேள்விகள் விடை தெரியாமல் அவளுக்கு முன்னே தொங்கிக்கொண்டிருப்பதாய் பட்டது.
உன்னை மாதிரி ஆளுங்க? சுமியா அதை மைதிலிக்கு சொல்லுகிறாள்.
“எதற்கு மைதிலி இந்த பிரச்சனை பற்றி பேசினாலே ரத்தகொதிப்பு வந்தவள் போல ரியாக்ட் செய்கிறாய்?..நீ உணர்ச்சி வசப்படுவதால் மட்டும் எதை மாற்றிவிடப்போகிறாய்? இப்போதைக்கு பல்லைக்கடித்துக்கொண்டு எல்லாவற்றையும் நாங்கள் ஜீரணிக்க வேண்டியவர்கள் மட்டுமே! நீ இப்படி ரியாக்ட் செய்வதால் தான் அந்த பீ க்ரூப் லீடர் உன்னிடம் அடிக்கடி வம்பு வளர்க்கிறான். அமைதியாக இரு” இதெல்லாம் இதே சுமி அவளுக்கு வழக்கமாக சொல்லும் வசனங்கள் அல்லவா?
நான் என்றைக்குமே அவர்களின் பின்னால் போக மாட்டேன். போகவே மாட்டேன். என் மனதில் இந்த குற்ற உணர்ச்சியை என்றைக்குமே தவிர்க்கவும் முடியாது
“எதைப்பற்றியும் யோசிக்காமல் எக்சாமுக்கு படி. ஆல் த பெஸ்ட்..” மொபைல் அவனது மெசேஜை சுமந்து வந்திருந்தது.
இதுதான் அவன் அவளுக்கு அனுப்பும் முதல் மெசேஜ்!
ரிப்ளை பண்ணாமல் போனை எடுத்து அருகில் வைத்துவிட்டு மற்றவர்கள் வர முன்னே படுத்து பெட்ஷீட்டால் தலையையும் சேர்த்து மூடிக்கொண்டாள் மைதிலி
WLM அத்தியாயம் 7
“அந்த நிகழ்வு பல்வேறு வகைகளில் என்னை நெகிழ்த்தி விட்டிருந்தது. இனமத வேறுபாடின்றி ஒரே போல துடித்து பதறி ஒன்றாக சேர்ந்து நிலாவையும் சிந்துவையும் காப்பாற்றி அழைத்து வந்தது, நாமெல்லாம் ஒன்று போன்ற ஒரு ஒற்றுமை உணர்வையே அந்த வாரம் முழுவதும் ஹாஸ்டலில் தோற்றுவித்திருந்தது. நாட்டுநிலவரங்களை கேளாமல் எனக்கு நானே தடை விதித்திருந்ததும் அவனின் அருமை பெருமைகளை அந்த வாரம் முழுக்க நிலா அபிநயித்துக்கொண்டிருந்ததும் கூட இதற்கு காரணங்களாகியிருக்கலாம். ஆக மொத்தத்தில் அந்த சனிக்கிழமை சிந்தகவை பார்க்க நான் போனபோது எனக்குள்ளே போட்டுக்கொண்டிருந்த அவனுக்கான எதிர்ப்பு வேலி ரொம்பவே பலவீனமாயிருந்தது. அன்றைக்கு அவனுடன் அப்படியெல்லாம் பேசி உரிமை எடுத்துக்கொள்வேன் என்று சத்தியமாய் நானே நினைத்திருக்கவில்லை”
“உன்னை பார்க்கவே சிரிப்பு வருதுடி.. ஹி ஹி “ வினிதா சிரித்த படியே கடந்து செல்ல எதிரே ரூமில் இருந்து வெளியே வந்த சிந்துவும் சிரிக்க ஆரம்பித்தாள். சமயத்தில் வெளியே வந்த மின்மினி மைதிலியின் முகத்தை பார்த்துப்பம்மி மீண்டும் தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள்.
“துரோகி!” என்று கொலைவெறியாய் அவளை முறைத்தவள் அனிச்சையாய் தலையை கோதி விட்டுக்கொண்டு நாக்கை துருத்திக்காண்பித்து விட்டு ஹாஸ்டல் வாசலை நோக்கிப்போனாள்.
சைக்கிளை எடுத்துக்கொண்டு டின்னர் ஹால் பக்கம் போக அங்கே ஏற்கனவே தயாராக நின்றுகொண்டிருந்த செந்தூரன் அவளைக்கண்டதுமே வாய்விட்டு சிரித்தான்.
“என்ன மைத்தி? நைட் கறையான் புற்றுக்குள் போய் தூங்கினாயா? இப்படி அரிச்சு வச்சிருக்கு!!!!” அவனது நக்கலை கேட்டு “மின்மினீ!!!” என்று பல்லைக்கடித்தாள் மைத்தி.
“நினைச்சேன்.. அவளையெல்லாம் நம்பி ஹா ஹா” அவன் இன்னும் பலமாய் சிரித்தான்
ஏய் சும்மா ஓவரா கலாய்க்காதே!!! சொல்லிட்டேன்!
“சரி சரி..ஆமாம்.. உன்னை கூட்டிப்போய் விட்டால் சரிதானே..நான் உள்ளே வர வேண்டியதில்லையே..”
“இல்ல்ல..நான் கால் பண்ணதும் அவர் வெளியே வர்றேன்னு சொன்னார்.. அதுக்கு பிறகு நான் மானேஜ் பண்ணுவேன்..நீ கிளம்பிடு..”
“ஹ்ம்ம்.. “
“உன் ப்ளான் என்ன இன்னிக்கு? நான் கஷ்டப்படுத்திட்டேனா?”
“ச்சே ச்சே..நாங்கல்லாம் டவுனுக்கு போறோம்..உன்னை விட்டுட்டு நான் ஜங்க்ஷனுக்கு வர பசங்களும் வர்றதுக்கு சரியா இருக்கும்!”
ஓகேடா..”
பிரதான வீதிக்குசென்று அதன் வழியே கொஞ்சம் தூரம் சென்றபின் விகாரைக்கு பக்கத்தில் இருக்கும் பராக்கிரம ரோட் வழியே திரும்பி இருநூறு மீட்டர் உள்ளே வர சொல்லியிருந்தான் சிந்தக.
இருமருங்கும் நெல்லி மரங்கள் சூழ்ந்திருந்த பராக்கிரம ரோட் வழியே இருவருமாக திரும்பினர்.
கம்பீரமாக நின்ற Squecies வரவேற்புப்பலகை அவர்கள் இருவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அந்தகுட்டி வீட்டில் இருக்கும் ஒருவனது தொழிற்சாலை என்னமோ குடிசை கைத்தொழில் அளவில் தான் இருக்கும் என்று மனதுக்குள் வடிவம் பெற்றிருந்ததை எண்ணி மானசீகமாக தலையில் கொட்டினாள் மைத்தி. ஒரு தரமான பெரிய நிறுவனத்துக்குரிய சகல அம்சங்களையும் உள்ளடக்கி அது வளர்ந்து கொண்டிருப்பதை ஆங்காங்கே முளைத்துக்கொண்டிருந்த புதிய அமைப்புக்கள் அறிவித்தன. அந்தப்பகுதிக்கே அடையாளம் போல தொழிற்சாலைக்குள்ளேயும் பெரும் நெல்லிமரங்கள் தான் நின்றுகொண்டிருந்தன.
வாசலில் இறங்கிக்கொண்டு அவனுக்கு போன் செய்ய “ஓயா அவில்லாத?” என்றபடி இரண்டாவது ரிங்கிலேயே ஆன்சர் செய்தவன் போன் கட்டாகி சில கணங்களில் வாசலை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான்.
அலுவலக உடை எல்லாம் அவன் அணிந்துகொண்டிருக்கவில்லை. காலர் வைத்த டிஷர்ட்டை பாண்டுக்குள் இன் செய்துகொண்டிருந்தான். லேசான ஜெல்லில் பளபளத்த தலை அவனுடைய கண்ணுக்கு கான்ட்ராஸ்ட்டாய் தெரிவதை அவள் பார்த்துக்கொண்டிருந்த போதே அருகில் வந்துவிட்டவன் இருவருக்கும் வணக்கம் சொல்லி விட்டு செந்தூரனிடம் கை குலுக்கினான்.
அவனும் லேசான வெட்கமாய் கைகுலுக்க “நீயும் உள்ளே வாயேன். பாக்டரியை சுற்றி காட்டுகிறேன்” என்று அவனுக்கு வரவேற்பு விடுத்தான் சிந்தக.
‘அவனே அவளை வாசலில் விட்டு விட்டு டவுனுக்கு போக துடித்துக்கொண்டிருக்கிறான்..இவனானால்’ என்று எண்ணியவள் “இல்லல்ல அவன் டவுனுக்கு..” என்று ஆரம்பிக்க, அதற்குள் செந்தூரனோ “தாங்க் யூ அண்ணா. ஐ வுட் லவ் டு!” என்றபடி சைக்கிளை உள்ளேயே விட்டிருக்க முகம் சிவந்து போனாள் மைத்தி. போதாகுறைக்கு செந்தூரனோடு நடந்தபடியே அவளை திரும்பிப்பார்த்து மற்றவன் சிரித்த கேலிச்சிரிப்பும் அவள் முகச்சிவப்பை அதிகரிக்கவே செய்தன.
துரோகி செந்தூர்!
சிஸ்டமாட்டிக்கான அலுவலகம் அவனது. முன்புறம் காகித மற்றும் முகாமைத்துவ பணிகளுக்காக இவனோடு சேர்த்து நான்கு அலுவலர்கள் இருக்க அவர்களை உட்புறம் அழைத்துக்கொண்டு போனான் அவன்.
தற்போதைக்கு மாம்பழம், மாதுளை மற்றும் அன்னாசி, ஆரஞ்சு ஆகிய பழச்சாறுகளை மட்டுமே தயாரிப்பதாக சொன்னவன் பழங்கள் கும்பல் கும்பலாக மரப்பெட்டிகளில் இருந்து இறக்கி தரம் பிரிக்கப்படும் இடத்தை கடந்து நான்கு தனித்தனி பிரிவுகளில் ஜூஸ் தயாரிப்பு இடம்பெறும் பகுதிக்கு அவர்களை அழைத்து சென்றான்.
செந்தூரன் ஆர்வமாய் கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்ததை பார்க்கும் போது இவன் நம்மை எப்போது உள்ளே கூப்பிடுவான் என்று காத்துக்கொண்டிருந்ததை போலவே இருக்கிறதே..இது தெரியாமல் வாயை விட்டு மொக்கை வாங்கிவிட்டோமே என்று எண்ணிக்கொண்டவளுக்கு செந்தூர் எப்போது கிளம்புவான் என்றிருந்தது! பின்னே அவளுக்கு கிடைத்ததே இரண்டு மணி நேரம் ..அதில் பாதியை இவன் சாப்பிட்டால்?
ஜூஸ் தயாரிப்பு பணிகளில் பெரும்பான்மையானவை அதற்கென்றே இருந்த பாரிய இயந்திரங்கள் மூலம் தான் நடந்து கொண்டிருந்தன. தோல் நீக்கி, விதை நீக்கி, பழக்கூழாக்கி, கெடுதலற்ற ப்ரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்பட்டு சாறாக வெளியே வரும் வரை சங்கிலித்தொடர் போல இயந்திரங்களே பணி செய்து கொண்டிருந்தன. சாறு வெளியே வரும் இடத்தில் இருந்த தொழிலாளி கீழிருந்த வட்ட வடிவ சக்கரத்தில் ஆறு பாட்டில்களை அதற்குரிய வட்ட பள்ளத்தில் நிறுத்தி வைக்க அந்த சக்கரம் சரியான நேர இடைவெளியில் இயந்திரத்தின் வாய்க்குப் போய் உரியளவு சாறு நிறைந்ததும் விலக்கிக்கொண்டு அடுத்த போத்தலை வாய்க்கு நேரே கொணர்ந்தது.
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும், அவனிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டும் வந்த செந்தூரனிடம் இருந்தும் சிந்தக தகவல்களை கறந்து கொண்டிருப்பதை கவனிக்கவே செய்தாள் மைத்தி.
“ஒரு பெரிய பன்முகமான தொழில்களை மேற்கொள்ளும் பிராண்ட் நிறுவனம் ஒன்றின் பெயர் சொன்னவன் அவர்கள் தான் ஆரம்பத்தில் எங்களை இது சம்பந்தமாக பயிற்றுவித்து தங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட பழச்சாறுகளை நாங்கள் தயாரித்து தரும்படி எங்களுக்கு ஆர்டர் கொடுத்தார்கள். “
“கிட்டத்தட்ட அந்த கம்பனி பழச்சாறுகளுக்காக அவுட் சோர்ஸ் செய்யப்பட்ட கம்பனியாக தான் நங்கள் இயங்கினோம். என்ன இயந்திரங்கள் வாங்க வேண்டும். எங்களுக்கான வங்கிக்கடன், பயிற்சிகள் சகலத்தையும் அவர்களே செய்தார்கள். தயாரிக்கும் பழச்சாறுகளை மொத்தமாக அந்த கம்பனி லோகோ போட்டு எடுத்துக்கொள்ளும். வெளியே நாங்கள் விற்கக்கூடாது. ஆனால் லாபம் முழுக்க எங்களுடையது தான். என்னுடையதைப்போல இப்படி இந்த மாவட்டத்தில் மூன்று தொழிற்சாலைகள் இருந்தன. ஒரு வருஷம் இவ்வாறு இயங்கியதன் பின்னர் அந்தக்கம்பனி ஏனோ பழச்சாறு, ஜாம் தயாரிக்கும் வேலையை நிறுத்திக்கொண்டது.
சில பல யோசனைகளுக்கு பிறகு நானும் என்னைப்போல இதே மாவட்டத்தில் அந்த கம்பனிக்கு வேலை செய்து கொண்டிருந்த என் நண்பன் ராஜீவ்வும் எங்களுக்கு கிடைத்திருந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு நாங்களே சொந்தமாக ஆரம்பித்து விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக ஜாம் தயாரிப்பு போன்ற வேறு பல தயாரிப்புக்கள் பக்கமும் போகலாம் என்றிருக்கிறோம். அவ்வளவு தான் இந்த கம்பனி வரலாறு!”
கருப்பு ஸ்கர்ட், வெள்ளை ப்ளவுசில் பளிச்சென்றிருந்த பெண்ணொருத்தி ட்ரேயில் பழச்சாறுகளை கொணர்ந்து மூவருக்கும் புன்னகையுடன் தர அதை எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு சென்றவர்கள் ரசித்து அருந்தினர். பழச்சாறு கம்பனியிலேயே தயாரித்த பழச்சாறு சுவையாய் இருப்பது ஆச்சரியமா என்ன?
அருந்தி முடித்ததும் நன்றியுடன் செந்தூர் விடைபெற “மைதிலியை அழைத்துச்செல்வதற்காக என்று நீ அவசரமாய் டவுனில் இருந்து வரவேண்டாம். இன்றைக்கு டெலிவரிக்காக எங்கள் வண்டி சப்காம்பஸ் பக்ககமாக போக வேண்டியிருக்கிறது. மைதிலியையும் அவளுடைய சைக்கிளையும் நான் கொண்டு போய் விட்டு விடுகிறேன்” என்று சிரித்தபடியே சிந்தக சொன்னான்
உடனேயே செந்தூர் ஒரு மேலதிக தாங்க்ஸ் அண்ணாவோடு உற்சாகமாக செல்ல மைதிலி அடேய் என்று மனதுக்குள் அலறினாள். எப்படி கைகழுவி விட்டுப்போகிறான் பார்!
செந்தூரின் தலை மறைந்ததுமே அவள் புறம் திரும்பியவன் அவளிடம் கேட்ட முதலாவது கேள்வி “உன் தலைமுடியை யார் இப்படி செய்தது? என்பதுதான்!
“நம்பி மின்மினியிடம் தலையை கொடுத்தேன். முன்புறம் பிரிஞ்ஜஸ் வேட்டிவிடுவதாக சொல்லி இப்படி மங்கி கிராப்பில் கொண்டு வந்து விட்டுவிட்டாள்.” அவள் நீளமாக வருத்தப்பட்ட படி கண்ணை மறைத்து முன்னே விழுந்து கொண்டிருந்த முடியை பாண்டினால் வாரி மீண்டும் பின்னே தள்ளுவதை பார்த்து சிரிப்பும் வந்துவிட “சரி சரி விடு. பீல் ஆகாதே” என்பதோடு அந்த விஷயத்தை விட்டுவிட்டவன் அவளை தன்னுடைய அலுவலக அறைக்குள் அழைத்துச்சென்றான்
உள்ளே தனியாக ஒரு டேபிளும் பிளாஸ்டிக் நாற்காலியும் இருந்தது.
“உனக்காக பச்சை நாற்காலி எடுத்து வைத்தேன்! உட்கார்” என்று சிரிக்காமல் சொல்லிவிட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவன் அவள் சிரிப்புடன் நாற்காலியில் அமர்ந்ததும் “என்ன கேட்கவேண்டுமோ கேள் பதில் சொல்கிறேன்” என்றான்.
தனக்கு கேட்க தேவையான அனைத்து விடயங்களையும் ஒன்று விடாமல் லிஸ்ட் போட்டு ஒரு பைலில் போட்டுக்கொண்டிருந்தவள் அவனிடம் ஒவ்வொன்றாய் கேட்க ஆரம்பித்தாள்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரங்கள் அவளுக்கு பொறுமையாகவும் தெளிவாகவும் பதிலளித்த சிந்தக்கவும் அந்த ப்ராஜெக்ட்டின் வடிவம் குறித்து அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.
அடிக்கடி போன்கால்களும் வந்துகொண்டே இருந்தது.
இவன் மட்டும் இதை சரியானபடி நடத்தி சரியான சந்தைப்படுத்தல் வசதிகளும் கிடைத்தால் எங்கேயோ போய்விடுவான் என்று தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை மைத்திக்கு.
“உங்கள் நிறுவன லோகோ ஒட்டிய பிளாஸ்டிக் போத்தல்களை அவுட்சோர்சிங் மூலம் வேறொரு கம்பனியில் கொடுத்து தயார் செய்து வாங்கிக்கொள்வதாக கூறினீர்களே..ஒரு போத்தலுக்கு உங்களுக்கு எவ்வளவு செலவாகும்?” மைதிலி கேட்டுக்கொண்டிருக்க
“மச்சா மே…” என்றபடி கதவைத்திறந்து கொண்டு உள்ளே வந்த இன்னொருவன் மைதிலியைக்கண்டு விழிகளை விரித்தான். சிந்தக அதை ரசிக்கவில்லை என்பது அவன் வந்தவனை உறுத்து விழித்ததிலேயே தெரிந்தது.
அவன் இதிலெல்லாம் பாதிக்கப்படுபவன் போலவே தெரியவில்லை. “யார் மச்சான் இது?” என்று அப்பாவி போல சிந்தகவிடமே கேட்டுவிட்டான்.
“மைதிலி இவன் தான் ராஜீவ். என்னுடைய பார்ட்னர் என்று சொன்னேனே. இவனும் நானும் தான் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இந்த வண்டியை ஓட்டுகிறோம். ராஜீவ்..இது மைதிலி. நான் சொன்னேனே..ப்ராஜெக்ட் செய்ய ஐந்து மாணவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்று. அவர்களில் ஒருத்தி.”
ஓ..என்றவன் “இவளின் சைக்கிளையா கொண்டு போய் விடச்சொன்னாய்?” என்று சிந்தகவிடம் கேட்க
“என் சைக்கிளை எங்கே விட்டீர்கள்?” என்று அவசரமாய் கேட்டாள் மைத்தி.
“பயம் வேண்டாம். உங்கள் ஆடிட்டோரியம் பக்கத்தில் உள்ள கடையில் சொல்லி நிறுத்தி வைத்து விட்டு வந்தேன்” என்றவன் அவளின் உச்சரிப்பில் அவளை கண்டுகொண்டு “நீங்கள்..நீங்கள் தமிழ் தானே..” என்று கேட்டான்.
மைதிலிக்கு தன்னுடைய சைக்கிள் ஏன் அங்கே போனது என்ற கேள்வி மறந்து அவனின் குழந்தைத்தனம் சிரிப்பை வரவழைத்தது. “ஆமாம்” என்று புன்னகை செய்தாள்.
உடனே அவன் “வீட்டு ..எங்கே?” என்று தமிழை கொலை செய்து விட்டு தமிழில் காவியமே எழுதிவிட்டவன் போல பெருமையாய் அவளை பார்க்க வேறு செய்தான்.
“யாழ்ப்பாணம்!”
உடனே “ஓ… எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்” என்றவன் “வனக்கம், வாங்கே..போங்கே…சாப்பிடீங்களா?” என்று சரமாரியாக திறமை காட்ட ஆரம்பிக்க இதேதடா தமிழுக்கு வந்த சோதனை என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானாள் மைதிலி.
“டேய்!!! இப்ப எதுக்கு வந்த நீ?” என்று சிந்தக அதட்ட “ஹி ஹி உன்னை பார்க்க நிஜாம் வந்திருக்கிறார், ஹாலில் அமரவைத்தேன். சீக்கிரம் வா” என்றபடி மைதிலிக்கு ஒரு அகன்ற புன்னகையை கொடுத்துவிட்டு வெளியேறினான் ராஜீவ்,
வாயில் ஏதோ முணுமுணுத்த சிந்தகவிடம் “பார்ட்னர் என்று சொல்லிவிட்டு இப்படி மிரட்டுகிறீர்களே” என்று சிரிப்புடன் கேள்வி கேட்டாள் மைதிலி
“அவன் என் தம்பி போல.. ஸ்லீப்பிங் பார்ட்னராக இருக்கிறான். கொஞ்சம் விளையாட்டுத்தனம் அதிகம் ஆனால் வெள்ளை மனம்…நாங்கள் பேசிக்கொள்வதே இப்படித்தான்” என்று விளக்கம் தந்தபடி ஒரு பைலுடன் எழுந்தவன் “ஒரு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்திரு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனான்.
அவன் போன இரண்டாம் நிமிடம் உள்ளே வந்த அதே பெண் “கையில் ஒரு குட்டி கண்ணாடி கோப்பை நிறைய பச்சை நிற ஜெல்லியும் ஸ்பூனும் எடுத்து வந்து கொடுத்துவிட்டு பெரிய புன்னகையோடு அகன்றாள்
சட்டென்று அவன்.. அவள்.. அதே பச்சை ஜெல்லி சம்பந்தப்பட்ட இன்னொரு நாள் அவள் நினைவில் வந்து படபடப்பூட்டியது. இவ்வளவு நேரமும் நல்லாத்தானே போனது! இப்போது இப்படி அதை அவன் நினைவு படுத்தாவிட்டால் தான் என்ன? என்று மனதுக்குள் அவனை திட்டிக்கொண்டே ஜெல்லியை காலி செய்து கொண்டிருந்தாள் அவள்
அவன் வரும் போது கையில் ஜெல்லியோடு உட்கார்ந்திருந்தால் தானே அவன் எதையாவது குறிப்பால் உணர்த்த முயல்வான்? என்று எண்ணியபடியே அவசர அவசரமாக காலி செய்தவள் எழுந்து கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தாள். அவளை வெற்றுக்கொப்பையுடன் கண்டதுமே அந்த பெண் ஓடி வந்து அதை வாங்கிச்செல்ல நல்ல பிள்ளையாக திரும்பி வந்து தன்னிடத்தில் அமர்ந்து கொண்டிருந்தாள் அவள்.
சற்று நேரம் கழித்து உள்ளே வந்தவன் “சாப்பிட்டு விட்டாயா” என்று சர்வசாதாரணமாய் கேட்டு விட்டு அவள் தலையசைத்ததும் “சரி கடைசியில் என்ன கேட்டாய்?” என்று கேள்விகளுக்கு தாவிவிட மிகவும் ஏமாற்றமாய் உணர்ந்தாள் அவள்.
ஒருவழியாக சகலமும் கேட்டு பதில் வாங்கி முடிந்ததும் நன்றியுரைத்தவளிடம் “உனக்கு இப்போதே ஹாஸ்டல் போயாக வேண்டுமா? ஏதும் வேலை இருக்கிறதா? என்று கேட்டான் சிந்தக.
“இல்லையே..இன்றைக்கு முழுவதும் நான் ப்ரீ தான். “ அவனை அவசரப்படுத்தி தொல்லை செய்யக்கூடாது என்று தான் அப்படிச்சொன்னாள் அவள்.
“செந்தூரனிடம் உன்னை கொண்டு போய் விடுவதாக சொல்லியிருந்தேன். ஆனால் லோட்கள் சேர மதியமாகும் போலிருக்கிறது. இனிமேல் அவனை திரும்ப கூப்பிடுவது பாவம்.. நீ கொஞ்சம் காத்திருக்க முடியுமா? என்று கேட்டான்.
பாவம் என்று சொல்லி அவனை கூப்பிடும் ஐடியாவுக்கு பெரிய லாக்காக போட்டுவிட்டு அவளிடம் கேட்டால் முடியும் என்று சொல்வதை தவிர வேறு வழி என்ன? அதை விட சைக்கிளை வேற கொண்டு போய் அங்கே விட்டுவிட்டதன் பின் செந்தூரன் வந்து தான் என்ன பிரயோஜனம்?
“உங்களுக்கு தொல்லையாக இருக்காதா நான் வேண்டுமானால் வெளியே காத்திருக்கவா? “ என்று மட்டும் கேட்டாள் மைதிலி.
“இல்லையில்லை..அது நன்றாக இருக்காது. இங்கேயே இரு” என்றவன் கணனியில் வேலை செய்து கொண்டே அவளிடம் பேச ஆரம்பித்தான்.
அவளது ஸ்டடி லீவ். பரீட்சைக்கான தயார்படுத்தல்கள்.,,அப்பா அம்மா…வீடு..யாழ்ப்பாணம்.. இங்கே பிடித்திருக்கிறதா? அவனுக்கு அவளிடம் கேட்பதற்கு அத்தனை விடயங்கள் இருந்தன.
“பத்துநாட்கள் ஸ்டடி லீவுக்கு வீட்டுக்கு போகவில்லையா நீ?”
“எப்படி போவது? இப்போது நிலைமை சரியில்லை. தரை வழிப்பாதை பூட்டியிருப்பதால் திருகோணமலை போய் அங்கிருந்து கப்பலில் தான் யாழ்ப்பாணம் போக வேண்டும். களைப்புப்போக போக இரண்டு நாள் வர இரண்டு நாள் என்று பயணமே நான்கு நாட்களை விழுங்கி விடும்” என்று சோகமாய் சொன்னாள் அவள்.
ஆமோதிப்பாய் கேட்டுக்கொண்டான் அவன்
வண்டி வரவில்லை என்று காரணம் சொல்கிறானே.. வெளியே தானே இவனுடைய பைக் நிற்கிறது..என்னை அதில் கொண்டு போய் விட்டால் என்ன? பெரிய தூரமும் இல்லையே..வேண்டுமென்றே அவளை நிறுத்தி வைத்திருக்கிறானோ? என்று லேசாக சந்தேகமும் வந்தது மைத்திக்கு..ஆனால் அவனோ பேச்சில் அவளையும் ஈடுபடுத்தி எல்லாவற்றையும் மறக்கடித்தான்.
அவள் அங்குமிங்கும் கால்களை மாற்றி அமர்வதை கண்டுவிட்டு நான் வேண்டுமானால் “உனக்கு பேப்பரும் கலர் பென்களும் தருகிறேன்..வரைந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறாயா?” என்று அவன் சீண்ட மேஜையில் இருந்த கார்ட் ஒன்றை தூக்கி அவன் மீது வீசினாள் மைத்தி.அதை லாவகமாக பிடித்தபடி கண்களால் சிரித்தவனை நேராக நோக்கவே முடியவில்லை அவளுக்கு..
“நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?” கேட்டு விட்ட பிறகு தான் தவறாக எடுத்துக்கொள்வானோ என்று நாக்கை கடித்துக்கொண்டே கடைக்கண்ணால் அவன் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள் அவள்.
முகத்தில் திரையிட்டால் போல ஒரு கருமை வந்து விழ சில கணங்கள் அவளையே நேராகப்பார்த்துக்கொண்டிருந்தவன் அவன் அமர்ந்திருந்த மேஜையின் ஓரமாக இருந்த பைலில் இரண்டு தட்டு தட்டி “இதில் இருக்கும் பார்” என்றான்.
தயக்கத்தை ஆர்வம் வென்றுவிட எழுந்து வந்தவள் சிந்தக நிவேதன் ரத்னாயக்க என்று கருப்பு மையில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த அந்த பைலை எடுத்துக்கொண்டு மேஜையில் சாய்ந்து நின்றபடியே புரட்டினாள்.
ஆங்கிலத்தில் ஒரு டிப்ளோமா அது தவிர ஏதோ மார்க்கட்டிங் மானேஜ்மென்ட் சம்பந்தமாக இரண்டு வருட டிப்ளோமா மொத்தம் இரண்டு டிப்ளோமாக்களை வைத்திருந்தான். ஏ லெவலில் மூன்று c வாங்கியிருந்தான். அவனுக்கு படிப்பை விட விளையாட்டு profile தான் பிரகாசமாக இருந்தது.
“நான் உன்னைப்போல எல்லாம் ஏ லெவலில் அரச பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான ரிசல்ட் வாங்கவில்லை. நான் சார்ந்த ஊரில் யாரும் அதை எங்களுக்கு அழுத்தமாக பதியவைக்கவும் இல்லை. நான் வெறும் டிப்ளோமா ஹோல்டர் தான்..” வழக்கமான அழுத்தம் இல்லாமல் லேசான கரகரப்புடன் அவன் பேசியதே ஒரு மாதிரியாக இருந்தது அவளுக்கு..
“இதெல்லாம் ஒரு மாட்டரா? என் பெரிப்பா GA தெரியுமோ?அவருக்கு ஸ்றீலங்கன் யூனிவர்சிடீஸ் குவாலிட்டி என்ற பேர்ல ஸ்டடீசை இருபத்து நாலு வயசு வரை இழுக்குறதுல சம்மதம் இல்ல. அவரோட பையனை அவர் ஓலெவலுக்கு மேல ஸ்கூல்ல படிக்க வைக்காம உடனேயே ஒரு டிப்ளோமாவுல சேர்த்து விட்டார்.. அது முடிச்சதும் பிறகு அவனே சொந்தமா ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டே ஏதோ ரெண்டு வருஷம் இன்னொரு டிப்ளோமா பண்ணினான். இப்போ அமெரிக்கா போய்ட்டான் மேல படிக்க! யூ ஆர் வேஸ்டிங் யுவர் டைம்னு எனக்கு இப்போ அட்வைஸ் பண்றான் அவன்!” படபடவென பேசியவளை புன்னகை முகத்தில் தோன்ற பார்த்துக்கொண்டே இருந்தான் அவன்.
ஆனா நீங்க கண்டிப்பா மேலே படிக்கணும்!!!
இனிமேயா?
இனிமேத்தான்! இப்படி பண்ணலாமா?
எப்படி?அதே தொனியில் திரும்பிக்கேட்டவனின் குரலில் இருந்த குறும்பை இவள் கவனிக்கவில்லை.
“நீங்க இப்போ சின்ன அளவுல பண்றீங்க! பெரிய அளவுக்கு போகும் போது M.D பெயருக்கு பின்னே ஒரு MBA ஆவது வேண்டாமா? கண்டிப்பா நீங்க MBA படிக்கணும்!! எங்கே சேரலாம்? என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள் “கொழும்பு யூனி? இல்லல்ல வேணாம். ஏற்கனவே நல்ல ப்ரோபெஷன்ல இருக்கீங்க. உங்களுக்கு காண்டாக்ட்ஸ் அண்ட் எக்ஸ்போஷர் கிடைக்கணும்னா ஒரு பாரின் MBA தான் சரி..” என்றாள்.
ஒய்..என்னிடம் டிகிரியே இல்ல..நீ மாஸ்டர்ஸ் பத்தி கனவு காணறியா? எவன் சேர்த்துப்பான் என்னை? அவனது குரலே நம்பிக்கையின்மையை தான் காட்டியது.
ஹையோ கவர்ன்மென்ட் யூனிவர்சிட்டில தான் நூற்றியெட்டு கண்டிஷன்ஸ்..இப்போ ட்ரெண்டே மாறிப்போச்சு. ப்ரைவேட்டா நீங்க பண்ணலாம். இப்போ நீங்க ரெண்டு டிப்ளோமா வச்சிருக்கீங்க. மூணு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு.இதுவே போதும்..டிகிரி கேட்க மாட்டான்” என்று இழுத்துவிட்டு “ஒரு நாலு லட்சம் காசு உங்களால புரட்ட முடியுமா? என்று அவனிடம்கேட்டாள்!
அவன் புரட்டிடலாம் என்றான்
சரி.. அப்படின்னா நீங்க ICBT கொழும்பு பிராஞ்சுக்கு கால் பண்ணி UK இல்லனா USA காம்பஸ் ஆபர் பண்ற மாஸ்டர்ஸ் எதுக்காவது அப்ளை பண்ணுங்க. அவங்க உங்களை டிகிரி இல்லாததால மாஸ்டர்சுக்கு முன்னே ஒரு ஆறுமாச பௌண்டேஷன் கோர்ஸ் பண்ண சொல்வாங்க..அது முடிச்சதும் நேரா மாஸ்டர்ஸ் பண்ணிடலாம். ஒண்ணரை வருஷம் மட்டும் தான். என்னோட பிரண்டோட அக்கா அப்படித்தான் செஞ்சாங்க. அதுக்கப்புறம் உங்க லெவலே மாறிடும்..நிறைய பிசினஸ் காண்டாக்ட்ஸ் கிடைக்கும்.. நீங்களும் கான்பிடண்டா எங்களைப்போல டிகிரி ஹோல்டர்ஸ்க்கு வேலை கொடுப்பீங்க..ஆனா அப்போல்லாம் நீங்க என்னை ஞாபகம் வச்சிருப்பீங்களோ மாட்டீங்களோ?” என்று குறும்பாய் சிரித்து இமைகளை உயர்த்தினாள் மைதிலி.
கடகடவென சிரித்து விட்டவன் “உனக்கு எல்லாமே ஈசி தானா? இதெல்லாம் சாத்தியமா? என்று சிந்திக்க மாட்டாயா?” என்று கேட்டான்.
“ப்ச் நம்பலைல்ல? உங்களுக்கு பணம் புரட்ட முடியும் தானே..இப்போவே ICBTகு கால் பண்ணி கேட்டுடுவோம்!”
ஏய் ஏய்..நானே மெதுவா விசாரிக்கிறேன்.
அதெல்லாம் முடியாது..இப்போ சும்மா அரட்டை தானே அடிச்சிட்டு இருக்கீங்க..நெட்ல தேடுங்க
அவன் மைத்தி.. என்று ஆரம்பிக்க
பொறுமையை கைவிட்டு மானிட்டரை தன் புறம் திருப்பியவள் ICBT கொழும்பு பிரான்ச் நம்பரை தேடி எடுத்து தானே தொலைபேசியில் அழைத்தாள். ஸ்பீக்கர் மோடில் போட்டு விட்டு இவனது கல்வித்தகுதி அனுபவத்தை சொல்லி MBA படிக்கும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்க அவள் சொன்னதுபோலவே அவர்களும் ஜூன் மாதம் ஆரம்பிக்கும் பவுண்டேஷன் கோர்ஸில் வந்து சேர்ந்து கொள்ள சொல்லி விட சிந்தக அயர்ந்து தான் போனான்.
அழைப்பை கட் செய்து விட்டு “என்ன போய் சேர்றீங்களா?” என்ற படி மீண்டும் அவள் இமைகளால் அவனை சவாலுக்கழைத்தாள்
“உன் பிரன்ட் மினிக்கு தாங்க்ஸ் சொல்லிடு.. நீ தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது நெத்தில முடியும் சேர்ந்து டான்ஸ் ஆடுறது போலவே இருக்கு!” என்றான் அவன் சம்பந்தமே இல்லாமல் அவளை ரசனையாய் பார்த்தபடியே.
லேசாய் கன்னம் சிவந்தவள் ஏற்கனவே அவசரப்பட்டு அவன் படிப்பு விஷயத்தில் மூக்கை நுழைத்து விட்டோமோ என்று சிந்தனையில் இருந்ததால் அதைப்பற்றி பேசாமல் “உங்க வண்டி எப்போ வரும்?” என்று பேச்சை மாற்றினாள்
“ஏன் இங்கே இருப்பது உனக்கு கஷ்டமாக இருக்கிறதா?”
அப்படியில்லை..
பிறகு ஏன் கேட்கிறாய்?
இல்லை உங்கள் வேலையை நான் டிஸ்டர்ப் பண்ணிக்கொண்டிருக்கிறேனே..
அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் கேட்கவேண்டும் என்று நினைத்தேன். நீ பேசறதை பார்க்கும் போது நீ ஜெயிக்க முடியாத கேசே இருக்காதே. நீ ஏன் உங்க அப்பாவை பின் பற்றி லாயர் ஆக ஆசைப்படவில்லை?” என்று என்று பேச்சை மாற்றினான்.
“ஐயோ யார் படவில்லை? எனக்கு எங்க அப்பா முன்னாடி நின்னு யுவர் ஆனர் என்று வாதாட எவ்வளவு ஆசை தெரியுமா? இப்போது பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லி என் அம்மா தான் சதி செய்து என் ஆசையை குழப்பி விட்டார். “
சிரித்துக்கொண்டு தலையசைத்தவன் “சரி..சாப்பிடலாமா ? உனக்கு பசிக்கவில்லையா? ராஜிவ் உனக்கும் சேர்த்து தான் சாப்பாடு வாங்கி வைத்திருப்பான்”
ஐயோ நான் ஹாஸ்டல் போய்..
அதெல்லாம் இல்லை நீ வருகிறாய் என்று அவன் எழுந்து வெளியே செல்ல பின்னாலேயே ஓடினாள் அவள்.
அன்று மதியம் இருவரோடும் சேர்ந்து உணவுண்டு ஒருவழியாக சிந்தக்க அவளை ஹாஸ்டலுக்கு அழைத்து செல்கிறேன் என்று மனமிரங்கியபோது மணி மூன்று ஆகியிருந்தது.
அவனோடு வெளியே வந்தவள் அவன் பைக்கை நோக்கிப்போக விழித்தாள். இந்த பைக் காலையில் இருந்தே இங்கே தானே இருந்தது! அவன் முக்கியமான வேலை எதுவும் செய்தது போலவும் தெரியவில்லை. வெட்டி அரட்டை அடித்த நேரம் அவளை அப்போவே கொண்டு போய் விட்டிருக்கலாமே..வேண்டுமென்றே அவளை அங்கே தன்னோடு வைத்துக்கொண்டிருந்திருக்கிறான்!
ஆனால் அந்த சந்தேகத்தை அவள் அவனிடம் கேட்கவில்லை, அவனும் அவளிடம் எதையும் சொல்லவும் இல்லை.
பராக்கிரம ரோடில் வலப்புறமாக சென்று மெயின் ரோடில் ஏற வேண்டிய வண்டி இடப்புறமாக சென்று கொண்டிருந்ததை கவனித்தவள் அவனிடம் நாம் எதிர்ப்பக்கமல்லவா போகவேண்டும் என்று விசாரித்தாள்
ஷ் என்று வாயில் கைவைத்து காண்பித்தவன் அவளுடைய குழப்பமுகத்தை கண்ணாடியில் பார்த்து முறுவலித்தபடியே வண்டியை விரட்டினான். சில நிமிஷங்களில் வண்டி ஒரு மணல் பாதையில் திரும்பி சுற்றிலும் மதில் போடப்பட்டிருந்த ஒரு இடத்தின் கேட்டுக்கு முன்னால் போய் நின்றது. லேசான படபடப்புடன் ஆளே இல்லாத அந்த சுற்றுப்புறத்தை பயத்துடன் பார்த்தவள் அவனிடம் அதைப்பற்றி கேட்டால் என்னை சந்தேகப்படுகிறாயா என்று திட்டிவிடுவானோ என்ற யோசனையோடு கேட்டை விரியத்திறந்து புன்னகைத்த அவனை பின் பற்றி உள்ளே அடியெடுத்து வைத்தாள்.
உள்ளே அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது!
ஒரு மீற்றர் இடைவெளியில் வரிசையாய் நடப்பட்ட குட்டை மாதுளை மரங்கள் உடல் முழுதும் சிவப்புக்கனிகளை தாங்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு ஏக்கருக்கும் மேலான அந்த நிலத்தில் காட்சி கொடுத்தன. தூவல் பாசன முறையில் ஆங்காங்கே இருந்த ஸ்ப்ரிங்க்லர்கள் அவற்றுக்கு சதா நீர்த்துளிகளை விசிறிக்கொண்டே இருக்க ஈரமாய் பளபளத்த பசிய இலைகளுக்கு நடுவில் செக்கச்சிவந்த பசிய மாதுளைகள் கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் அச்சுப்பிசகாமல் ஒரு மீட்டர் தூர இடைவெளியில் பார்க்கவே கொள்ளை அழகாக இருந்தது.
“இது என்னுடைய நிலம் தான். என் அம்மாவழி தாத்தா கொடுத்தது. மாதுளை ஜூசுக்கு தேவையான பழங்களை இங்கே நானே பயிரிட்டு வளர்ந்து எடுத்துக்கொள்கிறேன்” என்று அவன் மேலும் விபரம் சொன்னான்.
லேசான மணல் தன்மையுடன் இருந்த மண்ணில் இத்தனை வளமா என்ற ஆச்சர்யத்துடனே கையில் வைத்திருந்த குட்டி டிஜிட்டல் காமராவால் தோட்டத்தை படங்களாக பதித்துக்கொண்டவள் பையை முதுகில் போட்டுக்கொண்டு மாதுளை இலைகளை தடவியபடி நீள நடக்க ஆரம்பித்தாள்.
கொஞ்சம் தூரத்தில் பழங்கள் சமீபத்தில் பறிக்கப்பட்டிருக்க வேண்டும் உடலெங்கும் பூக்களை மட்டும் இறைத்துக்கொண்டு மரங்கள் நின்றது அவள் கண்ணை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டது.
காமரா கொண்ட மொபைல் வாங்கிக்கொடுத்தால் அவளது படிப்புக்கேட்டுவிடும் என்று வெறும் ரேடியோ கூட இல்லாத நோக்கியா வெர்ஷனை வாங்கிக்கொடுத்த அம்மாவை மனதுக்குள் சபித்த படி டிஜிட்டல் காமராவை திருப்பி தன் முகத்தை பூக்களோடு சேர்த்து அவள் படம் பிடிக்க முயன்றாள்.
க்ளிக்கிய படத்தை மீண்டும் பார்த்துவிட்டு முகம் பெரிதாக தெரிவதைகண்டு அலுப்புடன் நிமிர்ந்தவளின் பார்வையில் சிந்தகவின் சோனி எரிக்சன் மொபைல் அவளையே பார்ப்பது விழுந்தது.
இவன் நம்மை படம் எடுக்கிறானா? என்று படபடப்பானாள் அவள் . கேட்டுவிடலாம் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனை பார்க்க அவனோ எதுவுமே நடவாததை போல அவளை நெருங்கினான்.
கேள் கேட்டு விடு..என்னை புகைப்படம் எடுத்தாயா என்று கேள் என்று மூளை உந்த நாக்கோ சதி செய்து மேலண்ணத்தில் போய் ஒட்டிக்கொண்டது.
என்னிடம் கேட்டால் நான் போட்டோ எடுத்து தர மாட்டேனா? என்று கடிந்து கொண்டவன் அவள் கையில் இருந்த காமராவை எடுத்தான். போ போய் நில்
மறுக்க முடியாமல் போய் பூக்களின் அருகில் நின்று புன்னகைத்தவளுக்கு அவன் தன்னை கமராக்கண்கள் வழியே பார்க்கிறான் என்ற எண்ணமே இயல்பாக நிற்க விடாமல் செய்தது.
அவள் தடுமாறுவதை உணர்ந்தோ என்னவோ பிறகு அவனே “அங்கே நில் இங்கே இப்படி நில்” என்று அவளை டைரக்ட் செய்ய ஆரம்பித்தான்.
இங்கில்லை..கொஞ்சம் பின்னே ஆம் அப்படித்தான்!!
இல்லை நான் இந்த இரண்டுக்கும் நடுவில் நின்றுகொள்கிறேனே என்றபடி நடுவில் இருந்த வரப்பு போன்ற அமைப்பில் கால் வைத்தவள் அது பொறிந்து விழும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொதேர் என்று நடுவில் போய் விழுந்து விட்டாள்.
மின்னல் வேகத்தில் அருகில் வந்து விட்டவன் கவனமாக பார்த்து கால்வைப்பதில்லையா என்று கடிந்தபடி அவளின் தோள்களைப்பிடித்து தூக்கி நிறுத்தினான்.
தனிமையும் சட்டென்று நிகழ்ந்து விட்ட நெருக்கமும் இருவருக்குமே ஒரு மயக்கத்தை கொடுக்க ஆரம்பித்தது. இடது தோள் மீதிருந்த கை அப்படியே இருக்க அவளுடைய கண்களை மறைத்துக்கொண்டிருந்த அந்த வெட்டப்பட்ட முடியை வலதுகை விரல்களால் நெற்றியில் வளைவாக ஒதுக்கி விட்டான் அவன்.
பிறகு “அடுத்த மாசம் எக்ஸாம்..இனிமேல் நன்றாகப்படி. தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதே..உன் பரீட்சை முடிந்ததும் நான் உன்னிடம் நிறைய பேச வேண்டும். புரிந்ததா? ப்ராஜெக்ட் விஷயமாக உனக்கேதும் தேவை என்றால் தயங்காமல் கேள்” என்று மட்டும் சொல்லி விட்டு வேகமாய் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தான் சிந்தக.
வழியெங்கும் பைக்கில் இருவருமே பேசிக்கொள்ளவில்லை.
அவளை கடைக்கு முன்னே இறக்கி விட்டவன் அவள் சைக்கிளை எடுத்து வர கொண்டு வந்திருந்த இரண்டு பைகளையும் அவளிடம் கொடுத்தான். தடிமனாக இருந்த பையை காட்டி இது உனக்கு..என்றவன் மற்றதை செந்தூரனிடம் கொடுத்துவிடு” என்றான்.
நன்றி சொல்லி வாங்கிக்கொண்டவள் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் முந்திக்கொண்டு அவன் செல்ல அவனுடைய பைக் கண்ணாடியில் தன் முகம் தெரிவதை கண்டு பாதையை பார்ப்பது போல நேராகவே பார்த்துக்கொண்டு ஓட்ட ஆரம்பித்தாள் மைதிலி. ஹாஸ்டல் கேட்டுக்குள் நுழைந்து திரும்பிப்பார்த்தாள். அன்றைக்கு போலவே தலையசைத்து விட்டு பைக்கை திருப்பிக்கொண்டு கண்களுக்கு மறைய ஆரம்பித்தான் சிந்தக.
பையில் நிறைய மாதுளம்பழங்களும் இரண்டு பாட்டில் ஆரஞ்சு ஜூசும் இருந்தது. அதை நண்பிகளோடு பகிர்ந்தவள் சனியிரவு ஆதலால் வெறுமையாக இருந்த அறையில் இரவிரவாய் மாதுளைத்தோட்ட பின்னணியில் கண்ணில் மயக்கமும் வெட்கமுமாய் நிற்கும் தன் புகைப்படங்களையே மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள்
அவற்றில் ஒன்றில் கூட அவன் இல்லை தான். ஆனால் அவற்றை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் அவன் மட்டும் தான் நினைவுக்கு வந்து கொண்டிருந்தான்.
WLM அத்தியாயம் 6
“வேண்டும்..வேண்டாம் என்ற இரண்டு புள்ளிகளுக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த நான் அவனுக்கு நான் வேண்டுமா வேண்டாமா என்பதை எண்ணிப்பார்க்க மறந்து விட்டேன் போலிருக்கிறது. நாங்கள் மஞ்சு ஆன்ட்டி வீட்டுக்கு போகும் நாட்களிலெல்லாம் அவன் தலைமறைவாகிக்கொண்டே இருந்ததில் எங்கள் farm family ப்ராஜெக்டில் என்னைத்தவிர மீதிப்பேரின் பங்கு ஏறக்குறைய நிறைவு பெற்றிருந்தது. அவன் ஏன் என்மீது இத்தனை கோபமாக இருக்கிறான் என்பதைத்தான் என்னால் ஊகிக்கவே முடியவில்லை!”
மரவள்ளிக்கிழங்குகளை மஞ்சள் உப்பிட்டு அவித்து துண்டுகளாக்கி வெறுமனே வெங்காயம் , சிவப்பு மிளகாய் வைத்தரைத்த ‘கட்ட’ சம்பலுடன் மூன்று பிளேட்களை எடுத்துக்கொண்டு வந்து ஒவ்வொருவரின் கையிலும் கொடுத்தார் மஞ்சு ஆன்ட்டி. அன்றைக்கு ஐவரில் மூவர் மட்டுமே அங்கே வந்திருந்தனர்.
கிழங்கை சம்பலில் புரட்டி நாவில் அறைந்த காரத்துடன் சாப்பிட்டுகொண்டிருக்கையிலே தென்னந்தோட்டத்தில் சமந்த அங்கிளைக்கண்டதும் ஆண்கள் இருவரும் கையில் பிளேட்டை எடுத்துக்கொண்டு பின்புறமாய் அவரை நோக்கி செல்ல தானும் எழுந்து கொடியில் காயப்போட வேண்டிய உடைகளோடு வந்த ஆன்ட்டிக்கு அருகில் போனாள் மைதிலி.
“இன்னும் ஒரு மாதத்தோடு உங்களையெல்லாம் பார்க்கவே முடியாது என்று நினைக்கும் போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது மகள். “ சொன்னவர் வெறும் வாய்வார்த்தைக்காக சொல்லவில்லை என்பதை நெகிழ்ந்த அவரது உடல் மொழியே சொல்லிக்கொண்டிருந்தது.
“என்ன ஆண்ட்டி..நான் படிச்சு முடிக்கும் வரை ஜூனியர்சை பார்க்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வருடமும் இங்கே வந்துவிடுவேன்.. அதன் பிறகும் உங்களை பார்க்கவென்றே வருவேன்!”
“போ மகளே..என்னை சமாதானம் செய்யாதே..”
“நீங்க வேணும்னா பாருங்க ஆன்ட்டி.. கொஞ்ச நாள்லயே பிரச்சனை எல்லாம் தீர்ந்து A 9 பாதை மறுபடி திறக்கும். நீங்க யாழ்ப்பாணம் பார்க்க எங்க வீட்டுக்கு வருவீங்க! இல்ல..நான் எங்கம்மா அப்பாவை கூட்டிட்டு வருவேன்.”
“உன் வாயில் சர்க்கரை தான் போடணும்!” என்று சிரித்தபடி சாப்பிட்டு முடித்த அவளுடைய பிளேட்டை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு வீட்டுக்குள் போனவரை பின் தொடர்ந்தாள் மைதிலி.
மனிதர்களில் தான் எத்தனை வகைகள்!!! பல்கலைக்கழக மாணவர்களின் செயன்முறைக்கற்கைக்கு தகவல்களை பகிர்ந்து உதவி செய்யும் படி மட்டும் தான் நிர்வாகம் இவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் அந்த உதவியோடு கூடவே இப்படியெல்லாம் பாசமாய் பார்த்துக்கொள்ள சொல்லி இவர்களுக்கு யார் சொன்னது? என்னதான் அவ்வப்போது ஏதாவது வாங்கிப்போனாலும் சொந்த உறவினர்களை போல வருவதை எதிர்பார்த்துக்கொண்டு அவர்களுக்காகவே எளிமையாய் எதையாவது செய்து வைத்துக்கொண்டு காத்திருப்பதெல்லாம்….இந்த அன்புக்கு கைம்மாறு தான் ஏது!!
“என்ன மகள் பலமான யோசனை? எல்லோரும் கேட்டுக்கேட்டு எழுதிக்கொள்கிறார்களே..நீ எதையும் செய்யவில்லையா..உனக்கு எதுவும் தெரிந்து கொள்ள தேவையில்லையா?”
“அது ஒரு சின்ன பிரச்சனை ஆன்ட்டி…எனக்கு ஒதுக்கப்பட்டது சிந்தகவின் பிசினஸ் பற்றிய ஆய்வு தான். ஆனால் அவரை ஒவ்வொரு நாளும் சந்தித்து விடலாம் என்று நானும் தேடி வருகிறேன், அவரை சந்திக்கவே முடியவில்லை..அவரிடம் பேசாமல் நான் எழுத முடியாது ஆன்ட்டி.அடுத்த மாசமே சப்மிட் செய்தாகவேண்டும்.. கேட்டால் அவரை தொல்லை செய்வது போலாகுமோ என்று நான் தயங்கிக்கொண்டிருக்கிறேன்..” தயங்கி தயங்கி தன் பிரச்னையை சொல்லியே விட்டாள் மைத்தி.
“என்னம்மா நீ! முதலிலேயே சொல்ல வேண்டியது தானே” என்று கடிந்து கொண்டவர் தான் மகனிடம் பேசுவதாகவும் அந்த வாரம் வெள்ளிக்கிழமை வழக்கம் போல அவள் வரும் போது அவனை வீட்டில் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் உறுதி அளித்தார் மஞ்சு ஆன்ட்டி.
அத்தோடு அந்த பிரச்சனையை மறந்து விட்டவள் அன்றிரவு சாப்பிட்டு விட்டு வரும் போது தன்னை கைப்பேசியில் அழைத்த புதிய இலக்கம் அவன் தானென கொஞ்சமும் ஊகிக்கவில்லை!
அவள் ஹலோ சொன்னதுமே
மம சிந்தக கத்தாகரன்னே…என்று காதுகளில் வந்து அதிர்ந்த குரலில் ஒருகணம் உறைந்து தான் போய் விட்டவள் வேக வேகமாய் அந்த இருளிலும் கோவிலைத்தேடி ஓடி தூணொன்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
“என்னிடம் பேசவேணும் என்றால் முன்பே சொல்வதற்கு என்ன? கடைசி நேரம் வரை என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்டவனின் குரலில் மெல்லிய ஆதங்கம்!
“இல்லை..உங்களுக்கு கஷ்டம் கொடுக்கிறேனோவென்று..”
“ப்ச்..அதுதான் உதவி செய்கிறோம் என்று அப்பா வாக்களித்திருந்தாரே..பாதியில் விட்டா விடுவோம்?” என்றவன் “சரி உனக்கு என்ன வகை தகவல்கள் தேவை?” என்று கேட்டான்
தனக்கு தேவையான விபரங்களை சொன்னவள் தொழிற்சாலையின் புகைப்படங்களும் கிடைக்குமானால் நன்றாக இருக்கும் என்று தயங்கி தயங்கி சொன்னாள்.
“ஹ்ம்ம்..என்றவன் “மைதிலி..ஒன்று செய்வோமா? நீ சனிக்கிழமை நேரடியாகவே தொழிற்சாலை வந்து விடு.. உனக்கு சனிக்கிழமை இரண்டு மணி நேரம் தருகிறேன். சமாளிப்பாய் தானே.. ஏனெனில் என்னுடைய ஆவணங்கள் எல்லாம் தொழிற்சாலையில் தான் இருக்கும். அதை எடுத்து வந்து ஒவ்வொன்றாக நான் தேடி சொல்வது சரியாக வரும் என்று நான் நினைக்கவில்லை. உனக்கு தொழிற்சாலை வருவது பரவாயில்லை தானே?” என்று கேட்டான்
“நான் வந்து விடுவேன்..”
“எப்படி வருவாய்?”
“சைக்கிளில்…நீங்கள் அட்ரஸ் மட்டும் கொடுங்கள் நான் பாய்ஸ் யாரையாவது கூட்டிக்கொண்டு வந்து விடுகிறேன்.”
“சரி ..அப்படியானால் சனிக்கிழமை பத்து மணிக்கு தொழிற்சாலையில் உன்னை எதிர்பார்க்கிறேன், வேறொன்றுமில்லை தானே..”
“இல்லை..” என்றவள் தயங்கி “தேங்க்ஸ்” என்றாள்.
“பரவாயில்லை. “
“……………..”
“இப்போதெல்லாம் நன்றாக சிங்களம் பேச ஆரம்பித்துவிட்டாய்..” சன்னமாய் அவன் சிரித்தது காதுகளில் ஐஸ்க்ரீமாய் வழுக்கிக்கொண்டு போக ஆஸ்கார் வாங்கிய ரஹ்மானாய் புன்னகையை பூசிக்கொண்டாள் அவள்.
“எல்லாம் உங்கள் அம்மாவும் தங்கையிடமும் பெற்ற ட்ரெயினிங் தான்.”
“ஹா ஹா அப்படியா?”
அப்படியே பேச்சை துண்டித்திருக்கலாம்.. “ஆனால் நீங்கள் தமிழ் ஒரு வார்த்தை கூட கற்றுக்கொள்ளாமல் தானே இருக்கிறீர்கள்?” என்று கேட்டு விட்டாள்.
அந்த பக்கம் சற்று நேரம் மௌனம்..
“உன் ஆசிரியர்களுக்கு உன்னோடு பழகவும் உனக்கு கற்றுத்தரவும் பிடித்திருந்தது..என் தமிழாசிரியைக்கு தான் அதெல்லாம் பிடிக்கவில்லையே…” குரலைத்தாழ்த்தி ரகசியமாக சொன்னவன் அத்தோடு போனை கட் செய்து விட சற்று நேரம் தூணில் கண் மூடி சாய்ந்திருந்தவள் “இங்கே இருட்டில் என்னடி பண்ற?” என்றபடி சுமி வரவும் அவசரமாய் எழுந்தாள்
“அப்பாக்கூட பேசிட்டே இங்கே வந்துட்டேன்டி!!”
அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவளோ “இந்த இருட்டுக்குள்? ஹாஸ்டல் கதவு வேற பூட்டபோறாங்க..நீ வெளிய வந்து லூசு மாதிரி உக்காந்திருக்க! வரவர நீ சரியில்ல மைத்தி! ஆன்ட்டிக்கு போன் போடணும் போலதான் இருக்கு!” முணுமுணுத்தபடி இழுத்துக்கொண்டு போனாள் சுமி.
டிவி ஹாலுக்குள் ஒன்பது மணி செய்திகளில் வன்னி அப்டேட்ஸ் ஓடிக்கொண்டிருக்க உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இறுகிப்போன முகத்துடன் ஓரிருவர் அதற்கு முன்னே இருந்தனர்.
“நியூஸ் காதுல கேட்டாலே டென்ஷன் ஆகுதுடி.. நான் டிவி பார்க்கிறதையோ நியூஸ் கேட்கறதையோ நிறுத்திட்டேன்.நம்மால எதுவுமே செய்யமுடியாதென்னும் போது அதையே கேட்டுட்டு இருக்க வேறெதிலும் கான்சன்ரேட் பண்ண முடியாம கொடுமையா இருக்கு.” என்று சொல்லியபடி டிவி ரூமை இரண்டே வேக எட்டுக்களில் மைத்தி கடக்க
“ஆமாம். அதே கேட்டால் தேவையில்லாமல் டென்ஷன் ஆகி சுத்தணும்!!! அதுக்கு காதைப்பொத்திட்டே இருந்துறலாம்!!” என்று ஆமோதித்தபடி அவள் பின்னேயே தொடர்ந்தாள் சுமி.
அறைக்கு சென்றதுமே மறுநாளைய லெக்ஷர் தயார்படுத்தல்களுடன் நேரம் கழிய ஒருவழியாக தூங்க சென்ற மைதிலிக்கு கண்களை மூடியதும் “என் தமிழாசிரியைக்குத்தான் அதெல்லாம் பிடிக்கவில்லையே” என்ற அவனது ரகசியக்குரல் தலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டது..
ஒருவழியாய் தூக்கம் அவளை தழுவிக்கொண்டபோதும் கோடுகள் குறியீடுகளாய் அவள் கனவுகளிலும் அவனே நுழைந்து அவளை ஆக்கிரமித்திருந்தான்!
மறுநாள் காலை இனிதான செய்தியுடனேயே விடிந்தது. பேராதெனியவில் ஏதோ விழா என்பதால் இன்றைக்கு முழுநாளும் விரிவுரைகள் இருக்காது என்ற செய்தி தீயாய்ப்பரவ உற்சாகமாய் குளித்து விட்டு சுமியை தேடிப்போனாள் மைத்தி.
இருவருமாய் சாப்பிட்டுவிட்டு பரீட்சைக்கு தயார்படுத்தலின் முதற்கட்டத்தை இன்றைக்கு ஆரம்பிக்கலாம் என்றெண்ணி குறிப்புக்களை தயார்படுத்தி எடுத்துக்கொண்டு அறைக்குள் ஸ்டோர் செய்திருந்த சிப்ஸ் பாக்கட்டுகளையும் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று அமர்ந்து கொண்டனர். அவர்களை அங்கே கண்டதும் இன்னும் இருவரும் சேர்ந்து கொள்ள தூண்களில் சாய்ந்தபடி ஒவ்வொரு பகுதியாக படிக்க ஆரம்பித்தனர் நால்வரும்..
சிலர் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு farm family ப்ராஜெக்டுக்காக சேனபுர செல்ல சிலர் டவுனுக்கு போவதற்காக மறுப்பக்கம் புறப்பட்டனர். அன்று வியாழக்கிழமை ஆதலால் இன்னும் சிலர் வெள்ளி விரிவுரைகளை கட் செய்து விட்டு நீண்ட விடுமுறை உற்சாகத்துடன் வீட்டுக்கே புறப்பட்டுக்கொண்டிருந்தனர்.
பதினோரு மணி இருக்கும்.
மைதிலிக்கு நிலாவிடம் இருந்து போன் வந்தது.. அந்தப்பக்கம் சொன்ன தகவலில் தூக்கிவாரிப்போட்டுக்கொண்டு எழுந்தவள் அருகிலிருந்தவளை உலுப்பினாள்.
“ஏய் சீக்கிரம் வா..நிலா பேசினாடி.. அவங்க வர்ற வழில யாரோ குடிகார கும்பல் அவங்களை துரத்தறாங்களாம்.. சிந்துவும் நிலாவும் மட்டும் எப்படியோ சிக்கிட்டிருக்காங்க.. தினேஷுக்கு பண்ணாளாம்.அவன் எடுக்கலையாம்..”
“அய்யய்யோ” என்று அலறியபடி மூவரும் எழுந்து கொள்ள நால்வருமாய் டைனிங் ஹால் பக்கமாய் இருந்த பாய்ஸ் ஹாஸ்டலை நோக்கி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர்.
“நம்ம பசங்க எல்லார்க்கும் போன் போடுங்க.. நான் நம்ம ரெப் சத்துர கிட்ட சொல்லறேன்” என்றபடி பின்புறமாக நடந்துகொண்டிருந்த சத்துரவை குறி வைத்துக்கொண்டே டைனிங் ஹாலுக்குள் மைதிலி ஓடினாள்.
சுமி பாய்ஸ் ஹாஸ்டல் பக்கமாய் போன் பேசிக்கொண்டிருந்த செந்தூரனை கண்டு செந்தூர் என்று அலறியபடி அவனை நோக்கி ஓடினாள். அடுத்த சில கணங்களில் பாய்ஸ் ஹாஸ்டல் திமிலோகப்பட ஹாஸ்டலில் இருந்த ஆண்களெல்லாம் கையில் அகப்பட்ட சைக்கிள்களை எடுத்துக்கொண்டு நிலா சொன்ன இடத்துக்கு வேகவேகமாய் ஓடினர்..
சத்துர மட்டும் தன்னிடம் இருந்த அவசர உதவிக்கான இலக்கங்கள் மற்றும் அந்த பிரதேசத்தில் தங்களுக்கு பழக்கமான இளைஞர்களை அழைத்து தகவல் சொல்லி அலர்ட் செய்தபடி கடைசியாக சென்று கும்பலில் இணைந்து கொண்டாள்.
“அவங்களுக்கு ஏதாவது ஆகிடுமா?” வினிதா அழவே ஆரம்பித்துவிட்டாள்.
“வாயை மூடுடி..அதெல்லாம் எதுவும் ஆகாது!” சுமி தைரியமாய் சொன்னாலும் அவள் குரலும் நடுங்கியது வெளிப்படையாகவே தெரிந்தது.
“நிலாவோட farm family வீடு கொஞ்சம் தொலைவில் தானே இருக்கு. இவங்க ரெண்டு தமிழ் கேர்ல்ஸ் க்ரூப்ல இருக்கற குஷில தனியாவே ரெண்டு பேரும் போவாங்க.. அன்னிக்கும் வார்ன் பண்ணினேன்டி..சனியனுங்க கேட்டாளுங்களா?” என்று அங்கலாய்த்த பிரியா பிறகு “குடிகாரங்களா தான் இருக்கும். சும்மா வம்பு பண்றதுக்குன்னே விரட்டிட்டு வந்துருக்கனும்..ஒண்ணும் ஆகக்கூடாது” என்று தனக்கே படபடப்புடன் ஆறுதல் சொல்லிக்கொண்டாள்.
இவர்களோடு ஐந்தாறு சிங்கள நண்பிகளும் நின்று கொண்டிருந்தனர். மீதிப்பேர் ஹாஸ்டல் போர்டிகோவில் நின்று கொண்டிருந்தனர்.
மைத்திக்கு நிலாவின் பயக்குரலை கேட்டதே உச்சபட்ச பதட்டமாய் இருக்க சப்காம்பஸ் கேட்டிற்கு வெளியே போய் நின்று கொண்டு வளைவின் வழி யாராவது வருகிறார்களா என்றே பார்த்துக்கொண்டிருந்தாள்.
செக்கியூரிட்டி” உள்ளே போம்மா” என்று வாசலில் நின்று விரட்டுவதும் அவர் அந்தப்பக்கம் நடந்ததும் இவள் வெளியே போய் பார்ப்பதுமாக சற்று நேரம் அதே காட்சி மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தது.
பதினைந்து நிமிடங்கள் போயிருக்கும். அவர்கள் திரும்பி வரும் சத்தம் கேட்க எல்லோருமே வெளியே ஓடி வந்து விட்டார்கள்.
நூற்றுக்கணக்கான சைக்கிள்கள் கும்பலாய் ஹாஸ்டலை நெருங்கிக்கொண்டிருந்தன. அதில் நிலா, சிந்து வெளிறிப்போன முகத்தோடு நடுவில் தென்பட்டனர்.
அவர்களை கண்டதுமே அருகில் மொத்த பெண்களும் ஓட பதட்டத்தில் இவர்களை கட்டிக்கொண்டு அழுதே விட்டாள் நிலா. அவர்களின் இரண்டு சைக்கிள்களையும் இரண்டு பெண்கள் எடுத்துசெல்ல மெல்ல அவர்களை டைனிங் ஹால் பக்கமாய் அழைத்து சென்று அமர வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர் இவர்கள். அவர்களின் பின்னேயே கூட்டம் கூடிவிட பெண்களின் ரெப் நதீஷா வந்து இருவரின் தோழிகள் அல்லாத மற்ற பெண்களை ஹாஸ்டலுக்கு போகுமாறு வேண்டிக்கொண்டாள்.
“எங்கள் க்ரூப் பசங்க ஒழுங்காக farm family கு போவதே இல்லடி.. அட்லீஸ்ட் நானும் இவளுமாவது போனால் ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணிடலாம் என்று தான் தனியாகப்போனோம்!” என்று விம்மினாள் சிந்து
“பாய்ஸ் யாரையும் கூட்டிட்டு போயிருக்கலாமே” என்று ப்ரியா ஆரம்பிக்க அவளை ஒரு அழுத்து அழுத்தி அடக்கினாள் சுமி. “அவளே அரண்டு போயிருக்கா அவளை பேச விடு” என்றபடி!
“நாங்கள் போகும் போதே மரத்தடியில் இருந்து குடித்துக்கொண்டிருந்த நாலு பேரை பார்த்தோம். அவர்கள் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.” சிந்து தொடர்ந்தாள்
“அங்கே வீட்டுக்கு போய் டீட்டெயில்ஸ் எடுத்துவிட்டு வரும் போது அந்த ஆன்ட்டி கூட கேட்டார்கள் சந்தி வரை கொண்டு வந்து விடட்டுமா என்று! நாங்கள் தான் ரெண்டு பேர் இருக்கிறோமே என்று சொல்லிவிட்டு வந்தோம்..”
“திரும்பி வரும் போது அவர்களை அங்கே காணோம்..”
“அந்தபாதை இடப்புறமாக மெல்லிய பாதை ஒன்றின் வழியாக வந்து பிரதான மேட்டுப்பாதைக்கு வரும். அதிலிருந்து வலப்பக்கம் திரும்பி மணல் வழியாக வந்தால் சப்கம்பஸ் வீதியான ஆற்றுப்பாதைக்கு வந்துவிடலாம். நாங்கள் அந்த மெல்லிய வழியில் ஏறியதுமே எங்கிருந்து எப்படி வந்தார்கள் என்று புரியவில்லை. நாலுபக்கமும் இருந்து அந்த நாலுபேரும் எங்களை இடிப்பது போல சுற்றிக்கொண்டு சைக்கிளோட்டினார்கள்”
“நன்றாக பயந்துட்டோம்டி..” என்று நிலா இடையிட்டுத்தொடர்ந்தாள்
“நாங்கள் வேகமாய் ஓட ஒருவன் சிந்துவை இடித்தான்.. அம்மா என்று இவள் கத்தி தமிழில் ஏதோ சொல்லி விட்டாள்..”
“அவங்க நாம தமிழ்னு எதிர்பார்க்கல போல.. தமிழ்டான்னு சொல்லி சிரிச்சிட்டே இன்னும் இன்னும் இடிக்க ஆரம்பிச்சாங்க.. சரியான பாதையிலேயே போனா தனியான மணல் ரோடு..அதுக்குள்ளே கண்டிப்பா மாட்டிப்போம்னு தெரியும் . எதிர்ப்பக்கமா ஏதோ மாட்ச் நடக்கற சத்தம் கேட்டுட்டே இருந்தது.. அந்தப்பக்கமா திரும்புடின்னு கத்திட்டே இவ சைக்கிளை திருப்பிட்டா..அவங்க எதிர்பார்க்கல.. ஒருத்தன் கீழே விழுந்துட்டான்..நானும் ஒருவழியா திருப்பிட்டேன்..அப்போதான் உங்களுக்கு கால் பண்ணினோம்.”
“ஆண்டவன் புண்ணியம் அடுத்ததே அந்த க்ரவுண்ட் தான்..நிறைய பாய்ஸ் புட் பால் விளையாடிட்டிருந்தாங்க.. அண்ணா காப்பாத்துங்கன்னு சிங்களத்துல கத்திட்டு டைரக்டா க்ரவுண்டுக்குள்ளயே வண்டியை விட்டுட்டோம்.. “
“கிரவுண்ட்ல இருந்தவங்கல்லாம் எங்க பக்கமா ஓடி வர அவனுங்க உடனே பயந்து ஆப்பசிட்டா ஓடறாங்க..”
“உடனே கிரவுண்ட்ல இருந்தவங்கள்ல பாதிப்பேர் எங்க கூட இருக்க மீதிப்பேர்.. மீதிப்பேர் அவனுங்களை துரத்திட்டு போய் பிடிச்சுக்கொண்டு வந்தாங்க..என்ன சீன் தெரியுமா?” வழக்கமான நிலா திரும்பிக்கொண்டிருந்தாள் என்பதே அபிநயம் செய்ய ஆரம்பித்திருந்த கைகளில் தெரிந்தது.
“என்னடி படக்கதை போல சொல்ற!!!”
“படம் தோத்துரும்டி..அப்படியொரு ஆக்ஷன் சீக்குவன்ஸ்! இப்போ சிரிக்கிறேன்..அப்போ எவ்ளோ பயமா இருந்துது தெரியுமா? என்றபடி வினிதாவின் கரங்களை இறுகப்பற்றினாள் நிலா.
அப்புறம் என்னாச்சு?
“அவனுங்களை கொண்டு வந்ததும் இவனுங்க தானேன்னு எங்ககிட்ட கேட்டுட்டு எங்க முன்னாடியே அடிச்சு துவைச்சிட்டாங்க,..அவங்களுக்கு அடிச்சிட்டு இருந்தப்போ தான் நம்ம க்ரூப் எல்லாம் வந்தாங்க..”
“ஆனாலும் புத்திசாலித்தனமா க்ரவுண்ட் பக்கம் போயிருக்கீங்கடி!”
“அதை தான் சத்துரவும் சொல்லிட்டு போனான்.”
“அந்த கிரவுண்ட்ல மட்டும் ஆளுங்க இல்லைன்னா என்னாகிருக்கும்..நினைக்கவே பயமாருக்கு!!”
“அதான் ஒண்ணும் ஆகலைல்ல..சும்மா இருங்க!”
“ஏய் மைத்தி உன்னோட சிந்தக அண்ணா செம்மடி.” நிலா ஞாபகம் வந்தவளாக திடும்மென கூவினாள்
அதுவரை பதில் பேசாமல் கனவு போல அவள் சொன்ன கதையை கற்பனையில் ஓட்டி பார்த்துக்கொண்டிருந்த மைத்தியின் கவனம் “என்னடி சொல்ற?” என்று ஒட்டுமொத்தமாய் நிலாவிடம் பாய்ந்தது.
“ஹையோ.. ஏதோ புட்பால் சீரீஸ் நடக்குது போல..அவர் ஒரு டீம்ல விளையாடிட்டு இருந்தார். அவனுங்களை இழுத்துட்டு வந்து புட்பாலாலையே அடிச்சார்டி.. அப்போ ஆளை பார்க்கவே பயமா இருந்துது..”
“ஆமா.. என்னமோ சொல்லி சொல்லி அடிச்சாரே “கானிட்ட அத்த கான்ன….” எனக்கு வரல போ..இதை சொல்லி சொல்லி சாத்துனார்!”
“சத்துரவுக்கும் என்னமோ சொல்லிட்டிருந்தாங்க அவங்க. அனேகமா இன்னிக்கு பாட்ச் மீட்டிங் வச்சு தனியா போனதுக்கு ஷொட்டு விழும்னு நினைக்கிறேன்!!!”
“ஆமா,.நம்ம சத்துர தான் போலீசை கூப்பிட்டிருக்கணும். அவங்க வந்ததும் சிந்தக அண்ணா தான் போய் அவங்கட்டையும் பேசினார். நான் கடைசில வரும்போது அவர்ட்ட போய் ‘நான் மைதிலியோட பிரன்ட், உங்களை எனக்கு தெரியும், போட்டோல பார்த்திருக்கேன்..நன்றிண்ணான்னு சொல்லிட்டு வந்தேன்.”
“ஹ்ம்ம் நல்ல அண்ணாடி.. இப்போ ஓகேவா? சைக்கிள்ள போக முடியுமா?” னு என்னையும் கேட்டார். சிந்து சொல்ல மைதிலிக்குள் புசு புசுவென பொறாமை புகைந்தது.
அவனை பற்றி சொன்னவைகள் எல்லாம் மகிழ்ச்சியை தந்ததை விட கடைசியில் சிந்து சைக்கிளோட்ட முடியாது என்றால் பைக்கில் கொண்டு வந்து டிராப் செய்திருப்பானா? என்ற அர்த்தமற்ற சிறுபிள்ளைத்தனமான கோபம் அவளுக்குள் முகிழ்த்தது.
நிலாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் எனக்காக அவன் பதறியிருப்பானா? கோபம் கொண்டிருப்பானா? எனக்காக அந்த குடிகாரர்களை அடித்திருப்பானா? காதலின் வீதியில் உரிமை கொள்ளுதலால் வரும் பொறாமை என்னும் அடுத்த மைல் கல்லை அந்த சமயம் கடந்து கொண்டிருந்தாள் மைதிலி.
WLM அத்தியாயம் 4
“எனக்கு “சின்னச்சின்ன ஆசை” பாடல் ரொம்பவும் பிடிக்கும். எனக்கு தமிழ் புரியாது, தமிழனையும் தெரியாது..ஆனால் அந்த இசையும் அதிலிருந்த ஜீவனும் எனக்கு ரொம்பவே நெருக்கம். மைதிலி..அவளை முதன் முதலில் கண்டபோது அந்தப்பாடல் தான் எனக்கு மனதில் வந்தது. அந்த ஜீவன் அவளிடம் இருப்பதாய் தோன்றியது. அவளை பார்க்கப்பிடித்திருந்தது, ரசிக்கப்பிடித்திருந்தது..தயக்கமின்றி செய்தேன். ஆனால் என்னுடைய சிறிய வட்டத்தில் வேலை, முன்னேற்றம் நிம்மதி என்றிருந்த என் வாழ்வில் அதுவே புயலாய் வீச ஆரம்பிக்கும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை”
“மச்சா…சுஷாந்த் வர்றேன்னு சொல்லிருந்தானே!!! நீ கிளம்பிட்டிருக்க?” உள்ளிருந்து குரல் ராஜீவின் குரல் கேட்டது.
“வரமாட்டான். நீ கீயை எடுத்துக்கொண்டு வந்து சேர்!!!” ஸ்டோரின் உட்புறம் நோக்கி தானும் குரல் கொடுத்த சிந்தக தன் பல்சரை ஸ்டார்ட் செய்தான்.
இன்றைக்கு ஏதோ விழா நடந்ததோ? ஆங்காங்கே அலங்காரங்கள் தொங்கியதை பார்த்தபடியே அவன் சப் காம்பஸ் வளாகத்தை நெருங்கினான்.
அடுத்தது ஹாஸ்டல்..
பாதை வளைவில் வண்டியை வளைத்தவனின் விழிகள் வழக்கம் போல வேலியோரம் தேடுதல் செய்ய அவன் தேடியவள் விழிகளில் சிக்குண்டாள்.
அவளுக்கு ரொம்ப பிடித்தமானதாக இருக்கவேண்டும். அடிக்கடி இந்த சட்டையோடு தான் அவள் தென்படுவாள். கருஞ்சிவப்பும் கருப்பும் கலந்த செக் துணியில் கழுத்தில் லேஸ் காலர் வைத்து சின்னக்குழந்தை போல இடுப்பில் பெல்ட்டும் கட்டிக்கொண்டிருப்பாள். இன்றும் தயக்கமாய் அவனை ஏறிட்டவள் அவன் கடக்கும் வரை புத்தகத்தில் பார்வையை பதித்திருந்து விட்டு அவன் கடந்ததும் அவனையே பார்வையிட்டுக்கொண்டிருந்ததை கண்ணாடி வழி நமுட்டுசிரிப்போடு பார்த்தவன் பாதை மீண்டும் வளைய ஒரு பெருமூச்சுடன் அவள் கண்களுக்கும் மறைந்து போனான்
இது கிட்டத்தட்ட ஒருவாரமாய் தொடரும் விளையாட்டு! விடுமுறை நாட்களில் காலையும் வாரநாட்களில் மாலை ஐந்தரையளவிலும் தவறாமல் அவனும் வருவான். அவளும் அங்கேயே அமர்ந்திருப்பாள். அவள் மென்மலர் முக தரிசனம் மட்டுமே அப்போதைக்கு முக்கியமாய்ப்பட மற்றவை மறந்து அவன் அதை அனுபவிப்பான்
மைதிலி…
முதன் முதலில் ங்கா சொல்லி பேசப்பழகும் குழந்தையை நேசிக்காமல் எப்படி இருக்கமுடியும்?
அவளும் அவன் கண்களுக்கு அப்படித்தான் தெரிந்தாள். மழலைத்தனமான உச்சரிப்புடன் அவனது மொழியை அவள் பேச ஆரம்பித்த அழகில் தான் அவன் முதலில் விழுந்திருக்க வேண்டும். அவளை கவனிக்க ஆரம்பித்தான்..
வில்லான இமைகளுக்கிடையில் உடையின் நிறத்துக்கேற்ப அவள் வைத்துக்கொள்ளும் பொட்டு, சலங்கைகளில்லாமல் மெல்லிய நூல்போல அவள் பாதத்தை தழுவியிருங்கும் கொலுசு, அவ்வப்போது அவள் போட்டுக்கொள்ளும் ஜிமிக்கி எல்லாமே அவனுக்கு புதுசுதான். அவனிடம் அவள் காண்பித்த வெட்கம், மறைந்திருந்து அவனை திருட்டுத்தனமாக நோட்டமிடும் கள்ளத்தனம், குழந்தைத் தனமான அவளது நடத்தைகள் என்று அவளிடம் எல்லாமே அவனுக்கு பிடித்திருந்தன.
இவள் என் மனைவியாக கிடைத்தால்? என்ற ஆசை இப்போதெல்லாம் பூதாகரமாய் வளர்ந்து அவனின் சிந்தனாசக்தியையே விழுங்கிக்கொள்கிறது. ஆனால் அதன் சாத்தியக்கூறு நூறுக்கு ஒருவிதம் கூட இல்லை என்பதை அவன் நன்றாகவே அறிந்தும் இருந்தான்.
அவளுடைய அப்பா ஒரு மாஜிஸ்ட்ரேட்! அவனுடைய வீடோ படிக்காத விவசாயகுடும்பம்! ஏன் அவனுக்கு கூட டிகிரி வாழ்க்கைக்கு தேவை என்ற எண்ணம் இருக்கவில்லை. தனக்கு பிடித்த துறையில் ஒரு டிப்ளோமா அத்தோடு அவன் தொழிலில் இறங்கிவிட்டான்!
அவள் பேசும் ஆங்கிலம், அவளோடு ஒட்டியிருக்கும் வசதியான வீட்டுப்பெண்ணுக்கேயுரிய நடையுடை பாவனைகள் எல்லாமே இருவருக்கிடையிலும் முரண் தானே!
ஆனால் அவளோடு கூடவந்த பெண் ஹாலில் இருந்து பேசிச்சிரிக்கும் போது அவனுடைய அம்மாவுக்கு உதவியாக கத்தியை தூக்கிக்கொண்டு வந்து காய்கறி வெட்டித்தந்து அந்த சின்ன சமையலறையிலும் தெரிந்த ஓரிரண்டு சொற்களை வைத்துக்கொண்டு ஆங்கில வாசனையே அறியாத அவனுடைய தாயாரோடு மைதிலி பொருந்திப்போகும் அழகு அவனுடைய ஆசையை அணைக்காமல் திரி தூண்டும்.
அவள் படித்து முடிக்க இன்னும் முழுதாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் உண்டு. முயன்றால் அதற்குள் அவனாலும் ஒரு அளவுக்கு கௌரவமான நிலைக்கு வந்து பெண் கேட்க இயலும் தான். ஆனால் மதம் மாறவே மறுக்கும் சமூகத்தில் இனம் மாறி மாஜிஸ்ட்ரேட் அவனுக்கு மகளை தருவாரா?
அவனிடம் தன்னை மறந்து பார்வையால் அவளை வெளிப்படுத்தி விட்டாலும் பிறகு வரும் நாட்கள் அவன் புறமே திரும்பாமல் வைராக்கியமாய் இருக்க முயல்வது அவளுக்குள் நிகழும் போராட்டத்தை அவனுக்கு சொல்லும். அவள் வரும் நேரங்களில் விலகிப்போய் இந்த பிரச்னையை தீர்க்கலாமென்றால் அவனுடைய முழுக்குடும்பமும் அவளை சதா கொண்டாடித்தீர்த்து அவனை திரிசங்கு சொர்க்கத்தில் நிறுத்தி வைத்தனர்.
“மைத்தி இதை இப்படிச்சொன்னாள்”
“இது மைத்தி கொடுத்தது.”
“இது மைத்திக்கு ரொம்ப பிடிக்கும்.ரசித்து சாப்பிடுவாள்”
“இதை மைத்திக்கு தெரிந்திருக்காது, காண்பிக்க வேண்டும்!”
பொய்யாக அலுத்துகொண்டாலும் அவர்கள் அப்படி அவளைக்குறித்து பேசிக்கொண்டே இருப்பதை தான் அவன் மனமும் விரும்பும்!!
அவளை விலக்கவும் முடியாமல் உரிமையாய் சேர்த்துக்கொள்ளவும் முடியாமல் தவிக்க ஆரம்பித்துவிட்டான் சிந்தக. …
ஒழுங்காய் போய்க்கொண்டிருந்த அவனது வாழ்க்கையை ஒரு சீட்டுக்கட்டை போல கலைத்துப்போட்டு விட்டாளே!
வீட்டின் முன்னே பைக்கை பூட்டிக்கொண்டு இறங்கியவன் சஜி ஓடிவருவது தெரிய கொஞ்சம் நிதானித்தான்
“கடைக்கு எங்காவது போகவேண்டுமா?” அவளின் முகத்தில் விழுந்த முடியை காதோரம் ஒதுக்கியபடி கேட்டான் அவன்
“இல்லைண்ணா..நாளைக்கு அம்மாவோட பிறந்த நாளுக்கு கேக் வாங்கிட்டிங்களா?”
“ஓ..நாளைக்கு காலைல டான்னு கொண்டுவது தந்துருவாங்க”
அப்படியா..அம்மாவுக்கு தெரியாம பண்ணணும்ணா.. வீட்ல பலூன் எல்லாம் கட்டி..” கண்களில் கனவு மின்ன பேசிக்கொண்டே போனவளின் தலையில் செல்லமாய் தட்டினான் அவன்.
“லூசு! அம்மாவுக்கு தெரியாம இந்த குட்டி வீட்ல எப்படி ரகசியமா பண்ண முடியும்?”
“நான் அப்பாகிட்ட கேட்டேன்.. நாளைக்கு காலைலயே அம்மாவை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்களான்னு… அவர் ஒத்துக்கிட்டார். அப்படின்னா மதியம் வரை எங்களுக்கு அலங்காரம் பண்ண டைம் இருக்கும். நீ லீவ் போட்டுடேன் அண்ணா?”
தன் குட்டித்தங்கை எப்படியெல்லாம் யோசிக்கிறாள் என்ற ஆச்சர்யத்துடன் “பெரிய வேலைலாம் பார்க்கற வாலு! நாளைக்கு சனிக்கிழமை இல்லையா? லீவ் எல்லாம் போட முடியாது. வேண்டுமானால் அம்மா திரும்பி வந்து கேக் வெட்டிய பின் நான் ஆபீஸ் கிளம்பறேன்.” என்று உறுதி தந்தான் அவன்.
அதற்குள் “மகள்! அண்ணா வீட்டுக்குள் வர முன்னே என்ன பேச்சு வேண்டியிருக்கு? அவன் கொஞ்ச நேரம் ஆறுதலாய் உக்காரட்டும் விடு!” என்று கிச்சனில் இருந்து அம்மாவின் சத்தம் கேட்க இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அடுத்தநாள் காலையில் சஜினியின் திட்டப்படி பெற்றோர் இருவரும் காலை ஆறுமணிக்கெல்லாம் கோவிலுக்கு கிளம்பிவிட தந்தை இல்லாததால் தோட்டத்துக்குள் இறங்கி தண்ணீர் விட வேண்டியவற்றுகெல்லாம் வெட்டி விட்டு வேலைகளை முடித்துக்கொண்டு கிட்டத்தட்ட சேற்றில் குளித்திருந்தவன் தோட்டக்கிணற்றிலேயே குளித்து முடித்தான். பிறகு தலையை அசைத்து நீர்த்துளிகளை பறக்க விட்டபடி வீட்டுக்குள் நுழைந்தான். அப்படியே நின்றான்
கிச்சனில் இருந்து வாயில் பலூனோடு வெளியே வந்த மைதிலி பட்டென்று நின்று முகம் சிவந்து பிறகு சரேலென மீண்டும் கிச்சனுக்குள் புகுந்து விட அதன் பிறகே இமை மூடியது அவனுக்கு.
இவளை அழைத்ததை சஜி சொல்லவே இல்லையே!!!
தன்னை மேலாடையில்லாமல் பார்த்து அவள் அதிர்ந்ததை கண்டு சிரிப்பு முகிழ அறைக்குள் போய் அவசரமாய் உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தான் அவன்
அவனை பார்த்தும் பார்க்காதவளாய் சஜினியுடன் அமர்ந்து பலூன் ஊதிக்கொண்டிருந்தாள் மைதிலி
வழக்கமாய் ஜீன்ஸ், டாப்ஸ் என்று தான் அணிந்து வருவாள். இன்றைக்கு பார்ட்டி என்றோ என்னவோ சுடிதார் அணிந்து கொண்டிருந்தாள். வெள்ளை டாப்ஸ், பச்சை பாட்டம், மென்மையாய் ஒரு பச்சை ஷால், காதுகளில் குட்டியாய் ஒரு ஜிமிக்கி வழக்கம் போல பச்சை நிறப்பொட்டு! கொஞ்சமாய் கலர் வளையல்கள். அப்படியே அவளை அள்ளித்தூக்கிக்கொள்ள வேண்டும் போல் ஒரு வேகம் முளைக்க விடு விடுவென அவளை தாண்டிக்கொண்டு வாசல் கதவடியில் போய் நின்றான் அவன்!
“பார்ட்டி என்று சொல்லி விட்டு வெறும் பலூனும் கேக்கும் தானா?” தங்கையிடம் அவள் கேட்பது கேட்டது.
வேற என்ன வாங்கணும்?
அவர்களுக்கு புரியாமல் எதையோ தமிழில் சொன்னவள் பிறகு வாயினால் பெரிய லிஸ்டே போட ஆரம்பித்தாள்.
அவளும் தங்கையும் பேசிக்கொள்வது அவனுக்கு சிரிப்பை தான் மூட்டியது. திரும்பி நிற்கும் வசதியில் சிரிப்பை மறைத்துக்கொண்டான்
சஜிக்கு அவ்வளவாக ஆங்கிலம் வராது. இவளுக்கு வாயில் சிங்களம் ததிங்கினத்தோம் போடும்! ஆகவே எழுபது வீதம் சைகையும் மீதி இருவருக்கும்தெரிந்த பொதுவான சொற்களுமாய் எப்படியோ புரிந்து கொள்கிறார்களே!
கொஞ்ச நேரத்தில் சஜி எழுந்து ரிப்பன் ஏதும் இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்றபடி உள்ளே மறைந்தாள்
அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது புரிந்ததால் தலையை குனிந்து கொண்டு வேண்டுமென்றே பலூனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவளை விடாமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் இப்போதைக்கு நிமிரப்போவதில்லையென புரிந்ததும் அவளை நோக்கி நடந்து அருகில் ஒட்டி இருந்த நாற்காலியில் அமர்ந்தான். சட்டென இமை மலர்த்தி அவனைப் பார்த்தவள் மீண்டும் பலூனை பார்க்க ஆரம்பித்தாள்
கையை நீட்டி அவள் அருகில் வைத்துக்கொண்டிருந்த பையை எடுத்தான் சிந்தக.
அவள் தடுக்க கைகளை நீட்டி விட்டு பிறகு இறுக மடக்கிக்கொள்ள அவளையே பார்த்தபடி சுவாதீனமாக அந்த பையை பிரித்தான்.
உள்ளே அழகிய சேலையொன்று பாக்கிங்கில் இருந்தது.
“எப்போ வாங்கின இதை?”
“அது..நான் கொஞ்ச நாள் முன்னாடி எங்கம்மாக்குன்னு வாங்கி வச்சிருந்தேன். சஜி நேத்து திடீர்னு சொல்லவும் ஆன்ட்டிக்கு வேறு வாங்க முடியல..அதையே எடுத்துட்டு வந்துட்டேன்.”
ஹ்ம்ம்.. அம்மாவுக்கு வாங்கியதை அவனுடைய அம்மாவுக்கு எடுத்து வந்திருக்கிறாள்.. அவளோடு கூட வருபவர்களையும் அவனுடைய அம்மா அவளைப்போலவே தான் கவனித்தார். ஆனால் யாருமே இவளளவுக்கு திரும்ப பாசத்தை காட்டியதில்லையே..
“ஆமாம் யாரோடு இங்கே வந்தாய்? தனியாகவா?” இவ்வளவு நேரமும் மனதை உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை அவன் கேட்டு விட்டான்.
“இல்லை அமில..எங்களோட படிக்கற பையன் தான் கூட்டிட்டு வந்தான்.. “
இனம்புரியாத ஒரு கோபம் சுறு சுறுவென மண்டைக்குள் ஏற “எதுல?” என்று வினவினான் ஒற்றை வார்த்தையாக.
“இல்லல ..அவன் தன்னோட சைக்கிளில் வந்தான். நான் என்னோட சைக்கிளில் வந்தேன். சைக்கிள் முன் பக்கம் இருக்குது.” அவளுக்கும் அவனுக்கு அதை விளக்கிவிடும் வேகம்!
கொஞ்ச நேரம் மௌனமாய் கழிய மீண்டும் அவனே ஆரம்பித்தான்.
“மைத்தி…என்னோடு கடைக்கு வருகிறாயா? நீ கொஞ்சம் முன்னே சொன்னதெல்லாம் வாங்கி வரலாம்.”
“நான் எப்படி வர்றது? நான் எழுதி தர்றேன் நீங்க வாங்கிட்டு வரீங்களா?” தயக்கமாய் கேட்டவளை முறைத்தான் அவன்.
“ஏன்? அந்த பையனோடு வந்தாயே…”
“நான் என்னோட சைக்கிள்ள தானே வந்தேன்!”
அப்போதுதான் அவள் சொல்வது அவனுக்கு புரிந்தது! சிரித்தபடி “நானும்… உன்னை என்னுடைய பைக்கில் வர சொல்லி கூப்பிடவில்லையே?” என்று கண்சிமிட்டினான்.
“அப்போ?”
“நடந்து போகலாம். கடை பக்கத்தில் தான் இருக்கிறது.”
@@*(**()___))@@
“என்ன சொன்ன நீ இப்போ?”
“ஒண்ணும் இல்லையே.. “
“ஏய்! ஒழுங்கா இப்போ சொல்லப்போறியா இல்லையா?”
“சும்மா மிரட்டாம நான் என்ன பேசறேன்னு முடிஞ்சா கண்டுபிடிங்க!!!”
“படிக்கிறேன்..கூடிய சீக்கிரமே தமிழ் கத்துக்கறேன்”
“பார்க்கலாம்..”
“இப்போ கடைக்கு போகலாம் வா” என்ற படி எழுந்தவன் உள்ளேயிருந்த தங்கையிடம் சொல்லிக்கொண்டு வெளியே நடந்தான்.
ஏறக்குறைய பின்னாலே ஓடி வந்தாள் அவள்.
“காம்பசுக்கு போனபிறகு என்னை ..எங்களையெல்லாம் மறந்து விடுவாய் தானே..”
“நான் நீங்கள் கிடையாது. நீங்கள் வேண்டுமானால் எங்களையெல்லாம் மறந்துவிடக்கூடும்.”
“பார்க்கலாம்!” என்று அவளைப்போலவே சொன்னவன் “இப்போ என்ன வாங்க வேண்டுமென்று சொல்” என்றபடி தெருவில் தென்னை மரத்தின் மட்டைகளை சீவி அழகாய் தாயரித்திருந்த கதவினை திறந்து கொண்டு கடைக்குள் நுழைந்தான் சிந்தக.
கிரேப் பேப்பர்..
என்ன கலர்?
கிரீன் அண்ட் வைட்
போர்ட்.. ஹாப்பி பர்த்டே பானர் இங்கே இருக்காது.. நாம எழுதி கட் பண்ணிக்கலாம்.
கலர் ?
லைட் கிரீன்
ஒவ்வொன்றாக அவள் சொல்லசொல்ல ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்த கடைக்காரருக்கு சொல்லி வாங்கிக்கொண்டவன் அவனாகவே பிஸ்கட், கொஞ்சம் மிக்சர், கொஞ்சம் வாழைப்பழம், பெரிய சோடா பாட்டில் ஒன்றும் வாங்கிக்கொண்டான்
கடைசியாக முன்னே அடுக்கிக்கிடந்த வர்ண ஜெலி பாட்டிலை கையில் எடுத்தபடி “மைதிலிக்கு ஜெலி பிடிக்குமா?” கேட்க
“எதுக்கு..வேணாம்..” என்று தலையாட்டி மறுத்தாள் அவள்
“ப்ச்..வாங்கத்தான் போறேன். உனக்கு பிடிக்கலன்னா வேற வாங்கிக்கலாம்.”
“அப்போ தள்ளுங்க நான் எடுத்துக்கறேன்” என்றவள் அவனிடம் இருந்த போத்தலை கைப்பற்றி பச்சை நிறத்தில் வேறு வேறு வடிவங்களில் இருந்த ஜெலிகளை மட்டும் பொறுக்கி எடுத்தாள்
ஒருவழியாய் கடைகாரருக்கு பணம் கொடுத்துவிட்டு பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் இருவரும்..
“ஏன் தலைமுடியையும் பச்சை கலர்ல டை பண்ணிக்க வேண்டியது தானே?”
“ஏன் நீங்க மட்டும் கருப்பு கலர்ல அடிக்கடி ட்ரஸ் பண்றீங்க…நான் ஏதும் கிண்டல் பண்ணினேனா?”
‘அந்தளவுக்கு என்னை கவனிக்கிறாயா நீ?’ என்று மனதில் எண்ணிக்கொண்டவன் வேறேதும் பேசவில்லை.சுகமாய் ஒரு தென்றல் தன்னை வருடிப்போனது போன்ற இதத்தோடு அவன் அவளோடு கூட நடந்து கொண்டிருந்தான்.
வீட்டில் எல்லாவற்றையும் பரப்பி வைத்துக்கொண்டு மூவருமாய் ஹாலை அலங்கரித்து முடித்த போது நேரம் பத்தரை ஆகியிருந்தது. அந்த ஒன்றரை மணி நேரத்தில் ஆண்டாண்டு காலமாய் அவனோடு பழகியவள் போல தயக்கங்களை மறந்து அவள் அவனோடு சீண்டி சிரிக்க ஆரம்பித்திருக்க தன்னை மறந்து தான் போனான் அவன்!
சஜினி வாசலில் அமர்ந்து எதையோ போர்டில் வரைந்து கொண்டிருந்தாள்
இவள் ஹாலுக்குள் நடந்த படி ஜெல்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
பச்சை..பச்சைக்கிளியே.. என்று மெல்ல அவளை சீண்ட ஆரம்பித்தான் சிந்தக. தான் சொன்னதில் அவளுக்கு “பச்சை” என்பது மட்டும் புரியும் என்று அவனுக்கு நிச்சயமாய் தெரியும்.
பதிலுக்கு களு…என்று ஆரம்பித்து எதையோ சொன்னவள் அவளை பார்த்து குறும்பாய் சிரித்தாள். அதை தெரிந்து கொள்ளவே வேண்டும் போலாகிவிட்டது அவனுக்கு.
“தைரியம் இருந்தால் அதன் அர்த்தத்தை சொல்லு” என்று தூண்டில் போட்டான்
“கறுப்பான வாய் கொண்டவன் கருவாயன்!” தயங்காமல் புரிய வைத்ததும் அல்லாமல் இமைகளை ஏற்றி இறக்கி அவள் சவாலுக்கழைக்கவும் செய்தாள்!
அடுத்த கணம் அவன் என்ன செய்தான் என்று அவனுக்கே புரியவில்லை கணங்களில் நிகழ்ந்து முடிந்ததிருந்தது அது!
அவளின் கையை பிடித்து இழுத்தவன் வயிற்றோடு சேர்த்து அவள் அசையாமல் தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டு காதுகளை முறுக்கியிருந்தான்.
சில கணங்கள் இருவருக்குமே உணரவில்லை புரிந்ததும் பட்டென அவன் கையை எடுத்துக்கொள்ள சரேலென விலகி நின்றாள் அவளும்.
அவளுக்கு புரிய வைத்துவிடும் பொருட்டு மைத்தி என்று அழைத்தவன் கண்களில் ஒரு நீர் வீழ்ச்சியே வழிய ஆரம்பித்திருக்க இரண்டடி பின்னே வைத்து அவள் யன்னலுக்கு வெளியே பார்வையை பதித்ததை கண்டதும் அவள் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக உள்ளுக்குள் இருந்து கோபம் சுறு சுறுவென பொங்கி வந்தது அவனுக்கு!
அவன் என்ன வேண்டுமென்றா செய்தான்?
என் கை பட்டதுமே இப்படி ரியாக்ட் செய்கிறாளே பிறகு நாள்தோறும் விகாரையோரம் வந்து நின்று அவனைப்பார்ப்பது அவனை சீண்டி விடுவதற்கா?
அன்றைக்கு அவன் கண்முன்னாலேயே அந்த சுதாகரின் கையை சாதாரணமாகத்தானே பற்றினாள். அவள் கையை தொடக்கூட தகுதியில்லாதவனா அவன்?
கட்டுப்பாடில்லாத கோபத்தோடு அவளை பிடித்து தன்புறம் திருப்ப ஒரு எட்டு எடுத்து வைத்தவன் வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தமும் கூடவே அம்மா வரும் சத்தமும் கேட்டு வெளியே நடந்தான்.
அவளோ பின் வாசல் வழியே கிணற்றை நோக்கி ஓடினாள்
அம்மா உள்ளே வந்து ஏற்பாடுகளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தபோது செயற்கையான ஒரு சிரிப்புடன் உள்ளே வந்து வாழ்த்துச் சொன்னாள் மைதிலி.
அழுத முகத்தை நன்றாக தண்ணீர் விட்டு அடித்து கழுவியிருப்பாள் போலும். கண்மை முழுதும் கரைந்து போயிருந்தது. அவளை எரிக்கும் பார்வை பார்த்தவன் அதன் பிறகு அவளின் பக்கமே திரும்பவில்லை. கேக் வெட்டியதுமே “சாப்பிட்டு போடா” என்ற அம்மாவின் குரலை காதில் வாங்காமல் வராத போனை காரணம் காட்டி அலுவலகத்துக்கும் கிளம்பி போய்விட்டான்.
அன்றிலிருந்து அவள் வரும் நாட்களில் வீட்டில் இருக்காமலும் சப் காம்பஸ் வீதியையே தவிர்த்தும் அவளை தன் நினைவுகளில் இருந்து வெளியேற்ற முயன்றவனால் அன்றைய நாள் தன்னோடு மோதிய அவளது மென்மையையும் சில கணங்களே நீடித்த அவர்களின் அணைப்பின் இனிமையையும் மறக்கவே முடியவில்லை.
WLM அத்தியாயம் 5
“அவன் என்னை அப்படி பிடித்து இழுத்துக்கொள்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அதை விட என்னை அணைத்தவனின் நெஞ்சிலேயே அப்படியே சாய்ந்து கொள்ளவேண்டும் என்று எனக்குள் எழுந்த தவிப்பில் தான் நான் அதிர்ந்து போனேன். என்னுடைய நிலைமையின் பார தூரம் புரிந்தது. அழ ஆரம்பித்தேன். அவன் கோபமாய் கிளம்பிப்போய்விட்டான். அதன் பிறகு என்னால் அங்கே பொருந்தியிருக்கவே முடியவில்லை.”
சமந்த அங்கிளுக்கு நன்றி சொல்லிவிட்டு சைக்கிளை பார்க்கில் விட்ட மைதிலியின் கண்கள் தன் நண்பிகளின் சைக்கிள் நிற்குமிடத்தை தான் முதலில் ஆராய்ந்தன. சுமியின் சைக்கிள் நின்று கொண்டிருந்தது.
‘அய்யய்யோ வெளியே போனவர்கள் திரும்பி விட்டார்களா?’
எல்லாருமாய் சேர்ந்துகொண்டு அவர்கள் ஷாப்பிங் கிளம்ப, ஷாப்பிங் வராமல் பார்ட்டிக்கு போகிறேன் என்றால் விடவே மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தலைவலி என்று பொய் சொல்லி ஹாஸ்டலிலேயே தங்கி விட்டவள் அவர்கள் அகன்றதும் தயாராகி அமிலவின் உதவியோடு சேனபுர போயிருந்தாள்!
‘அவர்கள் திரும்பி வர எப்படியும் மாலை ஆறுமணி ஆகுமே..ஏன் இன்று இவ்வளவு வெள்ளனவே…’
ஹாஸ்டல் கதவை தள்ளித்திறக்க வரவேற்பறையில் டிவி பார்த்துகொண்டிருந்த சிந்தியாவை கண்டு முகம் வெளிறிப்போனாள்.
அவள் அதை விட அதிக ஆச்சர்யமாய் அவளை பார்வையிட்டாள்! அவளோடு அவ்வளவு நெருக்கம் இல்லை மைத்திக்கு..இருந்தாலும்,,,
“மைதிலி! எங்கே போயிருந்த? எல்லாரும் உன்னை தான் கேட்டுக்கொண்டிருந்தார்கள்! சுடிதார், ஜிமிக்கி எல்லாம் புதுசா இருக்கே..கோவிலுக்கு போனாயா?” கேள்விக்கணைகள் பறந்து வந்தன
“ஆமாம் ஆமாம். திடீரென சர்ப்ரைசாக சித்தப்பா வந்திருந்தார்.. அவரோடு வெளியே போய்விட்டு வருகிறேன்.” என்று வாயில் அகப்பட்ட பொய்யை எடுத்து விட்டவள் “ஆமாம் நீங்கள் ஏன் வெள்ளனவே வந்து விட்டீர்கள்?” என்று கேட்டாள்
“நாங்கள் எங்கே போனோம்? ஜங்க்ஷன் வரை போனோம். அதுக்குள்ள நியூஸ் வந்து விட்டது. இனிமேல் நாங்கள் தனியாக குரூப்பாக டவுனில் சுத்துவது பாதுகாப்பில்லை என்று பாய்ஸ் பயந்தார்கள். அதுதான் திரும்பி வந்து விட்டோம்.”
“ஏன் என்னாச்சு?”
“உனக்கு விஷயமே தெரியாதா? நேற்று நடுஇரவு வன்னியில் ஷெல் பட்டு பொதுமக்கள் இருபது பேர் செத்துப்போய்ட்டாங்க. அதுக்குப்பதிலா ஆர்மி மேல அட்டாக் நடந்திருக்கு. கொழும்புல எல்லாம் ஒரே பதட்டமாம். தமிழ் பசங்களை அரஸ்ட் பண்றாங்களாம். எல்லாரும் பயந்து போய் இருக்காங்க!”
முகம் வெளுத்தவள் எதையோ சொல்லி சமாளித்தபடி மற்ற நண்பிகள் கண்ணில் படாமல் அறைக்குள் புகுந்தாள்.
இத்தனை நடந்திருக்கிறது..அவள் எங்கே என்ன செய்து கொண்டிருந்தாள்? கண்ணாடியில் இருந்த விம்பம் அவளை கேள்வி கேட்பது போலிருந்தது.
காலையில் உற்சாகப்படபடப்புடன் ஒவ்வொன்றாக பார்த்துப்பார்த்து அலங்கரித்துக்கொண்டது நினைவுக்கு வந்தது,,,தன்மேலேயே கோபம் வர காதில் இருந்த ஜிமிக்கியை கழற்றி முதலில் வீசினாள் மைதிலி . கண்ணாடியில் தன்னை பார்க்கவே அவளுக்கு பிடிக்கவில்லை.
உடைமாற்றிக்கொண்டு போனை சார்ஜில் போட்டு ஆன் செய்து விட்டு கட்டிலில் அவள் கண்மூடி இருந்தபோது அப்பாவிடம் இருந்து அவளுக்கு கால் வந்தது.
“மிது.. ஏன் பகல் முழுக்க போன் ஆப்? பயந்து போய்ட்டோம்மா..இப்பவும் நீ எடுக்கலைன்னா சுமிக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன்.”
நல்லவேளை என்று மனதில் நினைத்துக்கொண்டவள் “டீவில நியூஸ் பார்த்துக்கொண்டு வெளியேவே இருந்துட்டோம்பா.. போன் ரூம்ல ஆப்பா இருந்ததை பார்க்கல. சாரி..” எத்தனை பொய்கள்! கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.
“இனிமே சார்ஜ் போட்டு கைலையே வச்சுக்கம்மா..பொல்லாத காலம்..தூரத்தில் இருக்கற நாங்கள் நீ எப்படி இருக்கிறாய் என்று தெரியாமல் பயந்துகொண்டு இருக்கமுடியாது. புரியுதா பேபி..?”
“சரிப்பா…” சுயபச்சாத்தாபத்தில் அழுகை பொங்கி வந்தது அவளுக்கு. ‘உங்களுடைய பேபி தான் ..அந்நியன் ஒருவனின் அணைப்பில் சற்று நேரத்துக்கு முன்னர் அடங்கியிருந்தேன் அப்பா!’ என்று கத்த வேண்டும் போலிருந்தது.
கணவரிடம் இருந்து போனை பரித்துக்கொண்ட அன்னை “மைத்திம்மா” என்று அழைக்க அவளுக்கு தாயின் குரலில் கண்ணீர் இன்னும் கூடியது.
“தப்பு பண்ணிட்டேன்மா” என்று கதறிவிட தோன்றியது. அரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டாள்
“மைத்தி..இனிமே வெளியே போகும் போது பொட்டு வைத்துக்கொண்டோ சுடிதார் போட்டுக்கொண்டோ போக வேண்டாம். ஜாக்கிரதையாய் இரு!”
வெகுநேரம் சுய பச்சாத்தாபத்தில் அழுது கொண்டே இருந்தவள் ஒருவழியாய் குளித்து உடைமாற்றிக்கொண்டு வெளியே சென்றாள்.
இப்போது டிவி அறையில் எல்லாருமே இருந்தனர்
“எங்கடி போயிருந்த? எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா?” சுமி தான் முதலில் சண்டைக்கு வந்தாள்.
“வவுனியால இருந்து விஜி சித்தப்பா சொல்லாமலே வந்துட்டார்டி..வா வான்னு கூட்டிட்டு போய்ட்டார்… நானும் அவரை பார்த்த சந்தோஷத்துல போனை மறந்து போயிட்டேன். “
அவர்களில் யாரும் அவளின் சைக்கிள் அங்கே இல்லாதிருந்ததை கவனித்திருந்தால் குட்டு வெளித்திருக்கும் ஆனால் அவளுடைய நல்ல காலம் அவளது பொய்யை யாரும் சந்தேகிக்கவில்லை
டிவியில் திரும்ப திரும்ப நடந்த துயரத்தை தான் காண்பித்துக்கொண்டிருந்தார்கள். விழுந்து புரண்டு தங்கள் உறவுகளுக்காக அழுது கொண்டிருந்தவர்களையும் பார்க்கவே மைத்திக்கு மனம் வலித்தது. கண்ணோரம் மீண்டும் அழுகை திரண்டது.
“சாரா இந்த வாரம் வீட்டுக்கு போகாம ரூம்லேயே இருக்காடி. அவ பேச்சைக் கேட்டாலே கொல்லணும் போல கோவம் வருது.. “ நிலா கோபமாய் சொன்னாள்.
“என்னாச்சு?”
ஏதோ அவங்க மட்டுமே பாதிக்கப்படறது போல பேசறா..எங்க பக்கமும் தான் இழப்பு? அதையேன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க இவங்க?
“அவளுக்கு அவங்க ஆளுங்க தானேடி முக்கியம்..” என்றாள் கயல் சமாதானமாக
“அதுபோல எனக்கு என்னோட ஆளுங்க தான் முக்கியம்னு அவ புரிஞ்சுக்கணும்ல?” நிலாவின் கோபம் குறையவில்லை.
“புரிஞ்சுக்கிற ஆளுங்களா இருந்தா இந்த பிரச்சனையே வந்துருக்காதேடி. அவங்களால எந்த ஜென்மத்துலயும் எங்க உணவுர்வுகளை புரிஞ்சுக்க முடியாது. எப்போவுமே அவங்க வேற..நாங்க வேற.. பேசிக் டிசைனே அதுதான்! எண்ணெய்யும் தண்ணியும் கலந்ததா சரித்திரம் உண்டா என்ன? என்ன பேசினாலும் மற்றக் காதால வெளியே விட்ரு. ஏன்னா இங்கயும் நாங்க மைனோரிட்டி தான்!” சுமி வழக்கம் போல முடித்து வைத்தாள்.
வாய்திறக்க கூட தகுதியில்லாத பதரை போல தன்னை உணர்ந்து குற்றவுணர்வில் உள்ளுக்குள் மறுகிப்போனாள் மைத்தி.
ஒருவனின் அணைப்பில் அடங்கும் அளவுக்கு , அவன் நெஞ்சில் சாய ஆசை கொள்ளும் அளவுக்கு ஒரு பெண் மனத்தால் தயாராகிறாள் என்றால் அவன் என் இணை என்று உள்மனம் ஏற்றுக்கொண்டது என்று தானே அர்த்தம்? போரின் கொடூரத்தில் பாதிக்கப்படும் அப்பாவிகளை பார்க்கும் போது ஒவ்வொரு கணமும் என்னை மனசாட்சி குத்தாதா? சும்மா குட்டி விஷயத்துக்கும் பொங்கி சண்டையிடும் அவளால் இதை மனமுதிர்ச்சியுடன் ஏற்று கொள்ள முடியுமா? அதை விட அவள் சார்ந்த சமூகத்தில் இவன் வரவேற்கப்படுவானா? அதுவும் இந்த நிலைமையில்?
மஞ்சு ஆன்ட்டியை நேசிப்பது வேறு, சிந்தகவை தன்னுடையவனாக ஏற்பது வேறு! எதையுமே யோசிக்காமல் மனதின் போக்குக்கு இழுபட்டு அவனிடம் தன்னையும் செய்கைகளால் வெளிப்படுத்தி விட்டது அவளுக்கு இப்போது பெருந்தவறாக தோன்றியது.
அடுத்த நாளில் இருந்து அவள் விகாரைப்பக்கமே போகவில்லை. தொடர்ந்து இருவாரங்களாக உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி மற்றவர்களுடன் சேனபுர போகாமல் ஹாஸ்டலிலேயே இருந்து கொண்டாள். மூன்றாவது வாரம் தவிர்க்க முடியாமல் போனாலும் பிரச்சனைக்குரியவன் அங்கே இல்லாதது அவளுக்கு நிம்மதியாகத்தான் இருந்தது.
இப்படியே காலம் ஓடியதில் சிந்தகவை அவள் நேரே சந்தித்து ஒருமாசத்துக்கு மேல் ஆகியிருந்தது. ஆனால் அதற்கு நேரெதிராய் அவனுடைய குடும்பத்தவர்களோடு அவள் இன்னும் இறுகிப்போயிருந்தாள். அந்த செமஸ்டரின் நடுப்பகுதியை நெருங்கியிருந்ததால் விளையாட்டுக்களை குறைத்து ப்ராஜெக்ட் பணிகளையும் ஆரம்பித்து அந்த குடும்பம் பற்றிய அறிமுகத்தை ஐவருமாய் சேர்ந்து எழுதி முடித்திருந்தார்கள். அன்றும் அவர்கள் பயிரிடும் ஒவ்வொரு பயிர்வகைகளின் லாப நட்டங்கள் பற்றியும் அவர்கள் உரையாட அவள் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். இப்போதெல்லாம் பேசுவதை முழுக்க புரிந்து கொள்ள முடியும் அளவுக்கு மொழி பரிச்சயமாயிருந்தது. ஆனால் திரும்ப பேசுவது இன்னும் தகராறுதான்.
அவளது அவஸ்தையை புரிந்து கொண்ட சுதா ஒரு யோசனை சொன்னான்.
“நாங்கள் இனிமேல் அனலைஸ் பண்ண வேண்டியது சமந்த அங்கிளின் விவசாய லாப நட்டம், மஞ்சு ஆன்ட்டியின் கோழி மற்றும் மாடுகளின் வருமானம், சிந்தக அண்ணாவின் பிசினஸ் மூன்றும் தானே..எங்களுக்கு இன்னும் மூன்று மாசம் தான் இருக்கிறது. அதிலும் கடைசி மாசம் எக்சாமுகே போய்விடும். நாங்கள் நமக்குள் பிரித்து கொள்வோம்..பிறகு கிடைத்த விபரங்களை பகிர்ந்துகொண்டு ப்ராஜக்டை முடிக்கலாம்.. கால்நடையை நான் எடுத்துக்கொள்கிறேன்..உங்கள் மூவருக்கும் சமந்த அங்கிளின் பயிர்கள், நம் மைத்தியை சிந்தக அண்ணாவிடம் விட்டு விடலாம். அவர் மட்டும் தான் ஆங்கிலம் பேசுவார் ஆகவே மைத்திக்கும் சுலபமாய் இருக்கும். என்ன சொல்கிறீர்கள்?”
எல்லோரும் அதை ஆமோதித்தார்கள்.
நாங்கள் இருவரும் வேண்டாம் என்றிருந்தாலும் விதி விடாது போலிருக்கிறதே.. என்று கலக்கத்துடன் தலையசைத்து வைத்தாள் மைதிலி.
சுதாவுக்கு கடையில் கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொல்ல அவர்கள் இருவரையும் விட்டு விட்டு மற்ற மூவரும் ஹாஸ்டல் சென்று விட்டனர்.
‘இந்தக்கடையில் தான் அவன் அன்றைக்கு ஜெலி வாங்கித்தந்தான்! பச்சைக்கலர் ஜெலி சாப்பிட்டதை கிண்டல் செய்த போது தான்..அன்றைக்கு..அன்றைக்கு…. ‘
ஏய் மைத்தி!!! சுதா அவளை கையில் இருந்த போர்டால் அடித்து சுய உணர்வுக்கு கொண்டு வந்தான்
“என்..என்ன கேட்ட?”
“உனக்கு ஏதாவது வாங்கணுமா என்று கேட்டேன்!”
“ம்ம்..நான் ஜெலி கொஞ்சம் எடுத்துக்கொள்கிறேன்” என்றவள் பச்சை நிற ஜெலிகளை பொறுக்கி எடுத்துக்கொண்டாள். சுதா பொருட்கள் அடங்கிய பையை பாஸ்கட்டில் போட்டு ஒருகையால் பிடித்தபடி வர இவர் ஒரு கையால் ஜெலியை ருசித்தபடி வந்துகொண்டிருந்தாள்.
இப்பல்லாம் இவனுங்க நடந்துக்கற முறையே சரியில்லைல்ல?
ஆமாண்டா..என்னோட ரூம் மேத்ஸ் எல்லாருமே தங்கமான பொண்ணுங்க.. ஆனா அந்த B டீம் லீடர் இருக்கானே..அவன் துவேஷம் பிடிச்சவன்..
ஏன் உங்க கிட்ட ஏதும் வம்பு பண்ணானா?
இல்ல..லாஸ்ட் வீக் பீல்ட் ட்ரிப் போனோம்ல?
ஆமா
அங்க நானும் சுமியும் தனியா வந்துட்டிருந்தோம், அந்த லூசு எங்க கூட பேசிட்டே வந்திச்சு. அப்போ தான் வன்னில என்ன நடக்குதுன்னு நாங்க நினைக்கிறோம்னு கேட்டிச்சு..
நீங்க என்ன சொன்னீங்க…
உன்னை மாதிரியே நானும் பொதுமக்கள்ள ஒருத்தி தான்..உனக்கு தெரிஞ்சது தானே எனக்கும் தெரியும்னு சொன்னேன்
அவன் சிரிச்சிட்டே “இதுதான் கடைசி சண்டையாம்..இத்தோட ஸ்ரீலங்காவை அவங்க கிளீன் பண்ணிருவாங்களாம்..உங்களுக்கு ஹப்பி தானே? எண்டு நக்கலா கேட்டுட்டு போய்ட்டான்
“கேக்கற நியூஸ்களை பார்த்தா அவன் சொன்னது சரிதான் போல இருக்கு.”
“அது கிடக்கட்டும்டா..எவ்ளோ பொதுமக்கள் செத்து போறாங்க..அதை பத்தி கொஞ்சமாவது யோசிக்கிறாங்களா? ஏன் சண்டை சாவுன்னு இரண்டு பக்கமும் சிலபேர் வெறியா இருக்காங்க?”
“லூசுகளே…அவங்கள் போட்டுவாங்கறதுக்கெல்லாம் இழுபட்டு பதில் பேசிட்டு இருக்காதீங்க.. நம்ம செட்ல ஒருத்தன் ரெண்டு பேர் தானே அப்படி இருக்காங்க.. அதையெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடு..”
“சுமியும் அப்படித்தான் சொன்னா..”
“பார்த்தியா நானும் அவளும் ஒரே போல யோசிக்கிறோம்…”
“ஆண்டவா இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா..நீயாச்சு அவளாச்சு!!!” சுதா சொன்னதை மட்டும் சுமி கேள்விப்பட்டால் எப்படி ரியாக்ட் செய்வாள் என்ற கற்பனையில் வாய்விட்டு சிரித்தவள் சைக்கிளை ஒரு பள்ளத்துக்குள் விட்டுவிட்டாள்.
அடுத்தகணம் படார் என்று காதடைக்கும் படி ஒரு சத்தம் கேட்டது! அதிர்ச்சியில் பாதையோரம் சரிந்து விழுந்தாள் அவள்
மைதிலியின் சைக்கிள் ரயர் வெடித்திருந்தது.
“ரயர் போச்சு மைத்தி..வேற வழியில்லை..சைக்கிளை ரிப்பேர் கடைல கொடுத்துட்டு ஹாஸ்டல் போக வேண்டியது தான்..நான் நாளைக்கு சைக்கிளை சரிபண்ணதும் எடுத்துட்டு வந்து ஹாஸ்டல்ல நிறுத்திடறேன்..” அருகில் வந்து அதை ஆராய்ந்த சுதா யோசனையோடு சொன்னான்.
“சரிடா..இப்போ நான் எப்படி ஹாஸ்டல் போறது?”
“வேறென்ன செய்ய? இந்த ரோட்ல பஸ்ஸா வரும்? கண்ணை மூடிட்டு என் சைக்கிளில் ஏறி உக்காரு..நானும் யார்ட்டையும் சொல்லல ..நீயும் சொல்லாதே..ப்ராப்ளம் சால்வ்ட்!!!”
“என்னது? நானா?” முகம் வெளிற சுதாவின் சைக்கிளை செய்வதறியாது திரும்பிப்பார்த்தாள் மைதிலி..
ரேசிங் பைக் தான் அவர்கள் இங்கே உபயோகிப்பது..அதற்கு பின் சீட் என்ற வஸ்துவே இருக்காது. ஓட்டுபவனுக்கு முன்னே ஹாண்டில் பாரில் உட்கார்ந்து அவனுடைய கைகளுக்கிடையில் தான் முழுத்தூரமும் பயணிக்க வேண்டும்.
அப்படி பயணித்து விட்டு அவனும் அவளும் வெளியே சொல்லாவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?
முடியவே முடியாது..நடந்து போனாலும் போவேனே தவிர இவன் கூட அப்படி பயணம் செய்ய முடியவே முடியாது..நாளை இவன் முகத்திலேயே எப்படி விழிப்பது? அவளுக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது..
“மைதிலி!!! முதல்ல கடை பூட்டமுன் சைக்கிளை கொடுத்துவிடுவோம்..நாம் போவதைப்பற்றி பிறகு யோசிக்கலாம்.!”
‘பிறகு எதை யோசிப்பது? பேசாமல் மஞ்சு ஆன்ட்டி வீட்டுக்கு போனைப்போட்டு சமந்த அங்கிளிடம் லிப்ட் கேட்கலாமா? அதிகமாய் உரிமை எடுத்துக்கொள்வது போலாகுமா?’ அந்த எண்ணத்தை அவள் மனதில் பரிசீலித்துக்கொண்டிருக்கும் போது பல்சர் சத்தம் அவர்களை நெருங்கியது.
அவனே தான்..
தடக் தடக்கென இதயம் துடிக்க நீண்ட இடைவெளியின் பின் சிந்தகவின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள் மைதிலி. அவனும் சிரிப்பை சுத்தமாய் துடைத்த முகத்துடன் அவளையே விழிகளில் பொருத்தியபடி எதிரே வந்து கொண்டிருந்தான்.
“என்னப்பா ஆச்சு?” அவர்களின் அருகில் நிறுத்தியவன் சுதாவிடம் தான் கேட்டான்..
சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தவள் அவள்..”கேள்வி அவனிடமா?” இத்தனைநாளும் எடுத்த உணர்வு பூர்வ தீர்மானங்கள் மறக்க அவனிடம் பிணங்கிக்கொண்டது அவள் மனது!
அவன் சொன்னதும் “இப்போ எப்படி போகப்போறீங்க?” என்று சுதாவிடம் கேட்டான்..ஆனால் பார்வை அவள் விழிகளிலே இருந்தது..
‘எங்கே என் முன்னால் அவனுடன் ஏறி உன்னால் போய்விட முடியுமா?’ என்று சவால் விடுவதாக அந்த பார்வை மைதிலியின் மனதில் மொழிபெயர்க்கப்பட்டது
“என் சைக்கிள்ல போகலாம்னு தான் சொன்னேன் அண்ணா ..இவ தான் தயங்கிட்டிருக்கா..”
“சரி முதலில் சைக்கிளை கடையில் கொடுத்துவிட்டு வாருங்கள்..மைதிலியை நான் கொண்டு வந்து விட்டு விடுகிறேன்” என்றவன் பைக்கை திருப்பி ஸ்லோ செய்தான்..மறந்தும் அவளை என்னோடு வருகிறாயா என்று கேட்கவில்லை.
“அப்போ ஓகே அண்ணா..நீங்கள் மைதிலியை கூட்டிப்போங்கள் நான் சைக்கிளை கடையில் கொடுத்து விடுகிறேன்” என்றபடி மைதிலியின் கையில் இருந்து சுதா சைக்கிளை வாங்க ஓரமாய் பைக்கை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பாமல் முன்புறம் பாதையிலேயே பார்வையை வைத்த படி ஆக்சிலரேட்டரை முறுக்கிக்கொண்டிருந்தான் சிந்தக.
அழைப்பாக சிறுபார்வையை கொடுத்தால் குறைந்தா போய் விடுவான்?
விதியை நொந்தபடி தானாகவே போய் அவனுக்கு பின்னே ஏறிக்கொண்டவள் கம்பியை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்
சுதா சைக்கிள் ரிப்பேர் கடைக்குள் நுழைய இவர்களின் பைக் வேகமெடுத்தது.
கண்ணாடியில் அருகருகில் தெரிந்த அவர்கள் இருவரின் முகங்களையும் அடிக்கடி கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தாள் மைதிலி.
அவன் மீது அவள் கொண்டிருந்த உணர்வுக்கும் அவள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளுக்கும் அவள் இப்போதைகேல்லாம் முள்ளின் மேல் அமர்ந்திருப்பது போல உணரவேண்டும்..அல்லது இவனுக்கு சுதாவே மேல் என்று சுதாவின் சைக்கிளில் தொற்றிக்கொண்டிருக்க் வேண்டும்..இரண்டுமே இல்லாமல் அவன் இன்னும் வேகம் கூட்ட மாட்டானா என்று உற்சாகமாகவும் , கண்ணாடியில் தெரியும் தங்கள் விம்பங்களையும், ஐயோ கம்பஸ் வந்துவிடப்போகிறதே என்று வருத்தமாய் பாதையையும் தான் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்ததற்கு என அர்த்தம் என்று சத்தியமாய் அவளுக்கு புரியவே இல்லை..
அவள் மனம் அவ்வளவு பலவீனமானதா? இல்லை இவன் மீதான ஈர்ப்பு அவ்வளவு பலமானதா?
சப் காம்பஸ் கம்பிவேலி வரமுன்னேயே வண்டியை நிறுத்தியவன் “இறங்கு” என்றான்.
மறுபேச்சில்லாமல் அவள் இறங்கிவிட “என்னோடு பைக்கில் வந்த அவமானம் உனக்கெதற்கு? யாரும் பார்க்க முன்னே இங்கிருந்தே கிளம்பிப்போய்விடு” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி வண்டியை திருப்பிக்கொண்டு போயே விட்டான்!
அன்றொரு நாள் அவள் ஹாஸ்டல் கேட்டை சென்றடையும் வரை அவன் பார்த்துக்கொண்டு நின்றதும் தான் தலையசைத்ததும் கிளம்பிப்போனதும் இன்றைக்கு அவளுக்கு ஞாபகம் வந்தது.. இன்றைக்கு ஹாஸ்டல் நெருங்கும் வளைவு வரமுன்னேயே அவளை இறக்கி விட்டு விட்டு திரும்பி பாராமலே போய்விட்டானே..அந்தளவுக்கு அவளை வெறுத்து விட்டானா? அந்த அக்கறை தொலைந்து விட்டதா?
அவன் விலகினால் தொல்லை தீர்ந்தது என்று நியாயமாய் சந்தோஷமே பட்டிருக்கவேண்டியவள் அன்றிரவு ஒன்பதரை மணி மட்டும் சாப்பிடவும் போகாமல் கோவில் படிகளிலேயே குளிரில் அமர்ந்துகொண்டு அழுது தீர்த்தாள்.
